Saturday, February 8, 2020

"சார், ஒரு கதை. "

சார், ஒரு கதை."

*****************************

ஒன்பதாவது வகுப்பு.


பள்ளிக்கூட ஆண்டின் ஆரம்பக் கட்டம்.


English grammar நடத்துவதற்காக  Special Class வைத்திருந்தேன்.


நான் பாடத்தை ஆரம்பிக்க இருந்த போது ஒரு பையன் எழுந்து,


"சார், ஒரு கதை."


"சொல்லு.''


"நீங்க சொல்லுங்க, சார்."


நடத்தயிருப்பது grammar பாடம்.


பையன் கதை கேட்கிறான்.

எனக்கும் கதை சொல்லுவதும் பிடிக்கும், கேட்பதும் பிடிக்கும்.


அவனது ஆசையை நிறைவேற்றுவோம்.


"ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான்.


அதே ஊரில் ஒரு பொண்ணும் இருந்தாள்.


பையன் பொண்ணைப் பார்த்தான்.


பொண்ணும் பையனைப் பார்த்தாள்.


பையன் பொண்ணைக் காதலிக்க ஆரம்பித்தான்.


பொண்ணும் பையனைக் காதலிக்க ஆரம்பித்தாள்.


இருவரும் கல்யாணம் செய்து கொண்டார்கள்."


"சார், அவங்க பேரைச் சொல்லலிய."


"அவசரப்படாதே. நாம்தான் பெயர் வைக்க வேண்டும்.


பையன் noun குடும்பத்தைச் சேர்ந்தவன்.


திருமணம் ஆனவுடன் தனக்கு Subject என்று பெயர் வைத்துக் கொண்டான்.


மனைவி verb குடும்பத்தைச் சேர்ந்தவள்.


அவளுக்கு predicate

 என்று பெயர் வைத்தான்.


Subject ம் predicate ம் சேர்ந்து  ஒரு குடும்பம் ஆனார்கள்.


அந்த குடும்பத்தின்  பெயர்..."


"சார், தான் சொல்லுகிறேன். Sentence."


"சார், நீங்கள் கதை சொல்லவில்லை. Grammar நடத்துகிறீர்கள்."


"சரி, கதையைக்

 கவனியுங்கள்.


கணவனும் மனைவியும் ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறார்கள்.


எங்கு சென்றாலும் கணவன் முதலில் வருவான். மனைவி அடுத்து வருவாள்.


கணவன்தான் குடும்பத் தலைவன். 


மனைவிதான் கணவன் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் செய்வாள்."


ஒரு பையன்,


"அதாவது Subject 

பெயர்ச்சொல். பெயருக்கு இருக்கும்.


verb தான் Subject செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்யும்."


இன்னொரு பையன்,


"எங்கள் வீட்டிலும் அப்படித்தான்.


 அப்பா செய்ய வேண்டிய வேலைகளை அம்மா தான் செய்வார்கள்." 


எந்த பாடமாக இருந்தாலும் சரி 


அதற்கு கதை வடிவம் கொடுத்துச் சொன்னால் மாணவர்கள் விருப்பமாக கேட்பார்கள்.


அந்தக் கதை தொடர்ந்தது. அதை முழுவதும் இங்கே சொன்னால் ஒரு வருடம் போதாது.



மாணவர்கள் மட்டும் அல்ல


 மனிதர் எல்லோரும் கதைப் பிரியர்கள்தான்.


 ஆகவேதான் இயேசு தனது நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கும்போது


 கதை வடிவில் அறிவித்தார்.


எதை யாருக்குச் சொன்னாலும் 


அவர்களது ரசனைக்கு ஏற்ப சொன்னால்தான்


 அவர்களுடைய மனதில் சொல்லப்பட்டது தங்கும்.


ஆனால் கதைகளைப் புரிந்து கொள்ள வேண்டிய விதமாக புரிந்து  கொள்ள வேண்டும்.


இயேசுவின் கதைகள் வெறும் பொழுது போக்கிற்காக சொல்லப்பட்டவை அல்ல.


இயேசு எந்தக் கருத்தை வலியுறுத்த கதையை சொன்னாரோ 


அதே கருத்தை அவர் விரும்பியபடியே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


 நமது விருப்பத்திற்கு ஏற்ப கருத்தை மாற்றக் கூடாது.


இயேசு  தனது போதனையில் கதைகளை பயன்படுத்தியதில் வேறொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.


 புரிந்துகொள்ளும் திறன் அடிப்படையில் மக்களை பல பிரிவினராக பிரிக்கலாம்.  


சிலர் சொல்லப்படுவதை வார்த்தைகளின்  சாதாரண உபயோகத்தின் அடிப்படையில் புரிந்து கொள்பவர்கள்.


சிலர் ஆழமான பொருளையும்

புரிந்து கொள்பவர்கள்.



உதாரணத்திற்கு முதல் வகுப்பில் எல்லோரும் கேட்ட கதை ஒன்று உண்டு.


காக்கா வடை திருடிய கதை.


இக்கதைக்கு மேலெழுந்த வாரியாக ஒரு பொருள் உண்டு.


ஆழமான பொருளும் உண்டு.


முதல் வகுப்பு மாணவர்கள் ஐந்து வயது மட்டும் நிரம்பியவர்கள்.


அவர்களுக்கு மேலெழுந்தவாரியாக உள்ள பொருள் மட்டும் புரியும்.


காகம் வடையைத் திருடியது. திருடப்பட்ட வடையை நரி   ஏமாற்றி கைப்பற்றியது.


அவர்கள் கற்கும் ஒரே பாடம் 

"திருடப்பட்ட பொருள் தங்காது."


ஆகவே திருடக்கூடாது.


ஐந்து வயது பிள்ளைகளுக்கு இவ்வளவு தான் புரியும்.


ஆனால் இந்த கதையில் உள்ள ஆழமான பொருள்  சிந்திக்கும் திறமை உள்ளவர்களுக்கு அவரவர் சிந்தனா சக்திக்கு ஏற்றவாறு புரியும்.


இன்றைய மனித சமுதாயத்தின் 


ஒழுக்க, பொருளாதார நிலையை 


அப்படியே படம் பிடித்து காட்டுகிறது இந்த சிறிய கதை.


இந்த சமுதாயத்தை பொருளாதார அடிப்படையில் மூன்று பிரிவினராக  பிரிக்கலாம்.


உற்பத்தியாளர்கள்.(பாட்டி)

வியாபாரிகள். (காகம்)

 பயன் அடைபவர்கள். (நரி)


பாட்டி கஷ்டப்பட்டு வடை சுடுவது போல விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து உற்பத்தி செய்கிறார்கள்.


ஆனால் அவர்களுக்கு ஒரு பயனும் கிடைப்பது இல்லை.


 அவர்களிடம் குறைந்த விலைகொடுத்து ஏமாற்றி வாங்கும் வியாபாரிகளிடமும்


 கட்டவேண்டிய வரிகள் சுமை காரணமாக ஒன்றும் தங்குவதில்லை. 


உண்மையான உழைப்பு என்றால் என்ன என்று தெரியாத ஏமாற்று பேர்வழிகள் தான் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.


சுருக்கமாக


 உழைப்பவர்கள் ஏமாறுகிறார்கள்.


 ஏமாற்றுபவர்கள் அனுபவிக்கிறார்கள்.


இன்னும் ஆழமாக சிந்தித்தால் இன்னும் நிறைய கருத்துக்கள் கிடைக்கும். அதுதான் கதைகளின் மகத்துவம்.



இயேசு சாதாரண மக்களுக்கு கதைகள் மூலம் போதித்தார்.


அவர்களது சிந்தனைக்கு ஏற்ப அதைப் புரிந்துகொண்டு நேர்மையாக வாழ்ந்தாலே அவர்களுக்கு போதுமானது.


பைபிள் வசனங்களை படிப்பு அறிவு இல்லாத பாமர மக்கள் புரிந்து கொள்வதற்கும்,


தேவ சாஸ்திரம் படித்தவர்கள் புரிந்து கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.


புரிந்து கொள்வதற்கு ஏற்ப நேர்மையாக வாழ்பவர்களை இயேசுவும் புரிந்து கொள்வார்.


குறைந்த திறமையுள்ளவர்கள் அவர்களது திறமைக்கு ஏற்ப கடவுளுக்கு கணக்கு கொடுத்தால் போதும்.


அதிக திறமை உள்ளவர்கள் அவர்களது திறமைக்கு ஏற்ப கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்.


ஊதாரி மைந்தனின் கதையை எடுத்துக் கொள்வோம்.


சாதாரண கிறிஸ்தவனுக்கு புரிவது ஒன்றே ஒன்றுதான்.


கடவுள் நமது தந்தை. அன்பும் இரக்கமும் உள்ளவர். பாவிகள் மனம் திருந்தி வரும்போது அன்போடு ஏற்றுக்கொள்கிறார்.


சாதாரண விசுவாசிக்கு இவ்வளவு தெரிந்தால் போதும். அவன் செய்ய வேண்டியது  ஒன்றே ஒன்றுதான்.


பாவம் செய்யாமல் வாழ வேண்டும். பாவம் செய்தால் வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.



இதே கதையில் ஆழமான இறையியல் கருத்துக்களும் பொதிந்துள்ளன:


கடவுள் நமது இரக்கமுள்ள தந்தை. 


அவருடைய படைப்பு எல்லாம் நமது பயன்பாட்டிற்காகவே.

'

 அவற்றை பயன்படுத்த நமக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.


நமது சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினாலும் அவர் நமது சுதந்திரத்தில் குறுக்கிட மாட்டார்.


கதையில் வரும் இரு பிள்ளைகளில் மூத்தவர் தனது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி தந்தை  சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்.


இளையவன் தனக்கு உரிய பங்கை கேட்டு வாங்கிக் கொண்டான்.


 "அப்பா, சொத்தில் எனக்கு வரவேண்டிய பங்கைக் கொடும்" என்றான். அவர் தம் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்துகொடுத்தார்."


இளைய மகன் தனது உரிமையை தவறாகப்

 பயன்படுத்தியதால் மிக ஏழையானான். 


உண்ண ஒன்றும் இல்லாமல் போன பின்புதான் தன் தவறை உணர்ந்தான்.


நாம் நமது உரிமையை  தவறாக பயன்படுத்தும்போது தடுக்காத இறைவன் நமக்கு கஷ்டங்கள் வரும்போதும் தடுப்பது இல்லை. 


இறைவன் நமக்கு கஷ்டங்களை அனுமதிப்பதே நாம் நமது தவறை உணர்ந்து திருந்த வேண்டும் என்பதற்காகத்தான்.


ஆகவே நாம் நமக்கு கஷ்டங்கள் வரும்போது முணு முணுக்காமல்


 நமது தவறை உணர்ந்து கஷ்டங்களுக்கு காரணமான பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு


இறைவனிடம்  திரும்ப  வேண்டும்.


மனித வாழ்வில் கஷ்டங்கள் வருவது தண்டனையாக அல்ல,  நம்மைத் திருத்துவதற்காக.


இறைவன் நம்மீது உள்ள அளவுகடந்த அன்பின் காரணமாக தான் துன்பங்களை நமக்கு வர விடுகிறார்.


கஷ்டங்கள் வரும்போது நமக்கு திருந்த வாய்ப்பு தந்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.


தந்தை இறைவனின் அன்பின் மீது முழு நம்பிக்கை வைத்து அவரிடம் திரும்ப வரவேண்டும்.


தாழ்ச்சியுடன் திரும்ப வேண்டும்.


 "அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம் செய்தேன்.


19 இனிமேல் நான் உம்முடைய மகன் என்று எண்ணப்படத் தகுதியற்றவன். என்னை உம்முடைய கூலியாட்களுள் ஒருவனாக நடத்தும்"


நாம் திரும்புவது சொத்துக்கு ஆசைப்பட்டு அல்ல இறைவனது அன்புக்கு  ஆசைப்பட்டு.


இறைவன் ஒவ்வொரு வினாடியும் நாம் மனம் திரும்பி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.


வந்தவுடன் ஏற்றுக் கொள்கிறார்.


நாம் பாவம் செய்யும் போது இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பை நிறுத்துவதில்லை.


நாம்தான் அன்பை முறித்துக்கொண்டு வெளியேறுகிறோம்.


பாவத்திற்கான மனஸ்தாபம் நாம் இழந்த இறை உறவை மீட்டுத் தருகிறது.


இதற்கு அடிப்படைக் காரணம் இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் விசுவாசம்தான்.


இறைவன் மீது நாம் கொண்டுள்ள விசுவாசம்,


 அவர் நம்மை மன்னிப்பார் என்ற நமது அசைக்கமுடியாத நம்பிக்கை,


 இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள அன்பு 


என்ற மூன்று தேவ சம்பந்தமான புண்ணியங்கள்

(theological Virtues)  நமது வாழ்வில் நமக்கு எவ்வளவு அவசியம் என்பதை இக்கதை 

இக்கதை கோடிட்டுக் காட்டுகிறது.


இந்த மூன்று புண்ணியங்களும்தான் நமது ஆன்மீக வாழ்வின் உயிர்நாடி.


இளைய மகனுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு மூத்தவனுக்கு பிடிக்கவில்லை..


ஆனாலும் அவனது தந்தை அவனைச் சமாதானப் படுத்துகிறார்.


"மகனே, நீ என்றும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையதெல்லாம் உன்னுடையதே."


இவ்வார்த்தைகள் கதையில் வரக்கூடிய மூத்த பையனுக்கு மட்டுமல்ல அந்த கதையைக் கேட்கும் நமக்கும் பொருந்தும்.


தந்தை இறைவன் சொல்லுகிறார், 


"மகனே நம் இருவருக்கும் உள்ள உறவு மிக இறுக்கமானது.


 நான் முழுவதும் உனக்கே சொந்தம்.


 நீ முழுவதும் எனக்கே சொந்தம்.


வா.கவலையை விட்டு விட்டு மகிழ்ச்சியாக இரு"


ஆக, இறைமக்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.


அவர்களுடைய மகிழ்ச்சி இறைவனை மையமாக கொண்டு இருக்க வேண்டும்.


(தொடரும்)


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment