Monday, April 12, 2021

"அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, "ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவோம்."

"அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, "ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவோம்."


இயேசுவுக்கு எதிராகவே பேசிக்கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருந்த பரிசேயர்கள் மத்தியில் நல்லவர் ஒருவர் இருந்தார். .

அவர் பெயர் நிக்கொதேமு.

"அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, "ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவோம். தன்னோடு கடவுள் இருந்தாலன்றி எவனும் நீர் செய்கிற அருங்குறிகளைச் செய்யமுடியாது" என்றார்.

அவர் ஒரு இரவில் இயேசுவிடம் வந்தார்.

 'இரவில்' என்று குறிப்பிடும் போது அவர் இன்னும் முழுமையான விசுவாச ஒளியை பெறவில்லை என்பதை நற்செய்தி ஆசிரியர் நமக்கு சொல்ல விரும்புகிறார்.

அவர் இன்னும் இயேசுவோடு நெருங்கி வரவில்லை.

இயேசு செய்த புதுமைகளிலிருந்து அவர் மற்ற மனிதர்களைப்போல் அல்ல, இறைவனின் விசேச அருள் பெற்றவர் என்பது மட்டும் அவருக்குப் புரிகிறது.

ஆகவேதான் "நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவோம்." என்று மட்டும் சொல்கிறார்.

இது அவரது விசுவாசத்தின் ஆரம்பம்.

இயேசுவோடு பேசிக்கொண்டிருக்கும்போதே இயேசு அவரது விசுவாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆழப்படுத்துகிறார்.

கடவுளுடைய அரசை காண வேண்டுமென்றால் ஒருவன் முதலில் விண்ணிலிருந்து பிறக்க வேண்டும்.

உடலைப் பொறுத்த மட்டில் மனிதன் மண்ணில் பிறந்தவன்.

ஆன்மா விண்ணில் இருந்து வந்தது.

உடலை வளர்ப்பதற்கு மண்ணில் வளரும் பொருட்கள் போதுமானவை.

ஆனால் ஆன்மா விண்ணக அரசைப் பற்றி அறிய வேண்டுமென்றால் அவனுக்கு விண்ணில் இருந்து அதாவது இறைவனிடமிருந்து நேரடியாக அருள் வரவேண்டும்.

நீரினாலும் ஆவியினாலும் பிறக்கும் போது தான், அதாவது கிறிஸ்தவ விசுவாசத்தின்படி ஞானஸ்நானம் பெறும் பொழுது தான்,

ஆன்மாவினால் கடவுளுடைய அரசில் நுழைய முடியும்.

இயேசு ஒரு ஒப்புமை கூறி பரிசுத்த ஆவியின் அருளைப் விளக்குகிறார்.

காற்று வீசுகிறது என்பதை அதன் ஓசையால் அறிந்து கொள்கிறோம்.

ஆனால் எங்கிருந்து எங்கு நோக்கி வீசுகிறது என்பதை கண்ணால் பார்க்க முடியாது.

அதே போல் பரிசுத்த ஆவி தனது அருள் வரங்களோடு நம்மிடம் இருப்பதை கண்ணால் பார்க்க முடியாது, 

ஆனால் அவர் நம்மில் ஆற்றும் செயல்பாடுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆவியின் வரங்களை நமது ஊனக்கண்ணால் பார்க்க முடியாது.


ஆண்டவர் விண்ணுலகைச் சார்ந்தவைபற்றி நமக்குக் கூறும்போது, 

நாம் அவற்றை விசுவசிக்க வேண்டும்

வானகத்திலிருந்து இறங்கி வந்த 

மனுமகனில் விசுவாசங்கொள்ளும் அனைவரும் முடிவில்லா வாழ்வைப் பெறுவர். 

தந்தை இறைவன் தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு 

அவரது ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

இறை மகன் மீது விசுவாசம் கொள்பவர்களே மீட்புப் பெறுவர்.

நிக்கொதேமு இயேசுவை கடவுளிடமிருந்து வந்த போதகர் 
என்று மட்டும் அழைத்தார்.

முதலில் தன்னை வானகத்திலிருந்து இறங்கி வந்த மனுமகன் எங்கு சொல்லி ஆரம்பித்த இயேசு

 இறுதியில் தான் கடவுளுடைய மகன்

என்று கூறியதிலிருந்து இயேசு எவ்வாறு அவரின் விசுவாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆழப் படுத்துகிறார் என்பது தெரிகிறது.

"மோயீசன் பாலைவனத்தில் பாம்பை உயர்த்தியதுபோல மனுமகனும் உயர்த்தப்படவேண்டும்." என்று சொல்லும்போது இயேசு தனது பாடுகளைப் பற்றியும், சிலுவை மரணத்தைப் பற்றியும் அவருக்கு கூறுகிறார்.

இயேசு உலகிற்கு வந்தது மனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக மட்டுமே, தீர்ப்பிட அல்ல.

விசுவசியாதவன் தனது விசுவாசம் இன்மையால் தனக்குரிய தீர்ப்பை தானே பெற்றுக் கொள்கிறான். 

அவன் பெரும் தீர்ப்பு இறைவனால் தரப்பட்ட அல்ல, அவனது விசுவாசம் இன்மையால் தரப்பட்டது


இயேசு தனது பேச்சை

" உண்மைக்கேற்ப நடப்பவனோ, தன் செயல்கள் கடவுளோடு ஒன்றித்துச் செய்தவையாக வெளிப்படும்படி ஒளியிடம் வருகிறான்."
என்று முடிக்கிறார்.

அதாவது உண்மையை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது, அதன்படி நடக்க வேண்டும்.

அவனுடைய செயல்கள் கடவுளோடு ஒன்றித்தவையாய்
இருக்க வேண்டும். 

அதாவது நற்செயல்களை கடவுளுக்காக செய்ய வேண்டும்.


 இதிலிருந்து வேறொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நிக்கொதேமு இயேசுவிடம் இரவில் அதாவது இருட்டில் வருகிறான். 

ஆனால் ஒளியிடம் வருகிறான்.

இயேசுவே ஒளி.

அரைகுறை விசுவாசமாகிய இருட்டில் இயேசுவிடம் வந்தவன்

 முழுமையான விசுவாசமாகிய ஒளியை பெற்றுக்கொண்டான் என்பதை நற்செய்தி ஆசிரியர் Symbolic ஆக‌ குறிப்பிடுகிறார்.

அவரது கொஞ்ச நேர பேச்சில் ஒரு முழுமையான நற்செய்தி நூலே அடங்கி இருக்கிறது.

1. இறைமகன் மனு மகனாகப் பிறந்தார்.

2. பாடுகள் பட்டு, சிலுவையில் உயர்த்தப்பட்டு, மரித்து உலகை மீட்க வேண்டும் என்பது அவரது திட்டம்.

3. அவர் மீது விசுவாசம் கொள்பவன் மீட்பு பெறுவான்.
விசுவாசம் கொள்ளாதவன் தனக்குத் தானே தீர்ப்பிட்டுக் கொள்கிறான்.

4. விசுவாசித்தால் மட்டும் போதாது கடவுளுக்காக நற்செயல்கள் புதிய வேண்டும்.

5.நீரினாலும், பரிசுத்த ஆவியினாலும் பிறந்தவர் மட்டுமே கடவுளுடைய அரசில் நுழையமுடியும்.


இதே நிக்கொதேமுதான் பரிசேயர்கள் கூட்டத்தில் இயேசுவுக்காக பரிந்து பேசினார்.
(அரு.7:50, 51)

இவர்தான் இயேசு மரித்தபோது 

இயேசுவின் சடலத்தை எடுத்து, யூதரின் அடக்க முறைப்படி பரிமளப்பொருட்களுடன் துணிகளில் சுற்றிக் கட்டி,
புதுக் கல்லறை ஒன்றில் அடக்கம் செய்தார்.
(அரு.19:39 - 41)

இது அவருடைய விசுவாசத்திற்கு இயேசு அளித்த பரிசு.

நமது நற்செய்தி வாசகங்களிலிருந்து நாம் ஏதாவது கற்றுக்கொள்கிறோமா?

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment