Monday, April 26, 2021

"தந்தை என்னை அறிவதுபோலவும், நான் தந்தையை அறிவதுபோலவும், என் ஆடுகளை நான் அறிவேன்: அவையும் என்னை அறிகின்றன."(அரு.10:15)

"தந்தை என்னை அறிவதுபோலவும், நான் தந்தையை அறிவதுபோலவும், என் ஆடுகளை நான் அறிவேன்: அவையும் என்னை அறிகின்றன."
(அரு.10:15)

நாம் ஒன்றும் இல்லாமையிலிருந்தது படைக்கப்பட்டோம்.

நம்மை படைத்தவர் சர்வ வல்லவர்.

நமக்குச் சொந்தமாக இருப்பது நம்மிடம் எதுவுமே இல்லை.
 
ஒன்றுமே இல்லாத நம்மையும் சர்வத்துக்கும் சொந்தமான கடவுளையும் எந்த விதத்திலும் சிறிதுகூட ஒப்பிடவே முடியாது.

ஆனாலும் அளவிடமுடியாத அன்புக்கு சொந்தமான கடவுள் தன் அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டதும் அல்லாமல் 

அல்லது அன்பின் மிகுதியால் ஒன்றுமே இல்லாத நம்மை சர்வத்திற்கும் உரிய தம்மோடு சரி சமமாக வைத்து பேசுவதும் பழகுவதும் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அளவிட முடியாத மகிமைக்கு உரிய இயேசு

 ஒன்றுமே இல்லாத நம்மோடு பழகுவதற்காகவே நம்மைப்போல் மனித உரு எடுத்தது மட்டுமல்லாமல் 

நம்மை அவருக்கு சரிசமமாக நிலையில் வைத்துப் பேசுவது 

அளவிட முடியாத அளவிற்கு வியப்பாக இருக்கிறது.

ஆண்டிக்கு சமமாக அமர்ந்துகொண்டு அவனோடு உரையாடும் அரசரைப் போல 

எதுவுமே இல்லாத நமது இதயக் கதவை தட்டி உள்ளே நுழைந்து நம்மோடு சரிக்கு சமமாக அமர்ந்து

 நம்மோடு உரையாடுகிறார் நம் இரட்சகர்.

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.'' (மத்.5:48)

கடவுள் மட்டுமே நிறைவானவர். குறைவான என்ற அடைமொழிக்குக்கூட பொருத்தமில்லாதவர்கள் நாம்.

ஒன்றுமில்லாமை என்ற அடைமொழி மட்டுமே நமக்கு பொருந்தும்.

நம்மைப் பார்த்து அவரது தந்தையை உங்கள் தந்தை என்கிறார்.

வானகத்தந்தையைப் போலவே நிறைவு உள்ளவர்களாக இருங்கள் என்கிறார்.

 நிறைவு நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அளவு கடந்தது.

ஆனாலும் அவரது கூற்று அவர் தன் தந்தையை அன்பு செய்யும் அளவிற்கு நம்மையும் அன்பு செய்கிறார் என்பதை   தெளிவாக காட்டுகிறது.

தகுதியே இல்லாத நம்மை அளவிட முடியாத அளவிற்கு அன்பு செய்யும் அளவிற்கு சர்வ வல்லவர் இறங்கி வந்திருக்கிறார்.

அதிலிருந்து அவர் நம்மிடம் எவ்வளவு எதிர்பார்க்கிறார் என்பது தெரிகிறது.

இயேசு நம்மை அளவிடமுடியாத அளவிற்கு அன்பு செய்தாலும் நாம் அளவுக்கு உட்பட்டவர்கள் என்பதை மறுக்க முடியாது.

நம்மால் அதிகபட்ச அளவிற்கு (To the maximum level) எவ்வளவு அன்பு செய்ய முடியுமோ அவ்வளவு அவரை அன்பு செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

அருள்நிறைந்த அன்னை மரியாள் இயேசுவை அன்பு செய்த அளவிற்கு 

 அருளுக்காக ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் நம்மால் அவரை அன்பு செய்ய முடியாது என்பது அவருக்கு தெரியும்.

ஆனாலும் நம்மால் அதிகபட்ச அளவு எவ்வளவு முடியும் என்பதும் அவருக்குத் தெரியும்.

முடிந்த அளவு முயல வேண்டும் என்பது இயேசுவின் எதிர்பார்ப்பு.


"தந்தை என்னை அறிவதுபோலவும், நான் தந்தையை அறிவதுபோலவும், என் ஆடுகளை நான் அறிவேன்:
அவையும் என்னை அறிகின்றன."

தந்தை மகனை அளவில்லாத விதமாய் அறிவார்.

மகன் தந்தையை அளவில்லாத விதமாய் அறிவார்.

வேறு வார்த்தைகளில் கடவுள் தன்னை அளவில்லாத விதமாய் அறிவார்.

கடவுள் இயல்பிலேயே (By nature) அளவில்லாத ஞானமும், அறிவும் உள்ளவராகையால் அவரால் படைக்கப்பட்ட நம்மை அவர் முழுவதுமாக அறிவார்.

இயேசு " என் ஆடுகளை நான் அறிவேன்:" என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.

"அவையும் என்னை அறிகின்றன." என்றும் கூறுகிறார்.

இயேசுவின் அறிவு அளவு அற்றது. நமது அறிவு குறுகிய அளவிற்கு உட்பட்டது. இது இயேசுவுக்கு நன்கு தெரியும்.

ஆனாலும் "எனது ஆடுகளும் என்னை அறிகின்றன" என்று கூறுவது எப்படி?

"கடவுளாகிய நான் என்னை அறிவது போல உங்களையும் அறிகிறேன்.

உங்களை நான் அறிவது போல என்னையும் நீங்கள் அறிய வேண்டும் என்பதுவே எனது ஆசை.

கடவுளாகிய நான் நீங்களாக (மனிதனாக) மாறினேன். 

அதற்காகவே விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கி வந்தேன்.

எதற்காக நான் இறங்கி வந்தேன்?

நீங்கள் என்னோடு விண்ணிற்கு ஏறி வர வேண்டும் என்பதற்காகத்தான்.

விண்ணிற்கு என்னோடு ஏறி வரவேண்டுமென்றால் நீங்கள் நானாக மாறவேண்டும்.

 நீங்கள் நானாக மாற வேண்டும் என்றால் உங்களில் நான் வாழ வேண்டும். என்னில் நீங்கள் வாழ வேண்டும்.

"வாழ்வது நான் அல்ல. இயேசுவே என்னில் வாழ்கின்றார்"

என்று நீங்கள் சொல்லும் அளவிற்கு நாம் ஒருவரோடு ஒருவர் ஒன்றிக்க வேண்டும்.

நமது ஒன்றிப்பு நித்திய காலமாக நீடிக்க வேண்டும்.

இதற்காகத்தான் நான் உங்களை படைத்தேன்."

இயேசுவுக்கு எவ்வளவு பெரிய ஆசை பாருங்கள்! 

அவரது அன்பின் அளவிற்கு ஆசை!

"இயேசுவே உமது ஆசை எங்களுக்கு புரிகிறது.

நீர் அளவற்றவர். ஆகவே உமது ஆசைகளுக்கும் அளவே இருக்காது.

ஆனால் நாங்கள் அளவு உள்ளவர்கள்.

 அளவற்ற உமது ஆசைகளை எப்படி நிறைவேற்றுவது என்று எங்களுக்கு புரியவில்லை.

உமது அளவற்ற ஆசைகளை நிறைவேற்றுவதற்காகத்தான் எங்களை படைத்திருக்கிறீர் என்பது மட்டும் புரிகிறது.

அளவுள்ள எங்களால் அளவற்ற உமது    ஆசைகளை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியவில்லை.

வேறு என்ன சொல்வது என்றும் எங்களுக்கு தெரியவில்லை.

நீர்தான் சொல்லித் தரவேண்டும்.

நீ ஒரு நல்ல ஆசிரியர்.

 எங்களை முதலில் நல்ல மாணவர்களாக மாற்றும்.

அப்புறம் சொல்லித்தாரும்."

"நான் உன்னைப் படைத்த சர்வ வல்லப கடவுள் என்று நீ விசுவசிப்பது உண்மையானால் 

படைத்தவராகிய என்னிடம் உன்னை முற்றிலுமாக ஒப்படைத்து விடு.

உன்னைப் பற்றி கவலை படுவதையும் விட்டுவிடு.

உனது முழு மன சுதந்திரத்தையும் என்னிடம் ஒப்படைத்து விட்டால் அப்புறம் நானே உன்னிடம் செயல்பட்டுக் கொண்டு இருப்பேன்.

நீயல்ல நானே உன்னிடம் வாழ்ந்து கொண்டிருப்பேன்.

நீ செய்ய வேண்டியதெல்லாம் நான் உன்னிடம் என்ன செய்தாலும் முழுமனதோடு ஏற்றுக்கொள்வது மட்டுமே.

ஆகாய விமானத்தில் பயணம் செய்து இருக்கிறாயா?

செய்திருந்தால் செய்த அனுபவத்தை நினைத்துப்பார்.

உள்ளே நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?

உன்னுடைய இருக்கையில் அமர்ந்து இருந்ததை மட்டும்தானே?

ஆனால் நீ பயணம் செய்த விமானம் ஆயிரக்கணக்கான மைல்கள் உன்னை ஏற்றிச் செல்ல வில்லையா?

அதுபோலவே நீ அளவு உள்ளவனாகக இருக்கலாம். சக்தி அற்றவனாக இருக்கலாம்.

சர்வ வல்லவராகிய எனக்குள் இருக்கும் போது எனது வல்லமையை முழுவதும் உனக்காகவே பயன்படுத்துவேன்.

புரிகிறதா?"

"புரிகிறது, ஆண்டவரே. சர்வ வல்லவராகிய நீர் எனக்காக சக்தியே இல்லாத ஒரு மனித குழந்தையாக பிறந்தீர.

கஷ்டமே பட முடியாத நீர் எனக்காக பாடுகள் பட்டீர்.

மரணமே இல்லாத நீர் எனக்காக  சிலுவையில் மரணத்தீர்.

இனி நான் முற்றிலும் உமது கையில்.

என்னில் எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படும்."

"எது இன்றி எது இல்லை, சொல்லு பார்ப்போம்."

''சிலுவை இன்றி மகிமை இல்லை."

"கரெக்ட். அதை மட்டும் மனதில் வைத்துக்கொள். சிலுவையின் மூலமே உனக்கு மீட்பு வந்தது. சிலுவையின் மூலம் தான் உனக்கு விண்ணக வாழ்வும் வரும்.
இதுதான் மீட்பின் ரகசியம்."

ஆடுகளைப் பற்றி ஆயனுக்கு நன்கு தெரியும். ஆயனைப் பற்றியும் ஆடுகளுக்கு நன்கு தெரியும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment