சாபமா? வரமா?
* ** ** ** ** ** ** ** **** **
மாமரம் மாம்பழத்தைத்தான் கொடுக்கும், கொய்யா பழத்தைக் கொடுக்காது.
அன்பிலிருந்து அன்புதான் பிறக்கும், சாபம் பிறக்காது.
அன்பு மயமான கடவுளால் ஆசீர்வாதத்தை மட்டுமே தர இயலும்,
சாபத்தைக் கொடுக்க இயலாது.
சாபம் கொடுக்கவா அன்புமயமான கடவுள் ஒன்றும் இல்லாமையில் இருந்து நம்மை உருவாக்கினார்?
அப்படியானால் இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களும் ஆசீர்வாதங்களா? அதாவது, வரங்களா?
குறிப்பாக இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு வரமா?
உண்மையான விசுவாசம் உள்ளவர்கள் சொல்லவேண்டிய பதில்,
"ஆம். வரம்தான்."
எதிர்மறையான பதில் விசுவாசம் அற்றவர்களிடம் இருந்துதான் வரமுடியும்.
நம்முடைய முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாகத்தான் உலகில் துன்பம் நுழைந்தது என்பது உண்மை.
ஆனால் இறைமகன் இயேசு தன்னுடைய பாடுகளின் விளைவாக
நமது துன்பத்தை நமது மீட்பிற்காக அவர் பயன்படுத்திய சிலுவையாக மாற்றி விட்டாரே!
இன்று நாம் அனுபவிப்பது துன்பம் அல்ல, ஆனால் நமது மீட்பிற்கு காரணமாக இருக்கக்கூடிய சிலுவை.
சிலுவை மீட்பின் அடையாளம் மட்டுமல்ல, காரணமும் கூட.
சிலுவை இன்றி மீட்பு இல்லை.
நாம் இயேசுவின் சீடர்களாக மாறினால்தான் மீட்புப் பெற இயலும்.
சிலுவை இன்றி இயேசுவின் சீடராக முடியாது.
"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது."
(லூக்.14:29)
ஆகவே சிலுவை இன்றி மீட்புப் பெற இயலாது.
மீட்புப் பெற காரணமாக இருக்கும் நமது சிலுவை, அதாவது நமது துன்பம், சாபமா? வரமா?
நாம் சுமந்து செல்ல வேண்டிய சிலுவை எந்த ரூபத்திலும் வரலாம்.
உழைக்கும் போது ஏற்படக்கூடிய கஷ்டங்கள், தோல்விகள், வியாதிகள், விபத்துகள் போன்ற எந்த ரூபத்திலும் சிலுவை வரலாம்.
எந்த ரூபத்தில் வந்தாலும் சிலுவை நமக்கு வரம் தான்.
தனிப்பட்ட முறையில் நமக்கு சிலுவைகள் வருவதுபோல மனுக்குலம் முழுமைக்கும் சிலுவைகள் வருவது இறைவன் மனுக்குலத்திற்கு தரும் வரம்.
பஞ்சம், வெள்ளம், புயல்.சுனாமி, நில நடுக்கம், கொள்ளை நோய்கள் போன்ற இயற்கை நிகழ்வுகள் மனுக்குலத்திற்கு சிலுவைகள் ஆக வருகின்றன.
இவற்றைச் சிலுவையாக ஏற்றுக்கொள்பவர்கள் அவற்றை ஆண்டவருக்காக பொறுமையாக ஏற்றுக் கொள்வதோடு
தங்களது பாவங்களுக்கு பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து
அதற்காக நித்திய சம்பாவனை சம்பாதித்து கொள்கிறார்கள்.
அவர்களுக்கு அவை வரம்.
இறைவனுக்காக ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவற்றை வெறும் துன்பங்களாக மட்டும் கருதி,
எந்தவித பலனும் இன்றி அனுபவிப்பார்கள்.
அவர்கள் வரத்தை வரமாக ஏற்றுக்கொள்ளாதவர்கள்.
துன்பத்தை வரமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு அது வரம் ஏற்றுக்கொள்ளாவர்களுக்கு அது துன்பம் மட்டும்தான்.
சிலுவை வரும்போது அதை எவ்வாறு எதிர்கொள்வது:
1. பாவ பரிகாரமாக.
பாவ நிலையில் உள்ளவர்கள் சிலுவை வரும்பொழுது தங்களது பாவங்களை ஏற்று
மனம் திரும்பி பாவங்களுக்காக வருந்துவதோடு
தாங்கள் சுமக்கும் சிலுவையை பாவங்களுக்குப் பரிகாரமாக
இறைவனுக்கு ஒப்பு கொடுக்கவேண்டும்.
இறைமகன் இயேசு நமது பாவங்களை தன் மீது சுமந்து
அவற்றிற்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு
சிலுவையில் நமக்காக தன்னையே பலியாக்கினார்.
2.சிலுவைக்குப் பின் உயிர்ப்பு.
பாவமில்லாத பரிசுத்தர்களுக்கும் சிலுவைகள் வரும்.
அவற்றை ஆண்டவருக்காக பொறுமையுடன் ஏற்பதால் நமது மோட்ச பேரின்பத்தின் அளவு அதிகமாகும்.
3. பிறரன்பு செயல்களின் போதும் சிலுவைகள் வரும்.
அவற்றை மனுக்குலத்தின் ஆன்மீக நலனுக்காய் ஏற்று இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.
4. உலக வரலாற்றில் வரும் சிலுவைகளை மனுக்குலம் தன் தவறுகளை திருத்தி இறைவன்பால் திரும்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆக சிலுவை தனி நபருக்கு வந்தாலும்,
ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு வந்தாலும்,
மனுக்குலம் முழுமைக்கும் வந்தாலும்,
எந்த ரூபத்தில் வந்தாலும்
அது நமது நலனுக்காக இறைவன் இரக்கத்துடன் தரும் வரமே.
மனுக்குலத்தை தன்பால் ஈர்க்கவே இன்றைய கொரோனா வைரஸ் என்ற சிலுவையை இறைவன் அனுமதித்திருக்கிறார்.
அதிலிருந்து விடுதலை பெற வேண்டு முன்
நமது தவறுகளை உணர்ந்து இறைவன் பக்கம் திரும்புவோம்.
இறைவன் நமது தந்தை.
ஊதாரிப் பிள்ளைகளாகிய நமது வரவுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
திருந்துவோம், திரும்புவோம்.
அவரது அரவணைப்பில் இணைவோம்.
மலைபோல் வந்த வேண்டாதவை எல்லாம் புகைபோல் மறைந்துவிடும்.
முதலில் பாவத்திலிருந்து விடுதலை பெறுவோம்.
வைரஸிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
இறைவன் பக்கம் நாம் திரும்ப நமக்கு உதவுபவை எல்லாம் வரமே.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment