Wednesday, April 7, 2021

"இஸ்ராயேலுக்கு விடுதலை அளிப்பவர் அவரே என நாங்கள் நம்பியிருந்தோம்."(லூக்.24:21)

"இஸ்ராயேலுக்கு விடுதலை அளிப்பவர் அவரே என நாங்கள் நம்பியிருந்தோம்."
(லூக்.24:21)

இயேசு உயிர்த்து விட்டார் என்று பெண்கள் கூறியதை நம்பாமல்
யெருசலேமிலிருந்து ஏழு கல் தொலைவிலிருந்த எம்மாவுஸ் என்ற ஊருக்குப் போய்க் கொண்டிருந்த இரண்டு சீடர்களுக்கு இயேசு காட்சி அளித்தார்.

அவர்களில் ஒருவர் கிலேயோப்பா, அன்னை மரியாளின் சகோதரியாகிய மரியாளின் கணவர், சூசையப்பரின் சகோதரர்.

"இஸ்ராயேலுக்கு விடுதலை அளிப்பவர் அவரே என நாங்கள் நம்பியிருந்தோம்."

என்று அவர் இயேசுவிடம் கூறிய வார்த்தைகள் அவர்கள் இயேசு உயிர்த்ததை நம்பாமல் இருந்ததற்கான காரணத்தை விளக்கும்.

இயேசுவை பின்பற்றிய பலர் மெசியாவைப் பற்றி கொண்டிருந்த தவறான எண்ணமே அவர்களது விசுவாசம் இன்மைக்கு காரணம்.

எல்லோரும் இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் அவர்களில் பலர் மெசியா யூதர்களை ரோமையரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பார் என்று நம்பினார்கள். 

மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரணித்து உயிர்ப்பார் என்பதை நம்பவில்லை.

மெசியா ரோமையர்களோடு போரிட்டு வெற்றி பெறுவார் என்று எண்ணினார்களே தவிர,
 அவர் கொல்லப்படுவார் என்று
 நினைக்கவேயில்லை.

அப்போஸ்தலர்களிடம் இயேசு பலமுறை மனுமகன் பாடுபட்டு, மரிக்கவும், மூன்றாம்நாள் உயிர்க்கவும் வேண்டும் என்று சொல்லியும்கூட அவர்கள் அதை விசுவசித்ததாகத் தெரியவில்லை.

விசுவசித்திருந்தால் இயேசுவைத் தேடி கல்லறைக்கு வந்திருக்க மாட்டார்கள்.

இயேசு மனிதனாகப் பிறந்து பாடுபட்டு மரித்து உயிர்த்தது நமக்கு அரசியல் சுதந்திரம் பெற்றுத் தருவதற்காக அல்ல,

 பொருளாதார சுதந்திரம் பெற்றுத் தருவதற்காக அல்ல, 

சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்காக அல்ல,

நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெற்றுத் தருவதற்காக அல்ல,

அவர் பாடுபட்டு மரித்து உயிர்த்ததன் ஒரே நோக்கம் நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக மட்டுமே.

பல நூறு மைல்கள் பிரயாணம் செய்து குற்றாலத்திற்கு வந்தவர்கள் அருவியில் குளிக்காமல் 

அங்கு மரங்களில் விளையாடும் குரங்குகளை ரசித்துவிட்டு,

 ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினால் எப்படி இருக்குமோ 

அப்படி இருக்கும் 

இயேசுவிடம் வந்து 

பாவ மன்னிப்பு மட்டும் கேட்காமல்

 மற்ற எல்லா உலக வாழ்க்கை சம்பந்தப்பட்ட உதவிகளை மட்டும் கேட்பது.

நம்மில் அநேகர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் இயேசுவைத் தேடி கோவிலுக்கு வருபவர்கள் 

திவ்ய பலி பூசை ஆரம்பிப்பதற்கு முன்னால் 

தங்களது ஆன்மாவைப் பரிசோதனை செய்து

 தேவைப்பட்டால் பாவ சங்கீர்த்தனம் செய்து

 அதற்குப்பின் பூசை கண்டு நற்கருணை வாங்க வேண்டும்.

கடனுக்காக வந்து பூசை கண்டுவிட்டு திரும்புவதால் எந்தவித ஆன்மீக நலனும் கிடைக்காது.

குழந்தை வரம் கிடைக்க, 
கடன் தொல்லை நீங்க, 
தேர்வில் வெற்றி பெற, 
நல்ல வேலை கிடைக்க, 
சம்பள உயர்வு கிடைக்க, 
வசதியுள்ள மணப்பெண் கிடைக்க

போன்ற உதவிகளை பெறுவதற்காக வேளாங்கண்ணி அன்னையை தேடி போகும் நாம்

 ஆன்மீக நலனுக்காக மட்டுமே தேடி போகின்றோமா?

 சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

இயேசு வாழ்ந்த காலத்திலேயே யூத மக்களுக்கு அரசியல் விடுதலை பெற்றுத் தரவில்லை.

 கிறிஸ்தவர்களைக் கொலை செய்த மன்னர்களை பதவி நீக்கம் செய்யவில்லை.

"உங்களை வேதனைக்குக் கையளிப்பார்கள்: கொலைசெய்வார்கள்: என் பெயருக்காக எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்."
(மத்.24:9)
என்றுதான் இயேசு கூறினார்.

நாம் நமது ஆன்மீக வாழ்வை சரியாக வைத்துக் கொண்டு 

அரசியல் சுதந்திரம் பெற போராடலாம், பொருளாதார சுதந்திரம் பெற போராடலாம். நோய் நொடிகளை ஒழிக்க பாடுபடலாம்.

ஆன்மிக நலனைப் பேணாமல் உடலை மட்டும் பேணுவது

பாடத்தைப் படிக்காமல் விளையாடுவதற்காக மட்டும் பள்ளிக்கூடம் செல்வதற்குச் சமம்.

இயேசு உயிர்த்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அன்னை மரியாளிடம் இருந்த விசுவாசம் நமக்கும் வேண்டும்.

அவள் மட்டும் தான் இயேசுவைத் தேடி கல்லறைக்கு வரவில்லை.
 அவளைத் தேடியே இயேசு சென்றார்.

கிலேயோப்பாவின் மனைவி மரியாளும்,

செபெதேயுவின் மனைவி மரியாளும்கூட விசுவாசம் இன்றி கல்லறைக்கு வந்துவிட்டார்கள்.

இயேசு அவர்களுக்கும் காட்சி தந்தார்.

அப்போஸ்தலர்களைத் தேடியும் இயேசு சென்றார்.

ஆனால் அவர்கள் அதற்கு முன்னாலேயே தங்களது விசுவாசமின்மையை  வெளிப்படுத்தி விட்டார்கள்.

இப்பொழுதும் கூட நம்மிடம் போதிய விசுவாசம் இல்லாவிட்டாலும் இயேசு நம்மை காப்பாற்றி கொண்டுதான் வருகிறார்.

அது அவரது பெருந்தன்மை.

நாமும் பெருந்தன்மை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். 

இயேசுவை தேடும்போது நமது ஆன்மீக நலனுக்கு முதல் முக்கியத்துவம் கொடுப்போம்.

உலகக் நலன்களுக்கு இரண்டாவது இடம் கொடுப்போம்.

தேர்தல் முடிந்துவிட்டது.

முடிவு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது.

எப்படி இருந்தாலும் நமது வாழ்வில் இயேசுவுக்கே முதலிடம்.

இயேசுவுக்காக வாழ்வோம் இயேசுவுக்காக மரிப்போம். 
இயேசுவில் உயிர்ப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment