தந்தைக்குப் பிடித்தமான பலி.
** ** ** ** ** ** ** ** ** ** **
இறைவன் நிறைவானவர்.
God is perfect.
நாம் நிறைவு அற்றவர்கள். நமது பண்புகளில் அளவுள்ளவர்கள்.
நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னும் அதிக மகிழ்ச்சியை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஒரு மாணவன் எண்பது சதவீத மதிப்பெண் பெற்றதால் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.
தொந்நூறு சதவீத மதிப்பெண் பெற்றால் இன்னும் அதிகமாக மகிழ்ச்சி அடைவான்.
100 சதவீத மதிப்பெண் பெற்றால் அதைவிட அதிகமாக மகிழ்ச்சி அடைவான்.
அதற்காக அவனுக்குப் பரிசு கொடுத்தால் அதைவிட அதிகமாக மகிழ்ச்சி அடைவான்.
அவனுடைய மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இறைவனைப் பொறுத்தமட்டில் மகிழ்ச்சியில் பரிபூரணமானவர்.
எந்த வெளி நிகழ்ச்சியாலும் அவரது மகிழ்ச்சியை அதிகரிக்க முடியாது.
நமது பாவங்களால் அவரது மகிழ்ச்சியைக் குறைக்க முடியாது,
நமது புண்ணியங்களால் அவரது மகிழ்ச்சியைக் கூட்டவும் முடியாது.
நாம் அவரைப் புகழ்வதாலும், வாழ்த்துவதாலும்,
அவருக்குப் பலி ஒப்புக் கொடுப்பதாலும்
அவரது மகிழ்ச்சியையோ,
மகிமையையோ நம்மால் இம்மி அளவு கூட அதிகரிக்க முடியாது.
அப்படியானால் நாம் ஏன் அவரது அதிமிக மகிமைக்காக நல்ல செயல்களைச் செய்கிறோம்?
ஒரு குழந்தை சாப்பிட மறுக்கிறது.
அதன் தாய் அதைப்பார்த்து
" என் கண்ணுல்ல!
பொன்னுல்ல!
செல்வமில்ல!
அம்மாவுக்காக கொஞ்சம் சாப்பிடு!
அப்பாவுக்காக கொஞ்சம் சாப்பிடு!"
என்று கொஞ்சும்போது குழந்தை அம்மாவை மகிழ்ச்சிப்படுத்தும் பொருட்டு சாப்பிடுகிறது.
குழந்தை சாப்பிடுவதால் பயன் அடைவது யார்?
அம்மாவா? குழந்தையா?
அம்மா மனிதப் பிறவியாகையால் அவளது மகிழ்ச்சி அதிகரிக்கலாம்.
ஆனால் உண்மையில் பயன்பெறுவது குழந்தைதான்.
குழந்தையின் வயிறுதான் நிறைகிறது,
குழந்தைதான் வளர்கிறது.
அதேபோல இறைவனது மகிமைக்காகவும்,
மகிழ்ச்சிக்காகவும்
நாம் செய்யும் ஒவ்வொரு செயலாலும் பயன்பெறுவது நாம்தான்,
இறைவன் அல்ல.
அவர் நம்மைப் படைத்ததால்
பயன்பெறுவது நாம்தான்.
அவரது அன்பினால் பயன்பெறுவது நாம்தான்.
அவர் மனிதனாக பிறந்ததால்
பயன்பெறுவது நாம்தான்.
அவர் அறிவித்த நற்செய்தியால் பயன்பெறுவது நாம்தான்.
அவரது பாடுகளால் பயன்பெறுவது நாம்தான்.
அவரது சிலுவை மரணத்தால்
பயன்பெறுவது நாம்தான்.
அவரது உயிர்ப்பினால்
பயன்பெறுவது நாம்தான்.
அவர் நிறுவிய திருச்சபையால் பயன் பெறுவது நாம்தான்.
திவ்ய நற்கருணையால் பயன்பெறுவது நாம்தான்.
நமது நல்ல கிறிஸ்தவ வாழ்வினால் பயன்பெறுவது நாம்தான்.
நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலி ஒப்புக்கொடுக்கும்போது பயன்பெறுவது நாம்தான்.
நாம் விண்ணகம் ஏகும்போது இறைவன் தமது பேரின்பத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
இதனால் அவரது பேரின்பம் இம்மிகூட குறைவது இல்லை.
நாம் இவ்வுலகில் வாழும் வாழ்விற்கு ஏற்ப நமது பேரின்பத்தின் அளவு இருக்கும்.
ஆனாலும் ஒவ்வொருவருக்கும் அவரது அளவிற்கு ஏற்ப பேரின்பம் முழுமையாக இருக்கும்.
வெவ்வேறு கொள்ளளவு உள்ள பல பாத்திரங்களைத் தண்ணீரால் நிறப்பினால்
ஒவ்வொன்றிலும் வெவ்வேறு அளவுள்ள தண்ணீர் இருக்கும்.
ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் நிறைவாக இருக்கும்.
நமது விண்ணகப் பேரின்பம் அதிகமாக இருக்கவேண்டுமென்றால்
இவ்வுலகில் வாழும் போதே
நமது ஆன்மாவின் கொள்ளளவை
நமது புண்ணியங்களால் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
நமது ஆன்மாவின் கொள்ளளவை அதிகரிப்பதற்காகத்தான்
நாம் ஜெப வாழ்வு வாழ்கிறோம்,
அதாவது இறைவனுக்காக வாழ்கிறோம்.
இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக தன்னையே சிலுவை மரத்தில் பலியாக்கினார்.
நாமும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தினமும் பலி ஒப்புக்கொடுக்க வேண்டும்.
தந்தை இறைவனுக்குப் பிடித்தமான பலி எது?
இறைவனுக்காக எதைச் செய்தாலும்
அதை நமக்காகத்தான் செய்கிறோம்.
ஏனெனில் பயன்பெறப்போவது நாம்தானே!
ஆகையால் இந்த கேள்வியை சிறிது மாற்றி கேட்போம்.
தந்தை இறைவனுக்கு எந்த பலியை ஒப்புக் கொடுத்தால் அது நமக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும்?
நாம் இயேசுவின் சீடர்களாக இருப்பதால்
அவர் ஒப்புக்கொடுத்த பலியையே
நாமும் ஒப்புக்கொடுத்தால்
அது தந்தை இறைவனுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்,
அதோடு நமது ஆன்மாவிற்கும் மிக பயன் உள்ளதாக இருக்கும்.
இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே ஒப்புக்கொடுத்தார்.
ஆகவே நாமும் இறை மகனாகிய இயேசுவையே அவருடைய தந்தைக்கு பலியாக ஒப்புக் கொடுப்போம்.
தினமும் திருப்பலி கண்டு இறைமகனை இறைத் தந்தைக்கு பலியாக ஒப்புக் கொடுப்பது ஒரு வகை.
தினமும் திருப்பலி காண்பது தந்தை இறைவனுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
தினமும் திருப்பலி காண்பதும்,
திருவிருந்து அருந்துவதும்
நமது விண்ணக பேரின்பத்தின் அளவை அதிகரிக்கும்.
ஆனால் தினமும் திருப்பலி காண்பது அநேகருக்கு இயலாத காரியமாக இருக்கலாம்.
அவர்கள் கோயிலே இல்லாத ஊர்களில் குடியிருப்பவர்களாக இருக்கலாம்.
கோவில் இருந்தாலும் குருக்களின் பற்றாக்குறை காரணமாக
மாதம் ஒரு முறையோ இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ திருப்பலி கிடைப்பவர்களாக இருக்கலாம்.
அவர்களுக்கும் ஆன்மா இருக்கிறது,
இறைவனுக்கு பலிகொடுக்க
ஆசையும் இருக்கிறது,
விண்ணகம் செல்லவும்
ஆசை இருக்கிறது.
அவர்கள் என்ன செய்ய?
கொரோனா வைரசுக்குப் பயந்து நாம் இப்போது என்ன செய்கிறோமோ
அதையே செய்யலாமே ஆர்வத்துடன்!
ஞானஸ்நானம் பெற்ற
நாமும்
இயேசுவின் அரசு குருத்துவத் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தானே!
(1 இராய. 2:9)
Reflecting particularly on the conciliar constitutions Lumen gentium and Gaudium et spes,
Pope Francis says those documents state that
lay people “participate, in their own way, in the priestly, prophetic, and royal function of Christ himself.”
கோவிலில் குருவானவர் திருப்பலி நிறைவேற்றும் போது நாமும் அவரோடு இணைந்து திருப்பலி நிறைவேற்றுகிறோம்.
குருவானவரோடு இணைந்து திருப்பலி நிறைவேற்ற 'முடியாதபோது'
நாமே நமது உள்ளத்தில் எழும் ஆசையை கொண்டு
குருவானவர் வழியாக ஒப்புக்கொடுத்த அதே இயேசுவை
அதே இறைத் தந்தைக்கு மனதளவில் பலியாக ஒப்புக்கொள்ளலாம்.
"விண்ணகத் தந்தையே, நாங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக
உமக்கு அளவில்லாத வகையில் பிரியமான
உமது மகனையே
உமக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கிறோம்.
எங்களுக்காகத் தன்னையே
பலியாக ஒப்புக்கொடுத்த உமது திருமகனின் முகத்தைப் பார்த்து எங்கள் பலியை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்."
நற்கருணை வாங்க முடியாதபோது ஆசை நன்மை வாங்குவது போல
இந்த 'ஆசைப் பலியை' எத்தனை முறை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒப்புக் கொடுக்கலாமே!
நமக்குப் பிரியமானவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியாதபோது
அவர்களை நமது உள்ளத்தில் நினைத்து அன்பை வெளிப்படுத்துவதில்லை?
அதேபோல்தான் குருவானவரோடு இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுக்க முடியாதபோது
நாம் நமது உள்ளத்தில் இயேசுவையே நினைத்து
அவரை அவரது தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுத்தால்
விண்ணகத்தில் நாம் அனுபவிக்க விருக்கும் பேரின்பத்தின் அளவு
கூடிக் கொண்டே இருக்கும்.
நமது உள்ளத்தை நோக்கும் இறைவன் நமது பலியை அன்புடன் ஏற்றுக்கொள்வார்.
இறைத் தந்தைக்கு ஏற்ற பலி அவரது திருமகன் தான்!
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment