"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்." (மத்.6:11).
"தாத்தா, ஒவ்வொரு மாதமும் நாம் ஈட்டும் சம்பளத்தைச் சிக்கனமாகச் செலவழித்து,
வருங்காலத்தில் பிள்ளைகள் படிப்பிற்காகவும்,
முதிய வயதில் நமக்கு உதவியாக இருப்பதற்காகவும் பணத்தை வங்கியில் போட்டு சேமிக்கின்றோமே,
இது சரியா, தப்பா?"
", ஏன் இந்தக் கேள்வி?"
"நமது ஆண்டவர் விண்ணகத் தந்தையை நோக்கி செபிக்கக் கற்றுத்தரும்போது
"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்."
என்று செபிக்கக் கற்றுத்தந்தார்.
அதாவது அன்றன்றைய தேவைகளை அன்றன்று பூர்த்தி செய்யும்படி தந்தையைக் கேட்கச் சொன்னார்.
அன்றன்றைய தேவைகளை அன்றன்றே கடவுள் பூர்த்தி செய்தால், நாளைக்கான சேமிப்பு எதற்கு?"
", பேரப்புள்ள, ஆண்டவருடைய போதனைகள் பற்றி எந்தக் கேள்வி கேட்பதாகயிருந்தாலும் ஒரு அடிப்படை உண்மையை மனதில் வைத்துக் கொண்டு கேட்க வேண்டும்.
கடவுள் நம்மைப் படைக்கும் போது ஆன்மாவுடனும், உடலுடனும் படைத்தார். ஆன்மா கடவுளைப் போலவே ஆவி.
உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சடப்பொருள்.
உலகமும் சரி, அதிலிருந்து எடுக்கப்பட்ட உடலும் சரி ஆன்மாவின் ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாய் இருக்கும்படி படைக்கப் பட்டன.
ஆன்மா அவற்றுக்காகப் படைக்கப் படவில்லை.
இயேசு மனிதனாக பிறந்தது ஆன்மாவை பாவத்திலிருந்து மீட்க.
நமது உடலைக் காப்பாற்ற அவர் பிறக்கவில்லை.
அவருடைய போதனைகள் அனைத்தும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவை.
அவற்றை உலக ரீதியாக எடுத்துக் கொண்டு நம்மை நாமே குழப்பிக் கொண்டிருக்க கூடாது.
உதாரணத்துக்கு,
"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று அவர் சொன்னது நமது ஆன்மீக வாழ்க்கை சம்பந்தப்பட்ட உதவிகளைக் கேட்பதற்கு.
பண உதவி கேட்பதற்கு அல்ல.
அவர் நம்மை படைத்தவர் என்ற முறையில் இவ்வுலகில் நாம் வாழ்வது சம்பந்தப்பட்ட உதவிகளையும் கேட்கிறோம்.
அவை நமது ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாக இருந்தால் மட்டுமே அவற்றை கடவுள் நமக்குத் தருவார்.
ஒரு வேலைக்கு விண்ணப்பித்து விட்டு அந்த வேலை நமக்கு கிடைக்க உதவி செய்யும்படி தந்தையை கேட்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த உதவியைத் தந்தையிடம் கேட்பதில் தவறில்லை.
ஆனால் அந்த வேலை நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருந்தால் மட்டுமே கடவுள் நமக்கு அதைத் தருவார்.
ஆன்மீக வாழ்விற்கு இடைஞ்சலாக இருக்கும் பட்சத்தில் அதைத் தரமாட்டார்.
இது நாம் கேட்கும் எல்லா உதவிகளுக்கும் பொருந்தும்.
இயேசு நமக்குக் கற்பித்த செபம் முழுக்கமுழுக்க ஆன்மீகம் சம்பந்தப்பட்டது.
அதை,
இறைப் புகழ்,
அன்றாட ஆன்மீக வாழ்வுக்கு தேவையான உதவிகளை கேட்டல்,
பாவ மன்னிப்பு மன்றாட்டு
என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்."
"தாத்தா, கொஞ்சம் பொறுங்கள்.
முதலில் கடவுளைப் புகழ்கிறோம் - புரிகிறது.
மூன்றாவது பாவ மன்னிப்பு கேட்கிறோம் - புரிகிறது.
இரண்டாவது,
எங்கள் அன்றாட உணவை இன்று தாரும் - அது தான் புரியவில்லை."
",உனக்குப் புரியவில்லை என்பது எனக்கு புரிகிறது. அது உனது கேள்வியிலிருந்தே தெரிகிறது.
உணவு என்றால் தினமும் மூன்று முறை சாப்பிடும் உணவு மட்டுமல்ல.
நமது அன்றாட ஆன்மீக வாழ்க்கைக்குத் தேவையானவை."
"அப்போ, அது உடல் சம்பந்தப்பட்ட தேவைகளைக் குறிக்காதா?"
",நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் உடலும் ஆன்மாவுக்காகத்தான் என்று.
உடல் வாழ்ந்தால்தான் ஆன்மீக வாழ்வு வாழ முடியும்.
உடல் இறக்கும்போது உலகில் ஆன்மீக வாழ்வும் முடிந்து விடும்.
ஆன்மா மறுவுலக வாழ்வுக்குச் சென்று விடும்.
ஆகவே, நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவக்கூடிய உடல் சார்ந்த உதவிகளையும் கேட்கிறோம்."
" தாத்தா, என் கேள்வியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.
ஏன் 'அன்றாட உணவு?"
", நாளைய உணவு இன்றே கிடைத்தாலும் அதை என்ன செய்வாய்?"
"நாளைக்குதான் சாப்பிடுவேன்."
",அப்போ அது நாளைக்கு கிடைத்தால் போதுமே."
"தாத்தா, வயலில் நெல் விளைகிறது. அது கடவுள் கொடுப்பது தான். வருடம் முழுவதற்கும் போதுமான நெல்லை வீட்டில் சேமித்து வைக்கிறோமா, இல்லையா?"
", வைக்கிறோம்."
"அது தவறா?"
", தவறு என்று நான் சொல்ல வில்லையே."
"நாம் அன்றாட உணவைத்தானே கேட்கிறோம். அன்றாடம் உணவு கிடைத்தால் நாம் ஏன் சேமித்து வைக்க வேண்டும்?"
", நான் முழுக்க முழுக்க ஆன்மீக ரீதியாகவே பேசிக் கொண்டிருக்கிறேன்.
நீ முழுக்க முழுக்க உலக ரீதியாகவே பேசிக் கொண்டிருக்கிறாய்.
உலகம் படைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன.
இன்றைக்கு தேவையான உணவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பூமிக்குள் இருந்தது என்பது உனக்குத் தெரியுமா?"
"தெரியும். ஒரு அணுவைக் கூட புதிதாகப் படைக்கவில்லை.
முதலில் படைக்கப்பட்ட உலகம் தான் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது."
",பூமியின் வாழ்நாள் முழுவதும் அது தரவேண்டிய உணவு பூமிக்குள்ளே ஆரம்பம் முதல் சேமித்து வைக்கப் பட்டிருந்தாலும்
அந்த உணவு அன்றன்று தான் தாவரங்கள் மூலமாக வெளியே வருகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட மாமரத்தின் வாரிசுதான் இன்றைய மாம்பழம்."
"அன்றன்றைக்குத் தேவையான உணவு அன்றன்று வரும்படி கடவுளே சேமித்து வைத்திருக்கிறார் என்று சொல்லுகிறீர்கள்."
", ஆமா. நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு அன்றன்றைக்கு என்ன வேண்டும் என்பதை துவக்கம் இல்லாத காலத்திலிருந்தே (From all eternity) கடவுள் தன் மனதில் திட்டமிட்டு வைத்திருக்கிறார்.
தமது திட்டத்தின்படி அன்றன்று வேண்டியதை அன்றன்று தருகிறார்.
இதற்குக் கடவுள் நம்மையே பயன்படுத்திக் கொள்கிறார்."
"நம்மையா? எப்படி?"
"அவருக்காகத்தான் நாம் சேமித்து வைக்கிறோம்."
"தாத்தா, நீங்கள் உங்களையே மறந்து பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
கர்த்தர் கற்பித்த செபம் முழுக்க முழுக்க ஆன்மீக சம்பந்தப் பட்டது என்றீர்கள்.
இப்போது உலகியல் ரீதியான சேமிப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்."
", பேரப்புள்ள, நான் கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்.
கடவுள் சம்பந்தப்பட்டது எல்லாம் ஆன்மீகம்தான்.
உலகம் - வெளகீகம்.
கடவுள் உலகைப் படைத்தார் - ஆன்மீகம்.
கடவுள் அவரது படைப்புகளை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருகிறார்.
நாம் அவருடைய படைப்பு.
ஒவ்வொரு வினாடியும் நம்மைப் பராமரித்து வருகிறார்.
நாம் வாழ தேவையானவற்றைத் தருவது அவருடைய பராமரிப்பில் அடங்கும்.
குழந்தை தாயிடம் பால் கேட்டு அழுவது போல,
நாம் நமது பராமரிப்பிற்குத் தேவையானவற்றைக் கேட்டு கடவுளிடம் செபிக்கிறோம்.
தனக்குத் தாய் பால் தருவாள் என்று குழந்தைக்குத் தெரியும்.
ஆயினும் பசித்தவுடன் பால் கேட்டு அழும்.
நாமும் அப்படித்தான்.
நம்மைக் கடவுள் தினமும் பராமரித்து வருகிறார் என்று நமக்குத் தெரியும்.
ஆயினும் தினமும் பராமரிக்கும்படி கடவுளிடம் வேண்டுகிறோம்.
இந்த வேண்டுதலைத்தான்,
"எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்"
என்று வேண்டுகிறோம்.
"தந்தையே, நாங்கள் ஒவ்வொரு நாளும் ஆன்மீகத்தில் வளர என்னென்ன தேவையே அதைத் தினமும் தாரும்."
என்பதுதான் நமது வேண்டுதல்.
நாம் ஆன்மீகத்தில் வளர உலகப் பொருட்களும் தேவைப் படும்.
உடல் நலம் இல்லாமல் ஞாயிற்றுக் கிழமை பூசைக்குப் போக முடியுமா?
கையில் பணமில்லாமல் ஏழைகளுக்கு உதவ முடியுமா?
உடல் நலமும், பணமும் லௌகீகப் பொருட்களாய் இருக்கலாம்.
ஆனால் ஆன்மீக வாழ்வுக்கு உதவும்போது அவை ஆன்மீகப் பொருட்களாய் மாறி விடுகின்றன,
சாப்பாடு வாங்க உதவும் பணம் கோவில் உண்டியலில் போடும்போது காணிக்கையாய் மாறி விடுவது போல."
"அப்போ தினமும் தந்தையிடம் கேட்பது ஆன்மீக வாழ்விற்கு உதவத் தேவையானவற்றைத்தான்."
", ஆமா."
"நான் கேட்ட கேள்விக்குப் பதில்?"
", கேள்வியைத் திரும்ப கேளு."
"ஒவ்வொரு மாதமும் நாம் ஈட்டும் சம்பளத்தைச் சிக்கனமாகச் செலவழித்து,
வருங்காலத்தில் பிள்ளைகள் படிப்பிற்காகவும்,
முதிய வயதில் நமக்கு உதவியாக இருப்பதற்காகவும் பணத்தை வங்கியில் போட்டு சேமிக்கின்றோமே,
இது சரியா, தப்பா?"
", இயேசு பணத்தைச் சிக்கனமாகச் செலவழிப்பது பற்றியோ,
வங்கியில் சேமிப்பது பற்றியோ
ஒன்றும் கூறவில்லை.
அது உன் விருப்பம்.
பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவது பற்றி பேசியிருக்கிறார்.
உனது வரவிற்கு ஏற்ப
நீ கொடுக்கும் உதவியும் இருக்க வேண்டும்.
கொடுப்பது என்பது முக்கியம், எவ்வளவு என்பது உன் தாராள குணத்தைப் பொறுத்தது.
"கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.
அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.
ஏனெனில், எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்."
(லூக்.6:38)
"தாத்தா, பத்து நாட்கள் நீடிக்கக்கூடிய ஒரு ஆன்மீக சேவையை இன்று ஆரம்பித்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
பத்து நாட்களும் செவ்வனே நடைபெற்று பத்தாவது நாள் வெற்றிகரமாக முடிவு பெறுவதற்கான அருள் வரத்தை ஆண்டவர் இன்றே தருவாரா,
அல்லது பத்து நாட்களில் அன்றன்றைக்குத் தேவையான அருள் வரத்தை அன்றன்று தான் தருவாரா?"
"பேரப்புள்ள, ஒவ்வொரு நேரம் கேள்வி கேட்கும்போதும் கடவுளைப் பற்றி பேசுகிறாய் என்பதை மறந்து விடுகிறாய்.
நாம் காலத்தில் வாழ்கிறோம்.
இன்று இருக்கும் நாம் நாளை இருப்போமா என்று கூற முடியாது.
ஆகவே நாம் வாழும் ஒவ்வொரு நாளும் அன்றன்றைக்கு உரிய உதவியைக் கேட்கிறோம்.
ஆனால் கடவுள் நித்தியர். எப்போதும் நம்மோடு இருப்பவர்.
எப்போதும் நம்மைப் பராமரித்துக் கொண்டு தான் இருப்பார்.
நமது சேவையின் ஒவ்வொரு நாளும் நம்மோடுதான் இருப்பார்.
ஒவ்வொரு நாளும் பராமரித்துக் கொண்டுதான் இருப்பார்.
பத்து நாட்கள் tour போவதாக இருந்தால் பத்து நாட்களுக்கும் செலவுக்கு வேண்டிய மொத்த பணத்தையும் வங்கியிலிருந்து எடுத்து விடுவோம்.
ஏனென்றால் வங்கி நம் கூட வராது.
ஆனால் நாம் போகும் இடமெல்லாம் கடவுள் நம்மோடுதான் இருப்பார்.
எல்லா நாட்களிலும், எல்லா நேரமும் நாம் கடவுளோடு செப இணைப்பில்தான் இருப்போம்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் அவர் நம்மைப் பராமரித்துக் கொண்டுதான் இருப்பார்."
"இப்போது புரிகிறது, தாத்தா.
கடவுள் எப்போதும் நம்மோடு தான் இருப்பார்.
நாம் எப்போதும் கடவுளுடைய சந்நிதானத்தில்தான் வாழ வேண்டும்."
லூர்து செல்வம்.