என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.
** ** ** ** ** ** ** ** ** "தன் மகன் அப்பம் கேட்டால் ஒருவன் கல்லைக் கொடுப்பானா?"
'அல்லது அவன் மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பானா?"
"வானகத்திலுள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நன்மை செய்வார்!"
(மத். 7:9,10,11)
இவை இறைமகன் இயேசுவின் வல்லமை நிறைந்த வார்த்தைகள்.
இயேசு இவ்வாறு கூறுவது போல் இந்த வசனங்கள் அமைந்துள்ளன.
" மக்களே ஒன்றுமில்லாமையில் இருந்து உங்களைப் படைத்து
எனது பண்புகளை உங்களோடு பகிர்ந்து கொண்டதின் மூலம் உங்களுக்கு என் சாயலைக் கொடுத்தேன்.
எனது சாயலை பெற்ற உங்களுக்கே உங்கள் பிள்ளைகள் மீது அன்பு இருக்கும் என்றால்
உங்களை ஒன்றுமில்லாமையில் இருந்து படைத்த எனக்கு உங்கள் மேல் எவ்வளவு அன்பு இருக்கும்!
அன்பே உருவான நான்
அன்பின் காரணமாகத் தானே உங்களை படைத்தேன்.
நானே படைத்த உங்களை நானே கைவிடுவேனா?
மக்களே, என் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்.
நான் உங்களுக்கு எது செய்தாலும் அது என்னுடைய அன்பின் விளைவாகவும்,
உங்களுடைய நன்மைக்காகவும் மட்டும்தான் இருக்கும்
என்பதை உணர்ந்து
என்ன நேர்ந்தாலும் நன்றி உணர்வோடு இருங்கள்."
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு இன்று உலகில் வாழும் கோடிக் கணக்கான மக்களுள் ஒருவர் கூட இருந்ததில்லை.
இன்னும் 120 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வாழும் மக்களுள் ஒருவர்கூட உலகில் இருக்கப் போவதுமில்லை.
ஆனால் உலகம் என்றும் மக்களால் நிறைந்து தான் இருக்கும்.
உலகிற்குள் வருவதும் உலகை விட்டு போவதும் இறைவனுடைய திட்டத்தின்படி தான் நடக்கும்.
நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நம்மைப் பராமரித்து வருபவர் நம்மைப் படைத்த இறைவன்தான்.
இறைவனது பராமரிப்பில் நமக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும்
அவரது திட்டப்படியும், அனுமதியின் படியும் தான் நடக்கும்.
அவனின்றி அணுவும் அசையாது என்பது மறுக்க முடியாத உண்மை.
அப்படியானால் இறைவனுடைய சித்தமின்றி நம்முடைய ஒரு அணுவும் அசையாது.
ஆகவே நமக்கு என்ன நேர்ந்தாலும் அது நமது எதிர்கால நன்மைக்காகத்தான் என்பதை உணர்ந்தோம் என்றால்
நாம் அடிபடும் போது கூட அவருக்கு நன்றி கூறுவோம்,
ஒரு ரோஜா செடியை தோட்டக்காரர் கத்தரித்து விடுவதே
அச்செடி நன்கு தளிர்த்து நிறைய பூத்துக் குலுங்க வேண்டும் என்பதற்காகத்தான்.
கத்தரித்து விடும்போது மலர்ச்செடி மனம் வருந்துவதில் அர்த்தமில்லை.
அது பூக்கப் போகும் மணம் நிறைந்த மலர்களை நினைத்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்.
அவ்வாறேதான் நமது எதிர்கால நன்மைக்காக நம் வாழ்வில் இறைவன் என்ன செய்தாலும்,
எதிர்கால நன்மையை மனதில் கொண்டு,
நாம் ஒவ்வொரு வினாடியும் நம்மை படைத்த தேவனுக்கு நன்றி கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.
கொரோனா வைரசும் கடந்துபோகும்.
இரவுக்குப் பின் பகல் வருவது உறுதி.
வரவிருக்கும் ஒளிமயமான பகலை எண்ணி மகிழ்வோடு வாழ்வோம்.
"நன்றி நன்றி
இயேசுவே.
நன்றி நன்றி என்றும் உமக்கே.
கஷ்டங்கள் இன்று
வந்தாலும்
கடந்து போகும்
உம்மருளால்.
எதிர்கால வாழ்வை
எண்ணியே
இன்று மகிழ
வரம் தாரும்.
நன்றி உணர்வு
என்றுமே
எங்களோடு வாழ்ந்திட
வரத்தைத் தாரும்,
இயேசுவே."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment