நற்செய்தியை மக்களுக்கு புரிகிற வண்ணமாக சொல்வதற்காக
தான் பயன்படுத்தும் ஒப்புமைகளையும், உருவகங்களையும் மக்களது அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுத்தாள்வது இயேசுவின் பழக்கம்.
தன்னை ஒரு ஆயனாகவும், தனது சீடர்களை ஆடுகளாகவும் உருவகப்படுத்துவதிலிருந்து
இயேசுவின் காலத்தில் சாதாரண மக்களிடையே ஆடு மேய்க்கும் தொழில் ஒரு முக்கிய தொழிலாக விளங்கியது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.
இயேசு பிறந்த செய்தி விண்ணவர்களால் முதல் முதல் அறிவிக்கப்பட்டது ஆடு மேய்க்கும் இடையர்களுக்குத்தான்.
அவரை முதல் முதல் சந்திக்க வந்தவர்களும் அவர்கள்தான்.
அவர்களைத் தேர்ந்தெடுத்தற்கு அவர்கள் ஏழைகள் என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
தனது திருச்சபையைக் கூட ஒரு ஆட்டு மந்தையாகத்தான் ஆண்டவர் உருவகப்படுத்துகிறார்.
இராயப்பரை திருச்சபையின் தலைவராக நியமித்த போது அவரை,
" எனது ஆடுகளை மேய்" என்றுதான் சொல்கிறார்.
நாமும் நமது ஆன்மீக கண்காணிப்பாளர்களை (Bishops) ஆயர்கள் என்றுதானே அழைக்கிறோம்!
நாட்டை ஆளும் மன்னர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்காக நாடுகள் பலவற்றை வென்று
அவர்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியின் நீள அகலத்தை அதிகரித்துக்கொண்டே போவார்கள்.
அவர்களுக்கு நாடு முழுவதும் மொத்தமாகத் தெரியும்.
ஆனால் நாட்டில் உள்ள மக்கள்
ஒவ்வொருவரையும் பற்றி தனித்தனியே எதுவும் தெரியாது.
ஒரு ஆளை பிடித்துக்கொண்டு அவர்கள் முன் நிறுத்தினால் இது தங்கள் நாட்டு பிரஜைதானா என்று கூட தெரியாது.
ஆனால் ஆட்டு மந்தையை கண்காணிக்கும் இடையனுக்கு மந்தையை மொத்தமாகவும் தெரியும்,
தனித்தனியே ஒவ்வொரு ஆடாகவும் தெரியும்.
மனுக்குலத்தை படைத்த இறைவனுக்கு மனுக்குலத்தை மொத்தமாகவும் தெரியும்,
தனித்தனியாக ஒவ்வொரு மனிதனாகவும் தெரியும்.
கடவுள் ஒவ்வொரு மனிதன் மீதும் தனித்தனியே அக்கரை காண்பிக்கிறார்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் அவனது ஒவ்வொரு அசைவையும் அவர் பராமரிக்கிறார்.
ஆட்டு மந்தையின் ஆயனுக்கு தனது ஒவ்வொரு ஆட்டையும் நுணுக்கமாக தெரிவது போலவே,
இயேசுவுக்கு தன்னால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் பற்றித் தெரியும்.
ஆகவேதான் இயேசு தன்னை ஒரு ஆயனாக உருவகப்படுத்துகிறார்.
நம்மைப் பொறுத்த மட்டில் நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு மூச்சும் இயேசுவின் பராமரிப்பில் இருக்கிறது.
நம்மீது நமக்கு உள்ள அக்கரையை விட இயேசுவுக்கு நம்மீது அக்கரை அதிகம்.
பாவம் தவிர மற்ற எல்லா காரியங்களிலும் நம்மை முழுக்க முழுக்க வழிநடத்துபவர் அவரே.
நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அவரது திட்டப்படியும் அனுமதியுடனும்தான் நடக்கின்றது.
நமது வாழ்வில் நல்லவற்றையே அவர் திட்டமிடுகிறார், நல்லவற்றையே அனுமதிக்கிறார்.
ஆகவே நமக்கு என்ன நடந்தாலும் அது அவரது சித்தம் என்று முழுப்பொறுப்பையும் அவர் கையில் ஒப்படைத்து விட்டு நாம் கவலை இன்றி இருக்கலாம்.
ஆகவேதான் புனிதர்கள் தங்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் வாழ்நாள் முழுவதும் இயேசுவுக்காகவே வாழ்ந்தார்கள்.
அன்னை மரியாள்
"இதோ ஆண்டவருடைய அடிமை" என்று தன்னையே இறைவனது அடிமையாக ஒப்புக் கொடுத்தபின்
அவள் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் தன் மகனுக்காகவே வாழ்ந்தாள்.
அவள் பட்ட வியாகுலங்கள் கூட தனக்காக அல்ல, இயேசுவுக்காகத் தான்.
இயேசு மரணமடைந்த பின் அவரது அப்போஸ்தலர்களின் நலனுக்காகவே வாழ்ந்தாள்.
நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன்னுயிரையே கொடுப்பான்.
இயேசு நமது மீட்புக்காகத்தானே தனது இன்னுயிரை சிலுவை மரத்தில் பலியாக்கினார்!
மனிதகுல மீட்பு பணியில் நாமும் நமது இன்னுயிரை இறை மக்களுக்காக தியாகம் செய்ய தயாராக இருக்கவேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
அவரது சீடர்கள் என்ற முறையில் இது நமது கடமை.
கல்கத்தா தெரசா தொழு நோயாளிகளின் நோய் தன்னைத் தொற்றிக் கொள்ளுமோ என்று பயந்திருந்தால்
அவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்திருக்கமாட்டாள்.
அர்ப்பண வாழ்வு தனக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பயம் கொள்ளாது, கவலையும் படாது.
நாமோ நோய் தொற்றிக் கொள்ளாமல் சேவை செய்வது எப்படி என்பதைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
நமக்காக உயிரை கொடுத்த நல்ல ஆயனின் சீடர்களுக்கு இது அழகல்ல.
தொழுநோயாளிகளுக்கான சேவையில் தன்னை அர்ப்பணித்து,
தானும் அதே நோயால் பிடிக்கப்பட்டு
தொழுநோயாளியாகவே மரித்த
புனித தமியான்
(ST. DAMIEN OF MOLOKAI)
நோயாளிகளுக்கான அர்ப்பண வாழ்விற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
நல்ல ஆயனின் மற்றொரு முக்கியமான பண்பு காணாமல் போன ஆடுகளை தானே சென்று தேடுவது.
மந்தையை விட்டு பிரிந்து சென்ற ஆடுகளாகிய பாவிகளைத் தேடியே நல்ல ஆயனாகிய இயேசு விண்ணகம் விட்டு மண்ணகம் வந்தார்.
அவர்களைத் தேடி மீட்பதில்தான் தன் உயிரையே பலிகொடுத்தார்.
நற்செய்தி அறிவிக்கும் பணியே பாவிகளைத் தேடி அலையும் பணி தான்.
இயேசு விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தது போல அவரது அப்போஸ்தலர்கள் மீட்பதற்காக பாவிகளைத் தேடி உலகெங்கும் சென்றார்கள்.
தங்கள் உயிர்களையும் தியாகம் செய்தார்கள்.
இதே பணிக்காக தான் வேத போதகர்கள் நாடு நாடாகச் சென்று பாவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
அப்போஸ்தலராகிய புனித தோமையார்,
புனித சவேரியார்,
புனித அருளானந்தர்
வீரமாமுனிவர்
இன்னும் அனேக வேத போதக குருக்கள்
பாவிகளைத் தேடி இந்தியாவிற்கு வந்தனர்.
நமது பங்கு குருக்களின் பணியே அவரவர் பொறுப்பிலுள்ள பகுதியில் வாழும் பாவிகளைத் தேடிச் சென்று மீட்பது தான்.
இன்றைய காலகட்டத்தில் அவர்கள்தான் ஊர் ஊராகச் சென்று பாவசங்கீர்த்தனம் கேட்பதற்காக பாவிகளைத் தேடவேண்டும்.
பாவிகள் தங்களை தேடி வருவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கக் கூடாது.
ஒரு பாவி பாவசங்கீர்த்தனம் செய்யும்போது விண்ணகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி
ஒரு புனிதர் புனிதர் பட்டம் பெறும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட அதிகமாக இருக்கும்!
பாவ சங்கீர்த்தன விசயத்தில்
பாவ சங்கீர்த்தனம் செய்பவர்களும் ஆர்வம் காட்ட வேண்டும் கேட்பவர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்.
பாவிகளை விட நமது ஆண்டவரே பாவ மன்னிப்பில் அதிக ஆர்வம் காட்டினார் என்று நமக்குத் தெரியும்.
இறைமகனை மனுமகனாக பிறக்க தூண்டியது பாவங்களை மன்னிப்பதில் அவருக்கு இருந்த அளவுகடந்த ஆர்வம்தான்.
பாவங்களை மன்னிக்க ஆண்டவரிடமிருந்து அதிகாரம் பெற்றவர்களுக்கும் அதே ஆர்வம் இருக்க வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment