."உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக"
(மாற்கு 12:31)
** ** ** ** ** ** ** ** ** ** **
இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அவருடைய பண்புகளுள் மிக முக்கியமானது அன்பு.
தன்னிடம் இருப்பதைத் தான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.
அவர் அன்பு மயமானவர்.
அவர் நித்திய காலமாகவே அன்பு செய்து கொண்டிருக்கிறார்.
யாரை அன்பு செய்து கொண்டிருக்கிறார்?
சம்மனசுக்கள் படைக்கப்படுவதற்கு முன்னாலேயே,
அதாவது கடவுளைத் தவிற வேறு யாரும் இல்லாத காலத்திலேயே
கடவுள் அன்பு செய்து கொண்டிருந்தார்.
யாரை ?
தன்னை.
தன்னைத் தானே அன்பு செய்வது இறை இயல்பு.
இந்த இயல்பையும் இறைவன் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
By nature God loves Himself.
We too love ourselves by nature, as per God's plan.
இந்த இயல்பிலிருந்துதான் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கட்டளை பிறக்கிறது.
இறைவன் தன்னைத் தானே அன்பு செய்கிறது போலவே தனது படைப்பாகிய நம்மையும் அன்பு செய்கிறார்.
நாமும் நம்மை அன்பு செய்வது போல நம் அயலானையும் அன்பு செய்ய வேண்டும்.
நம்மை நாம் நேசிப்பது போல நம் அயலானையும் நேசிக்க வேண்டும் என்று சொன்ன இறைவன்
'உன்னை நீ நேசிப்பது போல என்னையும் நேசி'
என்று சொல்ல வில்லை.
மாறாக,
"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."
(மத்.10:37)
என்கிறார்.
இதன் உட்பொருள் நாம் நம்மை நேசிப்பதை விட அதிகமாக இறைவனை நேசிக்க வேண்டும்.
இறைவன் தான் அன்பின் ஊற்று, நாம் அல்ல.
இறைவனிடமிருந்து நமக்கு வரும் அன்பை
நாம் இறைவனுக்கும் அயலானுக்கும் கொடுக்க வேண்டும்.
இதைப்பற்றி ஒரு நாத்திக நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் தன்னை அறிவாளி என்று காட்டிக் கொள்வதற்காக ஒரு கேள்வி கேட்டார்,
"நம்மிடம் இருப்பதற்கு அதிகமாக நாம் எப்படி மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்?
நம்மிடம் ஆயிரம் ரூபாய் இருந்தால் அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டும்தானே கொடுக்க முடியும்!"
இது விளக்கம் கிடைப்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி அல்ல. நக்கலுக்காக கேட்கப்பட்ட கேள்வி.
ஆனாலும் நமக்கு விளக்கம் தேவை.
ஜடப் பொருள்களை அளப்பது போல பண்புகளை அளக்க முடியாது.
ஒரு படி அரிசி என்று சொல்லலாம், ஒரு படி அன்பு என்று சொல்ல முடியாது.
ஒரு கிலோ சர்க்கரை என்று சொல்லலாம், ஒரு கிலோ இரக்கம் என்று சொல்ல முடியாது.
ஏனெனில் பண்புகள் சடப்பொருட்கள் அல்ல, அவை
நமது ஆன்மாவிற்கு உரியவை. ஆகவே, ஆன்மீகம் சம்பந்தப்பட்டவை.
அவற்றின் அளவை குறிக்க
தீவிரம் (intensity) என்ற
வார்த்தையைப் பயன் படுத்தலாம்.
Our love for God must be more intense than our love for ourselves.
நம்மிடம் இருக்கும் பண்பை அதிக தீவிரமாக்குவதோ
அல்லது தீவிரத்தைக்
குறைப்பதோ நமது கையில் தான் இருக்கிறது.
'கோபம்' என்ற பண்பு நமது பாவத்தின் விளைவு.
(அதாவது இறைவனிடமிருந்து வந்ததல்ல. கோபப்படுவது இறைவனின் சுபாவம் அல்ல. )
ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்மிடம் ஏற்படும் கோபம் சூழ்நிலை மாறும் போது அதிகரிப்பதையும், குறைவதையும் நாமே நமது அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.
நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அன்பும் அத்தகையதுதான்.
கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பையும், அக்கரையையும் நாம் அறிய அறிய நமது அன்பின் intensityயும் அதிகரித்துக் கொண்டே போகும்.
