"உன் அக்கிரமத்தினாலேயே நீ வீழ்ச்சியுற்றாய்,"
(ஓசே. 14:2)
** ** ** ** ** ** ** ** ** ** **
ஆண்டவர் கூறுகிறார்,
"இஸ்ராயேலே, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா,
ஏனெனில் உன் அக்கிரமத்தினாலேயே நீ வீழ்ச்சியுற்றாய்,"
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்தோம்.
என் பேரன் என்னிடம் வந்து,
"தாத்தா, ஒரு பத்து ரூபாய் கொடுங்கள்."
என்றான்.
நான் எதற்கு என்று கேட்கவில்லை.
கொடுத்துவிட்டேன்.
பொதுவாக அப்பாவிடம் சென்று ஏதாவது கேட்டால் காரணம் கேட்பார்.
தாத்தா காரணம் எல்லாம் கேட்க மாட்டார்.
'தா' என்று இருமுறை கேட்கும்போது எப்படி கொடாமல் இருப்பார்?
நானும் தாத்தா தானே.
கேட்டவுடன் கொடுத்துவிட்டேன்.
அன்று இரவு பேரனுக்கு
wheezing பிரச்சினை.
மறு நாள் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனோம்.
அவர் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு,
"Ice cream சாப்பிட்டாயா?"
"நேற்று மதியம் தாத்தா வாங்கித் தந்தார்கள். சாப்பிட்டேன்."
"ஏன் சார் பையனுக்கு சாப்பிடக் கூடாததை வாங்கிக் கொடுத்தீங்க?"
நான் பதில் எதுவும் கூறவில்லை.
வெளியே வந்த பின்,
"ஏண்டா, நானா உனக்கு Ice cream வாங்கித் தந்தேன்?"
"நீங்க தந்த 10 ரூபாய்க்குத் தானே Ice cream வாங்கினேன்.
நீங்க தந்திருக்காவிட்டால் வாங்கியிருக்க மாட்டேன்."
எல்லோருடைய குடும்பங்களிலும் இதே மாதிரியான நிகழ்வுகளுக்குப் பஞ்சமே இருக்காது.
School fees கட்ட தகப்பனார் பணம் கொடுத்திருப்பார்.
பையன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போய்விடுவான்.
தகப்பனாரை குறை சொல்ல முடியுமா?
நமது விண்ணகத் தந்தை நம்மை படைக்கும் முன்பே
இந்த பிரபஞ்சத்தையும்
நாம் வாழும் உலகத்தையும்
அதில் உள்ள தாவரங்கள், ஊர்வன, நடப்பன, பறப்பன போன்ற பிராணிகளையும்
நமது உபயோகத்திற்கு என்று படைத்தார்.
நாம் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி
விண்ணகம் செல்ல வேண்டும் என்பது அவரது திட்டம்.
ஒரு அடிப்படை உண்மையை மனதில் நன்கு புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நன்கு என்று சொன்னால் சரியாக என்று பொருள்.
சிலர் தவறாகப் புரிந்து கொண்டதை சரியாகப் புரிந்து கொண்டதாக நம்பிக் கொள்வார்கள்.
ஒரு முறை ஒரு ஆசிரியர் வகுப்பிற்கு ஒரு பாட்டிலில் சாராயம் கொண்டு வந்தார்.
ஒரு சிறிய தட்டில் ஒரு சிறு
புழுவையும் கொண்டுவந்தார்.
மாணவர்களை நோக்கி
"நான் செய்வதைக் கவனியுங்கள்"
என்றார்.
புழுவை எடுத்து சாராயத்திற்குள் போட்டார்.
மாணவர்கள் முன்னிலையில் அந்த புழு துடிதுடித்து செத்தது.
"இந்த பரிசோதனையில் இருந்து என்ன புரிந்து கொள்கிறீர்கள்?"
ஒரு பையனை எழுப்பி விட்டார்.
"சாராயத்திற்கு புழுக்களை கொல்லும் சக்தி இருக்கிறது."
அடுத்த பையனை எழுப்பி விட்டார்.
"சாராயம் குடிப்பது உடம்பிற்கு நல்லது.
ஏனெனில், அது உடலில் உள்ள வேண்டாத புழுக்களைக் கொன்றுவிடும்."
இந்த மாணவன் புரிந்துகொண்ட லட்சணத்தை பார்த்தீர்களா?
ஒருநாள் வீட்டுப்பாடம் கொடுத்து விட்டு ஆசிரியர் சொன்னார்,
"வீட்டுப்பாடம் படிக்காமல் வகுப்பிற்கு வரக்கூடாது."
மறுநாள் காலையில் ஒரு மாணவன் அவனுடைய அப்பாவிடம் கூறினான்,
"அப்பா நான் இன்று பள்ளிக்கூடம் போகவில்லை."
"ஏன்?"
"ஆசிரியர் அனுமதி. கொடுத்திருக்கிறார்."
"என்ன உளறுகிறாய்?"
"உளறவில்லை. உண்மையைத்தான் கூறுகிறேன். சந்தேகம் இருந்தால் ஆசிரியரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்."
அன்றே தகப்பனார் பள்ளிக்கூடத்திற்குச் சென்று ஆசிரியரிடம் விளக்கம் கேட்டார்.
"நான் அனுமதி எதுவும் கொடுக்க வில்லை.
வீட்டுப் பாடம் படிக்காதவர்கள் பள்ளிக்கூடம் வரவேண்டாம் என்று மட்டும் சொன்னேன்.
புத்திசாலியான உங்கள் மகன் அதை அனுமதியாக எடுத்துக் கொண்டு வீட்டுப்பாடம் படியாமல் இருந்திருக்கலாம்."
இப்படிப்பட்ட புத்திசாலிகள் நம்மிடம் நிறைய இருக்கிறார்கள்.
நாம் தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை உண்மை:
"கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன."
இது வேத வாக்கு.
உலகில் உள்ள எல்லா பொருட்களும்
உயிறற்றவையும், உயிருள்ளவையும் இறைவனாலேயே படைக்கப்பட்டன.
படைக்கப்பட்டவை எல்லாம்,
மிகச்சிறிய ஒரு செல் நுண்ணுயிரிலிருந்து யானை போன்ற பெரிய மிருகங்கள் வரை,
நமது பயன்பாட்டிற்காகவே படைக்கப்பட்டன.
நமக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.
அப்படியானால் குரானோ வைரஸ்?
"எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன."
என்ற வேத வாக்கில் அவையும் அடங்கும்.
ஒரு ஒப்புமை:
சமையலுக்கு வேண்டிய எல்லா பொருட்களையும் மனைவி கொடுத்த லிஸ்ட் படி கணவன் வாங்கி வந்து விட்டான்.
அவற்றைப் பயன்படுத்தி மனைவி சமையல் செய்தாள்.
சமையல் ருசியாக இருந்தாலும்
ருசியாக இல்லாவிட்டாலும்
முழு பொறுப்பு ஏற்க வேண்டியது மனைவி மட்டுமே, கணவன் அல்ல.
கடவுள் படைத்த நல்ல பொருள்களைத் தன் விருப்பப்படி பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் பொருள்களை நாம் உண்டாக்கினால் அதற்கு முழுப் பொறுப்பு நாமே, கடவுள் அல்ல.
உதாரணம்:
கடவுள் படைத்த அணு..
நாம் தயாரித்த அணுக்குண்டு.
இன்றைய நமது துன்பங்களுக்குக் காரணம் நம்மால் உண்டாக்கப்பட்ட பொருள்கள்தான்.
நமக்கே தெரியும் நமது செயற்கை உணவுகளால் நாம் படும் அவதிகள் பற்றி.
மற்றொரு ஒப்புமை:
நான் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர்.
பணிக்காலத்தில்
வகுப்பிற்குள் நுழையும் போதெல்லாம் ஒரு கையில் புத்தகம் இருக்கும்
மற்றொரு கையில் பிரம்பு இருக்கும்.
புத்தகம் மாணவர்களுக்கு பாடம் நடத்த,
பிரம்பு மாணவர்களை படிக்க வைக்க.
எனக்குத் தெரியும்,
மாணவர்கள் பிரம்பை விரும்ப மாட்டார்கள் என்றும்,
அதற்குப் பயப்படுவார்கள் என்றும்.
ஆனாலும் மாணவர்களது நன்மைக்காகவே பிரம்பைப் படுத்தினேன்.
மாணவன் வகுப்பில் வேறு வழி இல்லாமல் ஆசிரியர் சொல்வதைக் கேட்கிறான்.
அவர் கையில் இருக்கும் பிரம்புக்குப் பயந்து ஆசிரியர் சொல்வதை படிக்கிறான்.
இது நடைமுறை உண்மை.
ஆசிரியர் மாணவனைத் திருத்த பிரம்பைப் பயன்படுத்துவது போல
இறைவனும் நம்மை திருத்த அவரால் படைக்கப்பட்ட சில பொருள்களைப் பயன்படுத்துகிறார்.
நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, சுனாமி போன்ற
இயற்கை நிகழ்வுகள் மனிதனை திருத்துவதற்காக இறைவன் பயன்படுத்தபடுபவை.
மனிதனுக்கு வரும் நோய் நொடிகளும்,
பிற துன்பங்களும் கூட
நாம் திருந்துவதற்காகவே இறைவனால் அனுமதிக்கப்படுகின்றன.
இப்போது அந்த லிஸ்டில் கொரோனா வைரசும்
சேர்ந்துகொண்டது.
இது ஒரு நுண்ணியிர்.
இறைவனால் படைக்கப்பட்ட ஒரு நல்லுயிர்.
இதை மறுப்பவர்கள்
இறைவனையே மறுக்கிறார்கள்.
இறைவனை விட்டு எதிர்த் திசையில் வெகு தூரம் சென்றுவிட்ட நம்மைத்
திருத்துவதற்காக
இறைவனால் பயன்படுத்தப்படும் ஒரு உயிர்,
இதனால் ஏற்படும் துன்பங்களைக் கண்டு
நாம் மனம் திரும்ப வேண்டும்.
இறைவனிடம் திரும்பி வர வேண்டும்.
நாம் இறைவனுக்கு எதிராக செய்த பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
வைரசிடமிருந்து தப்பிக்க வழி தேடலாம், தப்பில்லை.
ஆனால் அதற்கு முன்பாக இறைவனிடம் திரும்பி வர வேண்டும்.
மனுக்குலம் இதை உணர வேண்டும்.
மனுக்குலம் மனம் திரும்பவும் வைரஸின் பிடியிலிருந்து தப்பிக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
நமது அக்கிரமத்தினாலேயே வீழ்ச்சியுற்ற நாம் அதிலிருந்து எழுந்துவர நமக்கு உதவ இறைவனை வேண்டுவோம்.
லூர்து செல்வம்.
'
No comments:
Post a Comment