Sunday, February 23, 2020

"கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்"

 "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" 
******************************
மெஸபொட்டோமியாவை
(இன்றைய ஈராக்) ஆண்ட
(கி.மு.1894 to 1595) பாபிலோனிய வம்சத்து ஆறாவது மன்னன் ஹமுராபி.

அவன் வகுத்த கிரிமினல் சட்டம் 'கண்ணுக்குக் கண்'
( “an eye for an eye.”) தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சண்டையில் ஒருவனது  கண் பழுது அடைந்து விட்டால்,

அதற்குத் தண்டனையாக
பழுதாக்கியவனின் கண்ணைத் தோண்டி எடுத்து விடவேண்டும்.

அவன் கை முறிந்து விட்டால்,
இவன் கையையும் முறித்துவிட வேண்டும்.

அதாவது பழிக்குப் பழி.

இது அன்பே இல்லாத நீதியை அடிப்படையாகக் கொண்டது.


ஆனால் அன்பே உருவான கடவுள் மனிதனை அன்பு என்ற அடிப்படைப் பண்புடன் படைத்தார்.

அன்பே இல்லாதவன் மனிதன் என்ற பெயருக்கே பொருத்தமானவன் அல்ல.

மனிதன் எந்த வினைக்கு எதிர்வினை ஆக்கினாலும்
(Reaction to any action) அது அன்புக்கு எதிராக இருக்கக்கூடாது.

நமது முதல் பெற்றோர் இறைவனது கட்டளையை மீறி  பாவம் செய்தனர்.


அவர்கள் செய்த பாவத்திற்கு மன்னிப்புப் பெற வேண்டுமானால் அவர்கள் உரிய பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆனால் அளவுள்ள மனிதனால் அளவற்ற கடவுளுக்கு எதிராக செய்த பாவத்திற்குப் போதுமான பரிகாரம் செய்ய முடியாது.

ஆனாலும் அன்பே உருவான கடவுள்  மனிதனை மன்னிக்க தீர்மானித்தார்.

ஆகவே அவரே மனிதனாகப் பிறந்து

 மனிதன்  செய்ய வேண்டிய பரிகாரத்தை அவரே செய்தார்.

மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அவரே  பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பாவப் பரிகாரப்  பலியாக்கினார்.

இயேசு சொல்கிறார்,

""கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்று சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.

 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: 

தீயோனை எதிர்க்கவேண்டாம். ஆனால் யாராவது உன் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு."


"நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்."

" விரோதியை நேசி, உனக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்."

அவர் வெறுமனே சொல்லி விட்டுப் போக வில்லை. சொன்னபடி வாழ்ந்து காண்பித்தார்.

நாம் அவரது சீடர்கள் தானே?

சீடன் என்றால் வெறுமனே குருவின் பின்னால் போகின்றவன் அல்ல.

அவர் வாழ்வது போல் வாழ்பவன்.

அவரது சொற்படி மட்டுமல்ல அவரையே வாழ்பவன்.

It is not enough that we follow Christ, we must live Christ.

நாம் உண்ணும் உணவு நாம் அல்ல, 

ஆனால் அதை உண்டபின் அது நாமாகவே மாறி விடுகிறது.

சோறு ரத்தம் அல்ல, 

ஆனால் நாம் அதைச் சாப்பிட்டபின் நமது ரத்தமாகவே மாறிவிடுகிறது.

கிறிஸ்து நாம் அல்ல 

ஆனால் திருவிருந்தில் கிறிஸ்துவை நாம் உண்டபின்

  நாம் கிறிஸ்துவாகவே மாற வேண்டும்.

இறைவார்த்தை நாம் அல்ல,

ஆனால் அதை கேட்டபின் அது நமது வாழ்க்கையாக மாறி விட வேண்டும்.

இயேசுவிற்கு விரோதிகள் கிடையாது,

 ஏனெனில் அவர் எல்லோரையும் நேசிக்கிறார்.

பாவம் செய்வோர்தான் இயேசுவைத் தங்கள் விரோதியாகக் கருதுகிறார்கள்.

நாம் பாவம் செய்யும்போது நாம்தான் இயேசுவின் அன்பை விட்டுப் பிரிகிறோம்,

 ஆனால் இயேசுவின் அன்பு நம்மை விட்டுப் பிரிவதில்லை.

மனிதர்களுக்கு இடையிலான உறவிலும் 

நம்மால் நேசிக்கப் படுகின்றவர்கள் நமது விரோதிகள் அல்ல.

அவர்கள் நம்மை விரோதிகளாகப் பார்த்தாலும் நாம் அவர்களை நமது நண்பர்களாகத்தான் கொள்ள வேண்டும்.

விரோதத்தை அழிக்க ஒரே வழி அன்பு செய்வது தான்.

விரோதிகளை அழிக்க வேண்டுமா?

சுருக்கமான வழி ஒன்று இருக்கிறது.

அவர்களை நண்பர்கள் ஆக்கிக்கொள்வதுதான். 

நிபந்தனையற்ற அன்பு நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்க வைக்கும்.

நம் ஆண்டவர் வெறுமனே சொல்லி விட்டு போகின்றவர் அல்ல.

தனது போதனையை தானே வாழ்ந்து காட்டியவர்.

இது வெறும் வார்த்தை அல்ல சத்தியமான வார்த்தை. 

(தொடரும்)

லூர்து செல்வம்

No comments:

Post a Comment