Monday, February 3, 2020

"என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான்."(அரு. 8:12) (தொடர்ச்சி)

"என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான்."
(அரு. 8:12)
                      (தொடர்ச்சி)
 ********************************


"அங்கு நாற்பது பகலும் நாற்பது இரவும் நோன்பிருந்தபின் பசியுற்றார்." (மத்4:2)

இயேசு பாவ மாசு மருவற்றவர்.

அவர் பாவம் அற்றவர் மட்டுமல்ல,

அவரால் பாவம் செய்யவே முடியாது.


ஒளியால் இருளைத் தர முடியுமா? 

இறைவனது விருப்பத்தை மீறுவதுதான் பாவம்.

அவரே அவர் விருப்பத்தை எப்படி மீறுவார்?

கடன் பெற்றவன்தான் பெற்ற கடனைத் திரும்ப கொடுக்க வேண்டும். 

கடனே  வாங்காதவன்  எதுவும் யாருக்கும் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

பாவம் செய்த நாம்தான் பாவ மன்னிப்பு பெற ஞானஸ்நானம் பெற வேண்டும்.

 பரிகாரமாக தவம் செய்ய வேண்டும்.

ஒறுத்தல் முயற்சிகள் செய்ய வேண்டும். 

ஆனால் பாவமே செய்யாதவர் ஏன் நமது பாவமூட்டையை அவர் சுமந்துகொண்டு ஞானஸ்நானம் பெற்று, நோன்பும் இருக்க வேண்டும்?

நமக்கு முன்மாதிரிகையாகத்தான்.

நாம் செய்யவேண்டிய பரிகாரத்தை எல்லாம் நமக்காக இயேசுவே செய்து விட்டாரே

 இனி நாம் ஏன் பரிகாரம் செய்ய வேண்டும் என்று எண்ணி விடக்கூடாது.

 ஆசிரியர் மாணவர்கள் எப்படி எழுத வேண்டும் என்று அவரே எழுதி காண்பிப்பார். 

''வாத்தியாரே எழுதிவிட்டாரே, இனி நாம் ஏன் எழுத வேண்டும்" என்று கூறும் மாணவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

பாவிகளோடு பாவியாய் கலந்து யோர்தான் நதிக்குள் இறங்கி ஞானஸ்நானம் பெற்றார். 

பின்னர் பாலைவனத்திற்குச் சென்று நாற்பது நாள் எதுவும் உண்ணாமல் நோன்பு இருந்தார்.

நாமும் அவரைப் பின்பற்றி நமது பாவங்களுக்கு பரிகாரமாக நோன்பு இருக்க வேண்டும்.

 நாம் நினைக்கிறோம், தவசு காலத்தில் மட்டும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு சந்தி  அனுசரித்தால் போதுமென்று.

 ஆனால் ஆண்டு முழுவதும் தான் பாவம் செய்கிறோம்.

தினமும் வயலில் வேலை செய்பவர்கள் தினமும் வேலை முடிந்து குளிக்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தால் தினசரி அழுக்கு எப்படிப் போகும்?

தவசு காலத்து வெள்ளிக்கிழமைகளில் உண்ணாநோன்பு இருப்பதுபோல

 ஆண்டு முழுவதும் இருக்க முடியாவிட்டாலும் 

நமது நாக்கை கொஞ்சம் அடக்க நம்மால் முடியும்.

அதற்கு ருசியுள்ள சாப்பாடு போடுவதை நிறுத்திவிட்டு

 சத்துள்ள சாப்பாட்டை மட்டும் சாப்பிடுவதே பெரிய தவ முயற்சிதான்.

நம்மில் அநேகர் ருசிக்காக மட்டுமே சாப்பிடுகின்றனர்.

ருசிக்காக சாப்பிடுவதால் வேண்டாத நோய்களெல்லாம் நமது உடலில் தொற்றிக் கொள்கின்றன.

ருசியைக் கொடுக்கும் பொருள்களில் பெரும்பாலானவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செமிக்கல்களே.

நாற்பது நாட்கள் உண்ணாநோன்பு இருந்தபின் பசாசினால் சோதிக்கப்பட்டார்.

தன்னைச் சோதிக்கச் சாத்தானுக்கு கடவுள் ஏன் அனுமதி கொடுத்தார்?

நாம் சோதனையைக் கண்டு பயப்படாதிருக்கவே அவர் தன்னையே சோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.

நமது வீடுகளில் நமக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் நமது அப்பா நம்மை பார்த்து,

"மகனே, நானே இதைவிட பெரிய கஷ்டங்களை எல்லாம் சந்தித்து வென்று வந்திருக்கிறேன்.

 நீயும் வெற்றி பெறுவாய்,

 கஷ்டங்களை நினைத்து கவலைப்படாமல் வெற்றி நடை போடு." என்று ஆறுதல் சொல்லுவார்.

நமக்கு சோதனைகள் வந்தால் நாம் இயேசுவை நினைத்துக் கொள்வோம்.

"இயேசுவிற்கே சோதனை வந்திருக்கிறது. நமக்கு வருவது பெரிய காரியம் அல்ல. 

சோதனையை  வென்ற இயேசு நம்மோடு இருக்கிறார்.

 அவர் உதவியோடு நாம் எவ்வளவு பெரிய சோதனை  வந்தாலும் அதை எளிதில் வென்றுவிடலாம் "

என்ற நம்பிக்கையை நமக்கு ஊட்டவே அவர்  தனக்கு சோதனை வர அனுமதித்தார்.

அது மட்டுமல்ல,

 சாத்தானால்அவருக்கு கொடுக்கப்பட்ட சோதனைகள் மூலம் 

நமக்கு மிக முக்கிய பாடங்கள் கற்பிக்கவே 
குறிப்பிட்ட சோதனைகளை வரவிட்டார். 

அவர் பொதுவாழ்வில் நுழைய ஆரம்பிக்கும்போதுதான் சோதனைகள் வருகின்றன.

பொதுவாழ்வில் நுழைபவர்களுக்கு என்னென்ன சோதனைகள் வரும்,

 அவற்றை எப்படி வெல்ல வேண்டும் 

என்று பாடம் கற்பிக்கவும்,

 பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு என்னென்ன ஆசைகள் இருக்கக் கூடாது என்று நமக்குச் சொல்லவுமே சோதனைகளை வர விட்டார்.

முதல் சோதனை உணவு பற்றியது.

இரண்டாவது சோதனை அதிகாரம், புகழ் மேல் உள்ள ஆசையைப் பற்றியது.

மூன்றாவது சோதனை வீண் பெருமை பற்றியது.

 பொதுவாழ்வில் ஈடுபடுவோர்

 உணவு, அதோடு சம்பந்தப்பட்ட உடல் சுகம்

அதிகாரம், அதனால் வரும் புகழ்,

வீண் பெருமை

ஆகியவற்றின் மீது ஆசைப் படக்கூடாது.


அவற்றின் மீது ஆசையுள்ள   பொது வாழ்வு பொது சேவைக்கான வாழ்வாக இருக்காது.

சுயநலனுக்கான வாழ்வாகத்தான் இருக்கும். 

பசி நீங்க கல்லை அப்பமாக மாற்ற சோதித்தது சாத்தான.

ஆனால் ஆண்டவர்,

"மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று

கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான்."

என்று பதில் அளிக்கிறார்..

இதனால் அவர் நமக்குப் புகட்டும் பாடம்,

"பொதுவாழ்வுக்கு வருவோர் இறைவார்த்தையைத்தான் வாழ்வாக்க வேண்டும்,

இறைவார்த்தைதான் பொது வாழ்வின் உணவு.

 இறைவார்த்தைதான் நமது வாழ்வின் உயிர்.

அப்பத்தினால் வாழ்பவன் இவ்வுலகிற்காக வாழ்கிறான்.
 
இறைவார்த்தையால் வாழ்பவன் விண்ணுலகிற்காக வாழ்கிறான்.

விண்ணுலகிற்காக வாழ்பவன்தான் பொதுவாழ்வில் ஈடுபட முடியும்."

இது முதல் சோதனையிலிருந்து நாம் படிக்கும் பாடம்.

இரண்டாவது சோதனையில் சாத்தான்.


"நீர்    என்னைத்  தெண்டனிட்டு  வணங்கினால்

உலகின்மேல் அதிகாரத்தையும்,  மகிமையையும் உமக்குக் கொடுப்பேன்.''

என்றது.

அதற்கு ஆண்டவர்,

"கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரைமட்டுமே ஆராதிப்பாயாக என்று எழுதியிருக்கிறது," என்றார்.

நாம் கற்க வேண்டிய பாடம்,

நாம் உலக அதிகாரத்தின் மேலும், புகழ் மீதும் ஆசைப்பட்டு சாத்தானின் சோதனைகளுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

மூன்றாவது சோதனையில் சாத்தான் ஆண்டவரிடம்,

"நீர் கடவுளின் மகனானால் இங்கிருந்து கீழேகுதியும்."

என்றது.


கோயிலில் முகட்டிலிருந்து கீழே குதிப்பது பெரிய சாதனைதான்.

ஆனால், பயன்?

மிக உயரத்திலிருந்து எவ்வித காயமும் இல்லாமல் குதித்துவிட்ட வீண் பெருமை கிடைக்கும்! பயனற்ற பெருமை!

பொது வாழ்வில் ஈடுபடுவோர் வெறும் பெருமைக்காகப் பயனற்ற சாதனைகள் புரிவதில் நேரத்தை வீணடிக்கக் கூடாது.

உதாரணத்திற்கு,

தகப்பன் தன்னுடைய சம்பாத்தியத்தில் தனது பிள்ளைகளைப் படிக்க வைத்து வாழ்க்கையின் உயர்ந்த இடத்தில் அமர்த்துவது பயனுள்ள சாதனை.

அதனை விட்டுவிட்டு, பிள்ளைகளின் வாழ்க்கைக்காக ஒன்றும் செய்யாமல் தாங்கள் தங்க 
பலமாடி வீடு கட்டினால் என்ன பயன்?

வாழவேண்டியது வீடல்ல, பிள்ளைகள்!

புதிய புதிய ஆலயங்களைக் கட்டுவதை விட ஆலயத்துக்கு வரவேண்டிய சபையைக் கட்டி எழுப்புவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவற்றை எல்லாம் பொது வாழ்வுக்கு வருவோர் கவனிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 

தான் பொதுவாழ்வில் நுழையப் போகும்போது இந்த சோதனைகளை வரவிட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் 

சாத்தான் சோதிக்கக்கூட பைபிள் வசனங்களைப் பயன்படுத்துவதுதான்,

நமது 'பைபிள் மட்டும் போதும்' சகோதரர்களைப் போல!

"And do not choose to call anyone on earth your father. For One is your Father, who is in heaven." (Mathth. 23:9)

ஒரு சகோதரருக்கு நாம் நமது குருக்களை Father என்று அழைப்பது பிடிக்கவில்லை.

தனக்கு உதவ மேற்கூறப்பட்ட பைபிள் வசனத்தை அழைக்கிறார்.

5"For there is one God, and one mediator of God and of men, the man Christ Jesus,"
(1 Timothy 2:5 )

நாம் நமது அன்னையையும், புனிதர்களையும் உதவிக்கு அழைப்பது பிடிக்காத ஒரு சகோதார் 

மேற்கண்ட பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்!

இதெல்லாம் யாரின் வேலை?


நாம் துன்பங்கள் வரும்போது மனது கலங்கக் கூடாது என்பதற்காகத்தான் 

அவரே துன்புறும் கிறிஸ்துவாக
(Suffering Christ) வாழ்ந்து நமக்கு முன்மாதிரிகையாக இருந்தார்.


இயேசு பாடுகள் ஆரம்பிப்பதற்கு சற்றுமுன்,

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்."

என்று வேண்டியது

 பாடுகளிலிருந்து தப்பிப்பதற்காக அல்ல.

ஏனெனில் அவர் மனிதனாகப் பிறந்ததே அதற்காகத்தான்.

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்று நாம் தந்தையின் சித்தத்திற்கு பணிய

 வேண்டும் என்பதற்கு நமக்கு முன்மாதிரிகை காண்பிக்கத் தான் அவ்வாறு வேண்டினார்.

இயேசுவின் வாழ்வின் ஒவ்வொரு அசைவும் நமக்கு முன் மாதிரிகைதான்.

"நானே ஒளி " என்றார் இயேசு.

அதனால்தான்,

"என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான்."

என்று சொன்னார்.

இயேசுவை வெறும் வார்த்தையால் அல்ல,

நமது வாழ்க்கையால் பின்பற்றுவோம்.

உண்மையான சீடர்களாக அவரோடு நடப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment