Wednesday, February 26, 2020

"உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்(யோவேல். 2.13)"

"உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்
(யோவேல். 2.13)"
*****  ****  ****** *****     ******
விபசாயி தனது சாதாரண உடையை அவிழ்த்து வைத்துவிட்டு , 

வெறும் கோவணத்தை மட்டும் அணிந்து கொண்டு வயல் சகதிக்குள் இறங்குவது போல,

நாம் ஆடம்பரத்தை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு 

ஒறுத்தல் முயற்சிகளுடன் தவக்காலத்திற்குள் நுழைந்துள்ளோம்.

விபசாயியைப் பொறுத்தமட்டில்

வயலுக்குள் இறங்க வேண்டியது உடை அல்ல. அவனது உடல்.
 
ஆன்மீகத்தைச் சார்ந்த தவத்தைப் பொறுத்த  மட்டில்

 முக்கிய பங்கு வகிப்பது ஆன்மா,

உடல் அல்ல.


தவம் செய்யும் காலம் தவக்காலம்.

தவம் என்றால் என்ன?

அக்காலத்தில் முனிவர்கள் ஆடம்பரத்தால் அலைமோதிக் கொண்டிருக்கும் சமூகத்தை விட்டு விட்டு,

மனித நடமாட்டம் அற்ற காட்டிற்குள் சென்று,

 தங்கள் ஐம்பொறிகளையும் அடக்கி 

ஆன்மாவை ஆண்டவரோடு ஒரு நிலைப் படுத்துவதையே தவம் என்றார்கள்.

சுருக்கமாகச் சொல்வதானால் புற வாழ்வை விடுத்து விட்டு, ஆண்டவரோடு ஒன்றிக்க,

அக வாழ்விற்குள் நுழைவதே தவம்.

ரத்தின சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 

அகமும், ஆண்டவரும் இணைவதுதான் தவம்.

தவத்தில் புறத்திற்கு வேலை இல்லை, முழு வேலையும் அகத்திற்குத்தான்.

அதனால்தான் இறை வார்த்தை சொல்கிறது,

"உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்."

தவத்தில் ஈடுபட வேண்டியது நமது 

உடைகளல்ல, (புறம்)

இதயங்களே. (அகம்)

இறைவன் நம்மைத் தனது சாயலாகப் படைத்தார்.

நமது உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது.

நமது ஆன்மா இறைவனது உயிர் மூச்சு.

இறைவனது சாயலைப்
 பெற்றிருப்பது நம்முடைய ஆன்மா.

நாம் என்றாலே நமது ஆன்மாதான்.

நமது ஆன்மாவுடன்தான் இறைவன் தனது பண்புகளைப் பகிர்ந்து கொண்டார். 


நாம் செய்யும் பாவங்கள் நமது ஆன்மாவில் உள்ள இறைவனின்  சாயலைப் பாதிக்கின்றன.

Our sins damage God's image in us.

ஆகவே நமது ஆன்மாதான் தான் செய்த பாவங்களுக்கு தவம் மூலம் பரிகாரம் செய்ய வேண்டும்.

அக்காலத்தில் காட்டிற்குள் சென்ற முனிவர்களைப் போல 

காட்டிற்குள் செல்லவேண்டாம்,

 சமூகத்தில் இருந்து கொண்டே தவம் செய்யலாம்.

புறத்தை விட அகத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

லூர்தும் செல்வமும் சேர்ந்து இருந்தாலும், 

லூர்து குற்றம் செய்தால் செல்வமா பரிகாரம் செய்வாள்? 

குற்றம் செய்தவர்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

 கூட இருப்பவர்கள் வேறு வழி இல்லாமல் சேர்ந்து அனுபவிப்பார்கள்.

பாவம் செய்வது ஆன்மாதான், உடல் அல்ல.

பாவம் அடங்கி இருப்பது உடலின் செயலில் அல்ல, 

ஆன்மாவின் நோக்கத்தில்.(intention)

ஒருவன் நம்மை அடிக்க வருகிறான். அடிபடாமல் தடுக்க அவனைத்  தள்ளிவிடுகிறோம்.

அவன் கீழே விழுந்ததில் கை முறிந்து விட்டது.

தள்ளிவிட்டதும், கை முறிந்ததும்   செயல்கள்.

தள்ளியதும், விழுந்ததும் உடல்.

ஆனால் தள்ளியதின் நோக்கம் விளத்தாட்டவோ  கையை முறிக்கவோ  அல்ல.

நாம் அடிபடாமல் தப்பிப்பதுதான் நோக்கம்.

விழுந்தது உடல்.

நோக்கம் ஆன்மாவுடையது.

நமது நோக்கம் சரியானது, ஆகவே நாம் குற்றம் செய்யவில்லை. 

சில சமயங்களில் நமது நோக்கம் பாவகரமானதாக இருக்கும். ஆனால் செயலே நடைபெற்றிருக்காது.

நமது நோக்கம் பாவகரமானதாக இருப்பதால் நமது நோக்கம் செயலில் நிறைவேறாவிட்டாலும் நாம் பாவம் செய்து விட்டோம்.

"நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும், ஏற்கெனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று."
(மத். 5:28)

பாவம் செய்தது ஆன்மாவாகையால் ஆன்மாதான் பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆன்மாவும் உடலும் சேர்ந்து இருப்பதால் 

உடல் வேறு வழி இன்றி ஆன்மாவின் பரிகாரத்தில் பங்கு எடுக்க வேண்டியிருக்கிறது.

ஆன்மா பாவம் செய்ய நமது உடலைப் பயன்படுத்திக் கொள்வதுபோல 

பரிகாரம் செய்யவும் நமது உடலைப் பயன்படுத்தி கொள்கிறது.

நோன்பு இருக்க வேண்டியது ஆன்மா.

அதற்காக ஆன்மா தனது உடலை பயன்படுத்திக்கொள்கிறது.

ஆனால் நோன்பு இருக்க உடலைப் பயன்படுத்திவிட்டு

 அது  கெட்ட எண்ணங்களில் சுற்றித் திரிந்தால்

 அது நோன்பு இருக்கவில்லை.

இது தான் இதயங்களைக் கிழித்துக் கொள்ளாமல் 

ஆடையை மட்டும் கிழிப்பதைப் போன்றது.

நமது உள்ளம் தூய்மையாய் இருந்தால் மட்டுமே நமது தவ முயற்சிகளுக்குப் பலன் உண்டு.

 அல்லது அவை வீண்.

ஒருசந்தி நாட்களில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு

 வாசிக்கக் கூடாத அசிங்கமான புத்தகங்களை வாசித்து கொண்டிருந்தால் அவனது ஒரு சந்தி வேஸ்ட்.

பாவ வாழ்க்கை வாழ்பவன் மனம் திரும்பி

 புனித வாழ்க்கைக்கு திரும்பினால் மட்டுமே

 அவனது தவ முயற்சிகள் ஆன்மாவிற்குப் பலன் தரும்.

ஒரு லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு 

எத்தனை சிலுவைப் பாதைகள் செய்தாலும் வேஸ்ட்.

மனதில் யாரைக் கெடுக்கலாம் என்று திட்டங்களை தீட்டி கொண்டு எத்தனை ஜெப மாலைகளை உருட்டினாலும் வேஸ்ட்.

வீட்டில் மனைவியைக் கொடுமை படுத்துவிட்டு அதற்காக கொஞ்சம் கூட வருந்தாமல்  காணும் திருப்பலியும் கலந்துகொள்ளும் திருவிருந்தும் வேஸ்ட்.

இப்படிப்பட்டவர்கள் உள்ளத்தை பசாசிடம் ஒப்படைத்து விட்டு, 

உடலை மட்டும் இயேசுவுக்குக் கொடுக்க எண்ணுகிறார்கள்.

நமது உடலை காப்பாற்றவா இறை  மகன் மனிதன் ஆனார்?

 ஆண்டவருக்கு வேண்டியது நமது உள்ளம்,

 மண்ணுக்குள் போகக்கூடிய உடல் அல்ல.
_

யாராவது நிலக்கடலையை உடைத்து பருப்பை மண்ணில் போட்டுவிட்டு 

வெளியே கொட்டவேண்டிய   கூட்டைத் தின்பார்களா?

வாழைப்பழத்தை உறித்து தோலைத் தின்றுவிட்டு பழத்தைக் குப்பையில் போடுவார்களா?

கரும்பை பிரிந்து சாற்றை வெளியில் கொட்டிவிட்டு,  சக்கையை மட்டும் சாப்பிடுவார்களா?

மனிதன் மட்டும் ஏன்  தன் ஆன்மாவை ஒதுக்கி வைத்துவிட்டு 

உடலை மட்டும் கொண்டாடிக் கொண்டிருக்கிறான்?

ஏன் இருதயத்தைக் கவனியாமல்

உடை அழகைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிக்கிறான்?


"நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப்போல முகவாட்டமாய் இருக்கவேண்டாம்." 

நோன்பு இருக்கும்போது நமது வயிற்றைத்தான் பட்டினி போடுகிறோம்.

ஆனால் கடவுள் பார்ப்பது நமது வயிற்றை அல்ல.

நாம் என்ன மனநிலையுடன் வயிற்றைப் பட்டினி போடுகிறோம் என்பதைத்தான்.

நமது மனநிலை சரியாக இல்லாவிட்டால் வயிறு பட்டினி கிடந்தும் பயனில்லை.

ஆகவே முதலில் மனம் திரும்புவோம்.

 நமது இருதயத்தை தூய்மை படுத்துவோம் 

தூய்மையான இருதயத்தோடு தவ முயற்சிகளை செய்வோம்.

தவ முயற்சிகளில் சில:

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment