(அரு.13:20)
இயேசு தான் பாடுபடப் போவதற்கு முந்திய நாள் வியாழக்கிழமை இரவு தனது அப்போஸ்தலர்களோடு மனம் திறந்து பேசியபோது சொன்ன
வசனம்தான்:
"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"
இயேசுவின் வாழ்நாளின் போது சொன்ன எல்லா வார்த்தைகளும் மதிப்பிற்கு உரியவைகள்தான் என்றாலும்
மரண சமயத்தை ஒட்டி சொன்ன வார்த்தைகள் உணர்வுபூர்வமாக கவனிக்கத்தக்கவை.
இரவு உணவின்போது,
அதாவது
திவ்ய நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்திய இரவின் போது,
பேசிய வார்த்தைகள் அப்போஸ்தலர் களுக்கு மட்டுமல்ல அவர்கள் மூலமாக நமக்கும் சொல்லப்படுபவை.
தான் விண்ணகம் எய்துவதற்கு முன் அப்போஸ்தலர்களை நோக்கி,
"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."
என்று சொன்னதற்கும்,
இரவு உணவின்போது,
"நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"
என்று சொன்னதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
இரண்டு வசனங்களையும் அருகருகே போட்டால் அந்த தொடர்பு நன்கு புரியும்.
"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."
"நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"
இரண்டு வசனங்களையும் ஒரே வசனம் ஆக்கினால்:
"உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்க உங்களை அனுப்புகிறேன். உங்களை ஏற்றுக் கொள்பவன் என்னை ஏற்றுக் கொள்கிறான்."
இயேசு போதித்த நற்செய்தியைத்தான் அப்போஸ்தலர்களும் அதிகாரப்பூர்வமாக போதித்தார்கள்.
ஆகவே அப்போஸ்தலர்களின் போதனையை ஏற்றுக்கொள்கின்றவர்கள் இயேசுவின் போதனையைத்தான் ஏற்றுக் கொள்கிறார்கள்.
அப்போஸ்தலர்களும் தங்களுக்கு பிறகு நற்செய்தி போதனை தொடர குருக்களை ஏற்படுத்தினர்.
அப்போஸ்தலிக்க கத்தோலிக்க திருச்சபையில் குருக்கள் அனைவரும் அப்போஸ்தலர்களின் வாரிசுகளே.
இயேசு அப்போஸ்தலர்களுக்கு கொடுத்த உத்தரவும், உத்தரவாதமும் இன்றைய குருக்களுக்கும் பொருந்தும்.
ஆனால் அப்போஸ்தலிக்க திருச்சபையை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு இயேசுவின் அதிகாரப்பூர்வமான உத்தரவு பொருந்தாது.
கையில் பைபிள் வைத்திருந்தால் மட்டும் போதாது.
அப்போஸ்தலர்களின் வழிவந்த இயேசுவின் போதக வாரிசுகளாக இருப்பவர்களுக்கு மட்டுமே இயேசுவின் அதிகாரப்பூர்வமான உத்தரவு பொருந்தும்.
நமது குருக்கள் இயேசுவின் நேரடி வாரிசுகள்.
"நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"
என்ற இயேசுவின் வாக்குறுதிப்படி பங்கு குருவானவரை ஏற்றுக்கொள்கிறவன் இயேசுவை ஏற்றுக்கொள்கிறான்.
இயேசு அப்போஸ்தலர்களுக்கு கொடுத்த வாக்குறுதி நமது குருக்களுக்கும் பொருந்தும்.
நற்செய்தியை அறிவிக்கவும் தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும் இயேசுவின் அதிகாரப்பூர்வமான உத்தரவை பெற்றவர்கள் அவர்கள்.
பங்கு குருவானவரை ஏற்றுக்கொள்ள மறுப்பவன் இயேசுவையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்.
நமது பங்கு குருவானவரில் நாம் இயேசுவை காண வேண்டும்.
இயேசுவின் பணி முழுக்க முழுக்க ஆன்மீகப் பணி.
ஒரு முறை இயேசு போதித்துக் கொண்டிருந்த போது
"கூட்டத்தில் ஒருவன், "போதகரே, என் சகோதரன் என்னுடன் சொத்தைப் பங்கிட்டுக்கொள்ளுமாறு சொல்லும்" என்றான்.
14 அதற்கு அவர், "அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?" என்றார்."
(லூக்.12: 13,14)
இயேசு கொடுத்த பதிலின் மூலம் உலக சம்பந்தப்பட்ட அலுவல்கள் புரிய இயேசு மனிதனாக பிறக்கவில்லை என்பது தெளிவாகிறது.
குழுவானவரும் உலக சம்பந்தப்பட்ட அலுவல்கள் புரிய
தேவ சாஸ்திரம் படித்து குரு பட்டம் பெறவில்லை.
முழுக்க முழுக்க ஆன்மீகப் பணி புரியவே அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்.
ஆனால் நாம் அவரை ஒரு நிர்வாகியாகத்தான் பார்க்கிறோமே தவிர ஆன்மிக பணியாளராக பார்ப்பதில்லை.
நமக்கு ஆன்மிகப் பணி செய்ய வந்தவர்களிடம்
பங்கு நிர்வாகம்,
பங்கு வரவு செலவு,
ஆலயங்கள் கட்டுதல்,
அதற்காக நன்கொடைகள் பிரித்தல்,
அந்த கணக்குகளைக் கவனித்தல்,
பள்ளிக்கூட நிர்வாகம்,
ஆசிரியர்கள் நியமனம், மாற்றம்,
கோவில் நில நிர்வாகம்
போன்ற எண்ணற்ற நிர்வாக பொறுப்புகளை கொடுத்துவிட்டு
நமது ஆன்மாக்களை நாமும் கவனிக்காமல்
அவர்களையும் கவனிக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வளவு வேலை செய்ய வேண்டியவர்களுக்கு வீடு வீடாகச் சென்று பாவசங்கீர்த்தனம் கேட்க எப்படி நேரம் கிடைக்கும்?
இந்த வேலைகளை பார்க்கவா அவர்கள் ஏறத்தாள பத்து ஆண்டுகள் தேவ சாஸ்திரம் படித்துவிட்டு வந்திருக்கிறார்கள்?
இத்தகைய பணிகளை நமது பங்கு பேரவைகள் செய்ய வேண்டும்.
ஆனால் அவை நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கின்றன!
நமக்கு நற்செய்தி அறிவிக்கவும், பாவமன்னிப்பு, திருப்பலி, திவ்ய நற்கருணை போன்ற தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவுமே இயேசு அவர்களை நம்மிடம் அனுப்பி வைத்திருக்கிறார்.
வீட்டிற்கு வைத்தியம் பார்க்க வந்த மருத்துவர் பொறுப்பில் வீட்டு சமையல் வேலையை ஒப்புவித்தால் எப்படி இருக்கும்,
அப்படி இருக்கிறது நாம் செய்வதும்.
இத்தகைய நிர்வாக வேலைகளை இயேசு செய்ததாகவோ,
அப்போஸ்தலர்களை செய்யச் சொன்னதாகவோ எங்கும் குறிப்புகள் இல்லை.
அவர் செய்தது எல்லாம் ஆன்மீகப் பணிகளை மட்டுமே.
அவர் செய்ய சொன்னதும் ஆன்மீகப் பணிகளை மட்டும்தான்.
குருக்கள் வசம் ஆன்மீகப் பணிகளை மட்டும் கொடுப்போம்.
நமது ஆன்மீக வளர்ச்சிக்காக அவர்களை முற்றிலும் பயன்படுத்துவோம்.
அவர்கள் காட்டும் ஆன்மீக வழியில் நடப்போம்.
அவர்களை அடிக்கடி நாடிச் சென்று நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவோம்.
நமது பாவங்களை மன்னிக்கக் கூடிய அதிகாரத்தை இயேசு அவர்களிடம் தான் கொடுத்திருக்கிறார்.
இயேசுவை நமது ஆன்மீக உணவாக பெறுவதற்கும் அவர்களை நாடுவோம்.
அப்பத்தையும் இரசத்தையும் இயேசுவின் திரு உடலாகவும் இரத்தமாகவும் மாற்றக்கூடிய வல்லமையை இயேசு அவர்களுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறார்.
நாம் தினமும் வாசிக்கும் பைபிள் வாசகங்களுக்கான விளக்கங்களை பெற அவர்களை நாடுவோம்.
அதற்காகத்தான் அவர்கள் 10 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
நமக்கு உண்மையான மன அமைதியை தர அவர்களால்தான் முடியும்.
இயேசு நம்மிடையே வந்தால் அவரிடம் எப்படி நடந்து கொள்வோமோ அப்படியே நமது குருக்களிடமும் நடந்துகொள்வோம்.
பரலோகத் தந்தை எந்த நோக்கத்தோடு தன் மகனை உலகிற்கு அனுப்பினாரோ
அந்த நோக்கத்தோடு தான் மகனும் தன் சீடர்களை நம்மிடம் அனுப்பினார்.
இயேசுவின் பாடுகளும், மரணமும் நமது பாவமன்னிப்பை நோக்கமாக கொண்டன.
நமது வாழ்வில் நமக்கு ஏற்படும் துன்பங்களை நமது பாவங்களுக்கு பரிகாரமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் பாவமன்னிப்பு பெற்றால்தான் விண்ணக வாழ்விற்கு ஏற்றவர்களாக மாறுவோம்.
பாவமன்னிப்பு பெற்ற நிலையில் நாம் செய்யும் ஆன்மீக செயல்கள்தான் இறைவனின் அருள் வரங்களை நமக்கு பெற்றுத்தரும்.
இந்த உண்மை நம் மக்களுக்கு ஏன் புரிய மறுக்கிறதோ தெரியவில்லை.
அநேகர் நாட்கணக்காக ஜெப கூட்டங்களில் கலந்து கொண்டாலும் பாவசங்கீர்த்தனத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.
ஞானஸ்நானம் பெறுவதே ஜென்ம பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக தான்.
கர்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற பாவசங்கீர்த்தனம் செய்தாக வேண்டும்.
இதை மனதில் ஆழப் பதித்துக் கொள்வோம்.
பாவசங்கீர்த்தனம் கேட்கும் அதிகாரத்தை ஆண்டவர் நமது குருக்களுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறார்.
பாவமன்னிப்புப் பெற குருக்களை அணுகுவோம்.
இயேசுவின் பாடுகளின் பலனை அபரிமிதமாகப் பெறுவோம்.
குருக்களைத் தந்ததற்காக இயேசுவுக்கு நன்றி கூறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment