Monday, May 31, 2021

நமது முதல் வேலை.

நமது முதல் வேலை.


தேர்வுகள் முடிந்து, அடுத்து விடுமுறையும் முடிந்து, பள்ளிக்குத் திரும்பும் மாணவர்கள் மனதில் ஆசை ஒன்று இருக்கும்.

தேர்வின்போது தாங்கள் எழுதிய விடைத்தாள்கள் விடுமுறையின் போது திருத்தப்பட்டிருக்கும்.

பள்ளிக்கூடம் சென்றவுடன் ஆசிரியர் திருத்தப்பட்ட விடைத்தாள்களை நமது பார்வைக்குத்  தருவார்.

நமது விடைத்தாள்கள் எத்தனை மதிப்பெண்கள் ஈட்டித் தந்திருக்கின்றன என்பதை வறிய மாணவர்களுக்கு ஆசை இருக்கும்.

ஆசிரியர்கள் ஆய்வு செய்து மதிப்பெண் கொடுத்த பிறகு மாணவர்கள் அவரவர் விடைகளை அவரவரே ஆய்வு செய்து ஆசிரியர் மதிப்பெண் கொடுத்ததில் குறை காண்பது மாணவர்களின் பழக்கம்.

இப்படித்தான் ஒரு மாணவன் மதிப்பீடு செய்யப்பட்ட தன் விடைத் தாளை எடுத்துக்கொண்டு ஆசிரியரிடம் சென்றான்.

"சார், நான் எல்லா கேள்விகளுக்கும் சரியானபடிதான் விடை எழுதி இருக்கிறேன்.

நீங்கள் மதிப்பெண்ணே போடாமல் அடித்து அடித்து வைத்துருக்கிறீர்கள்.

இன்னா பாருங்கள்.

நான் எழுதியுள்ள ஒவ்வொரு  விடையும் நீங்கள் நோட்டில் எழுதி போட்டதுதான். ஒரு வார்த்தை மாறாமல் எழுதியிருக்கிறேன்.

ஏன் அடித்து வைத்திருக்கிறீர்கள்?"


"வினாத்தாளை எடுத்து வா."

"இந்தாங்க, சார்."

"வினாத்தாளில் உள்ள எந்த வினாவுக்காவது பதில் எழுதி இருக்கிறாயா?''

" தேர்வு எழுதப்போகுமுன் நீங்கள் என்ன சொன்னீர்கள்?"

"என்ன சொன்னேன்?"

"வினாத்தாள் வந்தவுடன் வினாக்களை வாசியுங்கள். முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடை அளியுங்கள்.

நான் அப்படித்தானே செய்திருக்கிறேன்!"

"எப்படித்தானே?"

".வினாத்தாளில் உள்ள எல்லா வினாக்களையும் வாசித்தேன். ஒரு வினாவுக்கு கூட விடை தெரியவில்லை.

நான் படித்து விட்டுப் போன வினாக்களையும் எழுதி அவற்றிற்கான விடைகளையும் எழுதி இருக்கிறேன்."

"அதாவது வினாத்தாளில் உள்ள ஒரு வினாவிற்கும் பதில் எழுதவில்லை!"

"ஆமா. நீங்கள் தானே சொன்னீர்கள், வினாக்களை  வாசித்துவிட்டு தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுங்கள் என்று.

எல்லா வினாக்களையும் வாசித்துவிட்டு தான் அவை ஒன்றும் தெரியாததால் எனக்குத் தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதி இருக்கிறேன்."

"ஏல, வினாத்தாளில் உள்ள வினாக்களில் தெரிந்தவற்றுக்கு விடை எழுதச் சொன்னேன்.

நீ  செய்திருப்பது 

"நான் நன்கு தேர்வு எழுதியிருக்கிறேன், ஆனால் வினாத்தாள் முழுவதும் தவறானது." 

என்று சொல்வது போல் இருக்கிறது.

கேள்வித்தாளையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறாய்.

பொதுத்தேர்வு எழுதும் போது இதை நினைவில் வைத்துக் கொள்."

ஆன்மீக வாழ்வில் அநேக சமயங்களில் நாமும் இந்த மாணவனை போல்தான் நடந்து கொள்கிறோம்.

நாம் வாழும் உலகம் தேர்வு நடக்கும் இடம். நாம் வாழும் சூழ்நிலையில் ஏற்படும் பிரச்சனைகள் நமக்கு இறைவன் கொடுத்திருக்கிற வினாக்கள்.

கொடுக்கப்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தான் நாம் செய்ய வேண்டியது.

 தான் கொடுத்திருக்கும் பிரச்சனைகளுக்கு  தீர்வு காண நமக்கு உதவி செய்ய இறைவன் எப்போதும் நம் அருகிலே தான் இருக்கிறார்.

அதற்காக உதவியை ஆண்டவரிடம் கேட்கலாம். பிரச்சனைகளே தவறு என  ஆண்டவரிடம் வாதாடக் கூடாது.

அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டுமே தவிர கேள்விகள் கேட்டது தவறு என்று இறைவனிடம் சொல்லக்கூடாது.

நாம் எந்த காலத்தில் பிறக்க வேண்டும்,

 எந்த சூழ்நிலையில் பிறக்க வேண்டும்,

 எந்த பெற்றோரிடம் பிறக்க வேண்டும்,

 எங்கு வளரவேண்டும்,

 நாம் வளரும் இடத்தில் சூழ்நிலை எப்படி இருக்க வேண்டும்

 என்றெல்லாம் நித்திய காலமாக இறைவனே தீர்மானித்திருக்கிறார்.


அந்தந்க காலகட்டத்தில் இருக்கும் சூழ்நிலை, அதிலிருந்து எழும் பிரச்சனைகள் ஆகியவை தான் அப்போது வாழ்பவர்களுக்கு வினாக்கள்.

அந்த வினாக்களுக்கு ஆன்மீக ரீதியாக பதில் அளிக்கத்தான் அப்போது வாழும்படி நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்.

காலங்கள் மாறும் போது வினாக்களும் மாறும். பதில் அளிக்க வேண்டியவர்களும் மாறுவார்கள்.

இயேசுவோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு படைக்கப்பட்ட 12 சீடர்களில் கூட ஒரு சீடர் பண ஆசை காரணமாக தேர்வை நல்ல முறையில் எழுதவில்லை.

கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி கிறிஸ்தவர்களுக்கு வைக்கப்பட்ட தேர்வில் ரோமையின் மன்னர்கள் மூலம்  கேட்கப்பட்ட கேள்வி:

"உங்களுக்கு கிறிஸ்து வேண்டுமா? உங்கள் உயிர் வேண்டுமா?"

கிறிஸ்தவர்கள் உயிரைக் கொடுத்து கிறிஸ்துவைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்.

16 ஆம் நூற்றாண்டில் சமய சீர்திருத்த   இயக்கம் என்ற பெயரில் ஏற்பட்ட பிரச்சனைகளில் பிரிவினை சபைகள் உருவான வரலாறு நமக்குத் தெரியும்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் 

கொரோனா என்ற நுண்ணுயிரால்  ஏற்பட்டவை.

இறைவன் நமக்கு வைத்திருக்கும் மிகக் கடினமான தேர்வு இது.

இந்த பிரச்சனைகளுக்கு ஆன்மீக ரீதியாக நாம் காணும் தீர்வுதான் இதில் நாம் பெறப்போவது வெற்றியா தோல்வியா என்பதை தீர்மானிக்கும்.


பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமுன் அவற்றின் தன்மையை
(Nature) புரிந்து கொள்ள வேண்டும்.


பிரச்சனைகள் உலகைச் சார்ந்தவையாக இருக்கலாம், ஆனால் அவற்றின் தன்மை  ஆன்மீகத்தைச் சார்ந்தது.

நாம் அனுபவிக்கும்  துன்பங்கள் நமது உடலைச் சார்ந்தவை.

ஆனால் அவற்றிற்கு  காரணமான 
பாவமும், ஆண்டவருக்காக அவற்றை பொறுமையாக சகித்துக் கொண்டால் கிடைக்கும் விண்ணுலக பேரின்பமும் முழுக்க முழுக்க ஆன்மீகத்தை சார்ந்தவை.

தனது உடலினால் துன்பங்களை அனுபவித்துதான் இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்து  நமது ஆன்மாவை மீட்டார்.

மனுக்குலம் தனது பாவங்களை உணர்ந்து திருத்துவதற்காகத்தான் அவ்வப்போது இறைவன் துன்பங்களை ஏதாவது ஒரு உருவில் அனுப்புகிறார்.

இன்றைய மனுக்குலத்தின் மிகப்பெரிய பாவங்களின் பின்னணியில் இருப்பது அவனது அளவுக்கு மிஞ்சிய விஞ்ஞான வளர்ச்சி.

தனது விஞ்ஞான அறிவின் மூலம் மில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தூரம் பரவிக்கிடக்கும் இந்த பிரபஞ்சத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் எந்த என்று எண்ண ஆரம்பித்துவிட்டான் மனிதன்.


ஆக்கத் தொழிலுக்காக தனது அறிவைப் பயன்படுத்தாமல் 

அழிவு வேலைக்கான ஆயுதங்களை உற்பத்தி பண்ண ஆரம்பித்துவிட்டான்.

அவனது அறிவு திமிரை உணர வைப்பதற்காகத்தான் கண்ணுக்குத் தெரியாத வைரஸ்  ஒன்றை இறைவன் அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆயுத குவிப்பினால் உலகப் போர் ஏற்பட்டால் கொரோனாவினால் ஏற்படும் உயிர் சேதத்தை விட அதிகமான சேதம் போரினால் ஏற்படும்.

நாம் நமது  பாவ நிலையை உணர்ந்து நல்லவர்களாக மாறி இறைவனிடம் திரும்ப வேண்டும் என்ற ஒரே நோக்கிற்காகத்தான் கொரோனா உலகிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

கொரோனாவினால் என்றோ ஒரு நாள் அழிய போகிற உடலுக்கு மட்டுமே ஆபத்து.

 ஆனால் பாவத்தினால் என்றென்றும் அழியாத ஆன்மாவிற்கு ஆபத்து.

இதை உணர்ந்து  மனுக்குலம் முதலில் மனம் திரும்பவேண்டும்.

முதலில் ஆன்மாவிற்கு ஆபத்து ஏற்படாமல் கவசம் அணிவித்துவிட்டு கொரோனாவைப் பற்றி  கவலைப்பட ஆரம்பிக்க வேண்டும்.

மனுக்குலம் மனம் திரும்பிவிட்டால் கொரோனா தானாகவே பின் வாங்க ஆரம்பித்து விடும். 

மனம் திரும்பியபின் நாம் எதற்கும் பயப்படாமல் வாழவேண்டும்.

அதை அழிக்க விஞ்ஞானரீதியாக முயற்சி எதுவும் எடுக்க வேண்டாமா?

எடுக்க வேண்டும். ஆனால்  ஆண்டவர் துணை இருந்தால்தான் நமது முயற்சி நிரந்தர பலன் தரும்.

நாம் சாப்பிடும் மருந்து கடவுள் கருணை இருந்தால்தான் வேலை செய்யும்,

ஆண்டவரின் கருணையை வேண்டி
இடைவிடாது செபம் சொல்வோம்.
 
மனம் திரும்பியவுடன் நினிவே நகரை காப்பாற்றிய இறைவன் நம்மையும் காப்பாற்றுவார்.

ஆண்டவரிடம் அசையாத விசுவாசம் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, May 29, 2021

"கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார்." (ஆதி. 1:27)

"கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார்." (ஆதி. 1:27)
 
கடவுள் நம்மை அவர் சாயலாகப் படைத்திருக்கிறார்.

Camera வைப் பயன்படுத்தி நம்மை நாமே புகைப்படம் எடுத்துக் கொண்டால்

படத்தில் தெரிவது நமது சாயல்.

அது நாம் அல்ல. தோற்றத்தில் நம்மைப் போன்றது.

நம்மைப்  பார்க்காதவர்கள் கூட நமது புகைப்படத்தை பார்த்தால் நம்மை பார்க்கும் போது அடையாளம் கண்டு கொள்வார்கள்.

ஆகவேதான் ID card களில் நமது புகைப்படத்தை பதிவு செய்கிறோம்.

நாம்  உலகில் வாழும்போது இறைவனை கண்ணால் பார்க்க முடியாது.

ஆனால் நம்மை நாமே அறிந்து கொண்டால் கடவுளையும் அறிந்து கொள்ளலாம்.   ஏனெனில் நாம் கடவுளின் சாயலாக படைக்கப்பட்டிருக்கிறோம்.

அவரை அறிந்து கொள்வதற்காகத்தான் அவரது சாயலை நமக்கு தந்திருக்கிறார்.

நமது ஆன்மா கடவுளைப் போலவே ஆவி. நமது ஆன்மாவை நாமே உற்று நோக்குவோம்.

 அதில் உள்ள நல்ல பண்புகளை எல்லாம் பட்டியல் போடுவோம். அன்பு, நீதி, இரக்கம், கருணை, மன்னிக்கும் குணம், உதவி செய்யும் குணம் போன்ற நல்ல பண்புகள் யாவும் கடவுள் நம்மோடு பகிர்ந்துகொண்ட அவரது பண்புகள்.

ஒவ்வொரு நல்ல பண்பும் நம்மிடம்  குறைந்த அளவிலேயே இருக்கிறது. அது அளவில்லாத விதமாய் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் கடவுள் இருக்கிறார்.

நமது அன்பு அளவுள்ளது. கடவுள் அளவற்ற அன்பு உள்ளவர்.எல்லோரையும் எப்போதும் நேசிக்கிறார். நம்மை விரும்பாதவர்களுக்கு நம்மால் அன்பு காட்ட இயலவில்லை. கடவுள் எல்லோரையும், அவரை வெறுப்பவர்களை கூட, அளவற்ற விதமாய் அன்பு செய்கிறார்.

நம்மிடமுள்ள நல்ல பண்புகளுக்கு எதிரான பண்புகள் நமது பாவத்தின் விளைவு. கடவுள் பாவமே செய்ய முடியாதவர். ஆகவே அப் பண்புகள் அவரிடம் சிறிது கூட கிடையாது. 

நமது செயலாற்றும் திறன் அளவு உள்ளது. ஆனால்  இறைவன் அளவற்ற வல்லமை உள்ளவர். ஒன்றும் இல்லாமையிலிருந்து கூட அவரால் பொருள்களை உருவாக்க முடியும்.

நமது ஊனக்கண்களால் இப்படிப்பட்ட இறைவனை காண முடியாவிட்டாலும் நமது தியானத்தினால் அவரை காணலாம். அவரை நமது மனதினால் நினைத்துப் பார்க்கலாம், அவரோடு பேசலாம்.

நற்பண்புகளைத் தவிர  வேறு ஏதாவது இறைவனின் சாயல் நம்மிடம் இருக்கிறதா?

மிருகங்களிடம் இல்லாத ஏதாவது ஒன்று நம்மிடம் இருக்கிறதா? 

மிருகங்களால் சிந்திக்க முடியாது. 

நம்மால் சிந்திக்க முடியும். நமது சிந்தனையை வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ள முடியும். நமது சிந்தனைப்படி செயல்புரிய முடியும்.

சிந்தனை, சொல், செயல் இந்த மூன்றும் தான் நம்மை மனிதர்கள் ஆக்குகின்றன. ஒவ்வொரு மனிதனிடமும் சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்று தத்துவங்களும் உள்ளன. தத்துவங்கள் மூன்று, ஆள் ஒன்று.

சிந்தனையிலிருந்து வார்த்தை பிறக்கிறது. இரண்டிலும் இருந்து செயல் பிறக்கிறது.

மூன்று தத்துவங்கள் ஒரே ஆளாக இருப்பது இறைவனிடமிருந்து நாம் பெற்ற சாயல்.

இறைவனும் சிந்திக்கிறார். 

சிந்தனையிலிருந்து வார்த்தை பிறக்கிறது.

 இரண்டிலும் இருந்து செயல் புறப்படுகிறது.

சிந்திப்பவர் தந்தை.

பிறப்பவர் மகன். (வார்த்தை)

செயல் தூய ஆவி. அன்பின் தேவன்.

"ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்."

அருளப்பர் தனது நற்செய்தியை வார்த்தையிலிருந்து ஆரம்பிக்கிறார்.

அதாவது மகனிடமிருந்து ஆரம்பிக்கிறார்.

மகன் கடவுளோடு இருந்தார். தந்தையாகிய கடவுளோடு இருந்தார்.

கடவுளாயும் இருந்தார். தந்தையோடு கடவுளாகவும் இருந்தார்.

"ஆனால், நீரால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர், "ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர்" என்றார்."

இவை திருமுழுக்கு அருளப்பரின் வார்த்தைகள்.

இயேசு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுத்தார். 

நாம் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுகிறோம்.

ஞானஸ்நானத்தின் போது நமது ஆன்மீக வாழ்க்கை ஆரம்பிக்கிறது. 
ஆரம்பத்திலிருந்து நமது ஆன்மீக வாழ்வில் செயலாற்றிக் கொண்டிருப்பவர் பரிசுத்த ஆவியானவர்தான்.

தந்தை பெறுபவர்.
மகன் பிறப்பவர்.
பரிசுத்த ஆவி செயல் புரிபவர்.
மூவரும் ஒரே கடவுள்.

மூவொரு கடவுள்.

 நற்செய்தி அறிவிக்கவும், பாவத்திலிருந்து நம்மை மீட்கவும்,  அப்பணியை தொடர்ந்து செய்ய திருச்சபையை நிறுவவும்

தந்தை மகனை பூமிக்கு அனுப்புகிறார்.

"ஏனெனில், என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்."
(அரு. 6:38)

மகன் திருச்சபையை நிறுவுகிறார்.

உலகம் முடியும் வரை 
 திருச்சபையோடிருந்து செயல்புரிபவர் பரிசுத்த ஆவி


"நானும் தந்தையைக் கேட்பேன்: தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்: அவர் உங்களோடு என்றும் இருப்பார்.
அவர் உண்மையின் ஆவியானவர்"
(அரு.14:16,17)

மூன்று ஆட்களும் ஒரே கடவுளாய் இருப்பதால் செயல்  புரிபவர் கடவுளே.

ஆனாலும் ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு பணி குறிப்பிடப்பட்டிருக்கிறது.


படைத்தவர் தந்தை.
மீட்டவர் மகன்.
திருச்சபையை வழி நடத்துவர் பரிசுத்த ஆவி.

மூன்று பணிகளையும் செய்பவர் ஒரே கடவுள்தான்.

(மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு மரித்தது மகன் மட்டுமே. 
 ஆயினும் படைத்ததும், மீட்டதும், திருச்சபையை வழி நடத்துவதும் மூவொரு தேவனே.)

ஆக சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்று பணிகளைப் பொறுத்தமட்டிலும் நாம் திரியேக தேவனின் சாயலில்தான் படைக்கப்பட்டிருக்கிறோம்.

மூவொரு தேவனைப் பின்பற்றி வாழ்பவர்கள் சிந்தனை, சொல், செயல் மூன்றிலும் ஒன்றாய் இருப்பார்கள்.

நல்லதை சிந்திப்பார்கள்,
சிந்தித்ததையே சொல்வார்கள்.
சொன்னபடி செய்வார்கள்.

ஒருவனது சிந்தனையும், சொல்லும், செயலும் மாறுபடுமானால்  இயேசுவின் கூற்றுப்படி அவன்  வெளிவேடக் காரன். .

"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு!" (மத்.23:13)

இறைவன் ஏன் மனிதர்களை தன் சாயலில் படைத்தார்?

நம் மீது இறைவனுக்கு  இருக்கிற அளவுகடந்த அன்புதான் இதற்கு காரணம்.

நாம் அவரோடு நித்திய காலம் இணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கோடு தான் நம்மை படைத்தார்.

We have been created to live in union with God for all eternity.

ஆகவே நம்மையும் அவரைப்போலவே படைத்தார்.

தந்தையைப் போலவே நாமும் நிறைவானவர்களாக வாழ வேண்டும்  என்பதே இயேசுவின் விருப்பம்.

நம்மோடு அவர் பகிர்ந்து கொண்ட நற்பண்புகளில் வளர்ச்சி அடைந்து அவரைப் போலவே மாற வேண்டும் என்பது அவரது ஆசை.

விண்ணக வாழ்வு என்பது மூவொரு தேவனுக்குள் நாம் வாழவிருக்கும் வாழ்வு.

நமது ஆன்மீக பயணத்தின் நோக்கமே இறைவனோடு இணைவது தான்.

அதற்கு ஒரே வழி இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அவரது சாயலில் வளர்வது.

சாயலில் வளர வேண்டுமானால் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகளில் வளர வேண்டும்.

எவ்வளவுக்கு எவ்வளவு அன்பில் வளர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் இறைவனைப் போல் மாறுகிறோம். .

எவ்வளவுக்கு எவ்வளவு மன்னிப்பதில் வளர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் இறைவனைப் போல் மாறுகிறோம்.

இதேபோன்றுதான் ஒவ்வொரு பண்பிலும்.

இறைவனின் சாயலில் வளர்வோம்.

இறைவனின் சாயலோடு விண்ணகம் சென்றால்தான் இராயப்பருக்கு நம்மை அடையாளம் தெரியும்.

மோட்சத்தின் சாவி அவரிடம்தான் உள்ளது.

லூர்து செல்வம்.

Thursday, May 27, 2021

"தாவீதின் மகனே, இயேசுவே, என் மீது இரக்கம் வையும்" (மாற்கு 10: 47)

"தாவீதின் மகனே, இயேசுவே, என் மீது இரக்கம் வையும்" 
(மாற்கு 10: 47)

இயேசுவும் அவர் சீடரும் ஒரு பெருங்கூட்டமும் வழியே. சென்று கொண்டிருந்தபோது வழியோரத்தில் உட்கார்ந்திருந்த கண் தெரியாத பிச்சைக்காரன் ஒருவன்

இயேசுதான் அவ்வழியே செல்கிறார் என்று கேள்வியுற்று,

"தாவீதின் மகனே, இயேசுவே, என் மீது இரக்கம் வையும்" எனது சப்தமாகச் சொன்னன்.

பேசாதிருக்கும்படி பலர் அவனை அதட்டியும் கேளாமல் தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தான்.


இயேசு நின்று, "அவனை அழைத்து வாருங்கள்" என்றார். 

அழைத்து வந்தார்கள்.


இயேசு, "உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று அவனைக் கேட்க,

 குருடன், "ராபூனி, நான் பார்வை பெற வேண்டும்" என்றான்.

 இயேசு அவனை நோக்கி, "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்" என்றார்.

 அவன் உடனே பார்வை பெற்று, இயேசுவுக்குப் பின்னே வழி நடந்தான்.

அவனுக்கு உடல் ரீதியாகக் கண் தெரியவில்லை.

அவன் திரும்ப திரும்ப கத்திக் கொண்டிருந்ததை இயேசு கேட்டு அவனைக் கூப்பிட்டு குணமாக்கினார்.

நாம் அநேக சமயங்களில் ஆன்மீக ரீதியாக கண் தெரியாது இருக்கிறோம்.

அநேக ஆன்மீக விஷயங்கள் நமக்கு விளங்குவதில்லை.

முதலில் நமக்கு விளங்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குருடன் தன்னை குருட்டுத தனத்திலிருந்து விடுவிக்க இயேசுவை வேண்டிக் கொண்டது போல,

நாமும் நமது அறியாமையிலிருந்து விடுவிக்க இயேசுவை திரும்ப திரும்ப வேண்டிக் கொள்ள வேண்டும்.


இயேசு பூமியில் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த காலத்தில் சென்றவிடமெல்லாம் நன்மை செய்துகொண்டே சென்றார்.

ஆன்ம ரீதியாக பாவிகளை மன்னித்தார்.

உடல்ரீதியாக நோய்களை குணமாக்கினார். உடல் நோய்களை குணமாக்கும் போது கூட இயேசு முதலில் நோயாளிகளுக்கு விசுவாசத்தை இலவசமாகக் கொடுத்து விட்டு 

(விசுவாசம் எப்போதுமே இறைவன் கொடுக்கும் நன்கொடை தான்.)

பின் நோய்களை குணமாக்கி,

" உனது விசுவாசம் உன்னை குணமாகிற்று"

 என்று சொல்லுவார்.

ஆக இயேசு உடல் நோய்களை குணமாக்கியதிலும் ஆன்மீகம் இருக்கிறது.

அவர் எதைச் செய்தாலும் ஆன்மீக நோக்கோடு தான் செய்வார்.

குணமானவர்கள் மட்டுமல்ல அதை பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் இயேசுவின் மேல் விசுவாசம் கொண்டார்கள்.

அதே இயேசு இன்று நம்முடனும் நமது குருக்கள் உருவிலும்,

 திவ்ய நற்கருணையிலும் உயிரோடு இருக்கிறார். 

எந்த நோக்கத்தோடு உலகுக்கு வந்தாரோ அதே நோக்கத்தோடு தான் இன்றும் நம்மோடு வாழ்கிறார்.

குருக்கள் மூலமாக நமது பாவங்களை மன்னிக்கிறார்.

விசுவாசத்தோடு கேட்பவர்களுக்கு ஆன்மீக நோக்கத்தோடு உடல் நோய்களையும் குருக்கள் மூலமாக சுகமாக்குகிறார்.

பாவசங்கீர்த்தனம் மூலம் நமது பாவங்களை குருக்கள் மூலம் மன்னிக்கும் இயேசு 

விசுவாசத்தோடு கூடிய செபத்தின் மூலம் குருக்கள் வழியாகவே நோய்களையும் குணமாக்குகிறார்.

நமது குருக்கள்  நடத்தும் ஜெப கூட்டங்களில் பாவசங்கீர்த்தனம் கேட்கப்படுவதோடு, நோய்கள் 
குணமாவதற்கான ஜெபமும் சொல்லப்படுகிறது.

இயேசுவின் மேல் நமக்குள்ள உறுதியான விசுவாசத்தோடு அதில் பங்கெடுக்கும் போது குணம் பெறுகிறோம்.

விசுவாசம் இன்றி எதுவும் நடக்காது.

நாம் எந்த அளவுக்கு நமது குருக்கள் மூலம் செயல்புரியும் இயேசுவை பயன்படுத்திக் கொள்கிறோம்?

நம்மில் அநேகர் குருத்துவம் இல்லாத பிரிவினை சபையார் நடத்தும்  செபக் கூட்டங்களில் பங்கெடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அங்கு யாருக்கும் கிடையாது.

உண்மையான இயேசுவை தேடி வராமல் இயேசுவின் பெயரை மட்டும் சொல்லிக்கொண்டு வருபவர்களை அண்டிச் செல்பவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல.

உடல் கண் தெரியாதவர்களுக்கு உலகிலுள்ள எந்த பொருளும் தெரியாது.

ஆன்மீக கண் தெரியாதவர்களுக்கு ஆன்மீக விஷயங்கள் புரியாது.


பைபிள் வாசிக்கும்போது சில வசனங்களுக்கு நமக்குப் பொருள்  தெரியவில்லை. அதாவது ஆன்மீக கண் மங்கலாக இருக்கிறது.

அதை சரிசெய்ய வேண்டுமென்றால் நாம் எங்கே செல்லவேண்டும்?

இயேசுவிடம். 

அன்று இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்  அவரது நற்செய்தியைக் கேட்கவும்,

பாவமன்னிப்பு பெறவும்,

உடல் நோய் குணமாகவும் 

மக்கள் அவரை தேடிச் சென்றது போல

 நாமும் இன்று நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அதே இயேசுவை தேடிச் செல்ல வேண்டும்.


நம்மில் எத்தனை பேர் நற்செய்தியை வாசித்துவிட்டு அதற்கு விளக்கம் பெறுவதற்காக பங்கு குருவை தேடிச் செல்கிறோம்?

அவரது பிரசங்கத்தைக்கூட வேறு வழி இல்லாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

பாவமன்னிப்பு பெறவும், நற்செய்தி வாசகங்களுக்கு விளக்கம் பெறவும் பங்குக் குருவை தேடி செல்பவர்கள்தான் உண்மையான விசுவாசிகள்.

வேறு வார்த்தைகளில்,

நற்செய்தியை அறிந்து கொள்ளவும், மீட்பு பெறவும் குருவானவர் உருவத்தில் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவை தேடி செல்பவர்கள்தான் உண்மையான விசுவாசிகள்.

இயேசு நம்மைத் தேடி வந்தது போல நாமும் அவரை தேடி செல்வோம்.

விசுவாசத்தோடு பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் குருவானவரில் வாழும் இயேசு கண்ணுக்குத் தெரிவார்.

முதலில் நமது விசுவாச கண்ணைத் திறக்கும்படி இறைவனை  மன்றாடுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, May 26, 2021

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்." (மாற்கு 10:44)

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்." (மாற்கு 10:44)

இயேசு தனது பன்னிரு சீடர்களோடு
யெருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது,

 "மனுமகன் தலைமைக்குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப் படுவார். 

அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு, அவரைப் புறவினத்தாரிடம் கையளிப்பர்.

அவர்கள் அவரை எள்ளிநகையாடி, துப்பி, சாட்டையால் அடித்துக் கொல்லுவார்கள். 

அவரோ மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவார்" 

என்று  தனது பாடுகளை பற்றியும்,
மரணத்தைப் பற்றியும், உயிர்ப்பை பற்றியும் விளக்கிக் கொண்டிருந்தார்.

சீடர்கள் புத்திசாலிகளாக இருந்திருந்தால் அவர் சொன்னதை பற்றி கூடுதல் விவரம் கேட்டிருப்பார்கள்.

ஆனால் யாகப்பரும் அருளப்பரும் அவரிடம்

 "நீர் உம் மாட்சிமையில் வீற்றிருக்கும்போது, எங்களுள் ஒருவர் உமது வலப்பக்கமும், மற்றவர் உமது இடப் பக்கமுமாக அமர அருளும்" 

என்று கேட்டார்கள்.

அதாவது அவர் அரசாள வரும்போது அவர்களுக்கு உயர்ந்த பதவிகள் வேண்டும் என்று கேட்டார்கள்.

இயேசு மெசியா என்பதை நம்பினார்கள். ஆனால் மெசியா யூதர்களுக்கு அரசாட்சியை மீட்டு தருவார் என்ற உலகியல் கண் நோக்கிலேயே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு விண்ணகம் எய்துவதற்கு
கொஞ்ச நேரத்திற்கு முன்புகூட,

"ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு அரசாட்சியை நீர் மீட்டுத்தரும் காலம் இதுதானோ?" 

என்று கேட்டவர்கள் சீடர்கள்.

ஆகவேதான் இயேசு தன் பாடுகளைப் பற்றி கூறியதை கூட கருத்தில் வாங்காமல் தங்களது பதவியை பற்றி பேசினார்கள்.

இயேசு "புறவினத்தார்தான் பதவிகளுக்கு ஆசைப்படுவார்கள்,

ஆனால் நீங்கள்  அப்படி இருக்கக்கூடாது. உங்களுக்குள் எவன் பெரியவனாய் இருக்க விரும்புகிறானோ, அவன் உங்கள் பணியாளனாய் இருக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்." என்றார்.

அதாவது அஞ்ஞானிகள்தான் அதிகாரம் செலுத்துவதை பெருமையாக எண்ணுவார்கள்.

ஆனால் இயேசுவின் சீடர்கள் ஊழியம் செய்வதை பெருமையாக எண்ண வேண்டும்.

இயேசு கடவுள். இந்த உலகமே அவரது அதிகாரத்தின் கீழ் தான் இருக்கிறது. 

ஆனால் அவர் அதைப்பற்றி கவலைப்படாமல் ஊழியம் செய்வதற்காகவே மனிதனாக பிறந்திருக்கிறார்.

ஊழியம் செய்வதுதான் ஆட்சி செய்வதற்கு சமம்.

ஆகவே இயேசுவுக்கு சீடர்களாக இருக்க விரும்புவோர் மற்றவர்களுக்கு பணிபுரியும் ஊழியர்களாகவே இருக்க வேண்டும்.

இதை வலியுறுத்தவே இறுதி வியாழனன்று இயேசு தனது  சீடர்களின் கால்களைக்  கழுவினார்.

இயேசு ஒரு வாய்ச்சொல் வீரர் அல்ல. சாதனையாளர். 

அவரது போதனைகளை எல்லாம் வாழ்நாளிலேயே சாதித்து காண்பித்திருக்கிறார்.

அவர் நினைத்திருந்தால் ஒரு அரச குடும்பத்தில் பிறந்திருக்கலாம்.

ஒரு தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தார்.

30 ஆண்டுகள் கீழ்படிந்துதான் வாழ்ந்தார்.

அவர் நற்செய்தி போதித்த காலத்தில் தலை சாய்க்க கூட அவருக்கு சொந்த இடம் இருந்ததில்லை.

கிடைத்த இடத்தில் கிடைத்த உணவை உண்டார்.

மரித்தது கூட குற்றவாளிகளுக்கு உரிய சிலுவை மரத்தில்தான்.

அடக்கம் செய்யப்பட்டது அடுத்தவரது கல்லறையில்.

நாம் அவருடைய சீடர்கள். எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

இயேசுவின் வாழ்க்கைமுறையை சிறிது தியானித்து விட்டு  அதோடு நமது வாழ்க்கை முறையை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

ஊழியராக வாழ்கின்றோமா?
பிறரை அதிகாரம் செய்பவர்களாக வாழ்ந்தோமா?

பிறரை வழிநடத்த வேண்டிய பதவி நமக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட பதவி உணர்வு இல்லாமல் சேவை உணர்வோடு பணிபுரிய வேண்டும்.

நமக்கு கீழ் உள்ளவர்களும் நம்மை அவர்களில் ஒருவராக கருதும்படி நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

இறைவனுக்கு தாயாகும் பாக்கியம் பெற்ற அன்னை மரியாள் எந்த அளவிற்கு தன்னை அடிமை நிலைக்கு தாழ்த்தி  தாழ்ச்சியோடு வாழ்ந்தாள் என்பதை நாம் அறிவோம்.

அன்னை மரியாளைப் போல அடிமை உணர்வுடன் பணிபுரிபவர்கள்தான் மரியாளின் மைந்தனுக்கு ஏற்ற சீடர்கள்.

பதவி என்பது தரப்பட்ட பொறுப்புதானேயொழிய பெருமை படத்தக்க உரிமைப் பொருள் அல்ல.

பொறுப்பை நிறைவேற்றுவது நமது கடமை.

அரசன் தனது பொறுப்பை நிறைவேற்றுவதும் கடமைதான்.

வேலைக்காரன் தனது பொறுப்பை நிறைவேற்றுவதும் கடமைதான்.

கடமையை பொறுத்தமட்டில் அரசனுக்கும் வேலைக்காரனுக்கும் வித்தியாசம் இல்லை.

இருவருமே பணி உணர்வோடு கடமையை நிறைவேற்ற வேண்டும். 

சர்வ வல்லமையுள்ள இறைமகனே

 தந்தை தந்த பணியாகிய 

மனித மீட்புக்காக  மனிதனுடைய பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக  

மனித சுபாவம் எடுக்கும் அளவிற்கு தன்னையே தாழ்த்தி

 தந்தையின் சித்தத்தை நிறைவேற்றும் உணர்வோடு 

 பாடுகள் பட்டு, சிலுவை மரணத்தையும் ஏற்றுக்கொண்டார்.

இறைமகன் தனது படைப்புகளாகிய சீடர்களின் பாவங்களைக் கழுவும் அறிவிற்கு தன்னையே தாழ்த்திக் கொண்டார்.

ஒன்றுமில்லாமையிலிருந்து படைக்கப்பட்டவர்கள் நாம்.

ஊழியனாக பணி செய்ய நமக்கு கிடைத்ததே பெரிய பாக்கியம்.

அதிலும், சர்வ வல்லப கடவுளுக்கு ஊழியம் செய்ய நமக்கு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம்.

கடவுளுக்கு பணிசெய்யும் உணர்வோடு ஊழியம் செய்வோம்.

விண்ணக பாக்கியம் நமதே.

லூர்து செல்வம்.

Tuesday, May 25, 2021

உண்மையான பக்தன் யார்? (தொடர்ச்சி)

உண்மையான பக்தன் யார்?
(தொடர்ச்சி)

நமது பிரிவினை சகோதரர்கள் நம்மிடம் எழுப்பும் ஒரு கேள்வி:

''இறைவன்தானே நம்மைப் படைத்து, பரமரித்து வருகிறார்.

நம்மைப் படைப்பதற்கோ, மீட்பதற்கோ அவருக்கு யாருடைய சிபாரிசும் தேவைப்படவில்லையே.

 நாம் ஏன் அவரிடம் பேசுவதற்கு சிபாரிசுக்கு ஆட்களைத் தேடி அலைய வேண்டும்?

 நாம் சிபாரிசுக்காகத் தேடும் புனிதர்கள் இறந்த மனிதர்கள் அல்லவா!"

பைபிள் மட்டும் போதும் என்று சொல்லிக்கொண்டு செல்லுமிடமெல்லாம் அதை எடுத்துச் செல்பவர்கள்  

 அதை ஒழுங்காக வாசித்திருந்தால் ஒரு உண்மை புரிந்திருக்கும்.

நமது அனுமதி இன்றி நம்மை படைத்த கடவுள் 

நமது அனுமதி இருந்தால்தான் நம்மை இரட்சிப்பார்.

ஏனெனில் அனுமதி இல்லாத செயல்களை செய்து பாவங்கள் புரிபவர்கள் நாம்தான்.

இரட்சிக்கப்பட
நமது அனுமதியை பெறுவதற்காகத்தானே

 இறைமகன் விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கி வந்து

பாடுபட்டு, சிலுவையிலே தன்னையே பலியாக்கினர்!

இயேசு மனிதர்களுடைய நோய் நொடிகளை  குணமாக்க மூன்று விதமான நடைமுறைகளை கையாண்டார்.

சிலருடைய நோய்களை  நோயாளி கேளாமல் கூட  அவராகவே குணமாக்கினார்.

உ.ம்.

ஒரு கைம்பெண்ணின் மகன் இறந்து விட்டான்.

அவள் அழுது கொண்டிருந்தாள்.

 இயேசுவிடம் உதவி எதுவும் கேட்கவில்லை. 

ஆனால் ஆண்டவர் அவள்மீது மனமிரங்கி, "அழாதே." என்றார்.

பின்பு முன்னால் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிவந்தவர்கள் நின்றார்கள். நின்றதும், "இளைஞனே, உனக்கு நான் சொல்லுகிறேன், எழுந்திரு" என்றார்.

15 இறந்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான். தாயிடம் அவனை ஒப்படைத்தார்.


சிலருடைய நோய்களை நோயாளிகள் கேட்டதன் பேரில் குணமாக்கினார்.

உ.ம்:
பிறவிக் குருடனைக் குணமாக்கியது.

பத்து தொழு நோயாளிகளைக் குணமாக்கியது.


சிலருடைய நோய்களை மற்றவர்களுடைய சிபாரிசின் பேரில் குணமாக்கினார்.

உ. ம்
நூற்றுவர் தலைவன் ஒருவன்
இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, யூதரின் மூப்பரை அவரிடம் அனுப்பித் தன் ஊழியனைக் காப்பாற்ற வருமாறு வேண்டினான்.

4 அவர்களும் இயேசுவிடம் வந்து, வருந்திக் கேட்டதாவது: " உம்மிடம் இவ்வரம் பெறுவதற்கு அவர் தகுதியுள்ளவரே.

5 ஏனெனில், நம் மக்கள்மீது அவருக்கு அன்பு மிகுதி. நமக்கெனச் செபக்கூடம் கட்டியிருக்கிறார்."

சிபார்சு செய்தவர்களை இயேசு தடுக்கவில்லை.

"இயேசு அவர்கள்கூடப் போனார்"

இயேசு மற்றவர்களுக்காக பரிந்து பேசுகிறவர்களைத் தடுக்கவில்லை.


"சிபாரிசுக்கு ஆள் எதற்கு? கடவுளிடம் நேரடியாக கேட்க வேண்டியது தானே"

என்று கூறும் பிரிவினை நண்பர்கள் ஏன் ஜெபக் கூட்டங்கள் நடத்தி நோயாளிகளுக்காக ஜெபிக்கிறார்கள்?

காணிக்கை பிரிப்பதற்காக மட்டுமா?

 இவர்களே மற்றவர்களுக்காக செபிக்கும் போது புனிதர்கள் ஏன் செபிக்கக்கூடாது?

கேட்டால் உடனே கூறுவார்கள், "உயிரோடு உள்ளவர்கள் செபிக்கலாம். இறந்தவர்கள்  செபிக்க முடியாது" என்று.

ஆனால் நமக்குத் தெரியும், "இறந்தவர்களுடைய ஆன்மா தொடர்ந்து உயிர் வாழ்கிறது.

வெறுமனே உயிர் வாழவில்லை,
இறைவனோடு ஒன்றித்து  உயிர் வாழ்கிறது.

உலகில் இறைவனை பார்க்க முடியாத நிலையிலும் அவரை நோக்கி செபிக்க முடிந்தவர்களால் ஏன் அவரோடு ஒன்றித்து வாழும்போது செபிக்க முடியாது?

கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்துவின் ஞான உடல்.

தலை கிறிஸ்து.

உலகில் வாழும் கிறிஸ்தவர்களும்,
உத்தரிக்கிற தலத்தில் உத்தரிக்கும்
 கிறிஸ்தவர்களும், மோட்சத்தில் வாழும்  கிறிஸ்தவர்களும்

ஞான உடலின் உறுப்புக்கள்.

ஞான உடலின் உறுப்புக்கள் 
கிறிஸ்துவில் உயிர் வாழ்பவர்கள்.

அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும்.

மோட்சத்தில் வாழ்பவர்களுக்கு நமது உதவி தேவை இல்லை. ஏனெனில் அவர்கள் வாழ்வின் நோக்கத்தை அடைந்து விட்டார்கள்.

உத்தரிக்கிற தலத்தில் இருப்பவர்களுக்கும், நமக்கும் மற்றவர்களின் செப உதவி தேவை.

மோட்சத்தில் வாழ்பவர்களும்,உத்தரிக்கிற தலத்தில் இருப்பவர்களும் நமக்காக செபிக்கலாம்.

மோட்சத்தில் வாழ்பவர்களும், நாமும் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக செபிக்கலாம்.

செபிக்க வேண்டும்.

விண்ணகத்தில் வாழ்பவர்களும் நமது சகோதர, சகோதரிகளே.

நமக்காக செபிக்கும்படி நாம் அவர்களை வேண்டலாம். அவர்களும் நமக்காக செபிக்கிறார்கள்.

இது தாய் திருச்சபையின் போதனை.

திருச்சபையை சேராதவர்கள் அதன் போதனைகளை ஏற்றுக் கொள்ளாதது பற்றி நமக்கு கவலை இல்லை.

நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம் புனிதர்கள்  மீது நமக்குள்ள பக்தியை எப்படி நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதுதான்.

ஒரு அடிப்படை உண்மையை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இறைவனோடும் புனிதர்களோடும் நமக்குள்ள உறவு நூற்றுக்கு நூறு ஆன்மீக உறவு.

நாம் அவர்களிடம் கேட்கும் உதவி ஆன்மீக வளர்ச்சி சம்பந்தப் பட்டதாக இருக்கவேண்டும். 

நாம் விண்ணுலக வாழ்வு அடைய தேவைப்படும் உதவிகளாக இருக்க வேண்டும்.

உலக வாழ்வு சம்பந்தப்பட்ட உதவிகளை செய்யும்படி புனிதர்களை கேட்க கூடாதா? 

நாம் உலகில் வாழ்வதால், நமது ஆன்மீக வாழ்வுக்கு உலகத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதிருப்பதால்,

நமது ஆன்மீக வாழ்விற்கு பங்கம் விளைவிக்காத எந்த உலக உதவியையும் கேட்கலாம்.

ஆன்மீக வாழ்வுக்கு பங்கம் விளைவிக்கும் எதையும் கேட்டால் அதை இறைவன் நமக்கு தர மாட்டார். 

ஆன்மீக வாழ்வுக்குஉதவிகரமாய் இருக்குமானால் புனிதர்கள் அதற்காக வேண்டுவார்கள்.    இறைவனும்  அதை கட்டாயம் நமக்கு தருவார்.

இது விண்ணப்பங்கள் பற்றி.


எல்லாவிதமான உறவுகளுக்கும் அடிப்படை அன்பு.

அந்த வகையில் புனிதர்கள் மீதான 
பக்திக்கும் அடிப்படை அன்பு.

அன்பின் பண்புகள் நமக்குத் தெரியும்.

அன்பு தனது அன்பராகவே மாறிவிடும். நாம் யாரை அன்பு செய்கிறோமோ அவராகவே நாம் மாறிவிடுவோம். 

அதாவது அன்பரின்  பண்புகள் அனைத்தும் நமது பண்புகளாக மாறிவிடும்.

நாம் எந்த புனிதர் மீது பக்தி வைத்திருக்கின்றோமோ அவராகவே நாம் மாறிவிட்டால்தான் நாம் அவரது உண்மையான பக்தன்.

அன்னை மரியாள் மீது நமக்கு உண்மையான பக்தி இருந்தால்  அவளுடைய பண்புகள் யாவும் நமது பண்புகளாக மாறிவிடும்.

நாமும் அவளைப் போலவே தாழ்ச்சி உள்ளவர்களாகவும்,

கற்பு நெறி வழி வாழ்பவர்களாகவும்,

 இயேசுவின்  பணிக்கு நம்மை முழுவதும் அர்ப்பணித்து 
விட்டவர்களாகவும், 

ஆண்டவரின் அடிமைகளாகவும்,

இயேசுவுக்காக எல்லாவிதமான கஷ்டங்களையும் அனுபவிக்கிறவர்களாகவும், 

அவள் இயேசுவின் சீடர்களுக்கு உதவிகரமாய் இருந்ததுபோல இறைப் பணியாளர்களுக்கு உதவிகரமாய் இருப்பவர்களாகவும்

மாறிவிடுவோம்.

அப்படி மாறினால்தான் நாம் உண்மையிலேயே மாதா பக்தர்கள்.

மாதாவின் திருத்தலங்களுக்கு அடிக்கடி திரு யாத்திரை போவதால் மட்டும் மாதா பக்தர்களாக மாற முடியாது.

மாதாவிடம் ஜெப உதவி கேட்டுக் கொண்டிருப்பதால் மட்டும் மாதா பக்தர்கள் ஆக முடியாது.

அவளுக்கு பிடித்தமான செபமாலையை சொல்லிக் கொண்டிருப்பதால் மட்டும் மாதா பக்தர்கள் ஆக முடியாது.

நாள் முழுவதும் செபமாலை சொல்லிவிட்டு துன்பம் வரும்போது முணுமுணுக்க ஆரம்பித்தால்

நமது செபமாலைக்குப் பொருளே இல்லை.

வியாகுல மாதா தான் இயேசுவின் தாய் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மாதாவை நோக்கி ஜெபித்துக் கொண்டே இருப்பதால் மட்டுமல்ல,

மாதாவாக வாழ்ந்தால் மட்டுமே நாம் மாதா பக்தர்கள்.

நாம் எந்தெந்த புனிதர்களின் மீது பக்தி வைத்திருக்கிறோமோ அந்த புனிதர்களாக வாழ்ந்தால்தான் அவர்களின் பக்தர்கள்.

செவ்வாய்க்கிழமை தோறும் திருப்பலி காண்பதாலும்
(திருப்பலிக்கு உரிய பலன் உண்டு)

 அந்தோனியார் திருத்தலங்களுக்கு வருடாவருடம் திருயாத்திரை போய் வருவதாலும் அந்தோனியார் பக்தர்கள் ஆக முடியாது.

அந்தோனியாரின் பண்புகளோடு வாழ்ந்தால்தான் அந்தோனியார் பக்தர்கள்.

புனிதர்கள் பக்தி புனிதர்களை நோக்கி  செபிப்பதில் அடங்கி இருக்கவில்லை.

அவர்களாக வாழ்வதில்தான்  அடங்கியிருக்கிறது.

புனிதர்களின் புனிதத்தன்மையே அவர்கள் இறைவனுக்காக வாழ்ந்ததில்தான் அடங்கி இருக்கிறது.

இறைவனுக்காக வாழ்பவர்களே உண்மையான  பக்தர்கள்.

புனிதர்கள் மீது நமக்கு இருக்கும் உண்மையான பக்தி நம்மை புனிதர்களாக மாற்றிவிடும்.

புனிதர்கள் மீது பக்தி கொள்வோம்.

புனிதர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்

Monday, May 24, 2021

உண்மையான பக்தன் யார்?

உண்மையான பக்தன் யார்?

நாம் எல்லோருமே பக்தி என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறோம். 

ஆனால் எத்தனை பேருக்கு அந்த சொல்லின் உண்மையான, முழுமையான பொருள் தெரியும் என்று நமக்கு தெரியாது.

சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒத்து வருவது தான் உண்மையாக வாழ்க்கை.

பக்தி என்ற சொல்லின் உண்மையான பொருளைத் தெரிந்து கொண்டால் நமது வாழ்க்கை எந்த அளவுக்கு பக்தி உள்ளது என்பது நமக்கு புரியும்.

நம் ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கும் கட்டளைகள் இரண்டு.

1.எல்லாவற்றிற்கும் நேராக   உனது கடவுளை அன்பு செய்.

2.உன்னை நீ அன்பு செய்வது போல உனது அயலானையும் அன்பு செய்.

நமது முழுமையான கிறிஸ்தவ வாழ்க்கையே இந்த இரண்டு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதில்தான் அடங்கி இருக்கிறது.

இந்த இரண்டில் இறைவன்மீது நாம் கொள்ளவேண்டிய அன்பைத்தான் பக்தி என்ற சொல்லால் குறிக்கிறோம்.

இறைவனோடு நாம் கொண்டுள்ள ஆன்மீக உறவின் அடிப்படையே 
பக்திதான் அதாவது அன்புதான்.

பக்தி என்றால் அன்பு என்பதுதான் பொருள்.

ஆன்மீக ரீதியாக நம்மைவிட உயர்ந்தவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பை பக்தி என்று அழைக்கிறோம்.

 ஆன்மீக ரீதியாக   நம்மைவிட உயர்ந்தவர்கள் 

இறைவனும் அவரோடு நித்திய பேரின்ப வாழ்வில் பங்கு கொண்டிருக்கும் புனிதர்களும்தான்.

அன்பின் அடிப்படை பண்புகள் எல்லாம் பக்திக்கும் பொருந்தும்.

மனிதகுலம் படைக்கப்படுவதற்கு உன்னாலே நித்திய காலமாக இருந்து வருவது  

அன்பு மயமான கடவுள் மட்டும்தான்.

கடவுளின் கண்ணோக்கிலிருந்து பார்த்தால் அன்பில் அடிப்படை பண்புகள் நமக்கு புரியும்.

1. கடவுள் தனது அன்பைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் மனித குலத்தை படைத்தார்.

அன்பு தன்னைத்தானே பகிர்ந்து கொள்ளும் தன்மை உடையது.

2.கடவுள் தன்னைத்தானே அன்பு செய்வது போலவே நம்மையும் அன்பு செய்கிறார். 

 அன்பினால் மற்றவர்களை அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

3.கடவுள் நம் மீது கொண்ட அன்பின் காரணமாகத்தான் நம்மைப்போல் மனித உரு எடுத்தார்.

அன்பு தன்னால் அன்பு செய்பவர்களைபோலவே மாற ஆசை கொள்ளும்.

4.மனித உரு எடுத்த அன்பு மயமான கடவுள் தன்னால் நேசிக்கப்பட்ட மனித குலத்திற்காக தன்னையே பலியாக்கினார்.


அன்பு தன்னால் அன்பு செய்ய பாடுபவர்களுக்காக தன்னையே தியாகம் செய்யும்.

5.தன்னோடு முடிவற்ற 
காலம் ஒன்றித்து வாழ்வதற்காகவே மனித குலத்தைப் படைத்தார்.
'
ஒன்றித்து வாழ்வது அன்பின் இயல்பு.

6.கடவுள் நம் மீது எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்றால்

 நாம் அவருக்கு விரோதமாக செய்த   நமது பாவங்களுக்கு அவரே பரிகாரம் செய்து 

நம்மை மன்னிப்பதற்காகவே மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்.

அன்பு மன்னிக்கும் குணமுடையது.


நமது உலகியல் ரீதியான அன்பிலும் சரி ஆன்மீக ரீதியான அன்பிலும் சரி இந்த அடிப்படை பண்புகள் இருக்கும்.

1. தனிமையைப் போல் கொடுமையான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது.

யாரையாவது அன்பு செய்ய வேண்டும், யாராலுமாவது அன்பு செய்யப்படவேண்டும்.

நண்பர்களே இல்லாத வாழ்க்கை நரக வாழ்க்கை ஆகிவிடும்.

நண்பர்களோடு அன்பையும் எண்ணங்களையும் பரிமாறிக்கொள்வதைவிட இன்பமான காரியம் எதுவும் இருக்க முடியாது.

ஆன்மிகத்தில் தன்னிடம் உள்ளதெல்லாம் இறைவன் தந்த பகிர்வே என்பதை உணரும்போது தன்னை முழுவதும் இறைவனிடம் கையளித்து அவருக்காக மட்டுமே வாழ்வதுதான் உண்மையான பக்தி.

தங்களிடம் இறைவன் மேல் முழுமையாக பக்தி உள்ளதா என்பதை கண்டுபிடிக்க விசுவாசிகள்  தங்களைத் தாங்களே ஆன்மீக பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒரு வினாடி கூட தங்களது சுய திருப்திக்காக வாழாமல் இறைவனுக்காக மட்டுமே வாழ்பவன் தான் உண்மையான பக்தன்.


2. உண்மையான பக்தனால் தன் அயலானை அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

ஏனெனில்  இறையன்பின் இயல்பு அது. எவன் பிறர் பணியே இறைபணி என்பதை உணர்ந்து தனது வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியையும் பிறர் பணிக்காக அர்ப்பணிக்கிறானோ அவனே உண்மையான பக்தன்.

3. அன்பு தன்னால் அன்பு 
செய்பவர்களை போலவே மாற ஆசை கொள்ளும்.

சர்வ வல்லமை வாய்ந்த கடவுள் பலகீனங்களால் நிறைந்த மனித உரு எடுக்க அவரைத் தூண்டியது இந்த ரகசியம்தான். உலகம் எல்லாம் பராமரித்து வரும் இறைவன் தன்னைப் பராமரிக்க அவரால் படைக்கப்பட்ட அன்னை  மரியாளிடமும் சூசையப்பரிடமும் ஒப்படைக்கச் செய்தது இந்த ரகசியம் தான். 

இறைவனைப் போல நிறைவானவனாக ஆசைப்படுபவனே உண்மையான இறை பக்தன். 

"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48) என்று நமக்கு கட்டளையிட்டு இருப்பவர் நம் ஆண்டவராகிய இயேசுவே.

நிறைவே நோக்கி பயணிப்பவனே உண்மையான இறை பக்தன்.

இறைவனின் அத்தனை பண்புகளையும் தனது ஆக்கிக் கொள்வதற்காக வாழ்பவனே உண்மையான இறை பக்தன்.

இறைவன் தனது முழுமையான அன்பினால் நம்மை அன்பு செய்கிறார். உண்மையான இறை பக்தன் தன்னால் எவ்வளவு அன்பு செய்ய முடியுமோ அவ்வளவையும் பயன்படுத்தி இறைவனையும் தன் அயலானையும் அன்பு செய்வான்.

தனது சக்தியை முழுவதும் இறைவனுக்கும் அயலானுக்காகவும் பயன்படுத்துபவனே உண்மையான இறை பக்தன்.

வானகத் தந்தை நிறைவு உள்ளவராக இருப்பது போல் நாமும் நிறைவு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இயேசுவே வாழ்ந்து காண்பித்து இருக்கிறார்.

"என்னைப் பார்க்கிறவன் என் தந்தையை பார்க்கிறான்"

என்று அவரே சொல்லியிருக்கிறார்.

ஆக இயேசு எப்படி வாழ்ந்தாரோ அப்படியே அவரது பண்புகளுடன் நாமும் வாழ்ந்தால் நாம் வானகத் தந்தையை போல நிறைவு உள்ளவர்களாக மாற முடியும்.

 இயேசுவைப்போல் நாமும் ஏழ்மையில் பற்று உள்ளவர்களாக, 

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களாக,

 பகைவர்களையும் நேசிப்பவர்களாக,

 தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்பவர்களாக, 

மன்னிக்கும் குணம் உள்ளவர்களாக,

 மற்றவர்களுக்காக நமது உயிரையும் தியாகம் செய்பவர்களாக, 

மகிழ்ச்சியுடன் நமது சிலுவையை சுமப்பவர்களாக

வாழ்ந்தால் இயேசு சொன்னபடி நிறைவு உள்ளவர்களாக வாழ்வோம்.

இயேசு வாழ்ந்தபடியே வாழ்பவர்கள் எல்லோரும் இறை பக்தர்கள்.

4. அன்பு தன்னால் அன்பு செய்ய பாடுபவர்களுக்காக தன்னையே தியாகம் செய்யும்.

இறைப்பணிக்காகவும் பிறர் பணிக்காகவும் தன் வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்து  தன்னையே தியாகம் செய்து வாழ்பவனே உண்மையான இறை பக்தன்.

தியாகம் இல்லாமல் பக்தி இல்லை.

இறை பணிக்காக தன்னையே தியாகம் செய்ய துணிபவன்தான் உண்மையான இறை பக்தன்.

"என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்." (மத்.16:25)

(இவ்வுலகில் இறைவனுக்காக  மரிப்பவன் விண்ணுலகில் நிலை வாழ்வை அடைவான்)

5. ஒன்றித்து வாழ்வது அன்பின் இயல்பு.

நம்மோடு இறைவன் பகிர்ந்துகொண்ட அன்புதான் நம்மை அவரோடு ஒன்றித்து வாழ வைக்கிறது.

"வாழ்வது நானல்ல என்னில் இறைவன் வாழ்கிறார்"

என்று சொல்லும் அளவிற்கு இறைவனோடு ஒன்றித்து வாழ்பவனே உண்மையான இறை பக்தன்.

நம்மை காண்பவர்கள் நம்மில் இறைவனைக் காண வேண்டும்.

நமது வாழ்க்கையை பார்ப்பவர்கள் 
"இவனது வாழ்வு முழுக்க முழுக்க கிறிஸ்துவையே பிரதிபலிக்கிறது"

என்று சொல்லும் அளவிற்கு வாழ்பவனே உண்மையான இறை பக்தன்.

6. அன்பு மன்னிக்கும் குணம் உடையது..

மற்றவர்களது குற்றங்களை மன்னிக்க தெரியாதவன் அன்பு செய்ய  தெரியாதவன். 

நாம் நமக்கு விரோதமாக மற்றவர்கள் செய்த குற்றங்களை மன்னித்தால்தான் இறைவனுக்கு விரோதமாக நாம் செய்த குற்றங்களை அவர் மன்னிப்பார்.

நாம் எந்த அளவால் மற்றவர்களுக்கு அளக்கிரோமோ அதே அளவால்தான் இறைவன் நமக்கு அளப்பார்.

ஆகவே மற்றவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வோம். இறைவனும் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வார்.

மன்னிப்பவனே உண்மையான இறை பக்தன்.

நற்செய்தியை வாசிப்பவன் அல்ல,
நற்செய்தியை வாழ்பவனே உண்மையான இறை பக்தன்.

ஒரே வாக்கியத்தில்

 மறு கிறிஸ்துவாக வாழ்பவனே உண்மையான இறை பக்தன்.

திருப்பலி காண்பது, ஜெபிப்பது, 
ஒறுத்தல் முயற்சிகள் செய்வது,
தர்மம் செய்வது போன்றவை பக்தி முயற்சிகள்.

முயற்சிகளால் மட்டும் நம்மை பக்தன் ஆக்கிவிட முடியாது.

பக்தன் செய்யும் முயற்சிகளே பக்தி முயற்சிகள்.

பக்தி உள்ளவன்தான் பக்தன்.

முதலில் இறை பக்தனாக மாறுவோம்.

அப்போதுதான் நாம் செய்யும் பக்தி முயற்சிகளுக்கு பலனுண்டு.

இப்போது ஒரு கேள்வி:

இறைவனுக்காக வாழ்பவர்கள் இறை பக்தர்கள்.

மாதா பக்தர்கள் யார்?

ஒவ்வொரு புனிதருக்கும் பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்?

(தொடரும்)

லூர்து செல்வம்.

Saturday, May 22, 2021

பைபிள் மட்டும் போதுமா?

பைபிள் மட்டும் போதுமா?


நம்மிடையே பைபிள் கிறிஸ்தவர்கள் என்று ஒரு சாதியினர் இருக்கின்றார்கள்.

சாதியினர் நல்ல வார்த்தை இல்லையே.

நிச்சயமாக நல்ல வார்த்தை இல்லை.

ஆகவேதான் அவர்களுக்கு அந்த வார்த்தையைப் பயன் படுத்தியிருக்கிறேன்.

நாம் முழுமையான கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்,

பைபிள் கிறிஸ்தவர்களாக மட்டுமல்ல.

பைபிளில் கிறிஸ்துவின் போதனைகள் உள்ளன, ஆனால் எல்லா போதனைகளும் இல்லை.

எழுதப்பட்ட போதனைகள் மட்டுமே உள்ளன.

 எழுதப்படாத, ஆனால் போதிக்கப்பட்ட போதனைகள் எல்லாம் பைபிளில் இல்லை.

"இந்நூலில் எழுதப்பெறாத வேறு பல அருங்குறிகளையும் இயேசு தம் சீடர்கள் கண்முன் செய்தார்."


"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."

33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்த இயேசு 30 ஆண்டுகள் வெளியுலகிற்கு தெரியாமல் வாழ்ந்தார்.

இறுதி மூன்று ஆண்டுகளையும் முழுவதுமாக போதிப்பதிலேயே செலவிட்டார்.

மூன்று ஆண்டுகளும் அவருடைய 12 அப்போஸ்தலர்களும் அவருடனேயே இருந்தனர்.

அவர்களிடம் இயேசு வம்பு 
பேசியிருக்க மாட்டார்.

 தனது போதனைகளுக்கு விளக்கம் கொடுத்திருப்பார்.

 ஆகவே இயேசு போதித்தது எல்லாம் அவருடைய சீடர்களுக்கு  முழுமையாகத் தெரியும்.

 முழுமையாகத் தெரிந்த சீடர்கள்தான் பரிசுத்த ஆவி தங்கள் மேல்  இறங்கி வந்தவுடன், தைரியத்துடன் கிறிஸ்துவின் போதனைகளைப்  போதிக்க ஆரம்பித்தார்கள். 

 இயேசுவின்  அப்போஸ்தலர்களால் போதனை ஆரம்பிக்கப்பட்டதால் திருச்சபையை அப்போஸ்தலிக்க திருச்சபை என்கிறோம்.

இயேசு ஒரே திருச்சபையை தான் ஏற்படுத்தினார். ஆகவேதான் திருச்சபையை ஏக அப்போஸ்தலிக்க திருச்சபை என்கிறோம்.

இயேசு பரிசுத்தர். பரிசுத்தரால் அசுத்தமானதை உண்டாக்க முடியாது.

 பாவிகளாகிய நம்மை பரிசுத்தமானவர்களாக மாற்றுவதற்காகத்தான் திருச்சபை ஏற்படுத்தப்பட்டது. 

உடலிலுள்ள அழுக்கை கழுவுவதற்கு சுத்தமான நீரை தானே பயன்படுத்துகிறோம்!
நாம் அனைவரும் பாவிகள். ஆனால் திருச்சபை பரிசுத்தமானது.

படைக்கப்பட்ட அத்தனை மக்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது தான்  திருச்சபை.

ஆகவே இது கத்தோலிக்க திருச்சபை.

இயேசுவால் ஏற்படுத்தப்பட்டது ஏக,  பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபை.


அப்போஸ்தலிக்க திருச்சபை  போதிக்கும் போதனைகள் எல்லாம் அப்போஸ்தலர்கள் வழியாக நமக்கு வந்தவையே.

சில பைபிள் வடிவில் வந்தன.
சில பாரம்பரிய வடிவில் வந்தன.

பைபிள் வடிவில் வந்தவற்றையும், பாரம்பரிய வடிவில் வந்தவற்றையும் விசுவாசிப்பதுதான் முழுமையான விசுவாசம்.

இரண்டில் ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இயேசுவின் முழுமையான போதனையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதான் பொருள்.

பைபிள் மட்டும் போதும் என்பவர்களுக்கு இயேசுவின் முழுமையாக போதனை தெரியாது.

பைபிளை  மட்டும் ஏற்றுக் கொள்பவர்கள் அதன் வசனங்களுக்கு தங்களது இஷ்டம் போல் பொருள் கொடுக்கிறார்கள்.

அந்த வசனங்களை இயேசுவின் வாயிலிருந்து கேட்ட அப்போஸ்தலர்கள் அதற்கு என்ன பொருள் கொடுத்தார்களோ அதுதான் உண்மையான பொருள்.

இராயப்பரைப் பார்த்து,

"நீ பாறை. இந்த பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

உலகில் இராயப்பர்தான் திருச்சபையின் தலைவர் என்று பொருள் படுவதாகத்தான் அப்போஸ்தலர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இயேசு விண்ணகம் எய்திய நாள் முதல் இராயப்பர் தலைமையில்தான் திருச்சபை இயங்கியது.

இன்றும் இயங்குகிறது.  இராயப்பரின் வாரிசுகளைத்தான் பாப்பரசர்  என்கிறோம்.

இராயப்பரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் அந்த வசனத்திற்கு இஷ்டம்போல் பொருள் கொடுக்கிறார்கள்.

பாவசங்கீர்த்தனம், திவ்ய நற்கருணை ஆகிய தேவ திரவிய அனுமானங்கள் திருச்சபையின் ஆரம்ப காலத்திலிருந்தே அப்போஸ்தலர்களால் நிறைவேற்றப்பட்டு வந்தன.

ஆனால் பிரிந்து சென்றவர்கள் அப்போஸ்தலர்கள் ஏற்றுக்கொண்டதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

அதற்கு பைபிள் பொறுப்பு அல்ல.

திருச்சபையின் விசுவாசத்தை அடுத்த நடைமுறைகள் எல்லாம் 

பைபிளின் அடிப்படையிலும், பாரம்பரியத்தின் அடிப்படையிலும் 

அப்போஸ்தலர்கள் காலம் தொட்டே நடைமுறையில் உள்ளன.

பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அப்போஸ்தலர்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்போஸ்தலர்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் 
உண்மையான திருச்சபையை ஏற்றுக்கொள்ளவில்லை.

உண்மையான திருச்சபையை  ஏற்றுக்கொள்ளாதவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை.

இயேசு என்னும் பெயரை மட்டும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவின் போதனைகளை 'எல்லாம்' ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பவனே இயேசுவை ஏற்றுக் கொள்கிறான்.

இயேசுவின் போதனைகளில் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டு,

மற்றொரு பகுதியை ஏற்றுக் கொள்ளாதவனை 

எப்படி இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொள்கிறான் என்று சொல்ல முடியும்? 

அப்படிப்பட்டவர்கள் இயேசுவின் பெயரைச் சொல்லிக்கொண்டு அவர்கள் இஷ்டப்படியே நடக்கிறார்கள்.

அவர்கள் எப்படி கிறிஸ்தவர்கள்  என்ற  பெயருக்கு ஏற்றவர்கள் ஆக முடியும்?

இயேசுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அப்போஸ்தலர்களின் வாய்வழிப் போதனைகள் அடங்கிய பாரம்பரியத்தை நம்பாதவர்கள்  

எழுத்து வழி போதனையை மட்டும் எந்த அடிப்படையில் நம்புகிறார்கள்?

பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் அப்போஸ்தலர்கள் .
வாய்வழியும், எழுத்துவழியும் போதித்தார்கள்.

பரிசுத்த ஆவியை நம்புகிறவர்கள் 
பைபிளையும் நம்பவேண்டும், பரம்பரையையும் நம்ப வேண்டும்.

ஏனெனில் இரண்டிலுமே பரிசுத்த ஆவி தான் செயல்படுகிறார்.

ஒன்றை  மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றதை ஏற்றுக்கொள்ளாதவர்கள்,

பரிசுத்த ஆவியைப் பார்த்து,
 
"பரிசுத்த ஆவியானவரே, நீர் சொல்வதைச் சொல்லும்.  நாங்கள் எங்களுக்கு இஷ்டப்பட்டதை மட்டும் எடுத்துக் கொள்வோம்."

என்று சொல்கிறார்கள்.

திருச்சபை ஆரம்பித்த நாளிலிருந்து இந்நாள் வரை

பரிசுத்த ஆவியானவர்தான் அதை வழிநடத்துகிறார்,

 இன்னும் உலகம் முடியும் வரை  அவர்தான் வழிநடத்துவார். 

லூர்து செல்வம்.

Friday, May 21, 2021

"நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல் அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்". (அரு. 17:23)

,"நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல் அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்"
(அரு. 17:23)


 தந்தையை நோக்கி இயேசு செபிக்கும் ஒவ்வொரு   வசனமும் நம்மை பரிசுத்த திரியேக தேவ ரகசியத்துக்குள்  அழைத்துச் செல்கிறது.

"இவ்வாறு நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால்,

 அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக:

 இங்ஙனம், நீர் என்னை அனுப்பினீர் என்றும், 

நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல்

 அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் 

உலகம் அறிந்துகொள்ளும்."

தந்தை மகனுள்ளும், 
தூய ஆவியுள்ளும்.
 
 மகன் தந்தையுள்ளும்,
தூய ஆவியுள்ளும்,

தூய ஆவி தந்தையுள்ளும், மகனுள்ளும்,

ஒரே கடவுளாக இருக்கிறார்கள்.

இயேசு சீடர்களுக்குள்ளும் 
சீடர்கள் அவருக்குள்ளும்
 இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

குறைவுதான் நமது இயல்பு.

நிறைவு கடவுளின் இயல்பு.


குறைவு நிறைவை நோக்கி வளரலாம், நிறைவாக முடியாது.

ஆனால் 

இயேசு, "தந்தை நிறைவு உள்ளவராக இருப்பது போல நீங்களும் நிறைவு உள்ளவர்களாக இருங்கள்" 

என்று சீடர்களிடம்   சொல்லியிருக்கிறார்.

இது சீடர்களும் கடவுளைப்போல்   ஆக வேண்டுமென்ற,

அதாவது

 அந்த அளவிற்கு வளர்ச்சியடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு வாழ வேண்டும் 

என்ற அவரின் ஆசையை வெளிப்படுத்துகிறது .

ஆங்கிலத்தில் Aim, objective என்று இரண்டு வார்த்தைகள் உண்டு.

Aim என்றால் இறுதி (Ultimate) நோக்கம். 

இறுதி நோக்கத்தை அடைய பல படிகள் உண்டு. 

ஒவ்வொரு படியாக ஏறி இறுதி நோக்கத்தை அடைய வேண்டும்.

ஒரு படிக்கு அடுத்த படி objective.

எல்லா படிகளையும் ஏறி aim ஐ அடைந்த பின்  வளர்ச்சி முற்றுப்பெறும்.

நமது வாழ்க்கையின் aim இறைவன்.


நமது ஆன்மீக வாழ்க்கை குறைகள் நிறைந்தது. ஒவ்வொரு குறையாக நீக்கி, வளர்ந்து, நிறைவோடு (இறைவனோடு) இணைய வேண்டும்.

இணையும் போது நமது குறை  நிறைவுக்குள் சென்று  விடும்.

அதன்பின் நாமும் நிறைவோடு முழுமையாக இணைந்து விடுவோம். 

இந்நிலை விண்ணக வாழ்வில்தான் நடக்கும்.

இறைவனோடு முற்றிலும் இணையும்போது,

நாம் கடவுளாக மாறாவிட்டாலும்,

கடவுளோடு முற்றிலும், பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றித்து விடுவோம்.

அப்போது,

"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)

என்ற இயேசுவின் ஆசை நிறைவேறும்.

கடவுள் நிறைவானவராக இருப்பதால்தான்

அவர் எல்லோரையும்,

நல்லவர்களையும், கெட்டவர்களையும் நேசிக்கிறார்.

நம் அன்பு குறைவானதாக இருக்கலாம். 

அந்த குறைவான அன்பையும் முழுமையாக பயன்படுத்தி 

நாமும் எல்லோரையும் நேசிக்க ஆரம்பிக்கும் போது 

நாம் நிறைவாக விண்ணகத் தந்தையை போல் வாழ முயற்சிக்கிறோம்.

"நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: 

உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்:

 உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்.


45 அப்பொழுது வானகத்திலுள்ள உங்கள் தந்தையின் மக்களாயிருப்பீர்கள். 

அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார். 

நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்."

இயேசுவின் இந்த ஆசையை நாம் நிறைவேற்றி விட்டால் 

நாம் தந்தையைப் போல் நிறைவாக மாற முயற்சி செய்கிறோம்.

அதாவது விண்ணக வாழ்விற்கு ஏற்றவர்களாக மாறிவிட்டோம்.


"நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல் அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்"

இந்த ஜெப வசனத்தில் இயேசு தந்தையை நோக்கி:

"தந்தையே, நீர்  என்னை அன்பு செய்வது போலவே 

உம்மால் படைக்கப்பட்ட அவர்களையும் அன்பு செய்கிறீர்"

என்று சொல்கிறார்.

பரிசுத்த மூவொரு தேவன் தன்னைத் தானே அன்பு செய்வது போலவே நம்மையும் அன்பு செய்கிறார்,

என்ற உண்மையை இயேசு சீடர்களுக்கு அறிவிக்கிறார்.

"உன்னை நீ அன்பு செய்வது போல உன் அயலானையும் அன்பு செய்,

ஏனெனில் என்னை நான் அன்பு செய்வது போல உன்னை நான் அன்பு செய்கிறேன்."

என்று சொல்கிறார்.

இறைவனின் அன்பு அளவற்றது.

அளவற்ற அன்பினால்தான் நம் ஒவ்வொருவரையும் அவர் அன்பு செய்கிறார்.

 நாம் அவரை அன்பு செய்யும் போது நம்மால் அளவற்ற அன்பினால் அன்பு செய்ய முடியாது. 

ஏனெனில் நமது அன்பு அளவு உள்ளது. 

ஆனால் நமது அளவுள்ள அன்பை முழுமையாக பயன்படுத்தி அவரை அன்பு செய்ய முடியும். 

ஏழைக் கைம்பெண் காணிக்கையாக சிறிது கொடுத்தாலும் 

அவளிடம் உள்ளதை எல்லாம் கொடுத்து விட்டாள். 

உள்ளதை எல்லாம் கொடுத்தது கடவுளுக்கு ஏற்றதாய் இருந்தது.

 அதேபோல நம்மால் அதிகபட்ச அளவு எவ்வளவு அன்பு செய்ய முடியுமோ அவ்வளவு முழுமையாக அன்பு செய்தால் 

நம்மிடம் உள்ளதை எல்லாம் இறைவனிடம் கொடுத்து விட்டதாகத்தான் பொருள். 

 கடவுள் 'அவரிடம் உள்ளதை எல்லாம்' நமக்குத் தருகிறார்.

நாமும் 'நம்மிடம் உள்ளதை எல்லாம்' அவருக்கு கொடுக்கிறோம்.

ஆகவேதான் நமது அன்பை இறை அன்போடு ஒப்பிடுகிறார்.

தம திரித்துவம் என்ற இறைக் குடும்பத்திற்குள் நம்மையும் இணைத்துக் கொள்கிறார்.

மூவொரு தேவனுக்குள் நாமும் சென்று விடுவோம்.

மூவொரு தேவன் நம்முள் வாழ்வது போல நாமும் அவருள் வாழ்வோம்.

இதைவிட பெரிய பாக்கியம் நமக்கு என்ன வேண்டும்?

லூர்து செல்வம்.

Thursday, May 20, 2021

"நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்."(அரு.17:18)

"நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்."
(அரு.17:18)

  இயேசு தந்தையோடு பேசும்போது கூறும் ஒவ்வொரு வசனமும் தன்னுடைய சீடர்களுக்கு சொல்லவேண்டிய செய்தியை சொல்லுவது போலவே இருக்கிறது.


இயேசு இந்த செபத்தை தனியாக சென்று மௌனமாக   செபிக்கவில்லை.

  தனது சீடர்களின் காதுகளில் விழும்ம்படியாக சத்தமாக செபிப்பதால்,

தனது தந்தையிடம் சொல்லுவதை  யெல்லாம் அவர்களுக்கும் சொல்லுகிறார் என்பது புரிகிறது.

"நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்."

என்ற வசனத்தின் மூலம் அவர்களுக்கு சொல்லுவது:

"என் தந்தை என்னை உலகிற்கு அனுப்பியது போல 

உங்களை நான் உலகிற்கு அனுப்புகிறேன்.''

வசனத்தை கூர்ந்து கவனித்தால் 

  சர்வ வல்லவரான இயேசு சீடர்களை தன்னோடு  ஒப்பிட்டு பேசுவது புரியும். 

"தந்தை 'என்னை' அனுப்பினார்.

அதேபோல 

நானும் 'உங்களை' அனுப்புகிறேன்."

"நான் என்ன பணி செய்ய வேண்டும் என்று என்  தந்தை என்னை  அனுப்பினாரோ

அதே பணியை செய்வதற்காக உங்களை அனுப்புகிறேன்.

நான் செய்யும் அதே பணியைத்தான் நீங்களும் செய்யப் போகிறீர்கள்.

நான் என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுகிறேன்.

அதே சித்தத்தைத்தான் நீங்களும் நிறைவேற்ற போகிறீர்கள்."

தந்தை மகனுக்கு என்ன முக்கியத்துவத்தை கொடுக்கிறாரோ

அதே முக்கியத்துவத்தை மகன் சீடர்களுக்குக் கொடுக்கிறார்.

"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்,

 அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்."

மகன் தந்தைக்குள் ஒன்றாய் இருப்பது போலவே  

சீடர்களும் அவர்களுக்குள் (கடவுளுக்குள்) ஒன்றாய் இருக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.


மகன் தந்தைக்குள் ஒரே கடவுளாக இருக்கிறார்.

ஆனால் சீடர்கள் கடவுளுக்குள் ஒரே கடவுளாக  இருக்க முடியாது.

ஏனெனில் சீடர்கள் மனிதர்கள், எவ்வளவு முயன்றாலும்  கடவுளாக முடியாது.

மகன் தந்தைக்குள்  ஒரே கடவுளாக இருக்கிறார். ஆனால் சீடர்களால் இயேசுவுக்குள் கடவுளாக முடியாது.

ஆனாலும் இயேசு சீடர்களை எந்த அளவுக்கு உயர்த்த விரும்புகிறார் என்றால்,

அதாவது,

எந்த அளவுக்கு தன்னோடு நெருக்கமாக இருக்க விரும்புகிறார் என்றால்,

சீடர்களைப் பார்ப்பவர்கள் அவர்களுக்குள் வாழும் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

புனித சின்னப்பர்  கூறும் வார்த்தைகள் இங்கே பொருள் பெறுகின்றன.

"வாழ்வது நானல்ல, இயேசுவே என்னுள் வாழ்கிறார்."

நெருக்கத்தின் உச்சக்கட்டம்.

 சீடர்கள் தங்கள் பண்புகளில் இயேசுவாகவே மாறிவிட வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.

உலகினர் சீடர்களைத்தான் பார்ப்பார்கள். அவர்களைப் பார்க்கும்போது இயேசுவை பார்ப்பது போலவே இருக்க வேண்டும்.

அந்த அளவுக்கு இயேசுவின் பண்புகள்  சீடர்களிடம்  பிரதிபலிக்க வேண்டும்.

"தாயை தண்ணீர் கிணற்றில் பார்த்தால் மகளை வீட்டில் போய் பார்க்க வேண்டியதில்லை."

என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

சீடர்களை பார்ப்பவர்கள் இயேசு வைத்தான் பார்க்கிறார்கள் என்று கூறுமளவிற்கு சீடர்கள் இயேசுவின் பண்புகளை தங்களது பண்புகளாக மாற்ற வேண்டும்.

சீடர்கள் இயேசுவின் பண்புகளை கொண்டிருந்தால்தான் 

தந்தை இயேசுவை எந்த நோக்கத்திற்காக உலகிற்கு அனுப்பினாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.

 தந்தை மகனை எதற்காக உலகிற்கு அனுப்பினார்?

வாயினால் நற்செய்தியை மக்களுக்கு அறிவிப்பதற்காக மட்டுமல்ல,

உண்மையிலேயே பாடுகள் பட்டு,

 சிலுவையில் தன் உயிரையே பலியாகக் கொடுத்து, 

பாவிகளின் பாவங்களை மன்னித்து,

அவர்களை நிலை வாழ்விற்கு அழைத்து வரவே தந்தை மகனை உலகிற்கு அனுப்பினார்.

இதே பணியை செய்வதற்காகவே இயேசு சீடர்களில் உலகிற்கு அனுப்பினார்.

"எனக்கு சீடனாக இருக்க விரும்புகிறவன் சிலுவையை சுமக்க வேண்டும்,

உலகோர் கொடுக்கும் அவமானங்களை தாங்கிக் கொள்ள வேண்டும்,

அயலானுக்காக தன் உயிரையே தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

சீடன் குருவை விட பெரியவன் அல்ல.

குரு செய்வதையெல்லாம் சீடனும் செய்ய வேண்டும்."

 என்று இயேசு பலமுறை சீடர்களுக்கு சொல்லியிருக்கிறார்.

தான் செய்த 

அதே பணியை, 

அதேபோல, 

சீடர்களும் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தன்னுள் வாழும் தூய ஆவியை அவர்களுக்குள்ளும் அனுப்பி வைத்தார்.

"அவர்கள் மேல் ஊதி, தூய ஆவியை பெற்றுக் கொள்ளுங்கள். யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவை அவர்களுக்கு மன்னிக்கப்படும்."

கடவுளுக்கே உரிய பாவமன்னிப்பு  அதிகாரத்தை சீடர்களுக்குக் கொடுத்தார்.

"அப்பத்தையும், ரசத்தையும் தன் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றும் வல்லமையையும் தனது சீடர்களுக்கு கொடுத்தார்."

திருப்பலியின் போது குருவானவர் அப்பத்தை கையில் எடுத்து 

 ''இது என் சரீரம்"

 என்று கூறும்போது அப்பம் இயேசுவின் சரீரமாக மாறிவிடுகிறது.

ரசத்தைக் கையில் எடுத்து

"இது என் இரத்தம்."

என்று கூறும்போது அது இயேசுவின் இரத்தமாக மாறிவிடுகிறது.

ஆக இயேசு பாவிகளுக்காக உலகில் வாழ்ந்தது போலவே,

அதே நோக்கத்திற்காகவே,

அவரது சீடர்கள் உலகம் முடியுமட்டும் மக்களோடு வாழ வேண்டும்.

எப்படி உலக முடியுமட்டும்?

பன்னிரண்டு சீடர்கள் மட்டுமல்ல அவரது வாரிசுகளாகிய  குருக்களும் 

இறைமகன் உலகிற்கு எந்த நோக்கத்தோடு வந்தாரோ அதே நோக்கத்தோடு பணிபுரிய வேண்டும்.

அதாவது இயேசுவின் அத்தனை பண்புகளோடும் அவராகவே மாறி பாவிகளின் மீட்புக்காக 

பணிபுரிய வேண்டும்.

அவர்களும் இயேசுவைப் போலவே பாடுகள் பட வேண்டியிருக்கும்.

 உயிரைத்  தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.

இன்று உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த அத்தனை  குருக்களும் இயேசுவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவுக்குள் இருக்கும் அதே தூய ஆவிதான் இன்றைய இயேசுவின் சீடர்களையும் வழி நடத்துகிறார்.

இயேசுவுக்குரிய பாவமன்னிப்பு அதிகாரம் இவர்களுக்கு உண்டு.

இவர்கள் மூலமாகவே 
 தம்மையே நமது ஆன்மீக உணவாக தருகிறார்.

ஒரே வரியில்,

 இயேசு இன்றும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நமது குருக்களில் இயேசுவை பார்க்கிறோமா?

எதற்காக அவர்களில் அவர் வாழ்கின்றாரோ அதை செய்கின்றோமா?

அதாவது,

நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றுக்கொள்கிறோமா?


தகுந்த ஆன்மீக தயாரிப்போடு ஆண்டவரின் திரு உடலையும், திரு இரத்தத்தையும் உணவாகப் பெற்றுக் கொள்கிறோமா?

சுயபரிசோதனை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.

இயேசு நம்மோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நாம் இயேசுவோடு வாழ்கின்றோமா?

சிந்திப்போம்.

செயல் புரிவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, May 19, 2021

"நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்."(அரு.17:14)

"நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்."
(அரு.17:14)

இயேசு தனது மரணத்திற்கு முந்திய நாள் வியாழக்கிழமை தனது சீடர்களோடு மனம் விட்டு பேசுகிறார்.

கெத்சமனி தோட்டத்திற்கு சீடர்களோடு புறப்படுவதற்கு முன்னால் தனது தந்தையுடன் பேசுகிறார்.

தந்தையோடு பேசியதை சீடர்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ,


மற்றவர்களைவிட அருளப்பர் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

தனது நற்செய்தியில் இயேசுவின் ஜெபத்தை முழுவதும் பதிவு செய்துள்ளார்.


ஒவ்வொரு வசனமும் ஆழ்ந்த தியானத்துக்கு உரியது.

இப்போது நாம் தியானத்திற்கு எடுத்துக்கொண்ட ஜெப வசனம்:

"நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்."

தனது சீடர்கள் எப்படி வாழ வேண்டும் என்று தன் தந்தையிடம் சொல்லுகிறார்.

தான் சொல்வது சீடர்களின் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காகத்தான் சத்தமாக சொல்லுகிறார்.

இயேசுவின் வார்த்தைகள் நமக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் அருளப்பரும்   தனது நற்செய்திநூலில்  பதிவு செய்திருக்கிறார்.

உலகையும், சீடர்களையும் படைத்தவர் இயேசுவே.

உலகம் படைத்தவருக்குத்தான் சொந்தம்.

தான் படைத்த உலகையே தான்   சார்ந்தவன் அல்ல என்று சொல்கிறார்.

குருவைப் போலவே சீடர்களும் இருக்க வேண்டும்.

அவர்களும் உலகை 
சாராதவர்களாக இருக்க வேண்டும்.

உலகில் வாழ்வது வேறு,

 உலகை சார்ந்து வாழ்வது வேறு.

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு புகைவண்டியில் பயணிக்கிறோம்.

ஆனால் நாம் புகைவண்டியைச் சார்ந்தவர்கள் அல்ல.

குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் ரயில் வண்டியை விட்டு இறங்க வேண்டியவர்கள்.

நமது வாழ்க்கை புகைவண்டியைச் சார்ந்து இருக்கவில்லை.

ஆனால் நாம் குடியிருக்கும் வீட்டை சார்ந்து வாழ்கிறோம்.

குடியிருக்க வீடு இல்லாவிட்டால் நாம் தெருவை சார்ந்தவர்களாக மாறிவிடுவோம்.

இது உலகியல் வாழ்க்கையில்.

ஆன்மீக வாழ்வில் விண்ணகம் தான் நமது சொந்த வீடு.

நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் விண்ணகத்தை நோக்கி பயணிப்பதற்காக நாம் பயன்படுத்தவும் புகைவண்டி.

உலகில் நமது பயணம் முடிந்தவுடன் அதை விட்டு விட்டு சொந்த வீடாகிய விண்ணகத்திற்குள் நுழைந்து விடுவோம்.

அதன் பிறகு விண்ணகத்தில்தான் நித்தியமும் வாழ்வோம்.

உடல்ரீதியாக நாம் வாழ்வது இவ்வுலகில்தான்.

ஆன்மீக ரீதியாக உலகில் பயணிக்கிறோம், வாழவில்லை.

பயணம் முடிவுள்ளது.

ஆன்மாவின் வாழ்வு முடிவே இல்லாதது.

இறைமகன் மனித உருவெடுத்து உலகிற்கு வந்தது நிரந்தரமாக இங்கே வாழ்வதற்கு அல்ல.

33 ஆண்டுகள்தான் இயேசு உலகில் வாழ்ந்தார்.

33வது ஆண்டு மரணம் அடைந்து, உயிர்த்து, விண்ணகம் சென்றுவிட்டார்.

33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்தது நம்மையும் விண்ணக வாழ்விற்கு அழைத்துச் செல்வதற்காக.

நம்மை மீட்டு விண்ணக வாழ்விற்கு அழைத்துச் செல்வதற்காகத்தான்

 உலகில் நற்செய்தியை அறிவித்தார், 

பாடுகள் பட்டார், 

சிலுவையில் உயிரையே பலியாக தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

தமக்குச் சொந்தமான விண்ணக வீட்டில் நம்மையும் நிரந்தரமாக வாழ வைப்பதற்கு நம்மை அழைத்துச் செல்லவே இயேசு இவ்வுலகில் வாழ்ந்தார்.

நாமும் நமக்குச் சொந்தமான விண்ணக வீட்டில்  நிரந்தரமாக வாழ்வதற்காக  பயன்படுத்தும் பயணப்பாதையாகவே இவ்வுலகைக் கருத வேண்டும்.

இயேசு எப்படி இவ்வுலகை சாராமல் வாழ்ந்தாரோ

அப்படியே நாமும் உலகை சாராமல் வாழ வேண்டும்.

We are in this world, but not of this world.

இதைச் சீடர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் 

அவர்களுக்கு கேட்கும்படியாக சத்தமாக தந்தையை நோக்கி செபிக்கிறார்.

நாம் இவ்வுலகைச் சார்ந்து வாழ்கின்றோம் என்றால் இவ்வுலக வாழ்வே நமக்கு நிரந்தரமானது என்று நினைத்து வாழ்கிறோம். 

இவ்வுலகம் சடப்பொருள் ஆல் ஆனது. நமது உடல் இவ்வுலகில் இருந்து எடுக்கப்பட்டதாகையால் அது உலக இன்பத்தில் நாட்டம் கொள்கிறது.

ஆனால் நமது ஆன்மா  விண்ணக வாழ்வுக்கென்றே படைக்கப்பட்ட ஆவிப் பொருள்.

நமது உடல் நாட்டம் கொள்கிற உலக இன்பத்தால் ஆன்மாவை திருப்திபடுத்த முடியாது.

ஆன்மாவை திருப்திப்படுத்த விண்ணக வேந்தனாகிய இறைவனால் மட்டுமே முடியும்.

நமது ஆன்மா உடலோடு சேர்ந்து படைக்கப் பட்டிருந்தாலும்  அது உலக இன்பங்களுக்காக படைக்கப்படவில்லை.

விண்ணக பேரின்ப வாழ்வுக்காக மட்டுமே படைக்கப்பட்டது.

அதை அடைந்தால் மட்டுமே அது திருப்தி அடையும்.

இறைவனோடு இணைந்து வாழும் விண்ணக வாழ்வுக்காக ஆன்மா படைக்கப்பட்டிருப்பதால் 

இறைவனால் மட்டுமே அதை திருப்திப்படுத்த  முடியும்.

ஆகவே நாம் இவ்வுலகில் வாழ்ந்தாலும் இறைவனுக்காகவே வாழ்கிறோம்.

இறைவனுக்காக வாழ்கின்ற வாழ்வு ஆன்மீக வாழ்வு.

நாம் ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகவே படைக்கப் பட்டிருக்கிறோம்.

ஆகவே நாம் விண்ணை மட்டும் சார்ந்தவர்கள், மண்ணை அல்ல.

அப்படியானால் நமது உடல் எதற்கு?


விண்ணை சார்ந்த வாழ்வை வாழ்வதற்கு நமது ஆன்மாவிற்கு உதவிகரமாய் இருப்பதற்காக மட்டுமே நமது உடல்.

நாம் மூச்சு விடுவது, உண்பது, உடுத்துவது, உறங்குவது, உலகில் வேலை பார்ப்பது, பணம் ஈட்டுவது,
வீடு கட்டுவது போன்றவற்றைத்தானே நாள் முழுவதும் செய்கிறோம். 

இவைகளை செய்யாமல் வாழ முடியாதே.

ஆன்மீக வாழ்வு வாழ நேரம் எங்கே இருக்கிறது?


இவைகளை செய்யாமல் வாழ முடியாது. ஆனால் இவைகளை செய்வதற்காக வாழவில்லை.

வாழ்வதற்காகத்தான் இவற்றை செய்கிறோம்.

ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகத்தான் உடல்சார்ந்த இந்த வேலைகளைச் செய்கிறோம்.

அலுவலகத்திற்கு செல்வதற்காக பேருந்தில் பயணிக்கிறோம். ஆனால் பேருந்தில் பயணிப்பதற்காக அலுவலகத்திற்கு செல்லவில்லை.

அதே போல் தான் ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகத்தான் உடல் சார்ந்த வாழ்வையும் வாழ்கிறோம்.

ஆண்டவருக்காக வாழ்வதே ஆன்மீக வாழ்வு.

உடல்சார்ந்த வாழ்க்கையையும் ஆண்டவருக்காக வாழ்ந்தால் அது ஆன்மீக வாழ்வாக மாறிவிடுகிறது.

அலுவலகத்தில் வேலை செய்வதற்காக பேருந்தில் பயணிக்கும்போது

பேருந்து பயணமும்  அலுவலக வேலையாக மாறிவிடுகிறது.

பேருந்தில் பயணித்து அலுவலகத்திற்குச் சென்று நமது அலுவலகம் சாராத பணிகளைச் செய்தால் பேருந்து பயணம் அலுவலகம் சார்ந்தது அல்ல.

உடல் வாழ்வதற்காக மட்டுமே மூச்சு விட்டால் அது லௌகீகம்.

ஆண்டவருக்காக மூச்சு விட்டால் அது ஆன்மீகம்.

அவ்வாறே ஒவ்வொரு செயலும்.

உலகைச் சார்ந்த 
சிற்றின்பங்களுக்காக வாழ்வது லௌகீகம்.

இறைவனுக்காக வாழ்வது ஆன்மீகம்.

ஆக இவ்வுலகிலேயே நமது உடலின் உதவியாலே ஆன்மீக வாழ்வு வாழலாம், வாழ வேண்டும்.

நமது செயலின் தன்மையை தீர்மானிப்பது அதன் நோக்கமே.

இறைப்பணி செய்வதற்காக நமது உடலை பயன்படுத்தி வாழ்ந்தால் அது ஆன்மீக வாழ்வு.

உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக நமது ஆன்மாவை பயன்படுத்தி வாழ்ந்தால் அது லௌகீக வாழ்வு.

ஆண்டவரின் அருளை ஈட்டுவதற்காக கோவிலுக்குச் சென்றால் அது ஆன்மீகம்.

பங்கு சாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கோவிலுக்குச் சென்றால் அது லௌகீகம்.

இறைவனின் மகிமைக்காக நாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்தால் அது ஆன்மீகம்.

நம்மை நாமே விளம்பர படுத்திக் கொள்வதற்காக மற்றவர்களுக்கு உதவிகள் செய்தால் அது லௌகீகம்.

ஒரு அப்பா  மகனிடம்:

"ஒரு அண்ணன் இன்ஜினியர் ஆகிவிட்டான்.

 ஒரு அண்ணன் டாக்டர் ஆகிவிட்டான்.

 நீ சாமியாரா போயேன்.''

"ஏம்பா?''

"அது நமது குடும்பத்திற்கு பெருமை தானே!"

"குடும்ப பெருமைக்காக சாமியாராகப்போவது  தவறு.
எனக்கு தேவ அழைத்தல் இருந்தால் மட்டுமே போகலாம். இருக்கிறது மாதிரி தெரியல."

நல்ல காரியங்கள் கூட நோக்கம் தப்பாக இருந்தால் வேண்டாத காரியங்கள் ஆகிவிடுகின்றன!

நாம் எதை செய்தாலும் அதன் நோக்கம் ஆன்மீகம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.  

 லௌகீகம் சார்ந்ததாக இருக்கக் கூடாது.

ஏனெனில் ஆன்மீக வாழ்க்கை வாழ்வதற்காக தான் படைக்கப் பட்டிருக்கிறோம்.

 இந்த உலகைச் சார்ந்த எதுவுமே ஆன்மீகம் ஆகாது.

ஆண்டவரைச் சார்ந்த வாழ்வு மட்டுமே  ஆன்மீக வாழ்வு.

ஆன்மீக வாழ்வு வாழ்பவர்கள் மட்டும்தான் இயேசுவின் சீடர்கள்.

ஆன்மீக வாழ்வு வாழ்பவர்கள் தங்கள் வாழ்வில் என்ன கஷ்டங்கள் வந்தாலும் வருத்தப்பட மாட்டார்கள்.

நமது குருவே கஷ்டப்படுவதற்காகத்தான் பிறந்தார்.

தங்கள் கஷ்டங்களை அவரிடம் ஒப்புக் கொடுத்துவிட்டு எப்போதும் போல் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இந்த மகிழ்ச்சியே நிரந்தரமானது.

மண்ணுலகை சார்ந்து வாழ்பவர்களின் மகிழ்ச்சி மண்ணுலகைப் போலவே நிரந்தரமற்றது.

விண்ணுலகைச் சார்ந்து வாழ்பவர்களின் மகிழ்ச்சி விண்ணுலகைப் போலவே நிலையானது.

விண்ணுலகைச் சார்ந்து வாழ்வோம்.

நிலை வாழ்வை ஈட்டுவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, May 18, 2021

"நீர் எனக்குச் செய்யக் கொடுத்த பணியைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மகிமைப்படுத்தினேன்.". (அரு.17:4)

"நீர் எனக்குச் செய்யக் கொடுத்த பணியைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மகிமைப்படுத்தினேன்."
(அரு.17:4)

உலகியலில் பிள்ளைகள் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவது பெற்றோருக்குப் பெருமை.

ஆன்மீகத்தில் இறைவனின் விருப்பத்தை நாம் நிறைவேற்றுவதே அவருக்கு மகிமை. 

இறைவனுக்கு மகிமை என்று சொல்லும்போது ஒரு முக்கியமான இறையியல் தத்துவத்தை மனதில் மறக்காமல் வைத்திருக்க வேண்டும்.

இறைவன் சர்வத்திலும் 
நிறைவானவர்.

அவரது நிறைவை நம்மால் கூட்டவும் முடியாது குறைக்கவும் முடியாது.


அவரது நிறைவை கூட்டவோ, குறைக்கவோ அவர் நம்மை படைக்கவில்லை.

அவரிடம் உள்ளவற்றை நம்மோடு பகிர்ந்து கொள்ளவே நம்மை படைத்தார்.

மனுக்குலமே   அவரது விருப்பத்தை நிறைவேற்றாமல் போனாலும் அவரது மகிமையில் இம்மி கூட குறையாது.

அவ்வாறே மனுக்குலமே   அவரது விருப்பத்தை நிறைவேற்றினாலும் 
நிறைவான அவரது மகிமை கொஞ்சம் கூட கூடாது.

அவரது மகிமைக்காக நாம் செயல் புரியும்போது அந்த மகிமையை இறைவன் நம்மோடுதான் பகிர்ந்து கொள்கிறார்.

ஆகவேதான் இயேசுவே சொல்கிறார்:

"நீர் எனக்குச் செய்யக் கொடுத்த பணியைச் செய்து முடித்து, 

நான் உம்மை உலகில் மகிமைப்படுத்தினேன்."

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றியதன் மூலம் இயேசு தந்தையை மனிதருக்குள் மகிமைப்படுத்தினார்.

அதாவது தந்தையின் மகிமையில் நாம் பங்கு பெற்றிருக்கிறோம்.

இறைவனின் பிள்ளைகள் என்ற மகிமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

அந்த மகிமையை அனுபவிக்க நாம் மறு உலகில் மூவொரு தேவனோடு  இணைந்து வாழ்வோம்.

We will live in heaven in union with the Holy Trinity enjoying His glory.

தந்தை அவருக்குச் செய்யக் கொடுத்த பணியே,

அவரோடு நாம்  நித்தியமாக  விண்ணுலகில் வாழ்வதற்காக நமது பாவங்களிலிருந்து நம்மை மீட்பது தான்.

அந்தப் பணியை நிறைவேற்றியதன் மூலம் 

இயேசு தந்தையை உலகில் மகிமைப்படுத்தியிருக்கிறார். 

நாம் வாழும் உலகமும், நாமும் படைக்கப்படுவதற்கு முன்னாலேயே 

இறைவன் நித்திய காலமும் தனது நிறைவான பண்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தனது நிறைவான பண்புகளை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இறைவன் நம்மை படைத்தார்.

நாம் பாவம் செய்ததில் மூலம் அவரோடு நமக்கு இருந்த ஆன்மீக உறவை துண்டித்துக் கொண்டோம்.

நாமே துண்டித்துக் கொண்ட உறவை ஒட்ட வைப்பதற்காகத்தான் இறைமகன் இயேசு உலகிற்கு வந்தார்.

உறவு இல்லாத காலங்களில் இறைவனால் தம்மை நம்மோடு பகிர்ந்து கொள்ள இயலாது.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக உலகிற்கு வந்த இயேசு தனது பாடுகளாலும், மரணத்தாலும் இறை மனித உறவைப் புதுப்பித்து விட்ட படியால்,

 இனி இறைவன் தமக்கு   உரியதை நம்மோடு பகிர்ந்து கொள்ள இயலும்.  

இனி நாம் எதைச் செய்தாலும் இறைவனது மகிமைக்காகவே செய்தால் விண்ணக மகிமையை இறைவன் நம்மோடு பகிர்ந்து கொள்வார்.

இறைவன் அன்பு மயமானவர்.

அன்பில் இயல்பே எல்லோரையும் அன்பு செய்வதுதான்.

  தன்னால் அன்பு செய்யப்படுகின்ற யாவரும்  தன்னோடு ஒன்றித்து வாழவேண்டும் என்றுதான் அன்பு விரும்பும்.

தனக்கு உரியனவற்றை எல்லாம் அன்பர்களோடு பகிர்ந்து கொள்ளவே அன்பு விரும்பும்.

அன்பு மயமான கடவுள் நம்மை படைத்ததே  தன்னை  நம்மோடு நித்திய காலமாக பகிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

அதாவது அவரோடு ஒன்றித்து முடிவில்லா காலமும் விண்ணக பேரின்பத்தில் வாழவேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் நம்மை படைத்தார்.

இதை உணர்ந்து நாமும் நம்மை முற்றிலுமாக அவரிடம் கையளித்து, அவரோடு ஒன்றித்து, அவருக்காகவே வாழ வேண்டும்.

மூச்சுவிடுவது உட்பட நமது அனைத்து செயல்களையும் அவருக்காகவே செய்ய வேண்டும்.

அவருடைய அன்புக்காகவும், மகிமைக்காகவும்  செய்ய வேண்டும். 

இயல்பிலேயே நிறைவான மகிமையோடு நித்திய காலமும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரை, 

அனைவரும் அறிந்து கொள்ளும்படியாக நாம் வாழ வேண்டும்.

உலகோர் அனைவரும் அவரது மகிமையில் பங்குபெற வேண்டும்  என்ற விருப்பத்தோடு அவரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாக நமது வாழ்க்கை இருக்க வேண்டும்.

அதாவது நாம் இறைவனுக்காகவும், நமது அயலானுக்காகவும் வாழ வேண்டும்.

அதனால்தான் இயேசு பத்து கட்டளைகளையும் இரண்டே இரண்டு கட்டளைகளாக சுருக்கி நமக்கு தந்திருக்கிறார்.

இறைவனை நேசி.

 உன்னை நேசிப்பது போல உனது அயலானையும் நேசி.

நாம் இறைவனுக்காக வாழும்போது அயலானுக்காகவும் வாழ்கிறோம்.

அயலானை நேசிக்காமல் இறைவனை மட்டும் நம்மால் நேசிக்க முடியாது.

இறைவனை நேசிக்காமல் அயலானை மட்டும் நம்மால் நேசிக்க முடியாது.


இறைவன் நமக்குச் செய்யக் கொடுத்த பணியை நாம் செய்யும் போது,

நாம் இறைவனை உலகில் மகிமைப்படுத்துகிறோம். 

இதற்கு பெயர்தான் நற்செய்திப் பணி.

இறைவனை நமது வாழ்க்கையினால் மற்றவர்களுக்கு அறிவிக்கும் பணி.

எதைச் செய்தாலும் இறைவனின் அதிமிக மகிமைக்காக மட்டும் செய்வோம்.

நாம் பிறரன்பு பணி செய்யும்போது இறைவனை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியைத் தான் செய்கிறோம்.


"உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக"

என்று தினமும் இறை தந்தையிடம் வேண்டும்போது இதற்காகத்தான் வேண்டுகிறோம்.

"உலகோர் அனைவரும் உம்மை அறிந்து, உமக்காகவே வாழும்படி செய்யும்."

என்பதுதான் இந்த செபத்தின் பொருள்.

நமக்காக அல்ல, இறைவனின் மகிமைக்காக மட்டுமே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, May 17, 2021

"இதோ! நேரம் வருகிறது: அப்போது உருவகமாய் உங்களிடம் பேசேன்: என் தந்தையைப்பற்றித் தெளிவாய் எடுத்துச்சொல்வேன்."(அரு.16:25)

"இதோ! நேரம் வருகிறது: அப்போது உருவகமாய் உங்களிடம் பேசேன்: என் தந்தையைப்பற்றித் தெளிவாய் எடுத்துச்சொல்வேன்."
(அரு.16:25)

இறுதி இரவு உணவு வியாழன் அன்று சீடர்களோடு இயேசு பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் உருவகமாய் பேசியது எதுவும் சீடர்களுக்குப் புரியவில்லை.

சீடர்கள் படப்போகும் துன்பங்களைப் பற்றியும்

 அதைத்தொடர்ந்து அடையப் போகும் மகிழ்ச்சியை பற்றியும் உருவகமாகச் சொன்னதை அவர்களுக்கு விளக்கிவிட்டு,

இயேசு சொன்னார், 

"இதோ! நேரம் வருகிறது: அப்போது உருவகமாய் உங்களிடம் பேசேன்: என் தந்தையைப்பற்றித் தெளிவாய் எடுத்துச்சொல்வேன்."

இங்கு இயேசு 'நேரம்' என்று குறிப்பிடுவது தனது பாடுகளுக்காக நித்திய காலமாக திட்டமிட்டிருக்கிற நேரம்.

இறுதி இரவு உணவு வியாழனோடு பேசும் நேரம் முடிந்துவிட்டது.

இனி தொடரப் போவது செயல் நேரம். 

எந்த செயலுக்காக தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தாரோ அந்த செயல் நேரம்.

"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு

 அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."
(அரு.3:16)

தந்தை உலகின் மீது அளவற்ற அன்பு கொண்டிருக்கிறார்.

 அந்த அன்பின் காரணமாகவே உலக மீட்பிற்காக தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

இது தந்தையின் திட்டம்.

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
(அரு.15:13)

இது அன்பை பற்றி இயேசுவின் விளக்கம்.

தனது தந்தையின் அன்பை, அதாவது, தனது அன்பை,

 தனது பாடுகளின் மூலமும், சிலுவை மரணத்தில் மூலமும் உலகிற்கு வெளிப்படுத்தவும், நம்மைப் பாவத்திலிருந்து மீட்கவும்  உலகிற்கு வந்தார்.

பாடுகள் பட்டு, சிலுவையில் தன்னையே பலியாக்கி, தந்தையின் அன்பை உலகிற்கு வெளிப்படுத்தும் நேரம் நெருங்கி வருகிறது.

வியாழன் இரவு சீடர்களோடு பேசி முடிந்தவுடன் அந்த நேரம் ஆரம்பிக்கிறது.

அன்று இரவே அவர் தன்னை எதிரிகள் வசம் ஒப்படைக்கப் போகிறார்.

வெள்ளிக்கிழமை இயேசு தன் அன்பை பேச்சினால் அல்ல, செயலினால் வெளிப் படுத்தப் போகிறார். 

தன் தந்தையைப்பற்றித் தன் மரணத்தினால் தெளிவாய் எடுத்துச் சொல்லப்போகிறார்.

வெள்ளிக்கிழமை சீடர்கள் இயேசுவின் அன்பை நேரடியாக, தெளிவாக பார்க்கப் போகிறார்கள்.

வெள்ளிக்கிழமை இயேசுவின் அன்பிற்கான செயல் நேரம்.

உலகின் பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு தனது உயிரை பலியாக்கப் போவதுதான் அந்த செயல்.

இயேசுவின் அன்பை விட மேலான அன்பு யாரிடமும் இருக்க முடியாது.

உலகம் முடியும் மட்டும் நம்மோடு இருப்பதற்காகவே இரவு உணவு வியாழனன்று இயேசு திவ்விய நற்கருணையை ஏற்படுத்தினார்.

அந்த நோக்கத்திற்காகவே குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

  திவ்விய நற்கருணையில் இயேசு நம்முடன் இருக்கிறார்.

இருப்பது மட்டுமல்ல தன்னையே நமக்கு உணவாகவும் தருகிறார்.

நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை குருக்களிடம் கொடுத்தார்.

ஆக இப்போது இயேசு நம்மோடு வார்த்தைகளை விட செயல் மூலம்தான் அதிகமாக செயல்படுகிறார்.

தினமும் பைபிள் வாசிக்கிறோம். பைபிள் மூலம் இயேசு நம்மோடு பேசுகிறார். அவரது வார்த்தைகளைத் தியானிக்கிறோம். பைபிள் வாசகங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இவை எல்லாம் நல்ல காரியங்கள்தான். 

ஆனால் வாசிப்பதோடும், பகிர்ந்து கொள்வதோடும் நின்று விட்டால்,

 உணவை சமைத்து விட்டு, உண்ணாது இருப்பவர்களுடைய வயிறு பட்டினி கிடப்பது போல்,

நமது ஆன்மாவும் பட்டினி கிடக்கும்.

ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான சத்து எதுவும் அதற்கு கிடைக்காது.

நமது பைபிள் வாசிப்பினால் நமது ஆன்மா பயனடைய வேண்டுமென்றால், வாசித்த வார்த்தைகள் நமது வாழ்வாக மாற வேண்டும்.

சிந்தனையில் இருக்கும் இறைவாக்கு நமது வாழ்வில் செயல் வடிவம் பெற்றால் தான் அதனால் நமது ஆன்மாவிற்கு பயன் கிட்டும்.

Suppose, இயேசு மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவித்துவிட்டு 

இறுதி உணவு முடிந்தவுடன் கெத்சமனி தோட்டத்திற்குச் செல்லாமல் விண்ணுக்கு சென்று விட்டிருந்தால்,

 அதாவது பாடுகள் படாமலேயே தந்தையிடம் சென்றிருந்தால், நமக்கு என்ன கிடைத்திருக்கும்?

ஒன்றுமே கிடைத்திருக்காது.

வெள்ளிக்கிழமை அவர் பாடுகள்பட்டு மரித்திருக்காவிட்டால்,

அதாவது தனது அன்பை பற்றிய போதனைக்கு செயல்வடிவம் கொடுத்திருக்காவிட்டால்,

இயேசு மனிதனாக பிறந்தது நமக்கு பயன் இல்லாமலே போயிருக்கும்.

ஆனால் இயேசுவோ அந்த வெள்ளிக்கிழமை பாடுகளுக்காகவும், மரணத்திற்காகவும் மட்டுமே 33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்தார்.


"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."

என்ற தனது வார்த்தைகளை தனது உயிரைப் பலிகொடுத்துதான் நிரூபித்தார்.


அதே வார்த்தைகள் நமது வாழ்விலும் செயல்வடிவம் பெற்றால்தான் நாம் இயேசுவின் சீடர்கள்.

நமது அன்பு வெறும் lip service அன்பாக மட்டும் இருந்தால் அதனால் நமக்கும் பயனில்லை நமது அயலானுக்கும் பயனில்லை.

நாம் கிறிஸ்தவனாக இருந்தால் மட்டும் போதாது,

கிறிஸ்தவனாக நடக்கவும் வேண்டும்.

வார்த்தைகளை எப்படி வாழ்வாக்குவது?

"உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி."

நம்மை நாம் எப்படி நேசிக்கிறோம்?

நாம் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு,

" என்னை நான் நேசிக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு மட்டும் இருந்தால்,

சாப்பிடாமலும், உடல் வளர்ச்சிக்கு தேவையானதை செய்யாமலும் இருந்தால்

நாம் என்ன ஆவோம்?

"நான் எல்லோரையும் நேசிக்கிறேன்" எனது வாயால் மட்டும் சொல்லிக்கொண்டு

மற்றவர்களுக்குத் தேவையானவை கொடுக்காமல் இருந்தால்,

அதாவது பிறர் பணி செய்யாது இருந்தால்,

நமது உள்ளத்தில் மட்டும் இருக்கும் பிறரன்பினால் பிறருக்கு என்ன பயன்?

நண்பர் ஒருவருடைய இல்லத்திற்குச் செல்கிறோம். 

அவர் நம்மிடம் "உட்காருங்கள்" என்று சொல்லிவிட்டு, உட்கார ஆசனம் தரவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

அல்லது 

"சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்டுவிட்டு நமக்கு எதுவும் தராமல்

 அவர் மட்டும் நமது அருகே உட்கார்ந்துகொண்டு சாப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நமக்கு எப்படி இருக்கும்?

நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்றால்

 நமக்கு நாம் என்ன செய்கிறோமோ அதை மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும்.

அப்போதுதான் நம்மால் மற்றவர்களுக்கு பயன்.

"உனக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்"

என்று வாசிக்கிறோம்.

நமது வாழ்விலும் 
தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

"நமக்கு எதிராக குற்றம் செய்பவர்களை மன்னிக்க வேண்டும்"

என்று பைபிளில் வாசிக்கிறோம்.

உண்மையிலேயே நாம் மன்னிக்க வேண்டும்.

நாம் இயேசுவின் சீடர்களாக இருப்பதால் நமக்கென்று வரும் சிலுவைகளை தாங்கித்தான் ஆக வேண்டும்,

முணுமுணுத்துக் கொண்டு அல்ல, உண்மையான மகிழ்ச்சியுடன்.


மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும்,

வார்த்தைகளால் அறிவிப்பதை விட முன்மாதிரிகையான வாழ்க்கையால் அறிவிப்பதே சிறந்தது.

மற்றவர்கள் நமது வார்த்தைகளை விட வாழ்க்கையைத்தான் அதிகம் கவனிக்கிறார்கள்.

விசுவாசத்தினாலும், நற்செயல்களாலும் மட்டுமே மீட்பு பெற முடியும்.

லூர்து செல்வம்.

Friday, May 14, 2021

"ஆகவே, நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்."(அரு.15:16)

"ஆகவே, நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்."
(அரு.15:16)


பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காக இயேசுதான் விண்ணிலிருந்து மண்ணிற்கு நம்மைத் தேடி வந்தார்.

நமக்கு நற்செய்தியை அறிவித்து நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்தார்.

அவர் போதித்த நற்செய்தியை மற்றவர்களுக்கு போதிப்பதற்காக இயேசு தான் நம்மை தேர்ந்து கொண்டார்.

நாம் அவரைத் தேர்ந்துகொள்ளவில்லை,

  நாம் அவரை ஏற்றுக்கொண்டோம்.

 உலகில் நாம் செல்லும் இடமெல்லாம் மற்றவர்கள் பலன் பெறும் படியாகவும், 

பெற்ற பலன் நிலைத்திருக்கும்படியாக நற்செய்தியை  அறிவிக்கும் படியாகவும் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறோம்.

 நாம் பெற்ற  நற்செய்தியை நமது வாழ்வாக மாற்றவும், 

நாம் கொடுக்கும் நற்செய்தியை பெற்றவர்கள் தங்கள் வாழ்வாக மாற்றவும் 

நமது தந்தையிடம்,

 இயேசுவின் பெயரால் கேட்பதெல்லாம்  நமக்குத் தருவார்.

நற்செய்தியை வாழ்வாக  தேவையான வரங்களை  தந்தையிடம் கேட்க வேண்டும்.

இயேசுவின் பெயரால் கேட்க வேண்டும்.

ஒரு ஓட்டலுக்குள் நுழைந்து ஒரு டஜன் மார்கோ சோப்பு வேண்டும் என்று கேட்டால் நமக்கு என்ன பதில் கிடைக்கும்?

"ஹலோ இது ஹோட்டல். சாப்பிட எது வேண்டுமானாலும் கேளுங்கள். கிடைக்கும்!"

ஒரு ஜவுளி கடைக்குள் நுழைந்து,

" ஒரு பிளேட் மட்டன் பிரியாணி"

 என்று கேட்டால் கடையில் உள்ளவர்கள்   சிரிப்பார்கள்!

ஏனென்று சொல்லத் தேவையில்லை.

ஆங்கில ஆசிரியரிடம் போய் கணக்கு சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கக் கூடாது.

யார் யாரிடம் எது கேட்க வேண்டுமோ அதைக் கேட்டால் நிச்சயமாக கிடைக்கும்.

"நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்."

என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

 "கேட்பதெல்லாம்'' என்றால், எந்த நோக்கத்திற்காக தந்தை மகனை உலகிற்கு அனுப்பினாரோ அந்த நோக்கம் சம்பந்தப்பட்டதை எல்லாம் என்று பொருள்.

பாவமன்னிப்பு சம்பந்தப்பட்ட, நமது ஆன்மீக  வாழ்வோடு தொடர்பு உள்ள எதை கேட்டாலும் தந்தை நிச்சயமாக தருவார். 

முழுக்க முழுக்க உலகியல் சம்பந்தப்பட்ட உதவிகளைக் கேட்டால்

  அவை நமது ஆன்மீக வாழ்விற்கு உதவியாக இருந்தால் மட்டும் தருவார்.

அப்படியானால் உலகியல் சம்பந்தப்பட்ட உதவிகளைக் கேட்கவே கூடாதா?

தாராளமாக கேட்கலாம்.

இறைவன் நமது தந்தை.

விண்ணக வாழ்வு என்ற நோக்கத்தோடு அவர் நம்மை படைத்தாலும் 

படைத்து, நமக்காக அவரே படைத்த உலகில்தான் முதலில் வாழும்படி விட்டிருக்கிறார்.

இவ்வுலக வாழ்க்கையின் போதுதான் விண்ணக வாழ்வுக்காக நம்மை நாமே அவரது முழுமையான உதவியுடன் தயாரித்துக்கொள்ள  வேண்டும்.

நமது உடல் உட்பட அனைத்து உலக பொருட்களையும் பயன்படுத்திதான் விண்ணக வாழ்விற்கு நம்மை நாம் தயாரிக்க வேண்டும்.

விண்ணக வாழ்வுக்கு நம்மை தயாரிப்பதில் நமக்கு உதவுவதற்காகக்தான் இவ்வுலகையும் அதில் உள்ள பொருட்களையும் இறைவன் படைத்திருக்கிறார்.

  "உன்னை நேசிப்பது போல உனது அயலானை நேசி''

என்று நமக்கு அன்பு கட்டளை கொடுத்துள்ள கடவுள் 

நமது அன்பை சிந்தனையால் மட்டுமன்றி சொல்லாலும், செயலாலும் காண்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நமக்கு நமது உடலையே தந்திருக்கிறார்.

நமது உடலை கொண்டும், நம்மிடமுள்ள உலகப் பொருள்களைக் கொண்டுதான் நமது ஆன்மா பிறரன்புப்பணி புரியவேண்டி இருக்கிறது.

பிறர்பணியும் இறைபணிதான்.

ஆக இறைப்பணி முழுமையாக, நல்ல முறையில்  ஆற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் ஆரோக்கியமான வாழ்வுக்காக வேண்ட வேண்டும்.

அயலானுக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்பதற்காகத்தான் உலக பொருள்களையும் தரும்படி வேண்ட வேண்டும்.

நமது உடலையும் நம்மிடமுள்ள உலக பொருட்களையும் ஆன்மீக பணிக்காக பயன்படுத்தும்போது உலக வாழ்வு ஆன்மீக வாழ்வாக மாறிவிடுகிறது.

நமது செயல்களின் தன்மையை தீர்மானிப்பது செயல்கள் அல்ல, அவற்றிற்கான நோக்கம்.

நோக்கம் ஆன்மீக நோக்கமாக இருந்தால் நமது செயலும் ஆன்மீகம்தான்.

நாம் உண்பது, உடுத்துவது, வேலைக்குப் போவது, சம்பளம் வாங்குவது, அதை செலவழிப்பது கூட ஆன்மீக செயல்களாக மாறிவிடும், நமது நோக்கத்தில் ஆன்மீகம் இருந்தால்.

ஆசிரியர் கரும்பலகையையும், சாக்பீசையும் போதனா கருவுகளாகப் பயன்படுத்தவில்லை?

புத்தகத்தை மட்டும் அல்ல, கட்டுமானத்திற்கு பயன்படாமல் உடைந்து கிடக்கும் செங்கல்லை கூட போதனா கருவியாகப் பயன்படுத்தலாம், ஆசிரியர் நினைத்தால்.

அதேபோல் எந்த சடப் பொருளையும் ஆன்மீக நோக்கத்திற்காக பயன்படுத்தலாம், பயன்படுத்த வேண்டும்.

 விண்ணுலகை அடைவதற்கு நமக்கு உதவிகரமாக இருப்பதற்காக மண்ணுலகு நமக்கு அருளப்பட்டுள்ளது!

சாப்பிட ஒன்றுமில்லாமல் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் கூட

 தனக்குக் கிடைக்கும்  உணவை தன்னை விட ஏழைக்கு இறைவன் பெயரால் கொடுத்து   உதவும்போது  ஆன்மீகவாதியாக மாறிவிடுகிறான்.

 கடவுள்  தனது அளவில்லா அன்பின் அடிப்படையிலும், ஞானத்தின் அடிப்படையிலும்

 பல காரணங்களுக்காக நமது வாழ்வில் நோய் நொடிகள், ஏழ்மை போன்ற துன்பங்களை அனுமதிக்கிறார்.

அவரை மறந்து வாழும் நம்மை அவரிடம் திருப்புவதற்காக துன்பங்களை அனுமதிக்கலாம்.

துன்பங்கள் வரும்போது நம்மை நாமே சுயபரிசோதனை செய்து நாம் இறைவனை மறந்து வாழ்ந்திருந்தால் 

ஜெபத்தின் மூலம் அவரை நமது நினைவுக்குள் கொண்டு வர வேண்டும்.

"உம்மை மறந்திருந்த  என்னை  உம்மை நோக்கி திருப்புவதற்காக அனுப்பிய துன்பங்களுக்காக   நன்றி கூறுகிறேன்.

உனக்கு விருப்பமிருந்தால், எனக்கு ஆன்மீக நன்மை பயக்கும் என்றால் துன்பத்திலிருந்து எனக்கு விடுதலை கொடும்."


"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்: 

எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்ற இயேசுவின்  ஜெபத்தை ஒட்டியே நமது ஜெபமும் இருக்க வேண்டும்.


சில சமயங்களில் ஆண்டவரிடம் ஒப்புக் கொடுப்பதற்காகவே துன்பங்கள் வரும்.

புனித பிரான்சிஸ் அசிசியாருக்கு ஐந்து காய வரம் வந்தது போல.


அதை நாம் அறிய வந்தால் இறைவன் அனுமதித்த துன்பங்களை அவருக்கு ஒப்புக்கொடுத்து

விண்ணக சம்பாவனையை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில்  நமது பாவங்களுக்கு  பரிகாரமாகவே கடவுள் துன்பங்களை அனுப்பலாம்.

பாவப் பரிகாரமாக அவற்றை பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும்.

இயேசு இவ்வுலகில் நம்மைப்போல வாழ்ந்த காலத்தில் நோயாளிகளிடம் விசுவாசத்தை ஏற்படுத்தி அதை உறுதிப்படுத்துவதற்காக நோய்களை குணமாக்கினார்.

நமது விசுவாசமும் ஆழமாக இருந்தால் எந்த நோக்கத்திற்காக துன்பங்களை அனுப்பினாரோ

 அது நிறைவேறியவுடன் துன்பங்களை நம்மை விட்டு அவராகவே விலக்கி விடுவார்.

இன்றைய காலகட்டத்தில் கொரோனா என்ற பெரிய துன்பம் மனுக்குலத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இது தன்னை மறந்து வாழும் மனுக்குலத்தை தன்னிடம் திருப்புவதற்காகவே இறைவனால் அனுப்பப்பட்ட துன்பம்.

இதிலிருந்து விடுதலை பெற மனுக்குலம் முழுவதும் இறைவனை நோக்கி மனம் திரும்பவேண்டும்.

"இறைவா நாங்கள் உம்மை மறந்து வாழ்ந்தது எங்கள் தவறுதான்.

ஏற்றுக் கொள்கிறோம்.

உமக்கு சித்தம் இருந்தால் இந்த துன்பத்திலிருந்து எங்களுக்கு முழுமையான விடுதலை கொடும்.

இனிமேல் உம்மை எந்த காரணத்தை முன்னிட்டும் மறக்க மாட்டோம்.

எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்.''

மனுக்குலம் முழுவதும் இறைவனிடம் திரும்ப வேண்டும் இன்று நாமும் வேண்டிக்கொள்வோம்.

நாம் மனம் திரும்பியவுடன் 
வந்த கொரோனாவும் வந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

மனுக்குலம் மனம்திரும்பவும்,

கொரோனாவிலிருந்து விடுதலை   கிடைக்கவும்,
 இறைவனை நோக்கி மன்றாடுவோம். 

நமது மன்றாட்டு உறுதியாக கேட்கப்படும்.

உறுதியாக விசுவசிப்போம்.

விசுவாசம் வெற்றி பெறும்.

"ஆகவே, நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்."

இது நம் ஆண்டவரின் அருள்வாக்கு.

லூர்து செல்வம்.