நாம் கடவுளை மனிதர் யாரையும் விட அதிகமாக நேசிக்க வேண்டும் என்றால்
அவரைப் பற்றி அதிகம் அறிய வேண்டும்.
ஆகையினால்தான் சின்னக் குறிப்பிடம் சொல்கிறது:
சர்வேசுரன் மனிதர்களை
எதற்காகப் படைத்தார்?
தம்மை அறியவும், நேசிக்கவும், சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவும் உண்டாக்கினார்.
'அறியவும், நேசிக்கவும்'- இறைவனை எவ்வளவுக் கெவ்வளவு அறிகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நேசத்தின் அளவும் கூடும்.
நமதுபெற்றோரை அறிந்திருக்கிறோம்.
ஆகவே அவர்களை நேசிக்கிறோம்.
பெற்றோரை அறிந்திருப்பதைவிட இறைவனைப்பற்றி அதிகமாக அறிந்திருக்கிறோமா?
அறிந்திருந்தால் நமது பெற்றோரை நேசிப்பதை விட இறைவனை அதிகம் நேசிப்போம்.
ஆகவே இயேசு
"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."
என்று சொல்லும்போது
"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன்
தன் தந்தையையும் தாயையும் அறிந்துள்ள அளவு அவர்களைப் படைத்த என்னை அறியவில்லை"
என்பதுதானே பொருள்!
உணவை விரும்புகிற அளவிற்கு அதை நமக்குத தருகிற அம்மாவை விரும்பவில்லை என்றால் நாம் எப்படிப்பட்டவர்கள்?
படைக்கப்பட்ட பொருளை அறிந்திருக்கும் அளவிற்கு படைத்தவரை நாம் அறியவில்லை என்றால் நம்மைவிட பெரிய அறிவிலிகள் யாரும் இல்லை.
ஆகவே
நம்மையும் நமது அயலானையும் நேசிக்கும் நாம்
நம் எல்லோரையும் படைத்த இறைவனை
மிக அதிகமாக நேசிக்க வேண்டும்.
இது இறைவன் நமக்கு தந்த முதல் கட்டளை.
நம்மை நாமே நேசிக்கும் அன்பின் இன்றைய நிலை என்ன?
வானத்திலிருந்து மழை விழும் போது விழுவது சுத்தமான தண்ணீர்.
ஆனால் அது பூமியில் விழுந்தவுடன் பூமியிலுள்ள அழுக்குகளோடு சேர்ந்து அழுக்கு தண்ணீராக மாறி விடுகிறது.
தண்ணீரை குடிக்க வேண்டுமென்றால் முதலில் அழுக்கு தண்ணீரை சுத்தமான தண்ணீராக மாற்ற வேண்டும்,
அதாவது அழுக்கை நீக்க வேண்டும்.
இறைவன் நம்மைப் படைக்கும்போது பரிசுத்தமான அன்புடன் படைத்தார்.
அன்பு
அன்பு செய்யப்படுவோரின் நலனில் நாட்டம் கொள்ளும்.
நமது வாழ்வின் ஒரே நலம் நாம் எதற்காக படைக்கப்பட்டோமோ அதை அடைவதுதான்,
அதாவது இறைவனை அடைவதுதான்.
ஆகவே நாம் நம் மீது கொண்டுள்ள அன்பு உண்மையானதாக இருந்தால்
அது நம்மை இறைவன் வழிநடத்தி
அவரிடமே அழைத்து செல்லும்.
இறைவனை அடைவதற்கு எதிரான எந்த நாட்டத்தையும் நம்மை அண்ட விடாது,
அதாவது நம்மை இறைவனது கட்டளைகளை மீற விடாது,
அதாவது நம்மை பாவம் செய்ய விடாது.
நாம் பாவம் செய்கிறோம் என்றாலே
நம்மீது நாம் கொண்ட அன்பு உண்மையான அன்பு அல்ல,
அதாவது இறைவன் நம்முடன் பகிர்ந்துகொண்ட பரிசுத்தமான அன்பு அல்ல
என்பதுதானே பொருள்.
நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக
அதாவது நமது ஜென்ம பாவத்தின் விளைவாக நமது உண்மையான அன்பு கறை பட்டிருக்கிறது.
அக்கறை நீங்கவே நாம் திரு முழுக்கு பெறுகிறோம்.
திருமுழுக்கு நமது அன்பை பரிசுத்தம் ஆக்கிய பின் அதே பரிசுத்தத் தனத்தில் நீடிக்க வேண்டும்.
இந்த பரிசுத்தமான அன்போடு நாம் எப்படி நம்மை நேசிக்கிறோமோ அப்படியே நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.
அதாவது, நாம் நம் அயலான் மீது வைக்கும் அன்பு அவனையும் இறைவழி நடக்க உதவும் அன்பாக இருக்கும்.
இந்த பிறரன்பும், அதன் விளைவாக நாம் செய்யும் நற்செயல்களும் நமது அயலானையும் இறைவனிடம் அழைத்து வர வேண்டும்.
மாறாக நாம் நமது அயலானை பாவம் செய்ய தூண்டினால்
நாம் நம்மை எப்படி நேசிக்க வேண்டுமோ
அதே போல நம் அயலானையும் நேசிக்கவில்லை என்றுதான் பொருள்.
இன்றைய நிலையில் நாமே நம்மை உண்மையான அன்புடன் நேசிக்கவில்லை.
நாம் நம்மை உண்மையிலேயே நேசித்தால்
அதாவது எப்படி நேசிக்க வேண்டுமோ அப்படி நேசித்தால்
நாம் நம்மையே பாவ குழியை நோக்கி அழைத்துச் செல்வோமா?
"உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி" என்று இறைவன்சொல்லும்போது
"உன்னை நான் படைத்தபோது
நீ உன்னை எப்படி நேசிக்க வேண்டும் என்று விரும்பினேனோ அதேபடி உன் அயலானை நேசி"
என்பது தான் பொருள்.
அத்தகைய அன்புடன் நமது அயலானை அன்பு செய்தால், அவனையும் இறை அன்பில் வளர்க்க முயற்சி செய்வோம்.
மாறாக நாம் நம்மீது கொண்டுள்ள அன்பு நம்மை பாவத்திற்கு வழி நடத்திச் சென்றால்
அதையே நமது அயலானுக்கும் செய்வோம்.
நமது வீழ்ந்த இயல்பின்
(fallen nature) காரணமாக நமது நாட்டங்கள் பாவ நாட்டங்களாய் மாறி விட்டன.
நாம் நம்மை உண்மையிலேயே அன்பு செய்தால்
நமது பாவ நாட்டங்களிலிருந்து விடுதலைபெற்று ஆன்மிகத்தில் வளர விரும்புவோம்.
நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக நமது இயல்பே கெட்டு விட்டது.
ஆகவேதான் நமது கெட்டுப்போன இயல்பினால் நாமும் பாவத்தில் விழுந்து மற்றவர்களையும் விழ வைக்கிறோம்.
நமது நல்ல நடத்தையால் பிறருக்கு நன் மாதிரிகை காட்டுவதற்கு பதிலாக
நமது துர்நடத்தையால் மற்றவர்களுக்கு துர்மாதிரிகை காட்டுகிறோம்.
அநேக குடும்பங்களில் பெற்றோருடைய கெட்ட நடத்தை காரணமாக பிள்ளைகளும் கெட்டு போகிறார்கள்.
தகப்பனார் திருடியே சொத்து சேர்த்தவராக இருந்தால் மகன் எப்படி இருப்பான்?
தகப்பனார் லஞ்சம் வாங்குபவராக இருந்தால் மகனும் அதைத்தானே செய்வான்.
கணவனும் மனைவியும் சதா சண்டை போட்டுக் கொண்டிருந்தால் பிள்ளைகள் வேறு என்ன செய்வார்கள்?
நிலைமை திருந்த வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் நம்மை நாமே பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
நம்மீது நாம் கொண்டுள்ள அன்பு பரிசுத்தம் ஆனதா?
அது நம்மை பரிசுத்தத் தனத்தில் வழிநடத்துகிறதா?
என்பதை ஆய்ந்து பார்த்து , நம்மை முதலில் பரிசுத்தமாக்கிக் கொண்டு,
அதே பரிசுத்தத் தனத்தோடு மற்றவர்களை நேசிப்போம்.
அந்த நேசத்தினால் அனைவரையும் இறைவன்பால் ஈர்ப்போம்.
நமது விண்ணகப் பயணம் நாம் தனித்துச் செல்வதல்ல, ஒரு கூட்டுப் பயணம்.
தனியே அல்ல, எல்லோரும் இணைந்தே இறைவனிடம் செல்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment