சென்று வாருங்கள்.
******************************.
தமிழில் பேசும்போது நாம் வெறுமனே நினைப்பதை மட்டும் வாயினால் சொல்வது இல்லை.
நமது கலாச்சாரப் பண்புகளையும் வெளியிடுகிறோம்.
மிகவும் பெயர் பெற்ற எடுத்துக்காட்டு:
"வருகிறேன்."
"வாருங்கள். "
இரண்டு ஒரு சொல் வாக்கியங்களும் சந்தித்தவர்கள் பிரியும்போது பயன்படுத்துபவை.
நண்பர்கள் சந்தித்துவிட்டு பிரியும் போது,
"போகிறேன்" என்று சொல்லாமல்
"வருகிறேன்." என்றுதான் சொல்கிறார்கள்.
விடைகொடுப்பவரும்
"வாருங்கள். " என்றுதான் சொல்கிறார்.
குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரது பிரிக்க முடியாத உறவைத்தான் இந்த சிறிய உரையாடல் சுட்டிக் காண்பிக்கிறது.
ஒவ்வொரு திருப்பலியின்
முடிவிலும் குருவானவர் சொல்கிறார்,
"சென்று
வாருங்கள்,
திருப்பலி நிறைவேறிற்று."
"இன்றைய திருப்பலி நிறைவேறிவிட்டது.
இல்லத்திற்குச் சென்று அதன் பலன்களை அனுபவித்துவிட்டு
அடுத்த திருப்பலிக்கு மீண்டும் வாருங்கள்."
என்று குரு அழைக்கிறார்.
அதாவது
சென்று வாருங்கள்
என்ற சொற்றொடர் தொடர்ந்து நடைபெறவிருக்கும் திருப்பலிகளை ஒன்றோடொன்று இணைக்கும் கொக்கியாக (link) பயன்படுகிறது.
ஒரு திருப்பலி முடிந்து செல்வதே அடுத்த திருப்பலிக்கு வருவதற்காகத்தான்.
பங்கெடுத்துச் சென்ற திருப்பலிக்கும்
அடுத்து பங்குபெற வரவிருக்கும் திருப்பலிக்கும் இடையிலுள்ள நமது வாழ்க்கை
திருப்பலியின் போது நாம் பெற்ற அருள் வரங்களால் பலன் பெற்றிருக்க வேண்டும்.
திருப்பலியின் போது திருவிருந்தில் கலந்து கொள்கிறோம்.
நமது ஆன்மீக உணவாக நம்மிடம் வரும் நம் ஆண்டவர்
அன்றைய நாளில் ஆன்மீக வாழ்வில் ஊட்டமாக இருந்து நம்மை வழிநடத்துவார்.
எப்படி நமது உடல் ஒவ்வொரு நாளும் உழைக்க சத்துள்ள உணவு தேவை படுகிறதோ
அவ்வாறே நமது ஆன்மீக வாழ்வும் உற்சாக நடைபோட ஆன்மீக உணவு அத்தியாவசியம்.
இதைத் திருப்பலியின் போதுதான் பெறுகிறோம்.
பிறந்தவுடன் திருப்பலியின் போதுதான் ஞானஸ்நானம் பெறுகிறோம்.
அதில் ஆரம்பித்த திருப்பலித் தொடர் நாம் கல்லறைக்குச் செல்ல விடைபெறும் வரை நீடிக்கிறது.
இந்த திருப்பலித் தொடர்தான் நமது வாழ்வின் ஆரம்பமாகவும், மையமாகவும், முடிவாகவும் விளங்குகிறது.
இதிலிருந்து திருப்பலி நமது வாழ்வில் வகிக்கும் முக்கியத்துவத்தை உணரலாம்.
ஒவ்வொரு திருப்பலியிலும் எல்லாம் வல்ல இறை மகனையே இறைத் தந்தைக்கும் பலியாக ஒப்புக்கொடுக்கிறோம்.
பலிப்பொருளின் தன்மைக்கு ஏற்ப நாம் பெறும் பலனும் இருக்கும்.
பலிப்பொருளாகிய இயேசு அளவற்றவராய் இருப்பதால் நாம் பெறக்கூடிய பலனும் அளவற்றதாக இருக்கிறது.
ஆனாலும் நாம் எந்த அளவிற்கு திருப்பலியில் ஈடுபாட்டோடு இருக்கிறோமோ அந்த அளவிற்கு பலனின் அளவும் இருக்கும்.
நம் முன்னால் பெரிய கடல் ஒன்று இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
கடல் முழுவதும் நமக்குத்தான்.
அதிலிருந்து எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம்,
ஆனால் நாம் வைத்திருக்கும் பாத்திரத்தின் அளவுதான் நம்மால் எடுக்க முடியும்.
பெரிய பாத்திரமாக இருந்தால் அதிக அளவு நீர் எடுக்கலாம்.
பாத்திரம் சிறியதாக இருந்தால் எடுக்கும் நீரும் குறைவாகத்தான் இருக்கும்.
திருப்பலியின் போது நம் முன் அருட்கடல் ஒன்று முழுவதுமாக நமக்காக காத்திருக்கிறது.
திருப்பலியில் நமது ஈடுபாடு, ஒன்றிப்பு என்ற பாத்திரம் நம் கையில் இருக்கிறது,
ஒன்றிப்பில் அளவை ஒட்டியே பாத்திரத்தின் அளவும், நாம் அள்ளக் கூடிய அருள் நீரின் அளவும் இருக்கும்.
ஆகவே திருப்பலியோடு ஒன்றித்து, ஈடுபாட்டோடு கலந்து நமது அருள் பெரும் பாத்திரத்தின் அளவை பெரியதாக்கி கொள்ள வேண்டும்.
சிலர் கிறிஸ்மஸ் பூசைக்காரராக இருப்பார்கள்.
சிலர் ஞாயிற்றுக் கிழமை
பூசைக்காரராக இருப்பார்கள்.
சிலர் தினசரி பூசைக்காரராக இருப்பார்கள்.
அவர்கள் பங்கெடுக்கும் பூசைகளின் அளவிற்கும்,
ஈடுபாட்டின் அளவிற்கும்
ஏற்ப அவர்கள் ஈட்டும் பலன்கள் இருக்கும்.
ஈட்டும் பலன்களுக்கு ஏற்ப விண்ணக வாழ்வின் பேரின்பத்தின் அளவும் இருக்கும்.
மற்றெல்லா செபங்களையும் விட திருப்பலி என்னும் செபத்துக்குதான் பலன் அதிகம்.
ஆகவே இறை அருளை அதிகம் ஈட்ட ஆசைப்படுவோர் திருப்பலியில் பங்கெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டவேண்டும்.
வருடம் ஒரு முறை பூசை கண்டால் உயிரோடு இருப்போம். அவ்வளவதான்.
வாரம் ஒரு முறை தோசை கண்டால் நடப்போம்.
தினமும் பூசை கண்டால் ஓடுவோம்.
ஆண்டவருக்குப் பிடித்தமான ஆன்மீக வாழ்வு வாழ
நாம் அடிக்கடி,
முடிந்தால் தினமும்,
திருப்பலியில் கலந்துகொண்டு
அபரிமிதமான அருள் வரங்களை அள்ளிச் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு திருப்பலியிலும் குருவானவர் நம்மைப் பார்த்து,
" ஆண்டவர் உங்களோடு இருப்பாராக."
என்று வாழ்த்துகிறார்.
இந்த வாழ்த்தை எவ்வளவு அதிகமாகப் பெறுகிறோமோ
அவ்வளவு அதிகமாக ஆண்டவரோடு நமது நெருக்கமும் இறுக்கமும் இருக்கும்.
ஆண்டவரோடு நமது நெருக்கம் அதிகமானால் நம்மிடையே பாவம் புக முடியாது.
அதுமட்டுமல்ல ஆண்டவரும் அவரது அருள் வரங்களும் எப்போதும் நம்மோடு இருப்பதால்
நமது வாழ்வு அருள் மிகுந்ததாக இருக்கும்.
ஆண்டவர் அன்னை மரியின் வயிற்றில் தங்கியதால்தான் மரியாள் அருள் நிறைந்தவள்
ஆனாள்.
அன்னை மரியின் அளவிற்கு நம்மால் அருள் நிறைய பெற முடியாவிட்டாலும்
நம்மால் இயன்ற அளவு அதிகமாக பெற முயற்சிக்கலாமே!
இறை அருள்தான் நமது ஆன்மீக வாழ்வின் ஊட்டச்சத்து.
ஜெபத்தின் மூலமாகவும் நற்செயல் மூலமாகவும் நாம் அருள் வரங்களைப் பெறுகிறோம்.
எல்லா செபங்களிலும் மேன்மையானதாக இருப்பது திருப்பலி என்னும் செபமே.
அதில் எவ்வளவு அடிக்கடி கலந்து கொள்ள முடியுமோ அவ்வளவு அடிக்கடி கலந்து கொள்வோம்.
திருப்பலியின் முடிவில்
"சென்று வாருங்கள்"
என்று அழைப்பது நம் ஆண்டவராகிய இயேசுவே.
அவரது சொற்படி நடப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment