எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?
** ** ** ** ** ** ** ** ** ** **
நண்பர் ஒருவர் பைக் வாங்குவதற்காக வங்கியில் கடன் பெற்றிருந்தார்.
வாங்கிய கடனை தவணை முறையில் அடைக்க வேண்டியது அவருடைய கடமை.
முதல் மாத தவணை பணத்தை வங்கியில் கட்டி விட்டார்.
அடுத்த ஆறு மாதங்கள் அவர் தவணை முறையில் பணத்தை கட்டவில்லை.
ஏதாவது மாதத்தில் அவரது வீட்டில் உள்ள தபால் பெட்டியில் வங்கியிலிருந்து வந்த ஒரு தபால் கிடந்தது.
அதை எடுத்து வாசித்து விட்டு குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்.
அடுத்த மாதம் மற்றொரு தபால்
தபால் பெட்டியில் கிடந்தது.
தபாலை பார்த்தவுடன் அவருக்கு எரிச்சல் வந்தது.
வங்கியில் இருந்து தபால் வருவதை அவர் விரும்பவில்லை.
வீட்டிலுள்ள தபால் பெட்டியில் தானே தபால்காரர் தபாலைப் போடுகிறார்.
தபால் பெட்டியை அப்புறப்படுத்தி விட்டால் அவர் எப்படித் தபாலைப் போடுவார்?
பெட்டியை அப்புறப்படுத்தி விட்டார்.
மறு மாதம் பெட்டி கட்டப்பட்டிருந்த gate ல் தபால் சொருகி வைக்கப்பட்டிருந்தது.
உடனே அவர் gate ஐ அப்புறப்படுத்தி விட்டார்.
மறு மாதம் தபால் அவரது வீட்டு கதவில் சொருகி வைக்கப்பட்டிருந்தது.
நண்பருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
கதவை அப்புறப்படுத்தினால் வீட்டுக்கு பாதுகாப்பு இல்லை.
மனைவியிடம் ஆலோசனை கேட்டார்.
அவள் மகா புத்திசாலி.
"தபால்காரர் தானே தபாலை கொண்டு வருகிறார்?
நேராக அவரிடமே சொல்லிவிடுங்கள்,
" எனக்கு தபால் வந்தால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்"
என்று.
அம்பை எய்தது வங்கி.
அம்பை நொந்து என்ன பயன்?
இந்த புத்திசாலிகளை நினைத்தால் சிரிப்பு வருகிறது அல்லவா?
நாமும் நம்மை நமது வீட்டுக் கண்ணாடியில் பார்த்து சிரித்துக் கொள்ள வேண்டியதுதான்!
கடவுள் விஷயத்திலும் நாம் அனேக சமயங்களில் இப்படித்தான் நடந்து கொள்கிறோம்.
நாம் தவறு செய்யும்போது நம்மைத் திருத்துவதற்காக கடவுள் நமது மனசாட்சி மூலம் பேசுகிறார்.
நாம் அதை கண்டுகொள்வது இல்லை.
கடவுள் நம்மை சிந்திக்க தூண்டுவதற்காக சில துன்பங்களை அனுப்புகிறார்.
துன்பங்கள் வரும்போது அவற்றிற்கான காரணங்களை கிறிஸ்தவர்களாகிய நாம் நமது விசுவாசக்கண்களோடு நோக்க வேண்டும்.
இறைவனுடைய சித்தம் இல்லாமலும் அனுமதி இல்லாமலும் நம்மை எதுவும் அணுகாது.
இறைவன் ஏன் நமக்கு துன்பத்தை வர விடுகிறார்?
விசுவாச அடிப்படையில் மூன்று காரணங்கள்.
1.பாவப் பரிகாரமாக.
2. நாம் பாவ வாழ்க்கையிலிருந்து மீண்டு வர.
3. சிலுவையை சுமந்து இயேசுவின் சீடர்களாக வாழ.
"ஞானம் நிறைந்தவன் இவற்றைக் கண்டு பிடிக்கட்டும்,
புத்தியுள்ளவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்:
ஏனெனில் ஆண்டவரின் வழிகள் நேர்மையானவை,
நேர்மையானவர்கள் அவற்றில் நடக்கிறார்கள்:
மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகிறார்கள்."
(ஓசே. 14:10)
.ஆழ்ந்து தியானித்து நமது ஆன்மீக நிலையை அறிய வேண்டும்.
நமது ஆன்மா கடவுளை விட்டு எதிர்திசையில் போய்க்கொண்டு இருப்பதை கண்டுபிடித்தால் அதை திருத்தி இறைவன்பால் திருப்ப வேண்டும்.
ஓசே இறைவாக்குனர் கூறுகிறார்.
''தங்கள் துன்பத்திலே அவர்கள் நம்மைத் தேடுவார்கள். வாருங்கள் ஆண்டவரிடம் திரும்புவோம்:
2 ஏனெனில், நம்மைக் காயப்படுத்தியவர் அவரே,
அவரே நம்மைக் குணமாக்குவார்:
நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே,
அவரே நம் காயங்களைக் கட்டுவார்.
3 இரண்டு நாளைக்குப் பிறகு நமக்கு அவர் புத்துயிரூட்டுவார்,
மூன்றாம் நாள் அவர் நம்மை எழுப்பி விடுவார்:
அதன் பின் அவர் முன்னிலையில் நாம் வாழ்ந்திடுவோம்.
ஆண்டவரைப் பற்றி அறிந்திடுவோம், அவரைப் பற்றி அறிய
முனைந்திடுவோம்:
அவருடைய வருகை விடி வெள்ளிப் போலத் திண்ணமானது, மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்" என்றார்கள்.
6 ஏனெனில், நாம் விரும்புவது பலியை அன்று, அன்பையே நாம் விரும்புகிறோம்: தகனப் பலிகள் நமக்கு வேண்டியதில்லை, கடவுளை அறியும் அறிவே நாம் விரும்புகிறோம்.
(ஓசே .6:1-3, 6)
ஆண்டவரை நோக்கி,
"கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்"
(லூக். 18:13)
என்று மனறாடி செவிப்போம்.
துன்பத்திலிருந்து விடுபட ஆசிப்பதில் தவறு இல்லை.
அதற்கான முயற்சிகள் செய்வதிலும் தவறு இல்லை.
முதலில் இறைவனை மன்றாடி நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவோம்.
அடுத்து துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்க இறைவனை வேண்டுவோம்.
இறைவனுடைய உதவியின்றி நம்முடைய எந்த முயற்சியும் வெற்றி பெறாது.
அம்பை எய்திருப்பவர் இறைவன்.
அவரையே சரணடைவோம்.
''அவனன்றி அணுவும் அசையாது."
இறைவன் அருள் கிடைத்தால் மலை போல் வரும் துன்பம் புகை போல் மறைந்துவிடும்.
இறைவனின் அருளைத் தேடுவோம்.
பாவத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
"இயேசுவே எங்கள் மேல் இரக்கமாய் இரும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment