Tuesday, April 27, 2021

"என் செயல்களையாவது விசுவசியுங்கள்:"(அரு.10:38)

"என் செயல்களையாவது விசுவசியுங்கள்:"
(அரு.10:38)

பைபிள் முதல் அனைத்து நூல்களையும் கற்றறிந்து சிந்தனா சக்தியில் வல்லவர்களாய் விளங்கும் அறிஞர்களைப் பற்றி பெருமைப் படுவதை விட

படிப்பறிவு இல்லாத சாதாரண பாமர மக்களைப் பற்றி சந்தோஷப்படுவது எவ்வளவோ மேல்.

இயேசுவின் காலத்திலும் வேதத்தை முழுவதும் கற்றுத்தேர்ந்த மறைநூல் அறிஞர்களுளும்,

அவர்களால் வழிநடத்தப்பட்ட ஆனால் படிப்பறிவற்ற சாதாரண யூதர்களும் இருந்தார்கள்.

இருவகையினருக்குமே இயேசு நற்செய்தியை அறிவித்தார்.

படிப்பறிவற்ற சாதாரண மக்கள் இயேசு செய்த புதுமைகளையும் நற்செயல்களையும் பார்த்து அவர் மேல் உண்மையான விசுவாசம் கொண்டார்கள்.

ஆனால் மறைநூல் அறிஞர்கள் அவரை விசுவசியாதது மட்டுமல்ல 
அவரை கொல்லவும் வழி தேடிக் கொண்டிருந்தார்கள்.


அவர்கள் ஒரு நாள் இயேசுவிடம்,

"நீர் மெசியாவாக இருந்தால் தெளிவாகச் சொல்லிவிடும்."

இயேசுவை விசுவசிக்க வேண்டும் என்ற ஆவலில் இப்படிச் சொல்லவில்லை.

தாங்கள் அவரை விசுவசிக்க வில்லை என்பதை காட்டிக் கொள்ளவே இவ்வாறு சொன்னார்கள்.


இயேசு அவர்களைப் பார்த்து,

"நான் சொல்லிவிட்டேன், நீங்கள்தாம் விசுவசிக்கிறதில்லை. என் தந்தையின்பெயரால் நான் புரியும் செயல்களே எனக்குச் சாட்சியம்.'' என்றார்.

அதாவது,

" நான் செய்யும் செயல்களைப் பார்த்து என்னை நீங்கள் விசுவசித்திருக்க வேண்டும். பார்த்தும் விசுவசியாதது உங்கள் தவறு." என்ற பொருள்பட கூறினார்.

இயேசு உலகிற்கு வந்தது புதுமைகள் செய்வதற்காக அல்ல.
நோயாளிகளை குணமாக்குவதற்காகவும் அல்ல. 

அவர் வந்ததன் நோக்கம் நற்செய்தி அறிவிக்கவும்

 நமது பாவங்களுக்கு பரிகாரமாக பாடுகள் பட்டு, சிலுவை மரத்தில் பலியாக தன்னை ஒப்பு கொடுப்பதற்காகவும்தான்.

ஆனாலும் தான் இறைமகன் என்பதை மக்கள் விசுவசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதுமைகள் செய்தார் நோயாளிகளைக் குணமாக்கினார்.

படிப்பறிவற்ற சாதாரண மக்கள் அவரது செயல்களைப் பார்த்து அவர் மெசியா என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.

இயேசுவின் நற்செய்தியை கேட்க வேண்டும் என்பதற்காகவே அவர் பின்னாலேயே சென்றவர்கள் படிப்பு அறிவு இல்லாத சாதாரண பாமர மக்கள்தான்.

மறைநூல் அறிஞர்கள் மட்டும் அவரை மெசியா என்று ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.

அறிஞர்கள் இயேசுவின் பின்னால் சென்றது அவரது நற்செய்தியை கேட்பதற்காக அல்ல, 

அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடுதான். 


இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது மறைநூல் அறிவை அல்ல.

விசுவாசத்தையும் விசுவாச வாழ்க்கையையும் மட்டுமே.

பைபிள் அறிவு நமக்கு மீட்பைப் பெற்றுத் தராது.

பைபிளை வாழ்வதுதான் மீட்பைப் பெற்றுத் தரும்.

பைபிளை Cover to cover பாராமல் படித்து வசனம் தவறாமல் ஒப்பிக்க தெரிந்தால் தலையில் மட்டுமே கனம் ஏறும். இருதயத்திற்குள் ஒன்றும் ஏறாது.

எழுத வாசிக்க தெரியாதவனிடம் பைபிளை பற்றிய அறிவு தலையில் எதுவும் இருக்காது.

ஆனால் மொத்த பைபிளும் போதிக்கும் அன்பு இருதயத்தில் இருந்தால் போதும், அவன் மீட்புப் பெறுவான்.

அன்பு ஒன்றுதான் மீட்பை பெற்றுத்தரும்.

மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் செயல்களைப் பார்த்தும் அவரை விசுவசிக்க வில்லை.

நாம் அவர்களைப்போல இருந்துவிடக்கூடாது.

நம்மில் இயேசு செய்யும் செயல்களைப் பார்த்து அவரை விசுவசிக்க வேண்டும்.

விசுவாசத்தின் அடிப்படையில் நமது வாழ்க்கையை நாமே உற்றுநோக்கினால் இயேசு நம் வாழ்வில் செயல் புரிந்து கொண்டிருப்பது புரியும்..
..
விசுவாசக் கண்ணால் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இயேசுவின் செயல்கள் புரியும்.

முதலில் நமது வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் இயேசுவே நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார், நம்மை பராமரிக்கிறார் என்று விசுவசிக்க வேண்டும்‌.

இந்த விசுவாசத்தோடு நமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு செயலையும் உற்றுநோக்கினால் அது இயேசுவின் பராமரிப்பினால் நடைபெற்று வரும் செயல் என்பது விளங்கும்.

விசுவாசம் இல்லாமல் பார்த்தால் எல்லா செயல்களும் தற்செயலாக நடப்பது போல் தோன்றும்.

 ஒரு சிறு செயல் கூட தற்செயலாக நடப்பது இல்லை.

நமது மீட்பை மையமாக வைத்து நமது வாழ்வின் ஒவ்வொரு செயலையும் இயேசு நித்திய காலமாக திட்டமிடுகிறார். ‌

மீட்பை மையமாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும்.

மீட்பைப் பற்றி 
கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இது புரியாது.

படிப்பதற்காக மட்டும் பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பவர்களுக்கு மட்டுமே பள்ளிக்கூட சட்டதிட்டங்களும், பழக்கவழக்கங்களும் புரியும்.

படிப்பை பற்றியே கவலைப்படாதவர்களுக்கு ஆசிரியர் ஏன் வகுப்பிற்கு வருகிறார் என்பதே புரியாது.

மீட்பை மையமாக வைத்து வாழ்வது என்றால் என்ன?

நாம் எதற்காக உலகில் பிறந்திருக்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்?

நாம் பிறந்திருப்பதற்கும் வாழ்வதற்கும் ஒரே நோக்கம் தான்:
மீட்பு.

பிறப்பின் நோக்கம் உண்பது அல்ல, வளர்வது அல்ல, படிப்பது அல்ல, பட்டம் பெறுவது அல்ல, வேலை பார்ப்பது அல்ல, சம்பளம் பெறுவது அல்ல, வசதியாக வாழ்வது அல்ல.

இவ்வளவும் கிடைத்து மீட்பு கிடைக்காவிட்டால் நாம் பிறந்தும் பயனில்லை.

இவற்றில் எதுவும் கிடைக்காமல் மீட்பு மட்டும் கிடைத்தால் நாம் பிறவியின் பயனை அடைந்துவிட்டோம்.

மீட்பிற்காக வாழும் வாழ்க்கையைத்தான் விசுவாச வாழ்க்கை என்கிறோம்.

இயேசுவை நமது இரட்சகராக ஏற்றுக் கொள்வதில் மட்டும் அடங்கி இருக்கவில்லை விசுவாசம். அதற்காக வாழ்வதுதான் விசுவாசம்.

விசுவாச வாழ்வில் நமது செயல்கள் மீட்பை நோக்கியே இருக்க வேண்டும்.

மீட்பை நோக்கிய செயல்கள் அனைத்தையும் திட்டமிடுபவர் நமது மீட்பராகிய இயேசுவே.

ஆகவேதான் நமது செயல்களில் இருந்து இயேசு நம்மில் செயல்படுவதை புரிந்து கொள்ளலாம்.

மீட்பை நோக்கிய வாழ்வில் இயேசு செயலாற்றுவது விசுவாச கண் உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்.

விசுவாசம் இன்றி வெறும் மறை நூலறிவு மட்டும் இருப்பவர்களுக்கு புரியாது.

யூத அறிஞர்களுக்கு மறைநூல் அறிவு நிறைய இருந்தது.

ஆனால் விசுவாசம் கொஞ்சம்கூட இல்லை.

ஆகவேதான் இயேசுவை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

வாழ்க்கைக்கு பயன்படாத அறிவு waste!

விசுவாச வாழ்க்கைக்கு பயன்படாத மறைநூல் அறிவும் waste!

பைபிள் வாசிப்போம்,

 அறிவு பெற அல்ல,

 ஆண்டவருக்காக வாழ.

விசுவசிப்போம்.

 விசுவாசத்தை வாழ்வாக்குவோம்.

மீட்பு அடைவதற்காக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment