Monday, February 17, 2020

"அவர் நீரும் நெருப்பும் உன் முன்பாக வைத்தார். எது வேண்டுமோ, உன் கையை நீட்டு."(சீராக். 15:17)

"அவர் நீரும் நெருப்பும் உன் முன்பாக வைத்தார். எது வேண்டுமோ, உன் கையை நீட்டு."(சீராக். 15:17)
******************************.

"கடவுள் ஆதியில் மனிதனைப் படைத்து, அவன் தன் விருப்பத்தின்படியே நடக்க உரிமை கொடுத்தார்". 14

"ஆனால், தம் கட்டளைகளையும் சட்டங்களையும் கொடுத்தார்." 15


"கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் அவருக்கு நித்தியத்திற்கும் விருப்பமாய் நடக்கவும் உனக்கு மனமுண்டானால் அவைகள் உன்னைக் காப்பாற்றும்." 16

"மனிதனுக்கு முன்பாக வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும் உண்டு. அவன் எதைத் தேர்ந்து கொள்வானோ அதை அடைவான்."18


இறைவன் நம்மைத் தன் தமது சாயலாகப் படைத்தார்.

தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகளில் ஒன்றுதான் சிந்தனை, செயல் சுதந்திரம்.

எதைச் சிந்திக்க வேண்டும்,

அதை எப்படிச் செய்ய வேண்டும் எனபதைத் தெரிவு செய்ய நமக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். 
(அவன் தன் விருப்பத்தின்படியே நடக்க உரிமை கொடுத்தார்)



கடவுள் தனது விருப்பம்போல் செயலாற்ற அவருக்கு முழுச் சுதந்திரம் உண்டு.

அவருடைய சுதந்திரத்தில் தலையிட யாராலும் முடியாது.

ஆனால் அவருடைய சுதந்தரத்துக்கும், நமது சுதந்தித்திற்கும் பாரதூர வித்தியாசம் உண்டு.

அவர் இயல்பாகவே சுதந்திரம்   உள்ளவர்.

அவருக்கு சுதந்திரத்தை யாரும் பரிசாக கொடுக்கவில்லை.

அவருக்கு கட்டளை இட யாரும் இல்லை.

 மீறுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆனால் நமக்குக் கடவுளே கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார்.

கட்டளைகளின்படி நடக்கவா, வேண்டாமா என்பதைத் 
தேர்வு செய்ய நமக்குச் சுதந்திரத்தைத்  தந்திருக்கிறார்.

இந்தச் சுதந்திரத்தில் கடவுள் தலையிடுவதில்லை.

(மனிதனுக்கு முன்பாக வாழ்வும் சாவும், நன்மையும்  தீமையும் உண்டு. அவன் எதைத் தேர்ந்து கொள்வானோ அதை அடைவான். 18)

கட்டளைகளைக்  கடைப்பிடித்தால் நித்திய வாழ்வு.  இன்றேல் நித்திய சாவு.

தீர்மானிக்க வேண்டியது நாம் தான்.

நமக்குத் தோன்றும்,

கடவுள் சுதந்திரத்தை தராமல் இருந்திருக்கலாம். கட்டளைகளையும் தராமல் இருந்திருக்கலாம்,

என்று.

உண்மைதான். சுதந்தரத்தையும், கட்டளைகளையும் தராமல் இருந்திருந்தால் பாவம் இருந்திருக்காது.

கடவுளும் மனிதனாய்ப் பிறந்து பாடுபட  வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.

ஆனால், 

சுதந்திரமும், கட்டளைகளும் இல்லாவிட்டால் நம்மால் பாவமும் செய்ய முடியாது,  புண்ணியமும் செய்ய முடியாது.

 புண்ணியத்திற்கான பரிசு தான் மோட்சம்.

புண்ணியமே செய்ய முடியாவிட்டால்? 


கடவுள் நம்மைப் படைத்ததன் நோக்கமே விண்ணக வாழ்வைத் தந்து நம்மை நித்திய காலமாக அவரோடு பேரின்பத்தில் வாழ வைக்கவே.

அவர்  சர்வ சுதந்திரம் உள்ளவர்.

அவர் நினைத்திருந்தால் நம்மை படைத்து நேரடியாக விண்ணக பேரின்ப வாழ்வை தந்திருக்கலாம்.

ஆனால் அவ அப்படி நினைக்கவில்லை.

விண்ணக வாழ்வை சுதந்திரமாக  , நமது முயற்சியால்   சம்பாதிக்க வேண்டும் என்பதே அவரது திட்டம்.

இது அவர் முழுச் சுதந்திரத்தோடு எடுத்த திட்டம்.

அவரால் படைக்கப் பட்டவர்கள் என்பதால் நாம் அதை ஏற்று தான் ஆகவேண்டும்.

 நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமது சுதந்திரத்தை விண்ணக வாழ்வை ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு பயன் படுத்துவது தான்.

நித்திய வாழ்வை அடைய வேண்டுமென்றால் அவர் தந்துள்ள கட்டளைகளை அனுசரிக்க வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் சேர்ந்துவிட்டால் பள்ளி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆகிறோம். 

பள்ளி இறுதியில் வெற்றியோடு வெளியேற விரும்புகிறவர்கள் 

பாடங்களைக் கற்பதோடு, இறுதித் தேர்விலும் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வில்  வெற்றி பெற வேண்டும்.

வெற்றி பெறாதவர்கள் தோற்றவர்கள்.

வெற்றிக்கும் தோல்விக்கும் மத்தியில் நடுநிலை என்று இல்லை.

அதேபோன்று, நித்திய வாழ்வு என்ற வெற்றியை அடைய நடைபெறும் தேர்வுதான் இவ்வுலக வாழ்க்கை.


நித்திய வாழ்வு என்ற வெற்றி கிட்டாவிட்டால்

நித்திய சாவு என்ற தோல்வியைத் தவிர்க்க முடியாது.

வாழ்வுக்கும், சாவுக்கும் இடையில் நடுநிலை என்று இல்லை.

ஆகவே கடவுள் அப்படிச் செய்திருக்கலாமே,

இப்படிச் செய்திருக்கலாமே 

என்ற பயனற்ற கேள்விகளை கேட்பதைத் தவிர்த்து விட்டு,

அவர் தந்த சுதந்திரத்துக்கு நன்றி கூறி,

அதை அவர் விருப்பப்படிவே பயன்படுத்தி.

அதாவது, அவரது கட்டளை அனுசரித்து நடந்து

நித்திய வாழ்வை அடைவோம்.

 கடவுளுடைய சுதந்திரத்தில் நாம் தலையிட முடியாது.

அவர் நமக்கு சுதந்திரத்தைத் தந்திருக்கிறார்.

தந்ததை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

கடவுள் கோழிக்கு இரண்டு கால்களையும் மாட்டுக்கு நான்கு கால்களையும் கொடுத்திருக்கிறார்.

கோழி, "நமக்கு ஏன் இரண்டு கால்கள் ?
 மாட்டுக்கு ஏன் நான்கு கால்கள்?" 

என்று கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, இரண்டு கால்களை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்த வேண்டும்.

நாமும் கடவுள் தந்த  சுதந்திரத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்த வேண்டும்.

கடவுள் நமது சுதந்திரத்தில் குறுக்கிட மாட்டார்.

 ஆனால் அதை சரியான முறையில் பயன்படுத்த 

உதவி கேட்டால் கட்டாயம் தருவார்,

 ஏனெனில் அவர் சர்வ வல்லவர்.

"இறைவா,  நான் 
 கேட்காமலேயே நீர் தந்துவிட்ட சுதந்திரத்தை நான் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு நீர்தான் உமது அருள் வரங்களால் உதவி செய்ய வேண்டும்"

 என்று இறைவனை நாம் மன்றாட வேண்டும்.

நமது மன்றாட்டுக்கு அவர் கட்டாயம் செவி
மடுப்பார்.

இறைவனின் அருள்வர உதவியோடு 

நாம் பெற்ற சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்தி

 விண்ணக வாழ்வை சுதந்தரிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment