Seriousஆக போய்க்கொண்டிருந்த நற்செய்தி வாசகத்தில் திடீரென்று ஒரு காமெடி சீன்!
இயேசு இராயப்பரிடம் திருச்சபையின் தலைவர் என்ற முறையில் அவரது கடமைகளை விவரித்து விட்டு
அவர் என்னென்ன துன்பங்கள் பட்டு வேத சாட்சியாக மரிப்பார் என்ற விவரங்களையும் முன்கூட்டி அறிவித்தார்.
அவர் எத்தகைய மரணத்தால் கடவுளை மகிமைப்படுத்துவார் என்பதைக் குறிப்பிட்டு விட்டு
"என்னைப் பின்செல்" என்றார்.
அதாவது நான் எவ்வாறு உங்களை வழியே நடத்துகிறேனோ அவ்வாறே நீயும் திருச்சபையை வழிநடத்த வேண்டும்,
நான் எவ்வாறு உங்களுக்காக துன்பங்கள் பட்டு மரணம் அடைந்தேனோ அதே போல் நீயும் எனக்காக துன்பங்கள் பட்டு மரணம் அடைய வேண்டும்
என்ற பொருளில்,
"என்னைப் பின்செல்" என்றார்.
அப்போது இராயப்பர் என்ன சொல்லி இருக்க வேண்டும்?
"நீர் சொன்ன படியே செய்கிறேன் ஆண்டவரே, என்னை நீர் வழி நடத்தும்."
ஆனால் அப்படி எதையும் அவர் சொல்லவில்லை.
கூடவே வந்து கொண்டிருந்த அருளப்பரைச் சுட்டிக் காண்பித்து
"ஆண்டவரே, இவனுக்கு என்ன ஆகும் ?" என்று கேட்டார்.
இதுதான் comedy!
தனக்கு கூறப்பட்ட புத்திமதியை தியானிப்பதற்குப் பதிலாக
சம்பந்தமே இல்லாமல் பக்கத்தில் இருப்பவனுக்கு என்ன ஆகும் என்று கேட்பது காமெடி தானே!
இயேசுவின் அப்போஸ்தலர்கள் இப்படிப்பட்ட காமெடிகள் செய்வதில் வல்லவர்கள்.
இயேசு மூன்று அப்போஸ்தலர்கள் முன்னிலையில் தாபோர் மலையில் மறுரூபம் ஆகி விட்டு இறங்கி வந்த பின்,
ஒரு சிறுவனிடமிருந்து அசுத்த ஆவியை ஓட்டி அவனை குணப்படுத்துகிறார்.
மக்கள் அவர் செய்ததெல்லாம் பார்த்து வியந்து கொண்டிருந்தார்கள்.
இயேசு சீடரிடம், "நான் சொல்லுவதை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: மனுமகன் மனிதரிடம் கையளிக்கப்படப் போகிறார்" என்றார்
ஆனால் அவர்களோ அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளாமல்
"தங்களுள் பெரியவன் யார் என்ற விவாதம் செய்யத் தொடங்கினார்கள்!" (லூக்.9:46)
அதுவரை நடந்ததற்கும் அப்போஸ்தலர்களின் விவாதத்திற்கும் துளியாவது சம்பந்தம் இருக்கிறதா?
கடைசி இரவு உணவின்போது
இயேசு அப்போஸ்தலர்களிடம்
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்"
என்றார்.
"அவன் யார், ஆண்டவரே?" என்று அவர்கள் இயேசுவிடம் கேட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும்
"நானோ ஆண்டவரே ?" என்று கேட்கத் தொடங்கினர்!
(மத்.26:21,22)
ஒருவருக்காவது தன்மீது நம்பிக்கை இருந்ததாக தெரியவில்லை!
ஆண்டவர் இப்படி நினைத்திருப்பார்:
"கஷ்டப்பட்டு மூன்று ஆண்டுகள் உங்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறேன்.
உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
உங்களை வைத்துதான் எனது திருச்சபையை உலகெங்கும் பரப்ப வேண்டும்!"
