Friday, February 21, 2020

"தோற்றத்தைப் பார்த்து அவனை நடத்தினால், நீங்கள் செய்வது பாவம்."(யாகப்பர். 2:9)

"தோற்றத்தைப் பார்த்து அவனை நடத்தினால், நீங்கள் செய்வது பாவம்."
(யாகப்பர். 2:9)
******************************
வசதியான ஆள். 

வசதியான மட்டுமல்ல வசதியை அனுபவிக்கும் ஆள்.

 வசதியை மட்டுமே விரும்பும் ஆள்.

வசதியை மட்டுமல்ல வசதியானவர்களை மட்டுமே விரும்பும் ஆள்.

வசதியானவர்களை விரும்புவது மட்டுமல்ல 

வசதி அற்றவர்களை வெறுக்கும் ஆள்.

வெறுப்பது மட்டுமல்ல, பக்கத்திலே அண்ட விடாத ஆள்.



கற்பனை செய்து பாருங்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆள் ஒரு நாள் தனது மகிழ்வுந்தில்  பயணித்துக் கொண்டிருக்கிறார்.

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் 

மகிழ்வுந்து நின்று விடுகிறது.

இறங்கி எஞ்சினைத் திறந்து பார்க்கிறார்.

நின்றதற்கான காரணம் புரியவில்லை.

அவருக்கு மகிழ்வுந்தை ஓட்டத் தெரியும்,

அனுபவிக்கத் தெரியும்.

அதற்கு மேல் ஒன்றும் தெரியாது.

மகிழ்வுந்து நடுரோட்டில்  நிற்கிறது.

அவ்விடத்தில் ஒரு ஈ, காக்கா கூட இல்லை.

யாராவது வந்தால்தான் அதை ஒரு ஓரமாகத் தள்ளிவிடலாம்.

யாருக்காவது phone பண்ணி வரச் சொல்ல வேண்டும்.

இலட்சக்கணக்கில் மதிப்புள்ள phone.

கையில் எடுத்து சாலையின் ஒரு ஓரமாக நின்றார்.

அவருடைய Status க்கு ஓரமாகப் போகக்கூட கார் வேண்டும்.

வேறு வழி இல்லை. நடந்துதான்  சென்று நின்றார்.

phone த் தடவ ஆரம்பித்தபோது என்ன காரணமோ தெரியவில்லை,

கை நடுங்கி phone கீழே விழுந்துவிட்டது.

அவ்வழியாகச் சென்றிருந்த எருமை மாடு குளுகுளு  என்று சாணி போட்டிருக்கிறது.

அதை அவர் கவனிக்கவில்லை.

நல்லவேளை அவர் சாணியின் மீது மிதிக்கவில்லை.

ஆனால் கைதவறி விழுந்த Phone நேராகச் சென்று சாணியின் நடுவில் விழுந்தது.

சாணி குளுகுளுவென்று இருந்ததால் விழுந்த phone அதற்கு உள்ளேயே போய் மறைந்து கொண்டது.

வாழ்க்கையின் முதன்முறையாக சாணியை உற்று நோக்கினார் நம்ம ஆள்.

முகம் கோணிக்கொண்டு போனது.

Phone ஐ எடுக்க வேண்டுமானால் குனிய வேண்டும்.

சாணிக்குள் கைவிட வேண்டும்.

அவரது Status அவரைத் தடுத்தது. அவர் சாணிக்குள் கைவிட்டால் அதன் மதிப்பு என்ன ஆவது!

சுற்று முற்றும் பார்த்தார், யாரும் வருகிறார்களா என்று.

ஒரே ஒரு ஆள் மட்டும் எதிர்த்திசையிலிருந்து  வந்து கொண்டு இருந்தான்.

Strong ஆன ஆள்தான். ஆனால் பிச்சைக்காரன்.

உலகிலுள்ள அத்தனை கலர்களும் கலந்து ஒன்றாக ஒட்டிக்கொண்டிருந்த அழுக்கு வேட்டி சட்டை.

தரியே  கண்டு பிடிக்கப்பட்டிராத காலத்தில் நெய்ய பட்டிருக்க வேண்டும்!

தையல் மிஷினே கண்டு பிடிக்கப்பட்டிராத காலத்தில் தைக்கப்பட்டிருக்க வேண்டும்!

அசிங்கமான மூஞ்சி!

கண்ணாடியில் பார்த்தால் அவனே பயந்து ஓடியிருப்பான்!

நம்ம ஆள் எப்படி பார்ப்பார்?

வேறு வழியில்லை.

 பார்த்துதான் ஆக வேண்டும்.

 பிச்சைக்காரன் மெதுவாக நகர்ந்து அருகில் வந்தான்.

"தம்பி!"

பிச்சைகாரனைப் பார்த்து தம்பி என்று கூப்பிட்ட முதல் ஆள் நம்ம ஆளாகத்தான் இருக்க வேண்டும்.

இப்போ அவன் சூழ்நிலையின் கைதி. தப்பிக்க முடியாது. வேறு வழி இல்லை. கூப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

"ஐயா, என்னையா கூப்பிட்டீங்க?"

"ஆமா. வா."

பிச்சை போடத்தான் கூப்பிடுகிறார் என்று எண்ணி கையை நீட்டிக்கொண்டே  அருகில் சென்றான்.

வேறு வழி இல்லாமல் நம்ம ஆள் ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில்  போட்டான்.

"சாமி நல்லா இருக்கணும்." கும்பிட்டுக் கொண்டே சொன்னான்.

"ஒரு உதவி வேண்டுமே!"

பிச்சைகாரனைப் பார்த்து உதவி கேட்டது அவரது வாழ்நாளில் இதுவே முதல் தடவை.

"என்ன சாமி செய்யணும்?"

"இந்த சாணிக்குள் என்னுடைய போன் விழுந்து விட்டது.

அதை கொஞ்சம் எடுத்துத் தரவேண்டும்."

"கொஞ்சம் என்ன, முழுவதுமே எடுத்துத் தருகிறேன்."

குனிந்து சாணிக்குள் கையை விட்டு phone ஐ வெளியே எடுத்தான்.

Phone முழுவதும் சாணி ஒட்டி கொண்டிருந்தது.

பிச்சைக்காரனை பொறுத்தமட்டில் சாணி கையில் படுவது பெரிய காரியம் இல்லை.

ஆனால் நம்ம ஆளைப் பொறுத்தமட்டில் அது நடக்க கூடாத பெரிய காரியம்!

"தம்பி அதைக் கொஞ்சம் துடைத்துக் கொடேன்."

பிச்சைக்காரன் கொஞ்சம் கூட அசிங்கப் படாமல் தனது வேட்டியைக் கொண்டு phoneஐத்  துடைத்தான்.

வேட்டி சாணியை விட அழுக்காக இருந்தது.

phoneல் இருந்த சாணி அவனது வேட்டியில் ஒட்டிக்கொண்டது.

வேட்டியில் இருந்த அழுக்கு phoneல்  ஒட்டிக்கொண்டது.

நம்ம ஆளுக்கு தாங்க முடியவில்லை.

"தம்பி  ஒரு சுத்தமான துணியை  வைத்துத்  துடைக்கக் கூடாதா?"

"சாமி எங்கிட்ட இருப்பது இந்த  துணிதான்."

நம்ம ஆள்  தனது கைக்குட்டையை  எடுத்துக் கொடுத்தான்.

கைக்குட்டையின் மதிப்பு நூறு ரூபாய்.

நம்ம ஆளுக்கு அது ஒன்றும் பெரிதல்ல.

பிச்சைக்காரன் கைக்குட்டையைக் கொண்டு phone ஐ நன்கு  துடைத்தான்.

நம்ம ஆளிடம் (கடைசியில் இதுவே அவனது பேராக மாறிவிட்டது!) phone ஐக் கொடுத்தான்.

பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் phone கையில் வாங்கினான்.

ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்து "உதவிக்கு நன்றி" என்று சொன்னான்.

ஒன்றும் கொடுக்காவிட்டால் அவனது status என்ன ஆவது!

"சாமி, கைக்குட்டை."

"நீயே வைத்துக் கொள்."

"சாமி, நீங்க நல்லா இருப்பீங்க!"


கதை சொல்லுவது நமது நோக்கம் அல்ல. கருத்தை வலியுறுத்தவே கதை.

வசதியான நபரும் பிச்சைக் காரனும் ஒரே பரலோக தந்தையின் பிள்ளைகள்.

அதாவது உடன்பிறந்த சகோதரர்கள்.

ஆனால் சகோதர உறவை இருவருமே தெரிந்து கொண்டதாக தெரியவில்லை.

இயல்பிலேயே ஏழைகளை வெறுக்கும் வசதியான நபர் வேறு வழி இல்லாமல் பிச்சைகாரனின் உதவியை நாடுகிறார்.

பிச்சைக்காரனும் அவரை சகோதரன்  என்று நினைத்து உதவவில்லை.

ஏதோ ஒரு ஆள் உதவி கேட்டார். அவன் உதவி செய்தான். பதிலுக்கு கொடுத்த பணத்தையும் வாங்கிக்கொண்டான்.

