(அரு.6:54)
" நானே வழியும், உண்மையும், உயிரும்."(அரு.14:6)
இயேசு நானே வழி,
நானே உண்மை,
நானே உயிர் என்கிறார்.
இயேசு மட்டுமே நமது ஆன்மீக வழி. அவர் மட்டுமே நாம் நம்ப வேண்டிய உண்மை. அவர் மட்டுமே நமது உயிர். இயேசுவே நமக்கு எல்லாம்.
இயேசு நம்மிடம் இருந்தால் நம்மிடம் ஆன்மீக உயிர் இருக்கிறது என்று அர்த்தம்.
நிலைவாழ்வாகிய இயேசுவை உணவாக உட்கொள்ளுகிறவன் தனது நிலை வாழ்வை உட்கொள்ளுகிறான்.
இயேசு நம்முள் வருகிறார் என்பதற்கும் நிலைவாழ்வு நம்முள் வருகிறது என்பதற்கும் பொருள் ஒன்றுதான்.
மனிதனை மீட்டு அவனுக்கு நிலைவாழ்வை அளிக்கும் பொருட்டு உலகிற்கு வந்த இயேசு
அதற்கான வழிமுறைகளை அப்பப்போ சொல்லிக் கொண்டே வருகிறார்.
நிலை வாழ்வை அடைய விரும்புகிறவர்கள் இயேசுவை உணவாக உட்கொள்ள வேண்டும்.
இன்றைய வார்த்தைகளில் நிலை வாழ்வை அடைய விரும்புவோர் திவ்ய நற்கருணையை ஆன்மீக உணவாக உட்கொள்ள வேண்டும்.
நண்பர் ஒருவர் சொல்கிறார்
"திவ்ய நற்கருணையை ஆன்மீக உணவாக உட்கொண்டால் நிலை வாழ்வை அடைந்து விடலாம் என்றால்
கிறிஸ்தவர்கள் ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோரும் நிலைவாழ்வு அடைவர்,
வேளாங்கண்ணி போன்ற திருத்தலங்களுக்குச் சென்று பாருங்கள்,
லட்சக்கணக்கான பேர் திவ்ய நற்கருணை உட்கொள்கிறார்கள்.
முழு பூசை காண்கிறார்களோ இல்லையோ நன்மை வாங்க நாக்கை நீட்டி விடுவார்கள்,
நமது ஊர்களிலும் அப்படித்தானே, திருப்பலி காண்பவர்களை விட நற்கருணையை உண்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
பூசை ஆரம்பிக்கும்போது எங்காவது நின்றுவிட்டு
சரியாக நன்மை கொடுக்கும்போது வந்து வாங்கிக்கொண்டு நின்ற இடத்திற்கே போய்விடுவார்கள்.
திருப்பலி ஆரம்பிக்கும்போது கால்வாசி கோவிலில் ஆட்கள் இருப்பார்கள்.
நன்மை கொடுக்கும்போது கோவில் நிரம்பி வழியும்.
நன்மை கொடுத்து முடிந்தவுடன் பழையபடி கால்வாசி கோவிலில் மட்டும் ஆட்கள் இருப்பார்கள்.
இதுதான் இன்றைய நிலை."
அவர் கேட்கின்றார்:
"நற்கருணை வாங்குவது விண்ணகம் செல்வதற்கு Guarantee Card ஆ?" என்று.
ஆமா. ஆனால் தகுதியான முறையில் வாங்குவது.
நிலை வாழ்வை அளிப்பவர் ஆண்டவர் மட்டுமே.
ஆனாலும் தகுதியற்ற முறையில் அவரை உட்கொள்வது நிலைவாழ்வை அளிக்காது.
நமது உலகியல் வாழ்க்கையில் இருந்து ஒரு சில ஒப்புமைகளைக் கூறி விளக்குவோம்:
தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் பல் துலக்குகிறோம்.
எதற்காக?
அடுத்து உண்ணவிருக்கும் உணவுக்கு வாயை தயாரிப்பதற்காக.
நமது பெண்கள் அதிகாலையில் சமையல் கட்டில் இருந்து கொண்டு பாத்திரங்களை சாம்பலால் தேய்த்து சுத்தம் செய்கிறார்களே, எதற்காக?
அடுத்து உணவு பரிமாறுவதற்காக பாத்திரங்களை தயாரிப்பதற்காக.
தினமும் காலையில் குளிக்கின்றோமே, எதற்காக?
சுத்தமான உடையணிந்து அலுவலகம் செல்வதற்காக.
அலுவலகத்தில் Sweeper எதற்காக? அலுவலகத்தை துப்புரவாக வைத்துக்கொள்வதற்காக.
பல் தேய்க்காமல் உண்ண மாட்டோம்.
பாத்திரத்தை சுத்தம் செய்யாமல் உணவு வைக்க மாட்டோம்.
குளிக்காமல் அலுவலகம் செல்ல மாட்டோம்.
துப்புரவா செய்யப்படாத அலுவலகத்திற்குள் நுழைய மாட்டோம்.
ஆனால் நமது ஆன்மாவை சுத்தம் செய்யாமல்
பாவ அழுக்கில் வந்து அமர நம்மை படைத்த கடவுளை நமக்குள் அழைப்போம்!
என்ன அநியாயம்!
நாம் சாப்பிடும் உணவை விட கடவுள் தாழ்ந்தவரா?
ஆண்டவரை நமது இதய வீட்டிற்குள் வரவழைப்பதற்கு முன் அதை முதலில் சுத்தம் செய்ய வேண்டும் என்பது சொல்லாமலே தெரிந்திருக்க வேண்டும்!
ஆண்டவரை வரவேற்க நமது ஆன்மாவை தயாரிக்கும்போதே ஆம் விண்ணக வாழ்விற்கும் சேர்த்து தானே நமது ஆன்மாவை தயாரிக்கிறோம்.
ஆக ஆண்டவரை வரவேற்க நமது ஆன்மா தயார் என்றால், விண்ணக வாழ்விற்கும் அது தயார்.
நற்கருணை வாங்க தகுதியான தயாரிப்புதான் நமது வாழ்விற்கு Guarantee Card!
- ஆதலால், எவனாவது இந்த அப்பத்தைத் தகுதியின்றி உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறான்.
- 28 ஆகவே, ஒவ்வொருவனும் தன்னுளத்தை ஆய்ந்தறிந்து, அதன் பின்னரே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகட்டும்.
- 29 ஏனெனில், அது அவர் உடலென்று உணராமல் உண்டு பருகுபவன் தனக்குத் தீர்ப்பையே உண்டு பருகுகிறான். ( 1 கொரிந்.11:27 - 29)
பாவ நிலையில் நற்கருணையை அருந்துவது விண்ணக இழப்பிற்கான Guarantee Card!
தகுதி இல்லாத முறையில் நற்கருணையை அணுகுபவர்களுக்கு இந்த பயம் வேண்டும்.
ஆன்மீக வாழ்வில் இறை அன்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தெய்வ பயமும்.
நம் மக்களிடையே பயம் என்பது கொஞ்சம் கூட இல்லை.
தெய்வ பயம் தான் ஞானத்தின் ஆரம்பம்.
பரிசுத்தமான இதயத்தோடு இறை உணவை உண்போம், நிலை வாழ்வை ஈட்டுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment