"இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?"
(மாற்கு, 8:21)
******************************
இயேசு தன் சீடர்களோடு படகில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
சீடர்களுக்கு ஒரு கவலை.
அப்பம் கொண்டுவர மறந்துவிட்டார்கள்.
படகில் ஒரே ஓர் அப்பந்தான் இருந்தது.
அவர்கள் எல்லோரும் உண்ண
ஒரே ஓர் அப்பம் போதாது.
இது தான் அவர்களுக்குப் பெரிய கவலை.
அவர்களுடைய கவலையைப் பார்க்கும்போது நமக்கு சிரிப்புதான் வருகிறது.
அவர்களுடன் பயணிப்பவர் ஆண்டவராகிய இயேசு.
ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தவர்.
ஏழு அப்பங்களை கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளித்தவர்.
உண்மையில் அவருக்கு ஒரு அப்பம் கூட தேவை இல்லை.
இந்த பிரபஞ்சத்தையே ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கியவருக்கு,
வேண்டிய அப்பங்களை ஒன்றுமில்லாமையிலிருந்து இருந்து உண்டாக்கத் தெரியாதா?
இயேசு புதுமைகள் செய்யும்போதெல்லாம் அவருடனே இருந்த சீடர்களுக்கு ஏன் இந்த உண்மையை புரியவில்லை?
5 அப்பங்களை கொண்டு 5000 பேருக்கு உணவு அளித்தவர்
ஒரு அப்பத்தை கொண்டு சீடர்களுக்கு மட்டும் உணவு அளிக்க முடியாமல் இருப்பாரா?
இது ஏன் சீடர்களுக்குப் புரியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை!
ஆனால் இவ்விஷயத்தில் நாமும் சீடர்களைப் போலவே இருக்கிறோம்.
நமக்கு நன்கு தெரியும்
நம்மைப் படைத்தவர் எல்லாம் வல்லவர் என்று.
நமக்கு நன்கு தெரியும்
இறைவன் நமது பாசமுள்ள தந்தை என்று.
நமக்கு நன்கு தெரியும்
இறைவன் நம்மை உயிருக்கு உயிராய் நேசிக்கிறார் என்று.
நமக்கு நன்கு தெரியும்
நமது வாழ்வின் ஒவ்வொரு விநாடியும் அவர் தான் நம்மைப் பராமரித்து வருகிறார் என்று.
நமக்கு நன்கு தெரியும்
நமக்கு என்ன நேர்ந்தாலும் நமது நன்மைக்காகத்தான் இருக்கும் என்று.
நமக்கு நன்கு தெரியும்
விசுவாசத்துடன் எது கேட்டாலும் கிடைக்கும் என்று.
நமக்கு நன்கு தெரியும்
இவ்வுலகம் நமக்குச் சதமானது அல்ல என்று.
நமக்கு நன்கு தெரியும்
நாம் விண்ணுலக வாழ்விற்காகவே படைக்கப்பட்டிருக்கிறோம் என்று.
நமக்கு நன்கு தெரியும்
வெளகீக வாழ்வை விட ஆன்மிக வாழ்வே முக்கியம் என்று.
நமக்கு நன்கு தெரியும்
சேவைகள் பெறுவதைவிட சேவைகள் செய்வதிலேயே இன்பம் அதிகம் உள்ளது என்று.
நமக்கு நன்கு தெரியும்
பைபிள் இறைவனின் வார்த்தை என்று.
நமக்கு நன்கு தெரியும்
பைபிள் வழியாக இறைவன் நம்மோடு பேசுகிறார் என்று.
நமக்கு நன்கு தெரியும்
பைபிள் வாசிப்பது அறிவை பெருக்குவதற்கு அல்ல,
நல்ல வாழ்வு வாழ்வதற்கே என்று.
நமக்கு நன்கு தெரியும்
மரணம் விண்ணுலகத்தின்வாசல் என்று.
நமக்கு நன்கு தெரியும்
இன்பத்தில் மிதக்கும் நீண்ட ஆயுளை விட
சிலுவையை பக்தியுடனும் சுமக்கும் குறுகிய ஆயுளே
நித்திய பேரின்ப வாழ்வுக்கு உதவியாக இருக்கும் என்று.
இவ்வளவும் தெரிந்திருந்தும் என்ன பயன்?
படைத்தவருக்காகப் படைக்கப்பட்ட பொருட்களைத் தியாகம் செய்ய மனது வரவில்லையே!
தெருவில் திரியும் பிச்சைக்காரனும் இறைவனால் படைக்கப்பட்டவனே.
ஆனால் அவனை நமது உடன்பிறந்த சகோதரனாக முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள மனது வரவில்லையே!
இறைவனைத் தந்தை என்று அழைத்து என்ன பயன்?
நாமும் இறைவனை உயிருக்கு உயிராக நேசிப்பதாகத்தான் சொல்லுகிறோம்.
தனிப்பட்டவர்களின் நேசத்தை பற்றி நமக்கு தெரியாது.
ஆனால் பொதுவாகப் பார்க்கும்போது சில சந்தேகங்கள் ஏற்படுகின்றன.
கிறிஸ்மஸ் அன்றும், புத்தாண்டு அன்றும் கோவிலுக்கு வரும் மக்கள் உள்ளூரில் தான் இருக்கிறார்கள்.
ஆனால் கிறிஸ்மஸ் அன்று கோவிலுக்கு வரும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு வருவது இல்லையே?
கோவிலுக்கு வருவது கிறிஸ்மஸ் விழாவிற்காகவா அல்லது இறை அன்பிற்காகவா?
பாவசங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.
பாவங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதா அல்லது பக்தியின் அளவு குறைந்துவிட்டதா?
உலக அளவில் குருக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
தேவ அழைத்தல் குறைந்துவிட்டதா அல்லது
தேவ அழைத்தலை ஏற்றுக் கொள்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டதா?
அமேசான் பகுதியில்
குருக்கள் பற்றாக்குறை காரணமாக திருமணமான முதியவர்களுக்கு குருப்பட்டம் கொடுக்கலாம் என ஆயர்களே ஆலோசனை கூறியுள்ளார்கள்.
நல்ல வேளை பாப்பரசர் அந்த
ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை!
இதற்கெல்லாம் காரணம் இறைவன் நம்மை நேசிக்கும் அளவிற்கு நாம் அவரை நேசிக்கவில்லை என்பதுதானே!
ஒவ்வொரு விநாடியும் இறைவன் நம்மை பராமரிக்கிறார் என்பது நமக்கு தெரியும்.
ஆனால் நாம் ஏன் நமக்கு அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் வாழ்கிறோம்?
படிக்கிறோம், வெற்றி பெறுவோமா?
வெற்றி பெற்றுவிட்டோம், வேலை கிடைக்குமா?
வேலை கிடைத்துவிட்டது போதிய சம்பளம் கிடைக்குமா?
சுகம் இல்லாது இருக்கிறோம்,
முழு குணம் அடைவோமா?
இறைப் பராமரிப்பில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த சந்தேகங்கள் ஏன் வருகின்றன?
நமக்கு என்ன நேர்ந்தாலும் நமது நன்மைக்காகத்தான் இருக்கும் என்று நம்பும் நாம் ஏன் கஷ்டங்கள் வரும்போது வருத்தப்படுகிறோம்?
நன்மை நேர்வது நமக்குப் பிடிக்கவில்லையா?
இவ்வுலக வாழ்வு சதம் இல்லை, மறு உலக வாழ்வுக்காகவே நாம் படைக்கப்பட்டு இருக்கிறோம் என்று தெரிந்தும்
ஏன் இவ்வுலகில் நீண்ட நாள் வாழ ஆசைப்படுகின்றோம்?
பைபிள் வழியாக இறைவன் நம்மோடு பேசுகிறார் என்பது தெரிந்திருந்தும்
தினமும் பைபிள் வாசிக்கும் நாம் அதன்படி ஏன் நடப்பதில்லை?
லௌகீக வாழ்வை விட ஆன்மீக வாழ்வுதான் சிறந்தது என்பதை அறிந்திருந்தும்
இறைவனின் அருள் செல்வத்தை விட
இவ்வுலகில் பொருட் செல்வத்தை ஏன் அதிகமாகத் தேடுகின்றோம்?
மரணம் அடைந்த பின்புதான் விண்ணுலகம் செல்ல முடியும் என்பதை அறிந்திருந்தும்
ஏன் மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம்?
விண்ணுலகில் வாழ பயமாக இருக்கிறதா?
சிலுவையை, அதாவது துன்பத்தைக் கண்டு பயப்படுகிறோமே,
இயேசுவின் சீடர்களாக வாழ பயமாக இருக்கிறதா?
ஒன்று புரிகிறது.
அறிவது வேறு, நடப்பது வேறு.
அறிவது புத்தியைச் சார்ந்தது.
நடப்பது இருதயத்தின் அன்பைச் சார்ந்தது.
நம்மைவிட சாத்தானுக்கு அறிவு அதிகம்.
ஆனால் அன்பு? zero.
அன்பே இல்லாத அறிவாளிகள் சாத்தானுக்குச். சமம்.
ஒரு மரத்தின் தன்மை அதன் உருவத்தை வைத்து அல்ல,
கனியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு மனிதனின் தன்மையை அவனது அறிவை வைத்து அல்ல,
அவனது அன்பை வைத்தும் அவன் செய்யும் நற்செயல்களை வைத்தும்தான்
தீர்மானிக்க முடியும்.
அன்பு செய்வதை தவிர வேறு எதுவும்
தெரியாதவர்களுக்குத்தான் மோட்சத்தில் முதலிடம்.
புத்தி, மனது, இதயம் என்ற மூன்று தத்துவங்களும் இறைவனால் நமக்கு இலவசமாக தரப்பட்டவை.
புத்தி அறிவதற்கு.
மனது ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு.
இதயம் அறிந்ததை அன்பு செய்வதற்கு. அன்புதான் வாழ்க்கை.
இறை வார்த்தையை அறிவோம்.
இறை வார்த்தையை மனதிற்கொள்வோம்.
இறை வார்த்தையை அன்பு செய்து வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment