அல்லது ஏதோ ஒரு பத்திரிகையை வாசிப்பது போல் வாசித்து விட்டு போட்டு விடுகிறோமா?
நிக்கோதேமுவின் விசுவாச அனுபவத்தை பைபிளில் வாசித்த நமக்கு அது எந்த வகையிலாவது உதவி இருக்கிறதா?
தினமும் பைபிள் வாசிப்பது பொழுதுபோக்கிற்காக அல்ல.
இறைவாக்கு நமது ஆன்மிக வாழ்வின் உயிர்.
உயிரால்தான் நாம் வாழ்கிறோம்.
பைபிள் வாசிப்பின் பயனே அது நமது ஆன்மீக வாழ்வில் பயன்படுத்தில்தான் அடங்கி இருக்கிறது.
அப்படியானால் நிக்கோதேமுவின்
இறை அனுபவம் நமது இறை அனுபவமாக மாற வேண்டும்.
மாறியிருக்கிறதா?
நிக்கோதேமு முதல் முதலில் இயேசுவிடம் வரும் போது அவரது விசுவாசம் ஆழமற்ற நிலையில், அதாவது துவக்க நிலையில் இருந்தது.
இயேசு அதை ஆழப்படுத்தினார்.
நிக்கோதேமுவின் அனுபவத்தினால் நமது விசுவாசம் ஆழமாகியிருக்கிறதா?
நமது விசுவாசம் இயேசு நற்செய்தியை அறிவித்த போதகர் என்ற அளவில் நிற்கிறதா?
அவர் மெய்யாகவே மனிதனாகப் பிறந்த மெய்யான இறைமகன் என்பதை மெய்யாகவே ஏற்றுக் கொள்கிறோமா?
இயேசு மனிதனாக பிறந்தது நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய பாடுகள் பட்டு சிலுவை மரத்தில் தன்னையே பலியாக ஒப்புக் கொடுப்பதற்காக என்று மெய்யாகவே ஏற்றுக் கொள்கிறோமா?
இயேசு ஒருவரே நமது மீட்பர் என்று மெய்யாகவே ஏற்றுக் கொள்கிறோமா?
நாம் மனிதர்களாக பிறந்திருப்பது இயேசுவுக்காக மட்டுமே வாழ்ந்து, அவரோடு நித்திய பேரின்பத்தில் இணைவதற்காகத்தான் என்பதை மெய்யாகவே ஏற்றுக் கொள்கிறோமா?
மெய்யாகவே, மெய்யாகவே என்று திரும்ப திரும்ப சொல்வதற்கு காரணம்
நமது விசுவாசம் கொள்கை அளவில் தானா,
அல்லது நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் உயிரானதா
என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்வதற்காகத்தான்.
நமது விசுவாசம் உண்மையானது தானா அதுவே பேரளவிற்குத் தானா என்பதை எப்படி அறிவது.
செயல் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம்.
நமது விசுவாசம் நமது செயல்களிலும் நமது வாழ்வின் நிகழ்வுகளிலும் பிரதிபலிக்கும்.
நமது வாழ்வின் நிகழ்வுகளை உலகியல் கண்ணால் பார்க்கிறோமா, விசுவாச கண்ணால் பார்க்கிறோமா என்பதை நாம் கண்டு உணர வேண்டும்.
சில நிகழ்வுகளை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்.
நாம் ஆசைப்பட்டு நேர்காணலுக்கு போய்விட்டு வந்த வேலை கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
உலகியல் கண்ணால் நோக்கினால் இது நமக்கு இது ஒரு நஷ்டம். அதற்காக செலவழித்த பணம் எல்லாம் வீண்.
விசுவாசக் கண்ணால் நோக்கினால் நமது நலன் கருதியே இறைவன் இந்த வேலை நமக்கு கிடைக்காது செய்திருக்கிறார்.
இறைவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் நமது ஆன்மீக நலன் கருதியே இருக்கும்.
ஆகவே இதை இறைவனுக்காக நாம் உண்மையாக நன்றி உணர்வோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாமே ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம்.
உலகியல் கண்ணால் நோக்கினால் எது நமக்கு வருத்தம் தரும் ஒரு நிகழ்வு.
விசுவாசக் கண்ணால் நோக்கினால் இது இறைவனுடைய சித்தத்தினால் நடைபெற்ற ஒரு செயல்.
இறைவனுடைய சித்தம் நம்மில் நிறைவேறியதால் அவருக்கு நாம் நன்றி கூறுவோம்.
விபத்தினால் ஏற்பட்ட துன்பங்களை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தால் விண்ணகத்தில் நமது நித்திய பேரின்பத்தின் அளவு அதிகரிக்கும்.
நமது ஆன்மீக நலனுக்காகவே விபத்து இறைவனால் அனுமதிக்கப்பட்டிருக்கும்.
சுனாமியினால் ஆயிரக்கணக்கான பேர் இறந்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
உலகியல் கண்ணால் நோக்கினால் இது ஒரு பேரிழப்பு.
ஈடு செய்ய முடியாதது.
விசுவாசக் கண்ணால் நோக்கினால் ஆண்டவர் உலகிற்கு அனுப்பியவர்களை அவராகவே அழைத்துக் கொண்டார்
படைக்க உரிமை உள்ளவருக்கு எடுத்துக்கொள்ள உரிமை இருக்கிறது.
எந்த விதமாக என்றாலும், எப்போது என்றாலும் அனுப்பியவருக்கு அழைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது.
உண்மையான விசுவாசம் உள்ளவன் இயற்கை நிகழ்வுகளில் இறைவனின் கரத்தைக் காண்பான்.
இறைவன் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்.
ஆகவே எந்த காரணத்தை முன்னிட்டும் இறைவனை குறை சொல்லவே மாட்டான்.
என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவான்.
மனித வாழ்வின் நிகழ்வுகளை எந்த அளவுக்கு உடன்பாட்டு நோக்கோடு (positive point of view) ஒருவன் பார்க்கிறானோ
அந்த அளவுக்கு அவனுடைய விசுவாசத்தின் ஆழத்தைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
ஆழமில்லாத விசுவாசத்தை ஆழப் படுத்துவது எப்படி?
குறைந்த விசுவாசத்தை அதிகப்படுத்துவது எப்படி?
விசுவாசம் இறைவனால் நமக்கு தரப்பட்ட நன்கொடை.
ஆகவே அதை ஆழப்படுத்தும்படியும் அதிகப்படுத்தும்படியும் இறைவனிடம் தினமும் ஜெபிக்க வேண்டும்.
தினமும் விசுவாச மறை உண்மைகளை தியானிக்க வேண்டும். எந்த அளவிற்கு தியானிக்கிறோமோ அந்த அளவிற்கு அவை நமது ஆன்மீக வாழ்வின் உயிராக மாறும்.
ஆண்டவரின் பாடுகளைப் பற்றி தியானிக்கும் போது நமது வாழ்வின் துன்பங்களை பற்றிய கருத்து மாற்றமடையும்.
ஆண்டவர் நமக்காக துன்பப்பட்டார் என்பது நமது மனதிற்கு விளங்கும் போது நாமும் அவருக்காக துன்பப்பட வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே தோன்றும்.
ஆண்டவர் தனது துன்பங்களை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுத்தார்.
நாமும் நமது துன்பங்களை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுப்போம்.
அதுவரை கஷ்டங்களாகத் தோன்றிய துன்பங்கள் ஆசீர்வாதங்களாகத் தோன்றும்.
இன்று நாம் கொரோனா நோயைப்பற்றி பயப்படுவது நமது விசுவாச குறைவுக்கு அடையாளம்.
விசுவாசத்தை அதிகரித்துக் கொண்டால் எந்த நோய்க்கும் அஞ்சமாட்டோம்.
எந்த நோயாக இருந்தாலும் அது முற்றி விட்டால் நமக்கு விண்ணகத்திற்கு டிக்கெட் எடுத்துத் தருகிறது.
விண்ணகத்திற்கு டிக்கெட் கிடைப்பதை யாராவது வேண்டாம் என்பார்களா?
"உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நினைப்பீர்கள்?"
"மோட்சத்திற்கு டிக்கெட் புக் ஆகிவிட்டதால் மகிழ்ச்சி அடைவேன்!"
ஆழமான விசுவாசம் உள்ளவனால்தான் இந்த பதிலைக் கூறமுடியும்.
ஆனால் நோய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.
பசித்தால் சாப்பிடுவது போல நோய் வந்தால் மருந்து பார்க்கலாம்.
ஆனால் நோய், மருந்து, நாம் உட்பட அனைத்தையும் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து விட்டு பார்ப்போம்.
என்ன நேர்ந்தாலும் இறைவன் பொறுப்பு.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து விட்டு நமது வேலைகளை ஆரம்பிப்போம்.
"இன்று என்ன நடந்தாலும் உமக்கே."
அன்று என்ன நடந்தாலும், நடந்ததை எல்லாம் ஆண்டவரிடம் ஒப்புக் கொடுத்துவிட்டு இரவு ஜெபம் முடிந்தவுடன் அன்றைய நாளை திருப்பி பார்ப்போம்.
இறைவன் நம்மை எப்படி வழிநடத்துகிறார் என்ற உண்மை புரியும்.
இவ்வாறு இறைவனது சிந்தனையிலே நாம் ஒவ்வொன்றையும் செய்யும்போது நாம் இறைவனது பிரசன்னத்தில் வாழ்கிறோம் என்பது புரியும்.
இந்தப் புரிதல் நமது விசுவாசத்தை அதிகரிக்கும்.
நமது மன சுதந்திரத்தை கூட ஆண்டவருக்காகவே பயன்படுத்தி வாழும்போது இறைவன் நம்மை எப்படி ஒரு கருவியாக பயன்படுத்துகிறார் என்பது விளங்கும்.
"இன்று பகலில் கீழே விழுந்து விட்டாயாமே?"
"விழச் சொன்னார், விழுந்தேன்.
எழச் சொன்னார், எழுந்தேன்."
"கடவுளா உன்னை விழச் சொன்னார்?"
"எல்லாம் உமது செயல் என்று சொல்லிவிட்டுத்தான் நாளை ஆரம்பித்தேன்.
என்ன நடந்தாலும் அவர்தான் பொறுப்பு."
இந்த மனப்பக்குவத்தோடு வாழ்நாள் முழுவதும் நடந்தால் எந்த நிகழ்ச்சியாலும் நம்மை வருத்தத்துக்கு உள்ளாக்க முடியாது.
யோபு நமக்கு முன் உதாரணம்.
நம்மை வழி நடத்துபவர்
நம்மை படைத்து,
நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக மனிதனாய் பிறந்து,
பாடுபட்டு,
சிலுவையில் தன்னையே பலிகொடுத்த இறைமகன்
என்ற விசுவாச சத்தியத்தை தினமும் அடிக்கடி தியானித்து,
நமது உள்ளத்தில் நன்கு பதிய வைத்தால்
நம்முடைய விசுவாசத்தை யாரும் அசைக்க முடியாது.
இறை மகனுடைய சன்னிதானத்தில் வாழ்வோம்.
அவருடைய பாதுகாப்பில் நாம் ஒவ்வொரு வினாடியும் வாழ்வதால்
நாம் வேறு யாருக்கும் அஞ்ச வேண்டியது இல்லை.
எதற்கும் அஞ்ச வேண்டியது இல்லை.
நோய் நொடிகளுக்கும் அஞ்ச வேண்டியதில்லை.
ஏனெனில் நம்மைக் கைபிடித்து வழிநடத்துபவர் சர்வ வல்லப கடவுள்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment