அன்னையே வருக!
* ** ** ** ** ** ** ** **
இறைவன் நமக்கு கொடுத்த கட்டளைகள் இரண்டு.
இறைவனை நேசிக்க வேண்டும்.
நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.
முதல் கட்டளை எவ்வளவு முக்கியமானதோ அதே போல இரண்டாவது கட்டளையும் முக்கியமானது.
இரண்டு கட்டளைகளையும்
நாம் அனுசரிக்க வேண்டும்.
ஒன்றை விட்டு விட்டு மற்றொன்றை அனுசரிக்க முடியாது.
இறைவனை நேசிக்காதவன் அயலானை நேசிக்க முடியாது.
அதேபோல அயலானை தேசிக்காதவனால் இறைவனை நேசிக்க முடியாது.
நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.
கட்டளைகளை வெறுமனே கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டால் மட்டும்
போதாது.
செயல் அளவிலும், அதாவது, வாழ்க்கையிலும் இதை கடைபிடிக்க வேண்டும்.
இவற்றை நமது வாழ்வாக மாற்ற வேண்டும்.
இறை அன்பும் பிறர் அன்பும் இணைந்த அன்பு ஒன்றே நமது வாழ்வாக இருக்க வேண்டும்.
இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு சொல்லிலும் செயலிலும் பொங்கி வடிய வேண்டும்.
இறைமகன் இயேசு நமக்கு கற்பித்த ஜெபத்தில்,
"விண்ணகத்தில் உள்ள எங்கள் தந்தையே"
என்று ஆரம்பித்து,
தனிப்பட்ட நபருக்காக மட்டுமல்ல மனுக்குலம் அனைத்திற்குமாக செபிக்க கற்றுக் கொடுத்தார்.
எங்கள் என்ற வார்த்தையில் மனுக்குலம் அனைத்தும் அடங்கும்.
அதேபோல நாம் செபிக்கும் மங்கள வார்த்தை செபத்திலும்
"பாவிகளாக இருக்கிற எங்களுக்காக எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்," என்று செபிக்கிறோம்.
இங்கும் 'எங்களுக்காக'என்ற
வார்த்தையில் நாம் மனுக்குலம் அனைத்திற்கும் ஆக தான் செபிக்கிறோம்.
செபிக்கிறோம், ஆனால் உணர்ந்து ஜெபிக்கிறோமா என்பதுதான் கேள்வி.
நெருக்கடியான சூழ்நிலைகளில், '
உதாரணத்திற்கு
இன்றைய வைரஸ் சூழ்நிலையில்
நாம் நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும்
நம்மை விட நமது அயலானுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தனித்து இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவது எதற்காக?
நாம் தப்பித்துக் கொள்வதற்காக மட்டுமா?
நம் மூலமாக மற்றவர்களுக்கு வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காகவும்தான்.
இங்குதான் நம்மைப் போல பிறரையும் நேசிக்கிறோம்.
அதாவது நாம் தப்பித்து கொள்வதோடு நமது அயலானும் தப்பிக்க உதவுகிறோம்.
ஆனாலும் இதைவிட மேலான அன்பு ஒன்று இருக்கிறது.
அது தன்னையே தியாகம் செய்து மற்றவர்களைக் காப்பாற்றக்கூடிய அன்பு.
அத்தகைய அன்புக்கு உதாரணமாக நம்மிடையே வாழ்ந்த புனித அன்னைத் தெரசா
இப்போது இருந்தால் இன்றைய சூழ்நிலையில் எப்படி செயல் படுவார்கள் என்று நினைத்துப்பார்க்கிறேன்.
மற்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துவதைத் தடுக்க மாட்டார்கள்.
ஆனால் அவர்கள் நிச்சயமாக தங்களைத் தாங்களே தனிமை படுத்தி கொண்டு இருக்கமாட்டார்கள்.
களத்தில் இறங்கியிருப்பார்கள்.
நோயாளிகளைத் தேடிச்சென்று அவர்கள் குணமடைய வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்திருப்பார்கள்.
இன்று மருத்துவர்களும் அதைத்தானே செய்கிறார்கள் என்று சொல்லலாம்.
ஆனால் கடமைக்காக செய்வது வேறு,
அன்பினால் உந்தப்பட்டு செய்வது வேறு.
பிள்ளைகளைத் தாய் கவனிப்பதற்கும்
ஆயா கவனிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?
இதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூறுவதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.
அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
அன்னைத் தெரசா அவர்கள் வாழ்நாளில் மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது வெறும் மருத்துவ உதவி மட்டுமல்ல,
ஆன்மீக உதவி.
அன்பின் வழி நின்று தன்வசம் இருக்கிறவர்களை இறைவன்பால் திருப்பும் ஆன்மீக உதவி.
அவர்கள் வெறும் உலக சம்பந்தப்பட்ட உதவிகள் மட்டும் செய்திருந்தால்
இன்று அவர்கள் புனிதை நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்க மாட்டார்கள்.
அவர்கள் இயேசுவாக வாழ்ந்தார்கள்.
இயேசுவின் அன்பைப் பொழிந்தார்கள்.
இன்றும் இயேசுவாக,
இயேசுவின் பிரதிநிதிகளாக நம்மிடையே வாழ்ந்து,
நமது ஆன்மிக நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள, நமது ஞான தந்தையர்களிடமிருந்து
இத்தகைய நேரடியான அன்புப் பொழிவை இந்த கஷ்ட காலத்தில் எதிர்பார்க்கிறோம்,
அவர்களுடைய ஞான மக்கள் என்ற முறையில்.
வாழைப்பழத்தின் படத்தைக் காண்பித்தால் அதைச் சாப்பிட முடியுமா?
Vidio call மூலம் பேசிப் பழகிவிட்டோம் என்பதற்காக இறைமகன் இயேசுவை வெறும் வீடியோவில் காண்பித்தால் நிறைவு ஏற்படுமா?
நேரடியாக திவ்ய பலியில் கலந்து கொள்ளவும்,
உண்மையாகவே திருவிருந்தில் கலந்து கொண்டு
இயேசுவை ஆன்மீக உணவாக உட்கொள்ளவும் ஏதாவது ஏற்பாடு செய்ய மாட்டீர்களா?
வெறும் படத்தைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
அன்னை தெரசா இப்போது எங்களோடு இருந்தால் இந்த ஏக்கத்தைத் தீர்க்க ஏதாவது வழி காண்பித்து இருப்பார்.
வழியில் ஆபத்துக்களிடம் இருந்து தப்பிப்பது முக்கியம்தான்,
அதைவிட முக்கியம் வீட்டை அடைவது.
"இயேசுவே,
எங்கள் இரட்சகரே
எங்கள் உணவாக எங்கள் நாவில்
நேரடியாக வருவதற்காகவாவது
கொரோனாவை ஒழித்துக் கட்டுங்களேன், Please!"
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment