ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க.
** ** ** ** ** ** ** ** ** ** **
ஒரு கற்பனை.
வகுப்ல பாடம் நடந்து கொண்டிருக்கும்போது
யாராவது தூங்கிக்கொண்டு இருந்தாங்கள்னா
(வகுப்ல, வீட்ல இல்ல )
அவங்கள எழுப்ப ஒரு குறுக்குவழி இருக்கு :
"ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க." ன்னு
சொன்னால் போதும்.
வேகமா எழுந்துவிடுவார்கள்.
பாட்டிக்கு அவ்வளவு சக்தி.
பாட்டி வடை சுட்டு விற்ற கதையை முதல் வகுப்பில் டீச்சர் சொன்னத கேட்டிருக்கிறோம்.
ஆனால் நம்ம பாட்டி வடைப் பாட்டி அல்ல ,
பரோபகாரப் பாட்டி.
சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு இரக்க குணம் அதிகம்.
தன்னுடைய வாழ் நாள் முழுவதையுமே மற்றவர்களுக்கு உதவி செய்வதையே
தனது கடமையாக செய்து வாழ்ந்தவர்கள்.
உதவி பெறுவதைவிட செய்வதையே பெருமையாக நினைத்தவர்கள்.
யாரை பார்த்தாலும் தான் செய்து கொண்டிருந்த உதவிகளைப் பற்றி பெருமையாகப் பேசுவதோடு
எப்பொழுது வேண்டுமானாலும் தன்னிடம் வேண்டிய உதவியை கேட்கும்படி உற்சாக படுத்துவார்கள்.
ஆகவேதான் யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் பாட்டியிடம் தான் வருவார்கள்.
பரம்பரைச் சொத்து நிறைய இருந்தது.
அதை எல்லாம் பிறருக்கு உதவியை செய்வதிலேயே செலவழித்தார்கள்.
எல்லோரும் அவர்களை பரோபகாரப் பாட்டி என்றுதான் அழைப்பார்கள்.
அவர்களுடைய உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது.
அப்படிப்பட்ட நல்ல பாட்டி ஒரு நாள் இறைவனடி சேர்ந்தார்கள்.
அவர்கள் இறக்கும் முன்
நான் இவ்வுலகில் உதவி செய்வதற்காக செலவழித்ததை விட
பன்மடங்கு அதிகமாக விண்ணகத்தில் தனக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று பெருமையாகச் சொன்னார்கள்.
தனது மண்ணுடலை மண்ணுக்கே அனுப்பிவிட்டு விண்ணகம் ஏகிய அவர்கள்
மோட்ச வாசலில் இராயப்பர் நின்றுகொண்டு
வருவோரை வரவேற்று மோட்சத்திற்குள் அனுப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.
அவர்களுக்கு முன்னால் ஒரு நீண்ட வரிசையே நின்று கொண்டிருந்தது.
சிறு வயதிலிருந்து முதியோர் வரை பல வயதினரும் நின்று கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொருவரும் இராயப்பர் முன்னால் போய் நின்றவுடன் ஒரு பெட்டி தோன்றியது.
இராயப்பர் பெட்டியைத் திறந்து
உள்ளேயிருந்து பூக்களை எடுத்து
எண்ணி வேறொரு பெட்டிக்குள் போட்டுக் கொண்டிருந்தார்.
எண்ணி முடித்தவுடன் அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு சம்மனசுவிடம் இராயப்பர் ஏதோ சொன்னார்.
சம்மனசு அங்கு நின்று கொண்டிருந்த ஆன்மாவை அழைத்துக்கொண்டு மோட்சத்திற்குள் சென்றார்.
இப்படியாக ஒவ்வொருவருக்கும் நடந்து கொண்டிருந்தது.
பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.
யாரிடம் விவரம் கேட்பது என்றும் தெரியவில்லை.
விவரம் கேட்க ஆசைப்பட்டவுடன் அவரருகில் ஒரு சம்மனசு தோன்றினார்.
அவரிடம் பாட்டி,
" இராயப்பர் என்ன செய்து கொண்டிருக்கிறார்"
என்று கேட்டார்.
அப்போது அந்த சம்மனசு பாட்டியைப் பார்த்து,
"பாட்டி, ஒவ்வொருவர் முன்னும் தோன்றுவது அவர்களுடைய பரோபகாரப் பெட்டி.
ஒவ்வொரு மனிதரும் பிறந்தவுடன் மோட்சத்தில் இப்பெட்டி வைக்கப்படும்.
அதன்மேல் அவருடைய பெயரும் பிறந்த தேதியும் எழுதப்பட்டிருக்கும்.
அந்த நபர் உலகத்தில் வாழும்போது மற்றவர்களுக்கு உதவி செய்யும்போதெல்லாம் அதற்குள் ஒரு பூ விழும்.
உதவிகளின் எண்ணிக்கையை பொறுத்து பூக்களின் எண்ணிக்கையும் இருக்கும்.
சிறு வயது பையன் மற்றொரு பையனுக்கு ஒரு மிட்டாய் கொடுத்து உதவினாலும் அவன் பெயரில் பெட்டியில் ஒரு பூ விழும்.
ஒரு ஆள் இறந்தவுடன் அவர் சம்பந்தப்பட்ட பெட்டி இராயப்பர் முன்னால் வரும்.
சம்பந்தப்பட்ட ஆள் முன்னால் வைத்தே இராயப்பர் பெட்டியைத் திறந்து பூக்களை எண்ணுவார்.
எண்ணிக்கைக்கு ஏற்றபடி அந்த ஆளின் மோட்ச பேரின்பத்தின் அளவு இருக்கும்.
நீங்கள் இராயப்பர் முன்னால் போய் நின்றவுடன் உங்கள் பெட்டி அங்கே வரும்.
வரிசை நகர்கிறது. செல்லுங்கள்."
பாட்டிக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
அவள் செய்த உதவிகளுக்கு கணக்கே இல்லை.
அவளுடைய பெட்டி மிகவும் பெரியதாக இருக்கும்.
இராயப்பர் பூக்களை எண்ணுவதற்கு வெகு நேரம் பிடிக்கும்.
''பரவாயில்லை.
நாம்தான் மோட்சத்திற்கு வந்துவிட்டோமே.
நேரம் அதிகம் ஆனால் என்ன.
நமக்கு கிடைக்கும் பேரின்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்."
நினைத்துக்கொண்டே பாட்டி இராயப்பர் முன் வந்து நின்றாள்.
அவள் முன் ஒரு பெட்டி வந்து அமர்ந்தது.
அவள் பெட்டியைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.
இராயப்பர்,
"பாட்டி, என்னைப் பாருங்கள். இப்பொழுது நான் உங்களது பரோபகாரப் பெட்டியைத் திறந்து பூக்களை எண்ணப் போகிறேன். கூர்ந்து கவனியுங்கள்."
பாட்டி,
" இராயப்பரே, எனது பெட்டி நான் நினைத்தபடி பெரியதாக இல்லையே.
இது வேறொருவர் பெட்டியாக இருந்தாலும் இருக்கலாம்.
தயவுசெய்து இது என் பெட்டி தானா என்பதை முதலில் Check பண்ணுங்கள்."
"பாட்டி, இது மோட்சம்.
இங்கே தவறு நடக்க வாய்ப்பே இல்லை.
இதோ பாருங்கள்.
பெட்டி மேல் உங்கள் பெயரும் நீங்கள் பிறந்த தேதியும் இறந்த நேரமும் எழுதப்பட்டிருக்கிறது. பார்த்தீர்களா? திருப்தியா?"
"சரி ஐயா. பெட்டியை திறந்து பூக்களை எண்ணி என்னை மோட்சத்திற்கு அனுப்புங்கள்."
இராயப்பர் பெட்டியைத் திறந்தார்.
பாட்டி பெட்டிக்குள் கூர்ந்து பார்த்தாள்.
அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை.
உள்ளே ஒரே ஒரு பூ மட்டும் கிடந்தது.
"இராயப்பரே, நான் பிறந்த நாள் முதல் இறக்கும் நேரம்வரை ஆயிரக்கணக்கான உதவிகள் செய்திருக்கிறேன்.
ஒவ்வொரு உதவிக்கும் ஒரு பூ என்றால் இந்தப் பெட்டியை விட பெரியபட்டி நிறைய பூக்கள் இருக்கும்.
ஆனால் இந்த சிறிய பெட்டிக்குள் ஒரே ஒரு பூ தானே இருக்கிறது.
மோட்சத்தில் தவறு நடக்காது.
ஆனால் வேறு எங்கோ தப்பு நடந்திருக்கிறது.
அதை கண்டு பிடியுங்கள்."
அவள் சொல்லி முடிக்குமுன் வேறொரு பெட்டி அவள் முன் வந்து இறங்கியது.
அதன் மேலும் அவளுடைய பெயரும், பிறந்த, இறந்த தேதிகளும் குறிக்கப்பட்டிருந்தன.
பாட்டி இராயப்பரை நோக்கி,
" ஐயா இந்தப் பெட்டியைத் திறந்து பாருங்கள், உள்ளே நிறைய பூக்கள் இருக்கும்."
இராயப்பர் பெட்டியைத் திறந்தார்.
பெட்டி நிறைய பூக்கள் இருந்தன. ஆனால் அனைத்தும் வாடி வதங்கிப் போய் கிடந்தன.
"இராயப்பரே, என்ன இது? பூக்கள் அனைத்தும் வாடிக் கிடைக்கின்றன?"
"பாட்டி, முதலில் பார்த்தது பரோபகாரப் பெட்டி.
இப்பொழுது பார்ப்பது பரோபகாரம் மறைந்த பெட்டி.
நீங்கள் நல்ல காரியம், உதவி செய்யும்போதெல்லாம் முதல் பெட்டிக்குள் ஒரு மணம் நிறைந்த பூ விழும்.
அதை ஆண்டவரது மகிமைக்காக ஒப்புக்கொடுத்தால் அந்த பூ அங்கே தங்கும்.
ஆனால் அதற்காக நீங்கள் தற்பெருமை பாராட்டி மகிழ்ந்தால் அந்தப் பூ வாடி அடுத்த பெட்டிக்குள் போய்விடும்.
இப்பொழுது நமக்கு தெரிவது,
நீங்கள் ஆயிரக்கணக்கான உதவிகள் செய்திருப்பது உண்மை.
ஆனால் நீங்கள் அதற்காக தற்பெருமை பாராட்டி மகிழ்ந்த போதெல்லாம்
விழுந்த பூக்கள் எல்லாம் வாடி வதங்கி அடுத்த பெட்டிக்குள் போய் விட்டன.
இப்போது உங்களது மோட்ச பேரின்பத்திற்கு உதவியாய் இருப்பது
நீங்கள் தற்பெருமை பாராட்டாமல் செய்த ஒரே ஒரு உதவிதான்.
பரவாயில்லை. மோட்சம் கிடைத்ததற்காக மகிழ்ந்து உள்ளே போங்கள்.
நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சம்மனசு கூட்டிக்கொண்டு போவார்."
கதை என்னமோ கற்பனைக் கதைதான்.
ஆனாலும் இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
என்ன நற்செயல் செய்தாலும் அதை ஆண்டவரது அதிமிக மகிமைக்காகவே செய்ய வேண்டும்.
அவர் அதன் பயனை நமக்குத் தருவார்.
நமது மகிமைக்காக செய்தால் அதற்குரிய பலன் பூமியிலேயே கிடைத்து அங்கேயே மறைந்துவிடும்.
எதைச்செய்தாலும் ஆண்டவரின் அதிமிக மகிமைக்காகவே செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment