Wednesday, December 30, 2020

புத்தாண்டே வருக!

http://lrdselvam.blogspot.com/2020/12/blog-post_50.html

          புத்தாண்டே வருக!

புத்தாண்டே! நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது தொியாமல்,

வேறு வழி இல்லாமல் வரவேற்கிறோம்.

சென்ற ஆண்டை ஆசை ஆசையாய் கற்பனைகள் பலவோடு வரவேற்றோம்.

அது எங்களது கற்பனைகளை எல்லாம் வெறும் கற்பனைகளாகவே விட்டு விட்டு

கொரோனா அரக்கியோடு கோரத்தாண்டவம் ஆடிவிட்டு,

போகிற போக்கில், 
  
"என்னோடு ஆடிய கொரோனா புது வடிவம் பெற்று 21 உடனும் ஆட தயாராக இருக்கிறது என்று சொல்லி
 உலகத்தை பயங்காட்டி விட்டு போயிருக்கிறது.

ஆனால், நாங்கள் "உன்னிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை என்றும். உன்னைப் பார்த்துப் பயப்பட போவதில்லை என்றும்." நேற்றே தீர்மானித்து விட்டோம்.

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எங்களுடைய வகுப்பு ஆசிரியரைப் பார்த்து,

 "சார் பொதுத்தேர்வுக்கு எதிர்பார்க்கக்கூடிய முக்கியமாக கேள்விகளை சொல்லுங்க,"

 என்று கேட்டோம்.

 ஆனால் அவர் ஒரே மூச்சில் சொன்னார்,

 "எதிர்பாராதவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஏமாற மாட்டார்கள்."
என்று.

 அது இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

சென்ற ஆண்டு நிறைய எதிர்பார்த்ததால் ஏமாற்றம் அடைந்தாலும்,

 அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம்.

 உன்னிடமிருந்து எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, ஏமாறப் போவதுமில்லை.

சென்ற ஆண்டு நாங்கள் ஒரு பெரிய தவறு செய்துவிட்டோம்.

நாங்கள் பயன்படுத்த வேண்டியவற்றை எங்களைப் பயன்படுத்த அனுமதித்து 
விட்டோம்.

பணத்தைப் பயன்படுத்த வேண்டியவன் பணத்துக்கு அடிமையாகிவிட்டால் அதனாலே அழிவான்
.

உணவைச் சாப்பிட பயன்படுத்த வேண்டியவன் அதன் ருசிக்கு அடிமையாகி விட்டால் அவன் ருசித்த உணவாலேயே அழிவான்.

அதிகாரத்தை நிர்வாகத்திற்கு பயன்பட வேண்டியவன் அதிகாரப் போதைக்கு அடிமை ஆகி விட்டால் அதனாலேயே அழிவான்.

இதெல்லாம் தெரிந்திருந்தும்

 நேரத்தை அதைத்
தந்தவருக்காகப் பயன்படுத்தாமல்

அது தன்னை குஷிப் படுத்த  

எங்களைத் தவறாக பயன்படுத்த அனுமதித்து விட்டோம்.

பலன்? பத்து மாதங்கள் கொரோரைவோடு போராட்டம்.

நாங்கள் வாழ்வதற்காக நேரத்தை தந்த இறைவன் சர்வ வல்லவர் மட்டுமல்ல, அளவற்ற அன்பு உள்ளவர்.

 அவர் எது செய்தாலும் அவரது படைப்புகளின் நன்மைக்காகத்தான் செய்வார் என்பதை சென்ற ஆண்டில் உணர மறந்தோம்.

 கொரோனா நிச்சயமாக அவருடைய அனுமதியின்றி உலகத்திற்குள் நுழைந்திருக்க முடியாது.

 அவர் அதற்கு அனுமதி அளித்ததற்கு தகுந்த காரணம் இருக்கும்.

  பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் படிக்காத மாணவர்களை கண்டிக்கும் போது

 மாணவர்கள் ஆசிரியரைப் பற்றி தங்களது பெற்றோரிடம் குறை சொல்வது வழக்கம்.

 பெற்றோரும் எதற்காக தங்களது பிள்ளைகளை ஆசிரியர் கண்டிக்கிறார் என்பதை கண்டு அறியாமல்

 ஆசிரியரிடம் வந்து,

" சார், நீங்கள் எங்கள் பிள்ளைகளை அடிக்கிறீர்கள், பெஞ்சின்மேல் ஏற்றி விடுகிறீர்கள், முழங்காலில் நிறுத்துகிறீர்கள்.

 இதையெல்லாம் செய்யாமல் அவர்களுக்கு பாடத்தைச் சொல்லிக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்"

 என்று ஆசிரியருக்கு புத்திமதி சொல்ல வந்து விடுவார்கள்.

நாங்களும் இதைத்தான் இறைவனிடம் செய்தோம்.

கொரோனா எதற்காக வந்தது என்பதை கண்டு உணராமல், அதைப்பற்றி கவலையும் படாமல்,

" இறைவா, தயவு செய்து கொரோனாவிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்."  

என்று மட்டும் அவரிடம் வேண்டினோம்.

நாங்கள் திருந்த வேண்டும் என்பதற்காக அவர் ஏதாவது செய்தால் நாங்கள் திருந்துவதற்குப் பதிலாக அவரிடம்

"ஆண்டவரே எங்களை காப்பாற்றுங்கள்"

என்று கேட்பதை மட்டும் வழக்கமாக வைத்திருந்தோம். 

இப்போது அதை உணர்கிறோம்.

உலகத்தை திருத்துவதற்காக அனுப்பப்பட்ட கொரோவினால் அதை திருத்த முடியவில்லை.

ஆகவே அது தனது சக்தியை அதிகமாக்கி கொண்டு இந்த ஆண்டும் வரப்போகிறது என்று எண்ணுகிறோம்.

ஆகவே நாங்கள் திருந்துவது என்று தீர்மானித்து விட்டோம்.

அது மட்டுமல்ல. துன்பங்களை எப்படி இன்பமாக மாற்றுவது என்று இறைமகன் இயேசு எங்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார்.

அதையும் மறந்து விட்டோம். இப்பொழுது ஞாபகத்திற்கு வந்து விட்டது.

எங்களுக்கு வரும் துன்பங்களை அப்படியே இயேசுவுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்து விட்டால் 

அவர் அவற்றிற்கு சன்மானமாக விண்ணகத்தில் எங்களுக்கு பேரின்பத்தை சேர்த்து வைத்திருப்பார்.

எவ்வளவுக்கு எவ்வளவு துன்பத்தை அவருக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறோமோ

 அவ்வளவுக்கு அவ்வளவு எங்களுக்காக விண்ணகத்தில் பேரின்பம் காத்துக் கொண்டிருக்கும்.

இனி கொரோனாவைக் கண்டு அஞ்சமாட்டோம்.

அது வந்தால் அதை அப்படியே இறைவனுக்குக் காணிக்கையாகக் கொடுத்து விடுவோம்.

2020 அதை வைத்து ஆட்டம் போட்டது போல் உன்னால் ஆட்டம் போட முடியாது.

சென்ற ஆண்டில் உலக செளகரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டோம்.

 உடம்பை காப்பாற்றும் முயற்சியில் ஆன்மாவை மறந்துவிட்டோம்.

உனது காலத்தில் உடம்பிற்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட அதிகமான முக்கியத்துவத்தை ஆன்மாவிற்கு கொடுப்போம்.

உடம்பை காப்பாற்றுவதை விட ஆன்மாவை காப்பாற்றுவது மட்டும்தான் இனி எங்களது பணியாக இருக்கும்.

இனி உடம்பிற்கு வரும் வியாதி வருத்தங்களை ஆன்மாவை பிடித்திருக்கும் பாவங்களுக்குப் பரிகார மருந்தாக பயன்படுத்துவோம்.  

உன்னையும் ஆண்டவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்காக மட்டும் பயன்படுத்த தீர்மானித்து விட்டோம்.

எங்களை ஆளும் அரசுகளைப் பற்றிதான் கவலையாக இருக்கிறது.

கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட 

அரசுகள் ஒன்றோடொன்று போரிட்டதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

இதை அரசுகள் உணர வேண்டும்.

அழிவுக்கு பயன்படுத்தும் விஞ்ஞான அறிவை ஆக்கத்திற்கு மட்டும் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சமாதானத்துடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசுகள் திருந்தி விட்டதைப் பார்த்து கொரோனா வேலை இல்லாமல் ஓடிவிடும். 

எங்களுக்கு வரும் துன்பங்களை அரசுகள் திருந்த இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க தீர்மானித்திருக்கிறோம்.

புத்தாண்டே உன்னை 
இறைவனுக்காக மட்டும் பயன்படுத்தப் போவதால் நீயும் சுத்தம் அடைவாய்.

நீ எங்களிடம் இருந்து விடைபெறும்போது பரிசுத்தமான உள்ளத்தோடு உனக்கு விடை கொடுப்போம்.

ஏமாற்றங்களோடு அல்ல,

 இறை அன்பில் வளர வேண்டும் என்ற ஒரே உறுதியான தீர்மானத்தோடு உன்னை மனமாற வரவேற்கிறோம்.

ஹலோ 2021,

வருக.

வந்து எங்களது வளர்ச்சியை கண்டு மகிழ்க.

லூர்து செல்வம்.

Tuesday, December 29, 2020

பழையன கழியட்டும்.

பழையன கழியட்டும்.


"ஹலோ! நண்பா! ஆழ்ந்த சிந்தனையில இருப்பது போல் தெரிகிறது."

"ஆமா. வெறும் ஆழ்ந்த அல்ல. மிகவும் ஆழ்ந்த.

 இவ்வளவு ஆழத்திலிருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியவில்லை. கொஞ்சம் தூக்கிவிடேன்."

"கொஞ்சம் என்ன, முழுவதுமே தூக்கிவிடுகிறேன். 

முதலில் நானும் உள்ளே வந்து விடுகிறேன். இப்போ சொல்லு."

"என்னுடைய அறையைக் கொஞ்சம் பார். எப்படி இருக்கிறது."

"எந்த அறை?"

"நான் வசிக்கும் அறை."

"உனது வாழ்க்கைக்குத் தேவை இல்லாத பொருட்களால் அதை நிரப்பி வைத்திருக்கிறாய்."


"ஆமா. எங்கு சென்றாலும் விநோதப் பிரியத்தால்

 'இது புதிதாகத் தெரிகிறது, பயன்படும்' 
'
என்று எண்ணி பயன்படாத பெருட்களை எல்லாம் வாங்கி வந்து அறையை நிரப்பி வைத்திருக்கிறேன்."  


"இப்போ உண்மையிலேயே பயன்படக்கூடிய பொருட்களை வாங்கி வந்திருக்கிறாய். அவற்றை எங்கே வைப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாய். அப்படித்தானே?"

"அப்படியேதான். ஏதாவது ஒரு வழி சொல்லேன்."

"ஏதாவது அல்ல. அதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. மனதை கல்லாக்கிக் கொண்டு பயன்படாத பெருட்களை எல்லாம் அப்புறப் படுத்து.

அப்புறம் அறையை விளக்கு மாற்றால் சுத்தப்படுத்து.

அப்புறம் பயன்படக்கூடிய பொருட்களை மட்டும் உள்ளே எடுத்து வந்து, அழகுற வைக்க வேண்டிய இடத்தில் வை.

அப்புறம் விநோதப் பிரியத்துக்காக வேண்டாதவற்றை வாங்குகிற பழக்கத்தைக் கைவிடு. அவ்வளவுதான்."

"இது எனக்குத் தெரியாதாக்கும். இப்போ பிரச்சனையே இருக்கிற பொருட்களை அப்புறப் படுத்த மனமில்லாததுதான்."

"இதைத்தான் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பார்கள்.

மீசையில் படாமல் கூழ் குடிக்க வேண்டுமென்றால் ஒன்று மீசையை அப்புறப் படுத்த வேண்டும். அல்லது கூழ் குடிக்கக் கூடாது.

இரண்டுமே வேண்டுமென்றால் அது முடியாத காரியம்"

"சரி. நண்பன் சொல்லி விட்டாய், முதலில் பழைய பொருட்களை அப்புறப் படுத்து கின்றேன். சரி வெளியே வா."

"பொறு. இங்கே உள்ளே ஒரு அறை இருக்கிறது, உனது மன அறை. இப்போ அங்கேதான் நின்று கொண்டிருக்கிறேன்.

அறை awkward ஆ இருக்கு. வேண்டாத குப்பைகளால் நிறைந்திருக்கிறது. 

குப்பைகளை அப்புறப்படுத்தாவிட்டால் நல்ல எண்ணங்கள் எப்படி வரும்?"

"அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். உன்னை உள்ளே விட்டதே தப்பு.

நண்பன் என்ற முறையில் உள்ளே விட்டால்...."

"என்ன சொன்னாய்?

 நண்பன் என்ற முறையில்தானே உள்ளே விட்டாய்.  

இனித்தாலும், கசந்தாலும் உண்மையைச் சொல்வபன் தான் உண்மையான நண்பன்.

சால்றா போடுபவன் துரோகி"

"இப்போ என்ன சொல்ல வருகிறாய்?"

"உள்ளும் புறமும் சுத்தமாக இருப்பவன்தான் நேர்மையாளன்.

உள்ளுக்குள் ஆயிரம் குப்பைகளை வைத்துக் கொண்டு நல்லவன் போல் நடிப்பவன் நம்பிக்கைத் துரோகி.

முதலில் உனது மனதைச் சுத்தப் படுத்து. அறையை எப்படிச் சுத்தப்படுத்துவது என்று தானாகவே தெரியும்.

இதோ வெளியே வந்துவிட்டேன். வரட்டுமா?"

"கொஞ்சம் பொறு. கோபமா?"

"உண்மையான நண்பன் உண்மையை மட்டும்தான் சொல்வான். நான் உனது உண்மையான நண்பன்.

இன்றோடு பழைய ஆண்டு முடியப் போகிறது.

நாளை புதிய ஆண்டு பிறக்கப் போகிறது.

முதலில் நம்மிடம் இருக்கும் தேவை இல்லாத, அசுத்தமான எண்ணங்களையும், பழக்க வழக்கங்களையும் விட்டுவிட்டு 

நாம் புதிய மனிதனாய் மாற வேண்டும்.

அப்புறம் புதிய மனிதனாய் புத்தாண்டை வரவேற்க வேண்டும்.

நாம் மாறாவிட்டால் ஆண்டும் மாறாது."

"நாம் மாறாவிட்டாலும் ஆண்டு மாறிவிடும், தெரியுமா?"

"பெயர் மாறுவதுதான் மாற்றமா?

கழுதைக்குக் குதிரை என்று பெயர் வைத்து விட்டால் அது குதிரை ஆகிவிடுமா?"

"சரி, நீ சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

முதலில் நான் மாறுகிறேன் அப்புறம் என் அறையை மாற்றுகிறேன்."

"Very good. We cannot change the world unless we change ourselves first.

நாம் எல்லோருமே உலகத்தை மாற்ற ஆசைப்படுகிறோம்,

 ஆனால் நாம் மாற மறுக்கிறோம்.

உயிரே இல்லாத கொரோனா கூட, "நான் மாறிவிட்டேன்'' என்கிறது!"

"உண்மையில் எல்லோரும் மாறிக்கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் சிலர் வளர்ச்சியை நோக்கி மாறுகிறார்கள்.

சிலர் தளர்ச்சியை நோக்கி மாறுகிறார்கள்.

All are changing. Some for the better, some for the worse."

"இறைவன் மட்டுமே மாறாதவர்.

ஏனெனில் அவர் நிறைவானவர்.

நாம் குறைவானவர்கள். நிறைவை நோக்கி மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.

தளர்ச்சி ஏற்படுமானால் அதற்கு உரிய காரணத்தை ஆய்ந்து அறிந்து திருத்த வேண்டும்.

அதற்காகத்தான் ஒவ்வொருநாளும் படுக்கப் போவதற்கு முன்னால் சுயபரிசோதனை செய்கிறோம்.

இறை வார்த்தையின் அடிப்படையில் சிந்தித்து, தியானித்து செயல் படுபவர்கள்தான் ஆன்மீகத்தில் வளர முடியும்.

மனம் போனபோக்கில் செயல்பட்டால் வளர முடியாது.

ஆகவே இவ்வாண்டு முடியுமுன்னாலேயே,

சிந்தித்து, இந்த ஆண்டில் நாம் செய்த தவறுகளை திருத்தி,

 வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உறுதியான நோக்கத்தோடு

  புத்தாண்டில் கால் எடுத்து வைப்போம்.

பழைய மனிதனை கழைந்து, புதிய மனிதனாக புத்தாண்டை ஆரம்பிப்போம்.

 வளர்வோம்,

 வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, December 28, 2020

வாழ்நாளைல்லாம் கிறிஸ்மஸ்.

    வாழ்நாளெல்லாம் கிறிஸ்மஸ்.


" என்னடா ஆழ்ந்த சிந்தனை? கிறிஸ்மஸ் நல்லபடியா முடிஞ்சு போச்சுல்ல.

அடுத்து ஈஸ்டருக்கு இப்போவே plan போடுறியா? "


"என்ன சொன்ன? கிறிஸ்மஸ் முடிஞ்சு போச்சா?

என்னமோ இன்றைய வியாபாரம் நல்லபடியா முடிஞ்சு போச்சுன்னு சொல்றது மாதிரி சொல்ற!"

"ஆமா. அதுல என்ன தப்பு? 

டிசம்பர் 25 கிறிஸ்மஸ். இன்றைக்கு டிசம்பர் 29,

கிறிஸ்மஸ் முடிந்து 3 நாள் போய் இன்று 4வது நாள்."

"உனக்கு கல்யாணம் முடிஞ்சி போச்சா?'

"என்னடா கேள்வி இது? என்னுடைய மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இதோ எனது பக்கத்தில இருக்காங்க. கண்ணு தெரியல?"

"ஏண்டா, உன்னுடைய மனைவியும், இரண்டு பிள்ளைகளும் எங்கே இருக்காங்கன்னா கேட்டேன்?"


"கல்யாணம் முடியாம எப்படிடா மனைவியும், பிள்ளைகளும் வருவாங்க?"

"ஏம்மா, உன் புருசன் சொன்னதக் கேட்டியா?"

''அவர் இப்படித்தான் ஏதாவது கிறுக்குத்தனமான உளருவாரு.

 முதல் இரவு அன்று முதல் வார்த்தையா , 'அப்போ நமக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு. இப்போ சந்தோஷமா?'ன்னு கேட்டாரு.''

"ஆமா. நான் கேட்டதில் என்ன தப்பு? நாலு வருஷம் காதலிச்சோம். எங்க காதல் நல்ல படியா கல்யாணத்துல முடிந்தது."

"கேட்டீங்களா உங்க friend சொல்றத? அப்போ இப்போ காதல் இல்ல, அப்படித்தானே?"

"உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை? முடிஞ்சு போச்சுன்னு சொல்லக்கூடாதா?''

"முடிஞ்சு போச்சுன்னா அது அப்புறம் இருக்காதுன்னு அர்த்தம்.

கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்ல வேண்டியது தானே?"

"கிறிஸ்மஸ் முடிஞ்சு போச்சான்னு கேட்டதுக்கு இவ்வளவு விளக்கமா? 

25ம் தேதி கிறிஸ்மஸ். இன்று 29ம் தேதி கிறிஸ்மஸ் இல்லை.
இனி அடுத்த ஆண்டு தானே."

"கிறிஸ்மஸ் ஒரு நிகழ்ச்சி அல்ல, முடிந்து போக.

கிறிஸ்மஸ் ஒரு உண்மை. உண்மைக்கு முடிவு இல்லை.

"நானே வழியும் உண்மையும் உயிரும்" இன்று இயேசுவே கூறியிருக்கிறார்."

"புரியவில்லை. கிறிஸ்து பிறந்தநாள் ஆண்டுக்கு ஒருமுறை தானே வரும்."

"கிறிஸ்து பிறந்தநாள் ஆண்டுக்கு ஒருமுறை தான் வரும்.


ஆனால் கிறிஸ்து ஆண்டுக்கு ஒரு முறையா வருவார்?

விழா கிறிஸ்துவுக்கா? நாளுக்கா?

நாள் வரும், போகும்.

ஆனால் ஒரு முறை நம்மிடம் வரும் கிறிஸ்து நம்முடனே தங்கவேண்டும்.

கிறிஸ்து நம்மிடம் இருக்கும்போதுதான் நாம் கிறிஸ்தவர்கள்."

"கிறிஸ்து கடவுள்தானே. கடவுள்தான் எங்கும் இருக்கிறாரே. நம்மிடமும் இருக்கிறாரே. பிறகு ஏன்
'இருக்கும்போதுதான்' என்கிறாய்?"

"டேய் பொடியா, உங்க வீட்டில கார் இருக்கா?"

"கார் இருக்கு, ஆனால் எனக்கு ஓட்டத் தெரியாது."

"அப்போ காரை எடுத்துக்கொண்டு வா என்று சொன்னால் உன்னால் எடுத்துக்கொண்டு வர முடியாது."

"முடியாது."

"அப்போ காரின் முழு பயனையும் உன்னால் அனுபவிக்க முடியாது."

"முடியாது."

" உன்னுடைய அப்பாவிடம் சொல்லு.''

"என்ன சொல்ல வேண்டும்?"


"கடவுள் எல்லோரிடமும் இருக்கிறார். அவரை நாம் அனுபவிக்கா விட்டால் இருந்தும் இல்லாதது மாதிரிதான்."

"சார் சொன்னது உங்களுக்குக் கேட்டுதா அப்பா?"

"கேட்டுது கேட்டுது. 

கிறிஸ்து நம்மிடம் இருக்கிறார். ஆனால் அவரது பண்புகள் நம்மிடம் இருந்தால் தான் நம்மிடம் கிறிஸ்தவம் இருக்கும்,

 கிறிஸ்தவம் இருந்தால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

இதை உனது சாரிடம் சொல்லு."


"கிறிஸ்து 2020 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் பிறந்து விட்டார்.

 ஆனால் நம் ஒவ்வொருவருள்ளும் அவர் பிறக்க வேண்டும்.

 அவரது பண்புகள் நம்முடைய பண்புகளாக மாறும்போதுதான் அவர் நம்மிடம் பிறப்பதாக அர்த்தம்.
'
 நம்மிடம் கிறிஸ்து பிறந்துவிட்டாரா? அல்லது பிறந்து கொண்டே இருக்கிறாரா?"


"அதென்ன பிறந்து கொண்டே இருக்கிறாரா?"

"அவருடைய எல்லாப் பண்புகளும் நம்மிடம் இருந்தால் அவர் நம்மிடம் பிறந்து விட்டதாக அர்த்தம்.

அன்னை மரியாளிடம் கிறிஸ்துவின் பண்புகள் பரிபூரணமாக இருந்தன.

அதனால்தான் அவளை நாம் அருள் நிறைந்தவள் என்கிறோம்.

நம்மைப் பொறுத்த மட்டில் கிறிஸ்துவின் பண்புகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கிரகித்து நமது ஆக்கிக் கொண்டிருக்கிறோம். அதாவது இயேசு நம்மிடம் பிறந்து கொண்டே இருக்கிறார்."

"நீ சொல்றதைப் பார்த்தா நமக்கு வாழ்நாளில் ஒவ்வொரு வினாடியும் கிறிஸ்மஸ்தான்."

"கிறிஸ்மஸ்தான் நமது வாழ்க்கை.

கிறிஸ்துவின் அன்பு, இரக்கம், பரிவு, தாராள குணம், சாந்தம், மன்னிக்கும் பண்பு, எளிமை etc. etc. போன்ற பண்புகள் எல்லாம் நமது பண்புகளாகவும் மாற வேண்டும்.

ஒவ்வொரு பண்பிலும் நாம் வளர வேண்டும். 

வளர்ச்சிக்கு எல்கை கிடையாது. 
.
வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வினாடியும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

ஒரு அணு அளவு வளர்ந்தாலும், அந்த அளவு கிறிஸ்து நம்மில் பிறக்கிறார்.

அந்த அளவு நாம் கிறிஸ்துவாக மாறிக் கொண்டிருக்கிறோம்.

இயேசுவின் சாயல் நம்மில் மெருகு ஏறிக் கொண்டேயிருக்கும்.

நாம் விண்ணில் பிறக்கும் வரை கிறிஸ்து நம்மில் பிறந்து கொண்டிருப்பார்.

வாழ்நாளைல்லாம் Happy Christmas பாடுவோம்.

லூர்து செல்வம்.

Sunday, December 27, 2020

முதல் வேத சாட்சிகள்!

 

    .    முதல் வேத சாட்சிகள்!



கைக்குழந்தையாக இடையர்குடியில் 'வாழ்க்கையை ஆரம்பித்த இயேசு, அன்னை மரியாளுக்கு மட்டுமல்ல, அங்கு வாழ்ந்த அனைவருக்குமே கைக்குழந்தையாக இருந்தார்.

எந்த நேரமும் சிறுவர்கள் அவரைக் கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் கையில் எப்போதும் இயேசு மகிழ்ச்சியாக இருப்பார்.

குழந்தை இயேசு எப்போதும் சிறுவர்களை அவரிடம் வர விடுவார்.

மாதாவைச் சுற்றி இடையர் குடிப் பெண்கள் இருப்பார்கள். மாதாவுக்கும், குழந்தை இயேசுவுக்கும் உதவி செய்து கொண்டே இருப்பார்கள்.

மூன்று வயது முதலே கோவிலில் வளர்ந்த அன்னை மரியாள், அங்கு தான் கற்ற வேதாகமக் கல்வியை இடையர்குலப் பெண்மணிகளுக்கு ஊட்டிக் கொண்டிருப்பாள்.

மெசியா ஒரு கன்னியின் வயிற்றில்
 பிறப்பார் என்று வேதாகம பாடத்தில் கற்றிருக்கிறார். 

ஆனால் தன் வயிற்றில் பிறப்பார் என்று அவள் அவர் எதிர்பார்க்கவில்லை. 

இதை மாதா பெண்களிடம் சொல்லும்போது அவர்கள் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

கபிரியேல் தூதர் தன்னிடம் தூது உரைத்ததிலிருந்து இயேசு பிறந்தவரை எல்லா விவரங்களையும் இடையர் குல பெண்களோடு மாதா பகிர்ந்து கொண்டாள்.

இயேசுதான் மெசியா என்று இடையர்களுக்கு அறிவித்ததும் வானதூதர்கள்தான்.

இயேசு கடவுள் என்பதையும், மரியா கடவுளின் தாய் என்பதையும் ஏற்றுக் கொண்ட அவர்கள்,

அவர்களின் பாவங்களுக்கு பரிகாரம் செய்ய பாடுபட்டு மரிக்கவே 

 கடவுள் மனிதனாக பிறந்திருக்கிறார் என்பதை அறிந்து கடவுளின் அன்பை எண்ணி வியந்தார்கள்.

உலகைப் படைத்த கடவுளே தங்களைப் போல ஒரு ஏழையாகப் பிறந்திருப்பதை அறிந்தபோது தங்களது ஏழ்மையை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

தாங்கள் ஏழைகளாக இருந்ததால்தான் இறைவனோடு வாழ முடித்ததாக எண்ணி மகிழ்ந்தார்கள்.

''ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே."


என்று இயேசு பிற்காலத்தில் வாயால் போதிக்க இருந்ததை குழந்தையாக இருந்தபோதே செயலில் போதித்தார்.

குழந்தை இயேசுவை தங்கள் அரசராக எண்ணி அம் மக்கள் வாழ்ந்தார்கள்.

குழந்தை இயேசுவுக்காக தங்களது உயிரைக் கூட தியாகம் செய்யக்கூடிய அளவிற்கு அம் மக்கள் அவர் மேல் பற்று வைத்திருந்தார்கள். 

ஒருநாள் காலையில் ஒரு பெண்மணி வழக்கம்போல் ஒரு செம்பில் ஆட்டுப் பாலைக் கரந்து எடுத்துக் கொண்டு மாதாவைப் பார்க்கச் சென்றாள்.

மாதா அவளிடம்,

"நாங்கள் வேறு ஒரு ஊருக்கு போகவேண்டும் என்று இறைவனிடமிருந்து கட்டளை வந்திருக்கிறது."

என்றாள்.

அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து,

"எதற்காக அம்மா?"

இறைத்தூதர் சூசையப்பரிடம்,


"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம்.

 நான் சொல்லும்வரை அங்கேயே இரும். 

ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்" 

என்று சொன்ன செய்தியை அவளிடம் மாதா சொன்னாள்.

உடனே அந்தப் பெண் வெளியே சென்று அனைவருக்கும் அச் செய்தியை அறிவிக்க,

அனைவரும் வீட்டு முன் கூடி விட்டார்கள்.

சூசையப்பர் அவர்களிடம்,

"ஏரோது அரசன் இயேசு தனக்கு போட்டி யாக உலகில் பிறந்து இருக்கிறார் என்று தவறாக எண்ணி,

 இயேசுவைக் கொலை செய்ய தேடுகிறான்.

 ஆகவே நாங்கள் உடனே எகிப்திற்கு செல்ல வேண்டும் என்று இறைத்தூதர் இன்று இரவு என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

 இதுவரை நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி.

 நாங்கள் எகிப்துக்கு செல்கிறோம், விடை கொடுங்கள் என்றார்."

"குழந்தை இயேசுவை எங்கள் உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவோம். நீங்கள் எதற்காக அவனுக்கு பயந்து எகிப்துக்கு ஓட வேண்டும்?"

"ஏரோதுவுக்கு பயந்து நாங்கள் போகவில்லை. இறைவனது கட்டளை, ஆகவேதான் போகிறோம்.

குழந்தை இயேசுதானே எங்களை வழி நடத்துகிறார்!"

"எகிப்து வரை நடந்து போவது எவ்வளவு கடினம்! நாங்கள் யாராவது உங்களுக்கு துணைக்கு வரலாமா?"


"நாங்கள் தனியாக போகவில்லை. கடவுளோடு கூட தானே போகிறோம்."

ஒரு பொடியன்,

"தம்பி கூட விளையாடுவதற்கு நான் வரட்டுமா? என்னை தம்பிக்கு ரொம்ப புடிக்கும்."

"உன்னால் எங்களுடன் நடக்க முடியாது, இங்கு இருந்து நன்றாக விளையாடு."

பெண்களுக்கு மாதாவை விட்டு பிரிவதற்கு மனது இல்லை. ஆயினும் இறைவனது கட்டளை என்பதால் அவர்களால் மறுக்க முடியவில்லை. 

எல்லோரும் சேர்ந்து சூசையப்பரிடம் வழிச் செலவிற்கு பணமும் சில நாட்கள் உண்பதற்கான உணவு வகைகளும் கொடுத்தார்கள். 


கண்களில் நீர் ததும்ப அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.

மாதா இயேசுவுடன் கழுதையின் பேல் அமர்ந்துகொண்டாள்.

சூசையப்பர் நடந்து சென்றார்.


அவர்கள் சென்ற பின் இடையர்கள் அனைவரும் ஒரு கூட்டம் போட்டார்கள்.

ஒருவர் பேசினார்,

"மெசியா பெத்லகேமில் தான் பிறந்திருக்கிறார் என்று ஏரோது விற்கு தெரிந்திருக்கும். 

ஆகவே அவரை கொல்ல மன்னரின் ஆட்கள் இந்தப்பக்கமும் வருவார்கள். நாம் யாருக்கும் பயப்பட கூடாது.

இயேசுவை தெரியாது என்று யாரும் அவரை மறுதலிக்கக் கூடாது.

 மறுதலித்தால் பாவம். ஆனால் அவர் எகிப்துக்கு சென்றுள்ள விவரத்தை உயிர் போனாலும் வெளியிடக் கூடாது."

எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

ஒரு வாரம் கழித்து படைவீரர்கள் சிலர் இடையர் குடிக்கு வந்தார்கள்.

இடையர்கள் எங்கும் பயந்து ஓடவில்லை. ஆண்களும் பெண்களும் படைவீரர்களை சந்தித்தார்கள்.

ஒரு படைவீரர்.

"ஒரு தச்சனும், அவருடைய மனைவியும் தங்கள் சிறு குழந்தையோடு இந்த பக்கம் வந்தார்களா?"

"எதற்காக அவர்களைத் தேடுகிறீர்கள்?"

"அந்த குழந்தை ஏரோது மன்னனுக்குப் போட்டியாக நாட்டை ஆளப் பிறந்திருக்கிறது.

அதைக் கொல்ல வேண்டும் என்பது மன்னனின் கட்டளை."

"ஆள்வதற்கு என்றே பிறந்த குழந்தையை உங்களால் எப்படி கொல்ல முடியும்?"

"அது எங்கள் வேலை. அக்குழந்தையை உங்களுக்கு தெரியுமா?"

ஒரு பொடியன்,


"எங்கள் எல்லோருக்கும் தெரியும். அம்மாவும், அப்பாவும், குழந்தையும் எங்களோடு கூட தான் இருந்தார்கள். ஆனால் இப்போது எங்களுடன் இல்லை.''

"இப்போது எங்கே போயிருக்கிறார்கள்?" 

"அது தெரியாது."

'தெரிந்தும் சொல்லாவிட்டால் மரண தண்டனை கிடைக்கும். இது அரசனின் உத்தரவு."

ஒரு சிறுவன்,

"காட்டிக் கொடுப்பவன் துரோகி!"

"அந்த குழந்தையை காட்டிக் கொடுக்காவிட்டால் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகள் எல்லாம் கொல்லப்பட வேண்டும்.

 இது அரசு உத்தரவு. அரச குழந்தையைக் காட்டிக் கொடுக்கிறீர்களா?

 உங்கள் குழந்தைகளை இழக்கிறீர்களா?"

பெண்கள்,

"இயேசுவைக் காட்டிக் கொடுக்க மாட்டோம். இயேசுவுக்காக நாங்கள் எல்லோரும் சாகத் தயார்."

"அப்போ சரி. வீரர்களே, வாருங்கள். ஒவ்வொரு வீடாகத் தேடுங்கள்.

இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளை எல்லாம் கொல்லுங்கள்."

"கடவுளுக்காக உயிரைக் கொடுக்க எங்கள் குழந்தைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்."

அங்கு இருந்த சில நாட்களில் குழந்தை இயேசு அனைவர் உள்ளத்திலும் வீரத்தை வளர்த்திருக்கிறார். அவர்கள் சாவுக்கு அஞ்சவில்லை.

இயேசுவுக்காக எல்லோருமே உயிரைக் கொடுக்க தயாராக இருந்தார்கள்.



இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகள் எல்லாம் அன்று இயேசுவுக்காகப் பலியானார்கள்.

வீரத்தாய்மார்கள்.

வீரத்தோடு தங்கள் பிள்ளைகளை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்கள்.

ஏரோது "பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்." (மத்.2:6)

மாசற்ற இயேசுவுக்காக பலியான மாசில்லா குழந்தைகள்!

திருச்சபையின் வரலாற்றில் முதல் வேத சாட்சிகள்!

அந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களது விசுவாசம் இன்னும் ஆழமாயிற்று.

ஆடு மேய்ப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்ட அந்த படியாத பாமர மக்களிடம் இருந்த விசுவாசம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

ஆச்சரியப் பட்டால் மட்டும் போதாது.

நமது விசுவாசத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும்.

வேதசாட்சிகளாக வாழவேண்டும்.

தேவைப்பட்டால் மரிக்கவும் தயாராக இருக்க வேண்டும். 

"மாசில்லா குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்."

லூர்து செல்வம்.

Saturday, December 26, 2020

முதல் கிறிஸ்மஸ்.

          முதல் கிறிஸ்மஸ்.


நாம் இப்போது 2020வது கிறிஸ்மஸைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

நாம் எப்படிக் கோலாகலமாய்க் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று நமக்குத் தெரியும். 


முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்?


டிசம்பர் 24.

இன்று நாம் கிறிஸ்மஸ் கேக்கும், விதவிதமான sweets ம் வாங்குவதற்காக கடை கடையாய் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறோம்.

அன்று இதே நாளில் சூசையப்பர் இயேசு பிறப்பதற்கான இடம் தேடி வீடு வீடாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்.

பெத்லகேம் சூசையப்பரின் சொந்த ஊர்.

"யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். ஏனெனில், அவர் தாவீதின் குலத்தவரும் குடும்பத்தவருமாக இருந்தார்."
(லூக்.2: 5)

அவர் கலிலேயா நாட்டு நாசரேத்தூரில் வாழ்ந்தாலும், அவரது உறவினர் பலர் வாழ்ந்து கொண்டிருந்த ஊர் பெத்லகேம்.

ஆகவே உறவினர் வீடுகளில்தான் முதலில் இடம் தேடினார்.

ஆனால் எல்லோரும் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள்.

வீடுகளில் இடம் கிடைக்காததால் சத்திரத்தில் இடம் தேடினார்.

அங்கும் இடம் கிடைக்கவில்லை.
"சத்திரத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை." (லூக்.2:7)

எந்த உலகத்தை இறைவன் படைத்தாரோ,

 எந்த உலகத்தில் வாழும் மக்களை மீட்பதற்காக மனிதனாகப் பிறக்க திட்டமிட்டாரோ

 அந்த உலகத்தில் பிறக்க அவருக்கே இடம் கிடைக்கவில்லை!

சூசையப்பர் முணுமுணுக்கவில்லை, முறையிடவில்லை.

மனிதர்கள் இடம் தரவில்லை. ஆனாலும் மிருகங்கள் தந்து உதவின.

மாதாவின் ஆலோசனைப்படி சூசையப்பர் ஊருக்கு வெளியே இருந்த ஒரு மாட்டுத் தொழுவைத் தேடிச் சென்றார்.

தொழுவிற்குள் நுழைந்தார்.

ஒரே சாணி நாற்றம்.

மாதாவை வெளியே நிறுத்திவிட்டு, தொழுவைப் பெருக்கி சுத்தப்படுத்தினார்.

இருட்டி விட்டது.

மின்சார வசதி இல்லாத காலம்.

அவரால் இயன்ற ஒரு சிறிய விளக்கை ஏற்றி வைத்தார்.

மாதாவை உள்ளே அழைத்துச் சென்றார்.

சாணி நாற்றத்தை அனுபவித்துக் கொண்டே, ஒரு துணியை விரித்து அதன் மேல் மாதா அமர்ந்தார்.

சூசையப்பர் கழுதையையும் உள்ளே அழைத்து வந்து, அதை ஒரு இடத்தில் கட்டிக் கொண்டிருந்தபோது,

"குவா, குவா" சப்தம் கேட்டது.

'திரும்பிப் பார்த்தார்.

மாதாவின் கையில் குழந்தை இருந்தது.

நல்ல வேளை மாதாவுக்கு பிரசவ வலி ஏதும் இல்லை.

கண்ணாடி வழியே ஒளி ஊடுருவி வருவது போல,

இயேசு மாதாவின் வயிற்றிலிருந்து பிறந்தார்.

சூசையப்பர் ஓடிச் சென்று குழந்தையை கையில் வாங்கினார்.

குழந்தை சூசையப்பரைப் பார்த்து புன்முறுவல் பூத்தது.

அந்த தெய்வீகப் புன்னகையில் அதுவரை தான் பட்ட கஷ்டங்களை யெல்லாம் சூசையப்பர் மறந்துவிட்டார்.

குழந்தை புன்னகைத்தாலும் அது மார்கழி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது.


"மேரி, இங்கே பார். குழந்தை குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறது."  

மாதா கிறிஸ்மசுக்கென்று புதிய டிரஸ் எதுவும் வாங்கி இருக்கவில்லை.

கர்ப்ப காலத்தில் இயேசுவுக்காக பின்னி வைத்திருந்த துணியை அணிவித்து, 

பழைய துணிகளில் பொதிந்து

 மாட்டின் தீவனத் தொட்டியில் கிடத்தினாள்.

யார் பிறந்த விழாவை கொண்டாட நாம் லட்சங்கள் செலவழித்து டிரஸ் வாங்குகிறோமோ 

அவருக்குப் போர்த்திக்கொள்ள பழைய துணிதான் கிடைத்தது!

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்." (லூக். 6:20) 
என்ற தனது போதனையை தனது பிறப்பிலேயே வாழ்ந்து காட்டியவர் நம் ஆண்டவர்!

கிறிஸ்மசுக்காக புது dress வாங்குபவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வாங்கிய புது dress ஐ ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு,

 நாம் பழைய துணியை அணிவதில்தான்

 உண்மையான கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அடங்கியிருக்கிறது!

தீவனத் தொட்டியில் படுத்துக் கொண்டு,

 கை கால்களை ஆட்டிக் கொண்டு,

 மாதாவையும், சூசையப்பரையும் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார் குழந்தை இயேசு.

நடுச்சாம வாக்கில் தொழுவிற்குள் யாரோ வரும் சப்தம் கேட்டது.

மாதாவும் , சூசையப்பரும் திரும்பிப் பார்த்தார்கள்.

ஆட்டு இடையர்கள் சிலர் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

வானதூதர் அவர்களுக்கு கூறிய செய்தியை மாதாவிடம் கூறிக் கொண்டே குழந்தையைப் பார்க்கச் சென்றார்கள்.

அவர்களுக்காக பிறந்த மீட்பரும், ஆண்டவருமாகிய மெசியா அவரே என்று அவர்களுக்கு தெரியுமாகையால் அவர்கள் குழந்தையை ஆராதிப்பார்கள்.

தாங்கள் கொண்டு வந்திருந்த ஆட்டுப்பாலையும், சில உணவுப் பொருட்களையும் மாதாவிடம் கொடுத்தார்கள்.

"ஏம்மா, பாலன் பிறக்க வீடு ஏதும் கிடைக்கவில்லையா?"

மாதா விபரங்களைச் சொன்னார்.

ஒரு இடையர்,

"அம்மா, கடவுள் பிறந்த தொழு பாக்கியம் பெற்றதுதான்.

ஆனால் காலையில் எங்களுடனே எங்கள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். 

நாங்கள் உங்களை எங்கள் பெற்றோர் போல கண்ணுக்குக் கண்ணாய்க் கவனித்துக் கொள்வோம்."
  
எல்லா இடையரும் அதையே சொன்னார்கள்.

டிசம்பர். 25

மறுநாட் காலையில் ஒரு இடையர் இயேசுவைக் கையில் எடுத்துக் கொண்டார்.

மாதா கழுதைமேல் ஏறிக்கொண்டார்.

எல்லோரும் இடையர் படை சூழ, ஆடுகளும், ஆட்டுக்குட்டிகளும் சூழ்ந்து வர இடையர் குடிக்குச் சென்றார்கள்.

இடையர் குலப் பெண்களுக்கு 
இரவிலே தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.

பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சிப் பெருக்குடன் திருக்குடும்பத்தை வரவேற்றார்கள்.

குழந்தையை கையில் வைத்திருந்த இடையர் குழந்தையுடன் நேரே தன் வீட்டிற்குள் சென்றார். 

அந்த வீட்டிற்குள்ளே மாதாவும், சூசையப்பரும், மற்ற பெண்களும் சென்றார்கள்.

ஏழைக் குடும்பத்தில் என்ன வசதிகள் இருக்குமோ அதே வசதிகள் இயேசுவுக்கு அளிக்கப்பட்டது. 

வசதிகளை விட, இடைக்குடி மக்களின் அன்பைத்தான் திருக்குடும்பம் அனுபவித்தது.

எப்போதும் இயேசுவைச் சுற்றி சிறுவர்களும், ஆட்டுக் குட்டிகளும் விளையாடிக் கொண்டிருக்கும்.

இயேசு பாலனுக்கு அது ரொம்பப் பிடிக்கும்.

எட்டாம் நாள் வந்தபோது, குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டியிருந்தது. 

தாய் கருத்தரிக்கும் முன்பே தூதர் குறிப்பிட்டிருந்த " இயேசு " என்னும் பெயரை அதற்கு இட்டார்கள்.

அந்த விழாவையும் ஏழைகளாகிய இடையர்குடி மக்களே கொண்டாடினார்கள்.


ஒரு நாள் இரவு, விண்மீன் ஒன்று குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்பதை மக்கள் கண்டு, 
அனைவரும் வீட்டின் முன் கூடினார்கள்.

மூன்று ஒட்டகங்கள் அவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தன.


அவற்றின் மேல் மூன்று ஞானிகள் அமர்ந்திருந்தார்கள்.

அருகே வந்ததும் ஞானிகள் ஒட்டகங்களிலிருந்து இறங்கி

வீட்டிற்குள் போய், 

பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு, 

தெண்டனிட்டு வணங்கினர். 

தம் பேழைகளைத் திறந்து பொன்னும் தூபமும் வெள்ளைப்போளமும் 

அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.

இடைக்குடி பெண்கள் அனைவரும் இக்காட்சியை மகிழ்ச்சியுடன் கண்டு களித்தார்கள்.


ஞானிகளைப் பார்த்து ஒரு இடையர் கேட்டார்,


"மீட்பர் பிறந்திருப்பதை வான தூதர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்.
உங்களுக்கு எப்படித் தெரியும்?"


 "நாங்கள் கீழ்த்திசை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

யூதர்களின் அரசர் பிறந்திருக்கும் செய்தியை

இதோ இந்த அவருடைய விண்மீன் எழுதலைக் கண்டு அறிந்தோம்.

அதுதான் வழிகாட்டி எங்களை அழைத்து வந்தது.

அது இந்த வீட்டின் மீது நின்றதும் பிறந்த அரசர் வீட்டிற்குள்தான் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டோம்."

 இடையர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடிய முடியவில்லை.

மகிழ்ச்சியைக் கொண்டாட ஞானிகளுக்கு விருந்து வைத்தார்கள்.

விருந்து முடிந்து ஞானிகள் ஊருக்குத் திரும்பினார்கள்.


இயேசுவின் முதல் கிறிஸ்மஸ் அவர் ஆசைப்பட்டபடி எளிய கிறிஸ்துமஸ் ஆக இருந்தது.

ஏழைகளோடு ஏழையாக இயேசு பாலன் மகிழ்ச்சியோடு இருந்தார்.

முதல் கிறிஸ்மசையும், 2020வது
கிறிஸ்மசையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

முதல் கிறிஸ்மஸ் அவர் ஆசைப்பட்டபடி எளிமையாக இருந்தது.

இன்றைய கிறிஸ்மஸ் நாம் ஆசைப்படுகிறபடி பணக்காரத்தனமாக இருக்கிறது.

இன்றும் ஏழைகளின் வீட்டில், அவர்களது வசதிகளுக்கு ஏற்ப மிக எளிமையாக கொண்டாடப்படும் கிறிஸ்மஸ்தான் இயேசுவுக்கு ரொம்ப பிடிக்கும்.

எங்கே அன்பு இருக்கிறதோ அங்கு இயேசு பாலனும் இருக்கிறார்.

Where love is there Child Jesus is.

கொண்டாட்டத்தை மையமாக வைக்காமல்,

 அன்பை மையமாக வைத்து நடைபெறும் கிறிஸ்மஸ்தான் 

முதல் கிறிஸ்மஸ்,

முதல்தரமான கிறிஸ்மஸ்.

லூர்து செல்வம்.

Friday, December 25, 2020

மன்னிக்கப் பிறந்தார் இயேசு.

    மன்னிக்கப் பிறந்தார் இயேசு.


அன்னைத் தெரெசா ஒருமுறை ஒரு வயோதிகப் பெண் ரோட்டரம் உள்ள குப்பைத் தொட்டிக்கு அருகே படுத்திருப்பதைப் பார்த்தார்கள்.

காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கிச் சென்று, அவள் அருகே அமர்ந்து,

"என்னம்மா ஆச்சி உனக்கு?"

"என் மகன் என்னைக் கைவிட்டு விட்டான். நாசமா போற பய. படுக்க இடம் இல்லாமல் இங்கே படுத்திருக்கிறேன்."

அன்னை அவள் மேல் கை வைத்துப் பார்த்தார்கள். பயங்கரக் காய்ச்சல்.

அவளை வாரி எடுத்துக் கொண்டு காருக்குச் சென்றார்கள்.

ஒரு பையிலிருந்து ஒரு காய்ச்சல் மாத்திரையை வாய்க்குள் வைத்தார்கள்.

சிறிதளவு வெந்நீர் கொடுத்தார்கள்.

அந்தப் பெண் மாத்திரையை விழுங்கி விட்டு, மகனைத் திட்ட ஆரம்பித்தாள்.

"மகனைத் திட்டாதீங்க அம்மா. பாவம், அவனுக்கு என்ன பிரச்சனையோ?"

"அவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லேம்மா. நாசமாப் போகப் போகிறான்."

"திட்டாதீங்க அம்மா. அவனை மன்னித்து விடுங்கள், அம்மா."

"மன்னிப்பா? அவனுக்கா? நாசமாப் போகட்டும்."


"அப்படிச் சொல்லாதீங்க."

அவளை convent க்குக் கொண்டு சென்று படுக்கையில் படுக்க வைத்த பின்னும் திட்டிக் கொண்டிருந்தான்.

 அன்னையும் அவனை விடவில்லை.

பிறரை மன்னித்தால்தான் நமக்கு மன சமாதானம் கிடைக்கும் என்பதை விளக்கினார்.


 இறுதியாக அந்தப் பெண் தன் மகனை மன்னிப்பதாக கூறினார்.

தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வீக இயல்பு.

கடவுள் நம்மை அவரது சாயலாக படைத்திருக்கிறார்.

மன்னிக்கும் இயல்பிலும் நமக்கு பங்கு தந்திருக்கிறார்.

  மனிதன் தவறு செய்யும் இயல்பு உடையவன்.

 தவறு செய்யும் ஒவ்வொருவரும் தனது தவறு மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்புவது என்பது இயல்பு.


நமது தவறு மன்னிக்கப்பட வேண்டுமென்றால்  

 மற்றவர்களுடைய தவறுகளை மன்னிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

நமக்கு முன்பின் தெரியாத 
ஒருவர் தவறு செய்தால் அவரை மன்னிப்பது எளிது,

நமக்கு மிகவும் வேண்டியவர்கள் நமக்கு எதிராக தவறு செய்யும்போது மன்னிப்பது சிறிது கடினமாகத் தோன்றும்.

பத்து மாதம் சுமந்து,

 பெற்று எடுத்து, 

பாராட்டி சீராட்டி, 

அளவு கடந்த அன்பு வைத்து, தியாகங்கள் பல செய்து வளர்த்த மகன்

 தன்னை வெறுப்பதை தாங்கிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான்.

நம்மைப் பற்றி ஒரு வினாடி சிந்தித்து பார்த்தால் இது கடினமாக தெரியாது.

ஒன்றும் இல்லாமையிலிருந்து நம்மைப் படைத்து,

வாழ்வதற்கு சர்வ வசதிகளும் அடங்கிய ஒரு உலகத்தையும் தந்து,

 எதிர்காலத்தில் நித்தியத்திற்கும் வாழ்வதற்காக பேரின்ப மயமான விண்ணுலகம் ஒன்றையும் தயாராக வைத்துக் கொண்டு,

இவ்வுலகில் நம்மை ஒவ்வொரு வினாடியும் உடனிருந்து பராமரித்து கொண்டுவரும் அன்பு மயமான இறைவனுக்கு நன்றி கெட்ட தனமாக பாவங்கள் செய்கிறோமே 

நம் மீது கடவுளுக்கு எவ்வளவு வெறுப்பு வர வேண்டும்?

ஆனால் வரவில்லையே!

அவருடைய அன்பில் இம்மி அளவு கூட குறையவில்லையே!

மாறாக நம்மை மன்னிப்பதற்காக விடியவிடிய காத்துக் 
கொண்டிருக்கிறாரே!


பாவிகளை நோக்கித்தானே இறைவனின் அருள் வரங்கள் மடை திறந்து வரும் வெள்ளம் போல் வருகின்றன!

கோடிக்கணக்கான பாவங்களையும் நொடிப்பொழுதில் மன்னிக்க தயாராக இருக்கிறார் நம் இறைவன்.

மன்னிப்பின் தேவன் சொல்கிறார்,

 "மன்னியுங்கள், மன்னிக்கப் படுவீர்கள்."

நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் முன் மற்றவர்கள் நமக்கு விரோதமாக செய்த பாவங்களை நாம் மன்னிக்க வேண்டும்.

மன்னிப்பவர்களுக்கு மட்டுமே மன்னிப்பு கேட்க தகுதி இருக்கிறது.

 "மனிதருடைய குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களாகில்,

 உங்கள் வானகத் தந்தை உங்களையும் மன்னிப்பார்.

15 மனிதரை நீங்கள் மன்னியாவிடில், 

உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார்.
( மத். 6:14, 15 ) 


இயேசுவின் இவ்வார்த்தைகள்
பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல.

அதாவது.

இயேசுவைப் பார்த்து,

"ஆண்டவரே, உமது நிபந்தனையை கொஞ்சம் மாற்றிக் கொள்வோமா?" என்று அவரைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது.


இயேசுவின் சொற்படி நடப்பதுதான் நமது கடமை.

We should stand by Jesus' words.

சிலர் சொல்லலாம்,

"சாதாரணமாக insult செய்தவனை மன்னிக்கலாம், எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவனை எப்படி மன்னிக்க முடியும்?"

இவர்கள் இயேசுவின் உதாரணத் திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

யூதாஸை விடவா பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்துவிட முடியும்?

தன்னைக் காட்டிக்கொடுத்த அவனையே இயேசு "நண்பனே" என்று தான் அழைத்தார்.

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது அவனுக்கும் சேர்த்துதானே பிதாவிடம் மன்னிக்கும்படி மன்றாடினார்!

அவருடைய சீடனாக இருக்க வேண்டுமென்றால் அவருடைய முன்மாதிரிகையைப் பின்பற்ற வேண்டாமா!

சில சமயங்களில் நமது மனதை நோகச் செய்தவர்கள், நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் நம்மிடம் மன்னிப்பு கேட்காமல் கூட இருக்கலாம்.

அப்படிப்பட்டவர்களையும் நாம் இயேசுவுக்காக மன்னிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

நாம் மன்னிக்கும் வரை அவர்களது துரோகம் நமது மனதை அழுத்திக் கொண்டே இருக்கும்.

முழுமனதோடு கடவுளுக்காக அவர்களை மன்னித்து விட்டால் நம் மனதில் எந்த அழுத்தமும்
இருக்காது.

மனதில் அமைதியும் சமாதானமும் குடியேறும்.

 அதன் பின் நம்மை நோகச் செய்தவர்களோடு இயல்பாக பழகுவோம்.

அவர்களுக்கு தேவைப்படும்போது உதவியும் செய்வோம்.

 நாம் அவரது குற்றத்தை மறந்து இயல்பாக பழகுவதே அவர்கள் மனதை திருத்தி விடும்.

 அவர்களாகவே வந்து நம்மிடம் மன்னிப்பு கேட்பார்கள்.

இயேசுவை கைது செய்ய வந்தவர்களில் ஒருவன் காதை இராயப்பர் வாளால் வெட்டியபோது,

 இயேசு இராயப்பரைக் கடிந்து கொண்டதுமன்றி,

வெட்டப்பட்ட காதை, வெட்டப்பட்டவன் கேட்காமலேயே ஆண்டவர் ஒட்டவைத்தார்.

இயேசுவின் இந்த இரக்கச் செயல் வெட்டப்பட்டவனை எப்போதாவது சிந்திக்க வைத்திருக்கும்.

அவனை திருத்தியிருக்கும்

இத்தகைய மன்னிக்கும் மனப்பாங்கு நம்மிடம் இருந்தால் நம்மை பொறுத்தவரை நமக்கு உலகில் பகைவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். 

மற்றவர்களுடைய பகைமை உணர்ச்சி நமது மன அமைதியை எள்ளளவும் பாதிக்காது.


மன்னிக்கும் மனப்பக்குவம் உள்ளவர்களை பாவம் நெருங்காது.

ஏனெனில் பாவத்தின் அடிப்படை காரணமே இறையன்பும், பிறரன்பும் இல்லாமைதான். 

இயேசுவின் போதனைப்படி பகைவரையும் மனமுவந்து நேசிப்பவன் எப்படி தன்னை நேசிக்கும் இறைவனுக்கு விரோதமாக பாவம் செய்வான்?

பகைவரையே நேசிப்பவன் நேசிப்பவரை எப்படிப் பகைப்பான்?

 இறைவனுக்கு, சாத்தான் உட்பட, யார் மீதும் பகைமை உணர்ச்சி இருக்க முடியாது.

ஒளியும், இருட்டும் சேர்ந்து இருக்க முடியாது.

நட்பும், பகைமையும் சேர்ந்து இருக்க முடியாது.

நட்புக்கு உயிர் அன்பு.
பகைமைக்கு உயிர் வெறுப்பு.

அன்பு மயமான கடவுளிடம் வெறுப்பு இருக்க முடியாது.

 ஆகவேதான் தன்னை எதிர்த்து பாவம் செய்யும் பாவியையும் அவர் அளவுகடந்து நேசிக்கிறார்.


 அவரால் நேசிக்காமல் இருக்க முடியாது.

அன்பு அவர் இயல்பு.
மன்னிப்பதும் அவர் இயல்பு.

அவரது சாயலைத் தாங்கும் நாமும் 

 அன்பு செய்வோம்.
மன்னிப்போம்.
மன்னிப்புப் பெறுவோம்.
மகிழ்ந்திருப்போம் நித்தியமும்.

லூர்து செல்வம்.

Wednesday, December 23, 2020

.*அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.*

.*அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.*



"கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது". (1. கொரி.2:9)


"கண்ணுக்குப் புலப்படாதது,
காதுக்கு எட்டாதது,
மனித உள்ளத்தில் எழாதது,"

அதாவது மனித கற்பனைக்கு எட்டாதது, எது?

கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள மோட்ச பேரின்பம்.

உலக அனுபவத்தில் 

சுற்றுலா செல்பவர்கள் தாங்கள் செல்லக்கூடிய இடங்களைப் பற்றி 

முன்னாலேயே 
கேள்வி மூலமாகவோ 
வாசிப்பு மூலமாகவோ 
அறிந்து வைத்திருப்பார்கள்.

 அவற்றை நோக்கி பயணிக்கும்போது  

தாங்கள் பார்க்க இருக்கும் இடங்களின் இயற்கை அழகை கற்பனை செய்து கொண்டே போவார்கள்.

 அதைப் பற்றியே பேசிக் கொண்டே போவார்கள். 

நாம் இவ்வுலகில் விண்ணகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் உலகைப் பற்றிய ஈடுபாடுதான் அதிகமாக இருக்கிறதே தவிர,

 விண்ணுலக அழகையும் இன்பத்தையும் பற்றி யாரும் ஆழமாக சிந்திப்பதாக தெரியவில்லை.

விண்ணகம், மோட்சம், நித்தியம் பேரின்பம் என்ற வார்த்தைகளை அப்பப்போ பயன்படுத்துகிறோமோ தவிர அதைப் பற்றி அதிகமான சிந்திப்பதில்லை.

மோட்சத்துக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுவோம்,


ஆனால் அதைப்பற்றி யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

காரணம், நம்மைப் படைத்த இறைவன் எப்படி நமது கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரோ

 அப்படியே அவர் வாழும் விண்ணுலகும் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது. 

 நம்மால் நமது கண்ணுக்கு தென்படுகின்ற, காதுக்கு எட்டுகின்ற, கையால் தொட்டு பார்க்கக் கூடிய இடத்தைத்தான் கற்பனையால் கூட அனுபவிக்க முடியும்.

மோட்சத்தைப் பற்றி விபரிப்பவர்கள் கூட நமது கண்ணால் ரசிக்கக்கூடிய இடத்தை விபரிப்பதுபோல்தான் விபரிப்பார்கள்.

நம் ஆண்டவர்கூட,

"என் தந்தையின் இல்லத்திலே உறைவிடங்கள் பல உள்ளன:

 இல்லாதிருந்தால் உங்களுக்குச் சொல்லி இருப்பேன். 

ஏனெனில், உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்.


3 நான் போய் உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்தபின், திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்:

 அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்."

என்று மோட்சத்தை ஒரு இல்லத்தை விபரிப்பதுபோலவே விபரிக்கிறார்.

நம்மை மோட்சத்தை பற்றி கற்பனை செய்யவிட்டால் 

படங்களில் பார்ப்பது போல

இரண்டு சிம்மாசனங்களில் தந்தையும் மகனும் அமர்ந்திருப்பது போலவும்,

அவர்களுக்கு மேலே பரிசுத்த ஆவி புறா வடிவில் பறந்து கொண்டிருப்பதுபோலவும்,

 அன்னை மரியாள் இயேசுவின் அருகே அமர்ந்திருப்பது போலவும், 

அவர்களைச் சுற்றி சம்மனசுக்கள் பறந்து கொண்டே தெய்வீக சங்கீதம் இசைத்துக் கொண்டிருப்பது போலவும்,

 அவர்கள் எல்போரையும் சுற்றி புனிதர்கள் பல வரிசைகளில் அமர்ந்து பரிசுத்த தம திரித்துவத்தை ஆராதிததுக் கொண்டிருப்பது போலவும்

 நித்திய காலமும் இப்படியே இருப்பது போலவும் கற்பனை செய்வோம்.

இதெல்லாம் கற்பனைதான்.

உருவம் அற்றவர்களை உருவம் அற்ற நிலையில் எப்படி கற்பனை செய்வது?

அதனால் தான் மோட்சம் கற்பனைக்கு எட்டாதது என்கிறோம்.


கத்தோலிக்க திருச்சபையின் போதனைப்படி

 தண்ணீராலோ, இரத்தத்தாலோ ஆசையினாலோ ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் 

மரிக்கும்போது தனித்தீர்வை முடிந்தவுடன்,

தேவ இஸ்டப்பிரசாத நிலையில் இருந்தால்

நேராகவோ, உத்தரிக்கிற ஸ்தலம் வழியாகவோ விண்ணகம் எய்துவோம். 

அங்கு சர்வ வல்ல, அளவு கடவுளை அவர் இருக்கிறபடியே நேருக்கு நேர் பார்ப்போம்.

அவரோடு இணைந்து பேரின்ப நிலையில் நித்தியத்துக்கும் வாழ்வோம்.

சர்வ சதா காலமும் இறைவனை அன்பு செய்வதும், அவரை ஆராதிப்பதும், அவரோடு உரவாடுவதும் மட்டுமே நமது வேலை.

இவ்வுலகில் நாம் எவ்வளவு முயன்றாலும் இறைவனை அவர் உள்ள படியே நம்மால் தியானிக்க இயலாது.


அவர் செய்துவருகின்ற நன்மைகளை மட்டுமே சிந்திக்க முடியும்.

ஆனால் மோட்சத்தில் இறைவனை இறைவனாகவே பார்ப்போம்.

நாம் அவருக்குள்ளும் அவர் நமக்குள்ளும் கலந்துவிடுவதால் அவரது அழகையும் அன்பையும் அத்தனை பண்புகளையும் உள்ள படியே பார்ப்போம்.

இன்று அவரைப் பற்றி புரியாத காரியங்கள் அன்று நமக்கு புரிந்துவிடும்.

இறைவனில் இணைந்து வாழும் நம்மால் பாவம் செய்ய முடியாது.

நமது இறையன்பு முழுமையாக இருக்கும். 

அங்கு நமக்கு விசுவாசம் தேவையில்லை, இங்கு நாம் விசுவசிப்பதை அங்கு நேரிலேயே பார்ப்போம்.

அங்கு நமக்கு நம்பிக்கை தேவையில்லை, எது கிடைக்கும் என்று நம்புகிறோமோ அது நமக்குக் கிடைத்திருக்கும்.

அன்பு மட்டும் முழுமையாக நிலைத்திருக்கும்.

 விண்ணில் நாம் வெற்றிபெற்ற வீரர்கள். இவ்வுலகில் போராடிக்கொண்டிருக்கும் வீரர்களுக்காக இறைவனிடம். பரிந்து பேசுவோம்.

இவ்வுலகில் நமது மீட்பிற்காகப் போராடுகிறோம், மோட்சத்தில் நமது மீட்பு முழுமை பெறும்.

விண்ணிலும் நமக்கு சுதந்திரம் இருக்கும். அது இறைவனின் சுதந்திரத்தோடு கலந்துவிடுவதால் இறைவன் எடுக்கும் முடிவே அதன் முடிவு.

பரி பூரண சுதந்திர உணர்வோடு 
இறைவனோடு இணைந்து வாழ்வோம்.

இவ்வுலகில் அளவுள்ள நம்மால் அளவற்ற இறைவனை அவர் உள்ளபடியே உணரமுடியவில்லை.

'கடவுள் அளவில்லாதவர்' என்று விசுவசிக்கும் நம்மால் அளவற்ற தன்மையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதனால்தான் நமது வாழ்க்கை நமது விசுவாசத்திற்கு ஏற்றதாக அமைவதற்கு கஷ்டப்படுகிறது..

மோட்சத்தில் இறைவன் தன்னை உள்ளபடியே நமக்கு முழுமையாக வெளிப்படுத்தி விடுவதால் நமக்கு விசுவாசம் தேவையில்லை, நமது வாழ்வும் முழுவதும் இறைவனது சித்தப்படியே இருக்கும்.

அனைத்து மோட்ச வாசிகளின் சித்தங்களும் இறைவனின் ஒரே சித்தத்தோடு இணைந்து விடுவதால் 
.
அனைத்து மோட்ச வாசிகளிடையேயும் முழுமையான சமாதானம் நிலவும்.

எல்லோரோடும் ஒரே இறைவனே இரண்டறக் கலந்து விடுவதால், அனைவரிலும் ஒரே இறைவனே செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

அனைத்து மோட்ச வாசிகளும் இறைவனோடு இணைந்த ஒரே முழுமையான அன்பில் தான் வாழ்வர்.

இதுதான் பரிபூரண சமாதானமான வாழ்வு.
.
இவ்வுலகில் சமாதானத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் நாம் விண்ணுலகில் அதை முழுமையாக அனுபவிப்போம்.


மோட்சம் எங்கே இருக்கிறது?

மோட்சம் ஒரு இடம் அல்ல. 

அது வாழ்க்கை நிலை. 

இறைவனோடு இணைந்து வாழும் பேரின்ப நிலை.


"எங்கே இருக்கிறது" என்ற கேள்வி சடப் பொருள்களுக்குதான் பொருந்தும்.


விண்ணுலகப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் நமக்கு பயண இறுதியில் காத்திருக்கும் நான்கு விசயங்கள் எப்போதும் நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.

1, பயண முடிவு.

2 தீர்வை.

3 மோட்சம்.

4 நரகம்.


1, பயண முடிவு:

இவ்வுலகப் பயணம் என்றாவது ஒருநாள் முடிவுக்கு வந்தே ஆக வேண்டும்.


பயணம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் முடிவும் முக்கியம்.

 முடிவு எப்படி இருக்கிறதோ அதன்படிதான் அடுத்து வரும் நித்திய வாழ்வும் இருக்கும்.

நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வின் முடிவுதான் நிரந்தரமான மறுவுலக வாழ்வில் ஆரம்பம்.

நமது முடிவு என்று வரும் என்று நமக்குத் தெரியாது. ஆகவே நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நமது முடிவுக்காக நாம் தயாராக இருக்க வேண்டும்.


நாம் எப்போதும் இறை உறவு நிலையிலேயே இருக்க வேண்டும்.

இறை உறவு நிலையில் உள்ளவர்கள் முடிவைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை.


மகிழ்ச்சியாகவே வாழ்ந்து, மகிழ்ச்சியாகவே மரித்து,
நித்திய மகிழ்ச்சிக்குள் நுழையலாம்.



2 தீர்வை:

தீர்வை நாளை உலகக் கண்ணோக்கில் பார்க்கக்கூடாது.

உலக நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிபதி விசாரிப்பார்.

விசாரணை முடிவில் தீர்ப்பு வழங்குவார்.

நீதிபதியின் தீர்ப்பே இறுதியானது.

ஆனால் ஆன்மீகத்தில் நமது தீர்ப்பை நாம்தான் எழுதுகிறோம். கடவுள் அதை மாற்றமாட்டார்.

ஒரு வகையில் நாம் வாழ்வதே நமது தீர்ப்பை எழுதுவதற்காகத்தான்.

இயேசுவின் வழி நடத்துதலின் படி, 

பாவம் இல்லாமல்

வாழ்ந்தால், விண்ணகம் செல்வோம்.

பாவ வாழ்க்கை வாழ்ந்தால் அதற்கு எதிர்த் திசையில் போகவேண்டியிருக்கும்.

இவ்வுலக வாழ்வு முடியும் நொடியில் தனித்தீர்வை.

"நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்."

"நான் கூறிய வார்த்தையே அவனுக்கு இறுதி நாளில் தீர்ப்பிடும்."

 இயேசு தீர்ப்பிட மாட்டார்.

கூறிய வார்த்தையே தீர்ப்பிடும்,

அதாவது, அவர் கூறிய வார்த்தைகளின்படி நடந்தால் விண்ணகம், இன்றேல் நரகம். 

தனித்தீர்வை ஒரு நொடியை விட குறைந்த நேரத்தில்,(Within a fraction of a second) முடிந்து முடிந்துவிடும்.

நாம் பாவம் இல்லாமல் வாழ்ந்திருந்தால் அடுத்த நொடியில் விண்ணகத்தில் இருப்போம்.

தேவைப் பட்டால் உத்தரிக்கிற ஸ்தலம் வழியே செல்வோம்.

நமது காலம் முடிந்தவுடன், நித்தியத்திற்குள் நுழைந்து விடுவோம்.

பொதுத் தீர்வை உலக முடிவில்.


3 மோட்சம்: நல்ல வாழ்விற்கான சம்பாவனை நித்திய மோட்சம்.

இறைவனோடு இணைந்த பேரின்ப வாழ்வு.

இறைக் குடும்பத்தில் நமது சகோதர சகோதரிகளான புனிதர்கள், (விண்ணகத்தில் வாழும் அனைவருமே புனிதர்கள்தான்.) மற்றும் இறைத்தூதர்களோடு நித்தியத்திற்கும் பேரின்பம் பொங்க வாழ்வோம்.

4. நரகம் : இறைவனை விரும்பாதவர்கள் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பேரிடர் நிலை. 

இறைவன் யாரையும் இந்நிலைக்கு அனுப்புவதில்லை.

 யாருடைய சுதந்திரத்திலும் இறைவன் இறைவன் குறுக்கிடுவதில்லை. 

அவரவர் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு அவரவர்தான் பொறுப்பு.


இயேசு மனிதனாகப் பிறந்தது நம்மை பாவ நிலையிலிருந்து மீட்டு விண்ணக வாழ்விற்குத் அழைத்துச் செல்வதற்காகத்தான்.

இயேசுவின் வழி நடப்போம்.
இயேசுவோடு இணைவோம் நித்தியத்துக்கும்.

லூர்து செல்வம்.

Tuesday, December 22, 2020

எதிர்க்க எதிர்க்க தொடர்வது.

எதிர்க்க எதிர்க்க தொடர்வது.


உடலில் ஏதாவது வலி ஏற்படுகிறது என்றாலே

 ஏதோ ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என்பதுதான் பொருள்.

மிதிவண்டி ஓடிக் கொண்டிருக்கும்போது,
 "கிரீச் கிரீச்" என்ற சப்தம் கேட்டால், சக்கர அச்சில் எண்ணெய் போட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் வலி ஏற்பட்டால் உடல் ஏதோ ஒரு மாற்றத்தை விரும்புகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நமது மூளைப் பகுதியில் வலி ஏற்பட்டால் நமது நரம்பு மண்டலத்தில் சரி செய்யப்பட வேண்டிய ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 
 
மூளை களைப்பு அடையும்போது தலைவலி ஏற்படும்.

இது நாம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்கான அறிகுறி.

தலைவலி மாத்திரை போட வேண்டும் என்பதற்கான அறிகுறி அல்ல.

சிலர் தலைவலி மாத்திரையை போட்டுக் கொண்டு வேலையை தொடர்வர். இது மூளைக்கு கேடு. 

ஒரு முறை உடல் வலியை நீக்க மருத்துவரிடம் சென்றபோது,
'
' நீங்கள் உடல் வலி நீங்க எவ்வளவு மருத்துவம் பார்த்தாலும், அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

 வலிக்கான காரணத்தை அறிந்து அதை.நீக்கினால் மட்டுமே வலி திரும்பாது.

வலி மட்டுமல்ல நாம் விரும்பாத எதுவும் நம் உடலில் ஏற்பட்டாலும் நாம் பதற்றம் அடையாமல,

அதன் காரணத்தை அறிந்து குணப்படுத்த முயல வேண்டும்.

வலியை உணரும் போது நோய் குணமாக தயாராகிறோம் என்று சொல்வார்கள்.

வலியே இல்லாத நோய் வந்தால் அது நம்மிடம் இருப்பது தெரியாமலேயே முற்றி வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆகவே வலி நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டுமே தவிர கவலையை அல்ல.

இது ஆன்மீகத்திற்கும் பொருந்தும்.

உள்ளத்தில் உள்ள கண்ணுக்குத் தெரியாத காது கேட்காத உணர்ச்சிகளை வெளிப்படுத்த சொற்கள் பயன்படுவது போல,

நமது ஆன்மா தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த நமது உடலை பயன்படுத்தி கொள்கிறது.

உடலில் ஏற்படும் வலி நமது உடல் தேவைகளை மட்டும் அல்ல ஆன்மீக தேவைகளையும் வெளிக்காட்டும்.

ஒரு அறிகுறி (Symptom) பல நோய்களைக் குறிப்பதாக இருக்கலாம்.

நோயாளியினுடைய மற்ற தன்மைகளை வைத்து காரணத்தை முடிவு செய்ய வேண்டும்.

இது ஆன்மீகத்துக்கும் பொருந்தும்.

துன்பங்கள் எல்லா மனிதர்களுக்கும், வெவ்வேறு உருவத்தில்.

ஆன்மீக வாழ்வில் முன்னேறியவனுக்குத் துன்பம் வந்தால்,

''ஆண்டவர் தன்னை நேசிப்பவர்களுக்கு தான் அதிக துன்பங்களை அனுப்புவார்.''

என்பதை உணர்ந்தவனானாகையால் துன்பங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவான்.

எப்படி இயேசு தான் பட்ட பாடுகளை உலகின் பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுத்தாரோ

 அதேபோல இவனும் தனக்கு வரும் துன்பங்களை உலகம் மனம் திரும்புவதற்காக ஒப்புக் கொடுப்பான். .

ஆன்மீக வாழ்வில் முன்னேற முயல்பவனுக்கு துன்பம் வந்தால்,

  தனது பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தேவையான அருள் வரங்களை கேட்டும் துன்பத்தை இறைவனுக்கு ஒப்புக்கொடுப்பான்.


மற்றவர்களுடைய ஆன்மீக நலனுக்காகவும் தன்னுடைய துன்பங்களை ஒப்புக்கொடுப்பான்.

 இவ்வாறு செய்யும் போது அவனது ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைவான்.

பாவங்களோடு போராடிக் கொண்டிருப்பவனுக்குத் துன்பங்கள் வந்தால்

பாவ சோதனைகளை எதிர்த்து . வெற்றிபெற வரம் வேண்டி

 இறைவனுக்கு தன் துன்பங்களை ஒப்புக் கொடுப்பான்.

ஆனால் பாவ நிலையை விட்டு வெளியேறாமல் 

அதாவது 

ஆன்மீக வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்காமல் இருப்பவர்களுக்கு துன்பம் வந்தால் 

அவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள்.

துன்பங்களை அனுப்பியதற்காக இறைவனை குறை கூறிக் கொண்டிருப்பார்கள்.

உலகில் துன்பங்கள் இருப்பதால் இறைவனே இல்லை என்றுகூட சிலர் கூறிக் கொண்டிருப்பார்கள்.

 உண்மையிலேயே இறைவன் அவர்களுக்கு கொடுத்திருக்கும் புத்தியை பயன்படுத்துபவர்களாக இருந்தால் 

துன்ப நேரத்தில் இறைவனை நெருங்கி வருவார்கள்.

தங்களுக்கு வந்திருக்கும் துன்பங்கள் தாங்கள் மனம் திரும்ப இறைவனால் பயன்படுத்தப்படும் ஆயுதம் என்பதை உணர்வார்கள்.

மனம் திரும்பி பாவ மன்னிப்பு பெற்று ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள்.


புத்தியைப் பயன்படுத்தாதவர்களாக இருந்தால் முணுமுணுப்பிலேயே வாழ்நாளை கழித்து

வாழ்வின் பயனை அடையாமல் போவார்கள்.

மனித வாழ்வில் துன்பங்கள் தவிர்க்க முடியாதவை.

விஞ்ஞான அறிவின் மூலம் துன்பங்களை தவிர்த்து விடலாம் என்று எண்ணி செயல்பட்டவர்களால் உலகில் துன்பங்கள் அதிகரித்திருக்கின்றனவே தவிர குறையவில்லை.

அவர்களது முயற்சியினால் துன்பங்கள், ஒழியவில்லை, உருமாறியிருக்கின்றன.

நம்மால் தவிர்க்க முடியாத துன்பங்களை நமது ஆன்மீக வளர்ச்சிக்கு ஏற்றவையாக மாற்றி பயன்பெற வேண்டும்.

எதிர்க்க எதிர்க்க குறையாதது வலி.

அதன் உடலியல் காரணத்தை காரணத்தை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து செயல்படுபவர்கள்

 வலியின் உருவத்தை மாற்றலாம், வலியை மாற்ற முடியாது.

அதன் ஆன்மீக காரணத்தை ஆன்மீக ரீதியாக ஆராய்ந்தால்

அது ஆன்மீக வளர்ச்சிக்குப் பயன்படும்.

இறைவனின் ஆசீர்வாதமாக பணத்தை பெற்றவர்கள் அதே பணத்தை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்து ஆன்மீக நலனை பெறுவதைப் போல,


அவர் நமக்கு ஆசீர்வாதமாகத் தந்திருக்கும் வலியை  

அவருக்கே காணிக்கையாக ஒப்புக் கொடுத்தால்

 அதற்கு சன்மானமாக அபரிமிதமான அருள் வரங்களை தந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

அன்னை மரியாள் தனது மகனின் பாடுகளின் காரணமாக பெற்ற வியாகுலங்களை எல்லாம் 

நமது ஆன்மீக ஈடேற்றத்திற்காக அவருக்கே ஒப்புக்கொடுத்தாள்.

அதன் ஆன்மீக பலனை இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நமக்கென்று சொந்தமாக எதுவும் கிடையாது.

நமது ஆன்மா அவர் படைத்தது.

நமது உடல் உலகில் நாம் பயன்படுத்துவதற்காக நமக்கு அவர் தந்த பரிசு.

 நமது பாவங்கள் மட்டும்தான் நாம் செய்தவை.

அவற்றுக்கு பரிகாரமாக தான் இறைவனுக்கு காணிக்கை ஒப்பு கொடுக்க வேண்டி இருக்கிறது.

ஒப்புக் கொடுப்பதற்கு நம்மையும் நமக்கு வரும் துன்பங்களையும் தவிர வேறு ஒன்றும் நம்மிடம் இல்லை.


ஆகவே நாம் செய்தவற்றிற்கு பரிகாரமாக நமக்கு கிடைத்தவற்றை ஒப்புக் கொடுப்போம்.

அதைத்தான் அவரும் விரும்புகிறார்.

   "தனது சிலுவையை சுமந்து கொண்டு வாழ்பவன் தான் எனக்கு சீடனாக இருக்க முடியும்" என்று இயேசுவே சொல்லி இருக்கிறார்.        

நாம் சுமப்பதற்கு வேண்டிய சிலுவையை அவரே தருகிறார்.

துன்பமும் அதை இறைவனுக்காக ஒப்புக்கொடுக்கும் நமது மனதும் சேர்ந்துதான் சிலுவை கிடைக்கிறது.     

இறைவனுக்காக ஒப்புக்கொடுக்கும் மனது துன்பம் மட்டுமே மிஞ்சும்.

 மின்சார இணைப்பு இல்லாவிட்டால் நமது வீட்டில் இருக்கும் T.V பயனற்றது.

இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கும் மனது நமக்கு இல்லாவிட்டால் நமது துன்பத்தால் யாருக்கும் ஆன்மீகப் பயன் ஒன்றுமில்லை. 

எவ்வளவு சிறிய துன்பமாக இருந்தாலும் அதை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கும் மனது நமக்கு இருந்தால்

 நாம் உண்மையிலேயே பாக்கியவான்கள். '

நாம் ஒப்புக் கொடுப்பதோ உடல் சம்பந்தமான வலி 

ஆனால் அது அதிசயமாக விதமாக மாறுவதோ ஆன்மீக சக்தியாக.

நிரந்தரமற்ற தற்காலிகமாக வலி நித்திய பேரின்பம் ஆக மாறுவது எவ்வளவு பெரிய பாக்கியம்!

ஒவ்வொரு முறை நாம் ஒப்புக் கொடுக்கும்போதும் தண்ணீர் திராட்சை ரசமாக மாறும் புதுமை நம்மில் நடக்கிறது,

கானாவூர் கல்யாணத்தில் இயேசு இருந்து அந்த புதுமையை செய்தது போல நமக்குள்ளும் இருந்து புதுமைகளை செய்துகொண்டே இருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் நாம் நமது துன்பத்தை இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்கும் போதும்

   அவரோடு அவரது சிலுவையை சுமந்துகொண்டு கல்வாரி மலைக்குப் பயணிக்கும் மாக்கியம் பெறுகிறோம்.

அவரோடு சிலுவையில் மரித்து,

 அவரைப்போலவே உயிர்த்து,

 அவருடனே விண்ணக வாழ்விற்குள் நுழைவோம்.

மாறாக துன்பத்தை முடிவுக்கு கொண்டுவர நாமாகவே முயன்று கொண்டேயிருந்தால்
நாம் மரணிக்கும் மட்டும் அது முடிவுக்கு வரப்போவதில்லை.

முடிவுக்கு வர மறுக்கும் துன்பத்தை முடிவில்லா இன்பத்திற்கு காரணியாக மாற்ற இறைவனால் மட்டுமே முடியும்
.
துன்பம் வரும்போது மகிழ்வோம், அதன் வழியே முடிவில்லா பேரின்பத்திற்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.



Sunday, December 20, 2020

"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், கண்டடைவீர்கள்: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்."(மத்.7:7)

http://lrdselvam.blogspot.com/2020/12/77.html.




"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், கண்டடைவீர்கள்: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்."
(மத்.7:7)


நாம் ஒன்றுமில்லாதிருந்தோம்.
கேட்பதற்கே நாம் இல்லை.

நம்மைக் கேளாமலேயே நம்மைப் படைத்தார்.

நாம் கேளாமலேயே அவரது சாயலை நமக்குத் தந்தார்.

அவர் சொல்லைக் கேளாமல் 
நாம் பாவம் செய்தோம்.

நாம் கேளாமலேயே பாவத்திலிருந்து மீட்க மனிதனாகப் பிறந்தார்.

நாம் கேளாமலேயே நமக்காகப் பாடுபட்டார்.

நாம் கேளாமலேயே நமக்காக மரித்தார்.

நாம் கேளாமலேயே நமக்காக விண்ணகத்தை தயார் நிலையில் வைத்திருக்கிறார்.


இவ்வளவும் செய்து விட்டு நம்மைப் பார்த்து,

"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்." என்கிறார்.

ஏன்?

உறவினர்களை ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இணைத்து வைப்பது அவர்களுக்கு இடையே இருக்கும் அன்பு என்னும் உறவு தான்.

இது நண்பர்கள், அன்பர்கள், பழகியவர்கள் ஆகியோருக்கும் 
பொருந்தும்.

அன்பினால் உந்தப்பட்டு அன்புக்கு உரியவர்களிடம் உரிமையோடு கேட்டுப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சி 

 கேளாமல் பெறுவதில் உள்ள மகிழ்ச்சியை விட அதிகமானது.

 இது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

குழந்தையை கேட்டு அதன் தாய் அதை பெறவில்லை.

பெறுவதில் மகிழ்ச்சி இருந்தது, பெற்றாள்.

மகனைப் பெறும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட,

 அம்மகன் தனக்கு வேண்டியதை உரிமையோடு கேட்டுப் பெறும்போது

கொடுக்கும் தாய்க்கும்
 பெறும் மகனுக்கும் ஏற்படும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.

குழந்தை தாயிடம் மட்டும்தான் உரிமையோடு பால் கேட்கும்.

மகன் தந்தையிடம் மட்டும்தான் உரிமையோடு செலவுக்குப் பணம் கேட்பான்.

வெளியூரில் வாழ்ந்து வரும் 70 வயதைத் தாண்டிய மகன்  

90 வயதைத் தாண்டிய தன் தாயிடம் வந்து,

"அம்மா, உங்கள் மடியில் கொஞ்ச நேரம் தலை வைத்து படுக்கலாமா,

அப்படியே எனக்கு ஒரு முத்தம் கொடுக்கிறீர்களா,

உங்கள் கையால் எனக்கு உணவு ஊட்டி விடுகிறீர்களா 

என்றெல்லாம் கேட்கும் போது தாய்க்கு ஏற்படும் மகிழ்ச்சியை அளவிட முடியாது.

கேட்டுப் பெறும்போது மகனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி தாயின் மகிழ்ச்சிக்கு இணையானது. 

ஒரு சிறு குழந்தைக்கு நாமாக முத்தம் கொடுப்பதைவிட அது நம்மிடம் ஆசையாக கேட்டுப் பெறுவது நமக்கு மிக மிக ஆனந்தமான அனுபவம்.

இறைவனிடம் உரிமையோடு கேட்டு பெறுதல் நமக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவின் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.

நம்மை படைத்தவரிடம் நாம் எதுவும் கேட்காதிருந்தால் நமக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி ஆகிவிடும்

 அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தால்தான் அவரின்றி நம்மால் இயங்க முடியாது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்வதாகும்,

அவரின்றி நம்மால் இயங்க முடியாது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்வதே அவரிடமிருந்து அபரிமிதமான அருள் வரங்களை கொண்டு வரும்.

எதைக் கேட்க வேண்டும்?

ஆசிரியர் பாடம் நடத்தி முடித்துவிட்டு மாணவர்களை நோக்கி,

"நடத்தப்பட்ட பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்."
என்றார்.

ஒரு மாணவன் கையை உயர்த்தினான்.

"நின்று கேள்."

"சார், நீங்கள் பாடம் ஆரம்பித்த நேரத்திலிருந்து இந்த வலது பக்க சன்னலுக்கு வெளியே இருந்து, 'கொடக் கொடக்' என்று ஒரு சப்தம் வந்து கொண்டே இருக்கிறது. 

அது என்ன சப்தம்?"

"அப்போ என் பாடத்தை நீ கவனிக்கவேயில்லை!"

"கவனிக்க முடியவில்லை."


"இங்கே வா. கையை நீட்டு.''

"சாஆஆர்."

'சார்தான். நீட்டு....."

"சார், வலிக்கு...."

"இப்போ அந்த சப்தம் கேட்கா?"

"சார், கேட்கல."

"இனிமே கேளாது. இடத்திலே போய் உட்கார்ந்து நான் சொல்வதைக் கவனி. போ."

நாமும் இப்படித்தான் கடவுள் கேட்கச் சொன்னால் சம்பந்தம் இல்லாத விஷயங்களை கேட்டு நமது நேரத்தை வீணடித்து கொண்டிருப்போம்.

ஆசிரியரிடம் பாடத்தை பற்றி பேசவேண்டும்.

 டாக்டரிடம் நமக்குள்ள நோய் பற்றி பேசவேண்டும்.

 கடைக்காரரிடம் நாம் வாங்க வேண்டிய பொருள்கள் பற்றி பேச வேண்டும். 

பஸ் கண்டக்டரிடம் ticket பற்றி பேச வேண்டும்.

இறைவனிடம் நமது ஆன்மீக வளர்ச்சி பற்றி பேச வேண்டும்.

இறைவனிடம் நாம் வாழும் உலக சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி பேசக் கூடாதா?

உதாரணத்திற்கு, நமது உணவு, உடை, இருப்பிடம், வசதிகள், வேண்டியவை, வேண்டாதவை, நோய் நொடிகள், சுகம் அடைதல்

 இது போன்ற ஆன்மீக சம்பந்தமில்லாத விஷயங்களை பற்றி இறைவனிடம் பேசக்கூடாதா?"


"இறைவன் எல்லாவற்றிற்கும் ஆதி காரணர். இருப்பவை எல்லாம் அவரால் தான் இருக்கின்றன. 

ஆகவே இறைவனிடம் எதைப் பற்றி வேண்டுமென்றாலும் பேசலாம். 

ஆனால் ஒரு அடிப்படை உண்மையை மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆன்மீக சம்பந்தமில்லாத விஷயம் என்று எதுவுமே கிடையாது.

ஆன்மா வாழ்வதற்காகத்தான் உடல் படைக்கப்பட்டது,

 உடல் வாழ்வதற்காகத்தான் உலகம் படைக்கப்பட்டது.

 உலகம் இயங்குவதற்காகத்தான் பிரபஞ்சம் படைக்கப்பட்டது.

எல்லாமே இறைவனால்தான் படைக்கப்பட்டன.

இருப்பவை எல்லாம் இறைவனால் தான் இருக்கின்றன.

இறைவன் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை.

ஆகவே எல்லா பொருட்களும் இறைவன் சம்பந்தப்பட்டவையே.

எல்லா பொருள்களும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவையே.

நமது உடல் ஆன்மாவிற்காகப் படைக்கப்பட்டிருப்பதால், உடலும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதே.

ஆகவே நாம் எதைப்பற்றி வேண்டினாலும் அது நமது ஆன்மீகம் சம்பந்தப் பட்டதாகவே இருக்கும். .

ஆகவே இறைவனிடம் எதற்காக வேண்டினாலும் நமது ஆன்மீக வாழ்விற்கு யாதொரு இடையூறும் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக வருமானம் வரும் என்ற அடிப்படையில் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.

அந்த வேலை நமக்குக் கிடைக்குமானால் வருமானம் நிறைய வரலாம்.

 ஆனால் அது நமது ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாக இருக்குமா இருக்காதா என்று கடவுளுக்கு மட்டும் தெரியும்.

அது லஞ்சம் புரளும் வேலையாய் இருந்தால் நிச்சயமாக வருமானம் கோடிக்கணக்கில் வரலாம்.

ஆனால் லஞ்சக் கடலில் மாட்டி ஆன்மா அழிந்து போவது உறுதி.

தெரிந்தும் விஷத்தை யாரும் குடிப்பார்களா? 

லஞ்சம் வாங்குவதற்கு இறைவனது உதவியை கேட்பது தவறு.

மற்றொரு வேலை எப்படி பட்டது என்று நமக்கு தெரியாது.

அந்த வேலைக்கு விண்ணப்பிக்கும்போது இறைவனிடம்,

"இறைவா நான் விண்ணப்பத்திருக்கும் வேலை எனது ஆன்மீக நலனுக்கு இடையூறு இல்லாத தாக இருந்தால் அதை எனக்கு பெற்றுத்தாரும்."

 என்று ஜெபித்தால் வேலை கிடைத்தாலும் நன்றி கூறுவோம்

 கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவோம்.

வருமானத்தை தரும் வேலை உலகம் சம்பந்தப்பட்டதுதான்.

 ஆனால் அதில் ஆன்மீகமும் சம்பந்தப்படுகிறது.

 நாம் முதலிடம் கொடுக்க வேண்டியது ஆன்மீகத்துக்கு மட்டும்தான்.

ஆக எதற்காக வேண்டுமானாலும் வேண்டலாம்.

படிப்பது மனதில் தங்குவதற்காக வேண்டலாம்,

தேர்வில் வெற்றி பெறுவதற்காக
வேண்டலாம்,

  நல்ல வேலை கிடைப்பதற்காக
வேண்டலாம்,

 திருமணம் சிறப்பாக நடைபெறுவதற்காக வேண்டலாம்,

குழந்தைப் பேறுக்காக வேண்டலாம்.

எதற்காக வேண்டினாலும்,

" இறைவா, உமது சித்தம் இருந்தால் தருக." என்ற வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் கேட்டது கிடைக்காவிட்டால் அது இறைவனது சித்தம் அல்ல என்பதைப். புரிந்து கொள்ள வேண்டும்.
 
எதை வேண்டுமானாலும் கேட்கலாம்.

 ஆனால், எதை கட்டாயம் கேட்க வேண்டும்? 

"தேடுங்கள், கண்டடைவீர்கள்:"

என்று சொன்ன ஆண்டவர் எதைத் தேட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

''கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:"
(மத், 6: 33)

இவ்வுலகைச் சார்ந்தவையும் சேர்த்துக் கொடுக்கப்படும்.

இட்லிக்கு order கொடுத்தவர்கள் சட்னி, சாம்பாருக்கு order கொடுக்கத் தேவையில்லை. அவையாகவே கொண்டு வரப்படும்.

இறையரசை நாம் தேடும் போது இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு உதவக்கூடிய மற்ற அனைத்தும் நாம் தேடாமலேயே கிடைக்கும்.


இறையரசை பெற நாம் தேட வேண்டியது யாரை?

இறையரசை பெற நாம் தேட வேண்டியது இறைவனை மட்டும்தான்.

இறைவன் தனது அருள் வரங்களை தேவத் திரவிய அனுமானங்கள் மூலம் நமக்குத் தருகிறார்.

தேவத் திரவிய அனுமானங்களை 
தங்குதடையின்றி நாம் பெற வேண்டிய வசதிகளை தரும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.

ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி, திருவிருந்து ஆகியவற்றில் தகுதியுடன் கலந்து கொள்ள வேண்டிய அருள் வரங்களை நமக்குத் தர வேண்டும் என்று கேட்க வேண்டும்.

இறைவனை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிக்கவும்,

 நமது அயலானை நம்மைப்போல நேசிக்கவும்,

இறைவனுக்காக பிறர் பணி செய்யவும் 

நமக்கு உதவ வேண்டும் என்று இறைவனை வேண்ட வேண்டும்.


இவையனைத்தும் லெளகீக கலப்படம் இல்லாத ஆன்மீகம்.

கலப்படமில்லாத ஆன்மீக வாழ்வு வாழ்வதில் நமக்கு உதவிகரமாய் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்ட வேண்டும்.

"கேளுங்கள் கொடுக்கப்படும் என்று வாக்களித்த இயேசுவே,

 உம்மை மட்டுமே கேட்கிறோம். எம்மில் எழுந்தருளி வாரும்."

லூர்து செல்வம்.

Saturday, December 19, 2020

தீமையிலிருந்து எங்களை இரட்சித் தருளும்.

தீமையிலிருந்து எங்களை இரட்சித் தருளும்.

"கடவுள் நல்லவராய் இருக்கும்போது அவரால் படைக்கப்பட்ட உலகத்தில் ஏண்ணே இவ்வளவு தீமைகள் இருக்கு?"


"தீமைகள்னு எதைச் சொல்றீங்க தம்பி?"

"இயற்கையைக் கடவுள்தான் படைத்தார். இயற்கையை நம்பிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்."

"திரும்ப  சொல்லுங்க."

"கடவுளையே நம்பிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதை நான் மறுக்கவில்லை.

ஆனாலும் இவ்வுலகத்தில் வாழ்வதற்காக ஆதாரமாக கடவுள்தானே நமக்கு இயற்கையை தந்திருக்கிறார்.

இயற்கை தீமைகள் நிறைந்ததாக இருப்பதால் தானே நமது வாழ்வில் நிறைய சங்கடங்கள் ஏற்படுகின்றன!

கடவுள் நல்லவராய் இருக்கும்போது ஏன் அவரால் படைக்கப்பட்ட இயற்கையில் இத்தனை தீமைகள்?"


"தீமைகள்னு எதைச் சொல்றீங்க என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் உங்கள் கேள்வியையே பழையபடி ஆரம்பிக்கின்றீர்கள்!"


"இயற்கையில் ஏற்படக்கூடிய நிலநடுக்கங்கள், புயல்கள், அளவுக்கு மிஞ்சிய மழை, மழையே பெய்யாமை, வெள்ளம், தண்ணீரே இல்லாமை, சுனாமி கடலரிப்பு போன்றவை."

"இவையெல்லாம் தீமைகள் என்று உங்களுக்கு சொன்னது யார்?" 


"இவை எல்லாம் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றனவே,

 தீங்கு விளைவிப்பது தீமைதானே!"


"தீங்கு விளைவிப்பதுதான் தீமை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், யாருக்குத் தீங்கு விளைவிப்பது?"


"மனிதனுக்கு."

"மனிதன்னா யாரு?"

"இதென்ன கேள்வி. நாம்தான் மனிதர்கள்.

சுனாமி வந்தபோது எத்தனை ஆயிரம் பேர் இறந்து போனார்கள்!

வெள்ளம் வந்த போது எத்தனை பேர் தங்கள் உடைமைகளை இழந்தார்கள்!"


"ஹலோ! நாம் இப்போது ஆன்மீகம் பேசுகிறோம். 
லௌகீகம் அல்ல.

நீங்கள் சொன்னவை எல்லாம் இயற்கை நிகழ்வுகள்.

இயற்கையின் விதிகள்படி நடப்பவை.

இமயமலை மீது கடல்வாழ் பிராணிகளின் புதைபடிவங்கள் (fossils) நிறைய உள்ளன.

அதனால்தான் அஸ்ஸாமில் பெட்ரோலியம் கிடைக்கிறது

இதிலிருந்து என்ன தெரிகிறது?

ஒரு காலத்தில் இமயமலை கடலுக்கு அடியில் இருக்கிறது.


ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்த இமயமலையில்தான் இன்று உலகிலேயே உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் இருக்கிறது.

கடலுக்குள் அடியில் இருந்த பகுதி மேலே வருவது இயற்கை நிகழ்வு. தீமை அல்ல.

நீங்கள் குறிப்பிட்ட நிலநடுக்கங்கள், புயல்கள், அளவுக்கு மிஞ்சிய மழை, மழையே பெய்யாமை, வெள்ளம், தண்ணீரே இல்லாமை, சுனாமி கடலரிப்பு போன்றவை இயற்கை நிகழ்வுகள். இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டவை"


"அப்போ தீமை என்பது எது?"

"மனிதன் அழியாத ஆவிப் பொருளாகிய ஆன்மாவும் , அழியக்கூடிய சடப்பொருளாகிய உடலும் உடையவன்.

உடல் சடப்பொருள், இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டது.

இன்று பூமியின் மேல் இருக்கும் உடல் பூமிக்குள் போவது இயற்கை நிகழ்வு. தீமை அல்ல.

ஆனால் விண்ணிற்கு என்று படைக்கப்பட்ட ஆன்மாவுக்கு  பாவத்தினால் விளைவதுதான் தீமை.

இயற்கை நிகழ்வுகள் இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டவை,

 ஆனால் பாவமாகிய தீமை இறைவன் தந்த கட்டளைகளுக்கு எதிர் மாறானது,

 ஆன்மீகத்தில் இறைவன் விதித்திருந்த விதிகளுக்கு எதிராக செல்வதுதான் பாவம்.

இயற்கை பொருட்கள் இயற்கை விதிகளை மீறமுடியாது.

ஆனால் மனிதனுக்கு சிந்தனை சொல் செயல் சுதந்திரம் இருப்பதால் அவனால் இறைவனது கட்டளைகளை சுதந்திரமாக அனுசரிக்கவோ, மீறவோ முடிகிறது.

மீறுவது தான் பாவம். அதுவேதான் தீமை. 


இந்த தீமையிலிருந்து நம்மை இரட்சிக்கும்படி தான் நாம் தினமும் பரலோகத் தந்தையிடம் வேண்டுகிறோம்."

".பாவத்தின் விளைவு தானே மரணம்."

"உலகியல் ரீதியாக நாம் பேசும்போது உடலிலிருந்து அவரது ஆன்மா பிரிவதை மரணம் என்கிறோம்.

ஆன்மீகத்தில் நாம் சாவான பாவம் செய்யும்போது நமது ஆன்மா மரணம் அடைகிறது.

நமது  ஆன்மாவின் உயிர் இறைவனின் அருள்.

பாவம் செய்யும்போது நமது ஆன்மா இறை அருளை இழப்பதால் இறைவனோடு உள்ள உறவையும் இழக்கிறது.

இந்த இறை உறவு இழப்பை தான் ஆன்மாவின் மரணம் என்கிறோம்.

ஆனாலும் நாம் இறைவனிடமிருந்து பாவத்திற்கு மன்னிப்பு பெறும்போது நமது ஆன்மா இறை அருளை பெற்று உயிர் பெறுகிறது.

இங்குதான் ஒப்புரவு அருட்சாதனம் முக்கியத்துவம் பெறுகிறது.

உலகியல் ரீதியாக மரணமடை
வது தீமை அல்ல.


உலகியல் ரீதியாக மரணமடையும்போது 

நமது ஆன்மா ஆன்மீக ரீதியாக இறை அருளோடு, அதாவது, உயிரோடு இருக்க வேண்டும்.

 அப்படி இருக்க தவறுவதுதான் தீமை."


"அப்படியானால் சுனாமியின் போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தவர்கள் எந்தவகை?"


"சுனாமி மட்டுமல்ல எந்த இயற்கை நிகழ்வினாலும் மக்கள் உயிர் இழப்பது 

உடலைப் பொறுத்த மட்டில் இயற்கை நிகழ்வு,

ஆன்மாவைப் பொறுத்தமட்டில் ஆன்மீக நிகழ்வு.

ஆன்மா 'இறை அருளோடு' உயிரோடிருந்தால் இறைவனடி சேரும், இல்லாவிட்டால் இறைவனை  இழக்கும்.


"இறைவனடி சேர்வது மோட்சம்.

இறைவனை  இழப்பது நரகம்."


"உடலுக்கு வரும் நோய் நொடிகள் தீமை இல்லையா?"

"நமது விசுவாச அடிப்படையில் தீமை என்ற வார்த்தையை ஆன்மாவிற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

ஆன்மாவை தீமை அணுகாதபடி,
 அதாவது, 

பாவம் அணுகாதபடி,

 பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.

நோய்நொடிகள் புனிதர்களுக்கும் வரும் பாவிகளுக்கும் வரும்.

புனிதர்கள் தங்களுக்கு வரும் நோய் நொடிகளை இறைவன் அனுப்பும் சிலுவையாக ஏற்று பொறுமையுடன் சுமப்பார்கள்.

அவர்களைப் பொறுத்தமட்டில் நோய்நொடிகள் மட்டுமல்ல, என்ன கஷ்டங்கள் வந்தாலும் அது இறைவன் தரும் ஆசீர்வாதங்கள்.

சாதாரண மக்கள்தான் துன்பம் வரும்போது முணுமுணுப்பார்கள்."

"துன்பமே இல்லாத உலகை இறைவனால் படைத்திருக்க முடியுமா? முடியாதா?"

"முடியும். பாவமே செய்ய 
முடியாதபடிகூட நம்மைப் படைத்திருக்கலாம்.     

அப்படிப் படைத்திருந்தால் அவர் மனிதனாகப் பிறந்து 
பாடுபட்டிருக்க வேண்டிய அவசியம் கூட  இருந்திருக்காது."

"பிறகு  ஏன் அப்படிப் படைக்கவில்லை?"

"இது உங்களது பெற்றோரைப் பார்த்து,


" என்னை பெறாமல் இருந்திருக்க முடியுமே,

ஏன் பெற்றீர்கள்?"

 என்று கேட்பது போல் இருக்கிறது.

உங்களைப் பார்த்து யாராவது,
"விளையாடப் போகாமல் இருக்கலாமே, ஏன் விளையாடப் போகிறீர்கள்?"

என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?"

"அது என் இஸ்டம்" என்று சொல்வேன்.

"கடவுளும் அவரது விருப்பப்படிதான் எல்லாவற்றையும் படைத்திருக்கிறார்.

இயற்கைப் பொருட்கள் அவர் கொடுத்த விதிகளை மீற முடியாதபடி படைத்திருக்கிறார்.

மனிதர்களுக்கு மட்டும் விதிகளைக் கொடுத்ததோடு  அவற்றின்படி நடக்க முழு சுதந்தரத்தையும் கொடுத்திருக்கிறார்.

சுதந்தரமாக விதிகளை மீறாமல் நடப்பவர்களுக்கு நித்திய சம்பாவனையும் கொடுக்கிறார்.

மனிதரால் மட்டுமே விதிகளை மீறமுடியும்.

விதிகளை மீறுவது மட்டுமே தீமை.

இயற்கையால் விதிகளை மீற முடியாது. ஆகவே இயற்கை நிகழ்வுகள் எதுவும் தீமையானவை அல்ல."

"ஆனால் இயற்கை நிகழ்வுகள் மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றனவே."

"இயற்கைக்கு சிந்திக்கத் தெரியாது. மனிதனுக்கு மட்டுமே சிந்திக்க தெரியும்.

இயற்கையை அனுசரித்து வாழும் மனிதனுக்கு இயற்கையால் எந்த தொந்தரவும் ஏற்படாது.

உதாரணத்திற்கு தண்ணீர்  மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் என்பது இயற்கை விதி.

பள்ளமான  ஏரிகளில் வீடுகளை கட்டிக்கொண்டு மழை காலத்தில் தண்ணீர் வீட்டிற்குள் வருகிறது என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்?

மனிதர் வீடு கட்டும் விசயத்தில் தன் மூளையைப் பயன்படுத்த வில்லை என்றுதான் பொருள்.

மழைக்கு காரணமான  இயற்கை காடுகளை அழித்துவிட்டு "பருவமழை செய்யவில்லையே" என்று என்று இயற்கையை குறை கூறுவது ,

மனிதன், "எனக்கு எனது மூளையை பயன்படுத்தத் தெரியவில்லை" என்பதற்கு சமம்.

மனிதன் இயற்கை உணவுகளை சாப்பிடுவதை கை விட்டதுதான் 
இன்று அநேக நோய்களுக்கு காரணம்.

அணுவிற்குள் சக்தியை வைத்தது இறைவன்.

ஆனால் அந்த இயற்கை கத்தியை அழிவிற்கு தவறாக பயன்படுத்தியது  மனிதன்.

Man misused the atomic power for his own destruction.

உணவை அளவோடு சாப்பிட்டால் சக்தியாக மாறும்.

 அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டால் வயிற்று வலி வரும்.

 வயிற்று வலிக்கு பொறுப்பு உணவா? சாப்பிடுபவரா?"

"அதாவது மூளை இல்லாத இயற்கையை மூளை உள்ள மனிதன் தவறாக பயன்படுத்தும் போதுதான் மனிதனுக்கு இயற்கையிலிருந்து கஷ்டங்கள் வருகின்றன. 

 அதாவது இயற்கை நிகழ்வுகளால் வரும் மனித நஷ்டங்களுக்கு மனிதனே பொறுப்பு என்கிறீர்கள். சரியா?"

"Super சரி. இயற்கை கூர்மையான கத்தி மாதிரி. பழம் வெட்டவும் பயன்படுத்தலாம்,

 கையை வெட்டவும் பயன்படுத்தலாம்."

"சுருக்கமாக 

ஆன்மா  இறைவனை அனுசரித்து வாழ்ந்தால்    பாவம் நுழையாது.

உடல் இயற்கையை அனுசரித்து நடந்தால் இயற்கை நிகழ்வுகளால் இடர் வராது."


லூர்து செல்வம்.

Thursday, December 17, 2020

"யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" (லூக்.7:43)(தொடர்ச்சி)

http://lrdselvam.blogspot.com/2020/12/743_19.html


"யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" 
(லூக்.7:43)

(தொடர்ச்சி)



காய்கறிகளுக்குப் பரிசு மோட்சம்!


"இயேசுவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்."

" ஹலோ, மிஸ்டர், இங்கே கொஞ்சம் பாருங்க.

இயேசுவுக் மரணத் தீர்ப்பு அளித்த போஞ்சு பிலாத்து. (Pontius Pilate)"

"ஏதோ இயேசுவிற்கு தின்பண்டம் வாங்கி கொடுத்த போஞ்சு பிலாத்து என்று சொல்வதுபோல் சொல்கிறீர்கள்!"

"உண்மையத்தான் சொன்னேன். இது அவருடைய மனைவி

கிலவுதியா ப்ரோகுலா (Claudia Procula).".

"கிலவுதியா! ஏற்கனவே கேள்விப்பட்ட பெயர் போல் இருக்கிறதே!"

"பைபிளில் வாசித்திருப்பீர்கள்.
சின்னப்பர் திமோத்தியுவுக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கிலவுதியா நான்தான்.
(2 திமோத்தி. 4:21)

என் கணவர் நான் சொல்லியும் கேளாமல் இயேசுவுக்கு மரண தீர்ப்பு அளித்துவிட்டார்.

சவுலை சின்னப்பராக மாற்றிய அதே இயேசு கிறிஸ்து 

என் கணவரையும் என்னையும் அவருக்காக உயிரை கொடுக்கக்கூடிய அளவுக்கு
.
 துணிச்சலான கிறிஸ்தவர்களாக மாற்றினார்."

"நீங்கள் இருவரும் வேதசாட்சிகளாகவா மரித்து மோட்சத்திற்கு வந்தீர்கள்?"

"ஆமா! நீரோ மன்னன் ஆட்சியில் இருவருமே ஆண்டவருக்காக உயிரைக் கொடுத்தோம்.

இயேசுவின் மரணத்திற்கு காரணமாய் இருந்த என் கணவர், அதே இயேசுவுக்காக தன் உயிரையே கொடுத்து 

தான் செய்த பாவத்துக்கு பிராயசித்தம் செய்தார்.

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கும் சர்வ வல்லவ தேவன்

 எனது கணவர் செய்த பாவத்திலிருந்து மனுக்குலதற்கே மீட்பை வரவழைத்திருக்கிறார்."

"நல்ல கள்ளன் தான் குழந்தை இயேசுவுக்குக் கொடுத்த ஒரு முத்தத்திற்காக மோட்சத்தைப் பரிசாக பெற்றதாக சொல்கிறார்.

உங்களுக்கும் இயேசுவோடு பழைய அனுபவம் ஏதாவது இருக்கிறதா?"


"மக்கள் தொகையைக் கணக்கிடும்படி செசார் அகுஸ்துவிடமிருந்து கட்டளை பிறந்த நேரம்.

அது சம்பந்தப்பட்ட பொறுப்புகளோடு எனது தந்தை குடும்பத்தோடு பெத்லகேம் நகருக்கு வந்திருந்தார்.

அப்போது எனக்கு வயசு பன்னிரெண்டு

ஒரு நாள் மாலையில் என்னுடைய அம்மா என்னிடம் கொஞ்சம் பணம் தந்து பக்கத்து ஊருக்கு போய் சமையலுக்கு காய்கறிகள் வாங்கி வரும்படி அனுப்பினார்கள்கள். 

  சத்திரத்திற்கு முன்னால் நடந்து போய் கொண்டிருந்தேன்.

ஒரு வயதான பெரியவர் நிறை மாத கர்ப்பிணி போல் தோன்றிய ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு சத்திரத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.

வெளியே நின்று கொண்டிருந்த கழுதையின் மீது பெண்ணை ஏற்றி உட்கார வைத்து தெருவிற்கு வந்தார்.

எனது அருகில் அவர்கள் வந்தபோது அந்த பெண்மணி பெரியவரிடம், 

"ஊருக்குள் தங்குவதற்கு இடம் கிடைப்பது மாதிரி தெரியவில்லை.

 நாம் வந்து கொண்டிருந்த பொழுது ஊருக்கு வெளியே ஒரு மாட்டு தொழுவத்தை பார்த்தது ஞாபகம் இருக்கிறதா?"

"நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. அங்கேதான் உனது மகன் பிறக்க வேண்டும் என்று இறைவனுக்கு சித்தமானால் அங்கேயே செல்வோம்."

எனக்கு பாவமாய் இருந்தது. நிறைமாத கர்ப்பிணி குழந்தை பெறுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் தொழுவதற்கு போகப் போகிறார்கள்.

12 வயது பையனால் அவர்களுக்கு எப்படி உதவ முடியும்?

அவர்களை பின் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன்.

ஊருக்கு வெளியேஇருந்த மாட்டுக் தொழுவை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.
'
அப்போதும் மாலை நேரம். இருட்டு நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

நான் பக்கத்து ஊருக்கு ஓட்டமும் நடையுமாக சென்று காய்கறி வாங்கி விட்டு திரும்பும்போது நன்கு இருட்டிவிட்டது.

வரவர அந்த தாயைப் பற்றியே நினைத்துக்கொண்டு வந்தேன்.

நம்மால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்று நினைத்து வருந்தினேன்.

வரும்போது நடைபாதையை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்த மாட்டுத் தொழுவை நோக்கினேன்.

உள்ளே பிரகாசமான ஒளி ஒன்று தெரிந்தது.  

உலகு சம்பந்தப்பட்ட எந்த தீபம் ஏற்றினாலும் இவ்வளவு ஒளி இருக்க வாய்ப்பில்லை.

ஏதாவது தெய்வீக ஒளியாகத்தான் இருக்க வேண்டும்.


தொழுவை நோக்கி நடந்தேன்.  

உள்ள சென்றேன்.

தொழுவத்தின் தீவனத் தொட்டியில் ஒரு குழந்தை படுத்திருந்தது.

அருகில் சென்று அதன் முகத்தை உற்று நோக்கினேன்.

வெகுநேரம் அதன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

குழந்தை என்னை நோக்கி கை கால்களை உயர்த்தி ஆட்டிச்
 சிரித்தது.

குழந்தைக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும். என்னிடம் காய்கறிகள் மட்டுமே இருந்தன.

அவற்றை பையோடு குழந்தையின் கால் மாட்டில் வைத்தேன்.

குழந்தையின் தாயிடம் வந்து,
'
"அம்மா, குழந்தைக்கு என்ன பெயரிடப் போகிறீர்கள்?"

"இயேசு என்று பெயரிட வேண்டும்."

"கடவுளே மனிதனாகப் பிறந்தது போல் இருக்கிறது. 

இவ்வளவு அழகான பிரகாசமாக முகத்தை எங்கும் நான் பார்த்ததே இல்லை"

என்று அம்மாவிடம் சொன்னேன்.

அப்போது சில இடையர்கள் தொழுவுக்குள்ளே வந்துகொண்டிருந்தார்கள்.

"உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார் என்று விண்ணிலிருந்து செய்தி வந்தது.

 அவரை பார்த்து ஆராதிக்க வந்தோம்"

 என்று சொல்லிக்கொண்டே குழந்தையின் முன் முழங்கால் படியிட்டு ஆராதித்தார்கள்.

அவர்களோடு நானும் முழங்கால் படியிட்டேன்.

குழந்தையை மனதார வாழ்த்தினேன்.

 இயேசுவை வாழ்த்திய அதே வாயால் அவருக்கு மரணத் தீர்ப்பிடுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

யூத குருக்கள் அவரை என்னிடம் அழைத்து வந்து அவருக்கு மரண தீர்ப்பிட வேண்டும் என்று கேட்டபோது,

என் மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.


அவர்கள் அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை என்று எனக்கு தெரியும்.

குற்றமே செய்யாத அவருக்கு எப்படி மரண தீர்ப்பு கூற முடியும்?

அவர் கலிலேயர் என்பதை அறிந்ததும் நான் தப்பித்துக் கொள்வதற்காக அவரை ஏரோதிடம் அனுப்பினேன்.

ஆனால் அவர் என்னிடமே திருப்பியனுப்பி விட்டார்.

இயேசுவைத் தீர்ப்பிட எனக்கு மனது இல்லாவிட்டாலும் 


 யூதர்கள் கத்திக் கொண்டே இருந்ததால் வேறு வழியே இல்லாமல் அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டேன்."

"மனது இல்லாவிட்டாலும இயேசுவுக்கு விரோதமாக செயல்பட்ட உங்களை எப்படி மோட்சத்திற்குள் அனுமதித்தார்?"

"அவர் சிறு குழந்தையாய் இருக்கும்பொழுது அவரை வாழ்த்தி காய்கறிகளை பரிசாக கொடுத்ததை நினைத்து பார்த்து இருப்பார்.

அவ காய்கறிகளைப் பார்த்திருக்க மாட்டார் என்னுடைய குழந்தை மனதை பார்த்திருப்பார்.

"என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மத்.10:42)

என்று சொன்னவர் அவர்

எனது சிறிய நற்செயலுக்காக எனது பெரிய பாவத்தை மன்னித்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

அது மட்டுமல்ல. அவர் கடவுள்.

மனுக்குலம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக தன் உயிரையே பலியாக்கவே 
மனிதனாகப் பிறந்தவர்.

நான் அவரை முதலில் சந்தித்தபோதே நான்தான் அவருக்கு மரண தீர்ப்பிடப் போகிறவர் என்று 
தெரிந்திருக்குமே. 

இருந்தாலும் என்னைப் பார்த்து சிரித்தாரே!

நான் அவருக்கு மரண தீர்ப்பிட்டது என் மனைவிக்கு பிடிக்கவில்லை.

 எனது மனைவிக்காக என்னை மன்னித்திருப்பார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 

தீமை செய்தவருக்கு நன்மை செய்யுங்கள்

 என்ற தனது போதனைக்கு செயல்வடிவம் கொடுத்து, 

 மன்னிப்பு பெற தகுதியற்ற என்னை மன்னித்திருப்பார்."

"என் கணவர் இயேசுவை விசாரித்துக் கொண்டிருந்தபோது

 இயேசுவுக்கு மரணத் தீர்ப்பிடாதபடி தடுக்க எவ்வளவோ முயன்றேன்.

முடியவில்லை.

ஆனாலும் இயேசு எங்களுக்கு நல்வழி காட்டினார்.

என்னது கணவனின் பதவி காலம் முடிந்தபின் அரசன் அவரை நாடு கடத்தி விட்டான்.

நாங்கள் இருவருமே எங்களது பாவங்களுக்காக வருந்தி ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவர்களாக மாறினோம்.

 புற இன மக்களின் அப்போஸ்தலரான புனித சின்னப்பர் தான் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

இருவருமே நீரோ மன்னன் ஆட்சி காலத்தில் வேத சாட்சிகளாக மரித்தோம்.

இயேசு சிலுவையில் தொங்கி கொண்டிருந்த போது அவரது மரணத்திற்கு காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டிய ஜெபத்தினால் 

தந்தை இறைவன் எங்களது பாவங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டார்."

".ஆச்சரியமாக இருக்கிறது.

இறைவனால் மட்டுமே இப்படி செய்ய முடியும்.

பாவமே செய்யாமல் மோட்சத்திற்கு வந்தவர்களை விட 

பெரிய பெரிய பாவங்கள் செய்து, மனந்திரும்பி, மோட்சத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்."

" நினைப்பது என்ன, உண்மையும் அதுதான்.

பாவமே செய்யாதவர்களுக்கு மட்டும்தான் மோட்சம் என்றால்

 அன்னை மரியாள் மட்டும் தான் இங்கு வந்திருக்க முடியும்."

"இயேசுவின் அன்பு ஒரு தாயின் அன்பைப் போன்றது.

தாய் சுகமாய் இருக்கும் பிள்ளையை விட

 நோயோடு இருக்கும் பிள்ளையைத்தான் அதிகம் கவனிப்பார்.

"நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்"
(லூக்.5:32)
என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்."

விண்ணகத்தில் நடந்த இந்த உரையாடலை கேட்ட நமக்குப் புரிய வேண்டியது:

கிறிஸ்மஸ் விழா பாவிகளுக்கான விழா.

அதாவது பாவிகளை பரிசுத்தமானவர்களாக மாற்றும் விழா.

நாம் எல்லோரும் பாவிகள்.

 கிறிஸ்மசை மகிழ்ச்சியுடன் கொண்டாட முழுத் தகுதி பெற்றவர்கள்.


அழுக்குடன் அருவியில் குளித்துவிட்டு அழுக்கு நீங்கி சுத்தமாக வெளியே வருவது போல், 

நமது பாவங்களை எல்லாம் இயேசு பாலனின் பாதங்களில் போட்டுவிட்டு பரிசுத்தராய் வெளியே வருவோம்.

லூர்து செல்வம்.

'

"யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" (லூக்.7:43)(தொடர்ச்சி)

http://lrdselvam.blogspot.com/2020/12/743_17.html


"யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" 
(லூக்.7:43)

(தொடர்ச்சி)



ஒரு முத்தத்திற்கு கிடைத்த பரிசு மோட்சம். 



"ஹலோ! நல்ல கள்ளன்!"

என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கிப் புறப்பட்டவன் திரும்பவும் இராயப்பரிடம் வந்து, 

"நான் உடனே நல்ல கள்ளனைப் பார்த்தாக வேண்டும். மோட்சத்தில் எங்கே சென்று அவரைத் தேடுவேன்?"


"தேடிப் போக வேண்டிய அவசியமில்லை. யாரை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர் பக்கத்தில் நீங்கள் இருப்பீர்கள்."


"Thank you. "ஹலோ! நல்ல கள்ளன்!"

"நீங்கள் முதலில் என்னை கூப்பிட்டபோதே நான் உங்கள் அருகில்தான் இருக்கிறேன்.

நான் மோட்சத்திற்கு வந்தபின்னும் எனது திருட்டுப் பட்டம் மட்டும் போக மாட்டேன் என்கிறது!"

"அது எப்படி போகும்! நீங்கள் மோட்சத்தையே திருடியிருக்கிறீர்களே!"

"நீங்கள் என்னைப்பற்றி அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

 ஆனால் உண்மையில் மோட்சம் ஒரு முத்தத்திற்கு எனக்கு கிடைத்த பரிசு என்று 

எனக்கும் இயேசுவுக்கும் மட்டும்தான் தெரியும்!"

"முத்தத்திற்கு கிடைத்த பரிசா?"

"ஆமா.நான் மரித்ததற்கு சரியாக 33 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள்...

நான் எனது திருட்டு கும்பலோடு ஒரு காட்டில் சுற்றிக் கொண்டிருந்த நேரம்.

காலை ஒன்பது மணி இருக்கும்.

இரவு முழுதும் சுற்றியும் யாரும் அகப்படவில்லை. 

அங்கும் இங்கும் அலைந்து ஒரு குகை முன் வந்து நின்றோம்.

குகையின் நுழைவு பகுதி சிலந்தி வலையால் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தது.

குகைக்குள் யாரும் மாதக்கணக்காக நுழைந்திருக்க மாட்டார்கள்,

அங்கு சில படைவீரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

  அவர்களுள் ஒருவர் எங்களைப் பார்த்து,

" ஒரு வயதான தந்தையும், இளவயது மனைவியும், கைக்குழந்தையோடு இந்த வழியே போனதை பார்த்தீர்களா?"

"இல்லையே. எதற்காகத் தேடுகிறீர்கள்? ''

"அந்த குழந்தையை கொல்ல வேண்டும் என்பது அரசன் உத்தரவு."

"எதற்காக? குழந்தை என்ன குற்றம் செய்தது?"


"அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அரசனின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது எங்களது கடமை."

".நாங்கள் யாரையும் பார்க்கவில்லை. இந்த குகைக்குள் சென்று பார்த்தீர்களா?"

"குகையின் நுழைவு பகுதியைப் பாருங்கள். யாரும் உள்ளே சமீபமாக நுழைந்திருக்க வாய்ப்பு இல்லை."

அவர்கள் சென்று விட்டார்கள் அவர்கள் போய் ஒரு கால் மணி நேரம் கழித்து குகைக்குள் இருந்து ஒரு கழுதை சிலந்தி வலையை பிய்த்துக் கொண்டு வெளியே வந்தது. 

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது இந்த கழுதை குகைக்குள் மாதக் கணக்காய் இருந்திருக்க வேண்டும்.

 அதைத் தொடர்ந்து ஒரு வயதானவரும் கைக்குழந்தையோடு ஒரு இளம்பெண்ணும் வந்து கொண்டிருந்தார்கள்.

நான் ஆச்சரியத்தோடு அவர்களைப் பார்த்து,

" எப்போது உள்ளே போனீர்கள்?"

".நேற்று மாலையில்."

நான் ஆச்சரியத்தோடு அவர்கள் அருகில் சென்று கைக்குழந்தையைப் பார்த்தேன்.

 மிகவும் அழகான குழந்தை,

 தெய்வீக புன்னகையோடு என்னை பார்த்து சிரித்தது.

 எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
'
 "அம்மா, இந்த குழந்தையை ஒரு நிமிடம் என் கையில் தருகிறீர்களா?"

 அந்தப் பெண்மணி தயங்காமல் குழந்தையை எனது கையில் தந்தார்கள். 

நான் குழந்தையை அரவணைத்து, அதன் காலில் ஒரு முத்தம் கொடுத்தேன்.


 நீங்கள் நம்பமாட்டீர்கள்,

 அந்த குழந்தை எனது கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.


குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லாமல் அதன் தாயிடம் கொடுத்தேன்.

"ஏல, குழந்தையின் கழுத்தில் ஏதாவது கிடக்கிறதா என்று பார்க்காமல் கொஞ்சிக் கொண்டிருக்கிறாய்?"

"அதன் முகத்தைப் பார்த்தால் வேறு எதுவும் தோன்றவில்லை."

" அப்போ நீ கொஞ்சிக் கொண்டே இரு,

   எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்.

 பெரியவரே நாங்கள் திருடர்கள். உங்களைக் கொஞ்ச வரவில்லை.

 கையில் ஏதாவது இருந்தால் அப்படியே கொடுத்து விடுங்கள்.

அல்லது இந்த குழந்தையை நாங்களே எடுத்து படைவீரர்களிடம் சேர்த்து விடுவோம் .

அவர்களிடம் குழந்தைக்கு விலையாக பணத்தை வாங்கிக் கொள்கிறோம்."

 உடனே பெரியவர் சொன்னார், 

"நான் தச்சு வேலை செய்து பிழைப்பவன்,

  என்னிடம் இருப்பதை உங்களிடம் தந்துவிடுகிறேன்.

 குழந்தையை எதுவும் செய்துவிட வேண்டாம். நாங்கள் போகிற இடத்தில் தச்சு வேலை செய்து பிழைத்துக் கொள்வோம்."

"ஐயா பெரியவரே, நீங்கள் எதுவும் தரவேண்டாம்.

 போகலாம்.

 இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்." 

என்று அவர்களை அனுப்பி விட்டு,

"அவர்கள் குழந்தையை காப்பாற்றுவதற்காகவே நாடு விட்டு நாடு போகின்றவர்கள் போல் தெரிகிறது.

 ரொம்ப ஏழைகள் மாதிரியும் தெரிகிறது.

 அவர்களிடமுள்ள பைசாக்களை வாங்கி என்ன செய்யப் போகிறாய்?"

என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த பெண்மணி குழந்தையுடன் திரும்பி வந்து,

  "கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்"

 என்று சொல்லி விட்டு போனார்கள்.


நான் வாழ்நாளெல்லாம் திருட்டுத் தொழிலையே செய்து கொண்டிருந்தாலும்,

 அந்த குழந்தையின் 
புன்சிரிப்பையும், அது கொடுத்த முத்தத்தையும் என்னால் மறக்கவே முடியவில்லை.

சிலுவையில் என்னுடன் அறையப்பட்டிருப்பது இயேசு என்று எனக்கு தெரியும்.

 ஆனால் நான் முத்தம் கொடுத்த, எனக்கு முத்தம் கொடுத்த குழந்தைதான் அவர் என்று

  சிலுவையின் அடியில் நின்று கொண்டிருந்த தாயின் முகத்தை பார்த்தபின்தான் தெரியும்.

தெய்வக் குழந்தைக்கு நான் கொடுத்த முத்தத்துக்கு பரிசாக எனக்கு கிடைத்ததுதான் எனது மோட்ச வாழ்வு,

இப்போது சொல்லுங்கள் நான் மோட்சத்தை திருடி விட்டேனா என்று."

".நிச்சயமாக இல்லை. சிலுவை அடியில் நின்ற மாதா சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த உங்களைப் பார்த்தார்களா?"

"பார்த்தார்கள். கவலை நிறைந்த அவர்கள் முகத்திலும் என்னை பார்த்தவுடன் எட்டிப்பார்த்த புன்னகையை என்னால் மறக்கவே முடியாது.

மகன் சிலுவையில் மரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ஏற்பட்ட அளவிட முடியாத சோகத்தின் இடையேயும் 

நான் இயேசுவோடு விண்ணகத்திற்கு செல்லப் போகிறேன் என்று அறிந்து எனக்காக பட்ட மகிழ்ச்சியும் எட்டிப்பார்க்கிறது என்பதை நினைக்கும் போது 

தாயின் உள்ளத்தை நினைத்து மகிழாமல் இருக்க முடியாது.

 இயேசுவை மட்டுமல்ல என்னையும் அவர்கள் மகனாகத்தான் நினைத்து கொண்டிருந்திருக்கிறார்கள்."

"இயேசுவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்."

" ஹலோ, மிஸ்டர், இங்கே கொஞ்சம் பாருங்க.

இயேசுவுக் மரணத் தீர்ப்பு அளித்த போஞ்சு பிலாத்து. (Pontius Pilate)"

(தொடரும்)

லூர்து செல்வம்.
"