Saturday, February 29, 2020

நிலை வாழ்வும், நிலையா வாழ்வும்.

நிலை வாழ்வும், நிலையா வாழ்வும்.
******************************
உலகில் உயிர் வாழக்கூடிய அனைவருக்கும் உடலும் இருக்கிறது ஆன்மாவும் இருக்கிறது.

எல்லோருடைய உடலிலும் ஒரே மாதிரியான உறுப்புக்களே இருக்கின்றன.

எல்லோருக்கும் புத்தி இருக்கிறது,

 நினைவு ஆற்றல் இருக்கிறது,

 இருதயமும் இருக்கிறது,

எல்லோரிடமும் நம்பிக்கையும் இருக்கிறது,

ஆனாலும் எல்லோரும் ஒரே மாதிரியாக இல்லை.

ஏன்?

ஒரு தந்தைக்கு இரண்டு மக்கள் இருந்தார்கள்.

அவர்களுடைய அறிவுத் திறனை சோதிப்பதற்காக அவர் அவர்களுக்கு ஒரு சோதனை  வைத்தார்.

ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

ஆளுக்கு ஒரு வீட்டையும் கொடுத்தார்.

அவர்கள் தங்களுக்குத் தரப்பட்டிருக்கும் பணத்தைக் கொண்டு வீட்டை முழுவதும் நிரப்ப வேண்டும்.

மாலையில் தந்தை வீட்டைப் பார்வையிட வருவார், யாருடைய வீடு நிரம்பி இருக்கிறதோ அவனுக்கு அவருடைய சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு.

மாலையில் மூத்தமகன் வீட்டிற்குப் போனார்.

அவன் ஆயிரம் ரூபாயில் ஐந்நூறு ரூபாய்க்கு வைக்கோல் வாங்கி வீட்டை நிரப்பிவிட்டு, மீதி ரூபாயைச் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டான்.

வைக்கோல் வாசல் வரைக்கும் இருந்ததால் வாசல் திறந்திருந்தும் உள்ளே போக முடியவில்லை.


அடுத்து இளைய மகன் வீட்டிற்குச் சென்றார்.

வாசலுக்கு முன்பே

"தந்தையே வருக"

என்று கோலம் போட்டிருந்தது.

அந்தக் காலத்தில் மின்சாரம் கிடையாது.

ஆனால் எல்லா அறைகளிலும் மெழுகுதிரிகள் எரிந்து, வீடு முழுவதும் ஒளியால் நிரம்பியிருந்தது.

ஊது பத்தி மணம் எங்கும் வீசிக் கொண்டிருந்தது.

நடு ஹாலில் பூப் போட்ட துணியினால் போர்த்தப்பட்ட மேஜை ஒன்று போடப்பட்டிருந்தது.

மேஜை மேல் மணம் வீசும் பூச்சாடி வைக்கப் பட்டிருந்தது.

அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியைக் காண்பித்து 

"உட்காருங்கள் அப்பா "

என்றான் இளைய மகன்.

ஒரு தட்டில் பழங்களையும், அப்பாவுக்கு  புது dress ஐயும், காணிக்கையாக ஐந்நூறு ரூபாயையும் வைத்து,

தந்தையிடம் கொடுத்து,

"ஆசீர்வதியுங்கள், அப்பா." என்றான்.

கொடுக்கப் பட்டதோ ஆளுக்கு ஆயிரம் ரூபாய்தான். 

ஆனால், பயன்படுத்திய விதம்?


செயல் சுதந்திரம் தரப்படாத தாவரங்களும், மிருகங்களும் இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டே செயல் புரிகின்றன.

சுதந்தரம் தரப்பட்ட மனிதன்தான் தனது சுதந்தரத்தை இஷ்டம் போல் 

வித்தியாசம், வித்தியாசமாகப் பயன்படுத்தி உலகை இன்றைய நிலைக்குக்  கொண்டுவந்துள்ளான்.


ஆன்மீக வாழ்வின் அடிப்படை நம்பிக்கை.

எல்லோருக்கும் ஆன்மீகம் இருக்கிறது.

ஆனால் அநேகர்

இல்லாத ஒன்றின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

வாழ்வு இருவகை:

நிலை வாழ்வு.

நிலையா வாழ்வு.

நிலை வாழ்வு என்றென்றும் நீடிக்கக் கூடியது.

நமது ஆன்மீகப் பயணம் நிலை வாழ்வை நோக்கியே இருக்க வேண்டும்.

அதற்காகத்தான் படைக்கப் பட்டோம்.


நிலையா வாழ்வு தற்காலிகமானது.

ஒரு நாள் முடிவுக்கு வரக்கூடியது.

அதாவது ஒரு நாள் இல்லாமல் போகக்கூடியது.

நிலை இல்லாத வாழ்வின் மேல் முழு நம்பிக்கை வைத்து வாழ்பவர்கள் அந்த வாழ்வு முடிவுக்கு வரும்போது ஏமாந்து போவார்கள்.

இதை நம்பி

கஸ்டப்பட்டு படிப்பார்கள்.

வேலையில் சேர்ந்தோ, சுயமாக உழைத்தோ சம்பாதிப்பார்கள்.

சம்பாதித்ததைச் சேர்த்து வைப்பார்கள்.

சேர்த்து வைத்ததை முழுமையாக அனுபவிக்க முடியாமல்

போய்விடுவார்கள்!

மகா அலெக்சாண்டருக்கு ஆசை ஆசியாவை வென்று 
கிரேக்க நாட்டோடு இணைக்க வேண்டுமென்று.

இந்தியா வரை வந்து அநேக நாடுகளை, 

இந்தியாவின் சிந்து பகுதி உட்பட,

வென்று

வெற்றி வீரனாய் திரும்பியவன் கிரீஸ் போய்ச் சேரவில்லை.

பாபிலோனைக் கடக்குமுன்பே கொசுக்கடியால் இறந்தான்.

பெரிய பெரிய மன்னர்களின் கதை எல்லாம் இப்படி அரைகுறையில்தான் முடிந்திருக்கிறது!



இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது எனத் தெரிந்தும் அதன் மேல் நம்பிக்கை வைத்து ஏமாந்து போவதுதான் இதில் கொடுமை.

பணமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவன்

பணத்தாலேயே ஏமாற்றப்படுவான்.

ஒண்ணு சேர்த்து வைத்த பணத்தை செலவழிக்க முடியாமலேயே இறந்து போவான்.

அல்லது திடீரென அவனை ஏமாற்றி விட்டு அது போய்விடும்.

சிற்றின்பத்திற்காக வாழ்பவன் ஆன்மாவோடு உடலையும் நாசமாக்குவான். 

உலக அதிகாரத்திற்காக வாழ்பவன் மனசாட்சியை அடகு வைத்து விட்டுதான் களத்தில் இறங்குவான்.

அவனையே அடகு வைக்கத் தயாராக இருக்கும் எதிரிகளோடு போராடுவதிலேயே அவன் வாழ்நாள் கழியும்.

இன்றைய உலகில் வாழும்  அநேகர் இவ்வுலக வாழ்வு நிலையற்றது எனத் தெரிந்திருந்தும்,

நிலை வாழ்வைத் தேடாமல் 

இவ்வுலக இன்பத்தைத் தேடுவதிலேயே தங்கள் வாழ்வை வீணாக்குகிறார்கள்.

இவ்வுலக வாழ்வையும் வீணாக்கி

மறுவுலக நிலை வாழ்வையும் இழக்கிறார்கள்.



நாம் நம்பிக்கை வைக்க வேண்டியது நமக்கு நிலைவாழ்வைத் தரவிருக்கும் என்றும் வாழும் இறைவனிடம்.

ஒரு உண்மையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நிலையற்ற உலகைப் படைத்தவரும், அதிலே நம்மை  வாழ வைத்திருப்பவரும்
இறைவன்தான்.

காரணமாகத்தான்.

நமது நிலைவாழ்விற்கான பயணப் பாதை நிலையற்ற வாழ்வின் வழியாகத்தான் இருக்கிறது.

காரணம் நமது ஆன்மா நிலை வாழ்விற்காகப் படைக்கப் பட்டிருந்தாலும், நமது உடல் இவ்வுலகைச் சார்ந்தது.

நமது அழியக்கூடிய உடலின் உதவியோடுதான் நமது ஆன்மா அழியா உலகை நோக்கி பயணிக்க வேண்டியிருக்கிறது.

நமது ஆன்மீகப்பயணத்தை ஒரு நாடகமாகக் கற்பனை செய்து கொண்டால்

கதாநாயகன் நமது ஆன்மா.

பிரயாணத்தில் உதவி செய்யத் தோழன் ஒருவன் உடன் வருவான்.

அவனோடு இடைஞ்சல் மட்டுமே செய்து நமது பயணத்தைக் கெடுக்க வில்லன் ஒருவனும் வருவான்.

கடவுள் அருளின் துணைகொண்டு 

தோழனின் உதவியோடு

 வில்லனது முயற்சிகளை முறியடித்து 

நாம் நமது ஆன்மீகப் பயணத்தைத் தொடர வேண்டும்.

ஆனால் இதில் வேடிக்கையான விசயம் என்ன என்றால் தோழனும், வில்லனும் ஒரே ஆள்தான்.

அது தான் நமது உடல்.

நமது உடல் நமது ஆன்மாவிற்கு இறைவனால் தரப்பட்ட அன்புப் பரிசு.

அதன் துணையோடு தான் நாம் விண்ணகத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

ஆனால் நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் காரணமாக தோழனிடம் வில்லன் தன்மையும் புகுந்து விட்டது.

விலக்கப்பட்ட கனியை விழுங்கியது நமது உடல் தானே!

பாவம் என்ற விஷம் நமது உடலை இச்சைகளால் நிரப்பி விட்டது.

இந்த இச்சைகள் தான் நமது விண்ணகப் பயணத்திற்கு எண்ணற்ற இடைஞ்சல்களைத் தந்து கொண்டிருக்கின்றன.

இந்த இச்சைகளைத் திருப்திப் படுத்தும் போதுதான் பாவங்களுக்குள் விழுகிறோம்.

தண்ணீரால் ஏற்பட்ட சகதியை தண்ணீரால் தான் கழுவ வேண்டும்.

அதனால்தான் நமது உடல் ஆசைகளால் கவரப்பட்டு

நாம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய மாசு மரு அற்ற தன் உடலையே இயேசு பயன்படுத்திக் கொண்டார். 

இரத்த வியர்வை வேர்க்க, ,

 தசைகளால் அடிபட, 

முண்முடி சூட்டப்பட,

 சிலுவையைச் சுமக்க,

 சிலுவைப்  பாரம் தாங்க மாட்டாமல் கீழே விழ,

 ஆணிகளால் சிலுவையில்
அறையப்பட,

ஈட்டியால் குத்தப்பட 

தன் உடலைத்தான் கையளித்தார்!

நாம் நமது உடலால் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் உச்சந்தலை முதல் உள்ளங்கால்  வரை தன் உடலைப் பலியாக்கினார்.

நாம் நமது தோழனுக்குள் இருக்கும் வில்லனை அழிக்க வேண்டும்.

அதாவது உடல் இச்சைகளை முற்றிலுமாக கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

நமது விழுந்த இயல்பு (Fallen nature) நம்மோடு போராடும்.

போராட்டத்தில் வெற்றி பெற நம்மைப் படைத்த இறைவனிடம் முழு நம்பிக்கை கொள்வதோடு

 அவரது அருள் வரங்களைக் கேட்டு மன்றாடவேண்டும்.


உடலை நம் தோழனாக மாற்றி விட்டால் நமது ஆன்மீக வளர்ச்சியில் உதவியாக இருப்பான்.

ஐம்பொறிகளையும் இறைவனை நோக்கியே திருப்புவான்.

காலையில் சோம்பேறித்தனத்தை விட்டு விட்டு உரிய நேரத்தில் எழுவான்.

ஜெபம் சொல்ல முட்டியைப் போட்டு கையைக் குவிப்பான்.

கண்ணை மூடிக்கொண்டு தியானத்திற்கு உதவுவான்.

கோவிலுக்கு நேரத்தோடு வருவான்.

பீடத்தை விட்டு கண்ணை எடுக்க மாட்டான்.

இறைவசனத்தைக் கேட்க காதுகளைத் திறந்து வைத்திருப்பான்.

நாம் பிறருக்கு  உ தவி செய்ய விரும்பும்போதெல்லாம்
ஒத்துழைப்பான்.

ருசிக்காக இல்லாமல் பசிக்காக மட்டும் அளவோடு சாப்பிடுவான்.

உடல் வலி வேதனைகளை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க உதவியாய் இருப்பான்.

நமது சிலுவையைச் சுமப்பான்.

நமது ஆன்மீக வாழ்வுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து விட்டு, 

ஆண்டவர் நம்மை அழைக்கும்போது நம்மை விண்ணகத்திற்கு அனுப்பி விட்டு,

அமைதியாக, வந்த இடத்திற்கே (மண்ணுக்குள்ளே) போய் படுத்துக் கொள்வான்.

இதெல்லாம் நாம் இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தால் மட்டும் நடக்கும்.

நிலையற்ற வாழ்வுக்காக வாழாமல், அதை, நமது நிலை வாழ்வை அடைய பயன்படுத்திக் கொள்வோம்.


லூர்து செல்வம்.




.

No comments:

Post a Comment