"ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோருக்கு அஞ்சாதீர்கள்." (மத்.10:28)
"முதலாளி, வரச் சொன்னீங்களா?"
"நாளை என் மகனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுகிறோம்.
வீட்டில் வேலை இருக்கிறது. காலை எட்டு மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடு."
''முதலாளி, நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை."
"தெரியும்."
"எட்டு மணிக்கு கோவிலில் பூசை ஆரம்பிக்கும். நான் ஏழரை மணிக்கு கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
ஒன்பதரை மணிக்கு மேல் தான் எங்கேயும் செல்ல முடியும்.
ஒன்பதரை மணிக்கு மேல் உங்கள் வீட்டுக்கு வருகிறேன்."
", ஏண்டா, காலையில் எட்டு மணிக்கு செய்ய வேண்டிய வேலையை 9:30 மணிக்கு மேல் செய்தால் நான் விழா கொண்டாடுவது எப்படி?''
"முதலாளி நான் பூசைக்கு கட்டாயம் போக வேண்டும்."
",அப்போ, நான் சொல்வதைச் செய்ய மாட்டாய்!"
"ஒன்பதரை மணிக்கு மேல் என்ன வேலையை வேண்டுமானாலும் செய்கிறேன்."
"எட்டு மணிக்கு வர முடியுமா, முடியாதா?"
'முதலாளி நான் பூசைக்கு கட்டாயம் போக வேண்டும்."
"அப்போ, நான் சொல்வதைக் கேட்க மாட்டாய்!"
"முதலாளி."
"இனிமேல் நான் உனது முதலாளி இல்லை. போகலாம்."
"சரி, ஐயா."
''என்னிடம் வேலை பார்க்காவிட்டால் உனக்குச் சம்பளம் யார் தருவார்?"
"அதை என்னைப் படைத்தவர் பார்த்துக் கொள்வார்."
"அப்போ, உன்னைப் படைத்தவரிடமே போ.
ஒரு நிமிடம் நில்.
வருடம் முழுவதும் உனக்குச் சம்பளம் தரும் வேலையை விட
ஞாயிற்றுக்கிழமை பூசை முக்கியமா?"
''என்னைப் படைத்த கடவுளும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும் தான் எனக்கு முக்கியம்.
வேலையால் கிடைக்கும் சம்பளம் எனது உடலுக்குச் சோறு போடும்.
எனது ஆன்மாவுக்கு வேண்டிய உணவை ஊட்டி காப்பாற்றக் கூடியவர் கடவுள் மட்டுமே.
உடல் ஒருநாள் மண்ணுக்குள் போய்விடும்.
அழியாத ஆன்மா தான் இறைவனோடு வாழ விண்ணுக்குப் போக வேண்டும்.
வருகிறேன்."
"வர வேண்டாம். போ"
* * * * * * *. * *
ஒரு அரசரும் துறவியும் பேசிக்கொள்கிறார்கள்.
அரசர்: துறவி அவர்களே, நீங்கள் ஒரு பெரிய தியாகி.
துறவி : எதை வைத்து சொல்கிறீர்கள்?
அ: உங்களது ஆன்மாவின் வளர்ச்சிக்காக
இந்த முழு உலகையும்,
அதில் உள்ள எல்லா இன்பங்களையும்,
உங்கள் உடலைச் சார்ந்த இன்பங்களையும் தியாகம் செய்திருக்கிறீர்களே!
நீங்கள் ஒரு பெரிய தியாகி.
து: அரசே, சிறிய இன்பத்துக்காக பெரிய இன்பத்தை தியாகம் செய்பவன் பெரிய தியாகியா?
அல்லது,
பெரிய இன்பத்துக்காக சிறிய இன்பத்தை தியாகம் செய்பவன் பெரிய தியாகியா?
அ: பெரிய இன்பத்தை தியாகம் செய்பவன்தான் பெரிய தியாகி.
து: ஒரு நாள் முடிவுக்கு வரும் இந்த உலக இன்பம் பெரிய இன்பமா,
முடிவில்லாத மோட்ச பேரின்பம் பெரிய இன்பமா?
அ: முடிவில்லாத மோட்ச பேரின்பம்தான் பெரிய இன்பம்.
து:உங்களுக்கு முக்கியம் மோட்சமா, உலக அரசாட்சியா?
அ: நான் இந்நாட்டின் அரசன். எனக்கு எனது நாடே முக்கியம்.
து: நான் மோட்ச பேரின்பத்தைப் பெற வேண்டும் என்பதற்காக உலக சிற்றின்பத்தைத் தியாகம் செய்திருக்கிறேன்.
நீங்கள் உலகப் புகழாகிய சிற்றின்பத்தைப் பெறுவதற்காக மோட்சப் பேரின்பத்தைத் தியாகம் செய்திருக்கிறீர்கள்.
அப்படிப் பார்க்கும்போது நீங்கள்தான் பெரிய தியாகி.
* * * * * * * * * *
மனிதர்களில் அநேகருக்கு ஆன்மீக பேரின்பத்தை விட உடலைச் சார்ந்த சிற்றின்பத்தில் தான் ஆர்வம் அதிகம்.
காரணம் ஆன்மீக பேரின்பத்தை நாம் மரணம் அடைந்த பின்பு தான் அனுபவிக்க முடியும்.
'உடலைச் சார்ந்த சிற்றின்பத்தை இவ்வுலகில் வாழும் நாளெல்லாம் அனுபவிக்கலாம்.
கண்ணால் பார்க்க முடியாத ஆன்மா அனுபவிக்க விருக்கும் பேரின்பம் எப்படி இருக்கும் என்று மோட்சத்திற்கு சென்ற பின்பு தான் தெரியும்.
உடல் இன்பத்தை இங்கேயே இப்போதே அனுபவித்து விடலாம்.
மாம்பழத்தை விட பலாப்பழம் ருசியானது என்று தெரியும்.
ஆனாலும் அடுத்த ஆண்டு தான் கிடைக்கவிருக்கும் பலாப்பழத்தை விட
இப்பொழுது உடனே கிடைக்கும் மாம்பழத்தையே மக்கள் விரும்புவர்.
இயேசுவை மறுதலித்தால் அரசாங்கத்தில் உத்தியோக உயர்வு கிடைக்கும்,
மறுதலிக்க மறுத்தால் அடி உதையோடு கூடிய ஜெயில் தண்டனை கிடைக்கும்
என்று அரசு சொன்னால் குடிமகன் என்ன சொல்வான்?
இயேசுவை மறுதலித்தால் அவரையும் அவர் வாழும் மோட்சத்தையும் இழந்து விடுவோம்.
இயேசுவை ஏற்றுக் கொள்வதால் கிடைக்கும் ஜெயில் தண்டனை எப்படியாவது ஒருநாள் முடிந்து விடும்.
ஆன்மாவைக் கொல்லுதல் என்றால் அதை நித்திய நரகத்துக்கு அனுப்புதல் என்று பொருள்.
உடலை கொல்லுதல் என்றால் அதை மண்ணுக்குள் அனுப்புதல் என்று பொருள்.
உடல் என்றாவது ஒருநாள் மண்ணுக்குள் போய்த்தான் ஆக வேண்டும். உடலை இழப்பதால் நமக்கு பெரிய நட்டம் ஒன்றும் இல்லை.
ஆனால் ஆன்மாவை இழந்தால் இழப்பவருக்கு நித்தியத்துக்கும் ஆன்மா நட்டம்.
எவ்வளவு பெரிய மன்னனாக இருந்தாலும் அவனால் அதிகபட்சம் நமது உடலை தான் கொல்ல முடியும்.
நமது ஆன்மாவை அவனால் ஒன்றும் செய்ய முடியாது.
ஆன்மாவை ஒன்றும் செய்ய முடியாதவனுக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்?
பாவம் ஒன்றுக்குதான் நமது ஆன்மாவைக் கொல்லக்கூடிய சக்தி உண்டு.
பாவம் ஒன்றுக்குதான் நாம் பயப்பட வேண்டும்.
தெய்வ பயம் என்றால் தெய்வத்துக்கு எதிராகப் பாவம் செய்ய பயப்படுதல் என்று பொருள்.
இறைவனுக்கு எதிராக பாவம் செய்யப் பயப்படுவது,
இறைஞானத்தின் ஆரம்பம்.
Fear of God is the beginning of wisdom.
இறைவனது சித்தத்திற்கு ஏற்ப நடப்பதற்கு இறைஞானம் உதவி செய்யும்.
உடலை கொல்ல முடிந்தவனுக்குப் பயப்பட வேண்டாம்.
ஆன்மாவைக் கொல்ல வல்ல பாவத்துக்குப் பயப்படுவோம்.
கடவுள் பாவியை நரகத்தில் தள்ளுகிறாரா?
ஒரு மாணவன் பொதுத் தேர்வில் 25 மதிப்பெண்கள் பெறுமான கேள்விகளுக்கு மட்டும் விடை அளித்துள்ளான்.
அவனது விடைத்தாளை மதிப்பீடு செய்பவர் அவனுக்கு அதிகபட்சம் எத்தனை மதிப்பெண்கள் கொடுக்க முடியும்?
அதிகபட்சம் 25.
ஆனால் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்கள் 35.
மதிப்பீடு செய்பவர் இரக்கப்பட்டு எல்லா பதில்களுக்கும் முழு மதிப்பெண்கள் கொடுத்தாலும் அந்த மாணவனால் வெற்றி பெற முடியாது.
விடைத்தாளை மதிப்பீடு செய்பவர் அந்த மாணவனை fail ஆக்குகிறாரா?
அந்த மாணவன் fail ஆகிறானா?
சிந்தித்துப் பார்ப்போம்.
நரகம் படைக்கப்பட்டது சாத்தானுக்காக.
பாவம் செய்பவன் சாத்தானின் நண்பன்.
பாவம் செய்பவன் தனது பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி
அவனது நண்பனுக்கு உரிய நரகத்தை அவனே தேர்ந்தெடுக்கிறான்.
அப்போதும் அவன் மேல் கடவுளுக்கு உள்ள அன்பு குறைவதில்லை.
ஆனால் நரகத்தில் உள்ளவனால் மனம் திரும்ப முடியாது.
உலகில் வாழும் போதே மனம் திரும்புவோம்.
கடவுளுக்கு எதிராக பாவம் செய்யப் பயப்படுவோம்.
புண்ணிய வாழ்வு வாழ்வோம்.
மோட்ச பேரின்ப வாழ்வு நமக்கே.
லூர்து செல்வம்.