Tuesday, March 31, 2020

"நானும்தீர்ப்பிடேன்." (அரு8:11)

"நானும்தீர்ப்பிடேன்." 
(அரு8:11)
*  **  **  **   ** ** **   ** **
"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு. 3:17)


மனுக்குலம் செய்த பாவத்திற்கு ஏற்ப அதற்கு இறைவன் தீர்ப்பு அளித்திருக்க வேண்டுமென்றால் 

நமது முதல் பெற்றோர் பாவம் செய்த உடனேயே அளித்திருக்க வேண்டும்.

 ஆனால் அன்பின் தேவன் தனது நீதியை தீர்ப்பிட அல்ல,

  மனுக்குலத்தை இரட்சிக்கவே பயன்படுத்தினார்.

அதற்காகத்தான் கடவுள் தன்  ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

இயேசு மனுவுரு எடுத்தது மனிதன் செய்த பாவத்திற்காக அவனுக்கு தீர்ப்பு அளிக்கவோ 

அவனைத் தண்டிப்பதற்காகவோ அல்ல, 

மாறாக, மனிதன் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக தன்னையே பலியிட்டு அவனை ரட்சிப்பதற்காகவே.

 விபச்சாரத்தில் பிடிபட்டு பரிசேயர்கள் அவரிடம் அழைத்து வந்த பெண்ணை நோக்கி இயேசு,

"நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" 

என்றார்.

இயேசு அவருடைய பாவங்களை மன்னித்து  விட்டார்.

அவர் தண்டனையின் தேவன் அல்ல, மன்னிப்பின் தேவன்.

அவரது மன்னிப்பின் காரணமாகத்தான் மனுக்குலம் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறது.

கடவுள் மனுக்குலத்திற்கு அனுப்புகின்ற துன்பங்கள் அவனை தண்டிப்பதற்காக அல்ல,

 மாறாக அவனை தீய வழியில் இருந்து நல்வழியை நோக்கி திருப்புவதற்காக.

இன்றும் கூட வைரஸ் மூலமாக மனுக்குலம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள்

 தாங்கள்  பாவங்களை நினைத்து வருந்தி இறைவனை நோக்கி திரும்புவதற்காகத்தான்.

 ஆனால் மனிதர்கள் இறைவனை நினைப்பதே 
வைரசிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கானேயன்றி

 மனம் திரும்புவதற்காக அல்ல.

நாம் கூட உலகில் வாழ வேண்டும் என்பதற்காக  தேவ திரவிய அனுமானங்களைப் பெறுவதில் இருந்துகூட நம்மை நாமே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம்!

நமக்கு மீட்பைக் கொண்டு வந்தது இறைமகன் இயேசுவின் சிலுவைப் பலி.
(Jesus' sacrifice on the cross.)

 இன்று  நமது ஆன்மீக வாழ்விற்கு உயிர் கொடுத்து விண்ணகப் பாதையில் நம்மை

 நடத்திக் கொண்டு வருவது தினமும் நிறைவேற்றப்படும்
திருப்பலி (Holy Mass.)


  நமது ஆன்மாவிற்கு உணவாக வருவது 

இயேசு தன்னையே உணவாக அளிக்கும் தற்கருணை விருந்து.

நாம் இவ்வுலகில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காகத்தானே

 இயேசுவின் திருப் பலியையும்  இயேசுவின் திருவிருந்தையும் தியாகம் செய்து கொண்டிருக்கிறோம்!

குருவோடு இணைந்து ஒப்புக் கொடுக்கவேண்டிய திருப்பலியை 

வேறு வழி இல்லாமல் live Streamல் வீடியோ காட்சியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறோம்!

அறுசுவை உணவைப் படத்தில் பார்த்து ரசித்தால் வயிறு நிறையுமா?

மருந்துச் சீட்டை பார்த்துக்கொண்டிருந்தால் வியாதி குணமாகுமா?

இயேசுவுக்காக இவ்வுலக வாழ்வை தியாகம் செய்ய வேண்டிய நிலைமாறி

 இவ்வுலக வாழ்வுக்காக இயேசுவையே தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்!

 "இந்த பரிதாப நிலையை யாரிடம்  சொல்லி அழ, இயேசுவே உம்மைத் தவிர?

இயேசுவே, தாவீதின் குமாரனே, உமது பிள்ளைகளாகிய எங்கள்மீது இரக்கம் வையும்.

குரோனா ஒழிந்து இயல்புநிலை திரும்பினால் தான் 

கோவில்களை திறப்பார்கள்.

 திருப்பலி காண அனுமதிப்பார்கள்.

 உம்மை உணவாகத் தருவார்கள்.

எங்களுக்காக என்று சொல்ல மாட்டேன், நமக்காக என்றுதான் சொல்லுவேன்.

 ஏனெனில் நாம் இணைவதைத்தான்

 இந்த வைரஸ் தடுக்கிறது,

 ஆகவே இயேசுவே, ஆண்டவரே, நாம் இணைய வேண்டும் என்றால் வைரஸ் ஒழியவேண்டும்.

 வைரஸ் ஒழிய வேண்டுமென்றால், நீர் மனம் வைக்க வேண்டும்.

 ஏனெனில் உமது அனுமதியின்றி எதுவும் உலகில்  நுழைய முடியாது.

ஆகவே சர்வவல்லவ தேவனே, 

தீர்ப்பு அளிக்க அன்று எங்களை. மீட்கவே மனிதனாகப் பிறந்த இறைமகனே,

கொரோனா விஷயத்தில் 
உமது அனுமதியை வாபஸ் பெற்றுக்கொண்டு 

வைரஸை நிரந்தரமாக அழித்தருளும்.

பாவம் செய்ய மாட்டோம் இன்று உனக்கு உறுதி அளிக்கிறோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment