(அரு.21:17)
மூன்று ஆண்டுகள் ஒரு பாடத்தை நன்கு படித்துவிட்டு, மூன்றாவது ஆண்டின் இறுதியில்
இறுதித் தேர்வு எழுத உட்கார்ந்திருக்கிறோம்.
வினாத்தாட்கள் கொடுக்கப் படுகின்றன.
வினாத் தாளை கையில் வாங்கியவுடன் முதலில் எல்லா வினாக்களையும் வாசிக்கிறோம்.
வினாக்களைப் பார்த்தவுடன் ஆச்சரியமாக உள்ளது.
காரணம் எல்லா வினாக்களும் நமக்கு நன்கு பதில் தெரிந்த எளிதான வினாக்கள்தான்.
அதில் ஆச்சரியப்படுவதற்கு
என்ன இருக்கிறது?
கேட்க பட்டிருப்பது 10 கேள்விகள்.
ஒரே கேள்வியை 10 முறை திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறார்கள்.
ஒரே பதிலைத்தான் திரும்பத் திரும்ப 10 முறையும் எழுதவேண்டும்!
அதில்தான் ஆச்சரியம் இருக்கிறது.
இப்படி ஒரு இறுதித் தேர்வை புனித இராயப்பர் சந்திக்கிறார்.
தேர்வை வைத்தவர் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
ஒரே கேள்வியை மூன்று முறை கேட்கிறார் நம் ஆண்டவர்.
இயேசு சீடருக்குத் திபேரியாக் கடலருகே தோன்றியபோது
இராயப்பருக்கு இந்த தேர்வை வைக்கிறார்.
அவர் மூன்று முறை கேட்ட ஒரே கேள்வி:
"அருளப்பனின் மகனான சீமோனே, நீ எனக்கு அன்புசெய்கிறாயா ?"
மற்ற அப்போஸ்தலர்கள் இயேசு அழைத்து அவரிடம் வந்தவர்கள்.
ஆனால் இராயப்பரும், பெலவேந்திரரும் அவர்களாகவே இயேசுவை சந்தித்தார்கள்.
முதல் சந்திப்பின் போதே இயேசு இராயப்பரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். - கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.
இராய் என்றால் பாறை.
பிற்பாடு ஒரு நாள்,
"நான் உனக்குச் சொல்லுகிறேன். உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."
என்றார்.
அதாவது "உன்னை எனது திருச்சபையின் தலைவர் ஆக்குவேன்" என்றார்.
இப்போது திருச்சபையின் தலைவர் என்ற முறையில் அவரது பணிகளை விளக்கு முன் இந்த தேர்வு.
இப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லிவிட்டால் அவர் தலைவர் ஆற்றவேண்டிய பணிகளுக்கு பொருத்தமானவர் என்று பொருள்.
கேள்வி:
"நீ என்னை நேசிக்கிறாயா?"
எதிர்பார்க்கப்படும் பதில், "ஆம்."
இதிலிருந்து என்ன தெரிகிறது?
திருச்சபையில் தலைவருக்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி
அவர் இயேசுவை அன்பு செய்ய வேண்டும்.
திருச்சபை இயேசுவின் ஞான உடல்.
இயேசுவை அன்பு செய்பவர் அவரது ஞான உடலாகிய திருச்சபையையும் அன்பு செய்வார்.
இயேசு இராயப்பரிடம்
ஆளத் தெரியுமா? என்று கேட்கவில்லை.
அதிகாரம் செய்ய தெரியுமா? என்று கேட்கவில்லை.
உலகியல் ஆளுநருக்கு அதிகாரம் செய்யத் தெரிய வேண்டியது ஒரு பண்பாக இருக்கலாம்.
ஆனால் திருச்சபையை ஆள்பவர்களுக்கு அதிகாரம் முக்கியமான பண்பு அல்ல,
அன்பு மட்டுமே அதற்கான ஒரே பண்பு.
பாப்பரசர் இயேசுவை அன்பு செய்ய வேண்டும்.
ஆயர்களை அன்பு செய்ய வேண்டும்.
குருக்களை அன்பு செய்ய வேண்டும்.
இறை மக்களை அன்பு செய்ய வேண்டும்.
ஆயர்களும், குருக்களும், இறை மக்களும் பாப்பரசர் உட்பட அனைவரையும் அன்பு செய்ய வேண்டும்.
அன்பு ஒன்றுதான் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்கு ஒரே அடையாளம்.
பங்கு அளவில் இறைமக்களிடையே ஏதாவது பிரச்சினை ஏற்படுமானால் அதற்கு ஒரே காரணம் போதிய அன்பு இல்லாமை தான்.
பங்கு குருவானவருக்கும்,
இறைமக்களுக்கும் இடையே ஏதாவது பிரச்சினை ஏற்படுமானால் அதற்கு ஒரே காரணம் போதிய அன்பு இல்லாமை தான்.
ஆயர்களுக்கும் குருக்களுக்கும்
இடையே ஏதாவது பிரச்சினை ஏற்படுமானால் அதற்கு ஒரே காரணம் போதிய அன்பு இல்லாமை தான்.
பாப்பரசருக்கும், ஆயர்களுக்கும்
இடையே ஏதாவது பிரச்சினை ஏற்படுமானால் அதற்கு ஒரே காரணம் போதிய அன்பு இல்லாமை தான்.
அன்பு பொறுமையுள்ளது, பரிவுள்ளது.
அன்பு அழுக்காறு கொள்ளாது. பெருமை பேசாது,
இறுமாப்பு அடையாது,
இழிவானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, சீற்றத்திற்கு இடந்தராது,
வர்மம் வைக்காது.
அநீதியைக் கண்டு மகிழ்வுறாது: உண்மையைக் கண்டு உளம் மகிழும்.
அனைத்தையும் தாங்கிக்கொள்ளும்:
பிறர் மீது நல்லெண்ணம் இழப்பதில்லை:
நம்பிக்கையில் தளர்வதில்லை: அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்.
இவ்வளவு குணங்கள் உள்ள அன்பு இருக்கும் இடத்தில் பிரச்சனைகள் எப்படி வரும்?
ஆனாலும் நம்மிடையே பிரச்சனைகள் இருக்கின்றன என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஆகவே நம்மிடம் அன்பே முற்றிலுமாக இல்லை என்று அர்த்தமா?
இல்லை.
நம்மிடம் அன்பு இருக்கிறது. ஆனால் கிறிஸ்து நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை.
இருக்கும் அன்பிலும் கொஞ்சம் சுயநலம் கலந்திருக்கிறது.
நம்மிடம் இருக்கும் சுயநலத்தின் அளவுக்கு ஏற்ப பிரச்சனைகளின் அளவும் இருக்கும்.
பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்போது சுயநலத்தை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு
மற்றவர்கள் நலனின் அடிப்படையில் தீர்வு காண முயன்றால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.
இயேசு அன்பே உருவானவர்.
அவர் நம்மை நமக்காகவே அன்பு செய்கிறார்.
நம்மை அன்பு செய்வதால் அவருக்கு எந்த ஆதயமும் இல்லை.
நித்திய காலமாகவே அவர் நிறைவானவராகத்தான் இருக்கிறார்.
நிறைவை அதிகப்படுத்த முடியாது.
ஆகவே அவர் தனக்கு ஏதாவது வேண்டும் என்பதற்காக நம்மை படைக்கவில்லை.
ஒன்றும் இல்லாமல் இருந்த நம்மை அன்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே படைத்தார்.
அவர் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே.
அதுவும் தனக்காக அல்ல.
அவரை அன்பு செய்யும் போது பயன் பெறப் போவது நாமே.
கிறிஸ்து நம்மை அன்பு செய்வது போல நாமும் ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும்.
தன்னலமற்ற அன்பு இருக்குமிடத்தில் பிரச்சனைகள் தோன்ற வாய்ப்பு இல்லை.
ஆனால் நம்மில் யாரும்
நிறைவானவரில்லை.
None of us is perfect.
அதனால் தான் நம்மிடம் பிரச்சினைகள் தோன்றுகின்றன.
பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டிய ஒரே வழி தன்னலமற்ற அன்பு தான்.
ஒரு பங்கு அளவில் பங்குக் குருவானவருக்கும் பங்கு மக்களுக்கும் இடையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால்
பங்குக் குருவானவர் பங்கு மக்களின் நலனை மட்டும் மனதில் கொண்டு பிரச்சினையை அணுக வேண்டும்.
பங்கு மக்கள் பங்குக் குருவானவர் கிறிஸ்துவின் பிரதிநிதி என்பதை மட்டும் மனதில் கொண்டு பிரச்சினையை அணுக வேண்டும்.
இந்த அணுகுமுறையை பார்த்தவுடனே பிரச்சனைகள் மாயமாகிவிடும்.
பங்கு மக்கள் அன்பினால் மட்டும் வழிநடத்தப்படும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் என்று தங்களையே எண்ணி வாழ்ந்தால்
அவர்களிடையே பிரச்சினைகள் தோன்றுவதற்குக் காரணமே இருக்காது.
விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை கொண்டுவந்த பரிசேயர்கள் அவளைத் தண்டிக்க வேண்டும் என்ற ஒரே கண் நோக்கிலேயே பார்த்தார்கள்.
இயேசுவோ அவளை மன்னிக்க வேண்டும் என்ற ஒரே கண் நோக்கிலேயே பார்த்தார்.
அவளை மன்னித்தார்.
அன்பு, பரிவு, இரக்கம், மன்னிப்பு அத்தனையையும் ஒன்றாக கொண்ட கண்களால் நமது அயலானை நோக்குவோம்.
ஒருவர் ஒருவரை அன்பு செய்வோம்.
ஒருவர் ஒருவர் மீது பரிவும், இரக்கமும் காட்டுவோம்.
ஒருவர் ஒருவரை மன்னிப்போம்.
பாப்பரசரும் சரி, ஆயர்களும் சரி, குருக்களும் சரி நம்மை ஆள்பவர்கள் அல்ல, நமது மேய்ப்பர்கள்.
ஆடுகளிடம் மேய்பருக்கு இருக்க வேண்டியது அன்பு மட்டுமே.
"அருளப்பனின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாய் எனக்கு அன்புசெய்கிறாயா ?"
"ஆம், ஆண்டவரே,"
"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment