"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது"
(லூக்.17:21)
******************************
''கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்."
(மத். 6:33 )
"ஆண்டவரே, உமது அரசு எங்கே இருக்கிறது?"
"எனது அரசு இதோ! உங்களிடையே உள்ளது"
உலக காரியங்களில் ஆர்வம் காட்டுவதை விட்டு விட்டு இறையரசைத் தேடுவதில் ஆர்வம் காட்டும்படி இயேசு கூறுகிறார்.
இறையரசு எங்கே இருக்கிறது என்பதையும் அவரே கூறுகிறார்.
"இறையரசு உங்களிடையேதான் உள்ளது."
இறைவன் எங்கும் இருக்கிறார்.
இறைவன் இருக்கும் இடத்தில் தான் அவரது அரசும் இருக்கும்.
ஆகவே இறை அரசும் எங்கும் இருக்கிறது.
குறிப்பாக நமது இதயத்தை இறைவன் வாழும் ஆலயம் என்கிறோம்.
நமது இதயத்தில் இறைவன் வாழ்கிறார். ஆகவே நமது இதயத்திலும் இறையரசு இருக்கிறது.
இறைவனை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறையரசு இருக்கிறது.
இறைவன் நமது உள்ளத்திலிருந்து நம்மை ஆட்சி புரிகிறார்.
அவரது அரசு இவ்வுலக அரசை போன்றது அல்ல.
இவ்வுலக அரசுக்கு எல்கை உண்டு, இறையரசுக்கு எல்கை இல்லை.
இவ்வுலக அரசு நம்மிடம் வரி வாங்கி நமக்கு நன்மை செய்கிறது.
இறையரசில் இறைவன் நமக்குத் தருவது எல்லாம் இலவசம்.
இவ்வுலக அரசில் நீதிமன்றம் குற்றவாளிகளைத் தண்டிக்கிறது.
இறையரசில் இறைவனே நீதிபதி.
நமக்கு சார்பாக வாதாடும் வக்கீலும் இறைவனே.
நமது குற்றங்களுக்கு நம் சார்பாக பரிகாரம் செய்பவரும் இறைவனே.
நமது குற்றங்களை மன்னிக்கிறவரும் இறைவனே.
எல்லாம் இயேசுவே,
நமக்கு எல்லாம் இயேசுவே.
நமது உள்ளத்தில் நமது அரசராம் இறைவன் உறைவதால்
நாம் எப்போதும் அவரது பிரசன்னத்தில்தான் வாழ்கிறோம்.
அவரது அரசு ஆன்மீக அரசாகையால் அவர் நமது லௌகீக காரியங்களை விட ஆன்மீக காரியங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.
ஆன்மீகத்துக்காக லௌகீகத்தை நாம் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
நமக்கு முன்மாதிரியாக
நமது அரசரே நமது பாவங்களுக்குப் பரிகாரமாக
தன்னையே உயிர்த்தியாகம் செய்ததை
நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
நாம் பேரின்பம் நிறைந்த நித்திய வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக
துன்பப்பட வேண்டும் என்பதற்காகவே மனுவுரு எடுத்தவர் நம் அரசர் என்பதையும் மறந்து விடக்கூடாது.
நமது ஆன்மீக நலன் ஒன்றையே சதா நினைத்துக் கொண்டிருப்பவர் நம் அரசர் என்பது நமது நினைவில் எப்போதும் இருக்க வேண்டும்.
வாழ்க்கை என்றால் உணவு வேண்டும்,
ஆன்மீக வாழ்க்கை என்றால் ஆன்மீக உணவு வேண்டும்.
நமது ஆன்மீக அரசர் ஆகிய ஆண்டவர் இயேசு நமது ஆன்மீக வாழ்விற்கான உணவாக தன்னையே,
தனது உடலையும் இரத்தத்தையும்
அளிக்கிறார்.
குழந்தையைப் பெற்ற தாய் தன் பாலை ஊட்டி வளர்க்கிறாள்.
ஆனால் இயேசு நமது ஆன்மீக உணவாக தன்னையே ஊட்டி வளர்க்கிறார்.
தாயினும் மேலான அன்பு.
உலக அரசர் தன் அரண்மனையில் இருந்துகொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருப்பார்.
ஆனால் நமது அரசர் நமக்குள்ளேயே இருப்பதால் நாம் எங்கு சென்றாலும் நம்முடன் வருகிறார்.
என்ன செய்தாலும் நம்மோடு இருக்கிறார்.
தனது அருள் வரங்களால் நமக்கு உதவி செய்து கொண்டே சதா நம்மோடு இருக்கிறார்.
நமது உயிர் நம்மோடு இருப்பது போல
ஆன்மீக உயிராகிய இயேசுவும் எப்போதும்
இரவும் பகலும்,
நாம் தூங்கும் போது கூட நம்மோடிருக்கிறார்.
இயேசுவை அரசராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறையரசு இருக்கிறது.
எல்லோருடைய உள்ளத்திலும் இருப்பது ஒரே இறையரசு தான்.
ஆகவே நாம் அனைவரும் இறை அரசால் இணைக்க படுகிறோம்.
அரசர் எவ்வழி, குடிமக்கள் அவ்வழி.
இயேசு எப்படி தன் வாழ்நாளில் சென்ற இடமெல்லாம் சேவை செய்து கொண்டு சென்றாரோ
அதுபோல நாமும் செல்லும் இடமெல்லாம் சேவை செய்வோம்.
நாம் யாருக்குச் சேவை செய்தாலும் அவர்கள் உள்ளத்தை ஆளும் இயேசுவுக்கே சேவை செய்கிறோம்.
பிறர் பணியின் மற்றொரு பெயர் இறைப்பணி.
ஏனெனில் எல்லோரும் ஒரே இறைவனின் மக்களே,
ஒரே அரசரின் குடிமக்களே.
நம் எல்லோரின் ஆன்மாவிலும் ஓடுவது ஒரே இறைவனின் அருள் இரத்தமே.
எல்லோரும் இணைந்து வாழ்வோம் இறையரசில்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment