"தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை."
************** ************
ஒரு பையன் வகுப்பில பாடம் நடந்து கொண்டிருந்தபோது தூங்கிவிட்டான்.
ஆசிரியர் அவனை எழுப்பிவிட்டு,
"இது தான் தூங்குகிற நேரமா?"
"தெரியாம தூங்கிட்டேன், சார், மன்னிச்சிடுங்க."
&
"ஏண்டா பரீட்சையில காப்பியடிச்ச?"
"தெரியாம செஞ்சிட்டேன், சார், மன்னிச்சிடுங்க''
&
"ஏண்டா சுவர்ல 'வாத்தியார் ஒழிக'ன்னு எழுதின?
"தெரியாம எழுதிட்டேன், சார்.
Please, மன்னிச்சிடுங்க, சார்."
இப்படி தப்பு செய்தவங்கதான்
'தெரியாம செஞ்சிட்டேன்'னு சொல்லுவாங்க.
எந்த ஆசிரியராவது மாணவன் மன்னிப்புக் கேட்குமுன்னே,
"சரி, நீ தெரியாம செஞ்சிட்ட, மன்னிச்சிட்டேன், போ"ன்னு சொல்லுவாங்களா?
ஆனால் நம்ம ஆண்டவர் சொல்லிட்டாரே!
அவரைக் கொலை பண்ணினவங்க சிலுவையைச் சுற்றிதான் நிற்கிறாங்க.
அவரைக் கேலி செய்து கொண்டுதான் நிற்கிறார்கள்.
இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொல்கிறார்!
எவ்வளவு இரக்கம்!
நம்மைப் பார்த்து யாரும் முறைச்சாக்கூட நமக்குக் கோபம் வருது.
ஆனால் இயேசுவை அந்தப் பாடுபடுத்தியும் அவருக்குக் கோபமே வரவில்லையே!
கல் தூணில் கட்டிவைத்து ரத்தம் சொட்ட சொட்ட கசையால் அடித்தார்கள்.
தலையில் முள்ளால் ஆன முடியை வைத்து அடித்தார்கள்.
அவரைத் திட்டினார்கள்.
காலால் உதைத்தார்கள்.
அவர் மேல் எச்சிலைத் துப்பினார்கள்.
பாரமான சிலுவையை அவர் மேல் ஏற்றி சுமக்க வைத்தார்கள்.
ஆணிகளால் அறைந்தார்கள்.
எதிர்மறை reaction ஒண்ணுமே அவர்
கொடுக்கலியே!
நம்மை நினைத்தால் நமக்கே வெட்கம் வருகிறது.
அவரது இந்த பாடுகளுக்குக் காரணமாக இருந்தது நாம் தானே!
வெட்கப்படாமல் நாம் செய்த பாவங்கள் தானே!
அவர் அறையப்பட வேண்டிய சிலுவையைச் செய்ததும் நாம்தானே!
நினைத்துப் பாருங்கள்.
குருத்து ஞாயிறு அன்று குருத்தோலைகளைக் கையிலேந்தி,
"தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா"
என்று வாழ்த்துப் பாடியதும் நாமதான்,
வெள்ளிக்கிழமையன்று பாவங்கள் என்ற ஆணிகளால் அவரைச் சிலுவையில் அறைந்ததும் நாமதான்!
நாம் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும்,
இயேசு பெரிய மனது பண்ணி,
"இவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள்,
இவர்களை மன்னியும், அப்பா."
தந்தையிடம் வேண்டுகிறார்.
நமக்கு வெட்கமாய் இருக்கிறது.
"ஆண்டவரே! நாங்கள்தான் எங்கள் பாவங்களால் உம்மைச் சிலுவையில் அறைந்தோம்.
எங்கள் பாவங்களை ஏற்றுக் கொள்கிறோம், ஆண்டவரே.
வருந்துகிறோம், தேவனே!
எங்களை மன்னியும், அப்பா!
பாவங்களுக்குப் பரிகாரமாக சாம்பலைப் பூசி பரிகாரத்தை ஆரம்பிக்கிறோம், ஆண்டவரே!
இனி எங்கள் வாழ்வையே பரிகார வாழ்வாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம், ஆண்டவரே!
ஏற்றுக்கொள்ளும், அப்பா!"
தவக்காலத்தில் மட்டுமல்ல,
வாழ்நாளெல்லாம் தவம் செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment