Friday, July 29, 2022

"கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே.".(1 திமோ2:6)

"கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே.".
(1 திமோ2:6)

"இணைப்பவர் என்றால் என்ன அர்த்தம், தாத்தா?"

", இரண்டு நண்பர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் உறவு முறிந்திருந்தால் 

யார் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு, அவர்களுக்கு இடையே மீண்டும் உறவை ஏற்படுத்துகின்றாரோ

அவர் தான் இணைப்பவர்.(Mediator)

ஆதி மனிதன் செய்த பாவத்தினால் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த உறவு முறிந்தது.

பாவப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு, அதாவது, அதற்கான பரிகாரத்தை செய்து,

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே மீண்டும் உறவை ஏற்படுத்தியவர் 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

அவர் மட்டுமே கடவுளையும் மனிதரையும் இணைப்பவர்."

"அது சரி தாத்தா. இயேசு கடவுள் தானே, ஏன் சின்னப்பர்

"மனிதனான இயேசு கிறிஸ்துவே" என்கிறார்?"

"இரண்டு பேருக்கு இடையே உள்ள பிரச்சனையை தீர்ப்பவர் இரண்டு பேருக்கும் வேண்டியவராக இருக்க வேண்டும்.

கடவுளோடு உள்ள உறவை முறித்தவன் மனிதன்.

உறவை மீண்டும் ஏற்படுத்த விரும்பியவர் கடவுள்.

உறவை மீண்டும் ஏற்படுத்துபவர் கடவுளுக்கும் மனிதனுக்கும் வேண்டியவராக இருக்க வேண்டும்.

ஆகவே கடவுளோடு உறவில் இல்லாத மனிதனால் அது முடியாது.

ஆகவே கடவுளே இணைப்பவர் ஆக தீர்மானித்தார்.

அவர் மனிதன் சார்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அவரே மனிதன் ஆனார்.

மனித உருவெடுத்த இறைமகன் தான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

பரிசுத்த தம திரித்துவம் ஒரே கடவுள் மூன்று ஆட்கள்.

இறைமகன் ஒரு ஆள், இரண்டு சுபாவங்கள், தேவ சுபாவம், மனித சுபாவம்.

மனித சுபாவத்தில்தான் அவர் பாடுகள் பட்டு, மரித்து நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து
இணைப்பவர் ஆனார்.

ஆகவேதான் புனித சின்னப்பர்,

'மனிதனான இயேசு கிறிஸ்து' என்கிறார்.

மனிதன் செய்த பாவத்திற்கு மனிதன் தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆனால் மனிதன் அளவுள்ளவன். 
அளவுள்ள மனிதனால் அளவில்லாத கடவுளுக்கு ஏற்ற வகையில் பரிகாரம் செய்ய முடியாது.

பரிகாரம் செய்பவர் மனிதனாகவும் இருக்க வேண்டும்.

கடவுளைப்போல் அளவில்லாதவராயும் இருக்க வேண்டும்.

அப்படிப் பட்ட யாரும் மனுக்குலத்தில் இல்லை.

ஆகவே அளவில்லாத கடவுள் மனிதனாய்ப் பிறந்தார்.

பரிகாரம் செய்தவரும் அவர்தான். பரிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியவரும் அவர்தான்."

"தாத்தா, கடவுள் சர்வ அதிகாரம் உள்ளவர்தானே. அவர் நினைத்திருந்தால் பரிகாரம் செய்யாமலேயே பாவங்களை மன்னித்திருக்கலாமே. ஏன் நினைக்கவில்லை?"

", பேரப்புள்ள, கடவுள் தன்னுடைய எல்லா பண்புகளிலும் அளவில்லாதவர்.

அவருடைய அன்பு அளவில்லாதது, 

நீதியும் அளவில்லாதது.

நீதிப்படி குற்றவாளி பரிகாரம் செய்ய வேண்டும்,

அன்புப் படி குற்றவாளி மன்னிக்கப்பட வேண்டும். 

அளவுள்ள குற்றவாளி அளவில்லாத கடவுளுக்கு ஏற்ற பரிகாரம் செய்ய முடியாது.

ஆகவே அன்பின் மிகுதியால் பரிகாரம் செய்யும் பொறுப்பையும் கடவுளே ஏற்றுக் கொண்டார்.

"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."
(அரு. 3:16)

நாம் கடவுளுக்கு அன்பு செய்ததில் அன்று அவரே நமக்கு அன்பு செய்து, நம் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தம் மகனை அனுப்பியதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது.
(1அரு.4:10)

"அதாவது நம் மேல் அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாக நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை அவரே செய்தார்."

", Correct."

"ஆனால் தாத்தா, நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை அவரே செய்து விட்டாரே, பிறகு நாம் ஏன் பரிகாரம் செய்ய வேண்டும், குறிப்பாக, தபசு காலத்தில்?"

", நாம்தானே பாவிகள். நாம் செய்யும் பரிகாரத்தை அவர் செய்த பரிகாரத்தோடு சேர்த்து கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

அவர் பரிகாரம் செய்திருக்காவிட்டால் நமது பரிகாரத்திற்கு எந்த பலனும் இருக்காது,"

"இப்போது நான் கேட்கப் போகிற கேள்வி என்னுடையது அல்ல, என் நண்பன் என்னிடம் கேட்டது, அதை நான் உங்களிடம் அப்படியே கேட்கிறேன்.

"கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே."

என்று புனித சின்னப்பர் சொல்லியிருக்கிறாரே.

இயேசு ஒருவர் தானே நம்மையும் கடவுளையும் இணைப்பவர்.

நமது ஆன்மீக வாழ்வுக்கு இயேசுவின் உதவி மட்டும் போதாதா?

நம் மீது கொண்ட அன்பினால் மனிதனாக பிறந்து நமக்காக பாடுகள் பட்டு மரித்தவர் நாம் வேண்டினால் கேட்க மாட்டாரா?

ஏன் புனிதர்களையும் உதவிக்கு அழைக்கிறோம்?

(தொடரும்)

லூர்து செல்வம்.

Thursday, July 28, 2022

நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்(மத்.13:4

நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்
(மத்.13:48)

இயேசு விண்ணரசை கடலில் வீசப்பட்டு எல்லாவகை மீன்களையும் வாரிவரும் வலைக்கு ஒப்பிடுகிறார்.

மீனவர்கள் வலை நிறைந்ததும் அதை வெளியில் இழுத்து, கரையில் அமர்ந்து, 

நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு

 தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்.

அவ்வாறுதான் உலகம் முடிவில் மனிதர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு .

நல்லவர்கள் மோட்ச நிலையையும் கெட்டவர்கள் நரக நிலையையும் அடைவார்கள்.

உலக முடிவில் நாம் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டுமென்றால் 

மீனவர்கள் செய்ததைப் போன்ற ஒரு வேலையை நாமும் உலகில் செய்ய வேண்டும். 

கடலில் மீனவர்களுக்கு வேண்டிய மீன்களும் வேண்டாதவையும் கிடக்கின்றன.

அவர்கள் வலை வீசும் போது இரண்டுமே வலையில் அகப்படுகின்றன.

மீனவர்கள் வேண்டிய மீன்களை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றை எறிந்து விடுகிறார்கள்.

உலகில் நமது ஆன்மீக வாழ்வுக்கு வேண்டியவையும் இருக்கின்றன, வேண்டாதவையும் இருக்கின்றன.

நமது கண் வலையை வீசும் போது இரண்டுமே அகப்படுகின்றன.

நாம் ஆன்மீக வாழ்வுக்கு வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றை எறிந்து விட வேண்டும்.

இப்படி செய்து வாழ்ந்தால் வாழ்வின் முடிவில் நாம் விண்ணக அரசுக்குள் நுழைவோம்.

நல்லவை மட்டும் நிறைந்த சூழ்நிலை எதுவும் உலகில் இருப்பதில்லை.

நாம் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அங்கு நல்லவையும் இருக்கும் கெட்டவையும் இருக்கும்.

நல்லவர்களாக வாழ விரும்புகிறவர்கள் நல்லவற்றைத் தேர்ந்தெடுப்பர்,

கெட்டவர்களாக வாழ விரும்புகிறவர்கள் கெட்டவற்றைத் தேர்ந்தெடுப்பர்.

நாம் வாழும் சூழ்நிலையில்

 திருப்பலியும், திருவிருந்தும் நடைபெறும், 
இயேசு நம்மோடு பேசுவதற்காக திவ்ய நற்கருணைப் பேழையில் இரவும், பகலும் காத்துக் கொண்டிருக்கும் கோவில்கள் இருக்கின்றன.

தேவத்திரவிய அனுமானங்களாலும், ஆண்டவரது அருள்வரங்களாலும் நம்மை ஆசீர்வதிக்கக் காத்துக் கொண்டிருக்கும் குருக்கள் இருக்கிறார்கள்.

வாசித்து இறைவழி நடக்க நமக்கு வழிகாட்ட பைபிளும், ஏராளமான ஞானவாசக புத்தகங்களும் இருக்கின்றன.

செபக்கூட்ட மையங்கள் இருக்கின்றன.

ஞான உபதேசத்தோடு, நல்லொழுக்கத்தையும் கற்றுத் தரும் கத்தோலிக்க பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

இன்னும் இதைப்போன்ற விண்ணகவழியைக் காட்டும் ஏராளமான ஆன்மீக சாதனங்களோடு,


தீமைகளை பொழுதுபோக்காக்கி காண்போரது கண்ணையும், கருத்தையும் கெடுக்கும் சினிமாக்கள் காண்பிக்கப்படும் தியேட்டர்களும்,

குடித்துக் குடியைக் கெடுக்க கொடுத்த வண்ணமிருக்கும் டாஸ்மாக் கடைகளும்,

மற்றவர்களைக் கெடுத்துப் பேசியே நேரத்தை வீணடிப்பவர்களும்,

இலஞ்சம் வாங்கியே பிழைப்பை நடத்தும் பெரியவர்களும்,

குறைவான நல்ல அம்சங்களோடு நிறைவான கெட்ட அம்சங்கள் நிறைந்த cell phoneகளும், TV பெட்டிகளும் 

இவற்றைப் போலவே ஆன்மாவைக் கெடுக்கக் காத்துக் கொண்டிருக்கும் சாதனங்களும் ஏராளமாக உள்ளன.

நாம் வாழும் உலகிலேயே நம் கண் வலையில் விழும் இவற்றில் நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, கெட்டவைகளைத் தூர எறிபவர்கள்தான்

உலக முடிவில் நல்லவர்கள் பக்கம் இடம் பிடிப்பார்கள்.

நல்லவற்றைத் தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது, அதைச் சிறப்பாய்ச் செய்ய வேண்டும்.

தினமும் திருப்பலியில். பங்கேற்பது என்று தீர்மானிப்பது மட்டும் போதாது. பக்தியுடன் பங்கேற்க வேண்டும்.

தூய்மையான உள்ளத்தோடு திருவிருந்தில் கலந்து கொள்ள வேண்டும்.

இறையன்பும், பிறரன்பும் நமது சிந்தனை, சொல், செயலை இயக்க வேண்டும்.

செய்பவை அனைத்தையும் இறைவனது அதிமிக மகிமைக்காகச் செய்ய வேண்டும்.

நாம் வழிபடும் அதே இயேசுவைத்தான் புனிதர்களும் வழிபட்டார்கள்.

அதே தேவத் திரவிய அனுமானங்களைத்தான் பெற்றார்கள்.

அதே அன்போடுதான் வாழ்ந்தார்கள்.

ஆனால் செய்ததை நம்மை விட சிறப்பாகச் செய்தார்கள்.

சிறப்பின் அளவிற்கு ஏற்ப அவர்களது புனிதத்துவம் இருக்கிறது.

நாமும் நல்லதைச் செய்வோம்.
செய்வதைச் சிறப்பாய்ச் செய்வோம்.

செய்ததன் பயனை விண்ணரசில் பேரின்பமாய் அனுபவிப்போம். 

லூர்து செல்வம்.

Wednesday, July 27, 2022

" அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை." ( மத்.13:58)

" அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை." ( மத்.13:58)

மற்ற ஊர்களில் செய்த அளவுக்கு சொந்த ஊரில் இயேசு நிறைய புதுமைகள் செய்யவில்லை, காரணம் அங்குள்ள மக்களிடம் போதிய விசுவாசம் இல்லை.

ஒவ்வொரு முறையும் நோயாளிகளைக் குணமாக்கிய போதும் இயேசு "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று," என்று சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இப்படி சொன்னது விசுவாசத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு அறிவுறுத்துவதற்காகத்தான்.

குணம் அளிப்பது இயேசு தான். ஆனால் அவர் விசுவாசம் உள்ளவர்களை மட்டும் குணமாக்கியதால் விசுவாசம் குணமாகியது என்றார்.

விசுவாசம் என்றால் என்ன?

இயேசு கடவுள் என்றும், 

சர்வவல்லபர் என்றும்,

புதுமைகள் செய்து நாம் கேட்கும் எல்லா உதவிகளையும் அவரால் செய்ய முடியும் என்றும் , 

நாம் கேட்டதைக் கட்டாயம் தருவார் என்றும் ஏற்றுக் கொள்வது மட்டும் விசுவாசம் அல்ல,

நமது உண்மையான நிலையை ஏற்றுக் கொள்வதும் சேர்ந்து தான் விசுவாசம்.

நமது உண்மையான நிலை என்ன?

1. நாம் ஒன்றுமில்லாமையிலிருந்து கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.
நம்மில் நாமே ஒன்றுமில்லாதவர்கள்தான்.

2. கடவுள் உதவி இன்றி நம்மால் சுயமாக ஒன்றுமே செய்ய முடியாது. கடவுள் உதவி இன்றி அசையக்கூட முடியாது.

3. நம்மை நாமே கடவுள் கையில் ஒப்படைத்துவிட்டால்,

அதாவது, அர்ப்பணித்து விட்டால் கடவுள் உதவியுடன் எதையும் சாதிக்கலாம்.

4. கடவுளின் வல்லமையையும், நமது ஒன்றும் இல்லாமையையும் ஏற்றுக்கொண்டு,
 நம்மை முற்றிலுமாக அவரிடம் அர்ப்பணித்து வாழ்வதுதான் விசுவாசம்.

 நம்மை கடவுளிடம் முழுமையாக அர்ப்பணித்து விட்டால் அதன் பிறகு வாழ்வது நாம் அல்ல கடவுளே நம்மிடம் வாழ்வார்.

அந்த அளவுக்கு நாம் கடவுளிடம் ஒன்றித்து விடுவோம்.  

இந்த ஒன்றிப்பில் நாம் எதை நினைக்க வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறாரோ அதையே நினைப்போம்.

நாம் எதற்கு ஆசைப்பட வேண்டும் என்று கடவுள் நினைக்கிறாரோ அதற்கே ஆசைப்படுவோம்.

நாம் எதை பேச வேண்டும் என்று நினைக்கிறாரோ அதையே பேசுவோம்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அதையே செய்வோம்.

நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் கடவுள் இருப்பார்.

இந்த நிலையில் நாம் கடவுளிடம் எதைக் கேட்டாலும் அவர் செய்வார்.

 ஏனெனில் நாம் எதைக் கேட்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அதையே கேட்போம்.

முழுமையாக விசுவாசமுள்ளவர்கள் கடவுளின் சித்தப்படி தான் நினைப்பார்கள், பேசுவார்கள், செய்வார்கள்.

ஆகவே அவர்கள் எதைக் கேட்டாலும் கடவுள் கட்டாயம் செய்வார்.

அவர்கள் கேட்டதைக் கடவுள் செய்வதற்கு காரணம் அவர்களுடைய விசுவாசம்...

விசுவாசம் உள்ளவர்கள் விசுவாசத்திற்கு எதிரான எதையும் கேட்க மாட்டார்கள்.

ஆகவே அவர்கள் கேட்பது உறுதியாக கிடைக்கும்.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு சொன்னது அவரை விசுவசிப்பவர்களுக்கு.

கேட்டது கிடைக்க வேண்டும் என்றால் 

விசுவாச வாழ்வு அதாவது அர்ப்பண வாழ்வு வாழ்வோம்.

இயேசுவிடம் நம்மை அர்ப்பணித்து வாழ்ந்தால் 

நாம் அவருக்காக மட்டும் வாழ்வோம்.

அவருக்காக மட்டும் வாழ்ந்தால் அவர் சித்தத்தை மட்டுமே செய்வோம்.

அவர் சித்தத்தை மட்டுமே செய்தால் நாம் கேட்பதும் அவருடைய சித்தப்படி தான் இருக்கும்.

அவருடைய சித்தப்படி கேட்டதை அவரால் தராமல் இருக்க முடியாது,

 ஏனெனில் அவர் செயல் புரிவது அவரது சித்தப்படி தானே.

"இயேசுவே, உமது சித்தம் எனது பாக்கியம்.

உமது விருப்பம் எனது விருப்பம்.

இனி செயல் புரியப்போவது நானல்ல, நீரே என்னில் செயல் புரியும்!

இனி வாழப்போவது நானல்ல, நீரே என்னில் வாழும்!"

"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:"
(அரு.17:21)

என்று தந்தையை நோக்கி இயேசு மன்றாடியதற்கு இணங்க நாம் இறைவனோடு ஒன்றித்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, July 26, 2022

"இவர் தச்சன்மகன் அல்லரோ ? இவருடைய தாய், மரியாள் என்பவள் அல்லளோ ? இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?"(மத்.13:55)

"இவர் தச்சன்மகன் அல்லரோ ? இவருடைய தாய், மரியாள் என்பவள் அல்லளோ ? இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?"
(மத்.13:55)

நாட்டை ஆளும் மன்னனுக்கு நாட்டு மக்கள் அரசனுக்குரிய மரியாதையைக் கொடுத்தாலும்,

அவருடைய குடும்பத்தினர், சொந்தக்காரர்கள் மத்தியில் அவன் உறவினன்தான்.

இயேசு இறைமகன், சர்வ வல்லப கடவுள். அது மாதாவுக்கும், சூசையப்பருக்கும் தெரியும்.

அவர் 30 ஆண்டுகள் வாழ்ந்த நாசரேத்தூர் மக்களைப் பொறுத்த மட்டில் அவர் தச்சன்மகன், தச்சு வேலை செய்து வந்தவர்.

30 ஆண்டுகளும் அவர் மாதாவுக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.

ஊர் மக்களிடம் புதுமைகள் ஏதும் செய்து தன்னை வெளிப்படுத்தவில்லை.

பொது வாழ்வுக்கு வந்து நற்செய்தி அறிவிக்க ஆரம்பித்த பின்பு தான் புதுமைகள் செய்து 
மக்களிடையே பிரபல்யமானார்.

பொது வாழ்வின்போது அவர்
தம் சொந்த ஊருக்கு வந்து அவர்களது செபக்கூடத்தில் போதிக்கலானார். அவர்கள் மலைத்துப்போய், 

"இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன ?

 இவர் தச்சன்மகன் அல்லரோ ?

 இவருடைய தாய், மரியாள் என்பவள் அல்லளோ ?

 இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?'

என்று அவருடன் வாழ்ந்த ஊர். மக்கள் ஆச்சரியப் பட்டனர்.

கத்தோலிக்கர்களாகிய நாம் இயேசுவின் தாய் முக்காலமும் கன்னி என்று விசுவசிக்கிறோம்.

ஆனால் நம்மை விட்டுப் பிரிந்து சென்றவர்களில் பலர் இயேசு கன்னியின் மகன் என்பதை விசுவசித்தாலும்,

இயேசு பிறந்த பின்பு மாதாவுக்கு குழந்தைகள் பிறந்தன என்று தவறாகப் போதிக்கின்றனர்.

தங்கள் போதனைக்கு சான்றாக

"இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?''

என்ற வசனத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம்முடன் பிறந்தவர்களைச் சகோதரர்கள் என்று அழைத்தாலும்,

நம்முடைய தந்தையின் சகோதரர்களின் பிள்ளைகளையும்,

தாயின் சகோதரிகளின் பிள்ளைகளையும்

அதே வார்த்தையால்தான் அழைக்கிறோம்.

யாகப்பன், சூசை, சீமோன், யூதா ஆகியோர் அன்னை மரியாளின் சகோதரியின் பிள்ளைகள்.

சித்தி பிள்ளைகள் என்ற முறையில் சகோதரர்கள்.

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது

"கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்த பெண்கள் பலர் அங்கே இருந்தனர். 

தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அவர்களுள் மதலென் மரியாளும்,

 யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும்,

 செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்." (மத்.27:55, 56)

யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாள்தான் அன்னை மரியாளின் சகோதரி.

"இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், 

அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், 

மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள் "
(அரு. 19:25)


"அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும்," என்று குறிப்பிடப் பட்டிருப்பவர்தான் யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாய்.

இதில் வரும் கிலோப்பா சூசையப்பரின் சகோதரர்.

அன்னை மரியாளின் கணவரின் சகோதார் மனைவி

அன்னை மரியாளுக்குச் சகோதரி.

அந்த சகோதரியின் மக்கள்தான்
யாகப்பன், சூசை, சீமோன், யூதா .

இதில் வரும் யாகப்பர் சின்ன யாகப்பர் என்று அழைக்கப் படுகிறார்.

அருளப்பரின் சகோதரர் யாகப்பர் பெரிய யாகப்பர்.

"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" .
(மத். 12:50)
என்று இயேசு கூறியிருக்கிறார்.

இப்போது நம்மைப் பற்றி நாமே கொஞ்சம் சிந்திப்போம்.

நம்மில் எத்தனை பேர் வானகத்திலுள்ள நம் தந்தையின் விருப்பப்படி நடக்கிறோம்?

ஒவ்வொருவரும் நம்மை பார்த்து கேட்போம்:

"நான் வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறேனா?"

இயேசு பிறப்பால் இறைமகன்,
 நாம் படைப்பால் இறைமக்கள்.

இறைத் தந்தையின் சித்தமே இறைமகனின் சித்தமும்.

அவரைப் பொறுத்தமட்டில் தந்தையின் சித்தப்படி நடப்பது அவரது சுபாவம். (Nature)

தந்தையின் சித்தப்படி நடக்காமல் இருக்க முடியாது, ஏனெனில் இருவரும், தூய ஆவியோடு, ஒரே கடவுள்.

கடவுள் தனக்கு எதிராக தானே இயங்க முடியாது.

நாம் படைப்பால் இறைமக்களாய் இருந்தாலும், 

பாவத்தினால், 

அதாவது தந்தையின் சித்தப்படி நடக்காததினால்

இறைமக்கள் என்ற பெயருக்கு அருகதை அற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இயேசு மனிதனாக பிறந்தது நம்மை இறை மக்கள் என்ற பெயருக்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்காகத்தான்.

அவரது தந்தையை "எங்கள் தந்தையே " என்று அழைக்க நமக்கு இயேசு அனுமதி கொடுத்திருக்கிறார்.

அதாவது நம்மை தனது சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

நாம் தந்தையின் சித்தப்படி வாழ்ந்தால்தான் நாம் இயேசுவின் சகோதரர்கள் எந்த பெயருக்கு ஏற்றவர்கள் ஆவோம்.

தந்தையின் சித்தப்படி, அதாவது, அவருடைய கட்டளைகளின்படி வாழ்வோம்.

இயேசு ஏழையாக வாழ்ந்தார்.
நாமும் ஏழைகளாக வாழ்வோம்.

இயேசு நற்செய்தியை அறிவித்தார், 
நாமும் அறிவிப்போம்.

இயேசு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்தார், 
நாமும் அப்படியே செய்வோம்.

இயேசு தன்னை துன்பப்படுத்தியவர்களை மன்னித்தார்,
 நாமும் மன்னிப்போம்.

இயேசு சிலுவையைச் சுமந்தார், நாமும் சுமப்போம்.

இயேசு நமக்காக மரித்தார்.
நாம் இயேசுவுக்காக மரிப்போம்.

வாழ்வோம், இயேசுவின் தாயும், சகோதர, சகோதரிகளுமாக.

லூர்து செல்வம்.

Monday, July 25, 2022

தனக்குள்ளதெல்லாம் விற்று அந்நிலத்தை வாங்கிக்கொள்கிறான்."(மத்.13:44)

."தனக்குள்ளதெல்லாம் விற்று அந்நிலத்தை வாங்கிக்கொள்கிறான்."
(மத்.13:44)

நாம் ஆயிரக் கணக்கில் செலவழித்து படிக்கிறோமே எதற்காக?

லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதற்காகத்தானே.

லட்சக்கணக்கில் செலவழித்து ஏன் வியாபாரம் பார்க்கிறார்கள்?

கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதற்காகத்தானே.

நிலம் ஒன்று குறைந்த விலைக்கு வியாபாரத்திற்கு வருகிறது.

 அதற்குள் கோடிக்கணக்கான ரூபாய்மதிப்புள்ள புதையல் ஒன்று இருக்கிறது என்று நமக்குத் தெரியும்.

நமக்கு அந்த புதையல் மேல் ஆசை இருந்தால் நமக்கு உள்ளதை எல்லாம் விற்று அந்த நிலத்தை விலைக்கு வாங்கி விடுவோம்.

குறைந்ததை இழந்தால் நிறைய கிடைக்கும் என்றால் குறைந்ததை இழக்க தயாராக இருக்கிறது நமது மனித சுபாவம்.

இந்த நமது லௌகீக சுபாவத்தை அப்படியே ஆன்மீக மயமாக்க ஆசைப்படுகிறார் நமது ஆண்டவர்.

அதனால்தான் விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பிடுகிறார்.

குறைந்ததை இழந்தால் நிறைந்தது கிடைக்கும் என்றால்

 குறைந்ததை இழக்க தயாராக இருக்கும் நாம்,

முடிவுள்ள சிற்றின்பத்தை இழந்தால் முடிவில்லாத பேரின்பம் கிடைக்கும் என்றால்,

முடிவுள்ள சிற்றின்பத்தை இழக்க ஏன் தயங்க வேண்டும்?

உலகியல் வாழ்வு நிரந்தரம் அற்றது என்று நமக்குத் தெரியும்.

ஆன்மீக வாழ்வு நிரந்தரமானது என்றும் நமக்குத் தெரியும்.

நிரந்தரமான ஆன்மீக வாழ்வை வாழ்வதற்காக, நிரந்தரம் அற்ற உலகியல் வாழ்வை இழக்க ஏன் தயங்க வேண்டும்?

நமது உடல் என்றாவது ஒரு நாள் மண்ணிற்குள் போவது உறுதி என்பது நமக்கு தெரியும்.

ஆன்மா அழியாமல் வாழக்கூடியது என்பதும் நமக்குத் தெரியும்.

தெரிந்தும் ஏன் ஆன்மீக வாழ்வுக்காக உலகை தியாகம் செய்ய தயங்குகிறோம்?

விண்ணக வாழ்வுக்காக படைக்கப்பட்ட நாம் மண்ணக வாழ்வையே விரும்பி வாழும்போது

நாம் நமக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் எல்லோரும்
 மூச்சு விடுகிறோம்,
 உண்கிறோம்,  
குடிக்கிறோம், 
உடுத்துகிறோம், 
வேலைக்குப் போகிறோம், சம்பாதிக்கிறோம்,
செலவழிக்கிறோம்.

இவற்றையெல்லாம் நமக்காகச் செய்தால் நாம் உலகியல் வாதிகள்.

ஆண்டவருக்காகச் செய்தால் ஆன்மீகவாதிகள்.

நமக்காக செய்யும்போது ஏதோ ஒரு சிறு இன்பம் கிடைக்கிறது.

ஆண்டவருக்காக செய்யும்போது நமக்காக நித்திய பேரின்ப வாழ்வு காத்திருக்கிறது.

ஒரே செயலை நமக்காகச் செய்யும்போது கிடைப்பது சிற்றின்பம், ஆண்டவருக்காகச் செய்யும்போது கிடைப்பது பேரின்பம்.

நமக்காக செய்யும்போது பாவம் உள்ளே நுழைய வாய்ப்பு இருக்கிறது.

ஆண்டவருக்காக செய்யும்போது பாவம் பக்கத்திலேயே வராது.

நமக்காக உண்ணும்போது பெருந்தீனி (Gluttony) என்ற தலையான பாவம் நுழைய வாய்ப்பு இருக்கிறது.

ஆண்டவருக்காக உண்ணும்போது
'மட்டசனம்' என்னும் புண்ணியத்தை ஈட்ட வாய்ப்புக் கிடைக்கிறது.

அலுவலகத்தில் தங்களுக்காக மட்டும் உழைப்பவர்கள்தான் இலஞ்சம் வாங்குபவர்கள்.

 இலஞ்சம் வாங்குவது பாவம்.

 ஆண்டவருக்காக உழைப்பவர்கள் அந்த பாவத்தைச் செய்ய மாட்டார்கள்.

"இதோ ஆண்டவருடைய அடிமை"என்ற நம் அன்னையின் சொற்கள் நமக்கு புரிய வைக்கும் உண்மை,

ஆண்டவருடைய அடிமையாக, அவருக்காகவே வாழ்பவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள்.

பாவம் ஆன்மீக வாழ்வின் எதிரி.
கடவுளுக்காக வாழ்பவர்கள் மட்டுமே உண்மையாக ஆன்மீகவாதிகள்.


கடவுளுக்காக வாழ்பவர்கள் மட்டுமே தங்கள் ஆன்மாவின் நலனுக்காக வாழ்கின்றார்கள்.

தங்களுக்காக மட்டும் வாழ்பவர்கள் தங்களது உடலில் நலனுக்காக வாழ்கின்றார்கள்.

அழிந்து போகும் உடலுக்காக வாழ்பவர்களால் அழியாத ஆன்மாவை காப்பாற்ற முடியாது.

விண்ணரசில் நிரந்தரமாக வாழ விரும்புகிறவர்கள் 

நிரந்தரமற்ற உடலியலை விட்டு விட்டு

நிரந்தரமான ஆன்மீக வாழ்வை வாழ வேண்டும்.

அதற்கு ஒரே வழி தங்களுக்காக வாழாமல் ஆண்டவருக்காக வாழ்வது மட்டுமே.

நிலத்தில் புதையல் மறைந்துள்ளது என்பதைக் கண்டுபிடித்தவன்

தனக்குள்ளதெல்லாம் விற்று விட்டு அந்நிலத்தை வாங்கிக்கொள்வதுபோல,

நாமும் நமக்குள்ளதை எல்லாம் விட்டு விட்டு இறையரசை மட்டும் தேடுவோம்.

வாழ்வோம் ஆண்டவருக்காக மட்டும்.

லூர்து செல்வம்.

Sunday, July 24, 2022

கேட்போம். கிடைத்தாலும் மகிழ்வோம். கிடைக்காவிட்டாலும் மகிழ்வோம்.

கேட்போம். 
கிடைத்தாலும் மகிழ்வோம். கிடைக்காவிட்டாலும் மகிழ்வோம்.

"தாத்தா, 'கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்'  என்று நமது ஆண்டவர் தானே சொன்னார்.

ஆனால் நான் கேட்டதையெல்லாம் தந்தது மாதிரி தெரியவில்லையே!"

",நீ கேட்கக் கூடாததைக் கேட்டிருப்பாய்."

"கேட்கக் கூடாதது என்று எதைச் சொல்லுகிறீர்கள்?"

", எதெல்லாம் நமது ஆன்மீக வாழ்வுக்கு தீங்கு ஏற்படுத்துகிறதோ அதை எல்லாம் நாம் கடவுளிடம் கேட்கக் கூடாது."

"எப்படி, தாத்தா, ஆன்மீக வாழ்வுக்கு தீங்கு செய்வதைக் கேட்பேன்?"

",ஆன்மீக வாழ்வுக்கு தீங்கு செய்வது எது என்று உனக்குத் தெரிந்தால் கேட்க மாட்டாய் என்றே வைத்துக் கொள்வோம்.

ஆனால்  கேட்பது ஆன்மீக வாழ்வுக்கு தீங்கு செய்யுமா செய்யாதா என்பது உனக்கு எப்படி தெரியும்?

ஏதாவது ஒரு ஊருக்குப் போகும்போது ஏதாவது ஒரு வழியை சரியான வழி என்று நாம் நினைத்துக் கொண்டு அவ்வழியே செல்வோம்.

அது வேறு எங்காவது கொண்டு விட்ட பின்பு தான் நாம் வந்தது தவறான வழி என்பதை கண்டு கொள்வோம்.

அப்படி கண்டு கொள்வதால் தவறு சரியாகி விடாது.

சரியான வழியை உறுதி செய்து கொண்டு தான் போகவே ஆரம்பிக்க வேண்டும்.

கடவுள் சர்வ ஞானம் உள்ளவர்.

நாம் கேட்பது சரியானதா, தவறானதா என்பது அவருக்கு தெரியும்.

சரியானதாக இருந்தால் கேட்டதைத் தருவார்.

தவறானதாக இருந்தால் தர மாட்டார்.

சரியானதை தந்தால் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

தவறானதை தராவிட்டாலும் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

கிடைத்தாலும் நன்றி கூற வேண்டும்.

 கிடைக்காவிட்டாலும் நன்றி கூற வேண்டும்.

கடவுளை உண்மையாகவே நேசிக்கின்றவர்கள்

தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் அவருக்கு நன்றி கூறுவார்கள்."


''என்ன நேர்ந்தாலும் என்றால்?"

",இன்பம் வந்தாலும் நன்றி கூறுவோம், துன்பம் வந்தாலும் நன்றி கூறுவோம்,

நோய் வந்தாலும் நன்றியை கூறுவோம்,
 நோய் குணமானாலும் நன்றியை கூறுவோம்.

ஆசைப்பட்டது கிடைத்தாலும் நன்றியை கூறுவோம், கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவோம்.

கொரோனா தொற்றிக் கொண்டாலும் நன்றி கூறுவோம், நாம் அதிலிருந்து தப்பித்துக் கொண்டாலும் நன்றி கூறுவோம்."

"தாத்தா, இயேசு பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்தது நாம் நித்தியத்திற்கும் பேரின்பமாக வாழ்வதற்காகத் தானே.

 அப்படியானால் சிலுவையின் நோக்கம் பேரின்பம் தானே.

மரணம் மோட்சத்தின் வாசல்.

மோட்சத்திற்குள் நுழையும போது சிலுவை, அதாவது, துன்பம் நம் கூட வராது.

எப்போதும் நம்முடன் இருக்க முடியாத சிலுவைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?"

",நீ ஏன் பக்கத்து வீட்டு பையனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட உன் தம்பிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாய்?"

"ஏனென்றால் அவன் என் அம்மா அப்பாவின் பிள்ளை."

",நமது வாழ்வின் ஒரே நோக்கம் கடவுள்தான்.

இயேசு சிலுவையில் மரித்ததாலும்,

'சிலுவையைச் சுமந்து என்னிடம் வா' என்று அவர் சொன்னதாலும்

 சிலுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

நாம் சிலுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அது சிலுவை என்பதற்காக அல்ல. இயேசுவுக்காக.

இயேசுவே நமக்கு எல்லாம்.

இயேசுவின் சித்தம் நமது பாக்கியம்.

விசுவாசம் இல்லாமல் மீட்பு பெறமுடியாது.

ஆனால் மீட்பு பெற்று மோட்சத்திற்குள் நுழைந்த பின் நம்மோடு விசுவாசம் இருக்காது.

ஆனாலும், இப்போது இயேசுவுக்காக விசுவசிக்கிறோம்.

என்ன நேர்ந்தாலும் ஏற்றுக் கொள்வதும்,

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவதும்

இயேசுவுக்காக மட்டுமே.

இயேசுவிடம் கேட்போம்.

இயேசு தந்தாலும் மகிழ்வோம்.
இயேசு தராவிட்டாலும் மகிழ்வோம்.

இயேசுதான் நமக்கு எல்லாம்."

லூர்து செல்வம்.

Friday, July 22, 2022

"விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்." (மத்.13:33)

"விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்." (மத்.13:33)

''புளிப்பு மாவுன்னா என்ன தாத்தா?"

", உங்க அம்மா இட்லிக்கு மாவு ஆட்டுவதைப் பார்த்திருக்கிறாயா?"

"பார்த்திருக்கிறேன்."

"ஆட்டிவிட்டு என்ன செய்வாங்க?"

''ஆட்டி எடுத்த மாவுக்குள்ள கொஞ்சம் பழைய புளித்த மாவை ஊத்துவாங்க."

'',அதுக்கு பெயர் தான் புளிப்பு மாவு.''

"அப்படியா. நான் பைபிளில வந்ததால் வேறு ஏதோ ஒரு மாவுன்னு நினைச்சேன்."

", அதை ஊற்றினால்தான் அரைத்த மாவு இட்லி அவிக்கக் கூடிய மாவாக மாறும்."

"எப்படி, தாத்தா, மாறும்?"

", அதிசயமா இருக்குல்ல!"

"ஆமா, தாத்தா."

", அதுக்குப் பின்னால் உள்ள அறிவியல் தெரியாதவர்களுக்கு அது அதிசயம்.

தெரிந்தவர்களுக்கு சாதாரண உண்மை."

"அந்த அறிவியலைக் கொஞ்சம் விளக்குங்களேன்."

"புளித்த மாவுல நிறை நுண்ணியிர்கள் இருக்கும்.

அவை மாவிலுள்ள சர்க்கரையைச் சாப்பிட்டு, அதைச் சாராயமாகவும், கரியமல வாயுவாகவும் மாற்றுகின்றன.

கரியமல வாயு மேல் நோக்கி வரும்போது மாவின் அளவை அதிகரித்து, மேலே குமிழ்களை உண்டாக்கும்."

"எப்படி மாவின் அளவு அதிகரிக்கும்?"

",கரியமல வாயு மேல் நோக்கி வரும்போது மாவின் அடர்த்தி குறையும், கொள்ளளவு அதிகமாகும்."

"அதைப்பற்றி ஆண்டவர் ஏன் பேசுகிறார்?''

"ஆண்டவர் வாழ்ந்த காலத்திலும், பழைய ஏற்பாட்டின் காலத்திலும் வாழ்ந்த யூதர்களுக்கு இட்லி மாவைப் பற்றி தெரிந்திருக்காது.

அவர்கள் புளித்த மாவை அப்பம் (Bread) செய்யப் படுத்தினார்கள்.

அப்ப மாவோடு புளித்த மாவைச் சேர்த்தால் அது மொத்த மாவையும் புளிப்பேற்றுவதோடு அதன் அளவையும் அதிகமாக்கும்."

" ஆனால், தாத்தா, மோயீசன் அவரகளிடம்

 "நீங்கள் புளித்த அப்பத்தை உண்ணாதிருக்கக் கடவீர்கள்."

என்று சொல்லியிருக்கிறாரே."


",ஏழு நாள் புளியாத அப்பத்தை உண்பாய்.

 ஏழாம் நாளோ ஆண்டவரின் திருவிழாவாம்.

ஏழு நாளும் புளியாத அப்பத்தை உண்பீர்கள். 

உன் வீட்டிலோ உன் எல்லைகளிலோ புளித்தது யாதொன்றும் காணப்படலாகாது.
என்று மோயீசன் கூறினார்.",

"புளித்த அப்பத்திற்கும் புளியாத அப்பத்திற்கும் என்ன வித்தியாசம்?"

", அப்ப மாவோடு புளிப்பு மாவைச் சேர்த்து அப்பம் தயாரித்தால் அப்பம் நன்கு உப்பி பெரியதாக. மாறும். உள்ள அடர்த்தி குறைவாக இருப்பதால் சாப்பிட மென்மையாக இருக்கும்.

புளியாத அப்பம் முதலில் வைத்த மாவின் அளவே அப்பமும் இருக்கும்."

'தாத்தா, இயேசு ஏன் விண்ணரசை புளிப்பு மாவுக்கு ஒப்பிடுகிறார்?"

",புளிப்பு மாவிலுள்ள நுண்ணியிர்கள் மிகச் சிறியவை.

அவை சேர்க்கப்பட்ட அப்ப மாவின் அளவை தங்கள் பணியால் அதிகரிக்கின்றன.

அதேபோல் ஆரம்பத்தில் விண்ணரசு மிகச்சிறியதாக இருக்கும்.

"விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். 

அதைப் பெண் ஒருத்தி எடுத்து மூன்றுபடி மாவில் பொதிந்து வைக்கிறாள்.

 மாவு முழுதும் புளிப்பேறுகிறது"

எப்படி மூன்றுபடி மாவில் பொதிந்து வைக்கப்பட்ட புளிப்பு மாவு 

மாவு முழுவதையும் புளிப்பேற்றுகிறதோ 


அப்படியே எந்த மக்கள் மத்தியில் விண்ணரசு சிறியதாக ஆரம்பிக்கிறதோ அந்த மக்கள் அனைவரையும் தன்வசப்படுத்திக் கொள்ளும்.

அதாவது விண்ணரசு பெரியதாகும்."

"உண்மைதான், தாத்தா.

பரிசுத்த ஆவி மாதாவின் மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் இறங்கி வந்த அன்று திருச்சபை செயல்பட ஆரம்பித்தது.

மாதாவோடும்,  
11 அப்போஸ்தலர்களோடும் ஆரம்பித்த திருச்சபை இன்று எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோமே.

விண்ணரசின் முழு அளவையும் நாம் விண்ணகம் சென்ற பின்தான் பார்ப்போம்."

", புளிப்புமாவின் பின்னால் உள்ள அறிவியல் அந்தக் கால மக்களுக்குத் தெரியாது. 

ஆகவே மிகச்சிறிய அளவிலான புளிப்பு மாவு மிகப்பெரிய அளவிலான மாவை எப்படி  புளிப்பேற்றுகிறது என்பது அவர்களுக்கு தெரியாத ஒரு அதிசயம்.

திருச்சபையை வழி நடத்துபவர் பரிசுத்த ஆவி. அவருடைய  வல்லமையைப் பற்றி தெரியாதவர்களுக்கு திருச்சபை வளர்ந்த விதமும் ஒரு அதிசயம்.

வெட்டப்பட வெட்டப்பட ஓங்கி வளரும் மரம் போல,

திருச்சபையின் வரலாற்றில்,
கொல்லப்பட கொல்லப்பட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது.

திருச்சபையின் ஆரம்ப கட்டத்தில் ரோமையை ஆண்ட மன்னர்கள் அதை பூமியை விட்டு முற்றிலுமாக அழித்துவிட அவர்களால் இயன்ற அளவு முயன்றார்கள்.

இறந்த வேத சாட்சிகளின் ரத்தத்தில் திருச்சபை வேகமாக வளர்ந்தது."

"மூன்றுபடி மாவில் பொதிந்து வைக்கப் பட்ட புளிப்பு மாவினால் மாவு முழுதும் புளிப்பேறுவது போல

விண்ணரசைச் சேர்ந்த நாம் வாழும் பகுதி வாழ் மக்களிடையே நமது விசுவாசம் பரவ பரிசுத்த ஆவியை வேண்டுவோம்,

நாமும் உழைப்போம்."

லூர்து செல்வம்.

Thursday, July 21, 2022

"முட்செடிகள் நடுவில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு, இவ்வுலகக் கவலையும் செல்வமாயையும் வார்த்தையை நெரிக்க, பயனற்றுப் போகிறவனே."(மத்.13:22)

"முட்செடிகள் நடுவில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு, இவ்வுலகக் கவலையும் செல்வமாயையும் வார்த்தையை நெரிக்க, பயனற்றுப் போகிறவனே."
(மத்.13:22)

ஞாயிறு திருப்பலி முடிந்து வீட்டுக்குத் திரும்பியதும் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே ஒரு குட்டி உரையாடல்.

", பிரசங்கம். எப்படி இருந்தது ?''

"நல்லா இருந்தது, அப்பா."

",இன்றைக்கு எதைப் பற்றி பிரசங்கம் வைத்தார்?"

"அப்பா, நாளைக்கு University Exam.. 
காலையில் எழுந்த நேரத்திலிருந்தே நான் Exam mood லதான் இருக்கிறேன்.

கோவிலுக்கு வந்தேன் உங்களோடு.

ஆனால் இருந்தது என்னோடும் என்னுடைய Exam mood டோடும் தான்."

",அப்போ திருப்பலி காணவில்லையா?"

"காண்பது வேறு, கலந்து கொள்வது வேறு.

அப்பா, மனது முழுவதும் நாளைய தேர்வைப் பற்றிய எண்ணங்களாலேயே நிறைந்திருந்தது.

முன்னால் நடப்பது கண்ணுக்குத் தெரியும். அவ்வளவுதான். மனதுக்குள் செல்லாது."

",அப்போ நீ குருவானவர் கொடுத்த பிரசங்கத்தை கேட்கவில்லை."

"காதுகள் இருந்ததால் கேட்டேன். ஆனால் கேட்டது எதுவும் மனதில் தங்க வில்லை."

",உனது மனது முள் செடிகள் நிறைந்த நிலம். அதில் விதைகள் விழுந்தாலும் பலன் இல்லை."

"புரியவில்லை."

",முள் செடிகள் நிறைந்த நிலத்தில் விதைகள் விழுந்து முளைத்தாலும் அவற்றால் வளர்ந்து பலன் தர முடியாது. 

கற்பாறை மேல் விவசாயம் செய்ய முடியுமா?"

"முடியாது. பயிர் எதுவும் வேர் ஊன்ற முடியாது.''

",முள் செடிகளும், புல்லும் நிறைந்த இடத்தில் விவசாயம் செய்ய முடியுமா?"

"முள் செடிகளையும், புல்லையும் அகற்றிவிட்டு நல்ல நிலமாக மாற்றினால் முடியும்."


",பங்கு சுவாமியாரை ஒரு ஆன்மீக விவசாயியாக கற்பனை செய்து கொள். விசுவாசிகளுடைய மனம் அவர் விவசாயம் செய்யும் நிலம்.

விசுவாசிகளுடைய மனம் எப்படிப் பட்டதாய் இருந்தால் அவரால் அதில் இறைவாக்கு என்ற விதையை விதைக்க முடியும்?"

"நல்ல மனதாய்."

",இறைவாக்கு விண்ணக வாழ்வுக்கு வழி காட்டக் கூடியது.

மனம் எப்படி பட்டதாய் இருந்தால் அங்கு இறைவாக்கு பயன் தரும்?"

"மனதில் விண்ணக வாழ்வுக்கு எதிரான எண்ணங்கள் இல்லாதிருந்தால்.

உலகைச் சார்ந்த கவலைகள் இல்லாதிருந்தால்.''

",உலக கவலைகள் நிறைந்த மனதைத்தான் முள் செடிகளும், புல்லும் நிறைந்த மனம் என்கிறோம்.

அப்படிப்பட்ட இடத்தில் இறைவாக்காகிய விதையை விதைத்தால் அது பலன் தராது.

 இறைவனை வழிபடவும் இறைவாக்கிற்கு செவிமடுக்கவுமே கோவிலுக்கு வருகிறோம்.

உலக கவலைகளோடு கோவிலுக்கு வந்தால் அவற்றைச்  சரிவர செய்ய முடியாது.

சாப்பிட போகும்போது பசியோடு போக வேண்டும்.

பசி இல்லாவிட்டால் சாப்பிட முடியாது.

இறைவனை வழிபடவும் இறைவாக்கைக் கேட்கவும் வரும் போது உலக கவலைகளை மனதை விட்டு அகற்றி விட்டு வர வேண்டும்.

அப்போதுதான் இறைவாக்கு நம்மில் செயல் புரியும்."

"உலகில் வாழும் நாம் எப்படி உலக கவலைகளே இல்லாமல் இருக்க முடியும்?"

", அர்த்தமற்ற பயத்தைத் தான் கவலை என்கிறோம்.

Worry means meaningless fear.

உலகத்திற்காக அல்லாமல் இறைவனுக்காக மட்டும் உலகில் வாழ்பவன் தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து விடுவான்.

ஒவ்வொரு வினாடியும் இறைவன் அவனை கண்காணித்துக் கொள்வார்.

இறைவனின் பாதுகாப்பில் வாழ்பவன் எதற்காகப் பயப்பட வேண்டும்?

இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு அவன் தனது கடமைகளை மட்டும் ஒழுங்காக செய்தால் போதும்.

விளைவு இறைவன் கையில்,

நாளைக்கு தேர்வு என்கிறாய்.

ஆண்டு முழுவதும் கடமை தவறாமல் உனது பாடங்களை படித்திருந்தால் எதற்காக தேர்வைப் பற்றி கவலைப்பட வேண்டும்?

துறவிகள் மட்டுமல்ல நாம் அனைவருமே இறைவனுக்காகத் தான் வாழ்கிறோம்,

 இறைவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம், தியாகம் செய்யலாம்.

 ஆனால் எதற்காகவும் இறைவனை விட்டுக் கொடுக்கவும் கூடாது,

 தியாகம் செய்யவும் முடியாது.

ஒரு ஊர்ல ஒரு கணவனும் மனைவியும் இருந்தாங்களாம்."

"அப்பா, கதையா? நாளைத் தேர்வு."

", சரி. போய்ப் படி. தேர்வு முடிந்த பின் கதையைச் சொல்லிக் கொள்கிறேன்."

".பரவாயில்லை. சொல்லுங்கள் , கதை முடிந்தவுடன் பாடத்தை படித்துக் கொள்கிறேன்."

"முதல் திருமண நாளன்று (First wedding anniversary) ஒருவர்க்கொருவர் பரிசுகள் வாங்க தீர்மானித்தார்கள்.

கணவன் கையில் இருந்த கைக் கடிகாரத்திற்கு Gold strap வாங்க மனைவி தீர்மானித்தாள்.

மனைவியின் தலைமுடியில் மாட்ட
தங்கச் சடை மாட்டி வாங்க கணவன்  தீர்மானித்தான். 

தீர்மானித்தபடி வாங்கியும் விட்டார்கள்.

திருமண நாளன்று காலையில் மனைவி கணவனைப் பார்த்து கையை காண்பியுங்கள் என்றாள்.

காண்பித்தான்.

ஆனால் கையில் கடிகாரம் இல்லை.

"கடிகாரத்தை எங்கே?"

"அதை விற்று தான் உனது தலைக்கு சடைமாட்டி வாங்கினேன்."

"நான் எனது தலைமுடியை விற்று தான் உங்களது கடிகாரத்திற்கு gold strap. வாங்கினேன்."

ஆக இருவர் வாங்கிய பரிசுகளும் இருவருக்குமே பயன்படவில்லை.

 இந்த கதையை உன்னிடம் ஏன் இப்பொழுது சொல்லுகிறேன் என்பது புரிகிறதா?''

" மனைவி அழகாய்ப் பார்க்க விரும்பிய கடிகாரத்தை கணவன் விற்று விட்டான்.

 கணவன் அழகாய்ப் பார்க்க விரும்பிய சடையை மனைவி விற்று விட்டாள்.

கடவுள் அழகாய் பார்க்க விரும்பும் ஞாயிற்றுக்கிழமையை நான் விற்றுவிடக் கூடாது.

சரியா?"

", Super சரி."

"சரி. ஞாயிற்றுக்கிழமை இறைவனுக்கான நாள். அதை அவருக்காகவே பயன்படுத்தப் போகிறேன்.

என்னுடைய தேர்வை அவர் பார்த்துக் கொள்வார்."

",இறைவனுக்குரியதை இறைவனுக்கே கொடுக்கும் மனதில்தான் இறைவாக்கு வேலை செய்யும்.

நாம் உலகில் வாழ்வதே இறைவனுக்காகத்தான்.

ஆகவே நமது வாழ்வின் அனைத்து கடமைகளையும் அவரது மகிமைக்காகவே செய்ய வேண்டும்.

அவர் தரும் அவரது வாக்கு  இதற்கு வேண்டிய அருள் வரங்களை நமக்குப் பெற்று தரும்.

இறைவாக்குப்படி நாம் வாழ்ந்தால் நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் இறைவனைச் சார்ந்ததாகவே இருக்கும்.

நமது வாழ்வே இறைவனை நோக்கி நாம் சொல்லும் செபமாக மாறிவிடும்.

உலக கவலைகளை நீக்குவோம்.

உன்னத தேவனுக்காக வாழ்வோம்.

இறைவாக்கு நம்மை நிலை வாழ்வை நோக்கி வழி நடத்தும்."

லூர்து செல்வம்.

Tuesday, July 19, 2022

''உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்: அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்." ( மத். 12:13)

''உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்: அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்." ( மத். 12:13)

"தாத்தா, நற்செய்தியை வாசிக்கும் போது சில வசனங்களின் பொருள் புரியவில்லையே, அது ஏன்?"

", பொதுவாகச் சொல்லாமல் வசனத்தைக் குறிப்பிட்டுச் சொல்லு."

"சீடர் இயேசுவிடம் "அவர்களிடம் நீர் உவமைகளில் பேசுவதேன்?"

என்று கேட்டபோது கூறிய பதிலில் வரும்,

''உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்: அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்."

என்ற வசனம்."

", ஒருவருடைய வார்த்தைகளுக்குப் பொருள் காணவேண்டுமென்றால் நீ பார்க்க வேண்டியது அகராதியையா? அவரையா?"

"விளங்கவில்லை."

", உன்னுடைய ஆசிரியர் உன்னைப் பார்த்து, "நீ படிப்புக்கு லாயக்கில்லை. பேசாம எருமை மாடு மேய்க்கப் போ" என்று சொன்னால்,

அகராதிப்படி பொருள் பார்த்து எருமை மாடு மேய்க்கப் போயிருவியா? அல்லது ....."

"ஆசிரியர் அந்த பொருளில் சொல்ல மாட்டார்.

அவருக்கு எனது படிப்பில் மிகுந்த அக்கரை உண்டு.

இப்படி சொன்னால் தான் நான் படிப்பேன் என்று நினைத்து சொல்லியிருப்பார்.

எங்க அம்மா கூட என்னை பார்த்து "உன்னைப் பெறுவதற்கு பதிலாக ஒரு விளக்கு மாற்றைப் பெற்றிருக்கலாம், பெருக்கவாவது உதவும்" என்று சொன்னார்கள்.

நான் அவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற பொருளில் தான் சொன்னார்கள்.

வார்த்தைகளுக்குப் பொருள் காண அகராதியை பார்க்கக் கூடாது, ஆளைத்தான் பார்க்க வேண்டும்."

",அன்னை மரியாளும் சூசையப்பரும் இயேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுப்பதற்காக கோவிலுக்குச் சென்ற போது 

 
சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அவருடைய தாயாகிய மரியாளைப் பார்த்து, 

"இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்:"

என்றார்.

இயேசு மக்களது வீழ்ச்சிக்காகவா மனிதனாகப் பிறந்தார்?''

"இல்லை. அவரை ஏற்றுக் கொண்டோர் எழுச்சி அடைவர்.

ஏற்றுக் கொள்ளாதோர் வீழ்ச்சி அடைவர்.

இயேசு எதற்காக உலகிற்கு வந்தாரோ அதை வைத்து தான் பொருள் காண வேண்டும், அகராதியை பார்த்து அல்ல."

",இதேபோன்று இயேசுவை பார்த்து தான் பொருள் கொள்ளக்கூடிய வசனங்கள் இன்னும் இருக்கின்றன.

அவற்றில் 'ஒன்றுதான் நீ கூறியதும்.

சர்வ வல்லபரான இறைமகன் நம்மை மீட்பதற்காக மனித உரு எடுத்தார்.

அவர் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, 

நோயாளிகளைக் குணமாக்கி,

எல்லோருக்கும் நன்மையையே செய்து.

இறுதியில் நமக்காகப் பாடுகள் பட்டு, சிலுவையில் நமக்காக பலியானார்.

ஒருவருக்கும் விளங்காதபடி நற்செய்தியை அறிவிக்கவும்,

உள்ளவனுக்குக் கொடுக்கவும்,
 இல்லாதவனிடமிருந்து உள்ளதையும் எடுக்கவுமா மனிதன் ஆனார்?"

"நிச்சயமாக இருக்காது. அவர் நற்செய்தி அறிவித்ததே அதனால் மக்கள் ஆன்மீக நலன் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

அவரது வார்த்தைகளுக்கு அவரைப் பார்த்துதான் பொருள் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் விளக்குங்களேன்."

", அவர் கடலோரத்தில் உட்கார்ந்திருந்தபோது,

 பெருங்கூட்டம் அவரை நெருக்கியதால் அவர் படகிலேறி அமர வேண்டியிருந்தது.

அங்கிருந்து விதைப்பவன் உவமையைச் சொன்னார்.

அவர் கூட்டத்தை பார்த்த உடனேயே 

அதில் எத்தனை பேர் தனது நற்செய்தியை கேட்டு புரிய வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறார்கள்,

எத்தனை பேர் குணம் அடைய மட்டும் வந்திருக்கிறார்கள்,

எத்தனை பேர் கூட்டத்தோடு கூட்டமாக பொழுது போக்கிற்காக வந்திருக்கிறார்கள் 

என்று அவருக்குத் தெரியும்.

அவர் சர்வ ஞானம் உள்ள கடவுள்.

நற்செய்தியில் ஆர்வம் இல்லாத அநேகர் அந்த கூட்டத்தில் இருந்திருப்பது அவருக்கு தெரியும்.

அவர்களுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

அதனால்தான் விதைப்பவன் உவமையை சொல்லி முடித்தவுடன்,

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.

கூட்டத்தில் கேட்கச் செவி இல்லாதவர்களும் இருந்ததால்தான் இயேசு அப்படி சொன்னார்.

அப்போஸ்தலர்கள், அவர்களிடம் நீர் உவமைகளில் பேசுவதேன்?" என்று கேட்ட போது,

வந்தவர்களின் மனநிலையை பற்றி ஆண்டவர் கூறினார்.


வந்தவர்களில் அநேகர்

அவர்கள் கண்டும் காணாத , கேட்டும் கேளாத ,

 உணர விருப்பமில்லாத குணத்தினர்.

கேட்கச் செவியுள்ளவனுக்கு,

அதாவது.

கேட்க வேண்டும் என்ற உண்மையான ஆசை உள்ளவனுக்கு 
நிறைய சொல்லப்படும்.
(ஆசை உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்:)

விருப்பமில்லாதவன் தான் கேட்டதையும் மறந்து விடுவான்.
(ஆசை இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்)

வந்த கூட்டத்தின் மனநிலையை பற்றி ஆண்டவர் சீடர்களும் கூறிய வார்த்தைகள் இவை.

ஆனால் சீடர்கள் பேறு பெற்றவர்கள்.

"உங்கள் கண்களோ பேறுபெற்றவை: ஏனெனில் அவை காண்கின்றன. 

காதுகளும் பேறுபெற்றவை: ஏனெனில் அவை கேட்கின்றன."

ஆகவே தான் அவர்களுக்கு விதைப்பவன் உவமையின் பொருளை விளக்குகிறார்.

அந்த விளக்கம் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் உலகெங்கும் சென்று மக்களுக்கு அறிவிக்க வேண்டிய விளக்கம்.

அவர்களுடைய வாரிசுகளாகிய நமது குருக்கள் இன்று திருப்பலியின் போது நற்செய்தி வாசகங்களுக்கு நமக்கு விளக்கம்  தருகிறார்கள்.

நாம் கோவிலில் அமர்ந்திருக்கிறோம்.

எப்படி?

ஆண்டவர் எதிர் பார்க்கின்றபடியா?

 அல்லது 

அன்று அவர் முன் இருந்த கூட்டத்தைப் போலவா?

அதாவது,

காண கண்களும் ,
கேட்க செவிகளும் ,.
உணர உள்ளங்களும் உள்ளவர்களாக இருக்கிறோமா?

அல்லது,

கண்ணிருந்தும் பார்க்காதவர்களாகவும் ,

காது இருந்தும் கேட்காதவர்வளாகவும்,

 உள்ளம் இருந்தும் உணர முடியாதவர்களாகவும் இருக்கிறோமா?

எத்தனை பேர் பிரசங்கத்தில் சுவாமியாரைப் பார்க்கிறோம்?

 எத்தனை பேர் அவர் சொல்வதை கூர்ந்து கேட்கிறோம்?

எத்தனை பேர் கேட்பதை உள்ளத்தில் பதிக்கிறோம்?


எத்தனை பேர் பிரசங்கத்தில் சுவாமியாரைப் பார்க்காமல் பராக்கு பார்க்கிறோம் அல்லது தூங்குகிறோம்?

எத்தனை பேர் சுவாமியார் சொல்வதைக் கேட்காமல் பக்கத்தில் இருப்பவர்களோடு அல்லது cell phoneல் பேசுகிறோம்?

எத்தனை பேர் சுவாமியார் சொல்வதை ஒரு காது வழியே வாங்கி, உள்ளத்தில் இருத்தாமல், இன்னொரு காது வழியே விட்டு விடுகிறோம்?

சிந்தித்துப் பார்ப்போம்.

அன்று நடந்தவற்றை நற்செய்தியாளர்கள் குறித்து வைத்திருப்பதன் நோக்கம்  குருக்கள் அளிக்கும் நற்செய்தி விளக்கங்களால் நாம் பயன் பெறுவதற்காகத்தான்."

"உண்மைதான் தாத்தா.

திருமண வீட்டிற்குப் போய்  
சாப்பிடாமல் வந்து விடுபவர்களை போல,

 திருப்பலிக்குப் போனாலும் பிரசங்கத்தால் பயன் பெறாமல் வந்து விடுகிறோம்.

இனியாவது,

பிரசங்கத்தைக் காது கொடுத்து கேட்போம்,

 உள்ளத்தில் இருத்துவோம்,

 அதன்படி வாழ்வோம்."

லூர்து செல்வம்.

Monday, July 18, 2022

"இதோ, என் தாயும் என் சகோதரரும்." . (மத்.12:49)

."."இதோ, என் தாயும் என் சகோதரரும்." (மத்.12:49)

ஒரு நாள் இயேசு மக்களுக்கு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்தபோது ,

 அவருடைய தாயும் சகோதரரும் அவருடன் பேச வெளியே காத்துக்கொண்டிருபதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது..

இயேசு இதைத் தம்மிடம் கூறியவனுக்கு  மறுமொழியாக: 

"யார் என் தாய்? யார் என் சகோதரர்?" என்று சொல்லி,

 தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும்.

 வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.

அன்னை மரியாளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பாத நம்முடைய பிரிவினை சகோதரர்கள் இந்த வசனங்களை தங்கள் கூற்றுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முதலாவது "இயேசுவின் 
 தாயும் சகோதரரும்" என்ற வார்த்தைகளை எடுத்துக் கொண்டு 

அன்னை மரியாளுக்கு இயேசுவிற்கு பின் வேறு குழந்தைகள் பிறந்ததாக கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையில் சகோதரர்கள் என்ற வார்த்தை 
அன்னை மரியாளின் தங்கை (இயேசுவின் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாள்) மக்களைக் குறிக்கிறது.

அன்னை மரியாள் முக்காலமும் கன்னி.

"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்."

என்ற வார்த்தைகளை இயேசுவே
தனது தாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை,

தந்தையின் விருப்பப்படி நடக்கிறவனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வாதிட பயன்படுத்துகிறார்கள்.

 தந்தையின் விருப்பப்படி நடக்கிறவனை தனது தாயுடன் ஒப்பிடுவதிலிருந்தே அவர் தாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது ஏனோ அவர்களுக்கு புரியவில்லை.

காமராஜரைத் தென்னாட்டு காந்தி என்கிறோம். காந்தியின் பெருமையை ஏற்றுக்கொண்டதால் தானே காமராஜரை காந்தியோடு ஒப்பிடுகிறோம்.

தனது அன்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதினால் தான் இயேசு தன்னை பின்பற்றுகிறவர்களை அன்னையோடு ஒப்பிடுகிறார்.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்த 33 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் தாயுடன்தான் இருந்தார்..

 மூன்று ஆண்டுகள் மட்டுமே பொது வாழ்வுக்கு ஒதுக்கியிருந்தார்.

பொதுவாக எப்போதும் எல்லோருக்கும் நற்செய்தியை போதித்தாலும்

கிடைக்கும் முக்கிய சந்தர்ப்பத்தை முக்கிய போதனையைப் போதிக்கப் பயன்படுத்திக் கொள்வார்.

தந்தையின் சித்தப்படி நடக்க வேண்டியதன் அவசியத்தை தனது தாயைப் பற்றிய பேச்சு வந்தபோது வெளியிட்டார்.

அவருடைய தாய் மரியாள் தந்தையின் சித்தப்படி வாழ்ந்தார். தந்தையின் சித்தப்படி வாழ்பவர்கள் எல்லாம் தனது தாயைப் போன்றவர்களே என்பது அவரது போதனை,

தனது சீடர்களைப் பார்த்து சொன்னது நமக்கும் பொருந்தும்.

நாம் தந்தையின் சித்தப்படி நடந்தால் நாமும் அவருடைய தாயின் உயரிய நிலைக்கு மாறி விடுவோம்.

"எனது தாய்,  "இதோ, ஆண்டவருடைய அடிமை,"

என தன்னையே ஆண்டவருக்கு அடிமையாக்கி,

என்னை வளர்த்து,

என்னை சிலுவையில் என் தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுத்து,

அவரது சித்தத்தை நிறைவேற்றினாள்,

அவளை போல யாரெல்லாம் எனது தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் எல்லாம் எனக்கு தாய்தான்." என்கிறார்.

ஆண்டவருடைய அருளுக்காக போராடிக் கொண்டிருக்கும் நம்மை

 அருளால் நிறைந்த தனது தாயின் நிலைமைக்கு உயர்த்தி பேசுவது இயேசுவின் அளவு கடந்த தாராள குணத்தை காட்டுகிறது.

இவ்வளவு அர்த்தத்தோடு பேசிய நமது ஆண்டவரின் வார்த்தைகளுக்கு தங்களது இஷ்டம்போல் அர்த்தம் கொடுத்து அவரை பெற்ற தாயை குறைத்து பேசுகிறார்கள்.

பெற்ற தாயை யாராவது குறைத்து பேசினால் இயேசு மகிழ்ச்சி அடைவாரா?

இயேசுவே தாயாக ஏற்றுக் கொண்ட அன்னை மரியாளை

 அவருடைய சீடர்கள் என்று தங்களையே அழைத்துக் கொள்ளும் இவர்கள் 

தாயாக ஏற்றுக் கொள்ள மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது.

நம்மை பொறுத்தமட்டில் இயேசுவின் தாய் நமது தாய்.

   சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது

"இயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் பார்த்து, 

தம் தாயை நோக்கி, "அம்மா, இதோ! உம் மகன்" என்றார். 

பின்பு சீடரை நோக்கி, "இதோ! உன் தாய்" என்றார். 

இந்த வார்த்தைகளின் மூலம் தன்னை பின்பற்றுகிற அனைவரையும் இயேசு தன் தாயின் பிள்ளைகள் ஆக்கினார். அச்சீடர் அவளைத் தம் வீட்டில் ஏற்றுக்கொண்டதுபோல 

நாமும் நமது அன்னையை நமது வீட்டில் ஏற்றுக் கொள்வோம். 

நமது இல்லத்தின் அரசி நம் தாயாகிய அன்னை மரியாள்தான்.

நாம் இயேசுவின் சகோதரர்கள் என்று பெருமையாக சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது,

 அவரைப் போலவே வாழ வேண்டும்.

அவர் நமது மீட்புக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்தது போல,

நாமும் அவருக்காக

 அவரது தாயைப்போல 

நம்மையே அவருக்கு அர்ப்பணித்து வாழ்வோம்.

அன்னை மரியே வாழ்க.

லூர்து செல்வம்.


Sunday, July 17, 2022

"ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள்."( லூக்.10:42)

"ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள்."
( லூக்.10:42)

மரியாள் ஆண்டவருடைய காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.


மார்த்தாள் ஆண்டவருக்குப் பலவகையாய்ப் பணிவிடை புரிவதில் பரபரப்பாயிருந்தாள்.

மார்த்தாள் ஆண்டவருக்கு உணவு தயாரிப்பதில் சுறுசுறுப்பாக இருந்தாள்.

மரியாள் தனக்கு வேண்டிய ஆன்மீக உணவாகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்பதில் ஆர்வமாக இருந்தாள்.

ஆக இருவருமே இறைப் பணியில்தான் ஈடுபட்டிருந்தார்கள்.

"ஆண்டவரே, நான் உமக்குப் பணிபுரிய என் சகோதரியை எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும்"

என்று மார்த்தாள் கேட்டபோது அவள் செய்து கொண்டிருந்தது தவறு என்று ஆண்டவர் சொல்லவில்லை.

"நீ பல காரியங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள்."

என்று சொன்னார்.

ஆண்டவரது வார்த்தைகளைத் தியானிக்கும்போது என் மனதில் தோன்றும் எண்ணங்கள்:

 இறைப் பணி ஆற்றுபவர்கள் செய்யும் பல காரியங்கள் நல்ல முறையில்,

இறைவனுக்கு ஏற்றவையாக

 அமைய வேண்டுமே என்ற கவலையும், கலக்கமும் இருப்பது இயற்கைதான்.

இறைப்பணி சிறப்பாக அமைய வேண்டுமென்றால் முதலில் இறை வார்த்தையைக் கேட்க வேண்டும்.

இறைவார்த்தை அவர்களது செயல்களை வழிநடத்தும்.

மனிதனை மனிதனாக்குவது அவனுடைய உடலும், ஆன்மாவும்.

அவன் செய்வது எந்த பணியாக இருந்தாலும்,

 இறைபணியாக இருந்தாலும் உலகைச் சார்ந்த பணியாக இருந்தாலும்,

 ஆன்மாவும் உடலும் சேர்ந்து இயங்கும்.

ஆன்மா சிந்திக்கும்,

 உடல் சிந்தனையை செயல்படுத்தும்.

உலகைச் சார்ந்த பணி செய்வோரின் ஆன்மாவில் உலகைச் சார்ந்த தத்துவங்கள் இருக்கும்.

இறைப்பணி ஆற்றுவோரின் ஆன்மாவில் இறைவாக்கு இருக்கும்.

இறைப்பணி செய்வோர் முதலில் இறைவாக்கை கேட்க வேண்டும் அல்லது வாசிக்க வேண்டும்.

ஆன்மாவின் சிந்தனையில் இருக்கும் இறைவாக்கு 

உடல் மூலம் செயலாக மாற வேண்டும்.

இறைவாக்கை முதலில் கேட்காமல் இறைபணியில் இறங்குவோர் அதில் வெற்றி பெற முடியாது.

 "நீ பிச்சையிடும்பொழுதோ, உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும். 

அப்பொழுது,
4 நீ இடும் பிச்சை மறைவாயிருக்கும்: மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்."

 என்ற இறைவாக்கை மனதில் நிறுத்தி அதன்படி செயல்படுவோர் செய்வது இறைப்பணியாக இருக்கும்.

இந்த இறைவாக்கை தெரியாமல் செயல்படுவோர் செய்வது சுய விளம்பர பணியாக இருக்கும்.

இறைப் பணிக்கு மட்டும்தான் விண்ணகத்தில் சன்மானம்.

விளம்பர பணிக்கு கிடைக்கும் சன்மானம் அவர்கள் பெரும் விளம்பரம் மட்டுமே.

காலையில் எழுந்தவுடன் இறைவார்த்தையை வாசித்து விட்டு அதன்படி பகல் முழுவதும் இயங்குவோர் ஆற்றுவது மட்டுமே இறைப் பணி.

மார்த்தாளின் தங்கை மரியாள் இறை வார்த்தையை கேட்டு தவ வாழ்வு வாழ்ந்ததால்தான்,

இயேசுவின் அன்னை மரியாளுடன் இயேசு மரித்த சிலுவையின் அருகில் நிற்கவும்,

உயிர்த்த இயேசுவை முதல் முதலில் பார்க்கவும் பாக்கியம் பெற்றாள்.

நாமும் இறை வார்த்தையை கேட்டு, 

அதன்படி வாழ்ந்து,

விண்ணகத்தில் இயேசுவுடன் பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Friday, July 15, 2022

"உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்." (மத்.12:34)

"உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்." 
(மத்.12:34)

"தாத்தா, மிருகங்களும் பிறக்கின்றன, மனிதனும் பிறக்கின்றான்,

மிருகங்களும் உண்கின்றன,
மனிதனும் உண்கின்றான்.

மிருகங்களும் வளர்கின்றன,
மனிதனும் வளர்கின்றான்.

மிருகங்களும் சாகின்றன,
மனிதனும் சாகின்றான்.

ஆனால், மனிதன் நாகரீகத்தில் வளர்கின்றான், மிருகங்கள் எப்போதும் அப்படியே வாழ்கின்றனவே, ஏன்?

குகைகளில் வாழ்ந்த மனிதன் இப்போது பெரிய பெரிய வீடுகள் கட்டி வாழ்கின்றான்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குச்சிகளால் கூடிகட்டி வாழ்ந்த காகம், இன்னும் அப்படியே தானே வாழ்கின்றது."

", உண்மையிலேயே தெரியாமல் கேட்கின்றாயா? தெரியாததுபோல் நடிக்கிறாயா?"

"தாத்தா, ஒரு பைபிள் வசனம் பற்றி பேசவேண்டும். அதற்கு முன்னுரை இது.

சரி. பதில் சொல்லுங்கள்."

", மிருகங்களுக்கு உடல் மட்டும்தான் இருக்கிறது.

ஆனால் ஆன்மாவும், உடலும் சேர்ந்தவன் மனிதன்.

மனிதனுக்குப் புத்தி இருக்கிறது.

அதன் உதவியால் அவன் சிந்திக்கிறான், பேசுகிறான், செயல் புரிகிறான்.

சித்தனைகளை உள்ளத்தில் சேமித்து வைக்கிறான்.

சித்தனைகளை சொற்களின் உதவியால் பேசுகிறான்.

சித்தனைப்படி செயல் புரிகிறான்.

சிந்தனை, சொல், செயல் மூலம் கிடைக்கும் அனுபவங்களின் உதவியால் நாகரீகத்தில் வளர்கிறான்.

ஆனால் மிருகங்களுக்கு ஆன்மா இல்லை. அவைகளுக்கு புத்தியும், சிந்திக்கும் திறனும் இல்லை. ஆகவே அவை வாழ்ந்த படியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

சரி, இப்போ பைபிள் வசனத்துக்கு வா."

"உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்.''

", முழு வசனத்தையும் சொல்லு."


"விரியன் பாம்புகள் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவராயிருக்க எவ்வாறு நல்லவை பேசமுடியும்?

 ஏனெனில், உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்.''

",விரியன் பாம்புகள் குட்டிகளே, என்று யாரைப் பார்த்துச் சொல்கிறார்?"


"பரிசேயர்களைப் பார்த்துச் சொல்கிறார். 

அவர்கள் அவர் பேய் ஓட்டுவது, பேய்கள் தலைவனான பெயல்செபூலைக்கொண்டே என்றனர்.

இதைப்பற்றி ஆண்டவர் பேசும்போதுதான்  அவர்களைப் பார்த்து,

"விரியன் பாம்புகள் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவராயிருக்க எவ்வாறு நல்லவை பேசமுடியும்?

 ஏனெனில், உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்.''

என்றார்.

விரியன் பாம்புகள் குட்டிகள் விஷம் உள்ளவை. அவற்றிலிருந்து விஷம்தான் வெளியே வர முடியும்.

உள்ளே உள்ளதுதான் வெளியே வரும்.

பரிசேயர்களின் உள்ளத்தில் விஷம் இருந்தால் அதுதானே அவர்களது பேச்சிலும் வரும்."

", அவர்களைப் பொல்லாதவர்கள் ஆக்குவது எது?"

"அவர்கள் உள்ளத்தில் உள்ள எண்ணங்கள்."

",எண்ணங்கள் மோசமானவையாக இருந்தால் அவர்களது பேச்சும், செயலும் மோசமானவையாகத்தான் இருக்கும்.

ஒருவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ ஆக்குவது அவனுடைய உள்ளம் தான்.

உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் இருந்தால் அவன் நல்லவனாக இருப்பான்.

 கெட்ட எண்ணங்கள் இருந்தால் அவன் கெட்டவனாக இருப்பான்.

மனதில் அசிங்கமான எண்ணங்களை நினைத்துக் கொண்டிருப்பவன் அசிங்கமான வார்த்தைகளைத் தான் பேசுவான்.

அசிங்கமான காரியங்களைத்தான் செய்வான்.

நல்ல வாழ்வு வாழ வேண்டுமென்றால் எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

யூதாசின் உள்ளத்தில் பண ஆசை இருந்ததால்தான் அவன் பணத்திற்காக இயேசுவை காட்டிக் கொடுத்தான்.

நமது உள்ளத்தில் இறைவனைப் பற்றிய நினைத்துக் கொண்டிருந்தால் அவரைப் பற்றிய பேசுவோம்.

நற்செய்தி எண்ணங்களை சேமித்து வைத்திருந்தால் நமது பேச்சிலும், செயலிலும் நற்செய்தி வெளிவரும்.

காலையில் எழுந்தவுடன் நற்செய்தி நூலை வாசிக்கிறோம்.

நாம் வாசித்த நற்செய்திகள் பகல் முழுவதும் நமது உள்ளத்தில் இருந்தால் நாள் முழுவதும் அவற்றைப் பற்றியே பேசுவோம்,

அவற்றையே வாழ்வோம்.

நற்செய்தி வாசிப்பதின் நோக்கமே அதைப் பற்றி சிந்திக்கவும், பேசவும், வாழவும்தான்.

வாசிக்க வேண்டுமே என்பதற்காக வாசிக்க அல்ல.''

"தாத்தா, இப்போது நீங்கள் சொன்னீர்களே அதை ஒட்டிய ஒரு கேள்வி.

நற்செய்தி வாசிப்பதால் இறைவாக்கு பற்றிய எண்ணங்கள் நமது மனதில் பதிவது போல 

வேறு என்ன செய்வதால் நல்ல எண்ணங்கள் நமது மனதில் பதியும்."

',ஆன்மாவில் புத்தி இருப்பது போல நமது உடலில் ஐம்பொறிகள் இருக்கின்றன.

இவைதான் நாம் எந்த சூழ்நிலையில் வாழ்கின்றோமோ அதோடு நம்மை தொடர்பு படுத்துகின்றன.

நல்ல சூழ்நிலையில் வாழ்ந்தால் நல்ல செய்திகள் ஐம்பொறிகளின் வழியாக நமது உள்ளத்திற்கு செல்லும். 

அங்கே அவை எண்ணங்களாக மாறி சொல் வழியே வெளியேறி, செயல்களாகவும் மாறும்.

உதாரணத்திற்கு, நாம் தினமும் திருப்பலியில் பங்கேற்றால் அங்கே நாம் பெறும் செப, பைபிள் வாசக, பிரசங்க அனுபவங்கள் நமது ஐம்பொறிகளின் வழியாக நமது உள்ளத்திற்குள் ஏறி,

அங்கே எண்ணங்களாக தங்கி பகல் முழுவதும் நமது வாழ்வில் வழி நடத்தும். 

எழுந்தவுடன் T.V முன் அமர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்தால் அங்கு நாம் காணும் காட்சிகள் தான் நமது ஐம்பொறிகளில் வழியாக உள்ளத்திற்குள் ஏறும்.

அவை தான் நம்மை நாள் முழுவதும் வழி நடத்தும்.

காலையிலேயே ஏதாவது வம்பு பேசுவோர் கூட்டத்தில் அமர்ந்து அவர்களது தேவையற்ற பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருந்தால் அவை தான் உள்ளத்தில் பதியும்.

நாம் வாழும் சூழ்நிலை நமது உள்ளத்தை நல்லதற்கோ, கெட்டதற்கோ பெரிதும் பாதிக்கும்.

நல்ல எண்ணங்களை பெற்று நல்லவர்களாக வாழ வேண்டும் என்றால் நல்ல சூழ்நிலையில் நாம் வாழ வேண்டும்."

"ஆனால், தாத்தா, சாதாரண பாமர மக்களும், பாவிகளும் இயேசுவின் பின் சென்று பயன் பெற்றார்கள்.

ஆனால் அவர்களோடு சென்ற பரிசேயர்கள் ஒரு பயனும் பெற வில்லையே!"

",சாதாரண பாமர மக்களும், பாவிகளும் சுகம் பெற வேண்டும், நற்செய்தியை கேட்டு மனம் திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு இயேசுவின் பின் சென்றார்கள்,

 பயன் பெற்றார்கள்.

ஆனால் பரிசேயர்கள் இயேசுவின் பேச்சில் குறை காண வேண்டும், அவரை கொல்வதற்கு வழி தேட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் பின் சென்றார்கள்.

ஆகவே பயன் பெறவில்லை

நாம் பரிசேயர்களிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ளலாமே.

அவர்கள் குறை காண வேண்டும் என்ற கெட்ட நோக்கோடு நல்ல இயேசுவை பின்பற்றினார்கள். 

நாம் குறைகளை நீக்கி மனம் திருப்ப வேண்டும் என்ற நல்ல நோக்கோடு கெட்டவர்களோடு பழகலாமே.

இயேசு பாவிகளை தேடி வந்தது அவர்களை மனம் திருப்ப.

 நாமும் மனம் திருப்பும் நோக்கத்தோடு பாவிகளை தேடி செல்லலாமே.

அவர்களுக்கு இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கலாமே.

அதற்கு நமது உள்ளம் பரிசுத்தமான எண்ணங்களாலும்,
இயேசுவின் அருளாலும் நிறைந்திருக்க வேண்டும்.

உள்ளத்தை நற்செய்தியால் நிரப்புவோம்.

உலகெங்கும் பரப்புவோம்."

லூர்து செல்வம்.

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.''(மத்.12:30)

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.''
(மத்.12:30)

"எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது.

 ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான்.

 அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். 

கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது."(மத். 6:24) என்று நம் ஆண்டவர் கூறியிருக்கிறார்.

இருவருக்குமே ஊழியம் செய்யாமல் நடு நிலை வகிக்க முடியுமா, தாத்தா?"

"பொடியா, இயேசுவே இரண்டு தலைவர்கள் என்று கூறி இருக்கிறார்.

நீ நடுநிலை என்ற மூன்றாவது தலைவரை உருவாக்கியிருக்கிறாய்!

இதற்குப் பெயர்தான் அதிக பிரசங்கித்தனம்.

ஒருவன் கடவுளுக்கு ஊழியம் செய்வான், .
அல்லது,

அவருக்கு எதிரானவனுக்கு ஊழியம் செய்வான். .

மூன்றாவது தலைவர் கிடையாது.

கடவுளுக்கு ஊழியம் செய்யாதவன் 

பண ஆசை மூலம் செயல்புரியும் சாத்தானுக்கு ஊழியம் செய்கிறான்.

விண்ணக வாழ்வுக்காக வாழாதவன்

உலக வாழ்வே சதம் என்று வாழ்கிறான்.

புண்ணிய வாழ்வு வாழாதவன்

 பாவ வாழ்வு வாழ்கிறான்."


"அதைத்தான் இயேசு,

என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்,

என்று கூறியிருக்கிறாரோ?"

", நடு நிலைமைக் கொள்கை இவ்வுலக வாழ்வில்தான்.

ஆன்மீக வாழ்வில் அல்ல.

உலகில் அரசியல்வாதிகள் நடுநிலைமைக் கொள்கையை பின்பற்றுவதாக கூறுகிறார்கள்.

இவ்வுலகில் வாழ்வது வேறு. உலகிற்காக வாழ்வது வேறு.

ஆன்மீகவாதிகளும் லௌகீகவாதிகளும் இவ்வுலகில்தான் வாழ்கின்றார்கள்.

ஆன்மீகவாதிகள் ஆண்டவருக்காக இவ்வுலகில் வாழ்கின்றார்கள்,

லௌகீக வாதிகள் உலகிற்காக இவ்வுலகில் வாழ்கின்றார்கள்.

ஆன்மீகவாதிகள் ஆண்டவரோடு பேரின்ப வாழ்வு வாழவேண்டிய 
விண்ணக வாழ்வுக்காக வாழ்கின்றார்கள்.

லௌகீக வாதிகள் விண்ணக வாழ்வைப் பற்றிக் கவலைப் படாமல் இவ்வுலகே சதம் என்று வாழ்கின்றார்கள்."


"அதாவது ஆன்மீகவாதிகள் இயேசுவோடு இருக்கிறார்கள்.

லௌகீக வாதிகள் அவருக்கு எதிராய் இருக்கிறார்கள்.

சரியா?"

", சரி. இவ்வுலகில் இயேசுவோடு வாழ்பவர்கள் என்றென்றும் அவரோடு வாழ்வார்கள்.  

இவ்வுலகில் இயேசுவுக்கு எதிராய்
 வாழ்பவர்கள் என்றென்றும் 
அவரில்லாமல் வாழ்வார்கள்.

அவரோடு வாழ்வது மோட்ச நிலை.

அவரில்லாமல் வாழ்வது நரக நிலை."

"இவ்வுலகில் இயேசுவோடு வாழ்வது என்றால்,

அவரது கட்டளைகளை அனுசரித்து,

பாவம் இல்லாமல்,

பரிசுத்தர்களாய் வாழ்வது.

கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு ஏற்றபடி வாழ வேண்டும்.

ஞானஸ்தானம் பெற்றுவிட்டு தங்கள் இஷ்டப்படி வாழ்கின்றவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.

 இயேசுவின் இஷ்டப்படி வாழ்கின்றவர்கள்தான் கிறிஸ்தவர்கள்.

தாத்தா, 'என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்' 

என்றால் என்ன அர்த்தம்?"

",இயேசு உலகில் வாழ்ந்தபோது நற்செய்தி அறிவித்ததின் மூலமாகவும், தனது வாழ்க்கையின் மூலமாகவும் 

மக்களைத் தன் பக்கம் ஈர்த்தார்.

இப்போது தனது சீடர்கள் மூலமாக அதே வேலையைச் செய்கிறார்.

இயேசுவை பின்பற்றுகிற ஒவ்வொருவருக்கும் அந்த கடமை இருக்கிறது.

வாய்மொழி வழியே நற்செய்தியை அறிவிப்பதில் மூலமாகவும்,

நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வதன் மூலமாகவும்,

 நாம் மக்களைச் சேகரிக்க வேண்டும்.

நல்ல கிறிஸ்தவர்களாக வாழாதவர்கள் தங்கள் துர்மாதிரிகையான வாழ்க்கை மூலம் மக்களை இயேசுவிடமிருந்து சிதறடிக்கிறார்கள்.

சேகரியாதவர்கள் சிதறடிக்கிறார்கள்.

சேகரியாமலும், சிதறடியாமலும் இருக்க முடியாது.

ஆகவே முன்மாதிரிகையான நல்ல வாழ்வு வாழ வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை."

"வீட்டுப் பாடம் படிக்காமல் பள்ளிக் கூடம் சென்றால் எங்கள் ஆசிரியர் கையில் இரண்டு அடி கொடுப்பார். 

ஒன்று பாடம் படிக்காமல் போனதற்கு.

இன்னொன்று துர்மாதிரிகையாய் இருந்ததற்கு."

", நற்செய்தியாளராகச் செயல் படாதவர்கள், அதன் மூலமாகவே சாத்தானாகச் செயல்படுவார்கள்.

 ஆகவே நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையின் மூலமாக நற்செய்தி பணி ஆற்றுபவராகச் செயல்படுவோம்.

இயேசுவோடு இருப்போம், இன்றும், என்றும், என்றென்றும்."

லூர்து செல்வம்.

Thursday, July 14, 2022

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.12:7)

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.12:7)

", என்னடா பேரப்பிள்ள, ரொம்ப ஆழமா சிந்தித்துக்கொண்டு இருப்பது போல் தெரிகிறது."

"ஆமா, தாத்தா. நமது ஆண்டவர் நமக்காக தன்னையே  தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கத்தானே மனிதனாகப் பிறந்தார்!

",ஆமா, அதில் என்ன சந்தேகம்?"

"அதில் சந்தேகம் எதுவும் இல்லை. 
"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்று  ஆண்டவர் கூறியிருக்கிறாரே,

'பலியை அன்று' என்று ஏன் கூறினார்? தந்தைவிரும்பாத ஒன்றை அவர் எப்படி செய்திருக்க முடியும்?"

",உன்னுடைய நண்பனுடைய திருமண விழாவிற்குச் சென்று அவனுக்கு திருமண மொய்யாக ஆயிரம் ரூபாய் கவரில் வைத்து கொடுத்திருக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம்.

நீ  பணம் கொடுத்தது வெறும் மொய்யாகவா? அல்லது நட்பின் காரணமாகவா?"

"நட்பின் காரணமாகத்தான். நட்பு இல்லாவிட்டால் திருமணத்திற்கு போயிருக்க மாட்டேனே."

",இயேசு  தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்ததற்கு காரணமாக இருந்தது எது?"

"நம் மேல் அவர் வைத்திருந்த அன்பு."

",நம்மிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது எதை?"

"நமது அன்பை."

",அவர் மீது அன்பே இல்லாமல் ஆயிரம் ரூபாய் அவருக்கு காணிக்கையாக கொடுக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம்.

அவர்  உன்னிடம் என்ன சொல்லுவார்?''

"காணிக்கையை அன்று, அன்பையே விரும்புகிறேன்" என்று சொல்லுவார்."

", நீ முதலில் குறிப்பிட்ட இறைவாக்கு ஏற்கனவே பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் ஓசே இறைவாக்கினர் மூலமாக  இஸ்ரேல் மக்களுக்குக் கூறியது.

"ஏனெனில், நாம் விரும்புவது பலியை அன்று, அன்பையே நாம் விரும்புகிறோம்:

 தகனப் பலிகள் நமக்கு வேண்டியதில்லை, 

கடவுளை அறியும் அறிவே நாம் விரும்புகிறோம்."
(ஓசே .6:6)

அதாவது அன்பின் காரணமாக இல்லாமல் கொடுக்கப்படும் எந்த பலியையும் ஆண்டவர் விரும்பவில்லை.

இயேசு நமக்காக தன்னையே பலியாக தந்தைக்கு ஒப்புக்கொடுத்தது நம் மேல் கொண்ட அன்பின் காரணமாக.

கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நம்முடைய அன்பைத்தான்.

அன்பு இல்லாமல் கொடுக்கும் எதையும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

நமது அயலானுக்கும் முதலில் கொடுக்க வேண்டியது நமது அன்பேயே.

உடை இல்லாத ஒருவனுக்கு உடை கொடுக்க வேண்டுமென்றால் அவன் மீது நமக்குள்ள அன்பின் காரணமாக கொடுக்க வேண்டும்.


ஒரு நாள் இயேசு ஓய்வுநாளில் விளைச்சல்வழியே சென்று கொண்டிருந்தபோது, அவருடைய சீடர்களுக்குப் பசியெடுத்தது.

 அவர்கள் கதிர்களைக் கொய்து தின்னத்தொடங்கினர்.

இதை தண்டனைக்குரிய குற்றமாக பரிசேயர் கருதினர்.

பசி எடுத்தவர்கள் மீது இரக்கம் காட்டாமல், அவர்கள் மீது குற்றம் சாட்டியதை இயேசு விரும்பவில்லை.

ஆகவே அவர்களை நோக்கி 

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருப்பின், குற்றமற்றோரைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள்."

என்று சொன்னார்.

அன்பின் குழந்தைதான் இரக்கம்.
அன்பு இல்லாத இடத்தில் இரக்கம் இருக்க முடியாது.

தேவைப்படுபவர் மீது நமக்கு இரக்கம் ஏற்பட வேண்டும்.

இரக்கத்தின் காரணமாக அவர்களுக்கு தேவையானதை கொடுக்க வேண்டும்.

எப்படி அன்பு இல்லாமல் கொடுக்கப்பட்ட பலி பயனற்றதோ,

அப்படியே இரக்கம்  இல்லாமல் கொடுக்கப்படும் உதவியும் பயனற்றது.

இரக்கம்  இல்லாமல் ஒருவர் மேல் குற்றம் காண்பது குற்றம்.

 பசியின் காரணமாக அப்போஸ்தலர்கள் கதிர்களைக் கொய்து தின்றதைக் குற்றம் என்று பரிசேயர்கள் சொன்னது விரும்பத் தகாதது. 

ஆண்டவர் அப்படி ஏன் சொன்னார் என்பது புரிகிறதா?"

" இப்போது புரிகிறது. நாமும் அநேக சமயங்களில்   பரிசேயர்கள் செய்ததையே செய்கிறோம்.

களைப்பின் காரணமாக கொஞ்ச நேரம் அதிகமாக தூங்கிய பிள்ளையைத் தாய் கண்டிப்பது கூட இரக்கம் அற்ற செயல்தான்.

இரக்கம் உள்ளவர்கள்  மற்றவர்கள் தங்கள் பலகீனம் காரணமாக செய்யும் சிறிய தவறுகளை பெரிது படுத்த மாட்டார்கள்.

நாம் நமது அயலானுக்கு செய்யும் ஒவ்வொரு  செயலுக்குப் பின்னாலும் அவன் மீது அன்பும் இரக்கமும் இருக்க வேண்டும்.

இயேசு நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்கிறார்.

நமக்கு சுகம் இல்லாவிட்டால் நம் மீது நமக்கு இரக்கம் ஏற்படும்.

அந்த இரக்கத்தின் காரணமாகவே நாம் மருத்துவமனைக்கு செல்கிறோம்.

நமது அயலானுக்கு சுகம் இல்லாவிட்டால் நம் மீது நாம் காட்டும் இரக்கம் அவன் மீதும் இருக்க வேண்டும்.

அந்த இரக்கம் அவனுக்கு உதவி செய்ய தூண்ட வேண்டும்.

தாகம் எடுப்போருக்கு தண்ணீர் கொடுப்பதும்,

பசியாக இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பதும்,

உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுப்பதும்,

சுகம் இல்லாதவர்களை போய் பார்த்து ஆறுதல் கூறுவதும்,

சிறையில் உள்ளவர்களை போய் பார்த்து ஆறுதல் கூறுவதும்,

வழி தெரியாதவர்களுக்கு வழிகாட்டுவதும்

நாம்  அவர்கள் மீது கொண்டுள்ள இரக்கத்தின் காரணமாக இருக்க வேண்டும். நமது வள்ளல் தன்மையை விளம்பர படுத்துவது காரணமாக இருக்கக் கூடாது."

",ஆன்மீக விசயங்களில் சந்தேகம் ஏற்படுகின்றவர்களுக்கு சந்தேகம் நீங்க உதவுவதும், 

ஞானோபதேசம் கற்றுக் கொடுப்பதும்,

பாவம் செய்தவர்கள் மனம் திரும்ப உதவுவதும்,

வருத்தமாய் இருப்பவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவதும்,

நமது மனதை காயப்படுத்துபவர்களை மன்னிப்பதும்,

நமக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வதும்,

தொந்தரவு கொடுப்பவர்களோடு மகிழ்ச்சியாக பழகுவதும்,

இன்னும் இது போன்ற ஏராளமான பிறர் உதவி செயல்களும் 

மற்றவர்கள் மீது நாம் கொண்டுள்ள இரக்கத்தின் காரணமாக இருக்க வேண்டும்.

நாம் இயேசுவைப் பார்த்து 'ஆண்டவரே இரக்கமாயிரும்' என்று செபிக்கிறோம்.

நாமும் மற்றவர்கள் மீது இரக்கமாக இருக்க வேண்டும்.

இரக்கம் தான் நம்மை இயேசுவின் சீடர்களாக மாற்றுகிறது.

ஒவ்வொரு நாளும் காலையில் நற்செய்தியை வாசிக்கும் போது வாசகத்தின் அடிப்படையில் ஏதாவது ஒரு இரக்கச் செயலை அன்று செய்ய வேண்டும் என்று தீர்மானித்து,

 தீர்மானத்தை நிறைவேற்றவும் வேண்டும்.

நமது செயல்கள் நற்செயல்களாக மாற வேண்டும் என்றால் அவை இரக்கத்தில் காரணமாக செய்யப்பட வேண்டும்.

நமது ஆண்டவர் இரக்கத்தின் காரணமாக சென்ற இடமெல்லாம் எல்லோருக்கும் உதவி செய்து வாழ்ந்தது போல,

 நாமும் செல்லுமிடமெல்லாம் இரக்கத்தோடு செல்வோம்,

உதவி செய்து வாழ்வோம்."

லூர்து செல்வம்.

Wednesday, July 13, 2022

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்"(மத்.11:28)

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்"
(மத்.11:28)

"தாத்தா, இயேசு 'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே' என்று சொல்லும்போது எந்த சுமையை குறிப்பிடுகிறார்?"

",நீ என்ன நினைக்கிறாய்?"

"மனிதனுக்கு ஆன்மாவும் உடலும் இருப்பதால் இரண்டு வகையான சுமைகள் இருக்கும் என்று நினைக்கிறேன். 

அவற்றில் எந்த வகையை ஆண்டவர் குறிப்பிடுகிறார் என்று கேட்டேன்."

",ஆன்மா சம்பந்தப்பட்ட சுமை எது என்று நினைக்கிறாய்?'

"பாவமாகத்தான் இருக்க வேண்டும். 

ஆனால் பாவம் செய்யும்போது அது சுமையாக தெரியாது. 

அதில் உள்ள இன்பத்திற்காகத்தான் மக்கள் அதை விரும்பி செய்கிறார்கள்.

பாவத்தின் மீது வெறுப்பு ஏற்படும்போதுதான் செய்த பாவங்கள் சுமையாக தெரியும்.

நமது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியை சாப்பிடும் போது அது அவர்களுக்கு இனிப்பாகத்தானே இருந்திருக்கும்.

அதன் விளைவை அனுபவிக்க நேர்ந்த போது தான் அது சுமை என்பது புரிந்திருக்கும்.

அதேபோல் தான் மக்கள் பாவ வாழ்க்கை வாழும் போது இன்பகரமாகத்தான் வாழ்ந்திருப்பார்கள்.

ஆனால் பாவத்தினால் மன அமைதியை இழந்து,

அதனால் ஏற்பட போகும் விளைவை உணர ஆரம்பிக்கும் போது தான் அது சுமையாக மாறி,

வாழ்க்கையில் சோர்வை ஏற்படுத்தும்.

பாவச் சுமையிலிருந்து விடுதலை பெற எண்ணம் தோன்றும்.

பாவச் சுமையால் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களைப் பார்த்து தான் நமது ஆண்டவர் சொல்கிறார்,

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள்."

பாவச் சுமையை அவர் முன் இறக்கி வைத்து விட்டு நாம் நிம்மதியாக இருக்கலாம்.

மனுக்குலத்தின் பாவச் சுமையைத்தான் இயேசு சிலுவை உருவில் சுமந்து, 

அதில் தன்னையே பலியாக்கி,

அதற்குக் பரிகாரம் செய்தார்.

நாமும் நமது பாவச் சுமையை அவர் முன் இறக்கி வைப்பதற்காக குருத்துவத்தை ஏற்படுத்தி 

பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தையும் ஏற்படுத்தினார்.

பாவம் சங்கீர்த்தனை தொட்டியில் குருவானவர் முன் நமது பாவ சுமையை இறக்கி வைக்கும் போது நாம் இயேசுவின் முன்புதான் இறக்கி வைக்கிறோம்.

குருத்துவதையும் பாவ சங்கீர்த்தனத்தையும் நம்பாதவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல.

நாம் பலகீனமானவர்கள்.

யாரும் "நான் பாவத்தில் விழவே மாட்டேன்" என்று உறுதியாக கூற முடியாது.

விழ நேரும்போது இயேசுவின் காலடிதான்,

அதாவது,

பாவசங்கீர்த்தனத் தொட்டிதான் நமது ஒரே புகலிடம்.

இது சாதாரண கிறிஸ்தவன் முதல் பாப்பரசர் வரை அனைவருக்கும் பொருந்தும்."

", இயேசு பாவிகளைத் தேடித்தான் உலகுக்கு வந்தார்.

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன் " என்பதன் கருத்தைப் போய்க்கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"
(மத்.9:13)

திமிர்வாதம் கொண்டவனைக் குணமாக்கும்போது,

"அன்பனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" 

"மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"--

 திமிர்வாதக்காரனை நோக்கி- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து, உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு, வீட்டிற்குப்போ"
(லூக். 5:20, 24)

என்று கூறியபோது பாவங்களை மன்னிக்க அவருக்கு இருந்த அதிகாரத்தோடு ஆசையையும் வெளிப்படுத்தினார்.

அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது,

நல்ல கள்ளனை மன்னித்ததோடு,
அவனைப் பார்த்து,

"இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
(லூக்.23:43)

இவை எல்லாம் பாவங்களை மன்னிக்க அவருக்கு இருந்த ஆர்வத்தைக் காட்டுகின்றன.

சரி, இப்போது உடல் ரீதியான சுமையைப் பற்றி கூறு பார்ப்போம்."



"ஆன்மீக ரீதியான சுமை இறக்கி வைக்க வேண்டிய சுமை.

உடல் ரீதியான சுமை ஏற்றுக் கொள்ள வேண்டிய சுமை.

உடலில் ஏற்படும் நோய் நொடிகள், நிறைவேறாத ஆசைகள், 
 வாழ்வில் சந்திக்க நேர்ந்த ஏமாற்றங்கள், 
அவமானங்கள்,
 தோல்விகள், 
குடும்ப பிரச்சனைகள்

போன்ற துன்பங்கள்தான் உடல் ரீதியான சுமைகள்.

ஆண்டவரது வார்த்தையில் சிலுவைகள்.

ஆண்டவரே சிலுவையைத் தேடித்தான் உலகுக்கு வந்தார்.

தனது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரைப் பின் பற்றுபவன்தான் அவரது சீடனாக இருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் நமது வாழ்வில் துன்பங்கள் வரும்போது சங்கடமாகத்தான் இருக்கிறது.

யாராவது நமது துன்பங்களைப் போக்க மாட்டார்களா, ஆறுதல் கூற மாட்டார்களா எண்ணி ஏங்குகிறோம்.

அப்போது ஆண்டவர் கூறுகிறார்,

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்"

எப்படி இளைப்பாற்றுவார்?

இயேசு நம்மிடம் கூறுகிறார்,

"பாரமான சிலுவையைச் சுமந்து சோர்ந்து போயிருக்கும் என் அருமை மக்களே என்னிடம் வாருங்கள்.

நீங்கள் சுமந்து கொண்டிருப்பது வெறுமனே உலகைச் சார்ந்த துன்பம் அல்ல. 

உங்களுக்காக என் உயிரைப் பலியாய்க் கொடுத்த எனது சிலுவை.

நீங்கள் என்னைத்தான் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.

உலகின் பாவங்களை போக்க நான் சுமந்த அதே சுமையைத்தான் என்னோடு சேர்த்து சுமந்து கொண்டிருக்கிறீர்கள். 

நீங்கள் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ள என்னைப் பாருங்கள்.

அதே சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உங்களுள் இறங்கும்.

நீங்கள் சுமக்கும் சிலுவையின்
என் நுகம் எவ்வளவு இனிது, என் சுமை எவ்வளவு எளிது என்பது புரியும்.

நீங்கள் சிலுவையைச் சுமக்கும்போது 

 உங்களைப் படைத்து பராமரித்து வரும் என்னை,

உங்களுக்காக சிலுவையைச் சுமந்து அதில் மரித்த என்னை,

அளவு கடந்த அன்புடன் உங்களை நேசிக்கும் உங்களது அன்பு இயேசுவைத்தான் சுமக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் 

உங்கள் சிலுவையின் பாரம் காணாமல் போய்விடும்.

எவ்வளவு பெரிய சிலுவையாக இருந்தாலும் அதைச் சுமப்பது இன்பகரமாக மாறிவிடும்."

தாத்தா, துன்பங்களின் போது நாம் சுமப்பது துன்பங்களை அல்ல, நமது அன்பர் இயேசுவைத்தான் என்பதைப் புரிந்து கொண்டால்

நாம் நமது குழந்தையைச் சுமக்கும் தாயாக மாறி விடுவோம்.

"சிலுவை வடிவில் என்னோடு வாழும் இயேசுவே இப்படியே என்னோடு தங்கும்" என்று செபிக்க ஆரம்பித்து விடுவோம்.

இப்படித்தான் இயேசு நம்மை இளைப்பாற்றுவார்."

", Very good பேரப்புள்ள. நாம் சுமக்கும் சிலுவை கனமாக தோன்றும் போதெல்லாம் அதில் நம்மோடு பயணிக்கும் நமது மீட்பர் முகத்தை பார்க்க வேண்டும்.

கனம் காற்றாய்ப் போய்விடும்.

கனமான சிலுவை இனிமையான சிலுவையாக மாறிவிடும். 

இயேசுவோடு பயணிப்பது என்றென்றும் அவரோடு பேரின்ப வாழ்வு வாழ்வதற்காகத்தானே.

தனது குழந்தையின் முகத்தை பார்ப்பதற்காக பேறுகால வேதனையை மகிழ்ச்சியோடு அனுபவிக்கும் தாயாக மாறி விடுவோம்.

உலகின் துன்பங்கள் நம்மை வாட்டும்போது நமக்குள்ளே வாழும் சாந்தமும், மனத் தாழ்ச்சியும் உள்ள இயேசுவின் முகத்தைப் பார்ப்போம்.

துன்பம் இன்பமாக மாறிவிடும்."

லூர்து செல்வம்.

Monday, July 11, 2022

ஒரு ரோஜா செடி பேசுகிறது.

ஒரு ரோஜா செடி பேசுகிறது.
********************************
நான் வளரும் பூந்தோட்டத்திற்கு வருவோர் எல்லோரும் என்னைப் பற்றிதான் பெருமையாய்ப் பேசுகிறார்கள. 

எனது பூக்கள் மிக அழகானவை;  

நறுமணம் மிக்கவை. 

எனது பூக்களைச் சூடாத பெண்களையும், எனது பூமாலைகளைப் பயன்படுத்தாத விழாக்களை யும் காண்பது அரிது.

என்னால் அவ்வளவு அழகான மலர்களை எவ்வாறு பூக்க முடிகிறது?

அது ஒரு பெரிய இரகசியம்.

ஆரம்பத்தில் எனது உரிமை யாளர் போட்ட உரத்தையும், ஊற்றிய தண்ணீரையும் சாப்பிட்டு கொழுகொழு என வளர்ந்தேன்.

நான் அழகாக இருந்தேன்.

ஆனால் ஒரு பூ கூட பூக்கவில்லை.

எனக்கே என்மீது பாவமாயிருந்தது.

ஒருநாள் என் உரிமையாளர் கையில் ஒரு பெரிய கத்தரிக்கோலுடன் என்னை நோக்கி வந்தார்.

எனக்கு நடுக்கம் வந்துவிட்டது.

"என்னை வெட்டி வீசப்போகிறார். உண்டு காெழுத்து பூக்காத எனக்கு சரியான தண்டனை கிடைக்கப் பாேகிறது."

 மனதுக்கூள்ளே அழுதேன்.

கத்தரிக்கோல் என் மேல் காேரதாண்டவமாட காெழுத்து வளர்ந்த என் கிளைகளெல்லாம் வெட்டி வீசப்பட்டன.

இறகுகளை இழந்த காேழிபாேல மாெட்டையாகிவிட்டேன்.

 எனக்கே அசிங்கமாக இருந்தது.

ஆயினும் பாெறுமையாய் இருந்தேன்.

தோட்டக்காரர் என்னைச்சுற்றி கொத்தி உரமிட்டு நீரூற்றி வந்தார்.

கொஞ்ச நாட்களில் புதிய தளிர் விட ஆரம்பித்தேன்.

என்ன ஆச்சரியம்!

முன்னை விட வேகமாக வளர ஆரம்பித்தேன்!

ஏராளமான அழகான பூக்களைப் பூத்துக் குலுங்க ஆரம்பித்தேன்.

இப்போது புரிந்தது.

வீணாக வளர்ந்த கிளைகளை தோட்டக்காரர் வெட்டி வீசியதால்தான் என்னால்புதிய வளர்ச்சியடைந்து அழகான பூக்களைப் பூக்க முடிந்தது.

என் கதையை வாசித்த அன்பர்களே, நீங்களும் இவ்வுலகில் இறைவனால் நடப்பட்ட ரோஜா செடிகள்தான்.

புண்ணியங்களான அழகான பூக்களை பூத்துக் குலுங்கவேண்டுமென்றால் அவற்றிற்கு எதிரானவையெல்லாம் வெட்டி எறியப்பட வேண்டும்.

அந்த வேலையை இறைவன் உங்களில் செய்யும்போது உங்களுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் இறைவன் உங்களுக்குக் கஷ்டங்களை அனுப்புவதே உங்களிடமுள்ள வேண்டாத குணங்களை நீக்கி உங்களைப் பரிசுத்தப்படுத்ததான்.

துன்பங்கள் மறைமுகமான ஆசீர்வாதங்கள்.(Blessings in disguise)

ஆகவே துன்பங்கள் வரும்போது அவற்றை இறைவனுக்கு நன்றியோடு ஒப்புக்கொடுங்கள்.

எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.

லூர்து செல்வம்

Sunday, July 10, 2022

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

"தாத்தா, நேரத்துக்கும், தூரத்துக்கும் அளவுகோல்கள் இருக்கின்றன.

அன்புக்கு அளவுகோல் இருக்கிறதா?"

", ஏன் இந்த திடீர் சந்தேகம்?"

"தாத்தா, கடவுளுடைய அன்புக்கு அளவு இல்லை. ஆகவே நம்மால் அதை அளக்க முடியாது.

ஆனால் நாம் அளவு உள்ளவர்கள்.

 சிலரை குறைவாக அன்பு செய்கிறோம்.

 சிலரை அதிகமாக அன்பு செய்கிறோம்.

 சிலரை மிக அதிகமாக அன்பு செய்கிறோம்.

 கடவுளை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு செய்கிறோம்.

அளவுள்ள நமது அன்பை அளப்பதற்கு ஏதாவது அளவுகோல் இருக்கிறதா?"

",நீ  உனது அப்பாவை அதிகமாக அன்பு செய்கிறாயா?

 அல்லது,

 அம்மாவை அதிகமாக அன்பு செய்கிறாயா?"

"என்னை வம்பில் மாட்டி விடப் பார்க்கிறீர்கள்.

நான் இருவரையுமே அதிகமாக அன்பு செய்கிறேன்."

",இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரு பிரச்சனை வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். 

உனக்கு தகவலும் ஒரே நேரத்தில் வந்திருக்கிறது.

 நீ யாரை முதலில் பார்க்கப் போவாய்?''

"அது பிரச்சனையைப் பொறுத்தது."

",ஒரே மாதிரியான பிரச்சனை என்று வைத்துக் கொள்வோம்."

"அம்மாவைத்தான் முதலில் பார்க்கப் போவேன். அப்பாவை விட அம்மாவுக்குதான் அதிக உதவி தேவைப்படும்.

உடனே அப்பாவை விட அம்மாவைத்தான் அதிகம் நேசிக்கிறேன் என்று சொல்லி விடாதீர்கள். இருவரையும் நேசிக்கிறேன்."

", நீ கடவுளை அதிகம் நேசிக்கிறாயா அல்லது உன்னுடைய பெற்றோரை அதிகம் நேசிக்கிறாயா?"

"தாத்தா, அன்பை அளக்க அளவுகோல் இல்லை என்று நான் முதலிலேயே கூறிவிட்டேன்.

ஆனாலும் கடவுளைத்தான் அதிகம் நேசிக்க வேண்டும்."

",அளவுகோல்தான் இல்லையே. எப்படி அதிகம் என்று கண்டுபிடிப்பாய்?"

"தாத்தா, சில பதில்கள் பிரச்சனைகள் வரும்போதுதான் தெரியும். 

ஆனால் கடவுளை பொறுத்த மட்டில் அவரைத்தான் மற்றவர்களை விட அதிகமாக நேசிக்க வேண்டும்.

இது அவருடைய கட்டளை.

படைத்தவருடைய கட்டளைக்கு கீழ்படிய வேண்டியது படைக்கப்பட்ட நமது கடமை.

ஆகவே நான் என்னுடைய பெற்றோரை விட கடவுளைத்தான் அதிகம் நேசிக்கிறேன்."

", ஞானோபதேச வகுப்பில் டீச்சர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது போல் சொல்கிறாயா?

உண்மையிலேயே உணர்ந்து சொல்கிறாயா?"

"உணர்ந்துதான் சொல்கிறேன்."

", கடவுளை நேசிப்பவன் ஞாயிற்றுக்கிழமை காலையில் திவ்ய பலி பூசைக்கு செல்ல வேண்டும். இது அவருடைய திருச்சபையின் கட்டளை.

நீ பூசைக்கு புறப்பட்டு கொண்டிருக்கும் போது உனது அப்பா மயங்கி விழுந்து விட்டார்.

 நீ திருச்சபையின் கட்டளைப் படி பூசைக்குப் போவாயா?

அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வாயா?"

"தாத்தா, நீ உனது அயலானுக்கு செய்வதை எல்லாம் எனக்கே செய்கிறாய் என்று ஆண்டவரே கூறியிருக்கிறார்.

 நான் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது நான் கடவுளுக்குதான் சேவை செய்கிறேன்.

 ஆகவே இந்த சூழ்நிலையில் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன்.

அது தான் கடவுளின் விருப்பம்." 

",அப்படியானால், என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."

என்ற இயேசுவின் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?"

''தாத்தா, ஒருவன் அவனுடைய நண்பனிடம் 10 ரூபாய் உதவியாக கேட்டானாம்.

அவன் கேட்டவனுடைய பாக்கெட்டிலிருந்து ரூபாயை எடுத்து அவனிடமே கொடுத்து விட்டானாம்.

உங்கள் கதை அப்படித்தான் இருக்கிறது.

சந்தேகம் கேட்க வந்தது நான்.

என்னிடமிருந்தே பதிலைப் பிடுங்குகிறீர்கள்."

", ஆசிரியருடைய வேலையே அதுதானே.

Education என்ற ஆங்கில வார்த்தையின் Latin root 'Educere'.
Lead out.

மாணவனின் உள்ளே புதைந்து கிடக்கும் திறமையை வெளியே கொண்டு வருபவர்தான் ஆசிரியர்.

உனது சந்தேகத்திற்கு பதில் உன்னிடமே இருக்கிறது.

அதைத்தான் வெளியே கொண்டு வருகிறேன்.

இப்போ பதில் சொல்லு.


", என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."

என்ற இயேசுவின் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?"

"தாத்தா, 'தந்தையும், தாயும் நம்மை பெறுவதற்கு முன்பே நித்திய காலமாக நம்மை தன்னுடைய மனதில் சுமந்து கொண்டிருப்பவர் நம்மை படைத்த இறைவன்.

யார் வயிற்றிலிருந்து நாம் பிறக்க வேண்டும் என்பதை திட்டமிட்டவர் அவர்தான்.

உண்மையில் நம்மைப் படைத்து பெற்றவர் அவர்தான்.

நாம் பெற்றோர் என்று அழைப்பவர்கள் அவர் பயன்படுத்திய கருவிகளே.
(Instruments)

நாம் அதிகமாக  நேசிக்க வேண்டியது நம்மை படைத்த கடவுளையே.

தாத்தா, வள வள என்று விளக்குவதற்குப் பதில் ஒரு ஒப்புமை சொல்கிறேன்,

புரிந்து கொள்வது எளிது.

உங்கள் வீடு சென்னையில் இருக்கிறது.

எனது வீடு பாவூர்ச் சத்திரத்தில் இருக்கிறது.

ஒரு மாதம் உங்கள் வீட்டில் தங்கியிருந்தேன்.

வீட்டுக்கு வர கையில் காசில்லை.

நீங்கள் ஒரு பேருந்தில் ticket book செய்து என்னை அனுப்பி வைத்தீர்கள்.

அனுப்பியது நீங்கள். நான் வந்தது 
பேருந்தில்.

இப்போ நான் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும், உங்களுக்கா, பேருந்துக்கா?"

", அனுப்பியது நான். பேருந்து கருவி மட்டுமே. அனுப்பிய எனக்குதான் நன்றி சொல்ல வேண்டும்."

"கரெக்ட். என்னை அன்பு என்ற பண்போடு படைத்து, பெற்றோர் என்ற கருவி மூலம் உலகிற்கு அனுப்பி வைத்தவர் கடவுள்.

அவர் தந்த அன்பு என்ற பண்புடன் அவரை அதிகமாக அன்பு செய்ய வேண்டுமா, கருவியாக மட்டும் செயல்பட்ட பெற்றோரை அதிகமாக அன்பு செய்ய வேண்டுமா?"

", கடவுளைத்தான் அதிகமாக அன்பு செய்ய வேண்டும்."

"கடவுள் பெற்றோரையும் அன்பு செய்ய வேண்டுமென்று கட்டளை கொடுத்திருக்கிறார்.

 அந்த கட்டளைக்கு இணங்க அவர்களையும் அன்பு செய்ய வேண்டும்.

 ஆனாலும் இறைவனைத்தான் அதிகமாக அன்பு செய்ய வேண்டும்."

",கடவுளை கண்ணால் பார்த்திருக்கிறாயா?"

" உலகில் வாழும்போது கடவுளை கண்ணால் பார்க்க முடியாது."

",பார்க்க முடியாத கடவுளை எப்படி அன்பு செய்வாய்?"

"அன்பு செய்ய கண்ணால் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

அன்பு செய்ய வேண்டியது ஆன்மாவின் வேலை. நமது ஆன்மாவையே நமது கண்களால் பார்க்க முடியாது.

ஆனாலும் அன்பினால் நாம் செய்யும் செயல்களை கண்ணால் பார்க்க முடியும்."

", செயல்களை என்றால்? பார்க்க முடியாத கடவுளிடம் என்ன செய்வாய்?"

"அதற்காகத்தான் கடவுளை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும் என்ற கட்டளையோடு

 நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்ற கட்டளையையும் கொடுத்திருக்கிறார்.

இறைவன் மேல் நாம் கொண்டுள்ள அன்பு பிறர் அன்பு செயல்களில் வெளிப்பட வேண்டும்.

கடவுளை நேசிக்கும் நாம் நமது பிறனையும் நேசிக்க வேண்டும்.

கடவுளை நேசிக்காதவனால் பிறனை நேசிக்க முடியாது.

பிறனை நேசிக்காதவனால் கடவுளை நேசிக்க முடியாது.

  இறையன்பும், பிறரன்பும் பிரிக்க. முடியாதவை.

கடவுளை நேசிப்பவன் கட்டாயம் பிறனையும் நேசிப்பா ன்.

பிறனை நேசிப்பவன் கட்டாயம் கடவுளை நேசிப்பான்."

",கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் பிறனை நேசிக்கின்றார்களே!"

"தாத்தா, 
பள்ளிக்கூடத்தில் சேர்ந்து,
 பாடங்கள் படித்து,
 தேர்வு எழுதி 
வெற்றி பெற்றவர்களுக்கு 
அரசு சான்றிதழ் கொடுக்கிறது..

 அதை வைத்து வேலைக்கு விண்ணம்பிக்கலாம்.

பள்ளிக்கூடத்திற்கு போகாமல் நீங்கள் எத்தனை புத்தகங்களை படித்திருந்தாலும் நீங்கள் எந்த வேலைக்கும் விண்ணப்பிக்க முடியாது.


பள்ளிக்கூடத்தில் திருக்குறளை படித்து அதற்கான தேர்வில் வெற்றி பெற்றால் திருக்குறள் போதிக்கும் ஆசிரியராக வேலை செய்யலாம்.

ஆனால் அந்த திருக்குறளை எழுதிய வள்ளுவரால் அவரது குறளை விளக்கும் வேலைக்குப் போக முடியாது,

 ஏனென்றால் அவர் பள்ளிக்கூடம் போகவில்லை.

அதுபோல, கடவுள் நம்பிக்கை உள்ளவன் செய்யும் அன்புக்கு தான் விண்ணகத்தில் பலன் உண்டு.

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் 
செய்யும் அன்புக்கு விண்ணகத்தில் பலன் இல்லை.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அவர் எந்த நோக்கத்தோடு அன்பைப் பகிர்ந்து கொண்டாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை.

இறைவன் பகிர்ந்து கொண்ட அன்பை தங்களது சொந்த நோக்கத்திற்காக பயன்படுத்தினால் அது எப்படி இறைவன் முன் பலன் உள்ளதாக இருக்கும்?"

",கடவுள் எந்த நோக்கோடு தனது அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டார்?"

"தாத்தா, அன்பே உருவானவர் கடவுள்.

நித்திய காலத்திலிருந்தே தன்னைத் தானேயும், நம்மையும் அளவில்லாத விதமாய் அன்பு செய்து கொண்டிருப்பவர்.

அவரை அன்பு செய்வதற்கும்,

 நம்மை நாமே அன்பு செய்வதற்கும்,

நம்மை நாமே அன்பு செய்வதுபோல நமது பிறனையும் அன்பு செய்வதற்கும்

நம்மைப் படைத்தார்.

நன்றாகக் கவனியுங்கள்,

கடவுள் தான் படைத்த மனிதரோடு தனது அன்பை பகிர்ந்து கொண்டதின் நோக்கம்,

எல்லாவற்றுக்கும் மேலாக அவரை அன்பு செய்வது,

நம்மை நாமே அன்பு செய்வது போல நமது பிறனையும் அன்பு செய்வது.

அதாவது,

அவரையும், அவருக்காக அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்வது.

 நமக்கு கடவுள் மீது இருக்க வேண்டிய அன்பையும், பிறன் மீது இருக்க வேண்டிய அன்பையும் பிரிக்க முடியாது.

கடவுள் மீது அன்பு இருக்க வேண்டுமென்றால் முதலில் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிறன் மீது அன்பு இருக்க வேண்டும் என்றால் பிறன் அவரால் படைக்கப்பட்ட நமது சகோதரன் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடவுளுக்காகவும், அவரது மகிமைக்காகவுமே நமது அன்பை பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ன செய்தாலும் அதற்கு ஆன்மீக பயன் ஒன்றும் இல்லை."

", கரெக்ட். எதை செய்தாலும் கடவுளுக்காகவே செய்கின்றவர்கள் கடவுளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கடவுளுக்காகவே தங்கள் பெற்றோரையும், பிள்ளைகளையும், மற்றவர்களையும் நேசிப்பவர்கள் கடவுளையே அதிகமாக நேசிக்கிறார்கள்.

கடவுளையே எல்லாவற்றுக்கும் மேலாக நேசிப்பவர்களே அவருக்கு ஏற்றவர்கள்.

நாம் கடவுளுக்கு ஏற்றவர்களாக வாழ்வோம்.

கடவுளையும், அவரது மகிமைக்காக நமது அயலானையும் நேசிப்போம்.

நிலையான பேரின்ப வாழ்வை பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்.