இராயப்பர் , "நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்றபோது இயேசு அவரை,
"யோனாவின் மகன் சீமோனே, நீ பேறுபெற்றவன்." என்று பாராட்டினார்.
சில நிமிடங்கள் கழித்து இயேசு
தான் பாடுகள் பட்டு கொல்லப்பட வேண்டும் என்று சொன்னபோது
இராயப்பர்,. "ஆண்டவரே, ஐயோ! இது வேண்டாம்."
என்று சொல்ல,
இயேசு , "போ பின்னாலே, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய்." என்றார்.
நிமிடங்களுக்குள்
ஆண்டவர் வாயால் "பேறுபெற்றவன்" என்றும்
"சாத்தான்" என்றும்
பெயர் வாங்கியவர் அகில உலகிலும் இராயப்பர் மட்டுமே இருக்க வேண்டும்!
இப்போது இராயப்பர் ஆண்டவரிடம் கேட்டது இப்படி இருக்கிறது:
"ஆண்டவரே! நான் உமக்காக வேத சாட்சியாக மரிப்பேன்.
அருளப்பன் என்ன செய்வான்?''
ஆண்டவர் பதில் சொல்கிறார்.
"நான் வருமளவும் இவன் இப்படியே இருக்கவேண்டும் என்பது எனக்கு விருப்பமாயிருந்தால் உனக்கென்ன ?
நீயோ என்னைப் பின்செல்"
இதை நாம் பேசும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
"நீ வேத சாட்சியாய் மரிப்பாய்.
மற்றவர்கள் உன்னை கொன்று என்னிடம் அனுப்புவார்கள்.
ஆனால் அருளப்பன் நான் வந்து அழைத்துச் செல்லும் வரை இப்படியே சாகாமல் இருப்பான்.
அதாவது, அவன் இயற்கை மரணம் அடைவான்.
அதனால் உனக்கு என்ன பிரச்சனை?
நீ நான் சொன்னபடியே செய்."
இந்தப் பொருளில்தான் ஆண்டவர் சொல்லியிருக்க வேண்டும்.
ஏனெனில் அதுதான் பின்னால் நடந்தது.
அருளப்பரைத் தவிர மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் வேதசாட்சி களாகவே மரித்தனர்.
ஆனால் அப்போஸ்தலர்களுக்கு ஆண்டவர் சொன்னது புரியவில்லை.
ஆகவேதான் ஆண்டவரது வார்த்தைகளை கேட்டவுடன் மற்றவர்கள்,
" அருளப்பர் இறக்க மாட்டார்
போலிருக்கிறது." என்று பேசத் தொடங்கினார்கள்.
அருளப்பர் மட்டும்
"இறக்கமாட்டான் என்று இயேசு கூறவில்லை."
என்று மற்றவர்களிடம் கூறவில்லை, தான் நற்செய்தி எழுதும்போது கூறுகிறார், நமக்காக.
இராயப்பரிடமிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் இயல்பிலேயே நம்மைப் பற்றி அறிய ஆசைப் படுவதை விட மற்றவர்களைப் பற்றி அறியவே அதிக ஆசைப்படுகிறோம்.
தேர்வின் முடிவில் மாணவர்களுக்கு progress card கொடுக்கும்போது அநேக மாணவர்கள் தங்கள் cardகளைப் பார்ப்பதைவிட மற்றவர்களது cardகளைப் பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள்!
நாமும் கூட அநேக சமயங்களில் நம்மிடம் உள்ள குறைகளைக் காண்பதை விட்டுவிட்டு
மற்றவர்களது குறைகளை சுட்டிக் காண்பிப்பதிலேயே குறியாக இருக்கிறோம்.
"உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்ப்பதேன் ?
4 உன் சகோதரனை நோக்கி, " உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க விடு " என்று நீ எப்படிச் சொல்லலாம் ? இதோ! உன் கண்ணிலே விட்டம் இருக்கிறதே."
(மத்.7:3,4)
என்ற ஆண்டவரது வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.
மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.
ஆனால் தேவை இல்லாமல் மற்றவர்களது விஷயங்களில் மூக்கை நுழைப்பதையே வழக்கமாக கொண்டிருக்கக் கூடாது.
சில சமயங்களில் மற்றவர்களது நடவடிக்கைகளை கவனிக்கும் ஆர்வத்தில் நம்முடைய கடமைகளை மறந்து விடுகிறோம்.
"ஏண்டா Essay படித்துவிட்டு வரவில்லை?"
"என் தம்பி ஒழுங்காக படிக்கிறானா என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தேன், சார்.''
இந்த மாதிரி பழக்கங்கள் பிள்ளைகளிடம் மட்டுமல்ல பெரியவர்களிடமும் உண்டு.
சுவாமியார் பிரசங்கம் வைத்துக் கொண்டிருப்பார். சில பெரியவர்கள் தாங்கள் பிரசங்கத்தை கவனிக்காமல்
யார் யார் கவனிக்காமல் இருக்கிறார்கள் என்பதை கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
கோவிலை விட்டு வெளியே வந்தவுடன் மற்றவர்களுக்கு புத்திமதி சொல்வார்கள்.
அரட்டை அடித்துக் கொண்டிருப்பவர்களைக் கவனித்தால் ஒன்று புரியும்:
அவர்கள் தங்களைத் தவிர உலகத்தில் உள்ள அத்தனைபேரையும் விமர்சித்துக் கொண்டு இருப்பார்கள்.
உலகில் விமர்சனம் செய்வதை போல மிக எளிதான காரியம் வேறொன்றுமில்லை.
ஆனால் நாம் கடவுள் முன்பு தீர்வைக்குப் போகும்போது அவர் நம்மைப் பற்றி தான் கேட்பாரே ஒழிய மற்றவர்களைப் பற்றி கேட்க மாட்டார்.
ஒவ்வொருவரும் கடவுள் முன் தங்களைப் பற்றி தான் கணக்கு கொடுக்க வேண்டி இருக்கும்.
மற்றவர்களை பற்றி அல்ல.
நமது கணக்கை நாம் முதலில் ரெடி பண்ணுவோம்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு:
"உனது துருத்தியை ஊது."
(Mind your own business)
துருத்தி ஒரு இசைக்கருவி. இசைக்கச்சேரியில் அவரவர் துருத்தியை அவரவர்தான் ஊத
வேண்டும்.
அடுத்தவர் துருத்தியை ஊத முயன்றால் கச்சேரி நடக்காது. கலவரம் தான் நடக்கும்.
அவரவர் வயிற்றுக்கு அவரவர்தான் சாப்பிட வேண்டும்.
அதே போல் தான் அவரவர் ஆன்மாவை அவரவர்தான் காப்பாற்ற வேண்டும்.
மற்றவர்களுடைய ஆன்மாக்களை காப்பாற்ற நாம் அவர்களுக்கு உதவி செய்யலாம். செய்ய வேண்டும். அது நமது கடமை.
ஆனால் தேவை இல்லாமல் மற்றவர்களுடைய விஷயங்களில் தலையிட்டால் அது உதவி அல்ல. உபத்திரவம்.
இராயப்பர் வேத சாட்சியாக மரிக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம்.
அருளப்பர் இயற்கை மரணம் அடைய வேண்டும் என்பது இறைவனின் சித்தம்.
நம் விஷயத்தில் எது இறைவனின் சித்தமோ அதை நிறைவேற்றுவோம்.
"ஆண்டவரே, இவனுக்கு என்ன ஆகும் ?"
"நான் வருமளவும் இவன் இப்படியே இருக்கவேண்டும் என்பது எனக்கு விருப்பமாயிருந்தால் உனக்கென்ன ?
நீயோ என்னைப் பின்செல்"
அதாவது:
"ஆண்டவரே, இவன் எப்படி மரிப்பான்?"
"அவன் எனது விருப்பப்படி மரிப்பான்.
அதைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்?
நீ நான் சொன்னபடி நட."
ஆண்டவர் சித்தமே நமது பாக்கியம்.
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment