பத்து பைசா விசுவாசம்.
******************************
நான் மூன்றாவது வகுப்பு ஆசிரியராக இருந்த போது,
கிராம நிர்வாகம் பற்றிய பாடம் நடத்திக் கொண்டிருந்த போது,
"கிராமத்தை நிர்வகிப்பவர் கிராம முன்சீப் எனப்படுவார்.
இவரது முக்கியமான பணி நிலவரி வசூலிப்பது.
நீங்களே பார்த்திருப்பீர்கள்
நிலவரியைக் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கட்டாவிட்டால்
வீட்டிலுள்ள சட்டி, பெட்டி, தட்டு முட்டு சாமான்களை எல்லாம் அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.
வரி கட்டிய பிறகு திரும்ப கொடுப்பார்கள்."
ஒரு பையன்,
"ஆமா சார், எங்கள் வீட்டிலிருந்து அப்படித்தான் நேற்று அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்."
காலாண்டுத் தேர்வு வந்தது.
Civics பாடத்தில் ஒரு கேள்வி.
"கிராம முன்சீபின் பணிகள் யாவை?"
அநேக மாணவர்களின் பதில்,
"கிராம முன்சீபின் பணி வீடுவீடாகச் சென்று சட்டி, பானை பொறுக்குவது ஆகும்."
பதிலை வாசித்த எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால்,
பேப்பர் கொடுக்கும் போது ஒரு பையன் வந்து,
"சார், நீங்க சொன்னதத் தானே எழுதியிருக்கேன், தப்புப் போட்டிருக்கீங்க?"
"நான் இதை மட்டுமா சொன்னேன்?"
"அப்பவும் பாதி ரைட் தானே, சார், பாதி மார்க் போடுங்க, சார்."
"ஏண்டா, கிணற்றைத் தாண்டுபவன் முழுக் கிணற்றையும் தாண்ட வேண்டும்.
பாதிக்கிணற்றை மட்டும் தாண்டினால் என்ன ஆவான்?''
." கிணற்றுக்குள் விழுவான்."
"நீயும் கிணற்றுக்குள்தான் விழுந்திருக்க. முதலில் வெளியே வா. போ."
பைபிள் வாசிக்கிற நமக்கும், இந்த மாணவனுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை.
அவன் பாடத்தை அரைகுறையாய்க் கவனித்தான்.
நாம் பைபிளை அரைகுறையாய் வாசிக்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தை கூட அரைகுறை தூக்கத்தில் தான் கேட்கிறோம்.
ஒரு நாள் ஒரு பையன் அன்றைய நற்செய்தி வாசகத்தை வாசித்துவிட்டு
என்னிடம் வந்து,
" சார், இயேசு சர்வ வல்லபர் என்றீர்கள்.
ஆனால் அவராலேயே புதுமைகள் எதுவும் செய்ய முடியவில்லையே!
பைபிளில்தான் எழுதி இருக்கிறது சார்."
"நீ சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா?
'நான் வள்ளுவர் வாக்கை அப்படியே பின்பற்றினேன். தேர்வில் zero தான் கிடைத்தது.'
'வள்ளுவர் என்ன சொன்னார்?'
'மறப்பது நன்று' என்று சொன்னார்.
நானும் அவர் வாக்குப்படி படித்ததை எல்லாம் மறந்துவிட்டு தேர்வு எழுத சென்றேன்."
.'ஏண்டா, குறளை முழுவதும் படிக்காமல் கடைசி இரண்டு வார்த்தைகளை மட்டும் படித்துவிட்டு தத்துவம் பேசுகிறாய்?
ஆனால் அந்த இரண்டு வார்த்தைகளை மட்டும் ஏன் மறக்காமல் வைத்திருக்கிறாய்?'
இப்படித்தான் இருக்கிறது நீ சொல்வதும்.
எதையும் முழுமையாக படிக்க வேண்டும்.
யானையின் படம் வரைய சொன்னால்
ஒரு காலை மட்டும் வரைந்துவிட்டு
' இதுதான் முழு யானை' என்று வாதாடக் கூடாது.
"அங்கே பிணியாளர் ஒருசிலர்மீது கைகளை வைத்துக் குணமாக்கியது தவிர வேறு ஒரு புதுமையும் செய்ய முடியவில்லை.
6 அவர்களுக்கு விசுவாசமில்லாததைக் கண்டு அவர் வியப்புற்றார்."
அவர்களுக்கு விசுவாசமில்லாததால்தான் அவர்களிடையே இயேசுவால்
புதுமை செய்ய முடியவில்லை."
"சரி. ஆனால் ஒரு புதுமையும் செய்ய முடியவில்லைதானே!"
"கிணற்றுக்குள் தண்ணீர் இருக்கிறது. ஆனால் உன்னால் தண்ணீர் எடுக்க முடியவில்லை. ஏன்?"
"வாளி இல்லை."
"விடைத்தாளில் நிறைய எழுதியிருக்கிறாய். ஆனால் ஆசிரியரால் மார்க் எதுவும் போட முடியவில்லை. ஏன்?"
"நான் எழுதியிருப்பது கேள்விக்குரிய பதில் இல்லை"
"இயேசுவால் புதுமை எதுவும் செய்ய முடியவில்லை. ஏன்?"
"மக்களிடையே விசுவாசம் இல்லை."
"இதோ பதிலைத்தான் சொல்லி விட்டாயே!"
இயேசு சர்வ வல்லபர்.
அவர் மனசு வைத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லை.
நாம் கேளாமலேயே நமக்கு நிறைய செய்திருக்கிறார்.
அவரை விசுவாசியாதவர்களைக் கூட பராமரித்து காப்பாற்றி வருகிறவர் அவரே.
கடவுளே இல்லை என்பவர்களுக்குக் கூட நல்ல உணவு உடை இருப்பிடம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் நாம் அவரிடம் கேட்டுப் பெறவேண்டுமென்றால்
நம்மிடம் அவர்மீது விசுவாசம் இருக்க வேண்டும்.
விசுவாசம் இல்லாமல் கேட்பது கிடைக்காது.
கண் இல்லாதவன் எதையும் பார்க்க முடியுமா?
நமது ஆன்மாவின் கண் விசுவாசம் தான்.
விசுவாசம் இல்லாமல் நமது ஆன்மா ஆன்மீக காரியங்கள் எதையும் அறிந்து கொள்ள முடியாது.
நம்மிடம் விசுவாசம் இருக்கிறதா?
பத்து பைசாவும் பணம் தான். பத்து கோடி ரூபாயும் பணம்தான்.
பணம் வைத்திருப்பவன்தான் பணக்காரன்.
ஆனால் பத்து பைசா மட்டும் வைத்திருப்பவன்? .
ஓட்டலுக்கு பத்து பைசாவுடன் போகிறோம்.
நம்முடன் 10,000 ரூபாயுடன் ஒருவன் வருகிறான்.
அவன் மட்டன் பிரியாணி வாங்கி சாப்பிடுகிறான். நாம் பத்து பைசாவை வைத்துக்கொண்டு என்ன வாங்க முடியும்?
என்னிடம் பைசா இருக்கிறது என்று சொல்லிக்கொள்ள முடியும். அவ்வளவுதான்.
நம்மிடம் உள்ள விசுவாசத்தின் கதையும் அதுதான்.
நாம் நம்மை விசுவாசிகள் என்று அழைத்துக் கொள்கிறோம்.
ஆனால் நம்மிடம் உள்ளதோ பத்து பைசா விசுவாசம் தான்.
அதை வைத்து மோட்சத்திற்கு போய் கடைசி இடத்தில் உட்கார்ந்து கொள்ளலாம்.
முதல் இடத்தில் உட்கார்ந்து இருப்பவர்களைப் பார்க்கலாம்.
அவர்கள் உண்மையிலேயே விசுவாசிகள்.
நாம் பேருக்கு விசுவாசிகள்.
பைபிளை அரைகுறையாக வாசிக்காமல், ஆழ்ந்து வாசித்தால் எப்படிப்பட்ட விசுவாசத்தை ஆண்டவர் எதிர்பார்க்கிறார் என்பது புரியும்.
நாள் முழுவதும் ஜெபித்து விட்டு,
மாலையில்,
" ஆண்டவரே இன்று முழுவதும் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒன்றுகூட கிடைக்கவில்லையே!
என்னிடம் என்ன குறையைக் கண்டு கண்டீர்?"
என்று கேட்டால் அவர் சொல்வார்,
"நீ சொல்லுவது அவன் 10 லட்சம் வைத்திருந்தான், ஒரு கார் வாங்கினான்.
இவன் 20 லட்சம் வைத்திருந்தான், ஒரு வீடு கட்டினான்.
அவன் 30,000 வைத்திருந்தான், ஒரு பைக் வாங்கினான்.
நான் ஒரே ஒரு ரூபாய் மட்டும் வைத்திருக்கிறேன் என்னால் ஒன்றும் வாங்க முடியவில்லையே!" என்று சொல்வது போல் இருக்கிறது.
மகனே, கேட்டது கிடைக்கவேண்டும் என்றால் உன்னிடம் விசுவாசம் இருக்க வேண்டும்.''
"என்னிடம்தான் விசுவாசம் இருக்கிறதே.
ஞானஸ்நானத்தின் போதே நீர்தானே விசுவாசத்தை இலவசமாக தந்தீர்.
அதை அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறேனே!"
"அதாவது நான் தந்த விசுவாசத்தை வளர்க்க ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. அப்படித்தானே?"
"நான் கோவிலுக்குப் போகிறேன். பூசை காண்கிறேன். நன்மை எடுக்கிறேன். கட்டளைகளை அனுசரிக்கிறேன். வேறு என்ன செய்ய வேண்டும்?"
"ஒவ்வொரு நாளும் பலமுறை விசுவசிக்கிறேன் என்று கூறுகிறாய்.
ஆனால் உனது வார்த்தைகள் நாவிலிருந்து வருகின்றன.
உள்ளத்தில் இருந்து வரவில்லை.
உள்ளத்தில் இருக்கும் விசுவாசம் சொல்லாக,செயலாக வெளி வர வேண்டும்.
நான் உனது உள்ளம் என்னும் கோவிலில் இருப்பதாக சொல்லுகிறாய். அதை உணர்ந்து இருக்கிறாயா?"
"உணர்ந்து இருப்பது என்றால்?"
"உனக்கு மிகவும் வேண்டியவர்கள்
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, காதலி போன்றோர்கள் உன் அருகில் இருந்தால் எப்படி உணர்வாயோ
அதேபோல் நான் உன் உள்ளத்திலும், உன் அருகிலும் இருப்பதை உணர்ந்து இருக்கிறாயா?"
"அவர்கள் என் கண்ணுக்குத் தெரிவார்கள், தொட்டால் உணர்வார்கள், பேசினால் பேசுவார்கள்..."
"அவர்கள் எப்படி உனது ஊனக் கண்ணுக்கு தெரிகின்றார்களோ
அதேபோல நான் உனது விசுவாசக் கண்ணுக்கு தெரிய வேண்டும். நான் மௌனமாகப் பேசுவது உனது விசுவாசக் காதிற்குள் விழவேண்டும்."
"அப்படி ஒரு அனுபவமும் இதுவரை ஏற்பட்டது இல்லை.
எப்படி ஏற்படுத்துவது?"
"நீ உனது உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி, அதாவது வேறு எண்ணங்களை அகற்றிவிட்டு, என்னை மட்டும் தியானி.
தியானத்தின் போது 'என் விசுவாசத்தை அதிகப்படுத்தும், ஆண்டவரே' என்ற ஜெபத்தை தவிர வேறு எதுவும் சொல்லாதே.
இந்த தியானப் பயிற்சி நான் உனக்குள் இருப்பதை உணரச் செய்யும்.
நான் உனக்கு கொடுக்கும் அருள் அந்த உணர்வை அதிகப்படுத்தும்.
நான் எப்போதும் உனது அருகே இருப்பதை நீ உணர்ந்தால்
நான் காட்டும் வழி நடத்துதல் களையும் உணர்வாய்.
எப்போதும் எனது சன்னிதானத்தில் இருப்பாய்.
நான்தான் உனது உலகமாக மாறுவேன்.
எனக்காக அன்றி வேறு எதற்காகவும் வாழ மாட்டாய்.
உன் வாழ்வில் எது நடந்தாலும் எனது சித்தப்படியே நடக்கிறது என்பதை உணர்ந்து நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்வாய்.
உனது விசுவாசமும் அதிகமாகும், நம்பிக்கையும் அதிகமாகும், அன்பும் அதிகமாகும்.
உனது ஒவ்வொரு மூச்சும், அசைவும் எனக்காகத்தான் இருக்கும்.
எனக்காக எதையும் இழக்க தயாராகி விடுவாய்.
உனது விசுவாசத்தின் ஆழம் அதிகமாக அதிகமாக நமக்குள் ஐக்கியமும் அதிகமாகும்.
இத்தகைய ஐக்கிய நிலையில் புனிதர்கள் வாழ்ந்ததால்தான் அவர்கள் புதுமைகள் செய்யும் வரத்தைப் பெற்றார்கள்.
புதுமைகள் செய்ய முடிந்தால் தான் நீ புனிதன் என்று அர்த்தம் அல்ல.
வரம் நான் அளிப்பது.
எல்லோருக்கும் ஒரேவிதமான வரங்கள் அளிக்கப்படுவது இல்லை.
உனது ஐக்கிய நிலைக்கு ஏற்ப உனக்கு வரங்கள் அளிக்கப்படலாம்.
வரங்களைப் பெறுவதற்காக நீ புனிதம் ஆவது இல்லை.
வரங்களை அளிப்பதும் அளிக்காது இருப்பதும் எனது விருப்பம்.
எனது விருப்பத்தை நீ அப்படியே ஏற்றுக்கொள்வதில்தான் உனது ஐக்கியத்தின் அளவு இருக்கிறது.
நான் உனக்கு ஒன்றுமே தராவிட்டாலும் நீ என்னை எனக்காக நேசிக்க வேண்டும்.
அந்த நேசத்தின் அளவுதான் ஐக்கியத்தின் அளவு.
அந்த அளவை உணரத்தான் முடியும்.
என்னோடு முழுமையான ஐக்கியத்தைப் பெறுவது விண்ணகத்தில்தான்.
இவ்வுலகில் முழுமையான ஐக்கியத்தை நோக்கி நீ பயணிக்க வேண்டும்."
"நான் உங்களோடு முழுவதுமாக ஐக்கியமாய் இருக்கிறேன் என்பதை நான் எனது வாழ்வில் எப்படி கண்டுபிடிப்பது? ''
"இப்போது உனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருள்பெயர்?''
"இப்போது எனக்கு மிகவும் பிடித்தமான பொருள் எனது phone தான். "
"Suppose நான் உன்னிடம் அந்த phone ஐ கிணற்றுக்குள் எறி என்கிறேன்.
என்ன செய்வாய்.?"
"எனக்கு நீர் முக்கியமானால்
phone ஐ எறிந்து விடுவேன்.
phone முக்கியமானால் யோசிப்பேன்"
"யோசித்தால் நீ என்னை முக்கியமாக கருதவில்லை.
முக்கியமில்லாதவர்களோடு எப்படி ஐக்கியம் எப்படி இருக்கும்?
நீ எனக்காக உலகத்தை மட்டுமல்ல, உன்னையே இழக்க தயாராக இருக்க வேண்டும்.
அப்படி இழக்க தயாராக இருந்தால் என்னோடு ஐக்கியமாகி இருக்கிறாய்."
வாழ்வோம், நமக்காக அல்ல, இயேசுவுகாக.
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment