Wednesday, April 14, 2021

பிரிக்கவே முடியாத உறவுகள்.

பிரிக்கவே முடியாத உறவுகள்.


 "தம்பி, சாப்பாடு."

"டிக்கெட் வாங்கிவிட்டீர்களா?"

"இந்தா, பிடி."

தண்ணீர் வைக்கப்படுகிறது. இலை போடப்படுகிறது. இலையில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

பையன் நான்கு வகை கூட்டு வைக்கிறான். சோறு வைக்கிறான். சாம்பார் ஊற்றுகிறான்.

"தம்பி, மட்டன் சிக்கன் எதுவும் இல்லையா?"

"என்ன சொன்னீங்க?"

"காய் கறியாக வைத்துக் கொண்டு போகிறாய். மட்டன், சிக்கன் எதுவும் இல்லையா என்று கேட்டேன்."

"சார், இது சைவ ஓட்டல் சார்?"

"அப்படின்னா?"

"Vegetarian Hotel. இங்கே காய்கறிகள் மட்டும் கூட்டாக பரிமாறப்படும். நீங்கள் உள்ளே வரும் போது Board,ஐப் பார்த்துவிட்டு வரவில்லையா?"

"பார்த்துவிட்டு தான் வந்தேன்.
ஆனந்த் பவன், சைவ ஹோட்டல் என்று வாசித்துவிட்டு தான் உள்ளே வந்தேன்."

"அதன் பிறகுமா மட்டன் சிக்கன் கேட்கிறீர்கள்?"

"வாசித்தால் மட்டும் போதுமா? அர்த்தம் தெரிய வேண்டாமா?"

"யாரிடமாவது கேட்டுவிட்டு வந்து இருக்கலாம் அல்லவா?"

"எனக்கு சந்தேகம் வரவில்லை. நான் இப்போது என்ன செய்ய?"

"சாப்பிடுங்கள்."

"மட்டன், சிக்கன், முட்டை இல்லாமல் சாப்பிடுவதே இல்லை."

"இப்போ சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்."

"அது என்னால் முடியாது. கொடுத்த காசை திரும்பி தருவார்களா?"

"இலை போடுவதற்கு முன்னால் அதைக் கேட்டிருக்க வேண்டும். இந்த சாப்பாட்டுக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

ஒன்று செய்கிறேன். இந்த சாப்பாட்டை பார்சல் போட்டு தந்து விடுகிறேன்.

எடுத்துக்கொண்டு போய் யாரிடமாவது கொடுத்து விடுங்கள்."

''சரி அதையாவது செய். பணம்தான் வேஸ்ட் ஆகிவிட்டது.

எந்த ஹோட்டலுக்குப் போகலாம்?"

"நிறைய ஹோட்டல்கள் திருக்கின்றன. நன்கு விசாரித்து விட்டு போங்கள்."

பார்செலை வாங்கிக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டே வெளியே சென்றார்.

இப்போ எதற்காக இந்த சாப்பாட்டுக் கதை?

ஜவுளி கடையில் போய் செருப்பு கேட்பவர்கள்,

மருந்துக் கடையில் போய் கடலை மிட்டாய் கேட்பவர்கள்,

பஸ் ஸ்டாண்டிற்கு போய் ட்ரெயின் எப்போது புறப்படும் என்று கேட்பவர்கள்,

இயேசுவிடமே போய் எனக்கு சிலுவையை மட்டும் தந்து விடாதீர்கள் என்று சொல்பவர்கள்  

இப்படி நிறைய பேர் உலகில் இருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்துவதற்காகத்தான் இந்த கதை.

மருந்துக் கடையில் போய் கடலை மிட்டாய் கேட்பது தப்பு.

ஆனால் இயேசுவிடம் போய் சிலுவையைத் தந்து விடாதீர்கள் என்று சொல்வதில் என்ன தப்பு இருக்கிறது?

அவர் உலகில் வாழும் போது எத்தனை பேருடைய நோய்களை நீக்கி அவர்களுடைய துன்பத்தைப் போக்கி இருக்கிறார்!

சுகம் பெறுவதற்கு என்றே இயேசுவைத் தேடி வந்தவர்கள் எத்தனை பேர்!

அவரே தேடிச்சென்றே குணம் அளித்திருக்கிறாரே!

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வாருங்கள் என்று அவரே கூறியிருக்கிறாரே!

எதைச் செய்ய ஆரம்பித்தாலும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை புரிந்து கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.

இயேசுவை பின்பற்ற விரும்புவோர் முதலில் அவரை புரிந்து கொள்ள வேண்டும்.

அவரை புரிந்து கொண்டால்தான் அவரது வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியும்.

அவரைப் புரிந்து கொள்ளாமல் அவரது வார்த்தைகளை நமது இஷ்டம் போல் புரிந்து கொள்ளக்கூடாது.

அவரது செயல்களையும் இஷ்டம்போல் புரிந்து கொள்ளக்கூடாது.

ஒரு சிறிய ஒப்புமை.

பெருந்தலைவர் காமராஜர் ஏழைப் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக பள்ளிக்கூடத்தில் மதிய உணவு திட்டத்தை ஆரம்பித்தார்.

வசதியுள்ளவர்கள் மட்டுமல்ல வசதி அற்றவர்களும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்பது காமராஜரின் ஆசை.

அவரைப் புரிந்து கொண்டால் மட்டும் மதிய உணவு திட்டத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.

மதிய உணவு சாப்பிடுவதற்கு என்றே அந்த நேரம் தவறாமல் பள்ளிக்கூடம் சென்று விட்டு, சாப்பிட்டு முடித்தவுடன் வீட்டுக்கு வந்து விளையாடுபவர்கள் காமராஜரைப் புரிந்து கொள்ளவில்லை.

முதலில் இயேசு எதற்காக உலகிற்கு வந்தார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வியாதிகளை குணமாக்குவதற்கு என்று அவர் உலகிற்கு வரவில்லை.

மக்களுடைய கஷ்டங்களை போக்குவதற்கு என்று அவர் உலகிற்கு வரவில்லை.

பசித்தவருக்கு எல்லாம் உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

மக்களுக்கு அரசியல் விடுதலையை பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

முப்பது ஆண்டுகள் தச்சு வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

இறந்த லாசருக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்து 

நம்மை பாவத்திலிருந்து மீட்டு நித்திய பேரின்ப வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற 

ஒரே காரணத்திற்காக மட்டுமே அவர் உலகிற்கு வந்தார்.

இந்த நோக்கம் நிறைவேற அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தார்.

குற்றாலம் செல்வதற்கு பேருந்தில் ஏறுவதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறோம்.

"என்ன சார்? தூரமா?" என்று யாராவது கேட்டால் 

"பேருந்தில் ஏற ஆசையாக இருந்தது,
 அதற்காக வந்தேன்."

என்று சொல்வோமா?

அல்லது

"குற்றாலத்திற்கு போவதற்காக வந்தேன்" என்று சொல்வோமா?


பேருந்தில் ஏறுவதற்காகத்தான் பேருந்து நிலையத்தில் நிற்கிறோம்.

ஆனால் நமது நோக்கம் பேருந்தில் ஏறுவது அல்ல. குற்றாலத்திற்கு செல்வது.


மனுக்குலத்தை மீட்பதற்காக உலகத்திற்கு வந்த இயேசுவை நாம் முதலில் இறைமகன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கு நமக்கு முதலில் விசுவாசம் வேண்டும்.

விசுவாசத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகத்தான் இயேசு புதுமைகள் செய்தார். வியாதிகளை குணமாக்கினார். இறந்தவரை உயிர்பித்தார்.

ஒவ்வொரு முறை நோய் குணமாகும் போதும், உனது விசுவாசம் உன்னைக் குணமாகிற்று என்றுதான் சொன்னார்.

இயேசுவை புரிந்து கொள்ளாதவர்கள் தான் அவரை பொதுவுடமைவாதி, சீர்திருத்தவாதி, புரட்சியாளர், சமதர்மவாதி என்றெல்லாம் அழைப்பார்கள்.

அவர் நமது மீட்பர்.

மீட்பர் மட்டும்தான் அவருக்குப் பொருத்தமான பட்டம்.

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.''

என்று சொன்னவரிடம் போய்

" எனக்கு சிலுவை வேண்டாம்"

 என்று சொன்னால் அதற்கு ஒரே ஒரு பொருள்தான் உண்டு.

"ஆண்டவரே உம்மை நான் பின்பற்ற விரும்பவில்லை.
ஆளை விடும்."

"சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வாருங்கள்."

 என்று ஆண்டவர் கூறியது உண்மைதான்.

இங்கு சுமை என்பது நமது பாவச்சுமையை குறிக்கிறது.

நம்மிடம் பாவம் இருந்தால் அதை சார்ந்த கவலை, மகிழ்ச்சி இன்மை, சமாதானம் இன்மை போன்ற சுமைகள் நம்மை அழுத்திக் கொண்டிருக்கும்.

 நாம் இயேசுவை தேடிச் சென்று நமது பாவச்சுமையை அவர்முன் இறக்கி வைத்து விட்டால்

எல்லா சுமைகளும் நம்மை விட்டு விழுந்துவிடும். 

இயேசு நம்மை பாவத்திலிருந்து மீட்கவே வந்தார் என்ற உண்மையை புரிந்து கொண்டால் மட்டுமே அவரது வார்த்தையையும் புரிந்து கொள்ள முடியும்.

"என்னிடம் வருபவர்களிடம் இருந்து கடன் சுமையை இறக்கி வைப்பேன்,

 எல்லா நோய்களிலிருந்தும் குணம் அளிப்பேன்,

 அவர்களுக்கு எந்தவித துன்பமும் வராமல் பாதுகாப்பேன்,

அவர்களுக்கு குழந்தைவரம் அளிப்பேன்,

 தேர்வுகளில் வெற்றி பெற வைப்பேன்,

நல்ல வேலை வாங்கித் தருவேன்,

அவர்களது வருமானத்தை அதிகரிப்பேன்"

என்றெல்லாம் இயேசு ஒரு போதும் வாக்குறுதி அளிக்கவில்லை.

ஆனாலும் இவற்றால் நமது விசுவாசம் அதிகரிக்குமானால்,

அதற்காக இந்த உதவிகளையெல்லாம் இயேசு செய்வார்.

(தொடரும்)

லூர்து செல்வம்

No comments:

Post a Comment