Tuesday, March 17, 2020

மன்னியுங்கள், மன்னிக்கப்படுவீர்கள்

மன்னியுங்கள், மன்னிக்கப்படுவீர்கள்
**  **  **  **   ** ** **   ** ** ** **
To err is human, to forgive is divine.

தவறுவது மனிதம்,
 மன்னிப்பது தெய்வீகம்.

இறைவன் நம்மைத் தன் சாயலாகப் படைத்தபோது,

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகளுள் மிக முக்கியமானவை:

அன்பு, இரக்கம், மன்னிக்கும் குணம்.

இம்மூன்றுமே தெய்வீகப் பண்புகள்.

கடவுள் தனது பண்புகளை நம்முடன் பகிர்ந்து  கொண்டதன்  மூலம் 

தனது தாராள குணத்தை வெளிப்படுத்தினார்.

நாமும் அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்துவதன் மூலம்

 அவரது தாராள குணத்தை நம்மில் பிரதிபலிக்க வேண்டும்.

இலவசமாகப் பெற்றுக்கொண்டதை 
இலவசமாகக் கொடுப்போம்.

தாராளமாகப் பெற்றுக்கொண்டதை தாராளமாகக் கொடுப்போம்.

தாராளமாக அன்பு செய்வோம்.

தாராளமாக இரக்கம் கொள்வோம்.

தாராளமாக மன்னிப்போம்.

நாம் பாவத்தில் விழும்போது கடவுளை அன்பு செய்ய மறுக்கிறோம்.

ஆனாலும் கடவுள் நம்மைத் தொடர்ந்து அன்பு செய்கிறார்.

அந்த அன்பு தான் நம்மை நமது பாவத்திலிருந்து மீட்கிறது.

 நம்மை அன்பு செய்யாதவர்களையும் அன்பு செய்வோம்.

நம்மீது இரக்கமாக இல்லாதவர்கள் மீதும் நாம் இரக்கமாக இருப்போம்.

நமக்குக் கெடுதி செய்கின்ற அனைவரையும் மன்னிப்போம்.

தீபம் இருக்கும் இடத்தில் ஒளி இருக்கும்.


ஒளி இல்லாவிட்டால் தீபம் இல்லை என்பதுதான் உண்மை.

அன்பு இருக்கும் இடத்தில் உறுதியாக இரக்கம் இருக்கும்.

இரக்கம் இருக்கும் இடத்தில்
உறுதியாக மன்னிக்கும்  பண்பும் இருக்கும்.

ஆகவே மன்னிக்க முடியாதவன் 

"நான் அன்பு உள்ளவன்"

 என்று சொன்னால் அவன் பொய்யன்.

எத்தனை முறை ஒருவனை மன்னிக்கலாம்?

அவன்மீது அன்பு இருக்கும் வரை அவனை மன்னிக்கலாம்.

உண்மையான அன்பு நிரந்தரமானது.

 ஆகவே மன்னிப்பும் நிரந்தரமானது.

ஆகவே எத்தனை  முறை மன்னிக்கலாம் என்ற கேள்விக்கு இடமில்லை.

எத்தனை முறை தவறு செய்தாலும் அத்தனை முறையும் மன்னிக்க வேண்டும்.

நாம் அனைவரும் தவறு செய்ய கூடியவர்கள்.

மன்னிப்பு பெறவும் வேண்டியவர்கள்.

நாம் மன்னிப்பு பெறவேண்டுமென்றால் மற்றவர்களை நாம் மன்னிக்க வேண்டும்.

மன்னிக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

"விண்ணகத் தந்தையே,

நீர் எங்களுக்குக் கட்டளை இட்டபடியே

 நாங்கள் எங்களுக்கு விரோதமாகக் குற்றம் செய்தவர்களை மன்னிக்கிறோம். 

 தந்தையே, நாங்கள் உமக்கு விரோதமாக செய்கிற குற்றங்களை அன்புகூர்ந்து  மன்னியும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment