Tuesday, January 31, 2023

"ஆண்டவர் யார் மேல் அன்பு கூர்கிறாரோ, அவனைக் கண்டித்துத் திருத்துகிறார். தாம் ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகள் அனைவரையும் ஒறுக்கிறார்."(எபி.12:6)

."ஆண்டவர் யார் மேல் அன்பு கூர்கிறாரோ, அவனைக் கண்டித்துத் திருத்துகிறார். தாம் ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகள் அனைவரையும் ஒறுக்கிறார்."
(எபி.12:6)

"ஐயா, வணக்கம்."

"'வணக்கம், உட்காருங்கள். நேற்று நடத்திய பாடத்தை வீட்டில் எல்லோரும் படித்துக் கொண்டு வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

படிக்கும்போது ஏதாவது சந்தேகங்கள் வந்திருந்தால் இப்போது அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

நான் கேள்வி கேட்பதற்கு முன் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் முதலில் கேளுங்கள்."

"சார், ஒரு சந்தேகம். "

"'கேளு."

"ஆசிரியர் என்றால் கட்டாயம் கையில் பிரம்பு வைத்திருக்க வேண்டுமா?"

"'கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

என் கையில் பிரம்பு இல்லையே. மேஜையின் மேல்தான் இருக்கிறது.

தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.

நாளை காலையில் நல்லொழுக்க வகுப்பில் .

பிரம்பின் பெருமைகளைப் பற்றி பேசலாம்."

மறுநாள்:

"'மகேஷ், எழுந்திரு. என் கையில் என்ன இருக்கிறது?"

"பிரம்பு, சார்."

"'நேற்று ஆசிரியர் என்றால் கட்டாயம் கையில் பிரம்பு வைத்திருக்க வேண்டுமா? என்று நீ கேட்டது ஞாபகத்தில்    இருக்கிறதா?"

"இருக்கிறது, சார்."

"'எதற்காக என் கையில் பிரம்பு?"

"படிக்காதவர்களையும், சேட்டை செய்கிறவர்களையும் தண்டிப்பதற்கு."

"'தவறான பதில். யாருக்காவது சரியான பதில் தெரியுமா?"

"எல்லோரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டால் அடிபடுகிறோம்.

அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசிக் கொண்டிருந்தால் அடிபடுகிறோம்.

வகுப்புக்குப் பிந்தி வந்தால் அடிபடுகிறோம்.

பிரம்பை பார்த்தவுடன் பயமாக இருக்கிறது.

அதனால்தான் அதைத் தண்டிக்கும் கருவி என்று நினைக்கிறோம்."

"'பிரம்பு தண்டிக்கும் கருவி அல்ல. தவறு செய்கிறவர்களை திருத்தும் கருவி.

ஊசி போட்டால் வலிக்கிறது, நோயாளிகளைத் தண்டிப்பதற்காகவா மருத்துவர் ஊசி போடுகிறார்?"

''இல்லை, சார். நோயாளிகளைக் குணமாக்குவதற்காக ஊசி போடுகிறார்."

"தவறுகள் செய்வது ஆன்மா சம்பந்தப்பட்ட நோய்.

அந்த நோயிலிருந்து தவறு செய்தவர்களைக் குணமாக்கவே ஆசிரியர் வகுப்பில் பிரம்பைப்  பயன்படுத்துகிறார்.

பிரம்பை எடுக்காதவன் பிள்ளையைப் பகைக்கிறான்.

பிரம்பை எடுப்பவன் பிள்ளையை நேசிக்கிறான்.


மாணவர்களை சிறந்தவர்களாக மாற்றுவதற்காகத் தான் ஆசிரியர் பிரம்பை பயன்படுத்துகிறார்.

ஆசிரியர் உங்களை அடிப்பதற்குக் காரணம் அவருக்கு உங்கள் மேல் உள்ள அன்பும், அக்கரையும்தான்.

உலகில் மனிதர்களுக்கு துன்பங்களும் நோய் நொடிகளும் வருவதற்கு காரணம் என்ன?

தெரிந்தவர்கள் கையை உயர்த்துங்கள்."

எல்லோரும் உயர்த்துகிறார்கள்.

"'ராஜ், என்ன காரணத்தினால் துன்பங்கள் வருகின்றன?"

"பிரம்பை பற்றி நீங்கள் சொன்னதை வைத்து பார்க்கும் போது,

 கடவுள் மனிதர்களை திருத்துவதற்காகத் தான் துன்பங்களை அனுப்புகிறார் என்று நினைக்கிறேன்."

"'கடவுள் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக கட்டளைகளை கொடுத்திருக்கிறார்.

மனிதர்களுக்கு பரிபூரண சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்.

சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி மனிதர்கள் பாவம் செய்யும்போது அவர்களைத் திருத்துவதற்காக துன்பங்களை அனுப்புகிறார்.

நமக்கு துன்பங்கள் வரும்போது 
அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கு விரும்புவதற்கு முன்னால்,

தங்களை தாங்களே ஆன்மீக பரிசோதனை செய்ய வேண்டும்.

தாங்கள் செய்த பாவங்கள் நினைவுக்கு வந்தால் அவற்றுக்காக வருத்தப்பட்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நமது ஆன்மா பரிசுத்தம் அடையும்."

"சார் நல்லவர்களுக்கும் துன்பங்கள் வருகின்றனவே.

நமது பாவங்களுக்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டால் துன்பங்கள் போய்விடுமா?"

"'நல்லவர்களுக்கும் துன்பங்கள் வருகின்றன.

பாவமே செய்யாமல் வாழ்பவர்கள் தங்களுக்கு வரும் துன்பங்களை இறைவனுக்காக ஏற்றுக்கொண்டு அவருக்கு அவற்றை பலியாக ஒப்புக்கொடுத்தால் 

விண்ணக வாழ்வில் அவர்களுடைய பேரின்பத்தின் அளவு அதிகமாகும்.

நம் மீது கொண்ட அன்பின் காரணமாகத்தான் கடவுள் நமக்கு துன்பங்களை அனுப்புகிறார்.

அவற்றைக் கொண்டு பாவிகள் மனம் திரும்ப வேண்டும்,

பரிசுத்தர்கள் தங்கள் விண்ணக வாழ்வின் பேரின்பத்தை அதிகரிக்க வேண்டும்.

துன்பங்கள் பாவிகளை மனம் திருப்பும்,

பரிசுத்தர்களை புனிதர்களாக மாற்றும்.

ஆகவே நமக்கு துன்பங்கள் வரும்போதெல்லாம் நாம் இறைவனது அன்பை நினைத்து அவருக்கு நமது நன்றியை கூற வேண்டும்.

துன்பங்கள் நமக்கு இலவசமாகக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்.

எப்படி உலகியலில் மாதா மாதம் சம்பளம் வாங்குபவர்கள் தங்களுக்கு Bonus கிடைத்தால் மகிழ்கின்றார்களோ,

அதே போன்று தான் ஆன்மீகத்தில் நாம் நமக்கு வரும் துன்பங்களைக் கண்டு மகிழ வேண்டும்.

நமது துன்பங்களை நமது பாவங்களுக்கு பரிகாரமாக மட்டுமல்ல,

மற்றவர்கள் மனம் திரும்பவும் இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

மோட்சத்தில் வாழும் புனிதர்கள் எல்லாம் உலகில் வாழும் போது துன்பங்களை அனுபவித்தவர்கள் தான்.

நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர் நமது ஆண்டவராகிய இயேசு.

அவர் நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக வாழ்நாள் முழுவதும் துன்பங்களை அனுபவித்தார்.

நமக்காக துன்பங்களை அனுபவிப்பதற்காகவே   மனிதனாகப் பிறந்தார். 

அதற்கு அவர் நம் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பே காரணம்."

லூர்து செல்வம்.

Monday, January 30, 2023

"இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்."(மாற். 5:43)

"இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்."
(மாற். 5:43)

"தாத்தா, இது யாருக்கும் தெரியக்கூடாது என்றால் என்ன அரத்தம்?"

"'செபக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயீர் என்பவரின் இறந்த மகளுக்கு இயேசு உயிர் கொடுத்த புதுமையை வாசித்திருக்கிறாய் என்பது உனது கேள்வியின் மூலம் தெரிகிறது."

"ஆமா, தாத்தா. சிறுமி இறந்த வீட்டில் நிறைய பேர் இருந்திருப்பார்கள்.

சிறுமி சாகவில்லை, தூங்குகிறாள்" என்று என்று இயேசு சொன்னபோது

 அவர்கள் அவரை ஏளனம் செய்தனர்.

சிறுமிக்கு உயிர் கொடுத்த போது அவரோடு மூன்று சீடர்களும், சிறுமியின் பெற்றோரும் மட்டுமே  இருந்தார்கள்.

மற்றவர்கள் சிறுமி படுத்திருந்த அறைக்கு வெளியே நின்றார்கள்.

மகள் உயிரோடு எழுந்தது குறித்து அவளது பெற்றோர் மற்றவர்களிடம் சொல்லாமல் இருந்திருக்க முடியாது.

உயிர் பெற்றவளை மற்றவர்கள் பார்க்காமலும் இருக்க முடியாது.

அப்படி இருக்க இயேசு ஏன்
இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்?"

"'இயேசு கடவுள். தான் செய்த புதுமையை மற்றவர்களும் அறிவார்கள் என்று அவருக்கு நித்திய காலத்திலிருந்தே தெரியும்.

தெரிந்திருந்தும் அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது எனக்கும் புரியவில்லை.

எனக்குப் புரியாததை உனக்கு எப்படி புரிய வைப்பேன்?"

"தாத்தா, அப்போ ஒன்று செய்வோம்.

அம்மா ஹோட்டலில் இட்லி வாங்கி சாப்பிடு என்று காசு கொடுத்திருக்கிறார்கள்,

ஹோட்டலில் இட்லி இல்லை.

என்ன செய்வோம்?

அதே காசுக்கு இருப்பதை வாங்கி சாப்பிடுவோம்.

அதேபோல...''

"'இயேசு சொன்ன வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

அவற்றை பயன்படுத்தி வேறு எதைப் பற்றியாவது பேசலாம் என்கிறாய், அப்படித்தானே?"

"இயேசு நம்மைப் படைக்கும் போது, தந்தை இறைவன் அவரைப் பார்த்து

"இது யாருக்கும் தெரியக்கூடாது"

என்று சொல்வதாகக் கற்பனை செய்து கொள்வோம்.

நாம் இயேசுவைப் பார்த்து,

"ஆண்டவரே, எது யாருக்கும் தெரியக்கூடாது?" என்று கேட்கிறோம்.

இயேசு என்ன சொல்வார்?"

"'எது என்று தந்தைக்கும், எனக்கும், தூய ஆவிக்கும் மட்டும் தெரியும்,

 வேறு யாருக்கும் தெரிய கூடாது என்பது தந்தையின் கட்டளை.

தெரியக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள நீ ஏன் ஆசைப்படுகிறாய்?

நான் உன்னை வழி நடத்துவேன். அதன்படி நீ நடந்தால் போதும்." என்று சொல்வார். "

"கரெக்ட், தாத்தா. நாம் பிறப்பதற்கு முன் 

எந்த நாட்டில்,
எந்த ஊரில், 
எந்த பெற்றோருக்கு, 
எப்போது பிறப்போம், 
என்று நமக்கு தெரியாது,

 பிறந்த பின்பு தான் அவற்றை தெரிந்து கொண்டோம்.

இப்போதும் நாம் எவ்வளவு காலம் வாழ்வோம்,

எப்படி வாழ்வோம்,
எப்போது மரணம் அடைவோம்
என்ற எந்த விவரங்களும் நமக்கு தெரியாது.

அடுத்த வினாடி நமக்கு என்ன நடக்கும் என்பதும் நமக்கு தெரியாது.

பேசிக்கொண்டிருக்கும் போதே மரணம் வரலாம்.

Driver கையில் இருக்கும் கார் எங்கே போகும் என்பது காருக்குத் தெரியாது.

Driver ருக்கு மட்டுமே தெரியும்.

அதேபோல நமக்கு எப்போது என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது.

நம்மை பராமரிக்கும் கடவுளுக்கு மட்டுமே தெரியும்."

"'அதனால் நம்மைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

கடவுளுடைய கட்டளைகளை அனுசரிப்பதோடு,

நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் நமது உள்ளத்தில் சொல்கிறாரோ அதையும் நாம் செய்தால் போதும்.

முழுக்க முழுக்க கடவுளை மட்டும் நம்பி வாழ்பவர்களுக்கு

 வெற்றி, தோல்வி, நோய்நொடி, கஷ்டங்கள் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

எல்லாம் இறைவன் செயல் என்பது மட்டும் தெரியும்.

வேறு எதுவும் தெரியாது.

கடவுளை மட்டும் நம்பி வாழ்பவர்கள்,

நினைத்தது நடந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல்வார்கள்,

 நடக்காவிட்டாலும் நன்றி சொல்வார்கள்.

சுகமாக இருந்தாலும் நன்றி சொல்வார்கள்,

 நோய் நொடிகள் வந்தாலும் நன்றி சொல்வார்கள்.

வாழ்நாள் முழுவதும் கஷ்டங்களை மட்டும் அனுபவிக்க நேர்ந்தாலும் நன்றி சொல்வார்கள்.

என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்வார்கள்,

 ஏனெனில் நேர்வதெல்லாம் விண்ணக தந்தையின் சித்தப்படியே நேர்கின்றன.

வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் இறைவன்தான் தங்களை வழி நடத்துகிறார் என்பதை உணர்ந்து வாழ்பவர்கள்,

தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் தங்களை வழிநடத்தும் இறைவனுக்கு விசுவாசம் உள்ளவர்களாய் இருப்பார்கள்.

நடந்து செல்லும் போது,

 "நடப்பதற்கு தைரியம் கொடுத்த இறைவா உமக்கு நன்றி" என்பார்கள்.

நடக்கும்போது கல் தட்டி கீழே விழுந்து காலில் அடிபட்டாலும்,

"நான் விழுந்தது உமது செயல் என்பதால் இறைவா உமக்கு நன்றி" என்பார்கள்.

வாழ்வதற்கு மட்டுமல்ல, சாவதற்கும்,

 ஒவ்வொரு வினாடியும் தயாராக இருப்பார்கள்.

மாணவப் பருவத்தில் படிக்க வேண்டிய பாடங்களை ஒழுங்காக படிப்பார்கள்.

தேர்வு எழுதிய பின் கிடைக்கப்போவது வெற்றியா, தோல்வியா என்பது பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

ஏனெனில் அதை தீர்மானிப்பது இறைவனே."

"இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறோம்.

 நாம் எதிர்பாராதது ஏதாவது நேர்ந்தால்?"

"'நான் படித்துக் கொண்டிருக்கும் போது 

தேர்வுக்கு என்ன கேள்விகள் வரும் என்று எதிர்பார்க்கலாம் என்று எங்கள் ஆசிரியரிடம் கேட்டோம்,

 அவர் சொன்னார்,

 "எதிர்பாராதவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஏமாற மாட்டார்கள்."

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நமக்கு இப்போது தெரிந்து விட்டால் 

"அதுதான் நடக்குமே. அதற்காக நாம் ஏன் இப்போது கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்" என்று எண்ணி சோம்பேறிகளாக மாறி விடுவோம்.

எதிர்காலம் நமக்கு தெரியாததால் தான் நாம் கஷ்டப்பட்டு உழைக்கிறோம்."

"இரவு படுக்கப் போகும் போது "நாளைக் காலையில்  மரிப்போம்" என்று தெரிந்தால் விடிய விடிய நமது நிலை எப்படி இருக்கும்?"

"'நீ ஒரு இரவைச் சொல்கிறாய்.

குழந்தை பிறக்கும்போதே பத்தாவது பிறந்தநாளில் குழந்தை இறக்கும் என்ற உண்மை பெற்றோருக்கு தெரிந்தால் 10 ஆண்டுகளும் அவர்களுக்கு எப்படி இருக்கும்

நாம் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் நமது எதிர்காலம் நமக்கு தெரியக்கூடாது என்று தந்தை இறைவன் விரும்புகிறார்."

"இன்னும் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பதை பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு

 கடவுளுக்காகவே அவரது விருப்பப்படி மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

கடவுளின் விருப்பமும் அதுதான்.

புனிதர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படி அல்ல கடவுள் விருப்பப்படியே வாழ்ந்தார்கள்.

புனிதர்கள் மீது பக்தி வைத்திருக்கும் நாம் அனைவருமே அவர்களை போலவே வாழ்வோம்."

"'இன்னும் ஒரு விஷயம்.

பைபிள் வாசிக்கும்போது புரியாத விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு 

புரிந்ததை முழுமையாக வாழ்வோம். 

நாம் விண்ணகம் சென்றபின் இப்பொழுது நமக்கு புரியாதது எல்லாம் புரியும்."

லூர்து செல்வம்.

Sunday, January 29, 2023

"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்." (மத்.5:9)



"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்." (மத்.5:9)

''தாத்தா, இயேசு இறைமகன். 

நாம் எப்படி இறை மக்கள்?"


"'கடவுளின் சாயலில் அவரால் படைக்கப்பட்ட நாம் அவரின் மக்கள்.

கடவுள் நமது முதல் பெற்றோரை தனது சாயலில் படைத்தார்.

பரிசுத்தத்தனம் உள்ளிட்ட தனது பண்புகளோடு அவர்களைப் படைத்தார். 

அவர்கள் தங்கள் பாவத்தினால் பரிசுத்தத்தனத்தை இழந்தார்கள்.

இறைவனுடைய சாயலையும் இழந்தார்கள்.

கடவுளுடைய மக்களாய் இருப்பதற்குரிய அருகதையையும் இழந்தார்கள்.

 இழந்த சாயலை மீட்டுக் கொடுக்கவே இறைமகன் மனிதனாய்ப் பிறந்து, பாடுகள் பட்டு மரித்தார்.

நமது பாவங்கள் 
மன்னிக்கப்படும்போது இழந்த பரிசுத்தத்தனத்தையும், இறைவனின் சாயலையும் மீண்டும் பெற்று கடவுளுடைய பிள்ளைகள் ஆகிறோம்."

"தாத்தா, சமாதானம் செய்வோர் கடவுளின் மக்கள் எனப்படுவர்' என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே.

சமாதானத்திற்கும், கடவுளின் மக்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?"

"'சமாதானமாக இருப்பவர்கள் தான் கடவுளின் மக்கள்.

சமாதானம் என்றால் சுமூகமான உறவு. இரண்டு பேர் சுமூகமான உறவோடு இருக்கிறார்கள் என்றால் அவர்கள் சமாதானமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

கடவுள் நமது முதல் பெற்றோரைப் படைத்தபோது 

கடவுளுக்கும் அவர்களுக்கும் இடையில் சுமூகமான உறவு இருந்தது.

அதாவது அவர்களுக்கு இடையில் சமாதானம் நிலவியது.

சமாதானம் நிலவியதால்தான் அவர்கள் கடவுளின் மக்களாக இருந்தார்கள்.

பாவத்தினால் இழந்த சமாதானத்தை மீட்டுத் தருவதற்குப் பெயர் தான் மீட்பு.

இயேசு நமது மீட்பர்.

அதாவது கடவுளோடு இருந்து, நாம் இழந்த சமாதானத்தை மீட்டவர்.

அவர் சமாதானத்தின் தேவன்.

நமது பாவங்களுக்கு பரிகாரமாக அவர் மரித்து உயிர்த்த பின்

அவர் சீடர்களுக்கு காட்சி கொடுக்கும் போதெல்லாம்

"உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக" என்றுதான் வாழ்த்தினார்.

மீட்பர் பிறந்த அன்று கூட வானவர்கள்

"நல் மனதோற்கு சமாதானம் உண்டாகுக." என்றுதான் பாடினார்கள்.

யாரெல்லாம் விண்ணிலிருந்து வந்த சமாதானத்தை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களெல்லாம் கடவுளின் மக்களே."

"மற்றவர்கள் அமைதி என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் சமாதானம் என்று கூறுகிறீர்கள்?"

"'சமாதானத்தில் ஒரு நயம் இருக்கிறது தெரியுமா?"

"சொன்னால் தெரிந்து கொள்கிறேன்."

"'இரண்டு ஆட்கள் கருத்து வேறுபாடு காரணமாக சுமூகமான உறவில்லாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

அவர்களுடைய உறவு சீராக வேண்டுமென்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?"

"பல கருத்துக்களில் வேறுபாடு இருந்தாலும் ஏதாவது ஒரு கருத்தில் ஒருமிக்க   வேண்டும்.

அந்த கருத்தில் ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால் இருவருடைய மனங்களும் ஒருமித்து விடும்.

அவர்களுடைய நல்ல உறவுக்கு அது ஆரம்பமாகிவிடும். "

"'இருவரும் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒருவர் உயர்ந்த நிலையிலும் மற்றவர் தாழ்ந்த நிலையிலும் இருந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?"

"உயர்ந்த நிலையில் உள்ளவர் இறங்கி வர வேண்டும்.

தாழ்ந்த நிலையில் உள்ளவர் ஏறி வரவேண்டும்.

இருவரும் சம இடத்தில் சந்திக்க வேண்டும்."

"'Very good. சமாதானம் என்ற வார்த்தையை சமம் + தானம் என்று பிரிக்கலாம்.

தானம் என்றால் இடம்.

கணிதத்தில் ஒரு தான எண், இரண்டு தான எண், மூன்று தான எண் என்று படித்திருப்பாய்."

"ஆமா. நூறு மூன்று தான எண். தானம் என்றால் இடம். புரிகிறது."

"'கடவுள் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருப்பவர்.

மனிதன் பூமியில் வசிப்பவன்.

மனிதனால் சுயமாக எதுவுமே செய்ய முடியாது.

ஆனால் கடவுளோடு உறவை புதுப்பிப்பதற்காக சுயமாக மேலே செல்ல முடியாது.

சர்வ வல்லமையுள்ள, கற்பனைக்கு எட்டாத உயர்ந்த விண்ணகத்தில் இருக்கும் கடவுள்

மனிதனை சம இடத்தில் சந்திப்பதற்காக

மனித அவதாரம் எடுத்து,

விண்ணிலிருந்து பூமிக்கு இறங்கி வந்தார்.

பாவம் தவிர மற்ற எல்லாவற்றிலும்

மனிதனோடு மனிதனாக, அவனுக்கு இணையாக பூமியில் வாழ்ந்தார்.

மனிதனைப் போலவே உண்டு, உடுத்தி, அவனது மொழியிலேயே அவனோடு பேசி அவனை தன் உறவுக்குள் இழுத்தார்.

தனது மனித சுவாவத்திலேயே மனிதனுடைய பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.

உறவு முறிவதற்கு காரணமாக இருந்த பாவத்திலிருந்து அவனை மீட்டு விண்ணகத்திற்கு அழைத்து செல்கிறார்.

பூமியில் மனிதனோடு சம தானத்தில் வாழ்ந்து, 

புதுப்பிக்கப்பட்ட உறவுடன் அவனை விண்ணகத்தில் அவருடன் சம தானத்தில் வாழச்செய்கிறார்.

மனிதனோடு சம தானத்தில் கடவுள் வாழ்வதால்,

கடவுள் நம்மோடும்,
 நாம் அவரோடும் சமாதானத்தில் வாழ்கிறோம்.

சமாதானம் என்ற வார்த்தையின் நயம் புரிகிறதா?

இந்த நயம் அமைதியில் இருக்கிறதா?"

''இறைவனோடு சமாதானமாக வாழ வேண்டும்.

நமது அயலானோடு?"

'"இறைவனோடு சமாதானமாக வாழ்வது போலவே, நமது அயலானோடும் சமாதானமாக வாழ வேண்டும்.

தனது அயலானோடு சமாதானமாக வாழ்பவனால் மட்டுமே இறைவனோடு 
சமாதானமாக வாழ முடியும்.

இறையன்பையும், பிறரன்பையும் பிரிக்க முடியாது.

சமாதான வாழ்வுக்கு அடிப்படையே அன்புதான்.

பிறனையும் அன்பு செய்ய வேண்டும், பிறனோடும் சமாதானமாக வாழ வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. 

பிறனோடு சமாதானமாக வாழாதவன் இறைவனது கட்டளையை மீறுகிறான்.

இறைவனது கட்டளையை மீறுபவனால் இறைவனை அன்பு செய்ய முடியாது.

பிறருக்கு செய்வதையெல்லாம் இறைவனுக்கே செய்கிறோம். 

சமாதானம் நமது உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.

அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக."

லூர்து செல்வம்.

Thursday, January 26, 2023

" அவன் இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது." (மாற். 4:27)

" அவன் இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது." (மாற். 4:27)

"தாத்தா, திவ்ய நற்கருணை ஆண்டவருக்கு எந்தவித 
அவமரியாதையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 

திவ்ய நற்கருணையை நாவில் வாங்குங்கள் என்று எத்தனை பேருக்கு சொல்லியிருப்பீர்கள்!

அவர்களில் ஒருவராவது நீங்கள் சொன்னபடி செய்திருப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?"

'" பேரப்பிள்ள,  நம்மிடம் இருக்கும் விதையை விதைக்க வேண்டியது நாம்.

அதை முளைக்க வைப்பதும், வளர்ப்பதும், பலன் தர செய்வதும் கடவுள்தான்.

"நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்:

ஆனால், விளையச் செய்தவர் கடவுள் தாமே."(1கொரி.3:6)

நமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நாம் செய்ய வேண்டும்.

கடவுள் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியும்.

அவருடைய வேலையில் குறுக்கிட நமக்கு எந்த உரிமையும் இல்லை.

நமது ஆசை நிறைவேற அவரை நோக்கி செபிக்கலாம்.

ஆனால் நமது ஆசைப்படி செயல்படவோ,

 அல்லது,

 அவரது விருப்பப்படி செயல்படவோ அவருக்கு முழுமையாக சுதந்திரம் உண்டு.

அவர் என்ன செய்தாலும் அது நன்மைக்காகவே இருக்கும்.

ஏனெனில் அவர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவர்.

மருதடியூருக்குக்  கிழக்கே ஒரு பெரிய ஆலமரம் நிற்பதை பார்த்திருக்கிறாயா?"

"பார்த்திருக்கிறேன். அதன் வயது பல நூறு ஆண்டுகள் இருக்கும்.

பரந்து விரிந்து வளர்ந்திருக்கும் அதன் நிழலில் ஒரு பெரிய படையே ஓய்வு எடுக்கலாம்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த மரத்திற்கான விதையை அந்த இடத்தில் யார் போட்டிருப்பார் என்று நினைக்கிறாய்?"

"யார் என்று கேட்பதை விட எது என்று கேட்டிருக்கலாம்.

ஆல மரத்தின் விதை எவ்வளவு சிறியதாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.

யாரும் அதை அங்கே விதைப்பதற்காக சுமந்து கொண்டு வந்திருக்க மாட்டார்கள்.

ஏதோ ஒரு காகம் வெகு தூரத்தில் உள்ள ஆல மரத்தில் பழுத்திருந்த பழத்தைத் தின்றுவிட்டு அந்த வழியே பறந்து வந்திருக்கும்.

அங்கு வந்தபோது அது எச்சம் இட்டிருக்கும்.

எச்சத்தில் உள்ள பல ஆல  விதைகளுள் ஒன்று முளைத்திருக்கும்.

முதலில் நிலமும், பிறகு மழை நீரும் அதை வளர்த்திருக்கும்.

விதை முளைத்து, கன்றாகி, மரமாகும்வரை  அதற்கு யாரும் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள்.

பல நூறு ஆண்டுகளுக்கு பின்னால் அதன் நிழலை நாம் அனுபவிக்கிறோம்.

ஆல விதையை முளைக்க வைத்து, மரமாக வளர்த்திருப்பவர் கடவுள் மட்டுமே.

காகமும், நிலமும், மழை நீரும் கருவிகளே."

"'Very good. நாமும் இறைவன் கையில் கருவிகளாக பயன்பட வேண்டும்.

முதலில் நமது உள்ளத்தை இறைவாக்கு  விதைகளால் நிரப்ப வேண்டும்.

நாம் எங்கு சென்றாலும் நமது உள்ளமும், இறைவாக்கு விதைகளும் நம்மோடு தான் வரும்.

நாம் எங்கு சென்றாலும் மனிதர்களோடு தான் பழகுகிறோம்.

நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களோடு மட்டுமல்ல,

நமக்கு முன்பின் தெரியாத மனிதர்களோடும் பழக நேரிடும்.

புகைவண்டியிலோ, பேருந்திலோ பயணம் செய்ய நேர்ந்தால்,

தற்செயலாக நம்முடன் பயணம் செய்பவர்கள் பயண நண்பர்களாக மாறி விடுவார்கள்.

பயண நேரத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பதில்லை.

பயண நேரம் முழுவதும் பேசிக்கொண்டே இருப்போம்.

உள்ளத்தில் இருப்பது தான் சொல் வடிவத்தில் வாய் வழியே வெளியே வரும்.

நமது அனுபவங்களை வார்த்தைகளின் வழியே பரிமாறிக் கொள்ள நேரிடும்..

அப்படி பரிமாறும்போது இறைவாக்கு விதைகளை நம்மிடம் பேசிக் கொண்டிருப்பவர்கள் காதில் விதைக்க வேண்டும்.

காதில் விதைக்கப் பட்ட விதை அவர்களது கருத்துக்குள் நுழையும்.

அப்புறம் அந்த இறைவாக்கு விதையை முளைக்க வைத்து, வளர்த்து பலன் தர வைப்பது கடவுள் பொறுப்பு.

நாம் கடவுள் கையில் கருவிகளாக செயல்படுகிறோம்.

நாம் விதைத்த இறைவாக்கு விதைகளில் எத்தனை முளைத்தன என்பது நமக்குத் தெரியாது.

நமக்கு தெரியாத இடத்தில் அவை முளைத்து பலன் கொடுத்துக் கொண்டிருப்பது கடவுளுக்கு மட்டும் தெரியும்.


"அவன் (விதைத்தவன்) இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. 

 நிலம் தானாகவே பலன் அளிக்கிறது: 

முதலில் பயிர், பின், கதிர், அதன்பின் கதிர்நிறைய மணி."
(மாற். 4:27, 28)
இவை இயேசுவின் வார்த்தைகள்."

"இப்போது ஒன்று புரிகிறது.

மற்றவர்களோடு பேசும்போது அர்த்தம் இல்லாத அரட்டைகளையும்,

 பிறரைப்பற்றி கெடுத்துப் பேசும் பேச்சுக்களையும்,

கோள்களையும்,

நமது கஷ்டங்களைப் பற்றிய புலம்பல்களையும்

தவிர்க்க வேண்டும்.

இவற்றோடு இறைவாக்கு வராது.

பயன்தரும் பேச்சுக்களோடு இறை வாக்கையும் கலந்து பேச வேண்டும். 

"நான் இப்போது உங்களோடு இறை வாக்கைப் பற்றி பேசப்போகிறேன்"  என்று சொல்லிக்கொண்டு பேச்சை ஆரம்பிக்க தேவையில்லை.

அப்படி ஆரம்பித்தால் எதிரில் இருப்பவர் எழுந்து போய்விட வாய்ப்பு இருக்கிறது.

தாய் குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது குழந்தையோடு கொஞ்சிக் கொண்டே, 

மருந்தை தேனோடு கலந்து கொடுப்பது போல,

நமது இறைவாக்கு பகிர்வும் இருக்க வேண்டும்.

மகிழ்ச்சிகரமாக நமது அனுபவங்களைப் பகிரும்போது அவற்றோடு இறைவாக்கையும் பகிர வேண்டும்.

நம்மோடு பேசுபவர்கள் அறியாமலேயே இறைவாக்கு அவர்களது சிந்தனைக்குள் சென்று விடும்.

சாப்பிடுவது மருந்து என்று தெரியாமலேயே குழந்தை தேனோடு அதை விழுங்கி விழுவது,

இறைவாக்கு என்று தெரியாமலேயே அதை மனதுக்குள் ஏற்றுக்கொள்வர்.

குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற மருந்து அங்கிருந்து வேலை செய்வது போல,

இறைவாக்கும் ஏற்றுக் கொண்டவருடைய மனதில் இருந்து அதன் வேலையைச் செய்யும்."

"'உண்மையில் குருவானவர் பிரசங்கத்தில் கொடுப்பதை விட 

அதிக பயன் தரும் முறையில் விசுவாசிகள் தங்களது விசுவாச பகிர்வின் மூலம்  

விசுவாசத்தை பகிர முடியும்.

ஒருமுறை ஒரு குருவானவர் தனது ஆன்மீக பணிகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு 12 மணிக்கு படுக்கைக்கு சென்றார்.

அப்போது அவரது போன் அலற ஆரம்பித்தது.

சாமியார் போனை எடுத்து, 
காதில் வைத்து,

"ஹலோ!" என்றார்.

"சுவாமி வணக்கம். உங்களது பங்கு மக்களின் ஒருவன் பேசுகிறேன்."

"என்ன வேண்டும்? சொல்லுங்கள்."

"சுவாமி, தூக்கம் வரவில்லை."

"உங்களுக்கு தூக்கம் வரும்படி செபிக்கிறேன்."

"செபம் தேவையில்லை, சுவாமி. ஒரு பிரசங்கம் வையுங்கள்."

சிலருக்கு பிரசங்க நேரத்தில்தான் தூக்கம் வரும்.

ஆனால் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது தூக்கம் வராது. பேசுவதில் ஆர்வம் இருக்கும். இறைவாக்கை விதைக்க பொருத்தமான நேரம்.

இதற்காகத்தான் சில குருவானவர்கள் உரையாடல் பாணியில் பிரசங்கம் வைக்கிறார்கள்.

சொற்பொழிவை விட உரையாடல் அதிக பலன் தருகிறது.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இறைவாக்கை விதைத்து கொண்டே செல்வோம்.

விதைக்கப்படும் நிலம் எப்படிப்பட்டது என்ற கவலை நமக்கு வேண்டாம்.

விதைப்பது நமது கடமை.

விதைக்கு உரியவர் அது முளைத்து பலன் தருவதை பார்த்துக் கொள்வார்.

லூர்து செல்வம்.

நம் ஆன்மாவைக் காத்துக் கொள்வதற்காக விசுவாசத்தில் வாழ்பவர்கள்." (எபிரே.10:39)

"நம் ஆன்மாவைக் காத்துக் கொள்வதற்காக விசுவாசத்தில் வாழ்பவர்கள்." (எபிரே.10:39)

''தாத்தா, ஊரோடு ஒத்துவாழ் என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது.

அப்படி வாழ்ந்தால் தான் சண்டை சச்சரவுகள், அமைதியின்மை, ஏற்படாது என்று சொல்லுவார்கள்.

ஆண்டவரது நற்செய்திப் போதனைப்படி வாழ்பவர்களால் இந்த பழமொழிப் படி வாழ முடிவதில்லை.

நாம் எப்படி வாழ வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

'"நீ கேட்பது "லூர்து சாமி, உன் பெயர் என்ன?"

 என்று கேட்பது போல் இருக்கிறது.

ஆண்டவரது நற்செய்திப் போதனைப்படி வாழ வேண்டும் என்ற பதில் உனது கேள்வியிலேயே இருக்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நமது ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்ளும்படி விசுவாசத்தோடு வாழ வேண்டும்.

நம்மைச் சுற்றி வாழ்பவர்களைத்தான் ஊர் என்கிறோம்.

அவர்கள் இயேசுவின் போதனைப்படி தங்கள் ஆன்மாவை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தோடு மட்டும் வாழ்ந்தால்,

நாம் அவர்களோடு ஒத்து வாழ வேண்டும்.

ஏனென்றால் அவர்களுக்கும் நமக்கும் நோக்கம் ஒன்றே.

ஆனால் ஊரார் தங்கள் ஆன்மாவை பற்றி கவலைப்படாமல்,

தங்கள் உடல் சார்ந்த நோக்கத்தோடு மட்டும் வாழ்ந்தால் 

அவர்களோடு ஒத்து வாழக் கூடாது.

நமது ஆன்மாவைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு ஊரோடு ஒத்து வாழ வில்லை.

அப்படி வாழ்ந்திருந்தால் அவரை சிலுவையில் அறைந்து கொன்றிருக்க மாட்டார்கள்.

அவரைப் பின்பற்றி வாழ்ந்த அவரது சீடர்களையும் கொன்றிருக்க மாட்டார்கள்."

"நாம் இயேசுவைப் போல் வாழ்ந்தால் நமக்கும் இயேசுவுக்கு நடந்தது போல் தானே நடக்கும்!"

"'நிச்சயமாக.

நமக்கும் சிலுவைகள் வரும்.
நாமும் அவரைப் போல சிலுவைகளை சுமந்து தான் ஆக வேண்டும்.

அப்போதுதான் நாம் இயேசுவின் சீடர்கள்.

உலகம் நம்மை வெறுக்கும்.

இயேசுவுக்காக உலகத்தின் வெறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்."

"கடவுள் நம்மை ஆன்மாவோடும், உடலோடும் படைத்தார்.

நமது உடலை முதலில் படைத்து விட்டு தான் அதற்கான ஆன்மாவைப் படைத்தார்.

நமது உடல் நல்ல நிலைமையில் இருந்தால்தான் நமது ஆன்மா அதோடு வாழும்.

உடல்நிலை மோசமாகிவிட்டால் ஆன்மா உடலை விட்டு பிரிந்து விடும்.

ஆன்மா உடலோடு வாழ்ந்தால் தானே நம்மால் இறைவனுக்கு ஏற்ற புண்ணிய வாழ்வு வாழ முடியும்.

அப்படியானால் நமது உடலையும் பேண வேண்டியது அவசியம் தானே.

அப்படியானால் உடல் சார்ந்த காரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில் என்ன தவறு?"

"'அருவியில் குளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு குற்றாலத்திற்குப் போக விரும்புகிறாய்.

குற்றாலத்திற்குப் போக கார் வேண்டும்.

குற்றாலத்திற்குப் போவதற்காகக் கார் வேண்டுமா?

அல்லது

காரில் பயணிக்க வேண்டும் என்பதற்காகக் குற்றாலத்திற்குப் போகிறாயா?"


"குற்றாலத்திற்குப் போவதற்காகத்தான் கார் வேண்டும்."

"'அதேபோல்  உலகில் நமது ஆன்மா வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நமக்கு உடல் தரப்பட்டிருக்கிறது.

உடல் வாழ வேண்டும் என்பதற்காக ஆன்மா படைக்கப்படவில்லை.

ஆன்மாவிற்காகத்தான் உடல்,
உடலுக்காக ஆன்மா இல்லை.

நாம் உலகில் படைக்கப்பட்டிருப்பது ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காக மட்டுமே,

நமது ஆன்மீக வாழ்வில் உதவுவதற்காக மட்டுமே உடல் சார்ந்த வாழ்வு.

ஆகவே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஆன்மீக வாழ்வுக்கு மட்டுமே.

அதற்காக மட்டுமே நமது உடலை பேண வேண்டும்.

ஆன்மீக வாழ்வுக்காக உடலைப் பேணினால் அதுவும் ஆன்மீக வாழ்வு தான்.

நாம் உடல் நலம் உள்ளவர்களாக இருந்தால் தான் கோவிலுக்கு ஒழுங்காக போக முடியும்,

உழைத்து, பொருள் ஈட்டி அதைக் கொண்டு பிறருக்கு உதவ முடியும்.

கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதும்,

பிறருக்கு உதவுவதும் ஆன்மீக காரியங்கள்.

இது போன்ற ஆன்மீக காரியங்களை செய்வதற்காக மட்டுமே நாம் நமது உடல் நலனை பேண வேண்டும்.

சகலவித வசதிகளோடு வாழ வேண்டும் என்பதற்காக பொருள் ஈட்டுவதற்காக கோவிலுக்குப் போகாமல் உழைத்தால்,

உடல் சார்ந்த வாழ்வுக்காக ஆன்மீக வாழ்வைத் தியாகம் செய்கிறோம்.

ஆன்மாவைக் காப்பாற்றுவதற்காக உடலைத் தியாகம் செய்ய வேண்டும்.

ஆனால் உடலைக் காப்பாற்றுவதற்காக ஆன்மாவைத் தியாகம் செய்யக்கூடாது.

நமது ஆண்டவர் இயேசு நமது ஆன்மாவை காப்பாற்றுவதற்காக 

அவரது உடலால் பாடுகள் பட்டு, 
அவரது உடலைச் சிலுவையில் அறைய அனுமதி கொடுத்தார்.

இதனால் அவரது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தது.

நமக்காக அவர் மரணம் அடைந்தார்."

"அதாவது ஆன்மீக வாழ்வுக்காக நமது உடலைப் பேணலாம் அல்லது இழக்கலாம்.

ஆனால் லௌகீக வாழ்வுக்காக ஆன்மாவை இழந்து விடக்கூடாது.

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? 

ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்?"
(மத்.16:26)

"'Correct. ஆன்மாவை காப்பாற்ற வேண்டுமென்றால் நமது ஆண்டவரது நற்செய்தி போதனையை விசுவசித்து அதன்படி வாழ வேண்டும்.

பைபிளை வாசிப்பதின் மூலமும்,
சுவாமியாரது பிரசங்கங்களைக் கேட்பதின் மூலமும் நற்செய்தியை அறிந்தால் மட்டும் போதாது,

அதை விசுவசித்து அதன்படி வாழ வேண்டும்.

வசனங்களை மேற்கோள் காட்டுவதற்கும்,

வினாடிவினாத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவதற்கும் 

பைபிளை வாசிப்பதால் ஒரு பயனும் இல்லை.

உள்ளத்தில் இருக்கும் இறைவசனத்தை நமது வாழ்வாக மாற்றினால் தான் பைபிள் வாசித்ததின் பயனைப் பெறுவோம்."

"ஊரோடு ஒத்துப் போக முடியாவிட்டாலும் ஊரை நம்மோடு ஒத்துப் போக வைக்கலாம் அல்லவா?"

"'நீங்கள் உலகின் ஒளி என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

ஒளியால் யாருடைய கண்ணிலும் படாமல் இருக்க முடியாது.

நம்மைப் பார்ப்போர் நம்மில் வாழும் ஒளியாம் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

நம்மைப் போல் அவர்களும் இயேசுவைப் பின்பற்றி வாழ வேண்டும்.

ஆன்மீக வாழ்வில் மற்றவர்கள் நம்மோடு இயேசுவைக் காண வரும்படி வாழ்வதுதான் உண்மையான விசுவாச வாழ்வு.

வாழ்வோம்.

வாழவைப்போம்.

அதுதான் விசுவாச வாழ்வு.

லூர்து செல்வம்.

Tuesday, January 24, 2023

"தாத்தா, கணக்குப் புரியாத மாணவன் ஆசிரியரிடம் விளக்கம் கேட்பது போல நான் உங்களிடம் கேட்கிறேன்."(நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி.)

"தாத்தா, கணக்குப் புரியாத மாணவன் ஆசிரியரிடம் விளக்கம் கேட்பது போல நான் உங்களிடம் கேட்கிறேன்."
(நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி.)

"தாத்தா, கணக்குப் புரியாத மாணவன் ஆசிரியரிடம் விளக்கம் கேட்பது போல நான் உங்களிடம் கேட்கிறேன்.

எனக்குப் புரியும் வகையில் உங்களது பதில் இருக்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறோம். 

நம்மைப் படைத்த கடவுளை நாம் நேசிக்க வேண்டும்.

ஆனால் நமது அயலானை நாம் ஏன் நேசிக்க வேண்டும்?"

"'கடவுள் நம்மை தனிப்பட்ட மனிதனாக மட்டும் படைக்கவில்லை,

ஒரு சமூகத்தின் உறுப்பினராகவும் படைத்திருக்கிறார்.

Man has been created by God as a social being.

ஆகவே நாம் நம்மைப் படைத்த கடவுளை நேசிப்பதோடு அவரால் படைக்கப்பட்ட சமூகத்தையும் நேசிக்க வேண்டும்.

சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் நம்மை போலவே கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.

நாம் ஒரு சமூகப் பிராணியாக இருப்பதால்தான், தனிப்பட்ட முறையில் இறைவனை வழிபடுவதோடு 

சமூகமாக இணைந்து கோவிலிலும்  வழிபடுகின்றோம்.

இறைவனை வழிபடுவது நமது ஆன்மா தான்.

ஆன்மாவின் உணர்வுகளை நமது உடல் பிரதிபலிக்கும்.

உடலின் பிரதிபலிப்பை வைத்துதான் ஆன்மாவின் உணர்வுகளின் தன்மையை அறிந்து கொள்ளலாம்."

"நின்று கொண்டு வழிபடுவதற்கும்,

 முழங்கால்படியிட்டு வழிபடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன்."

"'உறுதியாக. 

நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் செபிக்கலாம்.

ஆனால் இறைவனுக்கு மட்டுமே உரிய ஆராதனையைச் செய்யும்போது முழங்கால் படியிட்டே செய்ய வேண்டும்.

திவ்ய நற்கருணையின் முன் முழங்கால் படியிட்டு ஆராதிப்பது தான் முறை.

திவ்ய நற்கருணைப் பேழையைக் கடந்து செல்லும்போது,

அதன்முன் முழங்கால் படியிட்டுதான் இறைமகன் இயேசுவை  நாம் ஆராதிக்க வேண்டும்."

"அது உங்கள் காலத்தில், தாத்தா.
இப்போது காலம் மாறிவிட்டது.

உங்கள் காலத்தில் நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு நடந்து போயிருப்பீர்கள்.

இப்போது உங்கள் பேரன் நடந்து போவானா?

ஒரு மணி நேர நடை பயணத்தை பைக்கில் ஐந்து நிமிடத்தில் கடக்கும் காலம் இது.

ஒவ்வொரு முறையும் நற்கருணை பேழையைக் கடக்கும் போது முழங்கால் படியிட்டு எழுந்து சென்றால், பாவம், சக்ரஸ்டியன் என்ன செய்வார்?

சாமியார் பூசையை முடிக்க கூட பத்து நிமிடங்கள் ஆகும்.

நாம் வாழ்வது வேக யுகம். 

முழங்கால் படியிடுவதை விட தலையை மட்டும் வணங்கி சென்றால் மிச்சம் பிடிக்கும் நேரத்தில் வேறு எவ்வளவோ வேலைகள் செய்யலாமே."

"'பேரப்புள்ள, இப்போது நீ என்னோடு பேசிக் கொண்டிருப்பதை வீட்டில் இருந்து கொண்டு phoneல் 
பேசியிருக்கலாமே. நேரம் மிச்சமாகுமே."

''தாத்தா, நேரம் மிச்சம் ஆவதை விட நமது உறவு வளர்வதுதான் முக்கியம்.

நாம் முகத்தோடு முகம் பார்த்து பேசும்போது வளரும் உறவின் அளவுக்கு போனில் பேசினால் வளராது."

"'உள்ளத்தில் இருக்கும் பக்தியின் தன்மை உடலில் 
பிரதிபலிக்கும்போது தெரியும்.

உள்ளத்தில் நற்கருணை ஆண்டவரை ஏற்றுக்கொண்டு, அவரை உண்மையிலேயே ஆராதிக்க விரும்பினால்,

நமது முட்டு தானாகவே வளைந்து பூமியை நோக்கி செல்லும்.

உண்மையிலேயே உள்ளத்தில் பக்தி அதிகமானால் முழங்கால் படியிடு என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

முழங்கால் படியிட்டு ஆராதிப்பவன் தலையை மட்டும் வணங்கி ஆராதிக்க ஆரம்பித்தால் அவனது பக்தி குறைகிறது என்று தான் அர்த்தம்.

திவ்விய நற்கருணை விஷயத்தில் நாம் செய்யும் மாற்றங்கள் நற்கருணை பக்தியைக்' குறைக்கவே உதவுகின்றன.

மாற்றங்கள் பக்தியை அதிகரிக்க வேண்டும்.

பீடத்தின் மையத்தில் இருந்த நற்கருணைப் பேழையை ஒரு பக்கவாட்டில் மாற்றி வைத்திருப்பது எந்த வகையில் பக்தியை அதிகரிக்கிறது?

முழங்கால் படியிட்டு நாவில் வாங்கிய நற்கருணையை 
நட்டமாய் நின்று கொண்டு இடது கையால் வாங்குவது
எந்த அளவுக்கு நற்கருணை பக்தியை அதிகரிக்கிறது?"

"பக்தி மனதில் தானே இருக்க வேண்டும்!"

"'மரியாதை மனதில் தானே இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு

 வகுப்பிற்குள் ஆசிரியர் நுழையும்போது மாணவர்கள் எழுந்து நிற்காவிட்டால் 

அந்த மாணவர்கள் எப்படிப்பட்டவர்கள்?"

"தாத்தா, குருவானவர் 
நடுப்பூசையின்போது அப்பத்தை கையில் எடுத்து,

" இது என் சரீரம்"

 என்று சொல்லும் போது அப்பம் இயேசுவின் சரீரமாக மாறுகிறது. 

அதைக் குருவானவர் விசுவாசிகளுக்கு ஆன்மீக உணவாக அளிக்கிறார்.

நற்கருணைப் பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் ஓஸ்திகளின் எண்ணிக்கை விசுவாசிகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால் சாமியார் என்ன செய்வார்?"

"'ஒரு ஓஸ்தியைப் பிரித்து எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாமே.

ஒவ்வொரு துண்டிலும் இயேசு முழுமையாக இருக்கிறார்.

துண்டில் மட்டுமல்ல ஓஸ்தியின் ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார்.
 
Jesus  is present whole and entire even in the smallest portion of the Holy Eucharist."

"தாத்தா, சுவாமியார் விசுவாசியின்  கையில் திவ்ய நற்கருணையை வைக்கும்போது

 அதிலுள்ள துகள்கள், ஒன்றோ, இரண்டோ, கையில் விழ வாய்ப்பு இருக்கிறதா?"

"" இருக்கிறது."

"கையில் உள்ள துகள்கள் தரையில் விழ வாய்ப்பு இருக்கிறதா?"

"" இருக்கிறது."

"தரையில் விழும் துகள்கள் அங்கே நடப்பவர்கள் கால்களில் மிதிபட வாய்ப்பு இருக்கிறதா?"

"" இருக்கிறது."

"அப்படி மிதி பட்டால் 
மிதிபடுபவர் 
நமது ஆண்டவராகிய இயேசு தானே.

 இது நற்கருணையைக் கொடுக்கும் சாமியாருக்கு தெரியுமா?"

"அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

பேரப்புள்ள, நான் 14 ஆண்டுகள் தேவ சாத்திரம் படிக்கவில்லை.

ஏதோ பள்ளிப் பருவத்தில் படித்த ஞானோபதேசத்திலிருந்தும், 

சுவாமியார் வைக்கிற பிரசங்கங்களிலிருந்தும் தெரிந்து கொண்டதை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன்.

நீ கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் 

படித்து குருப் பட்டம் பெற்ற,

திருச்சபையில் ஆளுமை அதிகாரம் கொண்ட குருக்களிடம்தான்  கேட்க வேண்டும்."

"தாத்தா, நான் தேவ சாத்திரம் சம்பத்தப்பட்ட கேள்வி கேட்கவில்லை.

நான் கேட்பது பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்வி.

அன்று சிலுவையின் பாரம் தாங்க மாட்டாமல் தரையில் விழுந்த அதே இயேசு,

இன்று நாம் செய்யும் தவற்றைத் தாங்க மாட்டாமல் நமது ஆலய தரையில் விழுந்திருக்கிறார்.

அவர் மேல் மக்கள் நடந்தால் மிதியப்படுபவர் அவர் தானே என்று

 அவரையே நமக்கு உணவாகத் தந்த  சாமியாருக்குத் தெரியுமா என்று தான் கேட்டேன்."

"'பேரப்பிள்ளை இயேசுவைக் கையில் வாங்குகிறவர்கள் நாம்,

  தரையில் போடுகிறவர்கள் நாம்,

ஏறி மிதிப்பவர்களும் நாம்.

இந்த உண்மை நமக்குதான் முதலில் தெரிய வேண்டும்.

இயேசுவை அவமானப்படுத்தும் எந்த செயலையும் நாம் செய்யக்கூடாது என்று நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

இத்தகைய அவமானம் இயேசுவுக்கு நேரிடக்கூடாது என்பதை நாம் உணர வேண்டும்.

உணர்ந்தால் நற்கருணையை கையில் வாங்க மாட்டோம், 

நாவில் தான் வாங்குவோம்.

நாம் நமது வாயைத் திறந்து, நாக்கை நீட்டினால் குருவானவர் நற்கருணையை அதில்தான் வைப்பார்.

கையில் வைக்க மாட்டார்.

முதலில் நாம் திருந்துவோம்.

இயேசுவை நாவில் வாங்குவோம்.

 சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அவரை ஆராதிப்போம்.

இன்னும் ஒரு முக்கியமான உண்மை.

நமது திருச்சபையை வழி நடத்துபவர் பரிசுத்த ஆவியானவர் தான்,  மனிதர்கள் அல்ல.

ஆகவே திருச்சபைக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்.

குருவானவரைத் தாயாக நினைப்போம்.

அவர் தரும் ஆன்மீக உணவை நமது வாயிலையே வாங்குவோம்.

இயேசுவின் உடலை உண்ணும் நாம் அவரோடு என்றென்றும் இறையுலகில் வாழ்வோம்."

''சரி, தாத்தா. நான் நற்கருணையை நாவில் தான் வாங்குகிறேன்.

தொடர்ந்து நாவிலேயே வாங்குவேன்."

லூர்து செல்வம்.

Monday, January 23, 2023

"கிறிஸ்து பிளவு பட்டிருக்கிறாரோ? சின்னப்பனா உங்களுக்காகச் சிலுவையில் அறையப் பட்டான்? அல்லது சின்னப்பன் பெயராலா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?"(1கொரி.1:13)

"கிறிஸ்து பிளவு பட்டிருக்கிறாரோ? 
சின்னப்பனா உங்களுக்காகச் சிலுவையில் அறையப் பட்டான்?
 அல்லது சின்னப்பன் பெயராலா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?"
(1கொரி.1:13)

"'என்னடா, பேரப்புள்ள. வந்த நேரத்திலிருந்து Phone ஐயே நோண்டிக்கிட்டிருக்க?"

''நோண்டல, தாத்தா, தேடிக் கொண்டிருக்கிறேன்."

'''என்னத்த?"

"YouTubeல சாமிமார் பிரசங்கம் வைப்பாங்க தெரியுமா?"

"'பிரசங்கம் கோவிலில் தான் வைப்பார்கள். அதை YouTube க்கு Upload பண்ணுவார்கள்."

"அதற்குப் பிறகு அது அங்கே தான் இருக்கும்.

அதைத்தான் தேடித்தான் மக்கள் போவார்கள்.

என்னுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இதுதான் முக்கிய வேலை.''

"'ஏன் கோவிலில் பங்கு சாமியார் வைக்கும் பிரசங்கத்தைக் கேட்க மாட்டார்களா?"

"கேட்பார்கள். வீட்டுக்கு வந்த பிறகு YouTube க்குப் போய்,

அங்கேயும் மற்ற சாமிமார் வைக்கும் பிரசங்கங்களை கேட்டுவிட்டு,

சண்டை போடுவார்கள்."

"'ஏன்? கணவன் மனைவி சண்டை போட வேண்டும் என்று பிரசங்கத்தில் சொல்ல மாட்டார்களே!"

"நான் கேட்ட பிரசங்கம் தான் நன்றாக இருந்தது என்று அப்பா சொல்வார்.

அதையே அம்மாவும் சொல்வாங்க.

சண்டை வந்துவிடும்."

"'அதையே சொன்னால் ஏன்டா சண்டை? மாற்றிச் சொன்னால் தான் பிரச்சனை, அப்பா சொன்னதையே அம்மா சொன்னால் என்ன பிரச்சனை?"

"தாத்தா, புரியாதது மாதிரி பேசாதீங்க. அதே வார்த்தைகளை, அதே உண்மையை அல்ல.

நகைச்சுவையாக பேசும் சாமியார் வைக்கும் பிரசங்கம் அப்பாவுக்கு பிடிக்கும்.

அம்மாவுக்கு நகைச்சுவை 
பிடிக்காது.

 நகைச்சுவை இருக்கும் இடத்தில் விசயம் இருக்காது என்பது அம்மா எண்ணம்."

"'அப்போ இருவருக்குமே ஆண்டவரது வார்த்தைகள் பிடிக்காது.

ஆண்டவரது வார்த்தைகள் பிடித்தால் அதை எப்படி சொன்னாலும் பிடிக்க வேண்டுமே!

நான் விரும்புகிறபடி சொன்னால் தான் பிடிக்கும் என்றால் எனக்கு பிடித்தது எனது விருப்பம் தான், ஆண்டவர் அல்ல."

"ஒருவருக்கு பங்கு சாமியார் சொல்வது பிடிக்கிறது.

இன்னொருவருக்கு உதவிப் பங்கு சாமியார் சொல்வது பிடிக்கிறது.

விளைவு? ஒரு பங்கிற்குள் இரண்டு பிரிவுகள்."

"'அதைத்தான் சின்னப்பர் சொல்லுகிறார்.


உங்களுள் ஒவ்வொருவரும், "நான் சின்னப்பரைச் சேர்ந்தவன், 

நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன், 

நான் கேபாவைச் சேர்ந்தவன்,

 நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்" 

என்று பலவாறு சொல்லிக் கொள்ளுகிறீர்களாம்.

 கிறிஸ்து பிளவு பட்டிருக்கிறாரோ? 

சின்னப்பனா உங்களுக்காகச் சிலுவையில் அறையப் பட்டான்?

 அல்லது சின்னப்பன் பெயராலா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
(1கொரி.1:12,13)

சின்னப்பரும், அப்பொல்லோவும்,
கேபாவும் ஒரே கிறிஸ்துவைப் பற்றி தான் போதித்தார்கள்.

ஒரே கிறிஸ்துவை நம்புபவர்கள் நான்கு பிரிவினராய் இருந்தால்,

அவர்கள் உண்மையில் கிறிஸ்துவை நம்பவில்லை.

தங்களது எண்ணத்தைத்தான் நம்புகிறார்கள்.

கிறிஸ்தவனின் நம்பிக்கை கிறிஸ்துவை மட்டுமே மையமாக கொண்டிருக்க வேண்டும்.

இன்று கிறிஸ்துவை நம்புகிறோம் என்று சொல்லிக் கொண்டு 40,000 பிரிவினை   சபையினர் இருக்கிறார்கள் என்றால்,

உண்மையில் அவர்களில் ஒரு பிரிவினர்கூட கிறிஸ்துவை நம்பவில்லை.

தங்களது நம்பிக்கைக்கு கிறிஸ்து என்று பெயரை வைத்திருக்கிறார்கள்.

அவ்வளவுதான்.

அவர்கள் பைபிள் என்ற பெயரால் வைத்திருக்கும் புத்தகம் உண்மையில் பைபிள் அல்ல.

குதிரைக்கு யானை என்று பெயர் வைத்து விட்டால் குதிரை யானையாகுமா?

மகன் தந்தையுள்ளும்,
 தந்தை மகனுள்ளும் இருப்பது போல கிறிஸ்தவர்களும் அவர்களுள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தந்தையை நோக்கி செபித்தவர் கிறிஸ்து.

எங்கே ஒற்றுமை இல்லையோ அங்கே கிறிஸ்தவம் இல்லை.

கிறிஸ்து ஏற்படுத்திய ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபையை விட்டு பிரிந்து போகும் போதே

 அவர்கள் கிறிஸ்துவை விட்டு பிரிந்து போய்விட்டார்கள்.

கிறிஸ்து என்ற பெயரை வியாபாரப் பொருளாக மாற்றி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கணித ஆசிரியர் மாணவர்களிடம் கணித உண்மைகள் மாறாது என்று சொல்லிவிட்டு,

இரண்டும் இரண்டும் நான்கு என்ற உண்மை மாறுமா?  என்று கேட்டார்.

ஒரு மாணவன் எழுந்து,

"என்னிடம் ஒரு சாக் பீசைக் கொடுங்கள், நான் மாற்றி காண்பிக்கிறேன்" என்றான்.

ஆசிரியர் கொடுத்தார்.

மாணவன் கரும் பலகைக்குச் சென்று,

2 + 2 = 5. என்று எழுதினான்.

இதே போல் தான் கிறிஸ்து என்று சொல்லிக்கொண்டு அவள் பெயரால் தங்கள் இஷ்டப்படி போதித்துக் கொண்டிருக்கிறார்கள்."

"அது ,உண்மைதான் தாத்தா.
ஆனால் இன்று கத்தோலிக்க சபைக்குள் இருப்பவர்களிடம் கூட ஒற்றுமை இல்லையே.

நமது செயல்பாடுகள் நாம் நம்புகிறோம் என்று கூறுவதற்கு ஏற்றதாக இல்லையே.

கத்தோலிக்க திருச்சபை இயேசுவால் உருவாக்கப்பட்டு 2000 ஆண்டுகளை கடந்து விட்டன.

இயேசுவின் போதனைகள் தான் அதன் கொள்கைகள்.

அனைவரும் ஒரே விசுவாச சத்தியங்களைத் தான் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் அவற்றை நமது வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தும் போது,

பழமைவாதிகள், புதுமை விரும்பிகள் என இரு சாரார் தோன்றியிருக்கிறார்கள்.

பழமைவாதிகள் தேவையற்ற மாற்றங்களை விரும்புவதில்லை.

தேவையற்ற மாற்றங்கள் விசுவாச சத்தியங்களின் பொருளைப் புரிய விடாமல் செய்து விடுமோ என்று பயப்படுகிறார்கள்.

புதுமை விரும்பிகள் காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

இதை விளக்க ஒரு விசுவாச சத்தியத்தை எடுத்துக் கொள்வோம்.

இயேசு கடைசி இரவு உணவின் போது அப்பத்தைத் தனது உடலாகவும்,

 ரசத்தை தனது ரத்தமாகவும் மாற்றி அப்போஸ்தலர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.

அப்போஸ்தலர்கள் அவர்களோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்து வந்த அதே இயேசுவைத் தான் உணவாக உண்டார்கள்.

அப்போது அவர்களுக்கு குருப் பட்டம் கொடுத்து,

அப்பத்தை அவரது உடலாகவும் ரசத்தை அவரது ரத்தமாகவும் மாற்றக்கூடிய வல்லமையைக் கொடுத்தார்.

அதே வல்லமையைத்தான் அப்போஸ்தலர்களின் வாரிசுகளாகிய நம்முடைய குருக்களும் பெற்றிருக்கிறார்கள்.

நமது குருக்கள் திருப்பலியின் போது 

33 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்த அதே இயேசுவைத்தான் 

நமக்கு திவ்ய நற்கருணை வழங்கும்போது உணவாகத் தருகிறார்கள்.

நற்கருணை விருந்தின் போது நம்மிடம் வருபவர் சர்வ வல்லமை உள்ள இறை மகனாகிய இயேசு.

கடவுள் உண்மையாகவே நம்மிடம் வரும்போது நம்மிடம் எவ்வளவு பயமும், பக்தியும் இருக்க வேண்டும்!

நமது பக்தி உணர்வை முழுமையாக காட்டுவதற்கும்,

கடவுளுக்கு உரிய ஆராதனையை செலுத்தும் விதமாகவும்,

திவ்ய தற்கருணை வாங்கும்போது முழங்காலில் இருந்து,

கடவுளாகிய அவரை நமது நாவில் வாங்கினோம்.

இது திருச்சபையின் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வரும் நடைமுறை.

இந்த நடைமுறையில் மாற்றம் எதுவும் ஏற்படக்கூடாது என்று 
பழமைவாதிகள் விரும்புகிறார்கள்.

புதுமை விரும்பிகள் அதே இயேசுவை நட்டமாய் நின்று கொண்டு,

 இடது கையால் வாங்கி,

வலது கையால் எடுத்து அவர்களாகவே நாவில் வைத்துக் கொள்கிறார்கள்."

"'அவ்வாறு செய்வதற்கு இயேசுவால் உருவாக்கப்பட்ட திருச்சபைதானே அனுமதி வழங்கியிருக்கிறது என்பது உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

அனுமதி வழங்க அதற்கு அதிகாரம் உண்டு  என்பதுவும் உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

"வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன்.

 எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்.

 எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்" (மத்.16:19)

என்பது இயேசு திருச்சபையின் தலைவருக்குக் கொடுத்திருக்கும் அதிகாரம்.

இயேசு கொடுத்திருக்கும் அந்த அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியது நமது கடமை என்பது உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்."

"தாத்தா, நான் எதுவும் தெரியாமல் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை.

எதற்கும் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

விளக்கம் கேட்பதற்காக நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

கணக்குப் புரியாத மாணவன் ஆசிரியரிடம் விளக்கம் கேட்பது போல நான் உங்களிடம் கேட்கிறேன்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

Thursday, January 19, 2023

பாவ மன்னிப்பு. (தொடர்ச்சி)

பாவ மன்னிப்பு. (தொடர்ச்சி)

.
"தாத்தா,  உலகில்  இன்னும் பாவம் இருக்கிறதே.

அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"'மனிதனைக் கடவுள் முழுமையான  சுதந்திரத்தோடு படைத்தார்.

மனிதன் தனது சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில் இறைவன் குறுக்கிடுவதில்லை.

உலகம் முடியும் மட்டும் மனிதர்கள் இருப்பார்கள்.

அவர்களுடன் சுதந்திரமும் இருக்கும்.

ஆகவே மனிதன் பாவம் செய்வதை நம்மால் தடுக்க முடியாது.

ஆகவேதான் பாவங்களை மன்னிப்பதற்கென்றே மனிதனாகப் பிறந்த இறைமகன் 

 அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.

அவர் கத்தோலிக்க திருச்சபையை ஏற்படுத்தியதன் நோக்கமே 

நாம் பாவ மன்னிப்பு பெற்று, பரிசுத்தமாய் வாழ்ந்து விண்ணகத்திற்குச் செல்ல நம்மை தயார் படுத்தி கொள்வதற்காகத்தான்.

ஞானஸ்நானம் பெற்றால் தான் திருச்சபையின் அங்கத்தினர் ஆக முடியும்.

ஞானஸ்நானத்தின் நோக்கம் என்ன?

நமது சென்மப் பாவத்தை மன்னிப்பது. .

பாவ மன்னிப்பு பெறும்போதுதான் நாம் திருச்சபைக்குள் நுழைகிறோம்.

அதிலிருந்து பாவமன்னிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட மற்ற தேவத் திரவிய அனுமானங்களும்  

பாவ மன்னிப்பையே மையமாகக் கொண்டிருக்கிறன.

பாவ மன்னிப்பு பெற்ற பின்பு தான் உறுதிப்பூசுதல் பெற முடியும்.

அது நாம் பாவத்தில் திரும்ப விழாதிருக்கவும்,

நமது விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும்,

பரிசுத்தத்தனத்தில் வளரவும் போதுமான உறுதியைத் தருகிறது.

பாவ சங்கீர்த்தனம் பாவங்களை மன்னிப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்டது.

பாவ மன்னிப்பு பெற்றவர்கள் தான் திவ்ய நற்கருணை விருந்தில் கலந்து கொள்ள முடியும்.

பாவத்தில் விழாதிருக்கவும், ஆன்மீகத்தில் தொடர்ந்து வளரவும் போதிய சக்தியைத் தர நமது ஆண்டவரே நமது ஆன்மீக உணவாக நமக்குள் வருகிறார்.

குருத்துவம் பாவப் பரிகாரப்பலி நிறைவேற்றவும், நமது பாவங்களை மன்னிக்கவும் அதிகாரம் கொண்ட குருக்களை நமக்கு தருகிறது.

அவஸ்தைப் பூசுதல் நமது இறுதி பயணத்தில் நமது பாவங்களை மன்னித்து விண்ணக வாழ்வுக்குள் அனுப்புகிறது.

பாவ மன்னிப்பு பெற்ற பின் தான் திருமண வாழ்வுக்குள் நுழைய முடியும். 

உடல் ரீதியாக காலையில் எழுந்தவுடன் கழிவுப் பொருட்களை வெளியேற்றிவிட்டு,

குளித்து உடலில் உள்ள வியர்வை அழுக்கை போக்காமல் பகலில் பணி செய்ய முடிகிறதா?

அதேபோல் தான் பாவ அழுக்கைப் போக்காமல் ஆன்மீக வாழ்வு வாழ முடியாது.


அப்போஸ்தலர்கள் இயேசு 
சொன்னதையெல்லாம் நன்கு புரிந்துகொண்டு, 

தைரியம் பெற்று, 

நற்செய்தியை போதிக்க ஆரம்பிக்க 

பரிசுத்த ஆவி வருவதற்காக 

பெந்தேகோஸ்து திருநாள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

"தந்தை என் பெயரால் அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியான துணையாளரும் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்துவார்: நான் உங்களுக்குக் கூறியதெல்லாம் நினைவூட்டுவார்." (அரு.14:20)

ஆனால் பாவ மன்னிப்பை கொடுக்கும் அதிகாரத்தை அப்போஸ்தலர்களுக்கு கொடுக்க 

இயேசு உயிர்த்து அவர்களுக்கு காட்சி கொடுக்கும் போதே பரிசுத்த ஆவியைக் கொடுத்து விட்டார். 


"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:

 எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்."
(அரு.20:23)

இதிலிருந்து பாவ மன்னிப்புக்கு இயேசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது தெரிய வருகிறது.

பாவ மன்னிப்புப் பெறாவிட்டால் நற்செய்தியை அறிந்தும் பயனில்லை..

நற்செய்தியை அறிந்த பின்பும்

  பாவங்களோடு வாழ்ந்து மரித்தால்  மோட்சத்திற்குப் போக முடியாது.

" போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."
(மாற்.16:15,16)

எல்லோருக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டியது நமது கடமை.

நற்செய்தியை அறிவதால் மட்டும் ஒருவன் மீட்பு பெற முடியாது.

அதை விசுவசித்து, ஞானஸ்நானத்தின் மூலம் பாவ மன்னிப்பு பெறுபவர்களே மீட்பு பெற முடியும்.

இயேசுவை விசுவசிப்போம்.

அவரிடமிருந்து பாவ மன்னிப்பு பெறுவோம்.

நமது விசுவாசத்தை வாழ்வோம்.

என்றென்றும் அவரோடு விண்ணகத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.








.

Wednesday, January 18, 2023

பாவ மன்னிப்பு.

பாவ மன்னிப்பு.

"தாத்தா, ஒரு கதை சொல்லுங்களேன்."

"'ஏன் திடீரென்று கதை மேல் ஆசை?"

"திடீரென்று வந்த ஆசையல்ல. சிறு பிள்ளைகளுக்கு கதை என்றாலே விருப்பம் என்று உங்களுக்கு தெரியாதா.

நீங்கள் Serious ஆக பேசிக் கொண்டிருந்ததால் கதை கேட்கவில்லை.

இப்பொழுது கேட்கிறேன். ஒரு சிறு கதை சொல்லுங்கள்."

""Serious ஆன விஷயங்களைத்தான் கதை மூலம் விளக்குவது வழக்கம்.

எங்கேயோ, எப்போவோ கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது ,
"இது எனக்கு தான் தெரியுமே" என்று நீ சொல்லக்கூடாது."

"தெரிந்தாலும் சொல்ல மாட்டேன். சொல்லுங்கள்."

"'ஒரு நாட்டில ஒரு ராசா இருந்தாராம்."

"பெயர்?"

"'எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் சொல்லவில்லை.

பெயர் இல்லாமல் கதை சொல்ல முடியாது.

நானே அவருக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்கிறேன்.

Mr. X."

"எங்கள் கணக்கு வாத்தியார் அடிக்கடி சொல்வார், 

''விடையை எக்ஸ் என்று வைத்துக் கொள்வோம்.

அப்புறம் எக்சின் மதிப்பைப் காண்போம்." என்று.

"'சரி, கதையை கேள்.

அவர் நல்ல மன்னர். நாட்டை நல்ல விதமாக, மக்கள் மீது உண்மையான அன்போடு ஆட்சி செய்தார்.

மக்கள் எல்லோரும் அவரை நேசித்தார்கள்.

நாட்டில் சமாதானம் நிலவியது.

நல்லவர்களுக்குத் பிரச்சனைகள் வருவது இயற்கைதானே.

அவருக்கும் ஒரு பிரச்சனை வந்தது, பக்கத்து நாட்டிலிருந்து.

பக்கத்து நாட்டிலும் ஒரு மன்னர் இருந்தார்."

"பெயர்?"

"'கதாநாயகனுக்கே நான்தான் பெயர் வைத்தேன், வில்லனுக்கும் நானே வைக்கிறேன்."

"வில்லனுக்கு நான் பெயர் வைக்கிறேன்.

 Mr. Y. சரியா?"

"'நாம் வைப்பது தான் பெயர்.

வில்லன் என்று சொல்லி விட்டேன்.

ஆகவே அவனை மோசமானவன் என்று சொல்லியாக வேண்டும்.

அவன் மோசமான மன்னன்.

அதிகாரம் மட்டும் செய்யத் தெரியும்.

அன்பு செய்யத் தெரியாது.

பேராசைக்காரன்.

பக்கத்து நாட்டையும் தனது நாட்டோடு இணைத்து அதிகாரத்தோடு ஆள வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

ஆகவே காரணம் எதுவும் இல்லாமல் பக்கத்து நாட்டோடு போர் கொடுத்தான்."

"தாத்தா, காரணம் தான் இருக்கிறதே. பேராசை."

"அதுவும் சரிதான். 

Mr. X தனது படையோடு எல்லையிலேயே அவனைச் சந்தித்து, போரிட்டு, வென்று மன்னனையும், படைகளையும் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தார்."

"தாத்தா, போரைப் பற்றி கொஞ்சம் விளக்கியிருக்கலாம்."

"'நல்ல விஷயங்களைத்தான் விளக்க வேண்டும்.

எதிரி மன்னனையும், படை வீரர்களையும் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தார."

"அதை ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள்."

"'கதை சொல்லும் போது இடை இடையே பேசக்கூடாது.

பேசினால் இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கும்.

அவ்வளவு பெரிய சிறைச்சாலை அந்த நல்ல மன்னரது நாட்டில் இருந்ததா என்று கேட்டு விடாதே.

கதைக்கு தேவையானது எல்லாம் இருக்கும்.

மன்னரது வெற்றியைக் கண்டு அமைச்சர்களும் மக்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

வெற்றியை ஒரு பெரிய விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று எல்லாம் அமைச்சர்களும் ஆசைப்பட்டார்கள்.

அது மட்டுமல்ல விழா ஆரம்பமாகுமுன் கைது செய்யப்பட்ட எல்லா எதிரிகளையும் கொன்று விட வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்கள்.

மன்னர் இரண்டு ஆசைகளையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்."

"'நல்ல மனிதர் என்று சொன்னீர்கள். எதிரிகளைக் கொல்ல வேண்டும் என்று சொன்னதை எப்படி ஏற்றுக் கொண்டார்?"

"'இடையிடையே பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன்.

இனி பேசினால் கதையை நிறுத்தி விடுவேன்."

"சரி, தாத்தா, பேசமாட்டேன்."

"'விழா கொண்டாட ஏற்பாடு செய்யக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

பெரிய அமைப்பில் அழகான வடிவில் மேடையும், பந்தலும் போடப்பட்டன.

விழாவிற்கான நாள் குறிப்பிடப்பட்டது.

விழா நாள் அன்று விழா ஆரம்பம் ஆகுமுன் மன்னர் எதிரிகளை எல்லாம் கொன்று விட வேண்டும்.

அந்த வெற்றி செய்தியுடந்தான் 
விழா ஆரம்பம் ஆக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 

விழா நாளன்று அமைச்சர்கள் மேடையில் அமர்ந்திருக்க,

மக்கள் பந்தலில் அமர்ந்திருக்க,

மன்னர் எதிரிகளைக் கொல்வதற்காக சில படை வீரர்களோடு சிறைச்சாலைக்குச் சென்றார்.

எதிரிகளை எல்லாம் கொன்றார்.

கொன்ற செய்தியோடு மன்னரும், படைவீரர்களும் திரும்பி வரும் காட்சியை காண மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

 மன்னர் திரும்பி வந்து கொண்டிருந்த விதம்தான் ஏமாற்றத்திற்குக் காரணம்,

மன்னரும், எதிரி மன்னரும் கைகோர்த்துக்கொண்டு, 

சிரித்து பேசிக்கொண்டு முன்னால் வர,

கொல்வதற்காகச் சென்ற படைவீடர்களும், எதிரியின் படை வீரர்களும் சேர்ந்து,

 ஆடிப் பாடிக்கொண்டு பின்னால் வந்தார்கள்.

படைவீரர்கள் பந்தலுக்குள் செல்ல,

இரண்டு மன்னர்களும் மேடையில் ஏறினார்கள்.

Mr. X மைக்கைக் கையில் பிடித்துக் கொண்டு,

"அறிவு நிறைந்த அமைச்சர்களே,
அன்பு நிறைந்த என் நாட்டு மக்களே,

நமது எதிரிகள் எல்லோரையும் கொன்றுவிட்ட மகிழ்ச்சியான செய்தியுடன் நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

எனது மகிழ்ச்சியுடன் உங்களது மகிழ்ச்சியும் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்."

என்று சொல்லும்போது ஒரு அமைச்சர் எழுந்தார்.

"அரசே, எல்லா எதிரிகளையும் கொன்று விட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள்.

 ஆனால் அவர்கள் எல்லோரும் இப்பொழுது நமது விழா பந்தலுக்குள் தானே இருக்கிறார்கள்.

எதிரி மன்னரும் விழா மேடையில் தானே இருக்கிறார்."

"பந்தலுக்குள் இருப்பவர்களும்,
மேடையில் நம்மோடு வீற்றிருக்கும் மன்னரும்
இப்போது நமது எதிரிகள் அல்ல. நண்பர்கள்.

எதிரிகளை கொன்றவுடன் அவர்கள் எல்லோரும் நண்பர்களாக மாறிவிட்டார்கள்.

நமக்கு இப்போது எதிரிகள் இல்லை.

கொல்லப்பட்டவர்கள் எப்படி நண்பர்களாக மாற முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.

கொல்லப்பட்டது அவர்களுக்கும் நமக்கும் இடையே இருந்த பகைமை.

பகைமை இறந்தவுடன் பகைவர்கள் நண்பர்களாக மாறிவிட்டார்கள்.

முதலில் நாம் வென்றது நமது பகைவர்களை.

இப்பொழுது நாம் வென்றது அவர்களது பகைமையை.
 
நாம் வென்ற இந்த இரட்டை வெற்றி விழாவைத்தான் இப்போது கொண்டாடப் போகிறோம்."

மகிழ்ச்சி பெருக்கில் மக்கள் கைதட்டிய சப்தம் மேடையையும் பந்தலையும் அதிரச் செய்தது."

"விழா கொண்டாடினார்களா?".

"'Super ஆ கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடினார்கள்.

விழா முடிந்தவுடன் எல்லோருக்கும் விருந்து ஒன்று வைக்கப்பட்டது."

"கதை Super ஆ இருந்தது.

கதை என்றாலே அது ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமே.

இந்த கதை கற்பிக்கும் பாடம் என்ன?"

"'கடவுள் தனது அன்பின் மிகுதியால் நாம் வாழும் உலகை படைத்து,

அவரை அன்பு செய்வதற்காக நம்மையும் படைத்தார்.

நாம் அவருக்கு அன்பு செய்வதற்குப் பதிலாக அவருக்கு விரோதமாக பாவம் செய்து, பாவிகளாக மாறினோம்.

தந்தை இறைவன் தனது ஒரே மகனை பாவிகளாகிய நம்மிடம் அனுப்பினார்." 

"பொறுங்கள். இனி நான் சொல்கிறேன்.

தன்னை எதிர்த்த பாவிகளைத் தேடி வந்தவர், அவர்களைக் கொல்லவில்லை.

மாறாக தனது உயிரை கொடுத்து பாவத்தைக் கொன்றார். 

பாவம் கொல்லப்பட்டவுடன் கடவுளின் எதிரிகளாக வாழ்ந்த பாவிகள் அவருடைய நண்பர்களாக மாறினர்."

"'அதென்ன மாறினர்?

மாறினோம் என்று சொல்லு.
நாம் எல்லோரும் பாவிகள் தான்."

"இயேசுவின் சிலுவை மரணத்தினால் நாம் கடவுளின் நண்பர்களாக மாறினோம். சரியா?"

"ஆனால் தாத்தா இன்னும் பாவம் உலகில் இருக்கிறதே.

அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

(தொடரும்)

லூர்து செல்வம்.

வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே."(கலாத்.2:20)

'வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே."
(கலாத்.2:20)

நாம் வாழ்கிறோம்.

மிருகங்களும் வாழ்கின்றன.

வாழ்வு என்ற வார்த்தை தான் ஒன்றுபோல் இருக்கிறதே தவிர இரண்டு வாழ்க்கையும் ஒன்றல்ல.

மனிதன் சிந்திக்கிறான்,

 சொல்லுகிறான்,

 செயல் புரிகிறான்.

மிருகங்களால்  சிந்திக்க முடியாது.

உள்ளுணர்வின்படி (Instinct) செயல்புரியும்.

மனம் உடையவன் மனிதன்.

மனம் எப்படியோ அப்படியே மனிதன்.

மனம் பரிசுத்தமாக இருந்தால், சொல்லும் செயலும் பரிசுத்தமாக இருக்கும்.

"நல்மனதோற்குச் சமாதானம்" என்பது இறைவாக்கு.

நல்ல மனது உள்ளவர்கள் சமாதானமாக வாழ்வார்கள்.

மனதில் தீய எண்ணங்கள் இருந்தால் சொல்லும் செயலும் தீயனவாகவே இருக்கும்.

தீய எண்ணங்களுக்கு சொந்தமான மனது உள்ளவர்கள் "யாரைக் கெடுப்போம்" என்று சிந்தித்துக் கொண்டே திரிவார்கள்.

"வாழ்வது நான் அல்ல" என்று புனித சின்னப்பர் கூறுகிறார்.

அப்படியானால் வாழ்வது யார்?

அவருடைய மனதை கிறிஸ்துவுக்குக் கொடுத்து விட்டார்

அவரது மனதில் வாழ்வது கிறிஸ்து.

உருவம் புனித சின்னப்பருடையது, 
வாழ்க்கை கிறிஸ்துவினுடையது.

சின்னப்பனுடைய உருவத்தில் கிறிஸ்து வாழ்கிறார்.

"வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே."
என்று ஏன் சின்னப்பர் நம்மிடம் கூறுகிறார்?

அவரைப் பின்பற்றி நாமும் அவர் கூறும் வார்த்தைகளை நம்மைப் பற்றி கூறும் அளவிற்கு நாமும் வாழ வேண்டும் என்ற ஆசையால் தான் 

சின்னப்பர் இந்த வார்த்தைகளை நம்மிடம் கூறுகிறார்.

அவரது வார்த்தைகளை வாசித்து விட்டு அப்படியே விட்டு விட்டோம் என்றால்,

சுவையான உணவை கண்ணால் பார்த்துவிட்டு,

அதன் மணத்தை மூக்கால் நுகர்ந்து விட்டு

சாப்பிடாமல் போனவர்களுக்குச் சமமாவோம்.

அநேக விஷயங்களில் நமது செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன.

திருப்பலிக்குப் போவோம், ஆண்டவரையும், அவரது அருள் வரங்களையும் அள்ளி வருவோம்

வாழ்க்கையில் பயன்படுத்த மாட்டோம்.

குருவானவரது பிரசங்கத்தை கேட்போம்,

ஒரு காது வழியே கேட்டு,
 இன்னொரு காது வழியே வெளியே விட்டுவிட்டு, வெறுமையாய் வீட்டுக்கு வருவோம். 

தினமும் பைபிள் வாசிப்போம்,

 வாசித்தது புத்தியில் இருக்கும்,

 மனதுக்கும் வராது,

 வாயிலும்  வராது,

 செயலிலும் வராது.

தெரியாதவர்கள் வாழ்வதைப் போல தெரிந்தவர்கள் நாமும் வாழ்வோம்.

வாசிக்க பைபிள் இருக்கிறது 

என்று சொல்லிக் கொண்டு

 பைபிள் என்ற புத்தகத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு திரிவதால் ஒரு பயனும் இல்லை.

புத்தகத்தில் இருப்பது பேப்பரும் எழுத்துக்களும் தான். இறைவாக்கு வாசிப்பவர்கள் மனதுக்கு வர வேண்டும்.

கிறிஸ்துவைப் பற்றி அறிந்த பின்னும்,

அவர் நமது மனதில்  குடியேறாவிட்டால்,

கிறிஸ்தவன் என்ற பட்டம் நமக்கு பொருந்தாது.

கிறிஸ்து நம்மில் வாழ்ந்தால் தன்னுடைய எல்லா பண்புகளோடும் வாழ்வார்.

பாலோடு சேர்ந்த தண்ணீர் பாலாகி விடுவது போல,

நம்மில் வாழும் கிறிஸ்துவின் பண்புகளோடு நமது பண்புகளும் சேர்ந்து,

கிறிஸ்துவின் பண்புகள்

 நம்மை வழி நடத்தும்.

அதாவது கிறிஸ்துவே நம்மை வழி நடத்துவார். 

2000 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகில் வாழ்ந்த இயேசு,

2023ல் நம் உருவத்தில் உலகில் வாழ்வார்.

அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து அவர் அவருக்கான உடலை எடுத்துக் கொண்டது போல,

நமது உடலையும் அவர் முழுமையாக எடுத்துக் கொள்வார்.

நமது உடலோடும், உள்ளத்தோடும், ஆன்மாவோடும்

அவர் ஏழையாக வாழ்வார்.

பெற்றோருக்கு கீழ்ப் படிந்து நடப்பார்.

நம்மை சுற்றியுள்ளோர்க்கு நற்செய்தியை அறிவிப்பார்.

சுமை சுமந்து வரும் மக்களுக்கு ஆறுதல் அளிப்பார்.

பசியாய் வருபவர்களுக்கு உணவு கொடுப்பார்.

நம்மை வெறுப்பவர்களையும் அவர் நேசிப்பார்.

தீங்கு செய்தவர்களுக்கு நன்மை செய்வார்.

வரும் கஷ்டங்களை பொறுமையோடு தாங்கிக் கொள்வார்.

நமக்கு தீங்கு செய்பவர்களை அவர் மன்னிப்பார்.

அன்று பட்ட பாடுகளை இன்று நம் உருவத்தில் படுவார்.

நம்மை பார்ப்பவர்கள் நமது உருவத்தில் கிறிஸ்துவைத்தான் பார்ப்பார்கள்.

சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கிறிஸ்துவாக மாறிவிட்ட நம்மை போல மற்றவர்களும் மாற ஆசைப்படுவார்கள்.

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

கிறிஸ்துவாக வாழ்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகும்.

காலப்போக்கில் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறுவார்கள்.

சமுதாயமே ஒரே கிறிஸ்துவாக மாறும்.

"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்."
(அரு. 17:21)

 இயேசு தந்தையை நோக்கி செய்த இந்த மன்றாட்டு நம்மில் நிறைவேறும்.

லூர்து செல்வம்.

Tuesday, January 17, 2023

ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?" (மாற்.3:4)

"ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?" (மாற்.3:4)


"தாத்தா, "கடவுள் தாம் ஏழாம் நாளிற்கு முன் செய்த வேலைகளையெல்லாம் முடித்து விட்டு ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்."

"அவ்வேழாம் நாளை ஆசிர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்."

என்று பைபிள் சொல்கிறது.

கடவுளால் ஓய்வு எடுக்க முடியுமா?"


"'நிச்சயமாக முடியாது. கடவுள் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

 God is always active. 

நாம் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்த பின் ஏழாவது நாள் ஓய்வு எடுக்க வேண்டும்,

 அந்த ஓய்வு நாளை கடவுளுக்காகப் பயன்படுத்த வேண்டும் 

என்ற செய்தியை நமக்குத் தரவே இந்த வசனம் எழுதப்பட்டிருக்கிறது.

வசனங்கள் தரும் செய்தியை மட்டும் பார்க்க வேண்டும்.

அகராதிப்படி அர்த்தம் பார்த்து கொண்டிருக்க கூடாது."

"நாம் வாழ்வதே கடவுளுக்காகத் தானே.

ஓய்வு நாளில் விசேசமாக என்ன செய்ய வேண்டும் ?"

"'நாம் வாழும் ஒவ்வொரு வினாடியும் கடவுளுக்காகத்தான் வாழ்கிறோம்.

நாம் வாழ்வது முழுக்க முழுக்க ஆன்மீக வாழ்வு.

நமது உடலும் ஆன்மாவுக்காகத் தான் வாழ வேண்டும்.

உடல் வாழ உணவு, உடை, இருப்பிடம் போன்ற சில உலக சார்ந்த பொருட்கள் தேவைப்படுகின்றன.

இவற்றுக்காக பொருளை ஈட்ட வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்கிறோம்.

இதை ஆன்மாவுக்கு உதவும் உடலுக்காக செய்வதால் இதுவும் ஆன்மீகப் பணி தான்.

ஆனாலும் பொருள் ஈட்டும் பணிக்கு ஏழாவது நாள் ஓய்வு கொடுத்து விட வேண்டும்.

ஓய்வு நாளில் ஆன்மா சார்ந்த பணிகளை மட்டுமே செய்ய வேண்டும்.

பரிசேயர்கள் ஓய்வு நாள் விஷயத்தில் தேவைக்கு அதிகமான கண்டிப்புடன் இருந்தார்கள்.

இயேசு ஓய்வு நாளில் புதுமைகள் செய்ததை கூட அவர்கள் தவறு என்றார்கள்.

அவர்களைப் பார்த்து தான் ஆண்டவர்,

"ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?"
என்று கேட்கிறார். 

மனிதன் ஓய்வு நாளுக்காக படைக்கப்படவில்லை.

ஓய்வு நாள் மனிதனுக்காக படைக்கப்பட்டது.

ஓய்வு நாளில் ஆன்மாவிற்கு நன்மை பயக்கும் காரியங்களை செய்ய வேண்டும்.

அதற்காகத்தான் ஓய்வு நாள் படைக்கப்பட்டது."

"ஆன்மாவிற்கு நன்மை பயக்கும் என்ன நல்ல காரியங்களைச்
 செய்ய வேண்டும் என்று தாய் திருச்சபை கூறுகிறது?"


":ஆண்டவர் உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தான் நமக்கு ஓய்வு நாள்.

அன்று முழுத் திருப்பலியில் கலந்துகொண்டு ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

பரிசுத்தமான உள்ளத்தோடு திருவிருந்தில் கலந்து கொள்ள வேண்டும்.

முழு திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டுமானால் திருப்பலி ஆரம்பிக்க முன் சொல்லும் செப நேரத்தில் கோவிலுக்கு வந்து விட வேண்டும்.

தேவைப்பட்டால் பாவ சங்கீர்த்தனம் செய்ய அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திருப்பலி முடிந்த பின்னும் கொஞ்ச நேரம் கோவிலில் இருந்து

திரு விருந்தின் போது நம்மிடம் வந்த இயேசுவோடு பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

அதன் பின்பு தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

நற்கருணை அருந்திய உடன் கோவிலை விட்டு வெளியே செல்லக்கூடாது.

அது நம்மிடம் வந்த இறைவனுக்கு நாம் செய்யும் அவ மரியாதை.

சிலர் பிரசங்கம் முடிந்த பின் கோவிலுக்கு வந்து,

 நன்மை எடுத்தவுடன் ஓடி விடுவார்கள்.

திருப்பலி திருச்சபையின் அதிகாரப்பூர்வமான செப வழிபாடு.

Official prayer of the Church.    

அதில் அரைகுறையாய் கலந்து கொள்பவர்கள் திருப்பலியை அவமதிக்கிறார்கள்.

திருப்பலியை அவமதிப்பவர்கள் திருச்சபையையே அவமதிக்கிறார்கள்.

திருச்சபையை 
அவமதிப்பவர்கள் அதன் தலைவராகிய இயேசுவே அவமதிக்கிறார்கள்."

"தாத்தா திருப்பலி ஆரம்பிக்கும் போது கால்வாசி கோவிலில் தான் ஆட்கள் இருப்பார்கள்.

ஆனால் நற்கருணை கொடுக்க ஆரம்பிக்கும் போது கோவில் நிறைய ஆட்கள் இருப்பார்கள்.

நற்கருணை வாங்கியவுடன் சிலர் ஆண்டவரோடு கறிக்கடைக்குச் சென்று விடுவார்கள்."

"'ஆண்டவர் தன்னை தானே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுப்பதற்கு முன்னால் மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்தார்.

அதேபோல திருப்பலியை ஒப்புக் கொடுக்கும் குருவானவர்

நடுப்பூசைக்கு முன்னால்,

நற்செய்தி வாசகங்களை வாசித்து,

அவற்றுக்கு தனது பிரசங்கத்தில் விளக்கம் கொடுக்கிறார்.

நற்செய்தி வாசகங்களிலும், பிரசங்கத்திலும் மிகவும் கருத்தோடு கலந்து கொள்ள வேண்டும்.

எழுத வாசிக்க தெரியாதவர்களுக்கு குருவானவரின் பிரசங்கம் தான் பைபிள்.

குருவானவர் வைக்கும் பிரசங்கத்தின்படி வாழ்பவன் இயேசுவின் நற்செய்தியின் படி வாழ்கிறான்.

திருப்பலியோடு நமது ஓய்வு நாள் பணி முடிந்து விழவில்லை.

நன்கு சாப்பிடுவதற்கும்,
 TV பார்ப்பதற்கும்,
தூங்குவதற்கும் மட்டும் நமக்கு ஓய்வு நாள் தரப்படவில்லை.

அயலானுக்குப் பணிபுரிபவன் ஆண்டவருக்கே பணி புரிகிறான்.

திருப்பலியை நமது மீட்புக்காகவும், இறைவனால் படைக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளின் மீட்புக்காகவும் 
ஒப்புக்கொடுத்து விட்டு,

பிறர் சிநேகப் பணியில் நாளை முழுவதும் ஈடுபட வேண்டும்.

நோயாளிகளை சந்தித்தல்,
கஷ்டப்படுபவர்களுக்கு ஆறுதல் கூறுதல்,
தேவைப்படுபவர்களுக்கு நம்மாலான உதவி செய்தல்

இன்னும் இது போன்ற பிறர் அன்பு பணிகளை நமது ஆண்டவருக்காக செய்ய வேண்டும். 

வாரத்தின் ஆறு நாட்கள் நாம் ஈட்டிய பொருள் கொண்டு

 விண்ணக வாழ்வுக்கான நண்பர்களை ஈட்டுவதற்காகவே நமக்கு ஏழாவது நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதை ஆண்டவர் விருப்பப்படி பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

Sunday, January 15, 2023

கடவுள் சித்தம். (.தொடர்ச்சி. 3)

கடவுள் சித்தம். (.தொடர்ச்சி. 3)

"தாத்தா, இயேசு   மனுக் குலத்தைப் பாவத்திலிருந்து மீட்க சாத்தான் தனக்குத் தெரியாமலே உதவியிருக்கிறது என்று சொன்னீர்கள்.

அதைக் கொஞ்சம் விளக்குங்களேன்."

''நமது முதல் பெற்றோரைப் பாவம் செய்ய வைத்து மனுக்குலத்தையே பாவக் குழிக்குள் வீழ்த்தியது சாத்தான்.

"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்: அவள் உன் தலையை நசுக்குவாள். "

என்ற கடவுளின் வார்த்தைகளிலிருந்து தான் விழ வைத்த மக்களை மீட்பதற்கு மீட்பர் பிறப்பார் என்பது அதற்கு உறுதியாகிவிட்டது.

மீட்பர் பிறந்தால் அவரை உடனே கொன்று விட வேண்டும் என்று சாத்தான் அன்றே திட்டமிட்டது. .

இயேசு பிறந்த அன்று வான தூதர்

"இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா."

என்று இடையர்களிடம் கூறிய வார்த்தைகளிலிருந்து பெத்தலகேமில் மீட்பர் பிறந்திருக்கும் செய்தியை அறிந்தது.

அவரைக் கொல்ல ஏரோது மன்னனைப் பயன்படுத்த விரும்பிய சாத்தான்,

அவனது மனதில் புகுந்து மீட்பராகப் பிறந்த குழந்தையைக் கொல்லும்படி தூண்டியது. 

ஏரோதுவின் முயற்சி வெற்றி பெறவில்லை.

அந்த முயற்சியில்  அநேக மாசில்லாக் குழந்தைகள் இயேசுவுக்காக வேத சாட்சிகளாக மரித்தார்கள்.

அவர்கள் சிந்திய இரத்தம் கிறிஸ்தவம் வளர முதன்முதல் ஊற்றப்பட்ட தண்ணீர்.

இயேசு முப்பது ஆண்டுகள் திருக் குடும்பத்தில் வளர்ந்தார்.

அவர் பொது வாழ்வில் ஈடுபடுமுன் யோர்தான் நதியில் ஸ்நாபக அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெறும்போது

 அருளப்பர் கூறிய வார்த்தைகளிலிருந்து இயேசு தான் மீட்பர் என்பதைத் தெரிந்து கொண்டது.

அதை உறுதி செய்து கொள்ள இயேசுவை மூன்று முறை சோதித்தது.

"நீர் கடவுளின் மகனானால்" என்ற வார்த்தைகள் மூலம் சோதனைகளை ஆரம்பித்த சாத்தான்,
 
"உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே. " 

என்ற வார்த்தைகளிலிருந்து அவர் தான் மீட்பராக பிறந்த இறைமகன் என்பதை உறுதி செய்து கொண்டது.

அவர் தனது மரணத்தின் மூலம் தான் உலகை மீட்க போகிறார் என்ற உண்மையை சாத்தான் அறியாததால்,

அவரை கொல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.

அதற்காகத்தான் யூத மத குருக்களையும், யூதாசையும் அது பயன்படுத்தியது.

இயேசுவை கொல்லும் முயற்சியில் அது வெற்றி பெற்றது.

ஆனால் இயேசு தனது மரணத்தின் மூலமாகவே பாவத்தை வென்று உலகை மீட்டார் என்ற செய்தியை அறிந்தவுடன்

தான் நடக்க கூடாது என்று தீர்மானித்தது நடக்க தானே உதவியிருப்பதை கண்டு 

 தனது மூளையின்மையை நினைத்து, வெட்கித் தலை குனிந்தது.

இயேசு தனது மரணத்தின் மூலம் உலகத்தை மீட்க போகிறார் என்பது சாத்தானுக்கு தெரிந்திருந்தால்

 இயேசுவை கொலை செய்யும்படி அவரது எதிரிகளைத் தூண்டியிருக்காது.

 ஆனாலும் மீட்புக்கு எதிரான அதன் முயற்சியை அது கைவிடவில்லை.

கிறிஸ்துவை வெல்ல முடியாத சாத்தான்,

 இப்போது கிறிஸ்தவர்களை சுற்றி சுற்றி வருகிறது.

நாம் இயேசுவின் கால்களை பற்றிக் கொண்டால் சாத்தானால் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.

"தாத்தா, எதை வைத்து சாத்தானின் செயல்களை இவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள்?" 

"'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்: அவள் உன் தலையை நசுக்குவாள்.

இந்த வார்த்தைகள் யார் யாரைப் பார்த்து கூறியது?"

"கடவுள் சாத்தானைப்
 பார்த்து கூறிய வார்த்தைகள் இவை."

"'யாருக்கும் யாருக்கும் பகை?"

"1 சாத்தானுக்கும் மரியாளுக்கும்.

2 சாத்தானின் வித்தாகிய பாவத்துக்கும், மரியாளின் வித்தாகிய இயேசுவுக்கும்.".

"'உலகத்தில் எது நீடிக்க வேண்டும் என்பது சாத்தானின் ஆசை?"

"பாவம்."
.
"'பாவத்தை அழிக்க பிறக்கப் போகிறவர் யார்?"

"மீட்பர்."

"'பாவத்தை நீடிக்க செய்ய வேண்டுமென்றால் சாத்தான் என்ன செய்ய வேண்டும்?"

"மீட்பரைப் பிறக்க விடக்கூடாது."

"'அது அவன் கையில் இல்லை."

"அப்படியானால் பிறப்பவரைக் கொல்ல வேண்டும்."

"'சாத்தானின் திட்டம் என்னவென்று தெளிவாகிவிட்டது.

இயேசு பிறந்தபின் நடந்த நிகழ்ச்சிகள் சாத்தானின்  செயல்களை உறுதிப்படுத்துகின்றன."

"மூளை இல்லாத சாத்தானின் பேச்சைக் கேட்டு ஏமாந்து போகிற மூளையுள்ள மனிதர்கள் இன்னும் இருக்கிறார்களே.

நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களைக் கூறுகிறேன். 

பாவம் மட்டும் தான் தீமை என்கிறீர்கள்.

அப்போ மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் மற்ற நிகழ்வுகள்?"

"'நமது ஆன்மாவிற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமே தீமை.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய் நொடிகள், நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம், புயல் போன்றவை இயற்கை நிகழ்வுகள்.

இவை உடலுக்கு மட்டுமே துன்பத்தை கொடுக்கும்.

இவற்றால் ஆன்மாவை ஒன்றுமே செய்ய முடியாது."

"சுனாமியின்போது ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல்களையும், உயிரையும்
 இழந்து விட்டார்களே." 

"'சுனாமிக்குக் காரணமான இயற்கை இறைவன் கொடுத்த விதிகளின்படியே இயங்குகிறது.

ஆகவே அது ஒரு இயற்கை நிகழ்வு.

அதனால் ஏற்படும் மரணங்கள் இறைவனது திட்டத்திற்கு உட்பட்டன.

கடவுளால் உலகிற்கு அனுப்பப்பட்டவர்களை அவர் திரும்பி அழைக்க அவருக்கு முழு உரிமை உண்டு. 

பிறந்த மனிதன் என்றாவது ஒருநாள் இறக்கத்தான் வேண்டும்.

மரணம் அடையாமல் விண்ணகம் அடைய முடியாது.

விண்ணகம் செல்வதற்காக வாசலை தீமை என்று சொல்லலாமா?

துன்பங்களுக்கு இயேசு வைத்திருக்கும் பெயர் சிலுவைகள்.

நமக்கு வரும் சிலுவைகளை சுமந்து சென்றால்தான் நாம் இயேசுவின் சீடர்களாக வாழ முடியும் என்று அவரே சொல்லியிருக்கிறார்.

நாம் விடுதலை பெற வேண்டியது பாவத்திலிருந்து மட்டும்தான்.

துன்பங்கள் நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய உதவுகின்றன.

இவ்வுலகில் எந்த அளவுக்கு துன்பங்களை சிலுவைகளாக ஏற்று இயேசுவுக்காக அனுபவிக்கிறோமோ

அந்த அளவுக்கு மோட்சத்தில் நமது பேரின்பம் அதிகமாக இருக்கும்.

நமக்காக துன்பங்களை அனுபவிப்பதற்காகவே விண்ணகத் தந்தை தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

ஆகவே நாம் அனுபவிக்கும் துன்பங்கள் தீமைகள் அல்ல.

கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நன்மைகள்."

"ஆக நாம் சிலுவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது Active will of God.

ஆனால், தாத்தா, ஒருவன் அதிகமாக சாப்பிட்டதால் வயிற்று வலி வருகிறது, அது ?"

"'போசனப் பிரியம் ஒரு தலையான பாவம்.

சமாதானமின்மை , சண்டை, போர் போன்ற பாவங்களால் ஏற்படும் துன்பங்களுக்கு நாம்தான் பொறுப்பு.

பாவங்களாகிய தீமைகளிலிருந்து  நம்மை  இரட்சிக்கும்படிதான் நாம் தந்தையிடம் வேண்ட வேண்டும் என்று இயேசு நமக்கு கற்பித்தார்.

நாம் செய்யும் பாவங்கள் Permissive Will list ல் வரும்.

பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு

 விளைவுகளைப் பாவங்களுக்கு பரிகாரமாக ஏற்று அனுபவித்து கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியது தான்."


"ஆக உலகில் நடப்பவை அனைத்தும் இறைவனது சித்தப்படி தான் நடக்கின்றன.

நாம் அவரது சித்தப்படி அவரையும், 
நமது அயலானையும் நேசித்து வாழ்ந்தால்

அவரோடு நிலைவாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, January 14, 2023

கடவுள் சித்தம். (தொடர்ச்சி)

கடவுள் சித்தம். (தொடர்ச்சி)

"இயேசு இறைமகன் என்பதை ஏற்றுக் கொண்ட நூற்றுவர் தலைவர் யார்?"

"'பிலாத்து இயேசுவுக்கு கொடுத்த தண்டனையை நிறைவேற்றியவர்.  (Executive)

மரணத் தீர்ப்பு கொடுக்கப்பட்ட நேரத்திலிருந்து கல்லறையிலிருந்து இயேசு உயிர்த்தெழும் வரை தனது வீரர்களோடு கூடவே இருந்தவர்.

இயேசு இறந்த செய்தியைப் பிலாத்துவுக்கு அறிவிப்பதற்காக 

அவர் இறந்ததை உறுதி செய்ய அவரது விலாவை ஒரு ஈட்டியால் குத்தியவர் இவர்தான்.

இவரது கண் பார்வை குறைவாக இருந்ததாகவும், 

இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தியபோது வெளிவந்த ரத்தம் இவரது கண்ணில் விழுந்ததால் கண் முற்றிலும் குணம் அடைந்ததாகவும் அவரது வரலாறு கூறுகிறது.

இயேசு இறந்தவுடன் நடந்த நிகழ்ச்சிகளை பார்த்து 

"உண்மையில் இவர் கடவுளின் மகனாயிருந்தார்."

என்று கூறி இயேசு இறைமகன் என்பதை ஏற்றுக் கொண்டார்.

அவனுடன் இருந்த வீரர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

இயேசுவின் கல்லறையை காவல் காத்தவரும் அவர் தான்.

இயேசு உயிர்த்ததையும் பார்த்தார்.

இயேசு உயிர்த்ததை கேள்விப்பட்ட தலைமை குருக்கள்,

கல்லறையை காவல் காத்துக் கொண்டிருந்த வீரர்களிடம்,

"நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இரவில் அவருடைய சீடர் வந்து அவரைத் திருடிச் சென்றனர்" என மக்களுக்குச் சொல்லுங்கள்."

என்று சொன்னார்கள்,

ஆனால் நூற்றுவர் தலைவர் இயேசு உயிர்த்தெழுந்ததை மக்களிடம் எடுத்துச் சொன்னார்.

அப்போஸ்தலர்களின் ஆலோசனைப்படி துறவியானார்.

இவர் கிறிஸ்தவராக மாறியதால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இயேசுவின் பாடுகளின் போதும்,

 மரணத்தின் போதும்,

உயிர்த்த போதும்,

 கூடவே இருந்து கவனித்துக் கொண்ட நூற்றுவர் தலைவர் வேத சாட்சியாக மரித்தார்.

இவர்தான் நாம் வேத சாட்சியாக கொண்டாடும் புனித 
.லோன்ஜினுஸ்.(Saint Longinus)"

Feast on:
16 October: Roman Catholic Church and Eastern Orthodox Churches

"அப்போ இயேசுவின் ஜெபம் உடனடியாகவே பலனளிக்க ஆரம்பித்துவிட்டது என்று சொல்லுங்கள்."

"'இவ்வளவு நேரமும் அதைத் தானே சொன்னேன்."

"இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் மனம் திரும்பியிருப்பான் என்று நம்புகிறீர்களா?"

"'யூதாஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு தான் இயேசுவை காட்டிக் கொடுத்தான்.

அவனது அனுபவத்தில் பல முறை இயேசு பரிசேயர்களிடம் அகப்படாமல் தப்பித்திருக்கிறார்.

அதுபோல் அவர் தப்பித்து விடுவார், நமக்கும் பணம் கிடைக்கும் என்று எண்ணிக் காட்டிக் கொடுத்திருக்கலாம்.

அவர் சாக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை.

அதனால் தான் அவருக்கு மரணத் தீர்ப்பு இடப்பட்டவுடன்,

யூதாஸ், அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, மனம் வருந்தி, 

முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,

"மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான்.

வெள்ளிக்காசுகளை ஆலயத்தில் எறிந்துவிட்டு, 

உணர்ச்சி உணர்ச்சி வேகத்தில் போய் நான்றுகொண்டான்.

இயேசு தந்தையிடம் செய்த செபத்தின் மேலுள்ள விசுவாசத்தின் காரணமாக சொல்கிறேன்,

 அதன் விளைவாக,

அவன் இறுதி மூச்சு விடும் போது தனது பாவத்திற்கு மனஸ்தாபப்பட்டு மனம் திரும்பியிருப்பான்.

மனம் திரும்ப ஒரு வினாடி கூட தேவையில்லை.

அரை வினாடியில் கூட மனம் விரும்ப வாய்ப்பு உண்டு,

நாம் விசுவாசத்தோடு கேட்பதை கொடுக்கும் ஆண்டவர்,

அவரது சொந்த விருப்பத்தை நிறைவேற்றாமல் இருப்பாரா?

யூதாசுக்கு மட்டுமல்ல, அவரது மரணத்துக்குக் காரணமான அனைவருக்கும் மனம் திரும்ப போதுமான அருள் வரங்களை அள்ளிக் கொடுத்திருப்பார்."


"'அப்போ அவரது மரணத்துக்குக் காரணமான அனைவரையும் நாம் ஒருநாள் மோட்சத்தில் பார்ப்போம் என்கிறீர்கள்!"

"'ஒரு நாள் அல்ல, நித்திய காலமும் பார்ப்போம்."

"ஆனால், தாத்தா, இயேசு யூதாசைப் பற்றி,

"மனுமகனைக் காட்டிக்கொடுப்பவனுக்கோ ஐயோ கேடு! அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" (மத்.26:24)

என்று கூறியிருக்கிறாரே.

அதனால்தான் நீங்கள் சொல்வது புரியவில்லை." 

''புரிய வைக்கிறேன்.

சொற்களுக்கு பொருள் அவற்றை சொன்னவரிடமிருந்து தான் பெற வேண்டும்.

உன்னுடைய அம்மா எப்போதாவது உன்னை மிகக் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு திட்டியிருக்கிறார்களா?"

''உன்ன பெத்ததுக்கு ஒரு விளக்கமாற்றைப் பெத்திருக்கலாம்."

"'உண்மையிலேயே உனது அம்மாவுக்கு அந்த ஆசையா?" 

"நான் அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்காமல் இருந்ததைக் குத்தி காட்டும் வார்த்தைகள் தான்.

அதற்கு மேல் அந்த வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் எதுவும் இல்லை."

"'இயேசுவின் வார்த்தைகளுக்கு வருவோம். '

''அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்"

அகராதிப்படி அவற்றுக்கு அர்த்தம் பார்த்தால்,

யூதாஸ் பிறந்ததற்க்கு இயேசு வருத்தப்படுவது போல் தோன்றும்.

யூதாசைப் படைத்தவரே அவர் தான்.

"அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்"

என்பதற்கும்,

"நான் அவனை படைக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்"

என்பதற்கும் பொருள் ஒன்றுதான்.

தான் செய்த காரியத்துக்கு வருத்தப்பட கடவுளால் முடியாது.

கடவுளால் தவறு செய்ய முடியாது.

காட்டிக் கொடுத்தல் என்ற பாவத்தின் கனாகனத்தை உணர்த்தவே இயேசு அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

இயேசு அளவு கடந்த கருணையும் இரக்கமும் உள்ளவர்.

நாம் எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் அதை மன்னிக்க எப்போதும் தயாராக இருப்பவர்.

யூதாசின் பாவம் அவரது மன்னிப்புக்கு அப்பாற்பட்டது அல்ல.

யூதாஸ் பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு கேட்க வேண்டும், அவ்வளவுதான்.

அதற்கான விசேஷ அருளை அவரால் யூதாசுக்கு கொடுக்க முடியும்.

கொடுத்திருப்பார் என்பதற்கு அவர் தந்தையை நோக்கி செய்த செபமே ஆதாரம்.

யூதாஸ் விஷயத்தில் கடவுளின் இரக்கத்தின் மேன்மையை அறிய பின்வரும் link வழியே சென்று, வருவதை வாசிக்கவும்.

https://www.thedivinemercy.org/articles/christs-betrayal-and-divine-mercy

பாவத்திற்கான மன்னிப்பை பற்றி அறிய இறைவனின் கண்ணோக்கிலிருந்து பார்க்க வேண்டும்."

"தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கத் தெரிந்தவர் கடவுள்.

இயேசுவை கொன்றது யூதர்கள் செய்த தீமை.

அதிலிருந்து தான் உலக மீட்பு என்ற நன்மையை கடவுள் 
வரவழைத்திருக்கிறார்.

வேறு வார்த்தைகளில்,

 உலகத்தை பாவக் குழியில் தள்ளிய சாத்தான்  அதை பாவத்திலிருந்து மீட்கவும் தனக்குத் தெரியாமலே  உதவியிருக்கிறது."

(தொடரும்) 

லூர்து செல்வம்.

Friday, January 13, 2023

கடவுள் சித்தம்.

கடவுள் சித்தம்.

"தாத்தா, கடவுளை ஆதி காரணர் என்கிறார்களே அதன் பொருள் என்ன?"

"'முதல் காரணர். 

உலகில் காரணம் இன்றி விளைவு இல்லை.

ஒவ்வொரு காரணமும் இன்னொரு காரணத்தின் விளைவு.

நீ  உலகில் பிறக்க காரணமாக இருந்தவர்கள் உன்னுடைய பெற்றோர்.

அவர்கள் உலகில் பிறக்க காரணமாக இருந்தவர்கள் அவர்களுடைய பெற்றோர்.

இப்படி சொல்லிக் கொண்டே போனால் மனுக் குலம் நமது முதல் பெற்றோரிடமிருந்து பிறந்தது புரியும்.

ஆனால் நமது முதல் பெற்றோர் தாங்களாகவே தோன்றியவர்கள் அல்ல.

அவர்களைப் படைத்தவர் கடவுள்.

கடவுளுக்கு காரணர் கிடையாது.

அவர் தோன்றியவர் அல்ல.

தாமாக இருப்பவர்.

நாம் வாழும் பிரபஞ்சத்திற்கும், நமக்கும் முதல் காரணர் அவர் தான்.

ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு துவக்கம் உண்டு.

கடவுள் விளைவு அல்ல.

எல்லா விளைவுகளுக்கும் அவர்தான் முதல் காரணர்.

ஆகவே அவருக்கு துவக்கம் இல்லை.  முடிவும் இல்லை."

"அனைத்துக்கும் காரணர் அவர் என்றால் நாம் செய்கிற பாவத்திற்கும் காரணம் அவர்தானே."

"'கடவுளால் படைக்கப்பட்ட  மனிதன்தான் பாவம் செய்தான்.

ஆகவே பாவத்திற்கும் முதல் காரணர் அவர்தான்.

ஆனால் மனிதன் செய்த பாவத்திற்கு அவர் பொறுப்பு இல்லை."

"விளங்கவில்லை."
 
"'உன்னை பெற்றது யார்?"

"என்னுடைய பெற்றோர்."

"' உன்னுடைய உடனடி காரணர்
(Immediate cause) உன்னுடைய
பெற்றோர்.

பெற்றோர் சொற்படி நடக்க வேண்டியது உன்னுடைய கடமை.

இரவு 10 மணி வரை உனது பாடங்களைப் படி என்று அம்மா சொல்லியிருக்கிறார்கள்.

நீ  10 மணி வரை TV பார்த்துக் கொண்டிருந்தால் அதற்கு பொறுப்பு அவர்களா?"

"என்னை பெற்றது அவர்கள்தான். வீட்டில் TV வாங்கி வைத்திருப்பதும் அவர்கள் தான்.

அவர்களது சொல்லுக்கு கீழ்ப்படியாமல் TV பார்த்ததற்குப் பொறுப்பு நான் தான்."

"'கடவுள் நமது முதல் பெற்றோரைப் படைத்து,

சிங்கார வனத்தில் வாழவைத்து,

ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை உண்ணக்கூடாது என்ற கட்டளையும் கொடுத்தார்.

அவர்களைப் படைத்தது அவர்தான்.

விலக்கப்பட்ட களிதரும் மரத்தை படைத்ததும் அவர்தான்.

உண்ணக்கூடாது என்று கட்டளை கொடுத்திருந்த கனியை உண்டது நமது முதல் பெற்றோர்.

கட்டளையை மீறியதற்கும் கனியைத் தின்றதற்கும் அவர்கள் தான் பொறுப்பு.

கடவுள் அல்ல.

ஆனாலும் தின்றவர்களின் காரணர் அவர்.

விலக்கப்பட்ட கனிக்கும் காரணர் அவர்.

ஆகவே முதல் காரணர் எறை வகையில் நமது முதல் பெற்றோர் செய்த பாவத்திற்கு முதல் காரணராக 
இருந்தாலும, '

பொறுப்பாளர் அல்ல."

"அவரன்றி அணுவும் அசையாது என்பார்கள்.

அவருடைய சித்தமின்றி எதுவும் நடக்காது.

அப்படியானால் நமது முதல் பெற்றோர் பாவம் செய்தது அவரது சித்தப்படியா?"

"'உலகம் உண்டாகுக என்றார், உலகம் உண்டாயிற்று.

கடவுளின் சித்தப்படி உலகம் உண்டாயிற்று.

மனிதனை படைப்போம் என்றார். படைத்தார்.

கடவுளின் சித்தப்படி மனிதன் படைக்கப்பட்டான்.

கடவுள் எது நடக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அதை
Active will of God. என்போம்.

மனிதனுக்கு கட்டளைகள் கொடுத்து அவற்றின்படி நடக்கச் சொன்னார்.

மனிதனைப் படைக்கும் போது பரிபூரண சுதந்திர உணர்வோடு படைத்தார். 

அதாவது கடவுள் சொன்னபடி நடப்பதற்கும், மீறி நடப்பதற்கும் அவனுக்கு சுதந்திரம் கொடுத்திருந்தார்.

சொன்னபடி நடந்தால் புண்ணியம்,

மீறி நடந்தால் பாவம்.

மனிதனுக்கு பரிபூரண சுதந்திரம் கொடுத்திருந்தபடியால்  மனிதன் பாவம் செய்தபோது அவனைத் தடுக்கவில்லை.

தடுக்காது அனுமதித்ததும் அவரது சித்தம் தான்.
இதை Permissive Will of God. என்போம்.

உலகில் நடப்பவை அனைத்தும் ஒன்று கடவுளின் Active will படி நடக்கும்., 
'
அல்லது Permissive Will படி நடக்கும்."

"அப்போ உலகில் நாம் காணும் தீமைகள் எல்லாம் கடவுளின்  Permissive Will படி நடக்கின்றன.

சரியா?"

"'முதலில் தீமை என்ற சொல்லின் பொருளை தெரிந்து கொள்ள வேண்டும்.

கடவுளின் Permissive Will ஐப் பயன்படுத்தி கடவுளின் கட்டளைகளை மீறி நடப்பது தான் தீமை.

பாவம் மட்டுமே தீமை என்ற சொல்லின் பொருளுக்குள் அடங்கும்.

நமது ஆண்டவர் நமக்கு செபம் சொல்ல கற்றுத் தந்த போது 

"தீமைகளிலிருந்து  எங்களை  இரட்சித்தருளும்"

என்று செபிக்கும்படி சொன்னார்.

"தந்தையே, நாங்கள் உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடி  எங்களைக் காப்பாற்றும்.

 செய்த பாவங்களை மன்னித்து எங்களுக்கு அவற்றிலிருந்து விடுதலை தாரும்"

என்பது அதன் பொருள்.

நம்மை பாவத்திலிருந்து விடுவிப்பதற்கே

 இறைமகன் மனு மகனாய்ப் பிறந்து பாடுகள் பட்டு

 சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

உலகில் நமக்கு வரும் துன்பங்கள் தீமைகள் அல்ல.

இயேசு நம்மை பாவத்திலிருந்து விடுவிப்பதற்கு துன்பங்களை அனுபவித்தார்.

இயேசு அனுபவித்த துன்பங்களைத் தீமைகள் என்று சொல்ல முடியுமா?

யூதர்கள் அவரைக் கொன்றது அவர்களுக்கு தீமை, அதாவது, பாவம்.

அவர்களது பாவத்தை மன்னிக்கும் படி இயேசு தனது தந்தையிடம் வேண்டினார்."

"தாத்தா, தந்தை மகனின் வேண்டுதலைக் கேட்டிருப்பாரா?

அதாவது அவரது மரணத்திற்கு காரணமானவர்களை, யூதாஸ் உட்பட, தந்தை மன்னித்திருப்பாரா?"

"'இந்த கேள்வியைக் கேட்கும் போது ஒரு மறுக்க முடியாத உண்மையை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

தந்தையும், மகனும், பரிசுத்த ஆவியும் ஒரே கடவுள்.

தந்தை மகனுள்ளும், மகன் தந்தையுள்ளும் இருக்கிறார்கள்.

இயேசுவின் வார்த்தைகள் ஒப்புக்காக சொல்லப்பட்டவை அல்ல.

பாவப் பரிகாரமாக சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது மனதார சொன்ன வார்த்தைகள்.

கடவுளாகிய இயேசு, தான் சொன்ன வார்த்தைகளைத் தானே மீறுவாரா?

கடவுளால் பாவம் செய்ய முடியாது. 

கடவுளின் வார்த்தைகளை மீறுவது தான் பாவம்.

அவரே தனது வார்த்தைகளை மீற முடியாது.

இப்போது சொல்லு, கடவுள்  தனது பாடுகளுக்கும், சிலுவை மரணத்திற்கும் காரணமானவர்களை மன்னித்திருப்பாரா?"
 

"கடவுள் தான் சொன்ன வார்த்தைகளை மீறமாட்டார் என்பது நமது அசைக்க முடியாத விசுவாசம்.

ஆனால் பாவம் செய்தோர் தங்களது பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு 

கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமே,

அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் இதைச் செய்திருப்பார்களா?"

"'செய்திருக்க மாட்டார்கள் என்று உங்களிடம் யார் சொன்னது?"

"பைபிளில் ஆதாரம் இல்லையே."

"'இயேசுவின் வார்த்தைகளே ஆதாரம்.

இயேசுவால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதை 
விசுவசிக்கிறாயா?"

"விசுவசிக்கிறேன்."

"'அவரால் புதுமைகள் செய்ய முடியும் என்பதை விசுவசிக்கிறாயா?"

"விசுவசிக்கிறேன்."

"' பாவிகளை மனம் திருப்ப அவரால் முடியும் என்று 
விசுவசிக்கிறாயா?"

"விசுவசிக்கிறேன்."

"'இயேசு தன்னைக் கொன்றவர்களை மனம் திருப்பியிருப்பார் என்பதை ஏற்றுக் கொள்கிறாயா?"

"இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நோக்கும்போது 

அவர் தன்னை கொன்றவர்களை மனம் திருப்பியிருப்பார் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

இயேசு தந்தையை நோக்கி சொன்ன செபமே இதற்கு ஆதாரம்.

வேறு ஆதாரம் அவசியமில்லை 


"நூற்றுவர்தலைவனும் அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தோரும் நிலநடுக்கத்தையும் நடந்தது அனைத்தையும் கண்டு மிகவும் அஞ்சி, 

"உண்மையில் இவர் கடவுளின் மகனாயிருந்தார்" என்றனர்.
(மத்27:54)

என்ற பைபிள் வசனத்தை வாசித்திருக்கிறாயா?"

"வாசித்திருக்கிறேன்."

"'இதிலிருந்து உனக்கு என்ன உண்மை புரிகிறது?".

"நூற்றுவர்தலைவனும் அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தோரும்

இயேசு இறைமகன் என்பதை ஏற்றுக் கொண்டார்கள் என்ற உண்மை புரிகிறது."

(தொடரும்)

லூர்து செல்வம்,