Thursday, April 22, 2021

இறைவனே நமது வாழ்வில் மையம்.

இறைவனே நமது வாழ்வில் மையம்.


கணிதப் பெட்டியில் compass என்ற கருவி உண்டு, வட்டம் வரையப் பயன்படுவது.


வட்டம் வரைய ஆரம்பிக்குமுன் முதலில் வட்டத்திற்கான மையப் புள்ளியை தெரிவு செய்ய வேண்டும்.

காம்பசின் ஒரு முனையை மையப்புள்ளியில் அசையாமல் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த முனையிலுள்ள 
பென்சிலை மட்டும் அசைத்து வட்டம் வரைய வேண்டும்.

மையப்புள்ளியில் உள்ள முனை கொஞ்சம் நகர்ந்தால் கூட வட்டம் மாறிவிடும்.

மையப்புள்ளி இருக்கும் இடம்தான் வட்டம் வரைய படவேண்டிய இடத்தைத் தீர்மானிக்கும்.

இது கணிதத்தில்.

கணிதத்தின் மைய தத்துவம் நமது வாழ்க்கைக்கும் பொருந்தும்.

ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு மையக் கொள்கை உண்டு.


ஒவ்வொருவர் வாழ்க்கையின் தன்மையை தீர்மானிப்பது அதன் மையக் கொள்கை தான்.

மையக் கொள்கைக்கு ஏற்றபடிதான் வாழ்க்கை இருக்கும்.

மையம் மாறும்போது வாழ்க்கையும் மாறிவிடும்.

மனித வாழ்க்கையின் காரணகர்த்தா இறைவன்.

மனித வாழ்க்கையின் மையம் கடவுள் மட்டுமே.

மனித வாழ்க்கையில் பாவமும், பிரச்சனைகளும் தோன்றுவதற்கு காரணம்

 மனிதன் தனது வாழ்வின் மையத்தை கடவுளிடமிருந்து தனக்கு மாற்றிக்கொண்டது தான்.

சாத்தான் ஏவாளை ஏமாற்ற முயன்றபோது அவள் இறைவனின் விருப்பத்திற்கு மாறாக செயல்படாமல் இருந்திருந்தால் பாவம் மனித வாழ்விற்குள் நுழைந்திருக்க முடியாது.

இறைவனின் விருப்பத்திலிருந்து
தனது விருப்பத்திற்கு மாறிய நொடியே பாவம் புகுந்தது.

இப்பொழுது நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற்று இறைவாழ்வு வாழ வேண்டுமானால்

நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் இறை விருப்பமே தீர்மானிக்க வேண்டும்.

நமது விருப்பப்படி அல்ல, இறைவனது விருப்பப்படியே நாம் வாழ வேண்டும்.

நமது வாழ்வில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும் என்றால் அவற்றுக்கு இறை விருப்பத்தை அறிந்து அதன்படியே தீர்வு காண வேண்டும்.


அதாவது எந்த பிரச்சனையையும் இறைவனது கண்ணோக்கிலிருந்து மட்டுமே பார்க்க வேண்டும்.

நம்மை மையமாக வைத்து பிரச்சனைகளை அணுகுவதால்தான் அவற்றுக்கு நம்மால் நிரந்தரமான தீர்வு காண முடியவில்லை.

உதாரணத்திற்கு மனிதகுலத்தை வாட்டி எடுத்துக்கொண்டிருக்கும் கொரோனா பிரச்சினையை எடுத்துக்கொள்வோம்.


கொரோனாவினால் நம்மில் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள்,

எத்தனை பேர் மரணத்திற்கு உட்படுகிறார்கள்,

எத்தனை பேருடைய பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது,

எத்தனை பேருடைய படிப்பு பாதிக்கப்படுகிறது,

அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

என்று நம்மை மையமாக வைத்தே அதற்கு தீர்வு காண முயற்சி செய்கிறோம்.

யாராவது எல்லாவற்றிற்கும் ஆதி காரணராகிய கடவுளுடைய சித்தம் எதுவாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

இறைவன் நம்மை படைத்ததன் நோக்கம் முழுக்க முழுக்க ஆன்மீகம் சார்ந்தது.

மக்கள் ஆன்மீக வாழ்வில் முறைதவறி நடக்கும்போது அவர்களை திருத்துவதற்காக உடல் சம்பந்தப்பட்ட துன்பங்களை இறைவன் அனுமதிக்கிறார் என்பது பழைய ஏற்பாட்டு அனுபவம்.

இந்த அடிப்படையில் இறைவன் கண்ணோக்கிலிருந்து பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவோர் முதலில் தங்களது ஆன்மாவை பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒருவர் இருவர் அல்ல மனுக்குலமே இந்த பரிசோதனையை செய்ய வேண்டும்.

அப்படிச் செய்திருந்தால் நோயிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை விட அதிகமான முயற்சிகள் பாவத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக எடுத்திருப்போம்.

 அன்று நினிவே மக்கள் செய்த தவ முயற்சிகளை மனிதகுலம் செய்திருக்கும்.

வீட்டுப்பாடம் படிக்காமல் வருபவர்களுக்கு அடி கிடைக்கும் என்று ஆசிரியர் சொன்னால் மாணவர்கள் வீட்டுப்பாடம் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர

 படிக்காமலேயே அடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அல்ல.

"பரலோகத்தில் உமது சித்தம் நிறைவேறுவது போல பூலோகத்திலும் உமது சித்தம் நோய் உட்பட அனைத்து விஷயங்களிலும் நிறைவேறுக."

என்பது நமது ஜெபமாக இருக்க வேண்டும்.

கடவுள் சர்வவல்லவர் என்று நாம் விசுவசித்தால்,

நம் மீது அளவுகடந்த அன்பு உள்ளவர் என்று நாம் விசுவசித்தால்,

நமது ஆன்மீக நலன் கருதி நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரிக்கிறார் என்பதை நாம் விசுவசித்தால்

இந்த ஜெபத்தினால் நமக்கு நன்மை மட்டுமே விளையும்.

இறைவனை மையமாகக்கொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்லும்.

நம்மை மட்டுமே மையமாகக்கொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை இறைவனிடமிருந்து பிரித்துவிடும்.

"அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின: உண்டானதெதுவும் அவராலேயன்றி உண்டாகவில்லை." (அரு.1:3)

படைக்கப்பட்டவை அனைத்தும் வார்த்தையானவர் வழியாகவே படைக்கப்பட்டன.

அவர் வழியாக மட்டுமன்றி அவருக்காகவே படைக்கப்பட்டன.

ஆகவே அனைத்திற்கும் மையம் அவரே.

படைக்கப்பட்டவை தங்களுக்காக வாழவில்லை.

படைத்தவருக்காகவே வாழ்கின்றன.

நாம் அவருக்காக மட்டுமே வாழ்வதால் நமது வாழ்வின் ஒரே நோக்கம் அவரே.

தனக்காகவே படைத்து, தனக்காகவே வாழ வைத்துக் கொண்டிருப்பதால்  

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் இயக்கிக் கொண்டிருப்பவர் அவரே.

இதில் நமக்கு அசைக்கமுடியாத விசுவாசம் இருந்தால் நமக்கு என்ன நேர்ந்தாலும் அதைப்பற்றி கவலைப் படவே மாட்டோம்.

ஒரு முறை S.S.L.C. தேர்வுக்கு தயாரித்துக் கொண்டிருந்த ஒரு மாணவியின் தந்தை என்னிடம் வந்தார்.

"சார் என் மகளுக்கு Night Study வேண்டாம். அவளுக்கு வீட்டில் வேலை இருக்கிறது."

 என்றார். நான் அவரிடம் வாதாடவில்லை.

"ஆசிரியர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவளை Night Studyக்கு அனுப்புங்கள்.

உங்கள் மகள் மீது நம்பிக்கை இருந்தால் அனுப்ப வேண்டாம்."

என்று மட்டும் சொன்னேன்.

"Night Studyக்கு வருவாள்." என்று மட்டும் கூறிவிட்டு போய்விட்டார்.

நமக்கு இறைவன் மீது முழுமையான விசுவாசம் இருந்தால் என்ன நடந்தாலும் கவலைப்படாமல் வாழ்வோம்.

இறைவன் மீது விசுவாசம் இல்லாவிட்டால் நம்மைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டுதான் இருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment