Thursday, February 27, 2020

"இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் நாளிலும் உங்கள் விருப்பத்தையே தேடுகிறீர்கள்.(இசை. 58:3)

"இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் நாளிலும் உங்கள் விருப்பத்தையே தேடுகிறீர்கள்.(இசை. 58:3)
   ******************************
"ஆண்டவரே! எனக்காக இரண்டு நிமிடம் ஒதுக்க முடியுமா?"

"நித்திய காலமாகவே உன் நினைவாகவே இருக்கும் என்னிடம் வந்து இரண்டு நிமிடம் கேட்கிறாய்!

இதைத்தான் Self reflection என்பார்கள்."

"அப்படீன்னா?"

"தன்னையே மற்றவர்களிடம் காண்பது. நீ என்னை மறந்திருந்து விட்டு உன்னைப் போலவே என்னையும் நினைக்கிறாய்.

நித்திய  காலமாய் நான் உன் நினைவாகத்தான் இருக்கிறேன்."

"அதெப்படி ஆண்டவரே, நான் பிறந்தே 83 ஆண்டுகள் ஆகின்றன. 

பிறக்கு முன் நானே இல்லை. இல்லாத என்னை எப்படி நினைத்திருக்க முடியும்?" 

"நீ குடியிருக்கும் வீட்டை எந்த ஆண்டு கட்டினாய்?"

"1961ல், "

"திடீரென்று ஒரு நாள் எழுந்து வீட்டைக் கட்டி முடித்தாயா? அல்லது .....?"

"இரண்டு ஆண்டுகளாக திட்டம் போட்டேன்."

" அதாவது நீ வீட்டைக் கட்டு முன்னேயே அது  உன் நினைவில் இருந்தது. அப்படித் தானே?"

"ஆண்டவரே, திட்ட வடிவில் இருந்தது."

"நீ பிறந்தது 1938ல். ஆனால் உன்னைப் பற்றி நித்திய காலமாய் திட்டமிட்டிருந்தேன்.

நீ எந்த நாட்டில், எந்த ஊரில், எந்த பெற்றோருக்கு, எப்போது பிறக்க வேண்டும் என்பது
எனது நித்திய காலத்திட்டம்.


நாளை உனக்கு என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியுமா?"

"தெரியாது."


"உன் எதிர்காலம் உனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும்."

". இப்போது நான் இரண்டு நிமிடம் கேட்டது தவக்காலத்தில் தவ முயற்சிகள் பற்றி உம்மோடு பேச,"

"சரி. சொல்லு."

"ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உண்ணா நோன்பு இருக்கிறோமே, எங்களுக்கு 
எவ்வளவு அருள் கிடைக்கும்?" 

"முதலில் எனது அருளை அளக்க உங்களிடம் அளவுகோல் கிடையாது.

இரண்டாவது இப்போது இருக்கும் நோன்புக்கு ஆறுதல் அருள்தான் கிடைக்கும்.

போட்டியில் கலந்து கொள்வோர் எல்லோருக்கும் நீங்கள் ஆறுதல் பரிசு கொடுப்பது மாதிரி."

"ஏன் ஆண்டவரே, நன்றாகத்தானே இருக்கிறோம்.

ஒரு நேரம் மட்டும்தான் முழு உணவு சாப்பிடுகிறோம். 

மற்ற நேரங்களில் எதுவுமே சாப்பிடுவது இல்லையே!

 எங்களை நாங்களே ஒடுக்கியும் , நீர் அதை ஏன் கண்டு கொள்வதில்லை?"

"ஒரு நாளைக்கு மூன்று நேரமும், மாலை சிற்றுண்டியும், அப்பப்போ tea யும் சாபபிட எவ்வளவு செலவாகும்?"

"ஒரு முந்நூறு ரூபாய்  ஆகும்."

"ஒரு வேளை உணவுக்கு நூறு ரூபாய் போக மீதி இரு நூறு ரூபாய் உனக்கு மிச்சம்."

"ஆமா."

"அதை என்ன செய்வாய்?"

"அது என்னிடம்தான் இருக்கும்.".

"அதாவது சாப்பாடு வடிவில் வயிற்றுக்குள் இருப்பதற்குப் பதில் ரூபாய் வடிவில் உனது purse ல் இருக்கும். அப்படித்தானே."

"ஆமா, ஆண்டவரே."

"அதைக் கொண்டு என்ன செய்வாய்?"

"மற்ற சமயங்களில் செலவழிப்பேன்."

." நான் சொல்லட்டுமா? 

தவக்காலத்தில் மிச்சம் பிடித்து அந்தக் காசைக் கொண்டு ஈஸ்டர் அன்று மட்டன் பிரியாணி தயாரித்துச் சாப்பிடுவாய். சரியா?"

"ஆண்டவரே, மட்டன் பிரியாணி சாப்பிடுவது தப்பா?"

"பிரியாணி சாப்பிடுவது தப்பில்லை. நோன்பிருந்து மிச்சம் பிடித்த காசைக் கொண்டு மற்றவர்கட்கு  உதவி செய்தால் எனக்குப் பிடிக்கும்.

மற்றவர்கட்கு உதவ வேண்டும் என்பது எனது விருப்பம்.

நீ  உண்ணா நோன்பிருக்கும் நாளிலும் உன்  விருப்பத்தையே தேடுகிறாய்.
 

நீயே மிச்சம் பிடித்து அதை நீயே சாப்பிட்டு விட்டால்

உன் வயிறு நிறையும்.

ஆன்மா நிறைய வேண்டுமானால் அயலானுக்கு உதவ வேண்டும்.

பசித்திருப்பவனுக்கு உன் அப்பத்தைப் பகிர்ந்து கொடு.

 ஏழைகளுக்கும் அந்நியருக்கும் உன் வீட்டில் தங்குவதற்கு இடங்கொடு.

 ஆடையில்லாதவனைக் கண்டால் அவனைப் போர்த்து.

 யாரையும் அவமதிக்காதே. இதுதான்  நான்விரும்பும் மேலான நோன்பு.


 உண்ணா நோன்பிருக்கும் போது, மற்றவர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டால். உன் நோன்பினால் என்ன பலன்?

நான் உன்னைப் படைத்ததின் நோக்கமே என்னையும் உன் அயலானையும் அன்பு செய்வதற்காகத்தான்.

பிறர் அன்புக்கு உதவாத நோன்பு நோன்பே இல்லை



நீ உன்னையே  வதைத்துக் கொள்வதில்   நோன்பு இல்லை.

கோணி ஆடையை உடுத்தி , சாம்பலில் உட்காருவதில்  நோன்பு இல்லை.


ஒடுக்கப்பட்டவர்களை உரிமை மக்களாய் வாழச் செய்வதில் தான் உண்மையான நோன்பு இருக்றது."

"அப்போ உண்ணா நோன்பு  இருப்பது உண்மையான நோன்பு இல்லையா?"


"வாழைப்பழம் பார்த்திருக்கியா?"

"பார்த்திருக்கேன். ''

"சாப்பிட்டிருக்கியா "

"சாப்பிட்டிருக்கேன்.".

"முழு வாழைப்பழதில தொலி, உள்ளிருக்கும் பழம் என இரண்டு பகுதி ......."

"ஆண்டவரே, புரிஞ்சிக்கிட்டேன்.

தொலிக்கு உள்ள பழம் இருக்கு. ஆனால் பழம் இல்லாம தொலியால எந்த பயனும் இல்லை.

அதே போல் பிறகுதவியும், பட்டினியும் சேர்ந்து இருந்தால்தான் நோன்பு.

பிறருதவி இல்லாம பட்டினி மட்டும் இருந்தால்,

பழம் இல்லாத தொலி மாதிரிதான், ஒரு பயனும் இல்லை."

"நீ உண்ணா நோன்பிருக்கும் போது, எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

 உன் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்தால் 

நீ இருப்பது நோன்பு அல்ல, வெறும் பட்டினிதான்.

அதனால் ஆன்மாவிற்கு ஒரு பயனும் இல்லை."

நமது ஒவ்வொரு செயலும் இறைச் சித்தத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.

இறைச் சித்தத்தை நிறை வேற்றாமல் நாம் வாழ்ந்தும் பயனில்லை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment