"சார், வணக்கம்."
"வணக்கம், நேற்று தானே பள்ளிக்கூடத்தில் அட்மிஷன் ஆன?"
"ஆமா, சார். ஒரு சந்தேகம். உங்களிடத்தில் விளக்கம் கேட்டுவிட்டு போகலாம் என்று வந்தேன்."
"இன்னும் பாடமே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் என்ன சந்தேகம்?"
"என்ன சந்தேகம் வந்தாலும் வாத்தியார்ட்ட போய்க் கேளு.
விளக்குவார் என்று அப்பா சொன்னாங்க.
அதனால் தான் உங்களிடம் வந்தேன்."
"அப்போ சந்தேகம் பாடத்தில் இல்லை."
" நான் இன்னும் பாடப்புத்தகமே வாங்கவில்லை. இது ஒரு பாடமா, இல்லையா என்றுகூட எனக்கு தெரியாது.''
"சரி, சொல்லு."
"என் friends எல்லாம் நல்லா சீட்டு விளையாடுவாங்க. எனக்கும் சீட்டு விளையாட ஆசையாய் இருக்கு. அவங்க சொல்லித்தந்தாங்க. ஆனால் எனக்கு ஒண்ணுமே புரியல. நீங்க புரியும்படியா சொல்லித் தருவீர்களா?"
"சீட்டு விளையாடவா?"
"ஆமா, சார்."
"எதற்காக சீட்டு விளையாட்டு?"
"பொழுது போவதற்காக."
"நீ சீட்டு விளையாடா விட்டாலும் பொழுது போய்விடுமே!"
"எனக்கு பொழுது போக வேண்டுமென்றால் ....."
"உனக்கு பொழுது போக வேறொரு விளையாட்டு சொல்லித் தரட்டுமா?"
"என்ன விளையாட்டு?"
"Words building."
"சொல்லித்தாருங்கள்."
"நான் ஆங்கிலத்தில் ஒரு எழுத்து எழுதுவேன். நீ அந்த எழுத்தில் துவங்கும் ஒரு ஆங்கில வார்த்தையை நினைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வார்த்தையின் இரண்டாவது எழுத்தை எனது எழுத்திற்கு அடுத்தபடி எழுத வேண்டும்.
நான் எழுதப்பட்ட இரண்டு எழுத்துக்களையும் கொண்டு ஆரம்பிக்கும் ஒரு வார்த்தையின் மூன்றாவது எழுத்தை எழுத வேண்டும்.
இப்படி மாறி மாறி எழுதிக் கொண்டே போகவேண்டும்.
யாருக்கு புதிய வார்த்தை கிடைக்கவில்லையோ அவங்க அவுட்!"
"எனக்கு ஆங்கிலமே வராது. தெரிந்த ஓரிரண்டு வார்த்தைகளுக்கும் ஸ்பெல்லிங் தெரியாது. நான் கேட்ட விளையாட்டையே சொல்லி தாங்க ப்ளீஸ்."
"அப்போ ஒண்ணு செய். இப்போது நாம் இரண்டு பேரும் பேசினதை உங்களுடைய அப்பாவிடம் சொல்லு. அவர் சொன்னபடி செய்வோம்."
(மறுநாள்)
"சார், என்னுடைய அப்பாவிடம் சொன்னேன். செவிட்டில ஓங்கி இரண்டு அறை விட்டார்!"
.
"ஒன்றும் சொல்லவில்லையா?"
"வாத்தியார்கிட்ட பாட சம்பந்தமா கேட்டா மட்டும் சொல்லித் தருவார். சீட்டு விளையாட்டு சொல்லித் தரவா பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள்?"
"நீ என்ன சொன்னாய்?"
"இனிமேல் நீங்கள் சொன்னபடி கேட்கிறேன், அப்பா."
"இனிமேல் என்னிடம் எது சம்பந்தமாய் கேள்வி கேட்பாய்?"
"பாட சம்பந்தமாக சந்தேகம் வந்தால் மட்டும் கேட்பேன்."
இந்த பையனைப் போல் தான் நாம் அநேக சமயங்களில் நடந்து கொள்கிறோம்.
கடவுளிடம் எதைக் கேட்க வேண்டும் என்று தெரியாமல் கேட்டுவிட்டு கேட்டது கிடைக்கவில்லையே என்று முணு முணுக்கிறோம்.
இப்பொழுதெல்லாம் Positive, Negative என்ற இரண்டு வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
கொரோனாவுக்கு முன்னால் Positive என்ற வார்த்தையை விரும்பிக் கொண்டிருந்த நாம் இப்போது அந்த வார்த்தையை கேட்கவே பயப்படுகிறோம்.
ஒரு வங்கிக்குச் சென்று ஒரு லட்சம் ரூபாய் கடன் கிடைக்குமா என்று கேட்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
நாம் எதிர்பார்ப்பது
Positive Responseஐயா,
Negative Responseஐயா?
நிச்சயமாக கிடைக்கும் என்ற Positive Responseஐத்தான்.
துவைத்த துணியை காயப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண் இப்போது மழை வருமா என்று கேட்டால் அவள் எதிர்பார்ப்பது Positive Responseஐயா,
Negative Responseஐயா?
நிச்சயமாக வராது என்ற Negative Responseஐத்தான்.
அப்போ ஒன்று புரிகிறது. நமது கேள்வியின் தன்மைதான் அதற்கான பதிலை தீர்மானிக்கிறது.
காலையில் பள்ளிக்கூடம் வந்தவுடன் ஒரு பையன் ஆசிரியரிடம் சென்று,
"சார், இப்போது நான் வீட்டுக்கு போகலாமா?"
என்று கேட்டால்,
"No, இடத்தில் போய் உட்கார்." என்றுதான் சொல்வார்!
அதே பையன் காலையில் ஆசிரியரிடம் சென்று,
,"சார் நேற்று எங்களை படித்துக் கொண்டு வரச் சொன்ன Essayஐ நன்கு படித்துக்கொண்டு
வந்திருக்கிறேன். எழுதிக் காண்பிக்கட்டுமா?"
என்று கேட்டால்,
ஆசிரியர், "Very good. நல்ல பையன், எழுதிக் காண்பி"
என்றுதானே சொல்லுவார்.
ஆக நாம் கேட்பதை வைத்து தான் நமக்கு எத்தகைய பதில் கிடைக்கும் என்பதை தீர்மானிக்கலாம்.
யாரிடம் எதைக் கேட்க வேண்டும் என்பதையே தெரிந்துகொண்டு அதை கேட்டால், கேட்டது கிடைக்கும்.
யாரிடம் எதைக் கேட்டால் கிடைக்காதோ அதை கேட்டால் நிச்சயமாக கிடைக்காது.
இயேசு,
" கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொல்லியிருக்கிறார்.
இயேசுவிடம் எதைக் கேட்டால் நிச்சயமாக கொடுப்பார்?
அதைத் தெரிந்து கேட்க வேண்டும்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு.
"படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தனை வணங்க."
அதாவது உலகில் மனிதனைத் தவிர, மிருகங்கள் உட்பட, மற்ற எல்லாப் பொருள்களையும்
மனிதன் பயன்படுத்துவதற்காக படைத்த கடவுள்
மனிதனை மட்டும் தனக்காக படைத்தார்.
மனிதனோடு மட்டுமே தனது அன்பு என்ற பண்பை பகிர்ந்து கொண்டார்.
தன்னை அன்பு செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே கடவுள் மனிதனை படைத்தார்.
கடவுளை அன்பு செய்வதற்காக மட்டுமே மற்ற பொருள்களை மனிதன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சடப் பொருள்களால் யாரையும் அன்பு செய்ய முடியாது.
நம்மோடு தனது அன்பை பகிர்ந்துகொண்ட கடவுளையும்,
அவரது பிள்ளைகளையும் மட்டுமே நாம் அன்பு செய்ய வேண்டும்.
பதிலுக்கு அன்பு செய்யத் தெரியாத சடப் பொருள்களை அன்பு செய்வது பைத்தியக்காரத்தனம்.
கடவுள் மீதும், அவரது பிள்ளைகள் மீதும் நாம் கொண்டுள்ள அன்பை காண்பிப்பதற்காக நாம் சடப்பொருட்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வேறு வார்த்தைகளில்
கடவுளுக்காகவும் அவரது பிள்ளைகளுக்காகவும் சடப் பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர
சடப்பொருள்களுக்காக கடவுளையும் அவர்களது பிள்ளைகளையும் பயன்படுத்த நினைக்கக் கூடாது.
ஒரே வாக்கியத்தில்
கடவுளுக்காக உலகப் பொருட்களே அல்லாமல்,
உலகப் பொருள்களுக்காக கடவுள் அல்ல.
நமது உடல் சடப்பொருள் வகையைச் சார்ந்தது.
நமது ஆன்மாவிற்கு மட்டுமே அன்பு செய்யும் பண்பு உண்டு.
ஆகவே கடவுளும் நாமும் அன்பால் மட்டுமே இணைய முடியும்.
கடவுளோடு நித்திய காலமும் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகவே நமது ஆன்மா படைக்கப்பட்டுள்ளது.
கடவுளோடு நமது ஆன்மா இணைந்து வாழ நமது உடல் உதவிகரமாக இருக்க வேண்டும்.
கடவுளுக்கு அன்பு செய்யவும் சேவை செய்யவும் மட்டுமே நமது உடலையும் மற்ற உலகப் பொருள்களையும் நாம் பயன்படுத்த வேண்டும்.
நமது உடலுக்கும் உலக பொருட்களுக்கும் சேவை செய்ய கடவுளை பயன்படுத்த நினைக்கக் கூடாது.
உலகில் நாம் வாழ வேண்டிய ஒரே வாழ்வு ஆன்மீக வாழ்வு மட்டுமே.
உடலும் உலகப் பொருள்களும் ஆன்மீக வாழ்விற்கு உதவியாக இருப்பதற்கு மட்டுமே.
இப்போது ஒன்று புரிந்திருக்கும்.
நமக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள உறவு ஆன்மீக உறவு மட்டுமே.
இந்த ஆன்மீக உறவை வளர்த்துக் கொள்வதற்காக மட்டுமே நமது ஆன்மா இறைவனின் உதவியைத் தேட வேண்டும்.
இயேசு நமது ஆன்மாவை மீட்கவே உலகிற்கு வந்தார்.
எப்படி பாடம் நடத்த வந்திருக்கும் ஆசிரியரிடம் பாட சம்பந்தப்பட்ட விளக்கங்களை கேட்க வேண்டுமே தவிர,
பாட சம்பந்தம் இல்லாத விஷயங்களை கேட்கக் கூடாதோ,
அதேபோல் இறைவனிடம் நமது ஆன்மீக சம்பந்தப்பட்ட உதவிகளை மட்டுமே கேட்க வேண்டுமே தவிர
ஆன்மீக உதவிகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு
ஆன்மிகத்திற்கு சம்பந்தமில்லாத உதவிகளை கேட்கக் கூடாது.
உலகியல் வாழ்வு சார்ந்த உதவிகளை இறைவனிடம் கேட்கலாமா?
கேட்கலாம்.
அவை நமது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்தால் மட்டுமே.
"கேளுங்கள், கொடுக்கப்படும்"
என்று ஆண்டவர் சொல்லியிருப்பதால் அவரது response எப்போதும் positive response ஆகவே இருக்கும்.
நாம் எதைக் கேட்டாலும் நமது ஆன்மீக வாழ்விற்கு உதவிகரமாய் இருப்பதைக் கட்டாயம் தருவார்.
நாம் கேட்பது ஆன்மீக வாழ்விற்கு உதவிகரமாய் இல்லாவிட்டால்
எது உதவிகரமாய் இருக்குமோ அதைத் தருவார்.
ஒரே வரியில்
நாம் கேட்கும் போது இல்லை என்று சொல்லமாட்டார், தர வேண்டியதை தருவார்.
நமது செபம் ஒரு போதும் வீணாய் போகாது.
சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக நெடுநாள் செபித்துக் கொண்டு இருப்போம்.
அந்தக் கருத்து நிறைவேறாதது போல் நமக்குத் தோன்றும்.
ஆனால் நமது ஆன்மீக வாழ்விற்கு உதவிகரமான மற்றொன்று நிறைவேறிக் கொண்டே இருக்கும்.
நமக்கு எது தேவையென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கடவுளுக்கு தெரியும்.
நமக்கு நல்லது என்று கடவுள் தருவதை நன்றியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment