Wednesday, April 21, 2021

"ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."(அரு.6:68)

"ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."
(அரு.6:68)


"விண்ணிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு நானே" என்று கூறிய இயேசு 

"நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."

என்று கூறியபோது மக்களால் அவர் கூறியதை நம்ப முடியவில்லை.


"நாம் உண்பதற்கு இவன் தன் தசையை எவ்வாறு அளிக்கக்கூடும் ?" என்று யூதர் தமக்குள் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள்.


அவருடைய சீடருள் பலர் இதைக் கேட்டு, "இந்தப் பேச்சு மிதமிஞ்சிப்போகிறது, யார் இதைக் கேட்பார் ?" என்றனர்.


அன்றே அவருடைய சீடருள் பலர் அவரை விட்டுப் பிரிந்தனர். அதுமுதல் அவர்கள் அவரோடு சேரவில்லை.


இயேசு பன்னிருவரை நோக்கி, "நீங்களும் போய்விட
 நினைக்கிறீர்களா?" என்றார்.

அதற்கு பதில் கூறும் விதமாகத் தான் இராயப்பர்


 "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

நீரே கடவுளின் பரிசுத்தர்: இதை நாங்கள் விசுவசிக்கிறோம்: இதை நாங்கள் அறிவோம்" என்று மறுமொழி கூறினார்.

கிறிஸ்தவர் என்று தங்களை தாங்களே அழைத்துக் கொள்ள விரும்புபவர்கள் கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவின் வார்த்தைகளில் தங்களுக்கு பிடித்தமானதை ஏற்றுக் கொள்வோம்

 பிடித்தம்‌ இல்லாதவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எண்ணுபவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை 

தங்களைத்தான் ஏற்றுக்கொள்கிறார்கள்.

நமது பிரிவினை சகோதரர்களில் அநேகர் திவ்விய நற்கருணையில் இயேசுவின் உண்மையான பிரசன்னத்தை ஏற்றுக்கொள்வது இல்லை.

பைபிளை மட்டும் ஏற்றுக் கொள்பவர்கள் அதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் 

அவர்கள் பைபிளையும் ஏற்றுக்கொள்ளவில்லை, கிறிஸ்துவையும் ஏற்றுக்கொள்ளவில்லை
என்றுதான் பொருள்.

"நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."

 என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஒரு பொருள் தான் இருக்க முடியும்.

உண்மையிலேயே அவர் தன்னுடைய தசையைத்தான் குறிப்பிடுகிறார்.

உருவகமாகப் பேசவில்லை.

அவரது வார்த்தைகளின் உண்மையான பொருளை புரிந்து கொண்டதால்தான் 

அவருடைய சீடர்களில் அநேகர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து பிரிந்து சென்றார்கள்.

இயேசுவும் தான் உருவகமாக பேசியதாக கூறவில்லை.

இராயப்பரும் பன்னிருவரின் விசுவாசத்தை உறுதிப்படுத்தினார்.

இதுவே இராயப்பர் மேல் கட்டப்பட்ட திருச்சபையின் விசுவாசம்.

ஆகவே நாம் திவ்ய நற்கருணை உட்கொள்ளும் பொழுது நாம் உண்மையிலேயே இயேசுவின் தசையைத்தான் உட்கொள்கிறோம்.

இராயப்பரைப்போல் நாமும் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வு தரும் வார்த்தைகளாக ஏற்றுக் கொள்கிறோம்.

உண்மையிலேயே ஏற்றுக் கொள்கிறோமா அது பெயரளவிற்கு ஏற்றுக் கொள்கிறோமா என்பதுதான் பிரச்சனை.

திருச்சபையின் போதனைகளை விசுவசிக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் பலமுறை சொல்லுகிறோம்.

ஆனால் அநேக சமயங்களில் நமது விசுவாசத்திற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாமல் போகும்போது 

"விசுவசிக்கிறோம்" என்று சொல்வது அர்த்தமற்றதாகி விடுகிறது.

நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறோம் என்று சொல்கிறோம்.

ஆனால் நமது உறவினர்கள் யாராவது நித்திய ஜீவியத்திற்குள் பிரவேசித்தால் அவர்களுக்காக அழுகிறோமே, ஏன்?

திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட உடன் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் உணவாக உட்கொள்ளுகிறோமே, அதன் பொருள் என்ன?

இறைவனுக்கு பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட பொருளை ஒப்புக்கொடுத்தவர்கள் உண்டு விட வேண்டும் என்பது மனித குல மரபு.

அந்த மரபுப்படிதான் நாம் நம் ஆண்டவரை அவரது தந்தைக்கு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பலியாக ஒப்புக் கொடுத்துவிட்டு அவரையே நமது உணவாக உட்கொள்கிறோம். 

பலிப் பொருள் உண்ணப்பட்ட பின்புதான் பலி முழுமை அடைகிறது.

பெரிய வெள்ளிக்கிழமை அன்று இறைமகன் சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தார்.

 தன்னை தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுக்கும் நிகழ்ச்சியை ஆண்டவர் பெரிய வியாழன் அன்றே நிறைவேற்றி விட்டார்.

பலிப் பொருளாகிய தன்னைஉணவாக கொடுப்பதற்காகத்தான் இயேசு திவ்விய நற்கருணையை ஏற்படுத்தினார்.

நாமும் திருப்பலி கண்டு திருவிருந்தில் கலந்து கொள்ளும்போதுதான் நமது பலி முழுமை அடைகிறது.


"இவ்வுணவைத் தின்பவனோ என்றுமே வாழ்வான்."

என்று இயேசு கூறியுள்ளார்.

நிலைவாழ்வு பெறுவதற்கு இயேசுவின் பாடுகளும், மரணமும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்  நாம் இயேசு தன்னையே உணவாகத் தரும் திருவிருந்தில் கலந்து கொள்வதும்.

கலந்து கொள்வது மட்டுமல்ல தகுதியுடன் கலந்துகொள்வது.

''முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."

என்ற வார்த்தைகளை நாம் ஏற்றுக் கொள்வது உண்மையானால்,

நாம் ஒவ்வொரு நாளும் வாசிக்கும் பைபிள் வாசகங்களில் எத்தனை வசனங்களை  

அன்றன்று நமது வாழ்க்கையாக்கி இருக்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment