** **** வாழ்வே தவம்.** ****
** ** ** ** ** ** ** ** ** **
வருடத்திற்கு ஒரு முறை குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம்.
அன்று மட்டும்தான் குழந்தைகளைப் பாராட்ட வேண்டும் என்று அர்த்தமா?
வாழ்நாள் முழுவதும்தான் குழந்தைகளைக் கொஞ்சுகிறோம்.
வருடத்திற்கு ஒரு முறை குடியரசு தினம். கொண்டாடுகிறோம்.
அன்று மட்டும்தான் நாட்டுப் பற்று இருக்க வேண்டும் என்று அர்த்தமா?
எந்நாளும் நாம் இந்நாட்டின் உண்மையான குடிமக்கள் தானே!
அதேபோல் ஆண்டிற்கு ஒரு பருவத்தில்தான் (Season) தவக்காலம் வருகிறது.
அப்போது மட்டும்தான் தவம் செய்ய வேண்டும் என்று அர்த்தம் அல்ல.
நமது வாழ்நாள் முழுவதுமே தவக் காலம் தான்.
சொல்லப் போனால் உயிர்த்த திருநாள் அன்றுதான் அதிக தவ முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும்.
ஐம்பது ரூபாயைத் தியாகம் செய்தால் அதற்குச் சன்மானமாக ஐம்பது இலட்சம் ரூபாய் கிடைக்கும் என்று அரசு அறிவித்தால்,
ஐம்பதையும் தியாகம் செய்து
கிடைக்கும் ஐம்பது இலட்சத்தையும்
ஐம்பது ஐம்பதாகப் பிரித்து தியாகம் செய்து விட மாட்டோமா?
தவக்காலத்தில் மட்டுமல்ல,
நமது வாழ்நாள் முழுவதுமே நாம் ஆண்டவருக்காகத் தியாகம் செய்யும் ஒவ்வொரு வினாடிக்கும் சன்மானம் நித்தியமானது.
ஆண்டவருக்காகச் செய்யும் தியாகம்தான் தவம்.
ஆண்டவருக்காக எப்படித் தியாகம் செய்வது?
தியாகம் செய்வது என்றாலே நமக்காகப் பயன்படுத்த உரிமை உள்ள பொருளை நமது அன்பர்களுக்காகப் பயன்படுத்துவது.
உதாரணத்திற்கு,
முற்பகல் வேலைக்கும்,
பிற்பகல் வேலைக்கும்
இடையில் கொஞ்சம் ஓய்வு நேரம் இருக்கும்.
அப்பொழுது ஓய்வு எடுக்க நமக்கு முழு உரிமை உண்டு.
ஆனால் ஓய்வு எடுக்காமல் மற்றவர்களுக்கு உதவியாக அந்த நேரத்தைச் செலவழித்தால் அது தியாகம்.
மற்றவர்களும் நம்மைப் போலவே இறைவனின் பிள்ளைகள்.
இறைவனின் பிள்ளைகளுக்காகச் செய்யும் தியாகம் இறைவனுக்காக செய்யும் தியாகம்தான்.
நமது நேரத்தைப் போலவே நமது பொருட்களையும் தியாகம் செய்ய நமக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
ஒரு கப் காபியைத் தியாகம் செய்து அதற்கான சில்லரையை தர்மம் எடுக்கும் ஒரு முதியவரிடம் கொடுத்தால்,
இந்த உலகமே அதற்கு ஈடாகாது.
அம்மா அண்ணனுக்கும், தம்பிக்கும் ஆளுக்கொரு கடலை மிட்டாய் கொடுத்தார்கள்.
தம்பி அதை உடனே தின்று விடடான்.
அண்ணன் வீட்டுப்பாடம் எழுதிவிட்டு சாப்பிடலாம் என்று வைத்திருக்கிறான்.
தம்பி அண்ணன் முகத்தைப் பார்க்கிறான்.
அண்ணன் 25 பைசாவைக் கொண்டு விண்ணகத்தையே சம்பாதித்து விட்டான்.
தம்பியின் முகத்தில் இயேசுவைக் கண்டான்.
கடலை மிட்டாய் காணிக்கை ஆகிவிட்டது.
அவன் உள்ளத்தில் விண்ணகம் இறங்கி வந்துட்டது.
பேருந்தில் கஷ்டப்பட்டு பிடித்த இடத்தை
கஷ்டப்பட்டு நிற்கும் ஒரு முதியவருக்கு விட்டுக் கொடுப்பது,
விண்ணகத்தையே ஈட்டும் அளவிற்கு பெரிய சாதனை.
இந்த மாதிரி சிறிய செயல்கள்தான் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்கின்றன.
Tiny drops of water make a mighty ocean.
நமது உள்ளத்தில் பொங்கி வடியும் இறையன்பும், பிறரன்பும்தான் தியாகத்தின் ஊற்று.
நமது அந்தஸ்தின் கடமைகளை ஆண்டவருக்காக ஒழுங்காகச் செய்வதே தவம்தான்.
பெற்றோர் பிள்ளைகளை இறையன்பில் வளர்ப்பது,
பிள்ளைகள் பெற்றோரை மதித்து அவர்களுக்குக் கீழப்ப்படிந்து நடப்பது,
ஆசிரியர்கள் பாடத்தை ஒழுங்காகக் கற்றுத் தருவது,
மாணவர்கள் ஒழுங்காகப் படிப்பது,
பணியாளர்கள் தங்கள் பணியை ஒழுங்காகச் செய்வது
இவை எல்லாம் தவ முயற்சிகள்தான்.
ஆனால் ஒரு நிபந்தனை.
அவை இறைவனின் மகிமைக்காக
செய்யப்பட வேண்டும்.
சுய பெருமைக்காவும், வாங்கும் சம்பளத்துக்காகவும் மட்டுமே செய்தால் அவை தவ முயற்சிகள் அல்ல.
இவ்வுலகைச் சார்ந்த முயற்சிகளே.
தவ முயற்சிகள் விண்ணுலகைச் சார்ந்தவை.
கடமையைச் செய்வதில் எங்கே தியாகம் இருக்கிறது?
தியாகம் செயலில் இல்லை.
செயல் செய்யப்படும் மன நிலையிலும், நோக்கத்திலும் இருக்கிறது.
அன்னை மரியாள்
"இதோ ஆண்டவருடைய அடிமை"
என்ற மந்திரச் சொற்களால் தன்னை முற்றிலும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டாள்.
அவள் வாழ்ந்த அப்பண வாழ்வே தியாக வாழ்வு.
மரியாளை 'அம்மா' என்று அழைக்க பாக்கியம் பெற்றுள்ள நாம் அவளுடைய உடைமைகளுக்கெல்லாம் வாரிசுகள்தானே!
அவளின் அர்ப்பண வாழ்வில் நமக்கும் பங்கு உண்டல்லவா?
நாமும்
"இறைவா, நாங்கள் உமது அடியார்கள். எங்களது வாழ்வு உமது அதிமிக மகிமைக்காகவே"
என்று நம் வாழ்வை அர்ப்பணித்துவிட்டு வாழ்ந்தால்
நமது வாழ்வின் ஒவ்வொரு செயலும்,
தூங்குவது உட்பட,
தவ முயற்சியாக மாறிவிடுகிறது.
இப்போ ஒரு கேள்வி.
இவ்வுலக புரிதலின் படி
நாம் யாருக்காக தியாகம் செய்கிறோமோ அவர் பயன் பெறுகிறார்.
உதாரணத்திற்கு,
நமது நண்பருக்காக நமது வருமானத்தைத் தியாகம் செய்தால்
நண்பர் பலன் பெருகிறார்.
நாம் இழப்பதை அவர் பெறுகிறார்.
நாம் தியாகம் செய்வதால் இயேசுவுக்கு என்ன பயன்?
நாம் ஒரு வேளைச் சாப்பாட்டை ஒறுத்து ஒரு ஏழைக்குக் கொடுத்தால் அந்த ஏழை பயன்பெறுவான்.
ஆனால் அதை ஆண்டவருக்காகத்தானே செய்கிறோம்.
ஆண்டவருக்கு என்ன பயன்?
ஒரு பாத்திரம் நிறைய தண்ணீர் இருக்கிறது.
நிறைய என்றால் எவ்வளவு கொள்ளுமோ, அவ்வளவு .
அதில் ஒரு சொட்டுத் தண்ணீரைச் சேர்த்தாலும் அந்தச் சொட்டு கீழே தான் வடியும்.
ஏனெனில் பாத்திரத்தில் இம்மி கூட இடம் இல்லை.
ஆண்டவர் நிறைவானவர்.
நிறைவை அதிக நிறைவாக்க முடியாது.
Perfection cannot be made more perfect.
கையில் பைசா இல்லாத ஒருவன் வேலைக்குப் போனால் சம்பளம் கிடைக்கிறது.
அவனுக்கு பைசா கிடைக்கிறது.
அவன் பைசாவுக்காகத்தான் வேலைக்குப் போகிறான்.
ஆனால் கடவுள் நித்திய காலமாக நிறைவாகத்தான் இருக்கிறார்.
அவர் தனக்கு எதாவது கிடைக்கும் என்பதற்காக மனிதனைப் படைக்கவில்லை.
அவனுக்குக் கொடுப்பதற்காகத்தான் படைத்தார்.
தான் படைத்த மண்ணிலிருந்துதான் அவனுக்கு உடலைக் கொடுத்தார்.
அவரது உயிர் மூச்சை ஊதித்தான் ஆன்மாவைக் கொடுத்தார்.
அன்பு, நீதி.ஞானம், சுதந்திரம் ஆகிய பண்புகளையும் அவர்தான் கொடுத்தார்.
அவர் மனுக்குலத்திற்கு எதைத் கொடுத்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் அவரது நிறைவு குறையாது.
அப்படியானால் அவருக்காக மனிதன் செய்வதால் அவருக்கு என்ன பயன்.
உண்மையில் அவருக்கு ஒரு பயனும் இல்லை.
ஆனால் அவருக்காகச் செய்வதெல்லாம் உண்மையில் நமக்காகத்தான் செய்கிறோம்.
நாம்அவருக்காக செய்வதன் பயனை எல்லாம் சேர்த்துவைத்து
நாம் விண்ணகம் ஏகும் நாளில்
ஒன்றுக்கு நூறாக நம்மிடமே திரும்பி தருவார்.
நாம் நிலையற்ற வாழ்வின் போது செய்த நல்ல காரியங்களுக்கு எல்லாம் நிலை வாழ்வில் சன்மானம் தருவார்.
அவருக்காக அல்லாமல் நமக்காகவே நல்ல செயல்கள் செய்தால்
அவற்றின் பலனை இவ்வுலகிலேயே அனுபவித்து விடுவோம்.
ஒரே பள்ளிக்கு இரண்டு பேர் செல்கிறார்கள்.
ஒருவனது பெயர் சேர்க்கைப் பதிவேட்டில் பதிவாகி இருக்கிறது.
அடுத்தவன் பெயர் எந்த பதிவு ஏட்டிலும் இல்லை.
ஆண்டின் இறுதியில் யார் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க படுவார்கள்?
யாருடைய பெயர் சேர்க்கை பதிவேட்டில் உள்ளதோ அவன் மட்டும்தான் இறுதித்தேர்வு எழுதலாம்..
அவர்கள் பெற்ற அறிவு ஒரே மாதிரிகையாக இருக்கலாம்-
ஆனால் பதிவேடு மட்டும்தான் அவர்களுடைய பள்ளி வாழ்வின் எதிர்காலத்
தொடர்ச்சியைத் தீர்மானிக்கிறது.
அதேபோன்று ஆண்டவருக்காக செய்வதுதான் இறுதியில் நம்முடன் வரும்.
இதை விளக்கும் பாட்டி கதை நாளை.
தவம் செய்வோம்
தவம் செய்வோம்
ஆண்டவருக்காக.
அனுபவிப்போம்
அனுபவிப்போம்
நித்திய காலமாக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment