Saturday, February 1, 2020

எதுவும் தற்செயலாக நடப்பது இல்லை.

எதுவும் தற்செயலாக நடப்பது இல்லை.
*****      *****     *****      *****

சும்மா, தற்செயலாக என்ற வார்த்தைகள் திட்டமிடாத செயல்களைக் குறிக்க நாம்  பயன்படுத்துபவை.

"எதற்காக வந்தீர்கள்?"

"சும்மாதான்."

*              .*             *             *

"எனது பால்ய கால நண்பனைத் தற்செயலாகச் சந்தித்தேன்."


சில சமயங்களில் நாம் எதிர் பார்த்த ஒன்று எதிர் பாராத சந்தர்ப்பத்தில் கிடைக்கும்.

 இதை நாம், 'தேடி அலையும்போது கிடைக்காதது தற்செயலாக கிடைத்தது' என்போம்.

ஆனால் நமது வாழ்வில் எதுவும் தற்செயலாக நடப்பது இல்லை.

நாம் எதையும் சும்மா செய்வது இல்லை.

நடப்பது எல்லாம் இறைவன் திட்டப்படி தான் நடக்கிறது.

நாம் விடும் மூச்சு கூட இறைவன் திட்டப்படி தான் நடக்கிறது.

திட்டமிட்ட நேரத்தில் துவங்கும்  மூச்சு, 

 திட்டமிட்ட நேரத்தில்  நின்று விடுகிறது.

ஒன்று இன்று நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

 ஆனால் அது இறைவனது திட்டத்தில் இல்லாவிட்டால் நாம் எவ்வளவு முயன்றாலும் நடக்காது.

அதே காரியம் நாம் எதிர்பாராத நேரத்தில்  நமது முயற்சி இன்றியே நடக்கும். 

எலிசபெத்தம்மாளும், சக்கரியாசும் திருமணம் ஆன நாளிலிருந்து குழந்தைபெற முயற்சி செய்திருப்பார்கள்.

 ஆனால் வயதான காலத்தில்தான் அருளப்பர் அவள் வயிற்றில் பிறக்க வேண்டும் என்பது இறைவனது திட்டம்.

சாதாரண காரியங்கள் கூட தற்செயலாக நடப்பதுபோல் தோன்றுபவை,

 கூர்ந்து கவனித்தால்  அவற்றிற்குப் பின்னால் ஒரு  திட்டம்  இருப்பது தெரியும்.

நண்பர் நண்பர் ஒருவர் கூறிய
அவரது அனுபவம்.

ஒரு நாள் அவரும் அவரது  மனைவியும் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் செல்லத் திட்டமிடுகிறார்கள்.

பேருந்து முற்பகல் 10 மணிக்கு. 

" 9 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால்தான் 10 மணி பேருந்தைப் பிடிக்க முடியும்," என்று மனைவியிடம் கூறுகிறார்.

''அவசரப்படாதீர்கள். நேரத்திற்குப் புறப்பட்டு விடுவேன்."

என்றவர்கள்  9.30க்குதான் தயாரானார்கள். 

புறப்படும் நேரத்தில் கணவன் கொஞ்சம் பொறு, டாய்லெட்டுக்குப் போய்விட்டு வந்து விடுகிறேன்."

"இவ்வளவு நேரமும் என்ன செய்தீர்கள்?"

அவர் உள்ளே போய் விட்டு வெளியே வந்து புறப்பட்டு வேகவேகமாக நடந்து பேருந்து நிலையத்தை அடைந்தபோது பஸ் புறப்பட்டு போய்க்கொண்டிருந்தது.

"நீ சீக்கிரம் புறப்பட்டிருந்தால்  பேருந்தை பிடித்திருக்கலாம்."

"நீங்கள் டாய்லெட்டுக்கு போகாது இருந்திருந்தால் பேருந்தை பிடித்திருக்கலாம்."

"அடுத்த பேருந்து 11 மணிக்குத்தான்."

"நீங்கள் அவசரப் படுத்தாது இருந்திருந்தால் அடுத்த பேருந்துக்கு கொஞ்சநேரம் காத்திருந்தால் போதும்.

 இப்போ ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது."

அவர்கள் வாதாடிக் கொண்டிருக்கும்போது

 அவர்கள் பார்க்கச் சென்ற உறவினர் 

ஒரு பேருந்திலிருந்து இறங்கி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவர்களுக்கு ஆச்சரியம்.

"உங்களைப் பார்க்கத்தான் புறப்பட்டு வந்தோம், பேருந்தை விட்டு விட்டோம்.

 அதுவும் நல்லதுக்குத்தான்."

"நானும் உங்கள் வீட்டிற்குத்தான் வந்துகொண்டு இருக்கிறேன்."

"அப்படியா? 'ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும். வருகிறோம்' என்று மெசேஜ் கொடுத்து இருந்தேனே!

நாங்கள்தான் வீட்டிற்கு வந்திருப்போமே. நீங்கள் ஏன் அலைய வேண்டும்?''

"மெசேஜ்  வந்தது, ஆனால் வருகிறோம் என்று வரவில்லையே.   'ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும்.'என்று தானே இருந்தது!"

"இந்த மனுஷனுக்கு மறதி ஜாஸ்தி. எந்த வேலையை செய்தாலும் அரைகுறை தான்!"

"ஏண்டி, அதை சொல்ல பஸ் ஸ்டாண்ட் தான் கிடைத்ததா?"

இப்படி பேசி கொண்டிருந்த போது மற்றொரு குரல் அவர்களை நோக்கி வந்தது.


"What a pleasant Surprise!

அத்தான்,உங்களை பார்க்க வர ஒரு வாரமாய் திட்டம் போட்டுக் கொண்டிருந்தேன்.

 வர நேரம் கிடைக்க வில்லை.

 இப்போது வேறொரு ஊருக்கு
 போய்க்கொண்டு இருக்கும்போது பேருந்தில் இருந்தே உங்களைப் பார்த்துவிட்டேன்.

போவதைக் கட் பண்ணி  விட்டு இறங்கி வருகிறேன்"

"அப்படியா?அதிசயமாக இருக்கிறது! 

நாம் இங்கே சந்திக்க வேண்டும் என்பது இறைவனுடைய திட்டம் போலும்!

அதனால்தான் நமது திட்டம் போல் எதுவும் நடக்கவில்லை.
இறைவனது திட்டம்தான் நிறைவேறி இருக்கிறது.
வாருங்கள்,வீட்டிற்குப் போய்  பேசுவோம். Auto!"

இந்த மாதிரி அனுபவங்கள் எல்லோர் வாழ்விலும் நடந்திருக்கும்.

நாம் அவற்றை தற்செயல் நிகழ்ச்சிகள் என்று நினைத்திருப்போம்.

 ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் இறைவனுடைய பராமரிப்பின் திட்டப்படிதான்  
நடந்திருக்கும்.

நாம் போடும் திட்டங்களை அப்பப்போ சூழ்நிலைக்கு ஏற்ப  மாற்றவும் செய்வோம்.

முழு திட்டத்தையும் கைவிடவும் கூட செய்வோம்.

ஆனால் நாம் இப்படிச் செய்வது கூட இறைவனது திட்டத்திற்கு உட்பட்டதுதான்.

அவரது திட்டங்கள் மாறுவதில்லை.

நாம் நினைக்கலாம் நமது மூளையை பயன்படுத்தி காரியங்களை சாதிக்கிறோம் என்று. 

நாம் எங்கே பிறக்க வேண்டும்,

 யாரிடம் பிறக்க வேண்டும்,

எப்படி வளரவேண்டும்,

 என்ன படிக்க வேண்டும்,

 என்ன வேலை பார்க்க வேண்டும்,

யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், 

எத்தனை குழந்தைகளை பெற வேண்டும் etc. etc என்று  தீர்மானிப்பவர் அவரே.

அப்படியானால் நமது சுதந்திரம்?

நமது சுதந்திரத்தில் இறைவன் குறுக்கிடுவது இல்லை.

நமது முதல் பெற்றோர் பாவம் செய்வதென்று தீர்மானித்த போது இறைவன் அதில் குறிக்கிடவில்லை.

இறைவனது கட்டளைகளின் படி நடப்பதா, அவற்றை மீறி நடப்பதா என்று தீர்மானிக்க நமக்கு முழு சுதந்திரம் உண்டு.

நமது முழு சுதந்திரத்தையும் இறைவனிடம் கொடுத்துவிட்டு

 இறைவனின் சித்தப்படி தான் நடக்க வேண்டும் என்று தீர்மானிக்கவும் நமக்கு முழு சுதந்திரம் உண்டு.

இதைத்தான் அன்னை  மரியாள் செய்தாள். 

சில கேள்விகள் இங்கே எழும்:

1.நமக்கு முழு சுதந்திரம் இருக்கிறது என்றால் இறைவனது திட்டத்திற்கு எதிராக செயல்படவும் நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தலாம் அல்லவா?

நமது சுதந்திரத்தில் இறைவன் குறுக்கிட மாட்டார் என்றால் அவரது திட்டத்துக்கு எதிராக நாம் சுதந்திரமாக செயல்பட்டால் திட்டம் என்ன ஆவது?

அவரது திட்டம் மாறாது என்றால் நமது சுதந்திரம் என்னாவது?

2..பிற சமயத்தவர் விதியை நம்புகிறார்கள். எல்லாம் விதிப்படி நடக்கும் என்கிறார்கள். நாம் விதியை நம்புவது இல்லை.

ஆனால் இறைவனது திட்டத்தை நம்புகிறோம்.

 இறைத் திட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டு கேள்விகளுமே இறைவனையும் நம்மைப்போல் நினைத்துக்கொண்டு கேட்கப் படுபவை.

நாம் எல்லா தன்மைகளிலும் அளவு உள்ளவர்கள். 

நமது சிந்தனை அளவு உள்ளது. 

அறிவு அளவு உள்ளது.

 ஞானம் அளவு உள்ளது.

 பார்வை அளவு உள்ளது.

 ஞாபகம் அளவு உள்ளது.

இவ்வுலக வாழ்க்கை அளவு உள்ளது.

நிகழ்காலத்தில் நிகழ்வது மட்டுமே நமக்கு தெரியும்.

நமது செயல் திறமையும் அளவு உள்ளது.

நிகழ்காலம் நம் கையில் என்பதற்காக பசிபிக் பெருங்கடலை நம்மால் காலால்  தாண்ட முடியுமா?

கடந்த காலத்தில் நடந்தவை  நமது ஞாபக சக்திக்கு ஏற்றபடிதான் தெரியும்.

முற்றிலும் மறந்து போகவும் வாய்ப்பு உண்டு.

எதிர்காலத்தை பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

அடுத்த வினாடி நடப்பது நம் கையில் இல்லை.

ஆனால் கடவுள் தனது எல்லா பண்புகளிலும்  அளவு கடந்தவர்.

அவரது அன்பு அளவற்றது.

நீதி அளவற்றது.

வல்லமை அளவற்றது.

ஞானம் அளவற்றது..

காலங்களைக் கடந்தவர், நித்தியர்.

நமது முக்காலமும் அவருக்கு நித்தியமாகத் தெரியும்.


நமக்கு எதிர்காலம் தெரியாததால் நமது திட்டம் நிரந்தரம் ஆனது அல்ல.

நாளைய நிகழ்வுகளை யூகித்தே இன்று  திட்டம் தீட்டுகிறோம்.

 நமது யூகம் தவறானால் திட்டமும் தவறாகிவிடும்.

 இன்று தீட்டிய திட்டத்தை நாளையே மாற்ற வேண்டி வரும், இன்றே கூட  மாற்ற  வேண்டி வந்தாலும் வரும். 

அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது.

 ஒரு நிமிடத்தில் சாலையை கடந்து விடலாம் என்ற  நம்பிக்கையுடன் சாலையை கடக்க முயற்சிப்போம்.

 பாதி தூரத்தில் ஒரு நாய் நமது குறுக்கே வரும் என்றோ,

நாம் தடுமாறும் நேரம் பார்த்து ஒரு பைக் வேகமாக வரும் வரும் என்றோ நமக்கு தெரியாது.

விளைவு?

Accident!



 ஆனால் இறைவனுக்கு நாம் செய்யவிருக்கும் எதிர்கால செயல்கள் அனைத்தும் நித்தியமாகத் தெரியும்.

நமது சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவோம் என்பதுவும் இறைவனுக்கு நித்தியமாகத் தெரியும்.

 சுதந்திரத்தில் குறுக்கிடமாட்டார்.

எப்படி பயன்படுத்துவோம் என்பதை அனுசரித்து திட்டம் தீட்டுவார்.

நமது முதல் பெற்றோர் பாவம் செய்வார்கள் என்று அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.

அவர் பாவம் செய்த  சுதந்திரத்தில் குறுக்கிடவில்லை.

ஆனால் மனுக்குலத்தை மீட்க தானே  மனிதனாக பிறப்பது என்ற திட்டத்தையும் நித்திய காலமாகவே தீட்டிவிட்டார்,

நாம் எப்போதெல்லாம் பாவம் செய்வோம் என்பதை அறிவதால் 
 
நாம் பாவத்திற்காக வருந்த தூண்டும் தனது அருள் வரங்களையும் 

நித்திய காலமாகவே தயார் நிலையில் வைத்திருக்கிறார்.

பள்ளமான இடத்தை நோக்கி தண்ணீர் வேகமாக வருவதுபோல் 

பாவிகளை நோக்கி இறைவன் அருள் வரம் நிறைய வரும்.

நாம் மனம் திரும்பி மன்னிப்பு கேட்பதற்கான எல்லா சூழ்நிலைகளும் இறைவனது திட்டத்தில் அடங்கும்.

பாவ நிலையில் நாம் இருக்கும்போது நமக்கு கஷ்டங்கள் வருவது நம்மை மனம் திருப்புவதற்காகத்தான்.

புனித நிலையில் நமக்கு  கஷ்டங்கள் வருவது நம்மை பரிசுத்தத்தனத்தில் வளர்ப்பதற்காக தான்.

நாம் எப்போதெல்லாம்  எதைக்கேட்டு இறைவனிடம் வேண்டுவோம் என்பதும் அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.

நமது வேண்டுதல்களுக்கான பதிலும் நித்திய காலமாகவே தயார் நிலையில் இருக்கும்.

நாம் எப்போது நமது பாவங்களுக்காக மன்னிப்பு  கேட்போம் என்பதும் அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.

 ஆகவே மன்னிப்பும் நித்திய காலமாகவே தயார்  நிலையில் இருக்கும்.

நமது ஒவ்வொரு அசைவையும் நித்திய காலமாகவே அறிந்த இறைவன் நமது மீப்பு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு தீட்டும் திட்டம் மாறாது.

அவரை அன்பு செய்து,

 அவரது கட்டளைகளின் வழி நடந்து,

 அவருக்காகவே வாழ்ந்து,

 வாழ்க்கை எப்படி நகர்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டு,

'எல்லாம் இறைவன் செயல், நம்மை அவர் எந்நிலையிலும் கைவிட மாட்டார்'

 என்ற உறுதியான நம்பிக்கையில் நாம் வாழ்ந்தால்,

 மீட்பு பெறுவது உறுதி.

 இறைவனின் திட்டத்தின் நோக்கம் நமது மீட்பு,

 மீட்பு மட்டும்தான்.



விதியும் இறைத் திட்டமும் ஒன்றா?

இல்லை. விதியை நம்புவோர் இறைவன் நமக்கு அளித்த சுதந்திரத்தை ஏற்று கொள்வது இல்லை.

அவர்கள் கொள்கைப்படி கடவுள் என்ன விதித்திருக்கிறாரோ அதுதான் நடக்கும், 

அதாவது நமது மனித சுதந்திரமும் விதிக்கு உட்பட்டது ஆகிவிடும்.

 விதியை மீறி சுதந்திரமாக செயல்பட முடியாது.



 ஆனால் இறைத்திட்டத்தில் நமக்கு முழு சுதந்திரம் உண்டு.

 நமது சுதந்திரத்தை நாம் பயன்படுத்தும் முறையை வைத்துதான்  இறைவன் தன் திட்டத்தையே தீட்டுகிறார்.


வேறு வார்த்தைகளில் சொல்வதானால் 

நம்முடைய சம்மதமின்றி நம்மைப் படைத்த கடவுள்

 நம்முடைய முழு மன  சம்மதத்துடன்தான் நம்மை
மீட்பார்.

நம்மை கேட்காமலேயே அவராகவே மனித உரு எடுத்து,  

நமக்காகப் பாடுபட்டு சிலுவையில் மரித்து

 நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்திருக்கிறார்.

நமது மீட்பிற்கான பலன்களைப் பெற நாம் இறைவனின் அருள் வரங்களோடு ஒத்துழைக்க வேண்டும்.

ஒத்துழைப்பு என்றால் என்ன?

பள்ளி இறுதித் தேர்வில் வெற்றிபெற பள்ளிக்கூடம் சென்றால் மட்டும் போதாது.

வகுப்பிற்குள்ளும் போகவேண்டும்.

வகுப்பிற்குள் சென்றால் மட்டும் போதாது. ஆசிரியர் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

கவனித்தால் மட்டும் போதாது.
பாடங்களை மனதில் பதியவைக்க வேண்டும்.

பதிய வைத்தால் மட்டும் போதாது.

மனதில் பதியவைத்ததை தேர்வு விடைத் தாளிலும் பதிய வைக்க வேண்டும்

தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

மீட்பு பெற ஞானஸ்நானம் பெற்றால்மட்டும் போதாது.

அது ஆரம்பம் தான். 

இறைவனது அருள் வரங்களைப் பெற செபம், தவம்,  தேவத்திரவிய அனுமானங்கள் ஆகியவற்றை நமது வாழ்வாக்க வேண்டும்.

அவற்றின் மூலம் நாம் பெறும் அருள் வரங்களோடு ஒத்துழைத்து இறை உறவில் வாழவேண்டும்.

இறைவன் நமது வாழ்வில்  செயலாற்றுவார்.

அவர் ஆற்றும் செயல்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் என்ன செய்தாலும் அது நமது மீட்பிற்காகத்தான். 

நமது வாழ்வில் எது நடந்தாலும் அது இறைவனின் திட்டப்படி நமது நன்மைக்காகவே நடக்கிறது
என்று ஏற்றுக் கொண்டு

 இறுதிவரை இறைவன் சித்தத்திற்கு அடி பணிந்து நடந்தால் நமது மீட்பு உறுதி.

மருத்துவமனையில் treatment பெறுவோர் மருத்துவரிடம் தம்மை முழுவதுமாக ஒப்படைத்து விட வேண்டும்.

அதே போன்றுதான் நமது ஆன்மீக வாழ்வில் நம்மை முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

நம்மில் செயல் புரிய வேண்டியது நாம் அல்ல, இறைவன் தான்.

 வாழ வேண்டியதும் நாம் அல்ல, இயேசுவே நம்மில் வாழ வேண்டும்.

லூர்து செல்வம். 

No comments:

Post a Comment