Monday, February 10, 2020

திருச்சபைக்கு வெளியே மீட்பு உண்டா?

திருச்சபைக்கு வெளியே மீட்பு உண்டா? 
******************************
திருச்சபைக்கு வெளியே மீட்பு உண்டா? 

என்ற கேள்வியை சிலர் கேட்கிறார்கள்.

 முதலில்  கேள்வியை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 

திருச்சபை என்ற சொல்லை கிறிஸ்துவின் ஞான உடல் என்ற பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொருளில் புரிந்து கொண்டால் 'கிறிஸ்துவுக்கு ' வெளியே மீட்பு இல்லை எனபதும் புரியும்.

அதாவது கிறிஸ்து இல்லாமல் மீட்பு இல்லை.

உலகோர் அனைவரின் மீட்புக்காகவும் இயேசு தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.

ஆகவே மீட்பு அடைய ஆசைப்படும் அனைவரும் கிறிஸ்துவுக்குள் அடங்குவார்கள்.

மீட்பு அடைய ஆசைப்படுவோர்

 கத்தோலிக்கத் திருச்சபை என்ற  அமைப்பிற்கு (Institution) உள்ளும் இருக்கலாம், வெளியேயும் இருக்கலாம்.

அமைப்பிற்கு உள்ளே உள்ளோர் திருமுழுக்கு பெற்று அதன்  உறுப்பினர் ஆகிறாகள்.

அதன் பின் தேவத்திரவிய அனுமானங்கள், செபம், தவம், கட்டளைகளை அனுசரித்தல், நற்செய்தி வழி நடத்தல் மூலம் மீட்புப் பெறுகிறார்கள்.

அமைப்பிற்கு வெளியே இருப்போர் கிறிஸ்துவையோ, நற்செய்தியையோ அறியாதவர்கள்.

அறியாமைக்குக் காரணம் அவர்கள் அல்ல.

அறிவிக்கப்படாததால் அறியவில்லை.

ஆனாலும் இறைவனால்  அளிக்கப்பட்ட புத்தியாலும்,

 இறைவன் அனைவருக்கும் அளிப்பதுபோல் அவர்களுக்கும் அளிக்கிற  அருளாலும்

இறைவனை ஏற்றுக்கொள்கிறாா்கள்.

இறைவனால் கொடுக்கப்பட்ட  மனசாட்சியின்படி வாழ்கிறார்கள்.

எல்லோருடைய மனசாட்சியிலும் கடவுளின் கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

அக்கட்டளைகளின்படி நடப்பவர்கள் பாவம் செய்யமாட்டார்கள்.

அப்படிப்பட்டவர்கள் கிறிஸ்துவை அறியாவிட்டாலும்

அவரது சித்தப்படியே நடப்பதால் 

அவர் சிந்திய இரத்தத்தின் பலனால் மீட்கப்படுவார்கள்.

அவர்களைப் பற்றி நமது ஞானோபதேசம் கூறுகிறது:

"Those who,

 through no fault of their own,

 do not know the Gospel of Christ or his Church, 

but who nevertheless seek God with a sincere heart, 

and, moved by grace, 

try in their actions to do his will 
as they know it through the dictates of their conscience -

 those too may achieve eternal salvation."
 (catechism 847)

அதாவது,

கிறிஸ்துவையோ, அவரது நற்செய்தியையோ, அவர் நிறுவியுள்ள திருச்சபையையோ அறியாதவர்கள்,

ஆனால் கடவுளை நம்புகின்றவர்கள், 

தங்களது மனசாட்சிப் படி,

அதாவது இறைவன் திருவுளப்படி,

 நடப்பவர்கள்

மீட்புப் பெறுவார்கள்.



கிறிஸ்து கடவுள் என்று தெரியாவிட்டாலும்,

இவர்கள் நல்ல மனதோடு கடவுளுக்காக வாழ்வதால்,

அவர்களை அறியாமலேயே
கிறிஸ்துவுக்காகத்தான் வாழ்கிறார்கள். 

இயேசு பாவத்தை அழிக்கவே மனிதன் ஆனார்.

ஆகவே பாவம் செய்யாதவன் இயேசுவின் சொற்படி  நடக்கிறான்.

இயேசுவின் சொற்படி நடக்கிறவன் இயேசுவுக்குள் வாழ்கிறான்.

இயேசுவுக்குள் வாழ்பவன் மீட்பு பெறுகிறான்.

அவன் நம்மைப்போல் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாவிட்டாலும், 

கடவுள் மீது அவன் கொண்ட ஆசையால் ஆசை ஞானஸ்நானம் பெற்றுவிட்டான்.

கடவுளை ஏற்றுக்கொள்வதால் அவனிடம் விசுவாசம் இருக்கிறது.

மனுக்குலம் அனைத்திற்காகவும்  இயேசு பாடுகள் பட்டார். 

அப்பாடுகளின்  பலனாகத்தான் கடவுளுக்காக மனசாட்சிப்படி வாழ்பவர்கள் மீட்பு பெறுவார்கள்.

அவர்களும் கிறித்துவின் ஞான உடலை சேர்ந்தவர்களே.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது.

இயேசுவை அறியாதவர்களும் மீட்புப் பெற வாய்ப்பு இருக்கிறதே 

பின் ஏன் அவர்களுக்கு நாம் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்?

நாம் இயேசுவின் சீடர்கள்.

சீடன் தனது குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய கடமைப் பட்டிருக்கிறான்.

நாம் இயேசுவின் சீடர்களாகையால் அவருடைய  கட்டளைக்கு கீழ்ப்படிய கடமைப் பட்டிருக்கிறோம்.

இயேசு நமக்கு, 

"உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்"

 என்ற கட்டளையை கொடுத்திருக்கிறார்.

அக்கட்டளைக்குக் கீழ்ப்படிய நாம் கடமை பட்டிருக்கிறோம்.

We are duty bound to obey our Lord.


பள்ளிக்குச் செல்லாமலேயே நம்மால் எழுத வாசிக்கப் படிக்க  முடியும்.

 ஆனால் ஏன் செலவு செய்து பள்ளிக்கூடம் போகிறோம்?

தனியே படிப்பதைவிட பள்ளியில் படிப்பது அதிக அறிவை தருகிறது. உயர்ந்த வேலை வாய்ப்புகளைப் பெற்று தருகிறது. அறிஞர்களோடு பழக வாய்ப்பு தருகிறது.

நாம் நற்செய்தியை அறிவிக்கும் போது மற்றவர்களுக்கு இறைவனைப் பற்றிய அதிக ஞானத்தைக் கொடுக்கிறோம்.

தனியே இறைவனைத் தேடுவதைவிட நற்செய்தியை

அறிந்தவர்களோடு  அவரைத் தேடுவது  நிறைய அருள் வரங்களைப் பெற்றுத் தரும்.


ஒரு பயணி யாருடைய உதவியும் கிடைக்காததால் அவனாக பிரயாசைப்பட்டு கஷ்டப்பட்டு வழியை அறிந்து பயணிக்கிறான்.

அப்படிப்பட்டவனுக்கு வழி தெரிந்தவர்கள் உதவுவதில் தப்பு ஒன்றும் இல்லையே?


"அவனுக்கு கண் இருக்கிறது, அதன் உதவியால் அவன் பயணிக்கட்டுமே. நமக்கு தெரிந்த வழியை ஏன் காட்ட வேண்டும்?"

என்று சொல்பவர்களிடம் பிறர் அன்பு இல்லை.   

பிறர் அன்பு இல்லாதவர்களிடம் இறையன்பும்  இருக்க முடியாது.

இங்கு ஒரு உண்மையை மிகவும் வருத்தத்தோடு பதிய வேண்டியிருக்கிறது.

அயல் நாட்டவர்களான,
புனித தோமையார் 

 புனித சவேரியார், 

புனித அருளானந்தர் 

மற்றும் அனேக குருக்கள்

 நற்செய்தி அறிவிக்கும் ஆவலால் தூண்டப்பட்டு

 இந்தியாவிற்கு வந்து 

தங்கள் உயிரை பணயம் வைத்து 

தங்களுக்குத் தெரியாத மொழி பேசக்கூடிய மக்கள் மத்தியில்கூட 

நற்செய்தியை அறிவித்தார்கள்.

இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை நாடுகளுக்கும் நற்செய்தி

வேத போதகர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. 

ஆனால் அந்த நற்செய்தி அறிவிக்கும் தாகமும், வேகமும் இப்போது எங்கே போய்விட்டது?

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பகுதிக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்ல

 நற்செய்தி தாகமும் வேகமும் உள்ள குருக்கள் உலகின் எப்பக்கமும் இல்லையே!

அப்படி இருந்திருந்தால் 

அங்கு நற்செய்தி பணி செய்ய

ஆள்பற்றாக்குறை காரணமாக

 அங்கே உள்ள திருமணம் ஆனவர்களுக்கும்  குருப்பட்டம் கொடுக்கலாம் 

என்ற ஒரு எண்ணம்

 திருச்சபையை வழி நடத்துபவர்களுக்கு வந்திருக்குமா?

தண்ணீர் இல்லாத பள்ளத்தை நோக்கி வெள்ளம் வேகமாக பாய்வது போல 

குருக்கள் இல்லாத அமேசான் பகுதியை நோக்கி உலகின் பிற பகுதிகளிலிருந்து குருக்கள் வெள்ளம் பாய வேண்டாமா?

பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

பயிற்சி பெறாதவர்களும் போதிக்கலாம் என்ற முடிவுக்கு வரக்கூடாது.

குருக்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் தேவ அழைத்தலை ஏற்றுக் கொள்பவர்களை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

 "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."

என்ற ஆண்டவரின் வார்த்தைகள் இன்னும் பைபிளில் இருக்கின்றன.

மறந்து விட்டவர்கள் மீண்டும் ஒரு முறை நற்செய்தி நூல்கள் அனைத்தையும் முழுமையாக படியுங்கள்.

லூர்து செல்வம்.







No comments:

Post a Comment