Monday, April 19, 2021

"நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது: என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது."(அரு.6:35)

: "நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது: என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது."
(அரு.6:35)



"இன்ப வனத்தின் நடுவிலிருக்கிற மரத்தின் கனியைத் தின்ன வேண்டாம் தொடவும் வேண்டாம் என்று கடவுள் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்: தின்றால் சாவோம் என்றாள்."

ஏவாள் சாத்தானிடம் "விலக்கப்பட்ட கனியைத் தின்றால் நாங்கள் சாவோம்" என்றாள்.

ஆனால் சாத்தான்,

"நீங்கள் உண்மையில் சாகவே மாட்டீர்கள்:" என்றது.

ஏவாள் சொன்னது பொய்யா அல்லது சாத்தான் சொன்னது பொய்யா?

ஏவாள் கடவுள் கூறியதைச் சொன்னாள்.

சாத்தான் தானே கூறியது.

மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது சாத்தான் கூறியது உண்மை போடவும் ஏவாள் கூறியது பொய் போலவும் தோன்றும்.

ஏனெனில் பழத்தைத் தின்றவுடன் ஏவாள் சாகவில்லை.

அதாவது மனிதன் சாவு என்ற வார்த்தைக்கு என்ன பொருள் வைத்திருக்கிறானோ அந்தப் பொருளில் சாகவில்லை.

உடலை விட்டு ஆன்மா பிரிவதையே நாம் சாவு என்கிறோம்.

ஆனால் கடவுள் குறிப்பிட்டிருந்தது அந்த சாவை அல்ல.

அவர் குறிப்பிட்டிருந்தது ஆன்மீகச் சாவை.

ஏவாள் விலக்கப்பட்ட பழத்தைத் தின்று பாவம் செய்த நொடியிலேயே அவளது ஆன்மா இறந்து விட்டது.

ஆன்மாவிற்கு உயிர் கொடுத்தது அதிலிருந்த இறைவனின் தேவ இஷ்ட பிரசாதம்.

ஏவாள் பாவம் செய்தவுடன் அவளது ஆன்மாவிலிருந்த தேவ இஷ்ட பிரசாதத்தை, 

அதாவது இறைவனோடு இருந்த உறவை,

 இழந்து விட்டாள்.

இறை உறவு இல்லாத ஆன்மா இறந்த ஆன்மா.


இழந்த இறை உறவை மீட்டுக் கொடுக்கவும், இறந்த ஆன்மாவை உயிர் பெறச் செய்யவுமே 

இறைமகன் மனிதனாகப் பிறந்து பாடுபட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கி 

மனித பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.

உயிர் பெற்ற ஆன்மா ஆன்மீகத்தில் பலமடைந்து வளர்வதற்காக 

 தன்னையே ஆன்மாவிற்கு உணவாக அளிக்கிறார்.

"நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது: என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது."

நமது உடல் ஒரு சடப்பொருள். ஆகவே அது பலம்பெற்று வளர சடப் பொருளையே உணவாகக் கொடுக்கிறோம்.

உணவாக உண்ணப் பட்ட சடப் பொருள் ஜீரணமாகி அதன் சத்துக்கள் உடலோடு கலந்து அதற்கு சக்தியையும் வளர்ச்சியையும் அளிக்கின்றன.


இறைமகன் இயேசு தனது உடலையும் இரத்தத்தையுமே நமது ஆன்மாவிற்கு உணவாக அளிக்கிறார்.

நமது ஆன்மா உயிர்பெற்று வளர்வதற்காக விண்ணிலிருந்து இறங்கிவந்த உயிர்தரும் உணவு அவரே.

அவரே நமது ஆன்மாவின் அருள் பசியையும், தாகத்தையும் தணிக்கிறார்.

தனது அருள் வரங்களால் நமது ஆன்மாவை நிரப்புகிறார்.

உரிய தயாரிப்போடு அவரை நாம் உட்கொள்ளும் போது,

அவர் நமது ஆன்மாவோடு ஒன்றிக்கும்போது 

அன்பு, இரக்கம், பரிவு, மன்னிக்கும் தன்மை, உதவி செய்யும் தன்மை, தியாகம் முதலான அவரது பண்புகள் எல்லாம் நமது ஆன்மாவிற்கு இறங்கிவிடும்.

அவரது இந்தப் பண்புகள் நமக்கும் உரியவையாய் மாறிவிடும்.

பண்புகளில் நாமும் கிறிஸ்துவாய் மாறிவிடுவோம்.

ஆனால் நாம் அடிக்கடி,

 சில சமயங்களில் தினமும்,

 அவரை உணவாய் உட்கொண்டாலும் நமது பண்புகளில் ஒரு மாற்றமும் இல்லையே! 

ஆரம்பத்தில் இருந்தது 
போலவேதானே இப்பொழுதும் இருக்கிறோம்!

ஏன்?

ஏனெனில் நாம்  உரிய தயாரிப்புகளோடு அவரை உட்கொள்வது இல்லை.

ஏதோ தின்பண்டம் சாப்பிடுவது போல கையில் வாங்கி வாயில் போட்டு விழுங்கிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறோம். 

சுத்தமான இருதயத்தோடும், பக்தியோடும் நற்கருணை நாதரை உட்கொண்டால் தான் 

.நற்கருணை அருந்துவதால் ஏற்படும் பலன் கிடைக்கும்.

ஒரே ஒரு முறை முழு தயாரிப்போடு நாம் நற்கருணையை அருந்தினால் கூட புனிதராக மாறமுடியும்.

ஏனெனில் இயேசு அளவில்லாத விதமாய் புனிதமானவர்.

புனிதத்தோடு இணையும்போது நம்மால் புனிதம் அடையாமல் இருக்க முடியாது.

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து தூய்மையான உள்ளத்தோடு இயேசுவை உணவாக உட்கொள்ள வேண்டும்.

இப்பொழுதெல்லாம் நவீனம் என்ற பெயரில் பழைய நல்ல பழக்கவழக்கங்களை எல்லாம் மறந்து விட்டோம்.

முன்பெல்லாம் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாவசங்கீர்த்தனம் செய்வது வழக்கம்.

குருவானவரும் திவ்ய பலி பூசை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னாலேயே பாவசங்கீர்த்தனத் தொட்டிக்கு வந்துவிடுவார். 

தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரை உட்கொள்பவர்கள்
அவரோடு நித்திய காலமும் பேரின்ப வாழ்வில் இணைந்து இருப்பார்கள் 

தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரை உட்கொள்வோம்.

என்றென்றும் அவரோடு வாழ்வோம்.

லூர்து செல்வம். 
-

No comments:

Post a Comment