இங்கு சகோதர உறவு ஒன்றும் வெளிப்படவில்லை.



"ஆனால் நீங்கள் ஒருவனின் தோற்றத்தைப் பார்த்து அவனை நடத்தினால், நீங்கள் செய்வது பாவம்."

என்று இறைவார்த்தை
 கூறுகிறது.

நம்மைச் சுற்றி வாழும் அனைவரும் நமது சகோதர சகோதரிகளே.

 ஆனால் நாம் எந்த அடிப்படையில் அவர்களோடு பழகுகிறோம்?

நமது குடும்பத்தில் அப்பா அம்மா அண்ணன் தங்கை உறவுகள் இவ்வுலகைச் சார்ந்தவை.

இவை அன்பை அடிப்படையாக  கொண்டவை.

இவை இந்த உலகத்தை சார்ந்தவையாக இருந்தாலும்,

இவை அடிப்படையாக கொண்ட அன்பு விண்ணுலகைச் சேர்ந்தது.

அன்பே உருவான கடவுள் நம்மைப் படைக்கும்போது நம்மோடு அவரது அன்பையே தாராளமாக பகிர்ந்து கொண்டார்.

 பரிசுத்த தம தமதிரித்துவ  கடவுள் தன்னுள் நிலவியஅளவற்ற அன்பை 
நம்மோடு பகிர்ந்து கொண்டபோது 

நாமும் அன்பினால் இணைக்கப்பட்டு ஒரே மனுக்குலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அன்பு கயிறு போன்றது.

அதற்குள் மாட்டியவர்களைப் பிரிய விடாமல்  கட்டிப்போடுகிறது.

நம்மை கடவுளோடு பிணைக்கும் அதே அன்பு

 நம்மை மனுக்குலத்தின் ஒவ்வொரு உறுப்பினரோடும் பிணைக்கிறது.

ஆகவே மனுக்குல உறுப்பினர்கள் அன்பு என்னும் உறவால் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆகவேதான் மற்றவர்களோடு நமது உறவு அன்பை மட்டும் தான் அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் பெற்றவன்.

Each human being is unique.

ஒருவனைப் போல் மற்றவன் இருப்பதில்லை.

அவன் வாழும் சமுதாயத்திலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம், இருக்கும்.

அரசனும் குடிமகனும் சமூக அந்தஸ்தில் ஏற்ற தாழ்வு உள்ளவர்கள்.

அவ்வாறே

 தந்தையும்,மகனும்.

ஆசிரியரும், மாணவரும்.

முதலாளியும், தொழிலாளியும்.

நிர்வாகியும், நிர்வகிக்கப்படுகிறவர்களும்.

சமுதாய ரீதியில் இவர்களிடையே ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும்

 அன்பின் அடிப்படையில் எல்லோரும் சமமே.

இதைத்தான் சமத்துவம் என்கிறோம்.

அண்ணன் மூத்தவனாகவும் மகன் இளையவனாகவும் இருக்கலாம்.

அன்பு இவர்களைச் சமம் ஆக்கி விடுகிறது.

முதலாளி தொழிலாளியை விட அந்தஸ்தில் பெரியவராக இருக்கலாம்.

ஆனால் அவரும்  தன்னை தான் நேசிப்பது போல தொழிலாளியை நேசிக்க வேண்டும். இதுதான் கிறிஸ்தவம்.

கிறிஸ்தவ அன்புக்கு ஏற்றத்தாழ்வுகள் கிடையாது.

அதனால்தான் கடவுளாகிய இயேசு அன்பின் நிமித்தம் மனிதன் ஆனார்.

பரிசுத்தர் ஆகிய இயேசு அன்பின் நிமித்தம் பாவிகளோடும் அமர்ந்து உண்டார்.


"தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும்.

 வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்."
(மத்.12:49, 50)

இயேசுவின் தாயாகிய
மரியாள் இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக தன் வாழ்க்கையை முழுவதும் அர்ப்பணித்தாள். இந்த அற்பணத்தின் அடிப்படை அன்பு.

அன்பின் அடிப்படையில் தான் சீடர்களும் இயேசுவையே பின்பற்றுகிறார்கள். அவர்களும் மரியாளைப் போலவே இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள்.

ஆகவேதான் இயேசு தன் சீடர்களையும் தனது  'தாய்' என்கிறார்.

அன்பு அந்தஸ்தின் ஏற்றதாழ்வு உள்ளவர்களையும் சமம் ஆகிவிடுகிறது.

ஆகவே மற்றவர்களோடு நம்முடைய உறவு அன்பின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே ஒழிய 

அந்தஸ்தின் அல்லது தோற்றத்தின் அடிப்படையில் அல்ல.

முதலாளியிடம் காட்டும் அதே அன்பைத்தான் தொழிலாளர்களிடமும் காட்ட வேண்டும்.

முதலாளிக்கு கொடுக்கும் அதே மரியாதையைத்தான் தொழிலாளிக்கும் கொடுக்க வேண்டும் ஆகவேதான் புனித யாகப்பர் தனது மடல் மூலமாக நமக்குச் சொல்லுகிறார்,


".என் சகோதரர்களே, மாட்சிமை மிக்க நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசமுள்ள நீங்கள் மக்களின் தோற்றத்தைப் பார்த்து அவர்களை நடத்தாதீர்கள்."

செல்வந்தர் ஒருவர் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

தன்னைப்போல வசதி உள்ளவர்களை மட்டும் விருந்துக்கு அழைத்தார்.

விருந்து நாளில் அழைக்கப்பட்டோர் டிப்டாப்பாக டிரஸ் செய்து தங்கள் பணக்கார திமிரைக காட்டிக்கொண்டு விருந்துக்கு வந்தார்கள்.

ஒரே ஒருவர் மட்டும் தான் மற்றவர்களைவிட பெரிய செல்வந்தராக இருந்த போதிலும் விருந்துக்கு வரும்போது சாதாரண உடை அணிந்து வந்தார்.

வாயில் காவலன் அவரைப்பார்த்து, 

"இப்படி உடை அணிந்தவர்களை உள்ளே விடக்கூடாது என்பது முதலாளியின் கட்டளை. ஆகவே நீங்கள் வீட்டுக்கு போகலாம், '' என்றான்.

அவன் வீட்டிற்கு சென்று, மற்றவர்களைப் போல டிப் டாப் உடை அணிந்து மறுபடியும் வந்தான்.

வாயிற்காவலன் அவனை உள்ளே அனுமதித்தான்.

விருந்து ஆரம்பம் ஆகியது.

அறுசுவை  உணவு பரிமாறப்பட்டது.

எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

முதலில் மறுக்கப்பட்டு பிறகு அனுமதிக்கப்பட்ட  நபர் வித்தியாசமாக சாப்பிட்டார்.

எல்லோரும் உணவை அள்ளி வாயில் வைத்தார்கள்.

இவர் மட்டும் உணவை அள்ளி தனது சட்டைப்பைக்குள்ளும், pants pocket க்குள்ளும் திணித்தார்.

திராட்சை ரசத்தை சட்டை மேல் ஊற்றினார்.

எல்லோரும் அவரைப்பார்த்து சிரித்தார்கள்.

விருந்துக்கு அழைத்தவர் இவர் அருகே வந்து

"இந்த பைத்தியத்தை உள்ளே விட்டது யார்?"

என்று கேட்டார்.

"வேறு யார்? உமது வாயில் காவலன் தான்."

" உன்னை அழைத்தது யார்?"

நண்பர் அழைப்பிதழை எடுத்துக் காட்டினார்.

"இதுதான் சாப்பிடும் லட்சணமா?''

''ஹலோ! லட்சணத்தைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம்.

நான் முதலில் சாதாரணமான, லட்சணமான உடை அணிந்துதான் வந்தேன்.

ஆனால் அனுமதி மறுக்கப்பட்டேன்.

மறுபடியும் டிப் டாப் ட்ரஸோடு வந்தபின்தான் அனுமதிக்கப்பட்டேன்.

இப்போது சொல்லுங்கள், விருந்துக்கு அழைக்கப்பட்டவன் நானா, என்னுடைய டிப் டாப் ட்ரஸா?

எனக்கு கிடைக்காத அனுமதி என் டிரஸ்சுக்குக் கிடைத்தது.

ஆகவேதான் அதற்கு உணவை ஊட்டிக் கொண்டிருக்கிறேன்.

இதில் என்ன தப்பு?"

அழைத்தவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

நாமும் அநேக சமயங்களில் அவரைப்போல் தான் நடந்து கொள்கிறோம்.

நல்ல உடை அணிந்தவன் நம் அருகில் அமர்ந்தால் முகம்  மலர்கிறோம்.

பிச்சைக்காரன் நம் அருகில் அமர்ந்தால் நகர்கிறோம். 

பிறக்கும்போது டிப் டாப் ட்ரஸோடா பிறந்தோம்.

மனிதன் இறைவனால் படைக்கப்பட்டவன். அதற்குரிய மரியாதையை அவனுக்குக் கொடுப்போம்.

மதிப்போம் மனிதனை, தோற்றத்தை அல்ல.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment