(அரு. 14:17)
இறுதி இரவு உணவின்போது இயேசு தனது மூவொரு கடவுள் தன்மையை அப்போஸ்தலர் களுக்கு புரிய வைப்பதற்காக முயற்சி செய்கிறார்.
ஆனால் அவர்களுக்கு அவர் சொல்வதை புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு போதிய புத்திசாலித்தனம் இல்லை.
அவர்கள் கேட்கும் கேள்விகளிலிருந்து இது புரிகிறது.
ஆனாலும் இயேசு மிகப் பொறுமையாக அவர்களுக்கு விளக்குகிறார்.
முதலில் தான் தனது தந்தையிடம் செல்லப் போவதாக சொல்லிவிட்டு
"நான் போகும் இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்."
என்று சொல்கிறார்.
ஆனால் தோமையார் அவரிடம், "ஆண்டவரே, நீர் செல்லுமிடமே எங்களுக்குத் தெரியாதிருக்க, அங்கே போகும்வழி எப்படித் தெரியும் ?" என்றார்.
தந்தையின் இல்லம் என்று இயேசு சொன்னது தோமையாருக்கு புரியவில்லை.
மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றபின் தோமையார் கேட்ட இக்கேள்வி வினோதமாக இருக்கிறது.
வழி தெரியாது என்று கூறியவரிடம் இயேசு
"நானே வழி" என்று கூறிவிட்டு
தந்தையைப் பற்றி விளக்கம் கொடுக்கிறார்.
"நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்."
நாம் ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று ஒரு ஆசிரியரிடம்,
" தலைமை ஆசிரியரைப் பார்க்க வேண்டும்"
என்று சொல்லுகிறோம்.
அந்த ஆசிரியர்,
" என்னைப் பார்க்கிறவர்கள் தலைமை ஆசிரியரைத்தான் பார்க்கிறார்கள்"
என்று சொன்னால்
நாம் உடனே புரிந்து கொள்ள வேண்டும் அந்த ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் ஒருவர்தான் என்று.
ஆனால் இதைக்கூட புரிந்துகொள்ள முடியாத பிலிப்பு,
"ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்" என்கிறார்.
பிலிப்புவின் புத்திசாலித்தனத்தை பார்த்தால் நமக்கு சிரிப்புதான் வருகிறது.
ஆனாலும் ஆண்டவர் பொறுமையாக
"பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும், நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா ?
"என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான். பின், தந்தையை எங்களுக்குக் காட்டும் " என்று நீ கேட்பதெப்படி ?
என்று கேட்கிறார்.
"நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார்."
"என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் என் தந்தையே.
என்று கூறியதன் மூலம்
"தந்தையும் நானும் ஒரே கடவுள்" என்ற ரகசியத்தை வெளியிடுகிறார்.
"நானும் தந்தையைக் கேட்பேன்: தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்: அவர் உங்களோடு என்றும் இருப்பார்."
என்று கூறி பரிசுத்த ஆவியை பற்றி சொன்ன இயேசு
"நீங்களோ அவரை அறிவீர்கள்: ஏனெனில், அவர் உங்களோடு தங்கி உங்களுள் இருக்கிறார்."
என்கிறார்.
'நீங்களோ அவரை அறிவீர்கள்:"
அதாவது அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியையும் பார்த்திருக்கிறார்கள்.
எப்படி?
இயேசு அவர்களோடு தங்கி அவர்களோடுதான் இருக்கிறார்.
அவரைப் பார்ப்பதும் பரிசுத்த ஆவியை பார்ப்பதும் ஒன்றுதான்.
இயேசுவைப் பார்க்கிறவர்கள் தந்தையையும் பார்க்கிறார்கள், பரிசுத்த ஆவியையும் பார்க்கிறார்கள்.
இப்போது தம திரித்துவ ரகசியம் முற்றிலும் வெளியாகிறது. அதாவது தந்தை, மகன், பரிசுத்த ஆவி முழுவதும் ஒரே கடவுள்தான்.
கடவுள் அளவற்ற ஞானம் உள்ளவர், ஆகவே மாற்றத்திற்கு அப்பாற்பட்டவர்.
அவருடைய திட்டங்கள் யாவும் நித்திய கால திட்டங்களாகவே இருக்கும்.
ஒரு திட்டம் போட்டு அது நடைபெறாமல், அதற்கு மாற்றாக புதிதாக வேறு திட்டம் போடுவது என்பது கடவுளைப் பொறுத்தமட்டில் இயலாத காரியம்.
கடவுளுடைய திட்டங்கள் மாற முடியாதவை.
மனித குலத்தை படைக்க வேண்டும் என்பது எப்படி நித்திய கால திட்டமோ
அதுபோல்தான் கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் என்பதும் நித்திய கால திட்டமே.
நமது முதல் பெற்றோர் பாவம் செய்வார்கள் என்பது கடவுளுக்கு நித்திய காலமாகவே தெரியும்.
நமது முதல் பெற்றோரின் பாவத்தை கடவுள் தான் மனிதனாக பிறப்பதற்கு உரிய சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறார்.
ஆகவேதான் தாய்த் திருச்சபை ஆதாமின் பாவத்தை
"ஓ ஆதாமின் பாவமே!
உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!
இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடைய பேறுபெற்றதால்
பாக்கியமான குற்றமே!" என்று அழைக்கிறது.
அதாவது இறைவனை உலகத்திற்கு கொண்டு வந்த பாவம்.
மனித குலத்தின் மீது தனக்கு இருந்த அளவுகடந்த அன்பின் காரணமாக
கண்ணால் பார்க்க முடியாத அரூபி ஆகிய கடவுள்
மனிதன் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காகவே
மனிதனாக பிறக்கிறார்.
இறைமகன் மனுமகனாக பிறப்பதற்கு முன்னால் மனிதனால்
கடவுளை பார்க்க முடியாது.
கடவுளே மனிதனாக பிறந்து விட்டதால் இயேசுவைப் பார்க்கின்றவர்கள் கடவுளைப் பார்க்கிறார்கள்.
மனித உருவில் உள்ள இயேசுவை பார்க்கிறவர்கள் உருவமற்ற கடவுளைத்தான் பார்க்கின்றார்கள்.
இப்பொழுது ஒரு கேள்வி எழலாம்.
இயேசு 33 ஆண்டுகள்தானே உலகில் வாழ்ந்தார்,
அதுவும் யூத மக்கள் வாழ்ந்த பகுதியில்தானே வாழ்ந்தார்,
அவர் மரணித்து உயிர்த்து விண்ணகம் எய்தியபின்
இயேசுவை எப்படி பார்க்க முடியும்?
அதாவது, இறைவனை எப்படி பார்க்க முடியும்?
அதுவும் உலகம் எங்கும் உள்ள மக்களால்.
இந்தக் கேள்வி அவசியமே இல்லாதது.
ஏனென்றால்
இயேசுவை அதாவது கடவுளை
உலகம் உள்ள அளவும், உலகத்திலுள்ள அனைவரும், தங்களுடைய கண்களால் பார்க்கலாம், பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
அதற்காகத்தானே தான் மரணமடைவதற்கு முந்திய இரவு இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்!
அதற்காகத்தானே குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்!
இன்று நாம் திவ்விய நற்கருணையை பார்க்கும்போது இயேசுவை பார்க்கிறோம்,
இயேசுவை மட்டுமல்ல தந்தையையும், பரிசுத்த ஆவியையும் பார்க்கிறோம்.
ஒரே வாக்கியத்தில்
நாம் திவ்விய நற்கருணையைப் பார்க்கும்போது பரிசுத்த மூவொரு தேவனை
நமது கண்களால் பார்க்கிறோம்,
கைகளால் தொடுகிறோம்,
நாவினால் ருசித்துப் பார்க்கிறோம்.
பாக்கியம் பெற்றவர்கள் நாம்!
உண்மையில் நாம் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதே
தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்தான்!
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்தானே ஆரம்பிக்கிறோம், முடிக்கிறோம்!
நமது வாழ்வில் தந்தை தனியாக செயல்படுவது இல்லை.
மகன் தனியாக செயல்படுவது இல்லை.
தூய ஆவி தனியாக செயல்படுவது இல்லை.
மூவொரு தேவனே செயல்படுகிறார்.
மனுவுரு எடுத்தது, பாடுகள் பட்டது, சிலுவையில் பலியானது இறைமகன் மட்டும்தான்.
ஆனால், நம்மை பாவத்திலிருந்து மீட்டது மூவொரு தேவன்.
ஏனெனில் இறைமகனுக்குள் தந்தையும் இருக்கிறார்.
தூய ஆவியும் இருக்கிறார்.
நாம் ஞானஸ்நானம் பெறும்போது நமது பாவங்களை மன்னிப்பவர் மூவொரு தேவன்.
நாம் உறுதிப்பூசுதல் பெறும் போது நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்துபவர் மூவொரு தேவன்.
திவ்ய நற்கருணை வாங்கும்போது இயேசுவை மட்டும் அல்ல,
அவருக்குள் வாழும் தந்தையையும் தூய ஆவியையும் சேர்த்துதான் வாங்குகிறோம்.
ஏனெனில் மூன்று ஆட்களும் ஒரே கடவுள் தான்.
தந்தை மனிதனாக பிறக்க வில்லை.
தூய ஆவி மனிதனாக பிறக்க வில்லை.
இறைமகன் மட்டுமே மனிதனாகப் பிறந்தார்.
ஆனாலும் இறை மகனுக்குள் தந்தையும் வாழ்கிறார், தூய ஆவியும் வாழ்கிறார்.
"நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறதில்லையா?"
(அரு.14:10)
நாம் கோடிக்கணக்கான பேர் வாழலாம்.
ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் செயல் புரிந்து கொண்டிருப்பது ஒரே மூவொரு தேவன்தான்.
லூர்து செல்வம்.