Thursday, March 12, 2020

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்"(மத். 20:27)

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்"
(மத். 20:27)
**  **  **  **   ** ** **   ** ** ** **
இயேசு யெருசலேமை நோக்கிப் போகையில்

 பன்னிரு சீடரையும் தனியே அழைத்து அவர்களிடம்,

தான் படப்போகும் பாடுகளை பற்றி கூறுகிறார்.

செபெதேயுவின் மக்களும் (யாகப்பர், அருளப்பர்) அதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனால் அவர்களுஅவர்களுடய அம்மா அங்கு இல்லை.

அவளுக்கு ஒரு ஆசை,

அவளது மக்கள்  இருவரும் இயேசுவின் அரசில், ஒருவர்  அவரது வலப்பக்கமும், மற்றவர் அவரது இடப்பக்கமும் அமர வேண்டும்.

அதாவது முக்கிய பதவிகள் வகிக்க வேண்டும்.

அவளது நினைப்பு இயேசு உலகில் ஒரு பெரிய அரசை நிருவப் போகிறார் என்பதாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்திய யூதர்களுக்கு அப்படிப்பட்ட  எண்ணம் இருந்தது.

அதாவது மெசியா யூதர்களை ரோமர்களின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு ஒரு சுதந்திர அரசை நிறுவுவார் என்று யூதர்கள் நினைத்திருந்தார்கள்.

ஆனால் இயேசுவோ தான் துன்புறும் மெசியா (Suffering Messiah) என்பதைப் பன்னிரு சீடர்களுக்கும்  விளக்கி இருந்தார்.

அவரது அரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல, விண்ணுலகைச் சார்ந்தது.

இது செபெதேயுவின் மனைவிக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

 ஆனால் அவரின் மக்களுக்கு எப்படி தெரியாமல் போனது?
'. மனுமகன் தலைமைக்குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப்படுவார். அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு,

 அவரை எள்ளி நகையாடவும் சாட்டையால் அடிக்கவும் சிலுவையில் அறையவும் புறவினத்தாரிடம் கையளிப்பர். அவரோ மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" 

என்று பன்னிரு சீடர்களிடமும் இயேசு சொல்லியிருந்தார். 

அப்படி இருக்கும்போது தங்களுக்கு உயர் பதவி கேட்டு அம்மா வரும்போது எப்படி அவளுடன் வந்தார்கள் என்பது விளங்கவில்லை!

இந்த சூழ்நிலையில்தான் இயேசு தனது சீடர்களிடம் கூறினார்:

"எவன் உங்களுக்குள் பெரியவனாக விரும்புகிறானோ அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.

 எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்."

இயேசு தாழ்ச்சி என்னும் புண்ணியத்தை தனது சீடர்களுக்கு விளக்க விரும்புகிறார்.

 தாழ்ச்சி புண்ணியங்களின் அரசி.

இப்போது ஒரு கேள்வி எழலாம்.

 ஊழியனாய் இருக்கிறவன்  எப்படி முதல்வன் ஆவான்?

இயேசுவின் வார்த்தைகளுக்கு சரியான பொருள் தெரிந்தவர்களுக்கு இந்த கேள்வி எழாது.

"எனக்காகத் தன் உயிரை இழந்தவனோ அதைக் கண்டடைவான்."(மத்.10:39)

இதுவும் இயேசுவின் கூற்றுதான்.

 இங்கே இயேசு உயிர் என்ற வார்த்தையை இரண்டு பொருட்களில் பயன்படுத்துகிறார்.

1.இவ்வுலகில் நமது உடலில் உள்ள உயிர்.

2. விண்ணக வாழ்வு.

இயேசுவின் கூற்றின் பொருள்.

"எனக்காக இவ்வுலகில் மரணம் அடைபவன் விண்ணக நிலை வாழ்வை அடைவான்."

வேதசாட்சிகள் எல்லோரும் இவ்வுலகில் இயேசுவுக்காகத் தங்கள்  உயிரை கொடுத்தார்கள்.

 அதன் பலனாக விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வை அடைந்தார்கள்.


"Dying, he conquered death; "
(Catechism 638)

By His physical death on the Cross, Jesus conquered our spiritual death.


இயேசு தன் மரணத்தால் மரணத்தை வென்றார்.

 இங்கு மரணம் என்ற வார்த்தை இரு பொருள்களில் பயன்படுத்த படுகிறது.

1.இவ்வுலகில் நாம் அடையும் மரணம். (physical death)

2.பாவத்தினால் நாம் அடையும் ஆன்மீக மரணம். (spiritual death)

இயேசு தான் அடைந்த தனது சிலுவை மரணத்தினால் 

நமது ஆன்மாவை நித்திய மரணத்தில் இருந்து மீட்டார்.

அதாவது தனது மரணத்தினால் 

நமக்கு நித்திய பேரின்ப விண்ணக வாழ்வை தந்தார்.

சாவான பாவத்தினால் நமது ஆன்மா மரிக்கிறது. (Spiritual death.)

நாம் பாவத்திற்காக வருந்தி பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது

 நமது பாவம் மன்னிக்கப்பட்டு

 ஆன்மீக உயிர் பெறுகிறோம்.

இது இயேசு நம்மை மீட்டதால் நமக்குக் கிடைத்த பலன். 



இப்போது ஒன்று புரிந்திருக்கும்.

நாம் பயன்படுத்தும் இவ்வுலக சொல்லிற்கு  மறுஉலகப் பொருளும் உண்டு.


"முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்"

இந்த வசனத்தை வாசித்தவுடன் நமக்கு என்ன தோன்றும்?

இவ்வுலகில் நாம் ஊழியனாக இருந்தால் அதாவது வேலைக்காரனாக இருந்தால்,

 முதல்வன் ஆகிவிடலாம் அதாவது முதலாளி ஆகிவிடலாம் என்றுதானே தோன்றும்?

அதுமட்டுமல்ல நாம் முதலாளி ஆவதற்கே வேலைக்காரனாக இருக்க வேண்டும் என்றும் தோன்றும்.

முதலாளி ஆவதற்காகவே வேலைக்காரனாக  இருந்தால் அங்கே தாழ்ச்சி எங்கே இருக்கிறது?

லாபம் அடைவதற்காகவே நட்டப்படுதில்

 business mindedness தானே இருக்கிறது?

இயேசு ஒரு  Businessman அல்ல.

கடவுள்.

அவர் பூமியில் மனிதனாகப் பிறந்தது நம்மை விண்ணக வாழ்விற்கு தயாரித்து, அழைத்து செல்ல.

 ஆகவே அவர் சொல்லும் ஒவ்வொரு வசனத்திலும் ஆன்மீகம் இருக்கும்,

 ஆன்மீகம் மட்டும்தான் இருக்கும்.

 ஆண்டவரின் வசனங்களை உலக வசதிக்காக மாற்றி பொருள் கொள்ள கூடாது. 

கடவுள் நம்மைப் படைத்தது அவரை அறிந்து நேசித்து சேவித்து விண்ணகம் அடைவதற்காக.

அறிவது நேசிப்பதற்காக,

 நேசிப்பது சேவிப்பதற்காக,

சேவிப்பது விண்ணகம் அடைவதற்காக.

ஊழியனாய் (சேவிப்பவனாய்) 

அதாவது, பிறருக்குப் பணிபரிபவனாய் வாழ்ந்தால்தான் விண்ணகம் அடைய முடியும்.

நமது ஊழியத்தின் தன்மையை பொறுத்து விண்ணகத்தில் நமது மேன்மை நிர்ணயிக்கப்படும்.


நாம் சாதாரணமாகச் செய்யும் சேவையையும், அன்னை தெரசா செய்த சேவையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழியத்தின் தன்மையின் வேறுபாடு தெரியும்.


இவ்வுலகில் எந்த அளவிற்கு நாம் ஊழியனாய் வாழ்கின்றோமோ அந்த அளவிற்கு விண்ணகத்தில் நமது மேன்மை இருக்கும்.

தன்னுடைய உலக வருகையை பற்றி குறிப்பிட்ட இயேசு இவ்வாறு கூறுகிறார்: 

"மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று,

 பணிவிடை புரியவும்,

 பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."

இறைமகனே பணிவிடை செய்யவே உலகிற்கு வந்தார் என்றால்

 நாம் எதற்காகப் படைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நாமும் பணிவிடை செய்யவே படைக்கப்பட்டிருக்கிறோம்.

அன்னை மரியாள் இறைப் பணிக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக்கொண்டார்.

ஆகவேதான் அவள் விண்ணகத்தின் அரசியாக விளங்குகிறாள்.

நாமும் விண்ணக்த்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டுமென்றால் நல்ல அர்ப்பணமுள்ள ஊழியனாய் வாழ வேண்டும்.

இவ்வுலகில் வாழ்வோம் ஊழியனாய்.

மறுவுலகில் வாழ்வோம் மேன்மையாய்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment