Sunday, February 2, 2020

முடிவுதான் ஆரம்பம். சாவுதான் வாழ்க்கை. இறப்புதான் பிறப்பு.

முடிவுதான் ஆரம்பம்.
சாவுதான் வாழ்க்கை.
இறப்புதான் பிறப்பு. 
*****      *****     *****      *****
''Good morning. பேப்பர்ல என்ன போட்டிருக்கான்?"

"கொசுக் கடித்து  பத்து பேர் சாவு."

"நல்ல செய்தியே பேப்பர்ல வராதா?"

"ஏண்டா, இப்படி பயந்து பயந்து சாகிற?"

"ஏன், உனக்கு சாவை நினைத்தால் பயமாய் இல்லையா?"

"சாப்பாடு எதில ஆரம்பிக்கிறது?"

"புரியல."

"நீ சாவைப் பார்த்து பயப்படுகிறாய். அதனால்தான் புரியல.

சாப்பாடு 'சா'வுலதான் ஆரம்பிக்கிறது."

"அதுவும் சரிதான்.

 தாவரங்கள் மிருகங்கள் ஆகியவற்றில் சாவில்தான் நமது சாப்பாடு ஆரம்பம் ஆகிறது.''

"இதுல ஒரு பெரிய வாழ்க்கை தத்துவமே அடங்கி இருக்கிறது.

இலக்கணப்படி முடிவின் எதிர்ப்பதம் ஆரம்பம்.

தத்துவப்படி 

முடிவுதான் ஆரம்பம்.

 சாவுதான் வாழ்க்கை.

இறப்புதான் பிறப்பு. 

எப்படின்னு கேளு."

"நீதான் ஆரம்பித்தாய்.  நீயே முடி."

"அம்மாவின் வயிற்றில் எவ்வளவு காலம் இருந்தாய்?"

"பத்து மாதங்கள். ''

"அம்மாவின் வயிறு தானே! பத்து வருடங்கள் இருக்கலாமே!"

"நாங்கள் உயிரோடு இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா? பத்துமாதம் ஆனவுடனே அம்மாவின் வயிற்றுக்கு டாட்டா!"

"அதாவது பத்தாவது மாதத்தில்  வயிற்று வாழ்க்கை முடிகிறது.

 அந்த முடிவு வெளியுலக வாழ்க்கையின் ஆரம்பம்.

அதாவது முடிவுதான் ஆரம்பம்.

அடுத்து இவ்வுலக வாழ்க்கையும் ஒரு நாள் முடியும். எப்போது முடியும்?"

"நீயே  சொல்லிவிடு."

"பயமாக  இருக்கிறதா? நெருப்பு என்று சொன்னால் சுட்டு விடாது. தைரியமாகச் சொல்."

"சாவில் முடியும்."

"முடிந்தவுடன்  எங்கே போவோம்?"

"நல்லவர்களாக இருந்தால் மோட்சத்திற்குப்  போவோம்."

"அதாவது இவ்வுலக வாழ்க்கையின் முடிவு விண்ணுலக வாழ்க்கையின் ஆரம்பம்.

அதாவது மண்ணுலகில் இறந்தால் விண்ணுலகில் பிறப்போம்.

புரிகிறதா?"

"புரிகிறது. ஆனால் ஒரு சந்தேகம்.

தத்துவம் நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் மனிதர்கள் சாவை கண்டு அஞ்சுகிறார்களே, ஏன்?"

"சாவு இவ்வுலக சிற்றின்பத்துக்கு முடிவைக் கொண்டு வந்து விடும் என்று 
எண்ணுபவர்கள் சாவுக்கு அஞ்சுகிறார்கள்.

சாவுக்குப் பின் நமக்கு பேரின்பம் ஒன்று காத்திருக்கிறது

 என்று தெரியாதவர்களுக்குத் தங்களது சிற்றின்பத்தை கைவிட ஆசை வருவது இல்லை.

 ஆகவே இறந்தால் தாங்கள் அனுபவித்து வரும் சிற்றின்பம் முடிவிற்கு வந்து விடுவோமோ என்று சாவுக்கு அஞ்சுகிறார்கள்.

ஒரு வகையில் இவர்கள் 
வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்தில் கட்டுண்டிருக்கிறார்கள். ''

"அடிமைத்தனமா? யாருக்கு?"

"சிற்றின்பத்தை அள்ளித் தரும் பாவத்துக்கு.

பாவத்துக்கு அடிமைகளாக இருப்பவர்கள்தான் சாவுக்கு அஞ்சுவார்கள்."

"இந்த அச்சத்தை போக்குவது எப்படி?"

"நீ கிறிஸ்தவன்தானே?"

"இது என்ன கேள்வி? உனக்கு தெரிந்த கிறிஸ்தவனைப் பார்த்து கிறிஸ்தவன்தானே என்று கேட்கிறாய்?"

"கிறிஸ்தவன் சாவின் மேல் உள்ள அச்சத்தை போக்குவது எப்படி என்று கேட்க மாட்டான்.

சாவை வென்றவரைப் பின்பற்றுகிறவன் எப்படி இந்த கேள்வியை கேட்பான்?"

"Sorry. தேர்வு எழுதுகின்றவனுக்கு வருகின்ற பிரச்சினைதான்.

கேள்விக்குப் பதில் தெரியும். ஆனால் தேர்வு முடிந்தபின்புதான் ஞாபகத்துக்கு வரும்.

நானே பதிலைச் சொல்லிவிடுகிறேன்.

சாவை உலகிற்குக் கொண்டு வந்த சாத்தானை நமது ஆண்டவரும், மீட்பருமாகிய இயேசு தனது சாவின் வழியாக அழித்துவிட்டார்.

அதாவது இயேசு தனது சாவின் வழியாக நமது சாவை வென்றுவிட்டார்.

இனி நமக்கு வரப்போவது சாவு  அல்ல,

விண்ணுலக வாசல்.

சாவின் வழியாகத்தானே
விண்ணுலகிற்குள் நுழைகிறோம்.


 வாழ்நாள் முழுவதும் பாவத்தின் அடிமைத்தனத்தில் கட்டுண்டிருந்தவர்களை இயேசு விடுவித்தார்.

பாவத்தின அடிமைத்தனத்தி லிருந்து விடுபட்டுவிட்டதால் இனி சாவுக்கு அஞ்சவேண்டியதில்லை.

இனி மகிழ்ச்சியோடு சாவை வரவேற்கலாம்.

பாவத்தில் இருக்கும் போது அச்சம் தந்த சாவு

 இப்போது இயேசுவின் கருணையால் 

மகிழ்ச்சி தருவதாக மாறி விட்டது.

இனி சாவைக் கண்டு பயப்பட மாட்டேன். போதுமா?" 

"பயப்படாமல் இருந்தால் மட்டும் போதாது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்."

"பிறக்கும்போது நான் அழுதேன், மற்றவர்கள் சிரித்தார்கள், இவ்வுலகில்.

 இறக்கும்போது மற்றவர்கள் அழுவார்கள், நான் சிரிப்பேன் விண்ணுலகில்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment